வாசிப்பும், யோசிப்பும் 45: கவிஞர் வி.கந்தவனத்தின் கவிதைகள் பற்றி….

கவிஞர் கந்தவனம்இலங்கையின் மரபுக் கவிஞர்களில் கவிஞர் வி.கந்தவனத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. ‘கவியரங்குக்கோர் கந்தவனம்’ என இரசிகமணி கனகசெந்திநாதனால் விதந்துரைக்கப்பட்டவர் கவிஞர் கந்தவனம். என் பால்ய காலத்திலேயே இலங்கையில் வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடாக இவரது பெயர் எனக்கு அறிமுகமானது. கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி), நிலாவணன், திமிலைத்துமிலன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, மஹாகவி, இ.முருகையன், மதுரகவி இ.நாகராஜா,  வேந்தனார், அம்பி என்று தொடரும் இலங்கைத்தமிழர் கவிதையுலகில் கவிஞர் கந்தவனத்துக்கொரு நிலையான இடமுண்டு.

கவிஞரின் படைப்புகளில் எனக்குப் பிடித்த மிக முக்கியமான தொகுப்புகளாக நான் கருதுவது ‘பாடு மனமே’, ‘இலக்கிய உலகம்’, மற்றும் ‘கீரிமலையினிலே‘ ‘பாடு மனமே’ தொகுப்பிலுள்ள நல்லதொரு கவிதை ‘பாவலனாகிடல் வேண்டும்’.

‘காலை, மாலை மற்றும் இரவு வேளைகளிலெல்லாம் மானுடர் வேலை செய்கின்றார். காலம் முழுவதும் இவர் செய்யும் வேலை எந்தவிதப் பயனுமற்றது. இவ்விதமாக வேலை , வேலை என்று நாளும் பொழுதும் வாழும் மானிடர் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது. சோலி, சுரட்டில் அவர்தம் வாழ்வு சோர்ந்து தளர்ந்திடுகின்றது. வஞ்சகமும், சூதும், களவும் நிறைந்தவர் தஞ்சம் பெறுமுலகில், அவர்களுக்கஞ்சி நீதியும் மறைந்து விடுகிறது. பஞ்சக் கொடுமைகள், சாதிச்சண்டைகள் மலிந்த இவ்வுலகு கண்டு நெஞ்சம் வெடிக்கிறது.’

இவ்விதமாகக் கவிஞரின் சிந்தனையோடுகிறது. மேலும் அவர் சிந்தனை விரியும்:

‘இந்தப் போலி உலகில் கிடந்து தவித்தது, போதும்.வெறும் பொய்யிற் புரண்டதுபோதும். …. வாடித்திரிந்தது  போதும். இந்த வையக வாழ்வை உணர்ந்திட வேண்டும். அதன் மாண்பை நுகர்ந்திடல் வேண்டும். தேடித் திரிந்து சிறந்த அமைதியை  நாடி அணைத்திடல் வேண்டும். மனம் ஆடிக்களித்திட வேண்டும். ஓடித்திரிந்து உலகத்தின் இயற்கையில் ஊறித்திளைத்திட வேண்டும். துயர் ஓடிப் பறந்திடல் வேண்டும். பாடித்திரிந்து பறந்து சுதந்திரப் பாவலனாகிடல் வேண்டும். புவி பாலித்து நான வரல் வேண்டும்.’

அந்தக் கவிதையின் முழு வடிவம் கீழே:

காலையும் மாலையுங் காரிருள் வேளையுங்
 காலம் முழுவதும் வேலை – பயன்
 கண்டறி யாதொரு வேலை
சோலி சுரட்டில் நிதமும் மனிதர்கள்
 சோர்ந்து தளர்ந்திடும் வாழ்வு – துயர்
 சூழ்ந்து வளர்ந்திடும் வாழ்வு!

வஞ்சகம் சூது களவு நிறைந்தவர்
 தஞ்சம் பெறுமுல கீதே – அவர்க்
 கஞ்சி மறையுது நீதி
பஞ்சக் கொடுமைகள் சாதிகள் சண்டைகள்
 நெஞ்சம் வெடிக்கு தையையொ – புவி
 நின்று நிலைப்பது மெய்யோ!

போலி உலகிற் கிடந்து தவித்தது
 போதும் அடஇனிப் போதும் – வெறும்
 பொய்யிற் புரண்டது போதும்
கோலி மெலிந்து வளைந்தது நல்லுடல்
 கொண்ட கவலைய தாலே — உண
 வுண்டும் பயனில்லை மேலே!

வாடித் திரிந்தது போதுமிவ் வையக
 வாழ்வை யுணர்ந்திடல் வேண்டும் – அதன்
 மாண்பை நுகர்ந்திடல் வேண்டும்
தேடித் திரிந்து சிறந்த அமைதியை
 நாடி அணைத்திடல் வேண்டும் – மனம்
 ஆடிக் களித்திடல் வேண்டும்!

ஓடித் திரிந்துல கத்தின் இயற்கையில்
 ஊறித் திளைத்திடல் வேண்டும் – துயர்
 ஓடிப் பறந்திடல் வேண்டும்
பாடித் திரிந்து பறந்து சுதந்திரப்
 பாவல னாகிடல் வேண்டும் – புவி
 பாலித்து நான்வரல் வேண்டும்.

கவிஞர்கள் பொதுவாக இயற்கையை உபாசிப்பவர்கள். கவிஞர் கந்தவனமும் அதற்கு விதிவிலக்கானவரல்லர். அவரது பல கவிதைகள் அவரது இயற்கை மீதான ஈடுபாட்டினைப் பற்றி எடுத்துரைக்கின்றன. ‘பாடு மனமே’ தொகுப்பிலுள்ள ”விந்தை அமைதி நிலவுதே’ என்றொரு கவிதையில் வரும்,

‘விட்டு விலகி இயற்கையில் – ஒரு
சொட்டுப் பொழுது திளைக்கையில்
மட்டில் மகிழ்வு பிறக்குது – மனச்
சிட்டுக் குருவி பறக்குது

என்னும் வரிகள் இவ்விதமான அவரது இயற்கை ஈடுபாட்டினைக் கூறும். அவரது பல கவிதைகளில் இவை போன்ற இயற்கை மீதான ஈடுபாட்டினை வெளிப்படுத்தும் வரிகளுள்ளன.

மேற்படி ‘பாடு மனமே’ தொகுப்பிலுள்ள ‘இயற்கைக் கவிகள்’ என்னும் கவிதையும் கவிஞரின் இயற்கை மீதான அவதானிப்புகளையும், அதன் விளைவான கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தும். இக்கவிதையில் இயற்கையின் நிகழ்வுகள் பல கவிஞருக்கு இயற்கை படைத்திட்ட கவிதைகளாகத் தென்படுகின்றன. ஆர்க்கும் ஆழியலைகள் பாக்களாகத் தென்படுகின்றன; மலர்கள் காற்றில் குலுங்கிச் சிரிக்கையில் அது கவிதையாகப் படுகின்றது கவிஞருக்கு. அந்தி வானில் கதிரவனின்

வண்ணக் கோலங்கள் கவிதையாகின்றன; வான் நுதலில் சந்தனப் பொட்டாகத் தென்படும் வட்ட நிலா தேனொத்த பாட்டினைத் தெளிக்கும்; துள்ளிக் குதிக்கும் அருவித் துடிப்பும், விண் தழுவும் மலை விழிம்பில் தோன்றும் வானவில்லான மழைவில்லின் பல்வண்ணக்காட்சியும் கவிஞருக்குக் இயற்கைக் கவிகளாக இனிக்கின்றன. 

இவ்வுதமான இயற்கைக் கவிகளைச் சுவைத்திட்ட கவிஞர்,

அம்மவி யற்கையி யற்றுங் கவிகளில்
 ஆடிக் களிக்கையிலே – வரும்
இம்மை மறுமையின் பங்களை யான்பெற
 என்ன தவம்புரிந்தேன்!

என்று களிப்படைகின்றார்.

கவிஞருக்குக் கவிதை மீதான ஈடுபாட்டினைக் ‘கனவும் நினைவும் கவிதை’ என்னுங் கவிதையில் வரும்

கவிதை கவிதை கவிதை
புவியிற் காணும்
 பொருள்கள் யாவும்
கவிதை எனக்குக் கவிதை!

கண்ணுங் கருத்துங் கவிதை
மண்ணும் விண்ணும்
 வெளியும் விரியும்
வண்ணக் கவிதை கவிதை1

என்ற வரிகளில் அறிந்துகொள்ளலாம்.

கவிஞர் கந்தவனத்தின் கவிதைகள் பல ஆன்மிகத்தைப் பொருளாகக் கொண்டிருந்தாலும், பாரதியைப் போல் அவரது சமுதாயப் பிரக்ஞையினை அவரது கவிதை வரிகள் பல

வெளிப்படுத்துகின்றன.

‘பாடு மனமே’யில் வரும்

‘வாழா தவர்கள் வாழ்ந்திடப் பாடு
 பாழும்வ றுமைதொ லைந்திடப் பாடு
ஏழை யென்றொரு மானிட னிங்கே
 இல்லையில் லையெனத் துள்ளியே பாடு

சாதி சமய வேற்றுமை யில்லைச்
 சண்டைக ளாற்பய னாவதொன் றில்லை
நீதி யாவர்க்கு மொன்றெனப் பாடு
 நெஞ்சினில் தூய்மைவி ளங்கிடப் பாடு

என்னும் வரிகள் கவிஞர் வர்க்கங்களற்ற , சாதி மதப் பேதங்களற்ற , நீதி அனைவருக்கும் பொதுவான மானுட சமுதாயத்துக்காய் \பாடு மனமே!; என அறைகூவல் விடுப்பதை எடுத்துரைக்கின்றன.

‘கவிதைக்கழகு பொருளன்று’ என்னுமொரு கவிதையில் கவிஞர் ஆற்றல் மிக்க நல்ல கவிஞருக்கு புல்லும் , பூண்டும் கூடக் கவிதைக்கு பொருளாகுமென்பார்.   அக்கவிதையின் வரிகள் வருமாறு:

‘மல்லுக் கழகு தோளன்று
 மலருக் கழகு நிறமன்று
வில்லுக் கழகு கனமன்று
 கவிதைக் கழகு பொருளன்று
புல்லும் பூண்டும் மிகநல்ல
 பொருளா மாற்றற் புலவர்க்கே!

‘பாடு மனமே’ தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை ‘பாட்டும் பாடுவேனோ’. அதில் கவிஞர் ‘பாட்டைக் கேட்டு நயங் கூட்டிக் கொள்ளும் மன நாட்ட மற்றவொரு கூட்டத்தின் முன் உயர் பாட்டைப் பாடுவேனோ? ஆற்றல், ஆர்வம், உயர் கூற்றுக் கொள்கை செயல் ஏற்ற மற்றவெறுங் காற்றுச் தூசிகளைப் போற்றிப் பாடுவேனோ? என்று பாடுவார்.

ஆத்மீகத்துறையில் ஆர்வமுள்ள கவிஞரின்  இயற்கை மீதான ஈடுபாட்டினையும், வர்க்க, சாதி, மதப் பேதங்களால் பிளவுண்டிருக்கும் சமுதாயத்தின் மீதான சீற்றத்தினையும் அவரது ‘பாடு மனமே!’ கவிதைத் தொகுப்பில் காணலாம்.

ngiri2704@rogers.com