வாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி

தேனருவி சஞ்சிகைஅருண்மொழி தேவன் (அருண்மொழி) இவர் ஓர் எழுத்தாளர்; நாடக நடிகர். சஞ்சிகையொன்றினை 1962- 1964 காலகட்டத்தில் நடத்தியிருக்கின்றார். இவ்விதழின் உதவி ஆசிரியராகவிருந்தவர் பா.மகேந்திரன். இவரே பின்னர் தமிழ்த்திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநரும் , ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா என்று , இப்பதிவுக்கான முகநூல் எதிர்வினையொன்றில் பிரபல கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் நன்றி.

அக்காலகட்டத்தில் வெளியான மேற்படி சஞ்சிகையின் நான்கு இதழ்களையே நூலகம் எண்ணிம நூலகத்தில் காண முடிந்தது. அவற்றைப் புரட்டிப்பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாகவிருந்தது. காரணம்? இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கியத்தின் பல்துறைகளையும் நேர்ந்த படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை அவ்விதழ்களில் என்னால் காண  முடிந்தது. ஆனால் இதுவரையில் நானறிந்த வரையில் இதழாசிரியரைப்பற்றியோ அல்லது சஞ்சிகை பற்றியோ எங்கும் வாசித்ததாக நினைவிலில்லை.. கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு & கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞனுமான எம். ஏ. நுஃமான் ஆகியோர் இணைந்து எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்’ என்னும் நூலிலும் தேடிப்பார்த்தேன். தேனருவி பற்றியோ அதன் ஆசிரியர் அருண்மொழி தேவன் (அருண்மொழி)  பற்றியோ தகவல்கள் எவற்றையும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இவர்களுக்கெல்லாம் தேனருவி பற்றியோ அதன் படைப்புகள் பற்றியோ தெரிந்திருக்காமல் இருக்கக்கூடுமோ என்றெண்ணியவாறு ‘தேனருவி’ சஞ்சிகையையின் சேமிக்கப்பட்டிருந்த இதழ்களைப் புரட்டியபோதுதான் அதன் இலக்கியப் பங்களிப்பினைப் புரிந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு எழுந்த முக்கியமான கேள்வி இதுதான்: “எதற்காக? எதற்காக ‘தேனருவி’ சஞ்சிகையும், அதன் ஆசிரியரும் கலை, இலக்கிய  விமர்சகர்களாள் இருட்டடுப்பு செய்யப்பட்டார்கள்? இத்தனைக்கும் இளஞரான  நுஃமானின் ‘எச்சில் எனினும்…’ என்னும் காதற் சிறுகதை கூடத் ‘தேனருவி’ இதழொன்றில் வெளியாகியுள்ளது.  

அருண்மொழிதேவன் அவர்கள் ‘தேனருவி’ சஞ்சிகையை மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுள்ளார். பலருக்குக் களமமைத்துக்கொடுத்துள்ளார். * தேனருவி சஞ்சிகையின் ஆசிரியரான அருண்மொழி  தேவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரென்று கலை, இலக்கிய விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் இப்பதிவுக்கான தனது முகநூல்எதிர்வினையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.  அவருக்கு நன்றி. உண்மையில் அருண்மொழி தேவன் (அருண்மொழி) இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை வெளியிட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்துள்ளார். ‘வானொலி நாடகக்  குழு’ நாடக அமைப்பினருடன் இணைந்து தமிழ் நாடகத்துறைக்கும் பங்களிப்பு செய்துள்ளார். அவை பாராட்டப்பட வேண்டியவை. ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.

இவ்விதமான இருட்டடிப்புகளுக்கு முக்கிய காரணங்களிலொன்று. கலை, இலக்கிய விமர்சகர்கள் பாரபட்சமாகச் செயற்படுவது. இவர்கள் எழுதுவதன் அடிப்படையிலேயே ஏனையோரும் ஆய்வுகள் செய்வதால் இவர்களால் தவற விடப்படும் எழுத்தாளர்கள், சஞ்சிகைகள், படைப்புகள் பல தொடர்ந்தும் இவை பற்றி ஆய்வு செய்யும் ஏனையவர்களாலும்  தவறவிடப்படுகின்றன. ஆனால் இன்று இணையத்தின் வருகையும், எண்ணிம நூலகங்களின் உருவாக்கமும் இவ்விதம் தவற விடப்பட்டவர்களையெல்லாம் இனங்காண்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கின்றன. ‘நூலகம்’ என்னும் எண்ணிம நூலகத்தில் இவ்விதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால்தானே என்னால் இவற்றைப்பற்றி அறிய முடிந்தது.

நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகிய ‘தேனருவி’ இதழின்  முகவரியாக ஆரம்பத்தில் Hampden Lane, Colombo 6 குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தேனருவி’ சஞ்சிகையின் பேணப்பட்டுள்ள பிரதிகளை மீண்டுமொருமுறை புரட்டிப்பார்த்தபோது என் கண்களில் தென்பட்ட முக்கியமான படைப்புகளில் சிலவற்றைக் கீழே தொகுத்துள்ளேன்.

‘தேனருவி’யில் பலர் எழுதியுள்ளார்கள். பலர் நன்கறிமுகமானவர்கள். சிலர் அறியப்படாதவர்கள். அவர்கள் தேனருவி குழுவினரின் புனைபெயர்களாகவும் கூட இருக்கலாம். அறிந்தவர்களாகக் கனக செந்திநாதன் (‘மகனுக்காக’ ஆடி 1962 இதழ்), எஸ்.பொன்னுத்துரை (‘பங்கம்’ ஐப்பசி 1962), எம்.ஏ.நுஃமான் (‘எச்சில் எனினும்..; ஐப்பசி 1962), செ.யோகநாதன் (‘கலைஞன்; ஐப்பசி 1962 இதழ்), செம்பியன் செல்வன் (‘உபதேசம்’ ஐப்பசி 1962), செ.இராசதுரை (‘பழிக்குப் பழி; வரலாற்றுச் சிறுகதை; கல்கி 1950), செங்கை ஆழியான் (‘கறை’; ‘தேனருவி’ பெப்ருவரி 1963), கலாநிதி கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி, கவிஞர் முருகையன், கவிஞர் மஹாகவி, எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை போன்றோரைக் குறிப்பிடலாம். ஓவியங்களை சச்சி, சானா ஆகியோர் வரைந்துள்ளார்கள்.

1. சிறுகதைகள்

தேனருவி ஜூலை 1962:

மகனுக்காக – கனக செந்திநாதன்
நீர்க்குமிழி – கேசன்
பெண் – முத்து
சாராயம் – கா.சதாசிவம்
சுடலை ஞானம் – முத்துராசன்
புறோக்கர் பூலோகம் -சானா

தேனருவி ஐப்பசி 1962 இதழில் வெளியானவை:

சிறுகதைகள்:

முத்துச்சிப்பி – பரராஸ் வாரித்தம்பி. இவர் தேனருவி சஞ்சிகையின் விநியோக மனேஜரும் கூட.
பங்கம் – எஸ்.பொன்னுத்துரை
பிச்சைக்காசு -சொர்ணன்
எச்சில் எனினும் – நுஃமான் – நுஃமானின் சிறுகதை காதலைப்பற்றியது. அவர் இளைஞராக இருந்த காலத்தில் எழுதப்பட்டதின் வெளிப்பாடு.
கலைஞன் -செ.யோகநாதன்

தேனருவி’ பெப்ருவரி 1963 இதழில் வெளியான  சிறுகதைகள்:

கறை – செங்கை ஆழியான்
பரஸ்பர உதவி – தீவான்.
பாக்கியசாலி – பிரமன்

பாலு மகேந்திராவின் 'வடிகால்'

– பாலு மகேந்திரா (பா.மகேந்திரன்) எழுதிய சிறுகதை ‘வடிகால்’ –

தேனருவி ஜனவரி -பெப்ருவரி 1964 இதழில் வெளியானவை:

‘பாவம் கொடி’ – சூரியகாந்தி
‘ஞானோதயம்’ – சொர்ணன்.
கோடை மழை -அ.முத்துலிங்கம்
ஊமைக்காதல் – அன்புமணி

வடிகால் – எழுதியவர் பா.மகேந்திரன் (பாலு மகேந்திரா , தேனருவி உதவியாசிரியர்). இச்சிறுகதை பருவமடைந்த புனிதம் என்னும்பெண்ணொருத்தியின் பாலியல் உணர்வுகளுக்கு வடிகாலாக உறுவுக்காரச் சிறுவனொருவனைப் பாவிப்பதை விபரிப்பது. அதே சமயம் தன் கடமைகள் முடிந்து இரு வருடங்களில் வருவதாகக்கூறிச் சென்ற அவளது காதலன் மணியனுக்காகக் காத்திருக்கும் பெண் அவள். கதையின் இறுதியில் தான் நடந்துகொண்டதையிட்டு வருந்துகின்றாள். அவனுக்காக அதே காதலுடன் காத்திருப்பதாகக் கூறுகின்றாள். கதையினைக் கதாசிரியர் இவ்விதம் முடிக்கின்றார்: ‘ஆமாம். புனிதம் அவன் மணியத்தை காதலிக்கின்றாள்.  மனப்பூர்வமாக, ஆத்மபூர்வமாகக் காதலிக்கின்றாள். அன்றும் காதலித்தாள். இன்றும் காதலிக்கின்றாள். என்றும் காதலிப்பாள். காதலுக்கு அவள் கொண்டிருக்கும் அர்த்த பலருக்குப் புரியாது.’.

தேனருவி மே 1964:

உள்ளச்சுமை -சதாதனம்
சொத்தி – க. இராமலிங்கம்
ஒளி – மருதூர்க்கொத்தன்

2. கட்டுரைத்தொடர்கள் & கட்டுரைகள்

தேனருவி ஜூலை 1962:

எண்ண மஞ்சரி (பத்தி) -ஆனந்தி. இலங்கைத் தேசிய இலக்கியம் பற்றி க.நா.சு, ‘மெற்றா பிஸிக்கல்’ பற்றி சிவகுமாரன் (கே.எஸ்.சிவகுமாரனின் எதிர்வினையை உள்ளடக்கிய) , பாரதி பற்றி திகசி; தமிழ் ஒளி ஆகிய உப தலைப்புகளில் குறிப்புகள் இடம்  பெற்றுள்ளன. இறுதிப் பகுதிக்கான பக்கம் முழுமையுறவில்லை. பக்கத்தைக் காணவில்லை.

இயக்கமும், இலக்கியமும் (கட்டுரைத்தொடர்) – கா.சிவத்தம்பி. தொடரின் முன்னுரை இடம்  பெற்றுள்ளது.
தீ – கே.எஸ்.சிவகுமாரனின் எஸ்.பொன்னுத்துரையின் தீ நாவல் பற்றிய விமர்சனம்.
கலிங்கம் காட்டிய காட்சி – பூவழகி
விபுலாநந்த அடிகள் – அருள் செல்வநாயகம்
இளம் எழுத்தாளர் மாநாடு யாழ்ப்பாணம் – நீலக்குயில்

தேனருவி பெப்ருவரி 1963 இதழில் வெளியானவை:

‘சிவகாமி சரிதம்’ என்னும் இலக்கியக் கட்டுரையின் இரண்டாவது இறுதிப்பகுதியினை வெ.கனகசுந்தரி M.A  எழுதியிருக்கின்றார். . பெ.சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம் காவியத்தில் வரும் உபகதையான சிவகாமி சரிதம் பற்றிய கட்டுரையாளரின் திறனாய்வுக் கட்டுரை. பவானி ஆழ்வாப்பிள்ளையின் ‘கடவுளரும் மனிதரும்’ சிறுகதைத்தொகுப்பு பற்றிக் கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சிறப்பான விமர்சனமொன்றினை எழுதியுள்ளார் (தேனருவி பெப்ருவரி 1963). ‘பொருளியல் தத்துவம்’ -வி.நடேசு B.A.Hons (தேனருவி பெப்ருவரி 1963). ‘இயக்கமும் இலக்கியமும்’ – கா.சிவத்தம்பி (கட்டுரைத்தொடர் (தேனருவி பெப்ருவரி 1963). ‘ஈழத்து இலக்கியமும் இன்றைய விமர்சனமும் – 2’ – க.கைலாசபதி (கட்டுரைத்தொடர்)

‘பவானி புதிய பரம்பரை -3’ என்னும் பகுதியில் எழுத்தாளர் பவானி ஆழ்வாப்பிள்ளை புகைப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார். இதனை எழுதியவர் மகேன் என்றுள்ளது. ‘தேனருவி’யின் உதவி ஆசிரியர் பா.மகேந்திரனாகவிருக்க வேண்டும்.

பெப்ருவரி 1963 தேனருவி இதழில் அதன் அலுவலகம் புதிய முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதை அறிகின்றோம். புதிய முகவரி: 441 புளூமெண்டால் வீதி, கொழும்பு -13.

தேனருவி ஐப்பசி 1994:

‘எண்ண மஞ்சரி’ என்னும் பகுதியில் பல்வேறு இலக்கியத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனந்தி எழுதிய இப்பகுதியில் விசித்திர எழுத்தாளர் வல்லிக்கண்ணன், சாகித்திய மண்டலும் தமிழ்ப்பரிசும், தமிழனுக்கு ஆங்கிலம் புரியாது & பழம் பெருமை பேசுவது பற்றிக் கவிமணி ஆகிய உப தலைப்புகளில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இயக்கமும், இலக்கியமும் (தொடர்) – கா.சிவத்தம்பி

தேனருவி ஜனவரி -பெப்ருவரி 1964 இதழில் வெளியானவை:

எனது எழுத்தாள நண்பர்கள் -1 : சிறுகதை மன்னன்  – எஸ்.பொன்னுத்துரை. இக்கட்டுரைத்தொடரில் தன் எழுத்தாள நண்பர்களைப்பற்றி, அவர்களது படைப்புகளைபற்றி நையாண்டி செய்திருக்கின்றார் எஸ்.பொ. நகைச்சுவைக்காக எழுதப்படும் நடைச்சித்திரங்கள்.இவற்றுக்கும் எமது எழுத்தாளர்களுக்கும் தொடர்புகளேதுமில்லை. இவ்விதம் இத்தொடரின் ஆரம்பத்தில் எஸ்.பொ. குறிப்பிட்டுள்ளார்.  இத்தொடர் பலரின் கண்டனங்களுக்குள்ளாகியதை பிறகு வந்த தேனருவி இதழ்களில் வெளியான வாசகர் கடிதங்கள் புலப்படுத்துகின்றன. அவற்றில் தன் தனிப்பட்ட விரோதங்களுக்காக அவற்றை எஸ்.பொ எழுதுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எஸ்.பொ. இத்தொடரில் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்கள் கற்பனைப்பாத்திரங்கள் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் , நடைச்சித்திரங்களில் விபரிக்கப்பட்டிருந்த எழுத்தாளர்கள் பல எழுத்தாளர்களை நினைவூட்டுவதாலேயே இத்தொடருக்குக் கண்டங்கள் எழுந்துள்ளன. மேற்படி தொடரின் முதலாவது நடைச்சித்திரத்தில் நையாண்டி செய்யப்பட்டிருக்கும் சிறுகதை மன்னன் நிச்சயம் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை நினைவூட்டுவார். இதில் அவர் அச்சிறுகதை மன்னனுக்குத் தான் எழுதிக்கொடுத்ததாகக் கூறுவார். இவையெல்லாம் கற்பனைச் சித்திரங்கள் என்று எஸ்.பொ. கூறியுருந்தும் இன்றுவரை பகடியை  விளங்காத நம்மவர்கள் சிலர் அவற்றை உண்மையாக ஏற்றுக்கொண்டு எழுதி வருவதைக் கண்டிருக்கின்றேன்.

விஞ்ஞான உலகிலே – பா.சிவபாதசுந்தரம் (கட்டுரை)

புதிய பரம்பரை – 6 – செம்பியன் செல்வன். மகேன் எழுதும் கட்டுரைத்தொடரில் இவ்விதழில் எழுத்தாளர் செம்பியன் செல்வன் புகைப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார்.
படித்துப் பாருங்களேன் – கே.எஸ்.சிவகுமாரன்.
எனது நேர்த்திக்கடன் பற்றி ஒரு விளக்கம் – எஸ்.அகஸ்தியர் செப்டம்பர் 1963 இதழில் வெளியான அவரது ‘நேர்த்திக்கடன்’ சிறுகதையைப் பச்சை ஆபாசமெனக் குற்றஞ்சாட்டியவர்களுக்கான அகஸ்தியரின் எதிர்வினை.

தேனருவி மே 1964:

தேனருவி இதழுக்கு உதவும்பொருட்டு ‘வானொலி நாடகக் குழுவினர்’ என்னும் அமைப்பு ஸி.சண்முகம் எழுதி, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்தவிருந்த  ‘யாரது?’ என்னும்  நாடகத்தைப்பற்றிய விளம்பரமும், ஆசிரியர் அருண்மொழி எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. அந்நாடகக் காட்சியொன்றே அட்டைப்படமாகவும் வெளியாகியுள்ளன.

சிறு விலங்கினப் பெற்றோரின் சிரத்தையான பராமரிப்பு -சற்சொரூபவதி நாதன் B.Sc
நாதஸ்வர மேதை காருகுறுச்சி அருணாசலம் – லய  ஞான குபேர பூபதி தட்சணாமூர்த்தி. தட்சணாமூர்த்தி அவர்கள் காரு குறிச்சி அருணாசலத்தின் மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் கட்டுரை. ஆவணச்சிறப்பு மிக்க இக்கட்டுரையில் தட்சணாமூர்த்தி காரு குறிச்சி அருணாசலத்துடனான தனது நெருங்கிய தொடர்பு பற்றியும், அவர் எவ்வகையிலெல்லாம் தன்னைத்  தமிழகத்தில் அறிமுகப்படுத்த உதவினார் என்பது  பற்றியும் நினைவு கூர்கின்றார்.
மேடை நாடகம் – க.செ.நடராசா.
எனது எழுத்தாள நண்பர்கள் – செய்திப்பொடியன் – எஸ்.பொன்னுத்துரை (நடைச்சித்திரத் தொடர்)
புதிய பரம்பரை – 8 : ஜோர்ஜ் .சந்திரசேகரன் – மகேன்
வளரும் கலை பகுதியில் ‘சிலம்புச் செல்வி’ நாடகம் பற்றிய சசி எழுதிய விமர்சனம் இடம் பெற்றுள்ளது.

இக்கட்டுரையில் தேனருவி ஆசிரியர் அருண்மொழி தேவன், போஷகர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது

இதழினிறுதியில் ‘யாரது நாடகம்  பற்றிய விரிவான அநுபந்தம் இடம் பெற்றுள்ளது. அதில் அந்நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றும் வானொலி நாடகக் குழுவினர் அமைப்பு பற்றியும், அதன் போஷகர் எஸ்.ராமச்சந்திரனின் ;எனது பிரார்த்தனை’ என்னும் ஒரு பக்க வாழ்த்துச் செய்தி, நாடகம், சினிமா பற்றிய பாரதிதாசனின் கவிதை, ‘யாரது ‘ நாடகாசிரியர் ஸி.சண்முகத்தின் ‘ஒரு நிமிடம்’ என்னும் கட்டுரை (இக்கட்டுரையில் தேனருவி ஆசிரியர் அருண்மொழி தேவன், போஷகர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.), இக்கட்டுரையில் அவர் தனது இலங்கை வானொலி நாடகங்களில் தனது நாடகப் பங்களிப்பு பற்றியும், தனது நாடகமொன்றில் நடிப்பதற்காக அறிமுகமான தேனருவி ஆசிரியர் அருண்மொழி பற்றியும், நாடகக் குழு பற்றியும் நினைவு கூர்ந்துள்ளார்.  ‘நாடக வானொலிக் குழு’வின் தலைவர் எஸ்.சற்குருநாதன், உபதலைவர் சந்திரகாந்வாசா ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய ‘கலை வளர்’ என்னும் ‘தேனருவி’யின் அறிமுகக் கட்டுரை, இவற்றுடன் மு,வரதராசனின் கலைக்கதிர் இதழில் வெளியான ‘பாவைக்கூத்து’ என்னும் கட்டுரையின் மீள்பிரசுரம் ஆகியன இடம் பெற்றுள்ளன. ‘பாவைக்கூத்து’ பாவைக்கூத்து பற்றிய கட்டுரை. அக்கட்டுரையுடன் ‘யாரது ‘நாடகத்தில் நடித்த நடிகர்களின் புகைப்படங்கள் இடம்  பெற்றுள்ளன. பண்டா புகழ் எஸ்.ஆறுமுகம், நடிகவேள் லடீஸ் வீரமணி, தாசன் பெர்ணாண்டோ, வி.சுந்தரலிங்கம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை (வரணியூரான்), எஸ்.கனகரத்தினம், செல்வம் பெர்ணாண்டோ (நடிகை), கிருஷ்ணகுமாரி ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. யாரது நாடகம் பற்றியும், வானொலி நாடகக் குழு பற்றியும் ஆவணச்சிறப்பு மிக்க தகவல்களைத் தருவதால் முக்கியத்துவம் வாய்ந்த அநுபந்தமிது.

3. கவிதைகள்

தேனருவி ஜூலை 1962:

‘தகனம்’ தொடர் காப்பியத்தின் (கவிஞர்கள் மஹாகவியும், முருகையனும் மாறி  மாறி எழுதும் காப்பியம்)  முதலாம் இயல். ‘சதுரங்கம்’ என்னும் தலைப்பில் கவிஞர் முருகையன் எழுதியிருக்கின்றார்.

தேனருவி ஐப்பசி 1962 இதழில் வெளியானவை:

கவிதை பிறந்த கதை – 5: இ.நாகராஜன்
கலையரசி கவிதை மொழி – பரமஹம்ஸ்தாசன்
தகனம் (தொடர் காப்பியம்) – கவிஞர்கள் மஹாகவியும், முருகையனும் மாறி  மாறி எழுதும் காப்பியம். இவ்விதழில் ‘காமனும் கடவுளரும்’ என்னும் கவிஞர் மஹாகவியின் கவிதை காப்பியத்தின் நான்காம் இயலாக இடம்  பெற்றுள்ளது.

தேனருவி பெப்ருவரி 1963 இதழில் வெளியானவை:

கவிதை பிறந்த கதை -8 – பரம்ஹம்ஸதாசன் . இப்பகுதியில் ஒவ்வொரு இதழிலும் கவிஞரொருவர் தன் கவிதையை எழுதியிருக்கின்றார்.  ‘தேனருவி பாய வேண்டும்’ என்னும் எண்சீர் விருத்தக் கவிதை – ஜீவா நாவுக்கரசன். ‘தேனருவி சஞ்சிகை தொடர்ந்து சிறப்புடன் வெளிவர வாழ்த்தும் கவிதை. ‘அவள் நினைவு’ – பாண்டியூரான் (கவிதை).

தேனருவி ஜனவரி -பெப்ருவரி 1964 இதழில் வெளியானவை:

‘ஆசை அஞ்சல்’ – காசி ஆனந்தன் (பீ.ஏ) –  எண் சீர் விருத்தக் கவிதை. ‘உயிர் ஜோடி’ – ‘தேனருவி – கவிதா. ‘வாங்களேன் அத்தான்’ – ஜீவதேவி.

தேனருவி ஜனவரி -பெப்ருவரி 1964 இதழில் வெளியானவை:

தரம் -ஏ.இக்பால்.

தேனருவி மே 1964:

விளைவு -எருவில் மூர்த்தி – எண் சீர்விருத்தக் கவிதை.

‘தேனருவி’ இதழ்களுக்கான எண்ணிம நூலகமான ‘நூலகம்’ தள இணைப்பு: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF

ngiri2704@rogers.com