வாசிப்பும், யோசிப்பும் 37 : எமது மாறிய உலகினுள் (In Our Translated World)

வாசிப்பும், யோசிப்பும் 37 : எமது மாறிய உலகினுள் (In Our Translated World)In our Translated World என்னும் கவிதைத்தொகுதி அண்மையில் வெளிவந்த இரு-மொழிக் கவிதைத்தொகுதி. ‘டொராண்டோ’ பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தைத் தொகுப்பாசிரியராகக்கொண்டு வெளிவந்துள்ள இரு-மொழிக் கவிதைத்தொகுதி. ‘தமிழ் இலக்கியத்தோட்டம்(கனடா);  ‘டிரில்லியம் அறக்கட்டளையி’ன்’   நிதியுதவியுடன் வெளியிட்டுள்ள தொகுப்பு. இவ்விதமானதொரு தொகுதிக்கு நிதியுதவி வழங்கிய ‘டிரில்லியம் அறக்கட்டளையும், இவ்விதமானதொரு தொகுதியினை வெளியிட முனைந்த தமிழ் இலக்கியத் தோட்டமும், வெளியிட்ட பதிப்பகமான TSARஉம் பாராட்டுக்குரியவை. இந்த நூலினை எனக்கொரு பிரதியினை அனுப்பிய எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும் எனது நன்றி. இத்தொகுப்பினை நான் வாசித்தபொழுது இதனை நான் அணுகியது பின்வருமாறு: இத்தொகுப்பின் தொகுப்பாசிரியரின் தொகுப்பு பற்றிய நோக்கம், இத்தொகுப்புக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தவர்கள், மொழிபெயர்ப்பு மற்றும் படைப்புகள். தொகுப்பாளரின் நோக்கத்துக்கமைய படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்று இவ்விதமான அணுகுமுறையின் மூலம் தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவெடுத்தேன். அது பற்றிய எனது கருத்துகளின் பதிவுகளே இக்கட்டுரை.

தொகுப்பாசிரியரின் நோக்கம்
இந்நூலின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் செல்வா கனகநாயகம் தனது நூலுக்கான முன்னுரையில் கூறியுள்ள முக்கியமான விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

1. ‘இந்தத் தொகுப்பானது முதன் முறையாக பல தசாப்தங்களாகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவரும் உலகின் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும். இந்தத் தொகுப்பினை முக்கிய நோக்கமானது கவிதைகள் அனைத்தையும் உள்ளடக்குவதோ அல்லது கவிதைகளின் கருத்து மற்றும் வடிவம் ஆகியவற்றில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை ஆராய்வதோ அல்ல. மாறாக இந்நூலானது தமிழ்நாடு, இலங்கை,  ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் வாழும் நாடுகளிலிருந்து வெளியான சுமார் எண்பது கவிதைகளை ஒன்று திரட்டி அவதானமாக வகைப்படுத்துகின்றது.

2. ஜேர்மன் கவிஞனான ரெய்னர் மரியா ரில்க்  இயற்கை உலகையும், மானுட வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றான். மிருகங்கள் இயற்கையுடனான தமது தொடர்பினைப் பலப்படுத்தியுள்ள அதே சமயம் மானுடர்கள் உலகைப் பற்றி பாதுகாப்பற்றும், பிளவுண்டும் மிகுந்த கவலையும் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் குறிப்பாகக் கடந்த மூன்று தசாப்தங்களாக அடைந்த அனுபவமானது இடப்பெயர்வு, அதிர்ச்சி, கழிவிரக்கம், நம்பிக்கையின்மை ஆகியவற்றில் ஏதாவதொன்றாகும். புதிய தொடக்கங்களும், நம்பிக்கையும் கருத்தியல்களும் கூட அங்குள்ளன. ஆனால் பிரதானமான உந்துசக்தி துயரமும், மாறுதலுமாகும். இடம் பெயராதவர்கள் வாழ்வில் கூட பழைய உலகமானது பலவேறு அழுத்தங்களுக்குள்ளாகிறது.  பலவகையான மாறுதல்களுக்கும், அனுசரிப்புகளுக்குமுள்ளாகின்றது.  தமிழர்களும் இவ்விதமான மாறிய உலகினுள் சகிப்பு, வருத்தம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடைந்தார்கள். இத்தொகுப்புக் கவிதைகளானது சிக்கல் மிகுந்த அம்மாற்றத்திற்கான சாட்சியாகும்.

3. அநேகமான தொகுப்புகளைப் போல் முழுமையென்பது சாத்தியமற்ற உயர் இலட்சியமாகும். மிகவும் முக்கியமாகக் கவனம் பெற வேண்டிய எல்லோரும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.  ஆனால்  சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள்  அங்கீகரிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்கள்.  சில நேரங்களில் நன்கு பிரபலமான கவிதைகள் சேர்த்துக்கொள்ளப்படாமல் போயிருக்கலாம். அதற்கு முக்கிய காரணம் இத்தொகுப்பின் நோக்கங்களிலொன்று இதுவரையில் வெளிவராத கவிதைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்பதாலாகும்.

கவிதைகளின் தேர்வு
தனது நன்றியுரையில் ‘தமிழ் இலக்கியத் தோட்டத்’தின் செயலாளரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தவர்களுக்கு நன்றி கூறுகின்றார். அவர்கள்:  மோகனரங்கன், சுகுமாரன், அ.யேசுராசா, செல்வம் அருளானந்தம், உஷா மதிவாணன், திருமாவளவன்,  எஸ்.யுவராஜன்,  லதா மற்றும் அனார். மொழிபெயர்ப்பாளர்கள்: எம்.எல்.தங்கப்பா, அனுஷ்யா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி.

கவிதைகளும். மொழிபெயர்ப்பும்
இந்தத் தொகுப்பினை விரைவில் கொண்டுவரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தின் காரணமாகவோ என்னவோ சில இடங்களில் மொழிபெயர்ப்பில் கூடிய சிரத்தை காட்டவில்லையோ என்றொரு எண்ணம் ஏற்பட்டது. மேலும் கவிதைகளின் கீழ் மொழிபெயர்ப்பாளர்களின் விபரங்களையும் தந்திருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். உதாரணமாக கி.பி. அரவிந்தனின் ‘திசைகள்’ என்ற கவிதைக்குத் தலைப்பாக Compass என்று போட்டிருக்கின்றார்கள்.  கி.பி.அரவிந்தனின் கவிதைக்குத் தலைப்பினை ‘திசைகள்’ என்றுதான் கவிஞர் தமிழில் வைத்திருக்கின்றார். ‘திசையறி கருவி’ என்று வைக்கவில்லை. ஆங்கிலத்தில் ‘Compass’ என்று கவிதையின் தலைப்பினை வைத்திருக்கின்றார்கள். அதே சமயம் ‘திசைகள்’ என்னும் சொல்லுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘Directions’ , ‘Cardinal directions’ ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். கவிதையின் தலைப்பாக Cardianl directions’ என்னும் பெயரையே வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.இதுபோல் சுகனின் ‘இருத்தலிற்காய்’ என்னும் கவிதையின் தலைப்பை ‘Dwelling’  என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள். சுகன் தன் தமிழ்க் கவிதையில் ‘இருத்தலிற்காய்’  என்றுதான் வைத்திருக்கின்றார். ‘இருத்தல்’ என்னும் சொல் பல்வேறு ஆழமான சிந்தனைத் தேடலை வேண்டி நிற்பது.  இருத்தலே, இருப்பே,  கேள்விக்குறியானதால்தான் அகதிகளாக மக்கள் உலகின் நானாதிக்குகளையும் நோக்கி எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்களையும் பொருட்படுத்தாமல் சொந்தமண்ணைவிட்டுத் தப்பியோடுகின்றார்கள். அவர்களுக்கு வசிப்பிடம் அல்லது வீடு இல்லை என்பதற்காகவல்ல. அதனை வெளிப்படுத்தும் கவிதையின் தலைப்பான ‘இருத்தலிற்காய்’ என்பதை மிகவும் சாதாரணமான இருப்பிடத்தை அல்லது வசிப்பிடத்தைக் குறிக்கும் சொல்லான dwelling  என்னும் சொல்லால் மாற்றீடு செய்திருப்பது என்னைப்பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அது கவிதையின் ஆழத்தைக் குறைத்துவிடுகிறது.

தொகுப்பின் முதலாவது கவிதை அலறியின் ‘ஒருவன் கொல்லப்படும்போது’. அதில்வரும் ‘மலக்குழி’ என்பதை ‘Lavatory pit” என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள். Lavatory  என்பதன் பொதுவான அர்த்தம் ‘மலசலக்கூடம்’ . மலக்குழி என்பதற்கும் மலசலக்கூடக் குழி என்பதற்கும் கவிதையின் மொழியில் வித்தியாசமுண்டு. இரண்டும் இரு வேறு மனச்சித்திரங்களைத் தோற்றுவிப்பன. மேலும் கவிதையில் ‘மலக்குழிக்குள் பதுங்கியிருக்கும் ஈக்கள்’ என்று வருகின்றது. ‘மலசலக்கூடக் குழிக்குள்’ ஈக்கள் பதுங்கியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அக்குழி மூடிப் பாதுக்காக்கப்பட்ட குழி. ஆனால் கவிதை விபரிக்கும் மலக்குழி, போர் உக்கிரமமாக நடைபெறும்போது மனிதர்கள் படும் அவஸ்தையினை வெளிப்படுத்துவது. மலம் கழிப்பதற்காக அவசரமாகத் தோண்டிய குழுகளுக்குள், ஈக்கள் மொய்த்தபடி இருக்கும் மலக்குழியினைக் குறிப்பது. இவ்விதம்தான் நான் விளங்கிக்கொள்கின்றேன்.

மேலும் மேற்படி கி.பி. அரவிந்தனின் ‘திசைகள்’ கவிதையினைப் ‘புலம்பெயர்ந்தோர்கள்’ பகுதிக்குள் போடுவதற்குப் பதிலாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாட்டுக் கவிஞர்களைக் குறிப்பிடும் ‘ஏனையோர்கள்’ பகுதிக்குள் போட்டிருக்கின்றார்கள்.

மு.பொ.வின் ‘அகாலக் குளியல்’ மிகவும் ஆழமானதொரு கவிதை. காலத்தின் தன்மையானது எவ்விதம் நிகழ்வுகளின் தன்மையைப் பொறுத்து வித்தியாசமாக உணரப்படுகிறது என்பதை விபரிக்கும் கவிதை. கவிஞரின் அறிவானது அவரைக் காலத்தினின்றும் தூக்கி வெளியில் போடுகிறது. அதனைக் கவிஞர் அகாலக் குளியல் என்கின்றார். கவிஞர் தன் காக்கைச் சிறகினை உதறுகையில் காலநீர்  தெறித்தகலுகிறது. அந்த அகாலக் குளியலில் அவர் ஆன்மாவை கண்டறிகின்றார். இதுதான் கவிதையின் சாரம். இங்கு அகாலம் என்னும் சொல்லினைக் கவிஞர் பாவித்துள்ள விதம் என்னை மிகவும் பிரமிக்க வைத்துள்ளது. காலத்துக்கு எதிர்ச்சொல்லாக அகாலம் என்னும் சொல்லினைக் கருதலாம். அதே சமயம் சாதாரண பேச்சு வழக்கில் அகாலம் என்னும் சொல்லினைக் காலம் தப்பிய அல்லது நேரம் கெட்ட நேரத்திலே என்னும் அர்த்தத்தில் பாவித்து வருகின்றோம். ‘ என்ன இந்த அகாலவேளையிலே’ என்று பேச்சு வழக்கில் பாவிக்கின்றோம். இங்கு கவிஞர் அகாலம் என்னும் சொல்லினைக் காலத்தினை மீறிய காலத்துக்கு வெளியே காலமற்ற என்னும் அர்தத்தில் பாவிக்கின்றார். அவரது ஞானம் அவரைக் காலத்தினிறும் அப்பால்தூக்கி வெளியினுள் வீசி எறிந்துவிடுகின்றது. அதனை அகாலக்குளியல் என்கின்றார். இவ்விதம் காலம், வெளியைப் பொருளாகக் கொண்டு தமிழில் கவிதைகள் படைத்தவர்கள் சிலர். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். மு.பொ.வும் அவர்களில் ஒருவர். இந்தக் கவிதையின் முக்கியமான சொல் அகாலக் குளியல். அதனால்தான் கவிஞர் கவிதைக்கு ‘அகாலக் குளியல்’ என்று தலைப்பிட்டிருக்கின்றார். இந்தக் கவிதையின் மிகவும் முக்கியமான சொல் அகாலக் குளியல். இதனை மொழிபெயர்த்தவருக்கு இதற்கு ஈடான சொல்லினைக் கண்டறிவதிலிருந்த சிரமம் காரணமாக அந்தச் சொல்லினையே மொழிபெயர்ப்பிலிருந்து நீக்கிவிட்டு கவிதைக்கு Time and the Soul என்று தலைப்பிட்டிருக்கின்றார்.

இதுபோல் நபீலின் ‘பனிக்குளிர்’ கவிதைக்கு ஆங்கிலத்தில் morning Dew என்று தலைப்பிட்டிருக்கின்றார்கள். தமிழ்க் கவிதையின் முடிவில் ‘ஒவ்வொரு பனிக்காலையிலும் பூத்துக்கொட்டுகிறேன்’ என்று வரும். தமிழில் கவிஞர் தலைபபாக ‘காலைப்பனி’ என்று வைக்கவில்லை. ‘பனிக்குளிர்’ என்றுதான் வைத்திருக்கின்றார்.

இன்னுமொரு கவிதை கவிஞர் திருமாவளவனின் ‘எறும்புகள் – சிறு குறிப்பு’ என்னும் கவிதை. அதிகமான இலக்கணப் பிழைகளுடனுள்ள கவிதையினைத் திருத்தாமல் அப்படியே பிரசுரித்துள்ளார்கள். மேலும் தொகுப்பின் பெரும்பாலான தமிழ்க் கவிதைகளில் நிறுத்தக் குறியீடுகள் முறையாகப் போடப்படவில்லை. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் போட்டிருக்கின்றார்கள். மேற்படி ‘எறும்புகள்’ கவிதையினை ஒருமுறை பார்ப்போம்:

‘எறும்புகளின் வாழ்வு எளிதல்ல.
தினமும் தன் வயிற்றுக்காய் நெடுந்தூரம் நடக்கிறது.
நாள் முழுவதும் அலைகிறது.
வியர்வை ஒழுக ஓடியோடி உழைக்கின்றது.
பேரழிவிலிருந்து
தன் சந்ததிதையைப் பேண பேரச்சம் கொள்கிறது.’

இங்கு கவிஞர் ‘எறும்புகளின் வாழ்வு’ என்று பன்மையில் எழுவாயினைத் தொடங்கும் கவிஞர் அதன் பின் நடக்கிறது, அலைகிறது என்று ஒருமைப் பயனிலைகளைப் பாவிக்கின்றார். இது போல் பல இடங்களில் மேற்படி கவிதையில் சொற்பிரயோகங்களைப் பாவிக்கின்றார். உதாரணமாக, ‘அவை நடக்கிற’ என்று தொடங்கிவிட்டு ‘மர இடுக்குகளிடையேயும் தங்கிச் சீரழிகிறது.’ என்கின்றார். ‘அவற்றின் ஊர்கள் சின்னாப்பின்னப்பட்டு விடுகிறது’. ‘எஞ்சியவை’ என்று பன்மையில் தொடங்கிவிட்டு ‘புலம்பெயர்ந்து விடுகிறது’ என்று முடிக்கிறார். ‘ஒவ்வொரு எறும்புக் கூட்டமும்’ ஒவ்வோர் எறும்புக் கூட்டமும்’ என்றும், ‘ஒவ்வொரு ஊர்’ ‘ஒவ்வோர் ஊர்’ என்றும் வந்திருக்க வேண்டும். நல்லதொரு கவிதையினை இவ்விதமான இலக்கணப் பிழைகள் சீரழித்து விடுகின்றன. தொகுப்பாசிரியர் இது விடயத்தில் கவனமெடுத்திருக்க வேண்டும். இவ்விதமான தவறுகள் இறுதியான ‘புரூவ் ரீடிங்’கில் இயலுமானவரையில் களையப்பட்டிருக்க வேண்டும். மேலும் தமிழ்க் கவிதையில் நிறுத்தக் குறிகள் இடப்பட்டிருக்காத காரணத்தால் மொழிபெயர்ப்பாளர் தவறாக மொழிபெயர்த்திருப்பதையும் காணமுடிகிறது.

‘ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒவ்வொரு ஊர்.
மனிதர்களைப் போல்
எறும்பூர்கள் இரண்டு மோதுவதில்லை என்பது முரண்தான்.’

இவ்விதமாக ஊர் என்ற சொல்லுக்கு அடுத்து முற்றுப்புள்ளி வந்திருக்க வேண்டும். அந்த முற்றுப்புள்ளியைத் தமிழ்க் கவிதையில் காணாத மொழிபெயர்ப்பாளர்

‘ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒவ்வோர் ஊர் மனிதர்களைப் போல’ என்னும் அர்த்தப்படுத்தி, ‘each group of ants resembling people from different villages’ என்று மொழிபெயர்த்திருக்கின்றார். மேலும் கவிஞர் ‘எறும்பூர்கள் இரண்டு மனிதர்களைப் போல் மோதுவதில்லை’ என்று எழுதியிருப்பதை மொழிபெயர்ப்பாளர் ‘it is true there is conflict’ என்று மொழிபெயர்த்திருக்கின்றார். தொகுப்பின் பக்கம் 166இல் வெளியாகியிருக்கும் கவிதை ஆசிரியரின் பெயரும், கவிதையில் தலைப்புமற்று வெளியாகியுள்ளது.

கவிதைகளின் தேர்வு பற்றிச் சில வார்த்தைகள்….
மோகனரங்கன், சுகுமாரன், அ.யேசுராசா, செல்வம் அருளானந்தம், உஷா மதிவாணன், திருமாவளவன்,  எஸ்.யுவராஜன்,  லதா மற்றும் அனார். போன்றோர் தெரிவு செய்த கவிஞர்களில் செல்வம் அருளானந்தம், திருமாவளவன், லதா, அனார் ஆகியோர் உள்ளடங்கியிருக்கின்றார்கள். இது இத்தொகுப்பு பற்றிய விரிவான விவாதங்களுக்குப் பின்னர் வழி வகுக்கும். கனடாவைப் பொறுத்தவரையில் முக்கியமான , தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். குறிப்பாக தில்லைநாதன் சகோதரிகள் (பிரதீபா, தான்யா), மற்றும் பா.அ.ஜயகரன் என்று பலர். இவ்விதமானதொரு சூழலில் காலம் செல்வத்தின் எண்பதுகளில் , பிரான்சில் வெளியான ‘கட்டடக் காட்டினிலே’ தொகுதியிலுள்ள கவிதையொன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், தேர்வுக் குழுவில் காலம் செல்வம் இருப்பதும் கேள்விக்குரியது. காலம் செல்வம் நல்லதொரு கவிஞர். ஆனால் இவரை விடக் கனடாத் தமிழ்க் கவிதைக்கு மிக அதிக அளவில் மேற்குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்றவர்கள் பங்களித்திருக்கின்றார்கள். அவர்கள் விடுபடாமல், காலம் செல்வத்தின் கவிதையும் இடம் பெற்றிருந்தால் தொகுப்பு இன்னும் கனமாக இருந்திருக்குமென்பதென் எண்ணம்.

அதுபோல் தேர்வுக் குழுவிலுள்ள அனாரின் கவிதையான ‘மருதம்’ கவிஞர் அனார் முக்கியமான கவிஞர். அவரது முக்கியமான கவிதைகள் எவ்வளவோ இருக்க மிகவும் சாதாரணமான ‘மருதநிலக் காட்சியினை விபரிக்கும் கவிதையை எதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நூலின் தொகுப்பாசிரியரான பேராசிரியர் செல்வா கனகநாயகம் ‘தமிழர்கள் குறிப்பாகக் கடந்த மூன்று தசாப்தங்களாக அடைந்த அனுபவமானது இடப்பெயர்வு, அதிர்ச்சி, கழிவிரக்கம், நம்பிக்கையின்மை ஆகியவற்றில் ஏதாவதொன்றாகும். புதிய தொடக்கங்களும், நம்பிக்கையும் கருத்தியல்களும் கூட அங்குள்ளன. ஆனால் பிரதானமான உந்துசக்தி துயரமும், மாறுதலுமாகும். இடம் பெயராதவர்கள் வாழ்வில் கூட பழைய உலகமானது பலவேறு அழுத்தங்களுக்குள்ளாகிறது.  பலவகையான மாறுதல்களுக்கும், அனுசரிப்புகளுக்குமுள்ளாகின்றது.  தமிழர்களும் இவ்விதமான மாறிய உலகினுள் சகிப்பு, வருத்தம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடைந்தார்கள். இத்தொகுப்புக் கவிதைகளானது சிக்கல் மிகுந்த அம்மாற்றத்திற்கான சாட்சியாகும்.’ என்று குறிப்பிடுகின்றார். மேற்படி ‘மருதம்’ கவிதை பேராசிரியரின் கூற்றுக்குச் சாட்சியாகவில்லையே.

மேலும் தொகுப்பாசிரியரான பேராசிரியர் செல்வா கனகநாயம் தனது முன்னுரையில் ‘ சில நேரங்களில் நன்கு பிரபலமான கவிதைகள் சேர்த்துக்கொள்ளப்படாமல் போயிருக்கலாம். அதற்கு முக்கிய காரணம் இத்தொகுப்பின் நோக்கங்களிலொன்று இதுவரையில் வெளிவராத கவிதைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்பதாலாகும்’ என்று கூறுகின்றார். ஆனால் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளைப் பார்க்கும்போது இக்கவிதைகளெல்லாம் ஏற்கனவே வெளியான கவிதைகளாகவல்லவா தென்படுகின்றன. உதாரணமாக காலம் செல்வத்தின் ‘வியாகூலப் பிரசங்கம்’ அவரது ‘கட்டடக் காட்டினிலே’ தொகுதியிலுள்ள கவிதை. இதுபோல் மு.பொ.வின் ‘அகாலக் குளியல்’, சுமதி ரூபனின் ‘சூர்ப்பனகை’ இவையெல்லாம் ஏற்கனவே வெளியான கவிதைகள். இவ்விதமாக ஏற்கனவே வெளியான கவிதைகளெல்லாம் இத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கையில் கடந்த மூன்று தசாப்தங்களில் தமிழ்க் கவிதையுலகில் தடம் பதித்த பல முக்கியமான கவிஞர்களின் படைப்புகள் விடுபட்டுப் போயுள்ளதை நியாயப்படுத்த முடியாது. உதாரணமாக சிவரமணி, செல்வி, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான்,   தொடக்கம் இன்றைய கவிஞர்களான ரமணீதரன் (சித்தார்த்த சேகுவேரா), தீபச்செல்வன் வரை பலர் விடுபட்டுப் போயுள்ளார்கள்.

தொகுப்புக் கவிதைகள் பற்றி…
இத்தொகுப்பில் கருணாகரன், நிலாந்தன், சேரன், ஜெயபாலன், அகிலன், அலறி, திருமாவளவன், அவ்வை, சந்திரபோஸ், சல்மா, குட்டி ரேவதி, மனுஷ்யபுத்திரன், ஊர்வசி, மு.பொ, லதா, மாதங்கி, நெப்போலியன், இளவாலை விஜயேந்திரன், செழியன், சுகன், காலம் செல்வம், சல்மா, சண்முகம் சிவலிங்கம், சுமதி ரூபன், ரிஷான் ஷெரீப்.. என்று எண்பது கவிஞர்களின் கவிதைகளுள்ளன. தொகுப்பின் மிக முக்கியமான எனக்குப் பிடித்த கவிதையாக சந்திரபோஸின் ‘புத்தகம் மீதான எனது வாழ்வு’ கவிதையினைக் குறிப்பிடுவேன்.

‘புத்தகம் மீதான எனது வாழ்வு’

– சந்திரபோஸ் சுதாகர் –

‘கொஞ்சம் புத்தகங்களோடு தொடங்கியது வாழ்க்கை.
புத்தகங்களின் சொற்களில் சோறு இல்லை என்பதே
பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க
யாரும் நம்பவில்லை
தமது வாழ்க்கை
புத்தகங்களோடுதான் தொடங்கியதென்பதை.
அவர்களே அப்படி நம்ப
யாரையும்  அனுமதிக்கவில்லை.
புத்தகங்களில் சோறு இல்லை.
புத்தகங்களில் துணி இல்லை.
அணிவதற்கு தங்க ஆபரணங்கள் தானும் இல்லை.
புத்தகங்களே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க…
நான் புத்தகங்களில் வாழ்கிறேன் என்பதையும்
புத்தகங்களில் தூங்குகிறேன் என்பதையும்
இதயம் சிதையும் துயரின் ஒலியை
புத்தகங்கள் தின்னுகின்றன என்பதையும்
ஓ கடவுளே! யாரும் அதை நம்பவில்லை.
என்னையும் அனுமதிக்கவில்லை.

புறாக்கள் வாழ்ந்த கூரைகளில்
உதிர்ந்து கிடக்கின்றன வெண் சிறகுகள்.

அவ்வையின் ‘என்னுடைய சிறிய மலர்’ கவிதையும் தொகுப்பின் முக்கியமான கவிதைகளிலொன்று.
‘சிறிய மலராய் விரிந்து மலரும்

என் மகளுக்கு
எப்படிக் காட்டுவேன்
இந்த உலகை’

என்று ஆரம்பமாகும் கவிதை,

பொட்டும் பிறவும்
அலங்கரிக்கும்
மேனியழகும் உன் அழகல்ல
வெறியும் திமிரும்
அதிகாரமும்
உடைந்து சிதற எழுந்து நில்
உன்னை மீறிய எந்தக் குறியும்
உனது உடலைத் தீண்டாதவாறு
அக்கினிக்குஞ்சாய்
உயிர்த்தெழு!
இந்த உலகின்
பெண்மை வடிவம்
இதுவென்றெழுது!’

என்று முடிகிறது. இடையில் ஆண்களின் பாலியல் வன்முறை குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை என்பதைக் கடுமையாகவே கவிதை சாடுகிறது. பெண் குழந்தைகள், பெண்கள்மேல் புரியப்படும் பாலியல் வன்முறை கண்டு சீற்றமுறும் தாயொருத்தியின் ஆவேசம் மிக்க புரட்சிக் குரலாய் ஒலிக்கிறது அவ்வையின் கவிதை.

இவை தவிர ஏனைய முக்கிய கவிதைகளாக சுகனின் ‘இருத்தலிற்காய்’, இளவாலை விஜயேந்திரனின் ‘காணாது போன சிறுவர்கள்’, தேவ அபிராவின் ‘இரவின் பாடல்’, விநோதினியின் ‘முகமூடி செய்பவள்’, வாசுதேவனின் ‘பலஸ்தீனப் பாதை’, செழியனின் ‘புதைகுழிக்குள் போகப் போகின்றவர்கள்’, ஆழியாளின் ‘பெருமடி’, மாதங்கியின் ‘மலைகளின் பறத்தல்’, விக்கிரமாதித்யனின் ‘பொருள்வயின் பிரிவு’, தேவதேவனின் ‘அமைதியென்பது, தேவதச்சனின் ‘என் நூற்றாண்டு’, சுகுமாரனின் ‘கபீர் நெய்துகொண்டிருக்கிறார்’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமத்துக் கதை’, பெருந்தேவியின் ‘இருத்தல் நிமித்தம்’, மனுஷ்யபுத்திரனின் ‘இழந்த காதல்’, கல்யாண்ஜியின் ‘உள்ளங்கைக்குள் ஏந்தக்கூடிய முட்டை’, உமா வரதராஜனின் ‘முன்பின் தெரியா நகரில்’, சிவசேகரத்தின் ‘போரும் தீர்வும்’, சண்முகம் சிவலிங்கத்தின் ‘வாழ்வும் மரணமும்’, ரிஷான் ஷெரீப்பின் ‘இரவு விழித்திருக்கும் வீடு’, அகிலனின் ‘கைவிடப்பட்ட கிராமம் பற்றிய பாடல்’, அலறியின் ‘ஒருவன் கொல்லப்படும்போது’ ஆகியவற்றைக் குறிப்பிடுவேன்.

மொத்தத்தில் மெற்படி தொகுப்பு நல்லதொரு ஆரம்பம். எதிர்காலத்தில் அவசரப்படாமல், நிதானமாக கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்து, ஒழுங்காக பிழை திருத்தங்கள் பார்த்து இதுபோன்ற பல தொகுப்புகள் வெளிவரவேண்டும். அவற்றுக்கெல்லாம் முன்மாதிரியாக இந்தத்தொகுப்பு விளங்கட்டும்.

ngiri2704@rogers.com