வாசிப்பும், யோசிப்பும் 38 : நட்சத்திரத் துணையுடன் தொடரும் பயணம்!

வாசிப்பும், யோசிப்பும் 38 : நட்சத்திரத் துணையுடன் தொடரும் பயணம்!சஞ்சிகைகளில் ‘கணையாழி’ எனக்கு மிகவும் பிடித்த சஞ்சிகைகளிலொன்று. இம்மாத (மார்ச் 2014) இதழில் வெளிவந்திருந்த கவிதைகளிலொன்று அன்பாதவனின் ‘நட்சத்திரத் துணை’. இந்தக் கவிதை இவ்விதழ்க் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையென்று கூறுவேன். கவிதை இதுதான்:

நட்சத்திரத் துணை

– அன்பாதவன் –

அகாலத்தில் தொடங்கியதென் பயணம்
பயணப் பைக்குள் ஞாபகச் சுமைகள்
மவுனத்தில் மனைவி உறைய
மகனுக்கோ இறுக்க முகம்…
மகள் விழிகளில் சோகநீரின் பளபளப்பு
வாலாட்டும் வளர்ப்புகளின் கேவல்களை
உதறி
வாகனமேற
இயலுமோ துயில…
துணைக்கு வரும் நட்சத்திரங்களுடனான
உரையாடலோடு
அகாலத்தில் தொடங்கியதென் பயணம்.

இந்தக் கவிதையினை வாசிக்குமொருவர் பல்கோணங்களில் இதனைப் புரிந்துகொண்டு இரசிக்கலாம். இன்னுமொரு மாநிலத்தில் அல்லது தொலைவிலுள்ள நகரமொன்றில், அல்லது   மத்திய கிழக்கு நாடு போன்ற அன்னிய தேசமொன்றில் வேலை பார்க்கும் ஒருவர் , தன் குடும்பத்தவரையும் தன்னுடன் வைத்துக்கொள்ளப் பொருளியற் சூழல் இடம் தராத நிலையில், விடுமுறைக்கு வீடு சென்று தன் குடும்பத்தவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் சூழலை விபரிக்குமொரு கவிதையாக இதனை நோக்கலாம். ‘மவுனத்தில் மனைவி உறைய’, ‘மகனுக்கோ இறுக்க முகம்’ , ‘மகள் விழிகளில் சோகநீரின் பளபளப்பு’, ‘வாலாட்டும் வளர்ப்புகளின் கேவல்கள்’ ஆகிய வரிகள் வாசிப்பவர் மனக்கண்ணில் அவ்வரிகளுக்குரிய காட்சிகளைப் படம் விரிக்கின்றன. அதே சமயம் அவர்களைப் பிரிந்து செல்லும் மனிதரின் , அப்பயணத்தின் காரணமாக விளைந்த துயரத்தையும் உணர வைக்கின்றன். இவ்விதமானதொரு நிலையில் அந்த மனிதரால் எவ்விதம் துயில முடியும்? அவரது பிரிவால் வருத்தமுறும் மனிதர்கள் தொடக்கம் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகள் வரையில் அடையும் துயரினைப் போலவே இக்கவிதையினை வாசிக்கும் வாசகரொருவரும் அந்த மனிதரின் மீது பரிதாபம் கலந்த துயரம் கொள்வார்.

ஞாபகச் சுமைகளுடன் தொடரும் அவரின் பயணத்தின் தனிமை ‘துணைக்கு வரும் நட்சத்திரங்களுடனான உரையாடலோடு’ தொடங்கும் அவரது பயணத்தின் தன்மையிலிருந்து புலப்படும். நட்சத்திரங்களைக் கவிஞர்கள் பலர் பெண்களாக வர்ணித்திருப்பதைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் இங்கு கவிஞர் தனிமையில் தன் தவிர்க்க முடியாத பயணத்தைத் தொடக்கியிருக்கும் கவிதை சொல்லியின் தனிமைக்குத் துணைவரும் வழித்துணைவர்களாகக் காண்கின்றார். நல்லதொரு கவிதைக்குச் சுவையூட்டும், சிந்திக்க வைக்கும் கற்பனை.

வர்க்கப்பிரிவுகளால் நிலை குலைந்து கிடக்கும் இந்த உலகில் தன் இருப்புக்காக இவ்விதம் பிரிந்து பயணங்களை நடாத்த வேண்டிய தேவை மானுடருக்கு உள்ளது. அதற்கு இந்தக் கவிதை சொல்லியும் விதிவிலக்கானவர் அல்லர். அதே நேரத்தில் இன்னுமொரு கோணத்திலும் இந்தக் கவிதையினைப் புரிந்து சுவைக்கலாம். அது: உடலுக்கு வேறாக ஆத்மா என்றொன்று இருக்கும் பட்சத்தில், அந்த ஆத்மாவானது இந்த இருப்புக்குச் சொந்தமான தன் உடலை நீங்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறது. அவரது பிரிவால் அவரது உறவினர்கள், வளர்ப்புப் பிராணிகள் அடையும் துயரத்தை விபரிப்பதாகவும் இந்தக் கவிதைக்கு இன்னுமொரு பொருள் கொள்ளலாம். ஞாபகச்சுமைகளுடன் வெளியினூடு விரையும் அந்த ஆத்மாவுக்கு, ஒளியாண்டுகளிலிருந்து நகைக்கும் நட்சத்திரங்களே அதன் தனிமையைப் போக்கும் வழித்துணையாக இருக்கப் போகின்றன. இவ்விதம் பல்வேறு அர்த்தங்களை இக்கவிதைமூலம் புரிந்துகொள்ள முடியும். சிந்தனையத் தூண்டும் ஆழந்த ஆனால் எளிமையான மொழிநடை. அதுதான் இக்கவிதை என்னைக் கவர்ந்ததற்கு இன்னுமோர் காரணம். கூறும் பொருளுக்காகவும், கவிதையின் மொழிக்காகவும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்துப் போனது.

ngiri2704@rogers.com