வாசிப்பும், யோசிப்பும் 43: முகநூற் குறிப்புகள் சில.

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

– அவ்வப்போது முகநூல் பக்கங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விடயங்கள் பற்றிய குறிப்புகளில் சிலவற்றை இம்முறை பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன்.  –

 

நல்ல எழுத்தும், வாசிப்பும்!
 
நல்ல எழுத்து என்பது எப்பொழுதும் , வாழ்க்கை முழுவதும் ஒரு நண்பரைப்போல் கூட வருவது. இவ்விதம் வரக்கூடிய எழுத்துகளைத்தான் நான் நல்ல எழுத்து என்பேன். என்னைப் பொறுத்தவரையில் தத்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும், தண்டனையும்’, ‘அசடன்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’, டால்ஸ்டாயின் போரும், சமாதானமும், அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு , வால்ட்டயரின் ‘கேண்டிட்’, டானியல் டிபோவின் ராபின்சன் குரூசோ, ஹெமிங்வேயின் ‘கடலும், கிழவனும்’, ஜான் மாட்டலின் ‘பை’யின் வாழ்வு, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’, எஸ்.கே.பொற்றேகாட்டின் ‘ஒரு கிராமத்தின் கதை’, அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீல கண்டப் பறவையைத் தேடி’, பாரதியார் கவிதைகள், ‘மோபிடிக்’, ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘செம்பருத்தி’, அறிஞர் அ.ந.கந்தசாமியின் எழுத்துகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள், ‘ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்’ (நாவல்), ஜேர்சி கொசின்சிகியின் Being There போன்ற புத்தகங்களைக் கூறலாம். இவர்களை ஓர் உதாரணத்துக்குக் கூறினேன்.

இதுபோல் எழுத்தாளர் ஒருவர் எழுதும்போது முதலில் அவர் தனது எழுத்தை அனுபவித்து எழுதவேண்டும். அவரது எழுத்து மற்றவர்களுக்குப் பிடிப்பதற்கு முதல் அவருக்கு முதலில் பிடித்திருக்க வேண்டும். அவருக்கே பிடிக்காத எழுத்து எவ்விதம் மற்றவருக்குப் பிடிக்கும்?

என்னைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே வாசித்த நூல்களை அவ்வப்போது எடுத்து புரட்டிப் பார்ப்பேன். அப்புத்தகத்தைத் தொட்டதுமே மனதில் இனிமையும், மகிழ்ச்சியும், வாழ்வில் தெளிவும் வந்து விடுவதுபோன்ற உணர்வுகள் எழுந்து நடனமிடத்ததொடங்கி விடும்.
 
ஒவ்வொருவர் வாழ்விலும் வாசிப்பென்பது பல்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியுள்ளது. சிறுவயதில் அம்புலிமாமாவில் தொடங்கி, வெகுசன இதழ்கள், காமிக்ஸ், மர்மப் புனை கதைகளென்று விரிந்து , ஆழம்மிக்க சிந்தனையைத் தூண்டும் புனைகதைகளை வந்தடைகின்றது. அதனால் என்னிடம் மிகவும் ஆழமான, சிந்தனையை விரிவடைய வைக்கும் நூல்களுடன், பால்யகாலத்தில் நெஞ்சினில் வாசிப்பின்பத்தைத் தந்த கதைகளுமுள்ளன..
 
எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்‘ நாவல் இவ்விதம் தொடங்குகின்றது:
 
“ஈர வயல் வரப்பில் புது மழைக்கு உயிர் பிடித்திருந்த அருகம் புல்மீது உறங்கிக் கிடந்த சின்னஞ்சிறு பச்சை வெட்டுக்கிளிகள் காலடி ஓசை கேட்டு உறக்கம் கலைந்தது. குதிகாலை ஊன்றி அப்பால் எம்பித் தாண்டிச் செல்லும்போது அவை மெல்லிய ஓசை எழுப்பின. அது எதையோ நினைவூட்டுவதாக இருந்தது.”
 
‘நீலகண்டப் பறவையைத் தேடி’ நாவல் பின்வருமாறு தொடங்குகின்றது:
 
“ஸோனாலி பாலி ஆற்றின் மணலில் வெயில் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தது. ஈசம் ஷேக் படகின் மேல் நிழலில் உட்கார்ந்துகொண்டு புகை பிடித்துக்கொண்டிருந்தான். பின் பனிக் காலத்து மாலை. சந்தையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த கிராமவாசிகள் கரையோரமாக நடந்துகொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கிராமங்களும் திறந்த வெளிகளும் தெரியும். தர்முஜ் கொடிகள் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தன. புகை பிடித்துக்கொண்டே ஈசம் ஷேக் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். பூச்சிகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. எங்கும் பொன்னிறத்தானியத்தின் மணம். அக்ராண் மாதத்தின் கடைசி நாட்கள். பள்ளங்களிலிருந்தும் தாழ்ந்த நிலங்களிலிருந்தும் தண்ணீர் வடிந்து ஆற்றில் விழுந்துகொண்டிருந்தது. தண்ணீர் விழும் ஒலி காதில் விழுந்தது.
 
நல்ல நூலின் சில பக்கங்கள், சில வரிகள் எல்லாம் வாசிப்பு இன்பத்தைத் தருகின்றன.


‘டொராண்டோ’வில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு பற்றி…
 

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

எழுத்தாளர் அகில் , மருத்துவர் லம்போதரன் ஆகியோரின் ஆதரவில் மாதா மாதம் , கடைசிச் சனியன்று நடைபெறும் இலக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. எனக்குப் பொதுவாக எழுதுவதிலுள்ள ஆர்வம் பேசுவதிலில்லை. ஆயினும் எழுத்தாள நண்பர் தேவகாந்தன் இரு மாதங்களுக்கு முன்னரே இந்நிகழ்வில் ‘புகலிட நாவல் இலக்கிய முயற்சிகள்’ பற்றி உரையாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டதனால், வழக்கம்போல் தட்டிக்கழிக்க முடியாது போனது. நான் எதிர்பார்த்ததைவிட நிகழ்வு மிகவும் காத்திரமானதாக, பயனுள்ளதாக அமைந்திருந்தது. நிகழ்வில் எழுத்தாளர் தேவகாந்தன் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ பற்றி விரிவானதொரு உரையினை நிகழ்த்தியிருந்தார். தன் பார்வையில், தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி, தொடக்க நாவல்களிலிருந்து , நவீன நாவல்களை வரையில் குறிப்பிட்டு ஆற்றிய உரை பயன்மிக்கது.

தமிழில் வெளியான மொழிபெயர்ப்பு நாவல்கள் பற்றி த. அகிலன் சுவையாக ஆற்றிய உரை பொருளில் காத்திரமானதாகவும் அமைந்திருந்தது. குரு. அரவிந்தன் ‘கனடாவில் தமிழ் நாவல்’ பற்றி , ஆதாரங்களுடன் , ஆவணப்படுத்தலை நோக்காகக்கொண்டு உரையாற்றினார். எனது உரையில் புகலிடத் தமிழ் நாவல்கள் பற்றி முயற்சிகள் பற்றி எனக்கு ஒதுக்கிய நேரத்தில் உரையினை ஆற்றினேன். புகலிட, புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியம் பற்றி, புலம் பற்றி, பல்வேறு நாடுகளிலும் வெளியான முக்கியமான நாவல்கள் பற்றி, புகலிட நாவல்களின் ஆவணப்பட்டியல் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி, திறனாய்வுகளுக்கு அவ்விதமான பட்டியல்களின் அவசியம் பற்றியும் உரையில் குறிப்பிட்டிருந்தேன்.
 
நிகழ்வின் இறுதியில் ஐயந்தெளிதல் அரங்கில் (நிகழ்வில் ஆற்றப்பட்ட உரைகள் பற்றிய ஐயந்தெளிதல்) தேவகாந்தனின் உரையில் விடுபட்ட எழுத்தாளர்கள் பற்றி கவிஞர் வி.கந்தவனம், நாடக இயக்குநரும், எழுத்தாளருமான ஞானம் லம்பேட் போன்றோர் கேள்விகள் கேட்டனர். முனைவர் அ.சண்முகதாஸ், முனைவர் நா.சுப்பிரமணியன், கவிஞர் வி.கந்தவனம், எழுத்தாளர் அகில ஆகியோர் புகலிட, புலம்பெயர் மற்றும் கனடியத் தமிழ் இலக்கியம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நாளைய இலக்கியம் கனடாத் தமிழ் இலக்கியமென்று அழைக்கப்படக் கூடாது; கனடாத் தமிழர் இலக்கியமென்று அழைப்பதே பொருத்தமானதென்று கவிஞர் வி.கந்தவனம் சுட்டிக்காட்டியது கவனத்துக்குரியது.
 
நீண்ட நாட்களின் பின்னர் நான் கலந்துகொண்டு , உரையாற்றிய இவ்விதமானதொரு நிகழ்வில் முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், முனைவர் அ.சண்முகதாஸ் தம்பதியினர், முனைவர் இ.பாலசுந்தரம், கவிஞர் கந்தவனம், எழுத்தாளர் டானியல் ஜீவா, எழுத்தாளர் த.அகிலன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியது நிகழ்வினை மேலும் பயனுள்ளதாக்கியது. முனைவர் பார்வதி கந்தசாமி, எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, ‘காலம்’ செல்வம், எழுத்தாளர் ‘வீரகேசரி’ மூர்த்தி எனப் பலரை நிகழ்வில் காண முடிந்தது.
 
இவ்விதமான இலக்கியக் கலந்துரையாடல்கள் தொடர்வது பயன்மிக்கதாக அமையும். கனடாவில் வெளியாகும் ஊடகங்களில் வெளியாகும் ஆக்கங்களை ஒவ்வொரு மாதமும் ஆவணப்படுத்தினால், பின்னர் திறனாய்வுகளுக்கு அவை உதவும். மேலும் இவ்விதமான இலக்கிய அமர்வுகளில் அவ்வப்போது கனடாத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றி விவாதிக்கவும் அவை உதவும்.


சுவாமி ஞானப்பிரகாசர் பார்வையில் இலங்கைச் சிங்களவர்கள்!
 

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

அண்மையில் எழுநா வெளியீட்டில், முனைவர் ஜெ.அரங்கராஜ் தொகுப்பில் வெளிவந்த சுவாமி ஞானப்பிரகாசரின் ‘பண்டைத் தமிழர் (ஆதித்தமிழ் குறித்தும் , தமிழர் குறித்ததுமான ஆய்வுக்கட்டுரைகள்)’ என்னும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. இவ்விதமான நூலொன்றினைத் தொகுத்து வெளியிட்ட எழுநா பதிப்பகம் பாராட்டுக்குரியது. சுவாமி ஞானப்பிரகாசரின் பன்மொழிப்புலமையும், தர்க்கச்சிறப்பு மிக்க ஆய்வுக்கட்டுரைகளும் சிந்தனைக்கு விருந்தளிப்பவை. மிகவும் பயனுள்ளவை. இத்தொகுப்பு முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு மூலம் சுவாமி ஞானப்பிரகாசரின் பண்டைத் தமிழர் பற்றிய கொள்கை, அவர்களது ஆதி இருப்பிடங்கள் பற்றிய ஆய்வுத்தகவல்கள், அவர்களது மொழி பற்றிய ஆய்வுகள், தெய்வ வழிபாடுகள் போன்ற பல விடயங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
 
சுவாமி ஞானப்பிரகாசரின் கொள்கைப்படி சிங்களவர்கள் வேறு யாருமல்லர்? இலங்கையின் ஆதித்தமிழர்கள். மேலும் இன்றைய சிங்களவர்கள் கூறுவதுபோல் அவர்கள் ஆரியர்களல்லர்; திராவிடர்கள் வழித்தோன்றல்களே. சிங்கள மொழி கூட திராவிட மொழியின் அடிப்படையில் உருவான மொழிதான். ஈழத்தின் வட பகுதியில் காணப்படும் தமிழ்ப்பெயர்கள் காரணமாகச் சிலர் வட பகுதி சிங்களவர்களுக்குச் சொந்தமானதென்று கூறுவர். சுவாமி அவர்களோ ஈழத்தின் பழந்தமிழரின் தமிழ் மொழியிலிருந்துதான் சிங்கள மொழி உருவானது. அதன் காரணமாகத்தான் பல தமிழ்ச் சொற்கள் சிங்கள மயமாகி விட்டன.
 
“நம் இலங்கையில் இருந்த பழந்தமிழர்களே சிங்களத்தை ஆக்கிக்கொண்டு தாங்களும் சிங்களர் ஆனார்கள். முந்திய தமிழர் வைத்த ஊர்ப்பெயர் காணிப்பெயர்களையே நாம் இன்றைக்கும் வழங்கிக்கொண்டு அவற்றைச் சிங்களப் பெயர்கள் என்கின்றோம். ஒரு உதாரணம் மாத்திரம்:- எத்தனையோ காணிப்பெயர்கள் ஈற்றில் ‘வத்தை’ என்று வருகின்றதன்றோ? ‘வத்தை’ என்னும் சொல் , இன்றைக்கும் தஞ்சாவூர் முதலிய சில இடங்களில் வழங்குகின்ற வட்டம் என்பதே. வட்டம் = தோட்டம்; இக்காலத்து வளவு (= வளைவு, அடைப்பு) என்பதும் வட்டம் என்பதும் பெயரளவில் ஒன்றுதான். வத்தையின் வேலியைச் சிங்களர் வய்ற்ற என்கின்றார்கள். வட்டம், வட்ட, வய்ற்ற, வத்த, வத்தை எனச்சொல் திரிந்து வந்ததைக் காண்க. இவ்வாறெ பழந்தமிழ் வட்டம் , தமிழ்ச்சொல் சிங்களத்தில் வத்தையாகி வந்து, இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் தமிழரால் காணிப்பெயர்களில் எடுத்தாளப்படுகின்றது. (பக்கம் 130)”


கவிஞர் மு.பொ.வின் ‘அகாலக் குளியல்’
 

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

மு.பொ.வின் ‘அகாலக் குளியல்’ மிகவும் ஆழமானதொரு கவிதை. காலத்தின் தன்மையானது எவ்விதம் நிகழ்வுகளின் தன்மையைப் பொறுத்து வித்தியாசமாக உணரப்படுகிறது என்பதை விபரிக்கும் கவிதை. கவிஞரின் அறிவானது அவரைக் காலத்தினின்றும் தூக்கி வெளியில் போடுகிறது. அதனைக் கவிஞர் அகாலக் குளியல் என்கின்றார். கவிஞர் தன் காக்கைச் சிறகினை உதறுகையில் காலநீர் தெறித்தகலுகிறது. அந்த அகாலக் குளியலில் அவர் ஆன்மாவை கண்டறிகின்றார். இதுதான் கவிதையின் சாரம். இங்கு அகாலம் என்னும் சொல்லினைக் கவிஞர் பாவித்துள்ள விதம் என்னை மிகவும் பிரமிக்க வைத்துள்ளது. காலத்துக்கு எதிர்ச்சொல்லாக அகாலம் என்னும் சொல்லினைக் கருதலாம். அதே சமயம் சாதாரண பேச்சு வழக்கில் அகாலம் என்னும் சொல்லினைக் காலம் தப்பிய அல்லது நேரம் கெட்ட நேரத்திலே என்னும் அர்த்தத்தில் பாவித்து வருகின்றோம். ‘ என்ன இந்த அகாலவேளையிலே’ என்று பேச்சு வழக்கில் பாவிக்கின்றோம். இங்கு கவிஞர் அகாலம் என்னும் சொல்லினைக் காலத்தினை மீறிய காலத்துக்கு வெளியே காலமற்ற என்னும் அர்தத்தில் பாவிக்கின்றார். அவரது ஞானம் அவரைக் காலத்தினிறும் அப்பால்தூக்கி வெளியினுள் வீசி எறிந்துவிடுகின்றது. அதனை அகாலக்குளியல் என்கின்றார். இவ்விதம் காலம், வெளியைப் பொருளாகக் கொண்டு தமிழில் கவிதைகள் படைத்தவர்கள் சிலர். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். மு.பொ.வும் அவர்களில் ஒருவர். இந்தக் கவிதையின் முக்கியமான சொல் அகாலக் குளியல். அதனால்தான் கவிஞர் கவிதைக்கு ‘அகாலக் குளியல்’ என்று தலைப்பிட்டிருக்கின்றார். இந்தக் கவிதையின் மிகவும் முக்கியமான சொல் அகாலக் குளியல். தமிழின் வளமைக்குச் சாட்சியாக இருக்கும் சொற்களிலொன்று ‘அகாலக் குளியல்’

இந்தக் கவிதையின் முழு வடிவமும் கீழே:
 
அகாலக் குளியல்
 
– கவிஞர் மு.பொன்னம்பலம் –
 
காலம் எனக்கு இருந்ததாய் தெரியவில்லை,
 காசிருந்த காலத்தில்!
 காசு கையைக் கடித்தபோது
 காலம் மூக்கை நுழைத்தது.
 காதல் வசப்பட்டு மயங்கி இருக்கையிலும்
 காலம் இல்லாது போயிற்று.
 பின்னொருநாள் காதலியாள் கண்ணீர் சிந்தத் தொடங்குகையில்
 காலம் அரவு போல் முன்நெளிந்து அச்சுறுத்திற்று.
 இன்னொருநாள் எமது ஊடலில் எழுந்த உரசலில்
 காலம் அறுந்து அவள் கழுத்து மணிமாலையென என்முன் சிதறிற்று.
 ஒருவாறு அவள் மனந்தேற்றி,
 கொட்டுண்ட மணிகோர்க்க, காலமே நூலாய் உள்நுழைந்து
 என்னைக் கிள்ளிற்று.
 காதலியாள் மனைவியானதும்,
 கலவியில் விளைந்த பிள்ளைகள் பிறந்ததும்
 காலம் என்னை உருட்டி எடுத்து வீசிற்று –
 கரையில் எத்துண்ட மீனாய் துடிதுடிப்பு.
 ஆயினும் என்னோடு கூடவந்த அறிவு
 காலத்தை இடைக்கிடை அறுத்து
 விட்டெறியும் என்னைப் பேர் வெளியில் –
 அகாலக் குளிப்பு!
 என் காக்கைச் சிறகுதறலில்
 எனைப்போர்த்திருந்த காலநீர் தெறித்தகல
 அகாலக் குளிப்பில், ஆன்மா!
 
அண்மையில் நான் வாசித்த ஆழமான கவிதைகளிலொன்று மு.பொ.வின் ‘அகாலக் குளியல்’. ‘காலத்தை இடைக்கிடை அறுத்து விட்டெறியும் என்னைப் பேர் வெளியில்’ என்னும் வரிகளை அறிவியல்ரீதியில் அணுகக்கூடாது. அவ்விதம், அணுகினால் ‘காலமும் வெளியும்’ ‘காலவெளி’ என்னுமொன்றே.

பிரித்தறிய முடியாததொன்று என்று வாதிட வேண்டி வந்துவிடும். இதனைக் கவித்துவரீதியில்தான் அணுகவேண்டும். இருந்தும் அவனது அறிவு அவனை, கவிஞனைக்காலத்தைமீறிச் சிந்திக்க வைக்கிறது. காலத்தை மீறி பெருவெளிக்குள் விட்டெறிகிறது. அந்த ‘அகாலக் குளிப்பில்’ தன் ‘ஆன்மா’வை உணர்ந்துகொள்கிறான் கவிஞன்.
 
அண்மையில் வெளியான தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான ‘ In our Translated World’ இக்கவிதையினை மொழிபெயர்த்தவர் ‘அகாலக் குளியல்’ என்னும் சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லினைக் கண்டுபிடிப்பதில் அடைந்த சிரமத்தினைக் காணமுடிகிறது. இறுதியில் அதற்கு நிகரான ஆங்கிலச் சொல்லினைக் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் ‘அகாலக் குளியல்’ என்னும் சொல்லினை நீக்கிவிட்டு, Time and the soul’ என்று பெயரிட்டிருக்கின்றார். ‘அகாலக் குளியல் ‘என்னும் சொல்லினை நீக்கினாலே மேற்படி கவிதையின் முக்கியமான மையமும் சென்றுவிடும் அதன் கூடவே


எழுத்தாளரொருவரின் கவலையும், என் பதிலும்..

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

அண்மைக்காலமாக தொகுப்புகள் பல வெளிவருகின்றன. சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளென்று பற்பல. இது பற்றி எழுத்தாள நண்பரொருவர் தனது விசனத்தைத் தெரிவித்துக்கொண்டார். ஒரு குழுவாக இயங்கும் எழுத்தாளர்கள் சிலர் தமது மற்றும் தம் சீடப்பிள்ளைகளின் ஆக்கங்களைத் தொகுப்புகளில் வெளியிடுவதாகவும், பின்னர் இத்தொகுப்புகளை தமிழகத்திலுள்ள அவர்களுக்குப் பிரியமான இலக்கிய ஆளுமைகளுக்கு அங்கீகாரத்துக்காக அனுப்புவதாகவும் அவர் குறைப்பட்டுக்கொண்டார். அவருக்கு நான் கூறியது இதுதான்: ‘இவ்விதமான இலக்கிய நடவடிக்கை என்பது இங்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் உண்டு. இதைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விட்டு, உங்கள் எழுத்துப் பணியினைத் தொடருங்கள். எழுத்தாளரொருவர் இவ்விதமான அங்கீகாரங்களுக்காக எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் எழுத்தில் சிறப்பிருந்தால் அது சவால்களையெல்லாம் வென்று நிலைத்து நிற்கும். இன்று நிலைத்து நிற்கும் எழுத்துகளில் பல, அவை உருவாக்கப்பட்ட காலங்களில் எந்த விதமான அங்கீகாரங்களையும் பெற்றதில்லை. ஆனால் மானுட இனத்துக்குப் பயனுள்ளதாக நிலைத்து நிற்கின்றன. நல்ல எழுத்தை மக்களும், காலமும் கண்டு கொள்வார்கள். இன்று முன்பை விட படைப்புகளை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைப்பதற்குரிய வழிமுறைகள் அதிகமுள்ளன.’
 
அதற்கு அவர் ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் வழித்தேங்காயைத் தெருப்பிள்ளையாருக்கு உழைப்பதைப் போல், இவ்விதமான முயற்சிகளுக்கு அரசு தரும் நிதி உதவியை இவர்கள் தங்களைப் பிரபல்யப்படுத்துவதற்குப் பாவிக்கின்றார்களே. அது சரியில்லையா?’ என்று கேட்டார்.
 
அதற்கு நான் கூறினேன்:’அரசு பொதுவாகத் தரும் நிதியினை இவர்கள் இவ்விதம் பாவித்தால் , அவ்விதம் அவர்கள் நிதி உதவி பெறுவதற்கான சான்றுகள் உங்களிடம் இருந்தால் அவற்றைக் கொண்டு வாருங்கள். அவ்விதம் கொண்டு வந்தால் அது பற்றி அவர்களிடம் கேட்கலாம்.’
 
‘நிச்சயம் போதிய விபரங்களைப் பெற்றுக்கொண்டு வருவேன்’ என்று சென்றார் அந்த எழுத்தாளர்.
 
மாகவி பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை:
 
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் – ……..
 …………………………………………
 சிந்தையே! இம்மூன்றும் செய்


நான் முகநூலைப் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

1. உலகெங்கும் பரந்து வாழும் கலை, இலக்கியவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்; அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளுதல்.
 
2. நான் அறிந்தவற்றை, நான் இரசித்தவற்றை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.
 
3. எனது படைப்புகளை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல். இவ்விதம் பகிர்ந்துகொள்ளும்போது சில வேளைகளில் ஒரே படைப்பு பல்வேறு காலகட்டங்களில் மீண்டும், மீண்டும் பகிர்ந்துகொள்ளப்படலாம். இதற்குக் காரணம்: முகநூல் நண்பர்கள் 40 ஆக இருந்தபோது பகிர்ந்துகொள்ளப்பட்ட படைப்புகள், முகநூல் நண்பர்கள் 400 ஆக இருக்கும்போது பகிர்ந்துகொள்வதன் காரணம் புதிய நண்பர்களும் அவற்றை அறிந்து கொள்ளத்தான்.
 
மேலும் முகநூலின் வலிமை பிரமிக்கத்தக்கது. ஆண்டுக்கணக்கில் சந்திக்காமல், மறந்திருந்த பால்ய காலத்து நண்பர்களைக் கூடச் சந்திக்க வைக்கிறது.

முகநூலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது மிகுந்த பயனைத் தரும். ஆனால் பலர் தங்கள் குடும்ப அந்தரங்கங்களைக் கூட மிகவும் இயல்பாகப் பகிர்ந்துகொள்வது ஆச்சரியத்தைத் தருகிறது. முகமூடிகளுடன் வளைய வரும் சமூக விரோதிகளையும் உள்ளடக்கியுள்ளதுதான் உங்கள் முகநூல் நட்பு வட்டம் என்பதை மறந்து விடாதீர்கள். புகைப்படங்களை, அந்தரங்க விடயங்களைப் பகிர்ந்துகொள்வதென்றால் அதற்குரிய , உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களை மட்டும் நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ngiri2704@rogers.com