அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நாளை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெறுகிறது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இம்முறை மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடைபெறும் இவ்விழா குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் கலை இலக்கிய மாத இதழின் பிரதம ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் அனுப்பியிருக்கும் தனது வாழ்த்துச்செய்தியில், ” 2001ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வருடம் மெல்பன் நகரில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. ” என குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலை-இலக்கிய ஆர்வலர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடும் விழாவாக இது நடைபெற்றுவருகிறது. அத்தோடு இலங்கையிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வது வழக்கமாகும்.2001ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது எழுத்தாளர் விழாவிலே நானும் எனது துணைவியாரும் பங்குபற்றினோம். அவ்விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழை அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சார்பில் வெளியிட்டுவைத்து உரையாற்றியமை மறக்கமுடியாத அனுபவமாகும். அத்தோடு அவ்விழாவில் இடம்பெற்ற கருத்தரங்குகளில் பங்குகொண்டதும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்ததும் இனிமையான நிகழ்வுகள். அதன்பின் 2004ஆம், 2006ஆம், 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விழாக்களிலும் நாம் இருவரும் பங்குபற்றினோம். 2004ஆம் ஆண்டு கன்பரா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் “ஞானம்” இதழின் அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழை வெளியிட்டது எமக்குப் பெருமைதரும் நிகழ்வாக அமைந்தது.
வருடம்தோறும் நடக்கும் இவ்விழாக்கள் மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் இடம்பெற்று, இப்பிரதேசங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குகொள்ள வகைசெய்வதும் சிறப்பான செயற்பாடாகும். இவ்வருட விழாவில் ஓவியக்கண்காட்சி, மறைந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் ஒளிப்படக்காட்சி, நூல்கள், இதழ்கள்,பத்திரிகைகள் கண்காட்சி, நாவல் இலக்கியக் கருத்தரங்கு, கவிஞர்கள்அரங்கு, மெல்லிசை அரங்கு என்பன இடம்பெறவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். தமிழ்மொழியை தமிழர்பண்பாட்டை தமிழர் தம் கலை இலக்கிய முயற்சிகளை புகலிட நாட்டில் போற்றிப் பேணும் பெரும்பணியாக இவ்விழாக்கள் அமைகின்றன. ஒவ்வொரு வருடமும் இவ்விழாவைச் சிறப்பாக ஒழுங்குசெய்து சிறந்த முறையில் நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்க நிர்வாகிகள் யாபேரது பணிகளையும் பாராட்டுகிறேன். விழா சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.
சிட்னியிலிருந்து நீண்டகாலம் தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணைய இதழை வெளியிட்டுவரும் கவிஞர் செ. பாஸ்கரன் அனுப்பியிருக்கும் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “புலம்பெயர் நாட்டில் சாதனை புரியும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பதினெட்டாவது எழுத்தாளர் விழாவை நவம்பர் மாதம் மெல்பனில் நடத்துகின்றது. இந்த செய்தியைக் கேட்டதும் நினைவுகள் பின்நோக்கிச் செல்கின்றன. எத்தனை எழுத்தாளர் விழாக்கள், எத்தனை எழுத்தாளர்கள், எத்தனை கவிஞர்கள், எத்தனை பேச்சாளர்கள், எத்தனை எத்தனை ஊடகவியலாளர்கள் , அறிஞர்கள் ஒன்றுகூடி இவ்வாறு சந்திப்பது? இத்தனையும் சாத்தியப்படுமா என்ற கேள்விக்கு விடையாக நிற்கிறது அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம். 2001 ஆம் ஆண்டு முதல் இங்கு வாழும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் தேடிப்பிடித்து, அவர்களை இயங்கவைத்து, இத்தனை வருடங்கள் இந்த புலம் பெயர் நாட்டிலே அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தை இளமைத் துடிப்போடு வைத்திருக்கும் அன்பர்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது. எழுத்தாளர் விழாக்களில் ஓவியக்கண்காட்சி, குறும்படக்காட்சி, இதழ்கள், நூல்கள், பத்திரிகைகளின் கண்காட்சிகள். புத்தக வெளியீடுகள் புத்தக அறிமுகங்கள் என்று தொடர்ந்தது மட்டுமல்லாது திறந்த வெளி அரங்கில் நம் தமிழ் உணவான கூழுடன் கவியரங்கும் நடத்தி, இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வை தந்ததும் நம் அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்தான். சும்மா எழுதிக் கொண்டிருக்காமல், எழுதிய எழுத்துக்களையும் படித்தவற்றையும் பேசவும், விமர்சிக்கவும் அந்த விமர்சனம் மூலம் பெறப்படும் கருத்துக்களை பதிவுகளாக இலக்கியத்தில் புகுத்தி இலக்கிய செழுமையை மேம்படுத்த பதினெட்டு ஆண்டு காலமாக செவ்வனே செய்யும் எழுத்தாளர் விழாவும் அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் சிறப்புற சேவை செய்யவேண்டும் . அதற்காக உழைக்கும் அங்கத்தினர்கள் அனைவரையும் இந்த வேளையிலே வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.”
விழா நிகழ்ச்சிகள்
விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக கண்காட்சிகள் இடம்பெறுகின்றன. ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி, விமல் அரவிந்தனின் இயற்கை எழிலை சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சி மற்றும் மறைந்த தமிழ் வளர்த்த முன்னோர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்புகளுடன் அவர்களின் ஒளிப்படங்களின் காட்சி மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான தமிழ் இதழ்கள் – பத்திரிகைகள் – நூல்களின் கண்காட்சி என்பன நடைபெறவிருக்கின்றன. மண்டபத்தின் வெளியரங்கில் தொடங்கும் இக்கண்காட்சிகளை தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரி திறந்துவைக்கின்றார். விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஶ்ரீநிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைக்கிறார். மண்பத்தின் உள்ளரங்கத்தில் தொடங்கும் நிகழ்ச்சிகள், சங்கத்தின் துணைத்தலைவர் மருத்துவர் – திருமதி வஜ்னா ரஃபீக் அவர்களின் வரவேற்புரையுடனும் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியனின் தொடக்கவுரையுடனும் ஆரம்பமாகும்.
அண்மையில் தமிழகத்தில் மறைந்த கலைஞரும் எழுத்தாளருமான “கூத்துப்பட்டறை” ந. முத்துசாமி – இதழாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஒளிப்படக்கலைஞருமான “யுகமாயினி” சித்தன், இலங்கையில் மறைந்த எழுத்தாளர்கள் கெக்கிராவ ஸஹானா மற்றும் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் ஆகியோரும் நினைவுகூரப்படுவர். இவர்கள் தொடர்பான இரங்கலுரைகளை மருத்துவர் நடேசன், சட்டத்தரணி ( திருமதி) மரியம் நளிமுடீன் மற்றும் முருகபூபதி ஆகியோர் நிகழ்த்துவர்.
கவிஞர் சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா தலைமையில் நடைபெறும் கவிஞர்கள் அரங்கில் கல்லோடைக்கரன் , முஜிபுர் ரஹ்மான், பொன்னரசு சிங்காரம் , அறவேந்தன், ஶ்ரீ கௌரிசங்கர், நளிமுடீன் ஆகியோர் பங்குபற்றுவர். மருத்துவர் நடேசன் தலைமையில் நடைபெறும் நாவல் இலக்கியக்கருத்தரங்கில், சாந்தி சிவக்குமார் , கலாதேவி பால சண்முகன், தெய்வீகன் ஆகியோர் ஈழத்து – தமிழக நாவல்கள் குறித்தும் புகலிட நாவல்கள் பற்றியும் உரையாற்றுவர்.
இந்நிகழ்ச்சிகளையடுத்து கண்ணன் விக்னேஸ்வரனின் மெல்பன் ஆலாபணா இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழாவுக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கி கலைச்சங்கம் அன்பர்களை அழைக்கிறது. அரங்கங்களில் விழா நிகழ்ச்சிகளை திருமதி பானு ஶ்ரீகௌரி சங்கர், செல்வி மதுபாஷினி பால சண்முகன் ஆகியோர் தொகுத்து அறிவிப்பார்கள். அனுமதி இலவசம்.
Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>