நாவல்: அமெரிக்கா (4)!

அத்தியாயம் நான்கு: தடுப்புமுகாம் வாழ்வு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'நாங்கள் தங்கியிருந்த தடுப்பு முகாமில் ஆண்கள் இருநூறு வரையிலிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஆபிரிக்க, தென்னமெரிக்காவைச்சேர்ந்தவர்கள்.  நாடென்று பார்த்தால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களே அதிகமானவர்களாகவிருந்தார்கள்.  இலங்கையைப்பொறுத்தவரையில் நாம் ஐவர்தாம். பங்களாதேஷ், இந்தியாவைச்சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமேயிருந்தார்கள். எல்சல்வடோர், கெளதமாலா போன்ற மத்திய அமெரிக்காவைச்சேர்ந்தவர்களுமிருந்தார்கள். 

விமான நிலையங்களில் போதிய கடவுச்சீட்டுகள், ஆவணங்களின்றி அகப்பட்டவர்கள், அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள், சட்ட விரோதமாக வேலை செய்து அகப்பட்டவர்கள், போதைவஸ்து முதலான குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்து நிற்பவர்கள்.. இவ்விதம் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு விதமான கைதிகள் அங்கிருந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் நிலை பெரிதும் பரிதாபத்துக்குரியது.

பெரும்பாலானவர்கள்  இரண்டு வருடங்களாக உள்ளே கிடக்கின்றார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் போதிய ஆவணங்களின்றி அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள்தாம்.  உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில், உணர்வுகள் அழிக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்களின் நிலை வெளியில் பூச்சுப்பூசிக்கொண்டு, மினுங்கிக்கொண்டிருந்த உலகின் மாபெரும் வல்லரசொன்றின் இன்னுமொரு இருண்ட பக்கத்தை எனக்கு உணர்த்தி வைத்தது.  அமெரிக்கர்களைப்பொறுத்தவரையில் இவர்கள் புத்திசாலிகள்; கடின உழைப்பாளிகள்; விடா முயற்சி, அமோபலம் மிக்கவர்கள்; எத்தனையோவற்றில் உலகின் முன் மாதிரியாகத்திகழுபவர்கள், ஆனால் அதே அமெரிக்காவில்தான் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மனோ வியாதி பிடித்த ‘டெட் பண்டி’ போன்ற கொலையாளிகளும் இருக்கின்றார்கள். உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் அகதிகளும் தடுப்பு முகாம்களென்ற பெயரில் திகழும் சிறைகளில் வாடுகின்றார்கள். வாய்க்கு வாய் நீதி, நியாயம், சமத்துவமென்று முழங்குமொரு நாட்டில் காணப்படும் மேற்படி நிலைமைகள் ஆய்வுக்குரியன.

நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடத்துக்குச் சென்றதும் , எங்களைச்சுற்றி ஆப்கானிஸ்தானைச்சேர்ந்த அப்துல்லா, எல்சல்வடோரைச்சேர்ந்த டானியல், கெளதமாலாவைச்சேர்ந்த டேவ் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். எங்களைப்பற்றி, எங்கள் நாட்டைப்பற்றி, எவ்விதம் இங்கு அகப்பட்டோம் என்பது பற்றியெல்லாம் ஆர்வத்துடன் , வெகு ஆதரவுடன் விசாரித்தார்கள். ஶ்ரீலங்காக் கலவரம் உலகம் முழுவதும் தெரிந்திருந்த காலகட்டத்தில் வந்திருந்ததால், அவர்களுக்குச் ஶ்ரீலங்காவைத்தெரிந்திருந்தது. எங்கள் கதையைக்கேட்டு அனுதாபப்பட்டுக்கொண்டார்கள்.

“இந்த அமெரிக்கர்களே இப்படித்தான். எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் பிரச்சினை தருவது இவர்கள்தாம்” , இவ்விதம் டானியல் கூறினான்.

டானியலுக்குப் பதினெட்டு வயதுதானிருக்கும்.  இன்னும் சிறுவனுக்குரிய தன்மைகளை அவன் முகம் இழந்து விடவில்லை.  அவன் தொடர்ந்தும் கூறினான்: ” எங்களுடைய  நாட்டுப்பிரச்சினைக்குக் காரணமே இந்த அமெரிக்கர்கள்தாம்.  இவர்கள் தருகின்ற  பிரச்சினைகளிலிருந்து  தப்பிப்பிழைத்து
இங்கு வந்தாலோ மனிதாபிமானமேயில்லாமல் மிருகங்களைப்போல் அடைத்து வைத்து, மனோரீதியாகச்சித்திரவதை செய்கின்றார்கள்.”

“நீ எவ்வளவு காலமாக இங்கிருக்கிறாய் டானியல்” இவ்விதம் கேட்ட எனக்கு அவனுக்குப் பதில் ஆப்கானிஸ்தானைச்சேர்ந்த அப்துல்லா பதில் தந்தான்.  அப்துல்லாவின் பதில் என்னை மட்டுமல்ல , எங்கள் எல்லாரையும் கலங்க வைத்தது.

“கடந்த இரண்டு வருடங்களாக நானுமென் நாட்டைச்சேர்ந்த  சிலரும் இருக்கிறோம், ஆனால் டானியல் வந்து ஒரு வருசமாயிருக்கும்.”

“இரண்டு வருசங்கள்.. இவங்கள் , இந்த அமெரிக்கன்கள் என்ன செய்கின்றான்கள்? ” கலக்கத்தால் சற்றே பொறுமையிழந்தஆர் இராஜசுந்தரத்தார்.

“இவங்களுடைய சட்டங்களின்படி எந்த வித ஆவணங்களுமில்லாமல் நாட்டுக்குள் வரமுன்பாகப் பிடிபட்டால் , அப்படிப்பட்டவர்களுடைய வழக்குகள் முடியும் வரையில் உள்ளேயே இருக்க வேண்டியதுதான். அதற்கு ஒரு வருசம் எடுக்கலாம் அல்லது இரண்டு வருசங்களாவதெடுக்கலாம்.”

இவ்விதமாக எங்களுடன் சிறிது ஆதரவாகக்கதைத்துவிட்டு அவர்கள் தத்தமது வழமையான அலுவல்களைப்பார்ப்பதற்குப்புறப்பட்டு விட்டார்கள்.  நாங்கள் எல்லாரும் சிறிது நேரம் கூடிக்கதைத்தோம். எங்கள் எல்லோரிலும் இராஜசுந்தரத்தாரே பெரிதும் கலகத்துடன் காணப்பட்டார்.

” இப்படி இரண்டு, மூன்று வருசங்கள் உள்ளேயே கிடக்க வேண்டுமென்றதை நினைச்சால்.. காசைச்செலவழித்து ஏன் வெளிக்கிட்டனென்று இருக்கு. ஊரிலை மனுசியும், பிள்ளைகளையும் விட்டு விட்டுக் கனடாவுக்குப்போய்க் கெதியிலை கூப்பிடுறனென்றிருக்கிறேன்.”

“அண்ணை! மனதைத்தளரவிட்டு ஆகப்போறதென்னவிருக்கு?  இனி எப்படி இங்கிருந்து தப்பலாமென்பதைப்பார்ப்பம்.”

இவ்விதம் சிவகுமார் கூறவும், அவரை இடை மறித்த இராஜசுந்தரத்தார் கேட்டார்:

” நீயென்ன ஜெயில் பிரேக்கைச் சொல்லுறியோ?”

” அண்ணை, நான் அதைச்சொல்லேலை. எப்பிடி இங்கையிருந்து வெளியிலை போகலாமென்றதைத்தான் சொன்னனான்.”

” பொஸ்டன் தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்களுடன் கதைத்தால் ஏதாவது வெளிக்கலாம்” இவ்விதம் நான் கூறினேன்.

“ஆனால், எப்பிடி அவங்களோடை கதைக்கிறது? ” அருள்ராசா கேட்டான்.

அப்பொழுதுதான் பொஸ்டன் அமைப்பைச்சேர்ந்தவர்களின் தொலைபேசி எண் கூட எம்மிடமில்லை என்ற உண்மை விளங்கியது.

இதற்கு ரவிச்சந்திரன் கூறினான்: ” அண்ணை, எனக்குத் தெரிஞ்சவங்கள் நியூயார்க்கிலை இருக்கிறான்கள். அவங்களிட்டைக் கேட்டுப்பார்த்தால் கட்டாயம் எடுத்துத்தருவான்கள்.”

இவ்விதம் சிறிது நேரம் கூடிக்கதைத்தபடியிருந்து விட்டு, ஒவ்வொருவரும் தத்தமது படுக்கைகளுக்குத்திரும்பினோம். நானும், அருள்ராசாவும் ஒரு ‘பங்  பெட்டில்’ மேல் கட்டிலில் அவனும், கீழ்க்கட்டிலில் நானுமாகப்படுத்துக்கொண்டோம். 

வந்து ஒரு மாதம் ஓடி, ஒளிந்தது. இதற்க்கிடையில் தடுப்பு முகாம் வாழ்க்கைக்கு ஓரளவு பழக்கப்படுத்தியாகிவிட்டது.

காலை, மதியம், மாலையுடன் மூன்று நேரச்சாப்பாடு முடிந்து விடும். வழக்கமாக இரவும் சாப்பிடும் வழக்கமுள்ள எமக்கு, இரவெல்லாம் வயிற்றைப்பசி சுரண்டத்தொடங்கி விடும். ஒவ்வொரு முறை உணவுக்கூடத்துக்குச் செல்லும்போதும் , ஒவ்வொரு கூடத்தைச்சேர்ந்தவர்களும் வரிசையாகக்காத்து நிற்பார்கள். முதலில் பெண் கைதிகள் வந்து உணவுண்டு விட்டுச்செல்வார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டைத்திறந்து விடுவார்கள். சாப்பாட்டைப் பொறுத்தவரையில்ம் , எங்களுக்குப் பழக்கமில்லாதபோதும் சத்தானதை நிறையுணவாகப்போட்டார்கள். காலையில் ஒரு ‘யூஸ்’, கோப்பி, ஒரு பழம், பால் மற்றும் ‘சீரியல்’. இது தவிர ‘ஸ்கிராம்பிள் எக்’ அல்லது ‘பான் கேக்’ , ‘சிரப்பு’டன் தருவார்கள்.  மத்தியான் சோறு, ‘ஸ்பாகட்டி’, இறைச்சி உருண்டைகள், ஒரு ‘யூஸ்’, பழம், கோப்பி தருவார்கள். பின்னேரம்போல் இரவுணவைத்தந்து விடுவார்கள். பழங்கள் அல்லது கோப்பியையோ நாங்கள் எங்கள் கூடத்துக்கு எடுத்துச்செல்ல முடியாது. காவலர்கள் விட மாட்டார்கள். அகப்பட்டால் பறித்து விடுவார்கள். எங்களுக்கோ இரவெல்லாம் பசி வயிற்றைக்கிண்டும். களவாக, எப்படியோ பழங்களைக்கடத்திக்கொண்டு சென்று விடுவோம்.

இன்னுமொரு முக்கியமான விடயம்… அடிக்கடி முகாமின் கைதிகளை நின்ற இடங்களிலேயே நிற்கும் படி , ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துவிட்டு, சிறை அதிகாரிகள் வந்து கணக்கிடுவார்கள்.  அப்படிக்கணக்கிடும்போது சில சமயங்களில் ஒன்றிரண்டு பிழைத்து விடும். அவ்விதம் எண்ணிக்கையில் பிழையிருந்தால், மீண்டும், மீண்டும் சரியான எண்ணிக்கை வரும் வரையிலும் கணக்கிடுவார்கள்.

[தொடரும்]

ngiri2704@rogers.com