டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள்; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள் ; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானிஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான்,  தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.  காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’  ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த  ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று  வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.

இருளும் ஒளியும் பிச்சமூர்த்திக்குப் பிடித்த எதிரிணைகள்.தளர்ந்து கிடைப்பவனை எழுச்சியோடு எதிர்கொள்கிறார்..”உயிர்த்துடிப்போடு வாழ்பவனே!’ என்று அழைத்து தன்னம்பிக்கை ஊட்டுகிறார். கார்த்திகை மாதத்தில் தெருமுழுக்க வரிசையாய் விளக்குகள் வைத்ததைப்போல தொடர்ச்சியாக அவர் எழுத்துகள் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி வாசகனை அடுத்தடுத்து சுவாரசியமாய் நகர்த்துகின்றன. சோகம் வடியும்,இரவு விடியும்,ஒளியால் வாழ்வு நிறையும்,வெற்றி கைகூடும் என்ற நம்பிக்கை தரும்வகையில்

“ஜீவா விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்செய்யும்?
அமுதத்தை நம்பு ஒளியை நாடு
கழுகுபெற்ற வெற்றி நமக்குக் கூடும்.”

என்று ஒளியின் உளியில் இக் கவிதைமொழியைச் செதுக்குகிறார்.

இந்தியத் தத்துவமரபின் மையப் புள்ளியாய் திகழும் இருள், ஒளி எனும் எதிரிணைகளை ந.பிச்சமூர்த்தி இங்குக் குறியீடாய் எடுத்தாள்கிறார். இயற்கையைக் கொண்டாடிய அழகியல் தாசனாய் ந.பிச்சமூர்த்தி கவிதைகள் படைத்துள்ளார்.1934 ஆமாண்டு மணிக்கொடி இதழில் அவர் எழுதிய”காதல்” என்ற முதல் கவிதை குறிப்பிடத்தக்கது.

“காதல் தெய்வம் காற்றொலியுடன் கலந்து செல்கிறது
ஒன்றுபட்டால் ஓய்வுண்டாகும்,தேக்கமுண்டாகும்
கலந்தால் கசப்பு உண்டாகும்
காதற்குரல் கட்டிப் போகும்
பிரிவினையின் இன்பம் இணையற்றது
தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப்பிடிக்கிறார்கள்
தெய்வ லீலையை உரக்கச் சொல்லு”

தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப்பிடிக்கிறார்கள் என்ற வரி ந.பி.யின் ஆளுமைக்குச் சான்று“ என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?’’ என்ற அவர் கேள்வி முப்பதுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய வரியாகப் பேசப்படுகிறது. 1937 ஆம் ஆண்டு வெளியான கிளிக்கூண்டு எனும் கவிதையில்

“இருளின் மடல்கள் குவிந்தன,
வானத்து ஜவந்திகள் மின்னின.
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின,
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி,
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு,
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்…”

இயற்கையை முன்வைத்து நிலையாமையை விளக்கும் தன்மை ரசனைக்குரியது. காவிரியாற்றங்கரையில் மணலைப் பரப்பி சுற்றிலும் குச்சிகள் நட்டுகுழந்தைகள் விளையாடும் கிளிக்கூண்டு விளையாட்டை ந.பிச்சமூர்த்தி கவிதையில் விளையாடிப் பார்க்கிறார்.

“சிறியோர்கள் வார்த்தையைப் போற்றினேன்
பெரியோர்கள் இரங்கலைத் தள்ளினேன்
ஆறுஎங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன்
எந்நாளும்”

அழகிற்காகக் காத்திருக்கும் அந்தக் கிளிக்கூண்டு ரம்யமானது.சொற்களை மணலாய் பரப்பி,இனிய ஓசையை நீராய் ஊற்றி,தீராத தாகத்தை விரலாய் மாற்றி குழந்தைகள் விளையாடும் கிளிக்கூண்டைக் கவிஞர் அழகாய் உருவாக்கிப் பறந்துபோன கிளிக்காகக் காத்திருக்கிறார்.

 “மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி”

உடல் நெய்யாகி எரிவதைக் கவிதை காட்சிப்படுத்துகிறது. ந.பி.யின் கவிதைகளில் அறிவுசார்ந்த தர்க்கம் பின்னுக்குப் போய் உணர்ச்சி முன்னே நிற்கிறது. மலர் மலர்வதைப்போல எழுதுவது ந.பி.க்கு இயல்பான அனிச்சைச் செயல்.மகாகவி பாரதிக்குப் பிறகு இலக்கியச் செழுமையோடும் மொழி ஆளுமையோடும் படைப்பிலக்கியம் படைத்தவர் ந.பிச்சமூர்த்தி.தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தையாகப் புதுக்கவிதை தீபத்தை ஏற்றிவைத்தார்.
இந்தியப் பண்பாட்டின்மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகத் தன் சிறுகதைப் பத்திரங்களை உயர்ந்த லட்சியநோக்குடைய பாத்திரங்களாய் படைத்தவர்.’முள்ளும் ரோஜாவும்’ அவரது சிறந்த சிறுகதை. பதினெட்டாம் பெருக்கு,மோகினி,மாங்காய் தலை,காபூலிக் குழந்தைகள்,விஜயதசமி ஆகியன அவரது குறிப்பிடத்தக்கச் சிறுகதைகள்.

வேப்பமரம் கதைசொல்லியாகப் பேசும் “வேப்பமரம்” சிறுகதை அவருடைய அங்கதத்தோடு கூடிய கதையாளுமையின் அடையாளம்.ஒரு வேப்பமரத்தை எப்படித் தெய்வீக மரமாகச் சமூகம் மாற்றுகிறது என்பதை நகைச்சுவை கலந்து அந்தமரமே செல்வதைப்போல் ந.பிச்சமூர்த்தி எழுதியுள்ளார். அந்தக் கதையில்,”முளைப்பதும், இலை விடுவதும் கிளையாவதும் மலர்வதும் நாம் செய்கிறகாரியமா? அவை எல்லாம் தானாக நடக்கின்றன.விரும்பினால்கூட நம்மால் தடைபடுத்தமுடியாது” என்று மரமே சொல்வதாக எழுதியுள்ளார்.

திருமணமாகியும் அவர் மனம் துறவுநிலையை விரும்பியதும்,அதுகுறித்து பகவான் ரமணரிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவர் ந.பி.யை இல்வாழ்க்கைக்குத் திரும்ப அறிவுறுத்தியதும் ந.பிச்சமூர்த்தியின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள். எந்தச் செம்புக்குள்ளும் அடக்க முடியாத மகாநதியான ந.பி.வாழ்வையும் அவ்வாறே எதிர்கொண்டார்.உணர்ச்சிப்பூர்வமான வரிகளைத் தன் மனதின் அடியாழத்திலிருந்து தந்தார்.புதுக்கவிதையின் தந்தையாய் அவர் படைத்த புதுக்கவிதைகள் அக்காலத்தில் யாப்புசார்ந்து எழுதிய புலவர்களுக்குக் கலகத்தைத் தந்தன.அவர் மீதான எரிச்சல் அவர் படைப்பிலக்கியங்கள்மீது அவர் வாழ்ந்தகாலத்தில்  காட்டப்பட்டது.”புரிந்துகொள்ள முடியா குறியீட்டுத் தன்மையோடு எழுதுகிறார்” என்று சிலர் விமர்சித்தனர்.அறிவும் ஆராய்ச்சியும் தேடலும் புதுமையை ஏற்பதையும் ஒத்துக்கொள்ளாத வாசகனால் எந்தப் படைப்பையும் புரிந்து கொள்ளமுடியாது என்ற கருத்தில் ந.பி;

“பகுத்தறிவு சந்தையில்
ஒவ்வொருவரும் கையில்
முற்றுப் புள்ளிகளை
மூர்க்கமாய் வைத்துக்கொண்டு
மனத்தில்பட்ட துறையில்
முளையடித்துக் கொண்டிருந்தார்
சிலர் சுருதியுடன்
சிலர் வருணாசிரமத்துடன்
சிலர் சங்க இலக்கியத்துடன்
சிலர் கம்பருடன்
சிலர் விஞ்ஞானத்துடன்
சிலர் மார்க்ஸ் என்கல்சுடன்
வேறு சிலர் எதனுடனோ.
ஒதுங்கி நின்ற சிலர்
மனஇயலுக்கப்பாலை
அடிசார்ந்த
மார்க்கத்தாரோடு சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் முற்றுப் புள்ளியில்லை
திடீரென்று என் கையைப் பார்த்தேன்
கமாத்தான் இருந்தது.”

முற்றுப்புள்ளி இல்லை ந.பிச்சமூர்த்தி இன்றும் தொடர் புள்ளிதான்;பலரும் தொடரும் புள்ளிதான். 

– கட்டுரையாளர் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் –