தொடர் நாவல்: மனக்கண் (4)

4-ம் அத்தியாயம்: தங்கமணி

ஐஸ்கிறீம் பார்லரில் காதலர்கள்அறிஞர் அ.ந.கந்தசாமி[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்

“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் “வழமையான இடம்.” இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி “ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அறை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் – சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் – காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!

பத்மாவைக் காண்பதற்காக “வழமையான இடத்”தை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீதரின் உள்ளத்தில் அன்று, எதிரும் புதிருமாக இரு குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் காதலர்கள் செய்யும் “களவை” விடச் சிறிது அதிகமாகவே “களவு” செய்திருந்தான். பொதுவாகக் காதலர்கள் தங்கள் காதலைப் பற்றி வெளியாருக்குத்தான் பொய்யுரைப்பது வழக்கம். அதாவது தாய் தந்தையர் ஊரார் உறவினருக்குத் தான், உதாரணமாக, “மகளே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்ட தாய்க்கு “நான் கட்டிய மணல் வீட்டை கடல் அலைகள் அழித்துவிட்டன. அதுவே என் துக்கம்!” என்றாளாம் காதலன் பிரிவால் மனம் வாடிய மகள்.   ஆனால் ஸ்ரீதர் செய்த “களவோ” இப்படிப்பட்டதல்ல. தனது காதலி பத்மாவுக்கே அதாவது களவின் கூட்டாளிக்கே, அவன் பொய்யுரைத்து விட்டான். இந்தச் சிக்கலிலிருந்து இப்பொழுது எப்படித் தப்புவது? “நான் யார்?” என்பதைப் பத்மாவுக்கு இன்றே கூறிவிடுவோமா? நான் வாத்தியார் மகனல்ல, சிவநேசரின் மகன் என்பதை அவளுக்குச் சொல்லிவிடுவோமா?” என்று கேட்டது ஒரு குரல். “வேண்டாம். இன்னும் சில நாள் செல்லட்டும். ஆறுதலாகச் சொல்வோமே!” என்றது மறு குரல். “ஏன் அதைப் பின் போடவேண்டும்? என்றோ ஒரு நாள் சொல்ல வேண்டியதுதானே? ஆகவே அதை இன்றே சொல்லி விட்டாலென்ன?” என்று முதற் குரல் அதற்குப் பதிலளித்தது. “ஏன் அவ்வளவு அவசரம்? நிலைமையை நன்கு பரிசீலித்து ஆறுதலாகச் சொன்னாலென்ன? முள்ளிலே போட்ட சால்வையை மெல்ல மெல்லத் தான் எடுக்க வேண்டுமென்பார்கள். பத்மாவுடன் எனக்கேற்பட்டுள்ள காதல் தொடர்பு என்னும் சால்வை எனது பொய்கள் என்னும் முள் தைத்துக் கிடக்கிறது. அவற்றைப் பிரித்தெடுப்பதை மிகவும் சாவதானமாகத்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய காதலில் கிழிசல்ஏற்பட்டுவிடலாமல்லவா” என்றது இரண்டாம் குரல்.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.இவ்விரு குரல்களின் மோதலுக்கு முன்னால் ஸ்ரீதரால் அவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை  . சிந்திக்கச் சிந்திக்க மூளை குழம்பியதேயல்லாமல், முடிவெதுவும் தோன்றுவதாயில்லை. ஆகவே “சரிதான், அப்புறம் பார்த்துக்கொள்வோம்” என்று விஷயத்தைச் சலிப்போடு ஒத்தி போட்டான் அவன். இவ்வுலகில் சிக்கலான விஷயங்கள் தம் முன்னே எதிர்ப்படும்பொழுது அவற்றை நேர காலத்திலேயே ஆராய்ந்து முடிவுக்கு வருபவர்கள் பத்துப் பேரென்றால், அவை தாமாகவே தீரட்டும் என்று விட்டு விடுபவர்கள் நூறு பேருக்கும் அதிகமென்றே சொல்ல வேண்டும். ஸ்ரீதர் இந்த நூறு பேருக்கு அதிகமான குழுவைச் சேர்ந்தவன் தான்.

பத்மாவின் மனதிலோ இவ்வித கவலைகள் எதுவுமே இருக்கவில்லை.  அவள் உள்ளம் சிட்டுக் குருவி போல் வெட்ட வெளியில் பறந்து கொண்டிருந்தது. “நானே அதிர்ஷ்டசாலி. என் அழகுக் காதலனை மண முடிக்கலாமென்று தந்தையே கூறிவிட்டார். இனி எனக்கென்ன குறை? அவரைக் கைப்பிடித்துக் கொண்டு அகிலமெல்லாம் சுற்றி வருவேன், ஆடுவேன். பாடுவேன். ஒரு போதும் பிரிய விடேன். என் ராஜா எனக்குக் கிடைத்துவிட்டான். இனி நான் அவனை விடுவேனோ?” என்றவாறு சிந்தித்துக் கொண்டே “வழமையான இடத்துக்குப் புள்ளிமான் போல் துள்ளித் துள்ளி வந்த அவள் தன்னையறியாமலே வாய்விட்டுச் சிரித்தும் கொண்டாள். சிரிக்கச் சிரிக்க இன்பமாய் இருந்தது. யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதைக் கவனித்துக் கொண்டு தன் மனம் பூரண திருப்தி பெறும் வரை மீண்டும் மீண்டும் சிரித்தாள். ஆனால் துள்ளும் கால்களை மட்டும் பார்த்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மெல்ல அடக்கிக் கொண்டாள்.

“வழமையான இடத்”தில் பத்மாவும் ஸ்ரீதரும் எதிர்ப்பட்டபொழுது, ஸ்ரீதரின் முகத்தையும் கண்களையும் ஆவலுடன் பார்த்தாள் பத்மா. மெளன மொழியில் அவள் உள்ளம் அவனுடன் பேசியது.

“திருப்திதானே!” என்றன அவள் நயனங்கள்.

“ஆம் திருப்திதான்” என்று பதிலளித்தன அவன் கண்கள்.

நான்கு கண்களை வாயாக்கி இரண்டு உள்ளங்கள் அங்கு பேசிக்கொண்டன.

இந் நிலையால் ஏற்பட்ட போதையை ஒரு கண மெளனத்துக்கு மேல் தாங்க முடியாது போலிருந்தது பத்மாவுக்கு. அதனை மெளனமாக மேலும் மேலும் அனுபவித்துக்கொண்டு நிற்க அவளுக்கு ஆசைதான். ஆனால் வாழ்க்கையை அவ்வாறு ஒரே போதி மயமாக்கிவிட முடியுமா என்ன? எனவே அந்தரத்திலிருந்து கீழே வர நினைத்த பத்மா “பார், அவருடைய ஆனந்தத்தை!” என்றாள் கேலியாக.

ஸ்ரீதர் பதிலுக்குப் புன்னகை செய்தான். என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. வெறுமனே “பத்மா, வா ஐஸ்கிறீம் சாப்பிடுவோமா?” என்றான். பத்மாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “ஆம்” என்று புறப்பட்டாள். தந்தையே அங்கீகரித்துவிட்ட காதலனுடன் எங்கு போவதற்கும் எதற்கு அஞ்ச வேண்டும்?

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருந்த மரமடர்ந்த சாலைக்குச் சென்றார்கள் இருவரும். வீதியின் இருமருங்கும் செழித்து வளர்ந்திருந்த மரங்கள் வீதிக்கு இலைக் கூரையிட்டிருந்தன. பச்சப் பசேலென்ற அவ்விலை முகட்டின் இடைவெளிகளுக்கூடாக கதிரவனின் வெங்கதிர்கள் ஒளிக் கோலமிட்டிருந்தாலும் வெப்பம் உடலைத் தாக்கவில்லை. இயற்கையின் பவளக் கட்டுப்பாட்டு (ஏயர் கண்டிஷன்) அமைப்புப் போல் அமைந்திருந்த மர நிழல் வீதியைக் குளு குளு என்று வைத்திருந்தது. குளிர்ந்த உள்ளத்துடன் காதலர்கள் அங்கு நடந்து சென்றார்கள். ஸ்ரீதருக்கு அப்போது ஏற்பட்டிருந்த மன நிறைவில் பத்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் யாராவது பார்த்து விட்டால் என்ற அச்சம் அவளை அவ்வாறு செய்யாது தடுத்தது.

“பத்மா! உனது அப்பாவை எப்படி இந்த விஷயத்தைப் பேசும்படி செய்தாய்?” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“நீங்கள் இனிமேல் அப்பாவை “உனது அப்பா உனது அப்பா” என்று சொல்லக் கூடாது. மாமா என்று சொன்னால் என்னவாம்? வாய் புளித்து விடுமோ?” என்றாள் பத்மா பொய்க் கோபத்துடன்.

“எனக்கு அப்படிச் சொல்ல வெட்கமாயிருக்கிறது, பத்மா” என்றான் ஸ்ரீதர். தனது தலை மயிரைச் சரி செய்தவாறே.

“மகளைக் கல்யாணம் கட்ட ஆசை. ஆனால் தகப்பனாரை மாமா என்று சொல்ல வெட்கமா மிஸ்டர்!” என்றாள் பத்மா, புன்னகையுடன், தன் பின்னலைப் பிரித்துப் பிரித்துச் சீர் செய்தவாறே.

இதற்கிடையில் வீதியில் வந்த டாக்சி ஒன்றைக் கை காட்டி நிறுத்தினான் ஸ்ரீதர். “எதற்கு டாக்சி!” என்றாள் பத்மா. “ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போக” என்றான் ஸ்ரீதர். “என்ன, இந்த கால் மைல் தூரத்துக்கு டாக்சியா?” என்று பத்மா சொல்லி முடிப்பதற்குள் டாக்சியின் கதவைத் திறந்து விட்டான் டிரைவர். இருவரும் ஏறியுட்கார்ந்தார்கள். டாக்சி பறந்து போய், பம்பலப்பிடிச் சந்தியிலிருந்த எஸ்கிமோ ஐஸ்கிறீம் ‘பார்லர்’ முன்னால் நின்றது.

பத்மாவும் ஸ்ரீதரும் ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குள் புகுந்த போது பத்மா திடுக்கிட்டுவிட்டாள். ஏனெனில், அவளது தோழி தங்கமணியும் வேறிரு மாணவிகளும் அப்போதுதான் ஐஸ்கிறீம் அருந்திவிட்டு உல்லாசமாகச் சிரித்துப் பேசியவண்ணம் முகத்துக்கு நேரே வந்து கொண்டிருந்தார்கள். பத்மா அதற்கு முன்னர் ஓரிரு தடவை ஸ்ரீதருடன் பல்கலைக் கழகச் சிற்றுண்டிச் சாலையில் தேநீர் அருந்தியிருந்தபோதிலும் ஓர் ஆடவனுடன் ஐஸ்கிறீம் அருந்த பகிரங்கமான, ஒரு ஹோட்டலுக்கோ, ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்கோ பத்மா தனித்து போனது இதுவே முதல் தடவையாகும். அவ்விதம் முதல் தடவை சென்ற பொழுதே சக மாணவிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டால் யாருக்குத்தான் அதிர்ச்சி ஏற்படாது? பத்மாவின் முகம் நாணத்தால் குப்பென்று சிவந்ததாயினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு இலேசான புன்னகை ஒன்றை உதிர்ந்துவிட்டு ஸ்ரீதரின் பின்னால் நாணிக்கோணி உள்ளே சென்றாள்.

தங்கமணி ஒரு தடவைக்கு இரண்டு தடவை தன் முகத்தைத் திருப்பி வேறெதையோ பார்ப்பது போல் ஸ்ரீதரையும் பத்மாவையும் திரும்ப திரும்பப் பார்த்துக்கொண்டாள்.

ஐஸ்கிறீம் சாலையில் பெண்களும், ஜோடிகளும் குடும்பங்களும் உட்கார்ந்து சாப்பிடுவதற்கென்று சிறிய அழகான அடைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் “வேகன்ட்” (இடம் காலி) என்று அட்டை தொங்கிய ஒரு சிறிய கதவைத் தள்ளிக்கொண்டு ஓர் அடைப்புக்குள் புகுந்தான் ஸ்ரீதர். பத்மாவும் பின் தொடர்ந்தாள்.

அவர்களைத் தொடர்ந்து உள்ளே வந்த வெயிட்டரிடம் ஐஸ்கிறீம் “மெனு”க் கார்டை வாசித்து விலை உயர்ந்த *ஐஸ்கிறீம் வகைகளில் இரண்டு கிண்ணங்கள் கொண்டு வரும்படி உத்தரவிட்டு, ஸ்ரீதர் பத்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு மேசையில் கொடி போல் துவண்டு கிடந்த அவளது வளைக் கரங்களைப் பற்றினான். அவளது மலரிதழ் போன்ற குளிர்ந்த கரங்களில் அவள் அணிந்திருந்த கறுப்பு நிறக் கண்ணாடி வளையங்களைத் தன் விரல்களால் நீக்கி நீக்கிப் பார்ப்பது அவனுக்கு ஒரு வகை இன்பத்தைக் கொடுத்தது. பத்மாவும் ஒன்றும் பேசவில்லை. அவளுக்கும் அதில் ஒரு சுகமேற்படவே செய்தது. ஆனாலும் அவள் அதை முற்றிலும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் என்பதற்கில்லை. ஏதோ சிந்தனையிலிருந்தாள். அவள் முகத்தில் கவலை கூடாரமிட்டிருந்தது!

ஸ்ரீதருக்கு அவள் மெளனம் பிடிக்கவில்லை. “என்ன பத்மா, என்ன யோசனை!” என்று கேட்டான். ஸ்ரீதரின் அக்கேள்விக்குப் பின்னர்தான் பத்மா இவ்வுலகிற்கு வந்தாள். “இல்லை எனது வகுப்பு மாணவிகள் சிலர் எங்களைப் பார்த்துவிட்டார்கள் அல்லவா? அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றாள் அவள்.

ஸ்ரீதர் அதைக் கேட்டதும் அழுத்தம் திருத்தமாக “இதிலென்ன யோசிக்க இருக்கிறது? அவர்கள் ஏதாவது பேசினால் ஸ்ரீதர் என் காதலன். அவனை தான் கட்டிக்கொள்ளப் போகிறேன். கல்யாணத்துக்குக் கட்டாயம் கார்டு அனுப்புவேன். வரத் தயங்கக் கூடாது என்று சொல்லிவிட்டால் போகிறது. விஷயம் அப்படியே தீர்ந்து விடும்” என்றான்.

ஸ்ரீதரின் தமாஷான இப் பேச்சைக் கேட்டு, பத்மா முக மலர்ச்சியோடு சிரித்தாள். என்றாலும், அப்படிப் பேசுவது அவ்வளவு இலேசா என்ன? “ஆண் பிள்ளைகள் அப்படிப் பேசக் கூடும். பெண்கள் வாயடக்கமாகப் பேசாவிட்டால் ஊரெல்லாம் தூற்றும். வெட்கங் கெட்டவள் என்று சொல்லுவார்கள்” என்றாள்.

இதற்கிடையில் வெயிட்டர் பள பளவென்று ஒளி வீசிய வெள்ளி முலாம் பூசிய கிண்ணங்களில் ஐஸ்கிறீமைக் கொண்டு வந்து வைத்தான்.

இருவரும் அருந்த ஆரம்பித்தனர். நன்கு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீமீன் இனிய சுவையை நா அனுபவிக்கத் தொடங்கியதும் பத்மா கலகலப்பாகப் பேச ஆரம்பித்தாள். தந்தை பரமானந்தர் தன்னிடம் தனது திருமணத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்ததையும், தான் அவர் கேட்ட கேள்விகளுக்கு வெட்கத்தோடு அளித்த பதில்களையும் விவரமாகச் சொன்னாள் பத்மா. ஸ்ரீதர் பத்மாவின் கெட்டித்தனத்தைப் பாராட்டினான் என்றாலும், அவன் மனதை ஒரு கேள்வி, புழு அரிப்பது போல் குடைந்து கொண்டேயிருந்தது. “நான் யார்” என்பதை இப்பொழுதே சொல்லி விடுவோமா?” என்பதே அது. முடிவில் அப்பொழுது சொல்வது உசிதமல்ல. வேறொரு நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டான் அவன்.

பத்மா பேசிக் கொண்டே போனாள். “எங்கப்பா திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டார். உங்களப்பா விஷயமென்ன? ஒரு வாத்தியார் சம்மதித்துவிட்டால் போதுமா? மற்ற வாத்தியார் சம்மதமும் வேண்டாமா? அதையும் சீக்கிரமாகத் தீர்த்துக் கொண்டால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும்” என்றாள் அவள்.

ஸ்ரீதர் “நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. நான் இம்மாத முடிவில் வீட்டுக்குப் போய் வரும்போது நல்ல செய்தியுடன் தான் வருவேன். எல்லாம் வெற்றியாகவே முடியும். நீ உனது தந்தைக்கு எப்படி ஒரே செல்ல மகளோ அப்படியே நானும் என் பெற்றோருக்கு ஒரே செல்லப்பிள்ளை. என் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க அப்பா நினைத்தாலும், அம்மா அதற்கு ஒரு போதும் விடமாட்டாள் பத்மா” என்றான்.

அதற்குப் பிறகு இளங் காதலர்கள் காதற் பேச்சுகள் பேசிக் கொண்டார்கள். சில சமயம் சிருங்காரமாகப் பேசினார்கள். சில சமயம் நகைச்சுவையாகப் பேசினார்கள். சில சமயம் ஊடுவது போலவும் பேசினார்கள்.

“நீ என்னை உண்மையாகக் காதலிக்கிறாயா?” என்றான் ஸ்ரீதர்.

“அதில் கூடச் சந்தேகம் கொள்கிறீர்களா? அப்படியானால் என்னுடன் பேச வேண்டாம்” என்று கோபித்தாள் பத்மா.

“கோபிக்காதே என் கோபி! அதிகமாகக் கோபித்தாயானால் உன் கிருஷ்ணன் வீதியில் ஒரு மாட்டு வண்டிக்கு முன்னர் பாய்ந்து உயிரை விட்டு விடுவான். ஜாக்கிரதை.” என்று தமாஷாகக் கூறினான் ஸ்ரீதர்.

காதலர்களின்  பேச்சு பற்பல திசைகளில் திரும்பித் திரும்பிச் சென்றது.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.“உங்களம்மா யாரைப் போலிருப்பாள்? உங்களப்பா யாரைப் போலிருப்பார்? உங்களைப் போலா? என்னை அவர்களுக்குப் பிடிக்குமா? அவர்களுக்கு என் மீது பிடித்தம் ஏற்பட நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நான் கொழும்பு மோஸ்தரில் உடுத்துவது அவர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ?” என்ற கேள்விக்கு மேல் கேள்வியை அடுக்கினாள் பத்மா. ஒரு பெண்ணின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது உண்மையில் பரீட்சைக்குப் பதிலளிப்பதை விட எவ்வளவோ கடினமானது என்பது அப்பொழுதுதான் ஸ்ரீதருக்குத் தான் தெரிந்தது. திடீரென “ நான் இம்முறை பரீட்சையில் முதலாம் வெகுப்பில் சித்தி என்பது நிச்சயம்” என்று கூறினான் ஸ்ரீதர். “அதென்ன, திடீரென அவ்வளவு நிச்சயம் ஏற்பட்டுவிட்டது?: என்று கேட்டாள் பத்மா ஆச்சரியத்துடன். “இல்லை, உன் கேள்விகளுக்கு டக் டக் என்று பதிலளித்த நான் எப்படி பரீசையில் தோற்க முடியும்? நிச்சயம் முதல் வகுப்புக் கிடைக்கவே செய்யும்” என்றான் ஸ்ரீதர். ஆனால் கேள்விக் கணைகளை பத்மா மட்டும்தான் தொடுத்தாள் என்பதில்லை. ஸ்ரீதரும் கேள்விகள் கேட்கவே செய்தான். “ நீ என்னைக் காதலிப்பது எதற்காக?” என்று அவன் கேட்டதும் பத்மா அவனது அழகிய விழிகளை நோக்கியவாறு, “உங்கள் அழகிய கண்கள்தாம் என்னை முதல் முதலில் கவர்ந்தன. உண்மையில் அவை போன்ற கண்களை நான் வேறெங்கும் கண்டதேயில்லை” என்று கூறினாள். ஸ்ரீதர் “அப்படியா? அப்படியானால் நிச்சயம் இன்று என் கண்களை நான் கண்ணாடியில் பார்க்க வேண்டும்” என்று தன் கண்களைத் தன் கண்களால் தடவிக் கொண்டு வேடிக்கையாகக் கண்களை வெட்டினான். பத்மா தன்னை மறந்து கல கலவென்று சிரித்துவிட்டாள். “உஷ்” என்று வாயில் விரலை  வைத்து மெளன அடையாளங் காட்டினான் ஸ்ரீதர். பத்மா மதுவுண்ட வண்டு போல் ஸ்ரீதரின் கன்களயே பார்த்துக் கொண்டு வீற்றிருந்தாள்.

ஸ்ரீதர் திடீரென்று “அப்படியானால் நீ என்னை மூளைக்காகக் காதலிக்க வில்லையா?” என்று கேட்டான். பத்மா பளிச்சென்று “அது எப்படி முடியும்? ஒருவரிடம் உள்ள ஒன்றைப் பார்த்துதானே இன்னொருவர் அவர் விரும்ப முடியும்” என்று பதிலளித்தாள். ஸ்ரீதர் அவளது சாதுரியத்தை உண்மையில் மெச்சினானாயினும், “பத்மா! நீ சரியான வாயாடி!” என்று சும்மா சொல்லி வைத்தான். ஸ்ரீதரின் கேள்விக்குப் பதில் கேள்வியாக, பத்மா ஸ்ரீதரிடம் “நீங்கள் ஏன் என்னைக் காதலிக்கிறீர்கள்!” என்று கேட்டாள். “உன்  அழகுக்காக, உன் நிலா முகத்துக்காக, உன் முல்லைச் சிரிப்புக்காக, உன் விழிகளுக்காக, ஏன், உன் வாய்க்காகவும்தான்!” என்றான் ஸ்ரீதர்.

காதலர்கள் குறும்பாகவும் அன்பாகவும் போட்டியாகவும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க வெள்ளைக் கோட்டு போட்ட வெயிட்டர் ‘பில்’லுடன் வந்து விட்டான். ஸ்ரீதர் தன் காற்சட்டைப் பையிலிருந்து இரண்டு புத்தம் புதிய நூறு ரூபாத் தாள்களை எடுத்து அதிலொன்றை வெயிட்டரிடம் கொடுத்தான். வெயிட்டர் அதை எடுத்துச் சென்றதும் பத்மா ஸ்ரீதரிடம் “என்ன, பணப் புழக்கம் அதிகமாயிருக்கிறது! அப்பா தன் பென்ஷன் பணத்திலிருந்தா உங்களுக்கு இவ்வளவு தாராளமாகப் பணம் அனுப்புகிறார்! நீங்கள் அவர் பணத்தை டாக்சிக்கென்றும் அதற்கென்றும் இதற்கென்றும் வீணாக்குவது தவறு” என்று கடிந்து கொண்டாள்.

ஸ்ரீதர் பத்மாவின் எதிர்பாராத இவ்வார்த்தைகளால் அசந்து போய் விட்டான். என்றாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “இல்லை. இந்தக் காசு நான் சம்பாதித்தது. நான் பின்னேரங்களில் சில பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறேன்,” என்றான்.

பத்மா, “அப்படியா விஷயம்! அதனால் அந்தக் காசைக் கரியாக்கலாம் போலும்! நீங்கள் பெரிய செலவாளி. இந்த ஷெர்ட்டின் விலை என்ன? இருபத்தைந்து ரூபா இருக்குமா?” என்றாள்.

“இல்லை, இதன் விலை அறுபது அல்லது எழுபது ரூபாவென்று நினைக்கிறேன். ஞாபகமில்லை” என்றான் ஸ்ரீதர்.

“பார்க்கப் போனால் நீங்களும் என்னைப் போல் வாத்தியார் பிள்ளை. ஆனால் பேச்சோ ராஜா மகன் மாதிரி. விலைக்கு வாங்கிய ஷேர்ட்டின் விலை கூடத் தெரியவில்லை. ஆளைப் பார் ஆளை” என்றாள் பத்மா கிண்டலாக.

வெயிட்டர் மிச்சக் காசை ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தான். அதில் ரூபா ஒன்றை விட்டுவிட்டு, சொச்சத்தை எடுத்துக் கொண்டான் ஸ்ரீதர். வெயிட்டர் நாய்க்குட்டி குழைவது போல் நின்று, நன்றியறிதலோடு சலாம் செய்து விட்டு வெளியேறினான்.

“ஆமாம். உங்களுக்குப் பணம் அதிகரித்துத்தான் விட்டது. இல்லாவிட்டால் ஒரு ரூபாவை அவனுக்குக் கொடுப்பீர்களா?” என்றாள் பத்மா.

அப்பொழுது ஐஸ்கிறீம் சாலையிலிருந்த மணிக்கூடு டணால் டணால் என்று பன்னிரண்டடித்து ஓய்ந்தது. பத்மா கனவிலிருந்து விழித்தவள் போல “நேரமாகிறது. போவோமா?” என்றாள்.

பத்மாவும் ஸ்ரீதரும் மேசையை விட்டு எழுந்தார்கள். உல்லாசப் பேச்சாலும், காதல் என்ற மெல்லுணர்வின் இனிய அரவணைப்பாலும், வாய்க்கு உருசியான உணவாலும் பத்மாவின் மனதில் தங்கமணியும் தோழியர்களும் ஏற்படுத்திய சலசலப்பு இப்போது அடங்கியிருந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.உண்மையில் அவள் உள்ளத்தில் அதிகாலை தேர்ந்தத் தடாகம் போன்ற ஒரு பேரமைதி குடி கொண்டிருந்தது. தனது வாழ்க்கையிலேயே ஒரு காலமும் அனுபவித்திராத ஒருவித பூரணத்துவத்தை அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். தான் இவ்வுலக வாழ்வில் விரும்பியதெல்லாம் ஒவ்வொன்றாகக் கிட்டுவது போன்ற ஓருணர்ச்சி அவள் உள்ளத்தைத் தாலாட்டியது. ஆனால் ஸ்ரீதரின் மனதின் நிலையோ வேறு விதமாக இருந்தது. தான் யார் என்பதை எப்படிப் பத்மாவுக்கு எடுத்துக் கூறுவது என்பது அவனுக்கு விளங்கவில்லை. பத்மாவின் காதல் தோழமையையும் கண்ணுக்கு முன்னால் இன்பமூட்டிக் கொண்டிருந்த அவள் எல்லையற்ற அழகையும் பூப்போன்ற அவள் கன்னங்களில் நேரத்துக்கு நேரம் இடம் மாறி உயிர்த்துடிப்போடு தவழ்ந்து கொண்டிருந்த சங்கின் சுழி போன்ற அவளது கன்னச் சுழியையும், சுருண்ட கேசத்தையும், தந்தத்தில் கடைந்தெடுத்தது போன்று சொகுசோடு காட்சியளித்த அவள் மெல்லிடையையும், எல்லாவற்றுக்கும் மேலாக வீணா கானம் போன்ற தன் இனிய குரலில் அன்பையும் குறும்பையும் சொரிந்து அவள் பேசிய வார்த்தைகளையும் அவன் உண்மையில் இரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தான் எனினும், அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் தான் கூறிய பொய்யினால் ஏற்பட்ட கவலை பனி மூட்டம் போல் திசையிட்டிருந்தது. அவள் விரல்களையோ, கரங்களையோ அவன் தொட்ட போது, அவன் உள்ளம்  மேகங்களிடையே சஞ்சரித்தது உண்மையேயாயினும் அந்த மேகத் தொகுதி  மின்னற் கொடிகளின் துடி துடிப்பிலே நடுங்கிக் கொண்டிருந்தது போலவும் அந்த நடுக்கம் தன்னையும் பாதிப்பது போலவும் ஸ்ரீதருக்கு ஓருணர்வு ஏற்பட்டது. இருந்தாலும் என்ன செய்வது? ஏதோ பொய் சொன்னது சொல்லிவிட்டோம். எப்படியோ பிரச்சினை ஒன்று தோன்றிவிட்டது. அதைச் சந்தர்ப்ப சூழலை அனுசரித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டியது தான். அதற்காக இவ்வளவு கலங்கக் கூடாது. மேலும் இதனால் என்ன தலையா போய்விடப் போகிறது? ஆண் பிள்ளை ஆண்மையோடு நடந்து கொள்ள வேண்டாமா? – என்பது போன்ற எண்ணங்கல் குறுக்கும் மறுக்குமாக அவனது மனதில் நடமாடிக் கொண்டிருந்தாலும், அதரங்களில் என்னவோ ஒப்புக்கு ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டேயிருந்தது.

பத்மாவும் ஸ்ரீதரும் ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்கு வெளியே வந்ததும் தத்தம் பாதைகளில் பிரிந்தார்கள். “நாளை வழமையான இடம்” என்றாள் பத்மா. “ஆகட்டும் கண்ணே” என்றான் ஸ்ரீதர் போலிக் குறும்போடு.

பத்மா ஐஸ்கிறீம் ‘பார்லரி’லிருந்து நேரே பல்கலைக் கழகத்துக்குப் போய் அங்கிருந்து கொட்டாஞ்சேனை பஸ் தரிப்புக்குச் சென்றாள். ஸ்ரீதர் எவ்வளவு சொல்லியும் டாக்சியில் செல்ல மறுத்து ‘புல்லர்ஸ்’ வீதிவழியாக நடையிலேயே சென்றாள் பத்மா. அவள் கண்ணுக்கு முற்றாக மறைந்ததும் ஸ்ரீதர் “சுரேஷை உடனே கண்டு பேச வேண்டும்” என்று எண்ணிக் கொண்டே ஒரு டாக்சியை மறித்து, அதில் ஏறிக்கொண்டான்.

பஸ்தரிப்பில் பத்மா சற்றும் எதிர்பாராத வகையில் அவளது சிநேகிதி தங்கமணியும் பஸ்சுக்காகக் காத்துக் கொண்டு நின்றாள். பத்மாவைக் கண்டதும் அர்த்தபுஷ்டியுள்ள புன்சிரிப்புடன் சுட்டு விரலை விறைப்பாக உயர்த்தி “எல்லாம் எனக்குத் தெரியும், மச்சாள்” என்பது போன்ற ஒரு சைகையைச் செய்தாள் தங்கமணி. பத்மா நாணத்தால் குன்றிவிட்டாள். எனினும், பெண்களுக்கே இயல்பாயுள்ள முறையில் எப்படியோ சிரித்துச் சமாளித்துக் கொண்டாள். ஆனால் அந்தப் பஸ் தரிப்பிலே அவள் உள்ளம் வெதும்பும் சம்பவம் ஒன்று சீக்கிரமே நடக்கப் போகிறது என்பது அப்பொழுது அவளுக்குத் தெரியாது. காலை நேரம், எவ்வளவு இன்பமாய் இருந்ததோ, அவ்வளவுதுன்பமயமான மாலை நேரம் ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது என்பதை அவள் அறியாள்.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.தங்கமணியும் பத்மாவும் ஓரளவு சிநேகிதிகளே என்றாலும், அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது. உண்மையில் பத்மாவுடன் சிநேகிதியாக இருப்பது எந்தப் பெண்ணுக்குமே கஷ்டமாகத்தானிருக்கும். பல்கலைக்கழகத்திலேயே ஐந்து அழகிய பெண்களைப் பொறுக்கினால், நிச்சயம் பத்மாவும் அதில் ஒருத்தியாக இருப்பாள் என்பதில் சந்தேகமிலை. படிப்பிலும் பத்மாகெட்டிக்காரிதான். அத்துடன் நாடக மன்றத்தின் இணைக் காரியதரிசி. இவையெல்லாம் அவளைச் சாதாரண மாணவிகளிடையே செல்வாக்குடையவளாகச் செய்திருந்தாலும், தாமும் வாழ்க்கையின் முன்னணியில் நிகழ வேண்டும் என்ற எண்ணம் படைத்த மாணவிகளிடயே அவள் மீது தாங்கொனாத பொறாமையைத்தான் தூண்டியிருந்தன. தங்கமணியும் அப்படிப்பட்ட ஒரு மாணவியே. இயற்கை அவளுக்கு அழகைத் தாராளமாக வாரி வழங்காவிட்டாலும் நல்ல உடற்கட்டை அளித்திருந்தது. நல்ல உயரம். பொது நிறமென்று சொல்ல முடியாத கரிய நிறமென்றாலும் அவள் முகத்தில் எவ்வித குறைபாடுகளுமில்லை. அளவான மூக்கு, சிறிது நீளமான முகம். அமைப்பான கன்னங்கள், மேலேறிய புருவம், அப்புருவத்துக்கு நடுவே ஆச்சரியக் குறி போன்ற சிவந்த பொட்டு, உயர்ந்த இடை — இவைதாம் தங்கமணி. எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரியும் இத்தோற்றத்துடன் தயக்கமில்லாத கலகலப்பான பேச்சும்  எங்கும் முன்னே சென்று தலைமை தாங்கும் பண்பும் அவளிடம் இருந்தன.

தங்கமணிக்குப் பத்மாவின் இரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டதில் பரம திருப்தி. ஏற்கனவே பத்மா மீது காரணமின்றியே இலேசான பொறாமை கொண்டிருந்த தங்கமணிக்குக் காலையில் அவளைப் பல்கலைக்கழகத்திலேயே கண் நிறைந்த அழகான ஸ்ரீதருடன் பார்த்தது தொடக்கம் மேலும் பொறாமை அதிகரித்தது. போதாதற்கு ஸ்ரீதர் இலங்கையின் மிகப் பெரிய பணக்காரரான சிவநேசர் மகன் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

“பத்மா, நீ கெட்டிக்காரி! ஸ்ரீதர் உன் காதலனா?” என்று கேட்டாள் தங்கமணி.

காலை நிகழ்ச்சிகளால் இன்பத்தில் மிதந்து கொண்டிருந்த பத்மாவின் உள்ளம் வீதியின் ஓரத்தில் ஓங்கி  வளர்ந்திருந்த நிழல் மரங்களின் உச்சியில் ஏறி நின்று “ஸ்ரீதர் என் காதலன்” என்று முழு உலகுக்கும் முழங்க வேண்டுமென்று விரும்பியிருந்து நேரமல்லாவா அது? ஆகவே துடிதுடிப்பாக, “ஆம் தங்கமணி! ஸ்ரீதர் என் காதலன். அவனை நான் கட்டிக் கொள்ளப் போகிறேன். அப்பாவும் சம்மதித்துவிட்டார். கல்யாணத்துக்குக் கட்டாயம் கார்டு அனுப்புவேன். வரத் தயங்கக் கூடாது” என்றாள் பத்மா ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த பிரகாரம்.

தங்கமணி, பத்மாவின் துணிவான பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போய் விட்டாள். வழக்கமாகக் கூச்சத்துடன் பேசும் பத்மா காதல் தந்த தெம்பாலல்லவா இப்படிப் பேசுகிறாள் என்று தன்னுள் தானே எண்ணிக் கொண்டு “உண்மையாகவா? அப்படியானால் எனது நல்வாழ்த்துக்கள். ஆனால் நீ பெரிய அதிர்ஷ்டக்காரி. ஸ்ரீதர் மாதிரி பணக்கார வீட்டுப் பிள்ளை யாருக்கும் இலகுவில் கிடைப்பானா?” என்றாள் அவள்.

பத்மா ஆச்சரியத்துடன். “என்ன பணக்கார வீட்டுப் பிள்ளையா? யார் சொன்னது? அவர் அப்பாவும் என் அப்பா போல் ஓர் இளைப்பாறிய வாத்தியார்தான். பணக்கார வீட்டுப் பிள்ளை பெண்ணில்லாமல் என்னைத் தேடி வருகிறானா?” என்றாள்.

தங்கமணி “ஏன் வரமாட்டான்? உன்னிடமிருக்கும் அழகும் தளுக்கும் போதாவா?” என்று சொல்லி உடலைக் குலுக்கிக் காட்டிச் சிரித்தாள், வஞ்சனையற்றுப் பேசுபவள் போல. பின் திடீரென “நீ என்ன சொன்னாய்? சிவநேசர் இளைப்பாறிய வாத்தியார்? யாரை ஏமாற்றுகிறாய்?” என்றாள்.

“சிவநேசரா ? யாரது? ஸ்ரீதரின் தகப்பனாரின் பெயர் சின்னப்பா பிள்ளை. ஊர் உடுவில்”

தங்கமணி சிரித்தாள்.

“உனக்குப் பைத்தியமா? அல்லது என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? ஸ்ரீதர் எங்களூரைச் சேர்ந்தவன். அவன் தகப்பனார் சிவநேசர் பெரிய பணக்காரர். இந்த இலங்கையிலேயே அவர் போன்ற பணக்காரரும் சாதிக்காரரும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள்.”

சிவநேசர்! பத்மாவும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா. அவள் வசித்த கொலீஜ் ரோடு 48ம் நம்பர்த் தோட்டத்தில் வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த வேலாயுதக் கிழவன் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை யாழ்ப்பாணத்தில் சிவநேசர் பங்களாவில் வேலை செய்தவன். அவரைப் பற்றித் தந்தை பரமானந்தரோடு வேலாயுதம் கதை கதையாய்ப் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆம். வேலாயுதம் கூட அவரைப் பற்றிக் கோடீஸ்வரர் என்று பல முறை வர்ணித்திருக்கிறாள். சிவநேசப் பிரபு என்று தான் வேலாயுதம் அவரைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடுவது வழக்கம். அந்தப் பெரும் பணக்காரரின் மகனா ஸ்ரீதர்?

பத்மாவால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் தங்கமணி அறுதியிட்டுக் கூறுகிறாள்! என்றாலும் பத்மாவின் உள்ளம் விட்டுக் கொடுக்க மறுத்தது. தோள் வழியாக நெஞ்சில் புரண்டு கொண்டிருந்த கருநாகம் போன்ற தன் பின்னலை விரல்களால் சுற்றிக் கொண்டே “தங்கமணி! பொய் சொல்லாதே! அவர் உடுவிலுள்ள வாத்தியார் சின்னப்பா பிள்ளையின் மகன் தான். ஒரு வேளை நீ சொல்லும் சிவநேசர் மகனும் பார்ப்பதற்கு ஸ்ரீதர் போல் இருப்பானாக்கும்!” என்றாள்.

தங்கமணிக்கு இப்பொழுது ஒரு சந்தேகமேற்பட்டது. அவள் அறிந்தவரையில் பத்மா பொய் பேசுபவளல்ல. ஒரு வேளை உண்மையாகவே பத்மா ஸ்ரீதரால் ஏமாற்றப்பட்டிருக்கிறாளோ? இந்த எண்ணத்துடன் அவள்  பத்மாவின் தோள்களைப் பற்றியவண்ணம், “பத்மா! நீ சொல்வது உண்மையானால், நீ ஏமாற்றப்பட்டிருக்கிறாய். ஸ்ரீதர் உண்மையில் சிவநேசரின் மகளே. அவர்கள் வீட்டுக்கு அரை மைல் தூரத்தில்தான் எங்கள் வீடு. அவர்களைப் பற்றி எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். நான் ஏன் உனக்குப் பொய் சொல்ல வேண்டும்?”

என்றாள். பேச்சுத்தான் அன்பாக இருந்ததே ஒழிய, பத்மாவின் இக்கட்டு தங்கமணிக்கு ஒருவித இன்பத்தையே தந்தது. பத்மாவின் பிடிவாதம் தளர ஆரம்பித்தது, என்றாலும் விட்டுக் கொடுக்காமல் “நீ என்ன சொன்னாலும் எனக்கு அவற்றை நம்பக் கஷ்டமாகத் தானிருக்கிறது. நான் சொன்ன விவரங்கள் ஸ்ரீதர் கூறிய விவரங்களே. அப்படியானால் அவர் எனக்குப் பொய் கூறியிருக்கிறார். அவர் ஏன் அப்படி எனக்குப் பொய் சொல்ல வேண்டும், தங்கம்!” என்றாள்.

தங்கமணி, “ஒருவன் ஏன் பொய் சொல்கிறான் என்பது அவனுக்குத்தான் தெரியும். ஏதாவது சூழ்ச்சிகரமான திட்டங்கள் அவன் மனதில் இருக்கும். உன்னை ஏமாற்றித் தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொண்டு ‘டிமிக்கி’ கொடுக்கிற எண்ணமோ என்னவோ! உனக்குத் தெரியாதா ஆண்களைப் பற்றி? எதற்கும் நீ கவனமாய் நட. நல்ல வேளை, உன் அதிர்ஷ்டம் நான் இன்று உங்கள் இருவரையும் ஜோடியாகக் கண்ட்து. ஆனால் எனக்கு ஆச்சரியமென்னவென்றால், ஸ்ரீதரை காண்பவர்கள் எல்லாம் ஏதோ பிரின்ஸ் ஓவ் வேல்ஸைக் கண்ட மாதிரி “ அது யார் தெரியுமா? சிவநேசர் மகன்” என்று சுட்டிக் காட்டிப் பேசுபவர்கள் நிறைந்த பல்கலைக் கழகத்தில் உனக்கு அவனைத் தெரியாமலிருந்ததே என்பதுதான்” என்றாள்.

பத்மாவுக்கு இன்னும் தங்கமணியின் பேச்சில் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் உண்மை போல் தோன்றிய அவற்றை மறுத்துரைக்கும் சக்தியும் அவளிடமிருக்குவில்லை. ஆகவே சிறிது நேரம் வாய் மூடி மெளனியாய் இருந்தாள் அவள்.

அப்பொழுது பெரிய பிளிமத் கார் ஒன்று பஸ் தரிப்பைக் கடந்து சென்றது. கார் டிரைவர் முன்னாசனத்திலிருந்து காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.

தங்கமணி அந்தக் காரைக் கண்டதும் உணர்ச்சியோடு “பத்மா! இதுதான் ஸ்ரீதரின் கார், பார், இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீதருடன் வரும்.” என்றாள்.

பத்மா, “இல்லை அவர் இதில் வர மாட்டார். அவர் “எஸ்கிமோவி”லிருந்து நேரே வீடு போய்விட்டார்” என்றாள்.

தங்கமணி “அப்படியானால் மிகவும் நல்லது. கார் ஸ்ரீதர் இல்லாது வந்தால் நான் மறித்து நிறுத்தி டிரைவரிடம் பேச்சு கொடுத்து இந்தக் கார் ஸ்ரீதருடையது என்பதை நிரூபிக்கிறேன். பார்க்கிறாயா?” என்றாள்.

முதலில் அதற்கு வேண்டாம் எனப் பதிலளித்த பத்மா பின்னால் “சரி, ஆகட்டும்” என்று அரை மனதோடு பதிலளித்தாள்.

தங்கமணி எதிர்பார்த்தது போலவே சுமார் இரண்டு மூன்று நிமிடங்களில் கழக வளவிலிருந்து கார் மீண்டும் வெளியே வந்தது. அதைக் கண்டதும் தங்கமணி வீதியில் இறங்கிக் காரை மறித்தாள். டிரைவர் காரை ‘பிரேக்’ போட்டு நிறுத்திக் கொண்டே “என்ன காரியம்” என்ற பாவனையில் இரு பெண்களின் முகங்களையும் ஏற இறங்கப் பார்த்தான்.

“இது ஸ்ரீதரின் கார் தானே! ஆள் எங்கே” என்று கேட்டாள்.

“ஆம். இது ஸ்ரீதர் ஐயாவுடைய கார்தான். அவரைக் கண்டீனில் காணோம். செல்லப் பிள்ளை. நினைத்தவுடன் நினைத்த மாதிரி நடப்பார். டாக்சியில் போயிருப்பார்” என்றான் டிரைவர்.

“சரி. நீ போ” என்றாள் தங்கமணி.

கார் சிறிது தூரம் போனதும் தங்கமணி அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியே விட்ட வண்ணமே பத்மாவைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்கு டிரைவரிடம் பேசும்போது நெஞ்சு டக் டக் என்றடித்துக் கொண்டது. அப்பாடா, அவன் அநாவசியமான கேள்விகள் கேட்காமல் போனானே, அது போதும்.” என்றாள் அவள், பெருமூச்சால் தன் நெஞ்சில் கையை வைத்த வண்ணமே.

பத்மாவுக்கோ பதிற் சிரிப்புச் சிரிக்க முடியவில்லை. தங்கமணிக்கு அதைக் கண்டு திருப்தி. பத்து நிமிஷங்களுக்கு முன் பத்மா முகத்தில் படர்ந்திருந்த கர்வம் எங்கே போயொழிந்தது என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். ஆனாலும் வெளிக்குத் தானும் விசனப்படுவது போலவே காட்டிக்கொண்டாள்.

‘கடைசியில், தங்கமணி தன் கட்சியை நிரூபித்துவிட்டாள். அவர் பொய்தான் சொல்லியிருக்கிறார். என் காதலன் ஸ்ரீதர். அவரை நான் கட்டப் போகிறேன் என்று பெருமையுடன் பேசி ஒரு சில நிமிஷங்கள் கழிவதற்குள் அவர் ஒரு பொய்யன் என்று நிரூபித்துவிட்டாள் அவள்’ என்று தன்னுள் கறுவினாள் பத்மா. ஆனால் அடுத்த கணமே  “அவளைக் கோபித்து என்ன பயன்? குற்றம் அவர் மேலல்லவா? ஏன் அவர் அப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்லி, என்னை இப்படித் தலை குனிய வைத்தார்?” என்று சிந்தித்தவண்ணமே முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள் அவள். அவளால் தங்கமணியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் முத்துகள் வெடித்துக் கன்னத்தைக் கழுவிச் சென்று கொண்டிருந்தன. உதட்டைப் பிதுக்கிக் கொண்டு செய்வதறியாது நின்றான் அவள்.

தங்கமணி, “பத்மா! ஏன் அழுகிறாய்? பெரிய இடத்து உறவெல்லாம் இப்படித்தான். விட்டது சனியன் என்று உன்னுடைய அலுவல்களைப் பார். போ. நான் என்றால் அப்படித் தான் செய்வேன். ஆனால் முதலில் உன் போல் ஏமாந்திருக்க மாட்டேன்.” என்று புண்ணில் வேல் கொண்டு  போல் பேசினாள் பத்மாவின் மனதில் நன்கு பட வேண்டுமென்று.

அவள் இவ்வாறு பேசுவதற்கும், கொட்டாஞ்சேனை பஸ் வருவதற்கும் சரியாய் இருந்தது. பத்மா அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு, பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து, தங்கமணியைப் பார்த்துக் கைகளை அசைத்தாள். வழக்கமாக அக் கை அசைப்போடு சேர்ந்து வரும் ‘செரியோ’ என்ற வார்த்தை அன்று ஏனோ அவள் வாயில் வர மறுத்துவிட்டது!

தங்கமணி பஸ் தரிப்பில் வத்தளை செல்லும் பஸ்சுக்காகக் காத்து நின்றாள் அன்று தனக்குக் கல்யாணம் நடந்தது போன்ற பெருமகிழ்ச்சி அவளுக்கு! [தொடரும் ]