வாசிப்பும், யோசிப்பும் 47: கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் தொகுப்புகள் பற்றிச் சில வார்த்தைகள்….

வாசிப்பும், யோசிப்பும் 47: கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் தொகுப்புகள் பற்றிச் சில வார்த்தைகள்....

புகலிடத் தமிழ்ச் சிறுகதைகளில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகளுக்கும் முக்கியமானதொரு பங்குண்டு. புகலிடத் தமிழர் படைத்த சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை உளளடக்கிய தொகுப்புகள் பல வெளிவந்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக வெளிவரும் தொகுப்புகள் சிலவற்றில் வெளியாகும் படைப்புகளைப் பார்க்கும்போது ஒரு குழுவாக இயங்கும் சில எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி அமைத்துக்கொண்ட வட்டத்தைச் சார்ந்தவர்களின் படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து தொகுப்புகளில் சேர்க்கும் போக்கு தென்படுகின்றதோ என்று ஐயுறுகின்றேன். இந்நிலை இலக்கியத்துக்கு ஆரோக்கியமானதொரு போக்கல்ல. ‘காலம்’ செல்வம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இவர்களைச் சுற்றியுள்ள சில எழுத்தாளர்களின் படைப்புகள், கவிஞர்கள் இவர்களின் படைப்புகளை மட்டுமே திரட்டித் தொகுத்து வருகின்றார்களோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது. கடந்த முப்பது வருடங்களில் ‘காலம்’ செல்வம் எத்தனை சிறுகதைகள், கவிதைகளை எழுதியிருக்கின்றார்? ஆனால் அண்மைக்காலத் தொகுப்புகளில் தவறாமல் இவரது கவிதை, சிறுகதைகள் சேர்க்கப்படுகின்றன.  ஒரு தொகுப்பானது தொகுக்கப்படும்போது குழு மனப்பான்மையுடன் தொகுக்கப்படுமானால் அது வரவேற்கத்தக்கதல்ல.

கனடாத் தமிழ்ச் சிறுகதைகளைப் பொறுத்தவரையில் பலர் பங்களித்திருக்கின்றார்கள். எழுத்தாளர்களான அ.கந்தசாமி, ‘அசை’ சிவதாசன், ஜோர்ஜ்.குருஷேவ், சுமதி ரூபன், சம்பந்தன், க.நவம், என்.கே.மகாலிங்கம், அகில், குரு அரவிந்தன், இளங்கோ, மெலிஞ்சி முத்தன், மொனிக்கா, வசந்திராஜா, ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, அமரர் நிலா குகதாசன், அமரர் குமார் மூர்த்தி, அளவெட்டி சிறீசுகந்தராசா, சக்கரவர்த்தி, பவான் , குறமகள், தமிழ்நதி, டானியல் ஜீவா, தேவகாந்தன், வீரகேசரி மூர்த்தி , ஆனந்த் பிரசாத், கடல்புத்திரன், வ.ந.கிரிதரன் என்று பலர் பங்களித்திருக்கின்றார்கள். ‘ழகரம்’ , ‘நானகாவது பரிமாணம்’, , ‘பதிவுகள்’ இணைய இதழ், தாயகம், தேடல் என்று பல சஞ்சிகைகள், வைகறை, சுதந்திரன், பொதிகை, ஈழநாடு, தாய் வீடு, மஞ்சரி, செந்தாமரை, சக்தி போன்ற பத்திரிகைகள் பல கனடாத் தமிழ்ச் சிறுகதைகளைப் பிரசுரித்துப் பங்காற்றியுள்ளன.

இவ்விதமானதொரு சூழலில் வெளியாகும் தொகுப்புகள் கனடாத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றியதாகவிருக்குமாயின் அவ்விதமான தொகுப்புகள் பாரபட்சமில்லாமல் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்விதமான தொகுப்புகள் கனடாத் தமிழ்ச் சிறுகதைகளை நியாயமான முறையில் பிரதிநிதித்துவம் செய்பவையாக இருத்தல் வேண்டும்.

ஒரு தொகுப்பில் சகலரையும் உள்ளடக்க முடியாதுதான். அவ்விதமான சமயங்களில் அவ்விதமான தொகுப்புகளில் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாகக் கணையாழியின் ‘ஈழத்துச் சிறப்பித’ழினைக் குறிப்பிடலாம். இதுபோல் நல்லதொரு சிறுகதைத் தொகுப்புக்கு மித்ரவின் ‘பனியும் பனையும்’ சிறுகதைத் தொகுப்பினையே நான் உதாரணமாகக் கூறுவேன்.

‘காலம்’ கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த, சேர்க்கும் சஞ்சிகளைகளிலொன்று. ஆனால் அதற்காக வெளியான ஏனைய சஞ்சிகைகள், பத்திரிகைகளின் பங்களிப்பினை மறந்துவிடவோ அல்லது மறைத்து விடவோ முடியாது. ‘தாயகம்’ சஞ்சிகை சுமார் ஐந்தாண்டுகள் வாரந்தோறும் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பத்திரிகையாகவும், பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது. அதில் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், நாவல்கள் என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவிலும் ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. இதுபோல் வைகறை போன்ற பத்திரிகைகளிலும் படைப்புகள் பல வெளியாகியுள்ளன.