என்னோடு வந்த கவிதைகள்—5

“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” –  கண்ணதாசன்

- பிச்சினிக்காடு இளங்கோ கும்மிப்பாடல்கள்,நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள்,நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள்,மாலையில்,இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை;இசையை; கலையை; அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக்குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள். அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன்.  எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள்.அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன். எங்களூர் ஏகலைவன் உறவினர்,கவிதை நண்பர் திரு பெ.அண்ணாமலை யார் பாடுறது? இளங்கோவா? என்று கேட்டது காதில் விழுந்தது. அடுத்த நொடியே நல்லாயிருக்கே என்றார். அதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற முதல் பாராட்டு. அது இன்னும் என்னோடு இருக்கிறது.

நான் பாடிய அந்தப்பாடல் ‘பணக்காரக்குடும்பம்’ படத்திற்காக கண்ணதாசன் எழுதி,டி.எம்.செளந்தரராஜன் பாடிய

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
 இருட்டுனில் நீதி மறையட்டுமே
 தன்னாலே வெளிவரும் தயங்காதே-ஒரு
 தலைவன் இருக்கிறான் மயங்காதே”-
என்ற பாடல்.

அதுதான்  நான் பாடிய கடைசிப்பாடலும் கூட. அதற்குப்பின் எங்கேயும்  நான் பாடியதில்லை. ஆனால் பாடல்களை ரசிப்பதோடு சரி.ஆனால் அவை எனக்கு ஆசானாக;வழிகாட்டியாக;தூண்டுகோலாக விளங்கியதுண்டு. அந்த ரசனையின் விளைவாக 2006-ல் சிங்கப்பூர் வானொலியில் ஒலிக்கலைஞர் நண்பர் P.N.பாலசுப்ரமணியம் அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு ஒலி96.8-ல் இரவு 10.20க்கு ‘பாடல் தரும் பாடம்’ என்ற தலைப்பில் 51 வாரம் பல திரைப்பாடல்களை விளக்கிப்பேசினேன்.

திரைப்பாடல்கள் பாடல்கள் மட்டுமல்ல நமக்குப் பாடமாகவும் இருக்கின்றன என்பதைச் சுவைபட வெளிப்படுத்தினேன். பாடல்களை விளக்கிக்கொண்டிருக்கும்போதே புதிய சிந்தனைகள் தோன்றி என்னை  வியப்பில் ஆழ்த்தியதுண்டு. அந்தச் சின்ன கிராமத்தில் நான் விளையாடிய இடங்கள்.விளையாடிய விளையாட்டுக்கள்,கோடைக்கால குளியலில் களித்த;கழித்த பிச்சினிக்குளம்,நாவல் பழத்திற்காக அலைந்தது,பானாப்பழம் பறிக்க காட்டுக்குள் சென்றது,காச்சுள் பறவையை அடிக்க அதிகாலையில் விழித்தது, கிணற்றில் குதித்து விளையாடியது, சடுகுடு ஆடியது,பொங்கல்விழா கொண்டாடியது போன்ற பசுமையான;விளையாட்டான;சுகமான;உற்சாகமானப் பொழுதுகள் இழந்தபொழுதுகள் என்றாலும் அவை இறவாப் பொழுதுகள். என் இளமையையும் கிராமத்தையும் எண்ணி எண்ணி எழுதிய கவிதை இன்னும் என்னை அழவைக்கும் கவிதை. அதனால்தான் அதன் தலைப்பே ‘நினைத்துப்பார்க்கிறேன் நினைத்ததும் அழுகிறேன்’ என்று அமைந்தது. அது ஒரு நெடிய கவிதை. படிக்க படிக்க நீங்களும் அழக்கூடும். உங்கள் இளமைப்பருவம் கிராமத்தில் கழிந்திருந்தால் எனக்கும் உங்களுக்கும் பெரிய வேற்றுமை இருக்கமுடியாது. என் ஊர் பிச்சினிக்காடு. உங்கள் ஊரும் பேரும்  வேறு.  அவ்வளவுதான். நிகழ்வுகளும் உணர்வுகளும் போட்ட கோலங்கள் ஒன்றாகவே இருக்கும். அந்தக் கவிதை என்னுடைய முதல் தொகுதியான’ வியர்வைத்தாவரங்கள்’ என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவையும் இங்கே தருவது இட நெருக்கடியைத்தரும். அதனால் தவிர்த்துவிட்டேன். அவ்வளவு நெடிய கவிதையை எழுதிவிட்டபோதிலும் அதற்குப்பின்  கிராமத்தைப்பற்றி நான் எழுதாமல் இல்லை. சுமர் பத்து ஆண்டுகளுக்குப்பிறகும் கிராமத்தை அசைபோடுகிறபோது சொல்லிக்கொள்ளாமல் கவிதை வந்துவிடுகிறது. கிராமம்பற்றிய எண்ணம் என்றைக்கும் கவிதை சுரக்கும் ஊற்றாகிவிடுகிறது. உண்மையில் கிராமம் கவிதையை அள்ளி வழங்கும் அட்சயபாத்திரம். அது வழங்கிய  அடுத்தக் கவிதைதான் ஆனந்தபொழுது. இது முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்குப்பிடித்த கவிதையும் கூட. பாராட்டி அவர்களே எனக்கும் கடிதமும் எழுதியிருந்தார்கள். சிங்கப்பூர் தமிழர்பேரவையின் திங்களிதழான ‘சிங்கைச்சுடரில்’ 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதியிலிருந்து நான் ஒற்றை ஆசிரியராக நான்காண்டுகள் பணியாற்றினேன்.நான் தான் முதல் ஆசிரியரும்கூட. அந்த இதழிலும் சிங்கப்பூர் ‘தமிழ்முரசிலும்’ வெளிவந்தது. இதோ அந்த ஆனந்தப்பொழுது:

ஆற்றுமணல்
விளையாடி விழுந்தேன்

ஆற்றுவெள்ளம்
விழுந்து மிதந்தேன்

காட்டுப்புதர்
இரத்தம் கசிந்தேன்

காச்சுள் பறவை
கனவில் வளர்த்தேன்

குளம் ஏரி
குதித்துக்குளித்துக்
கண்சிவந்தேன்

நாவல் எலந்தை
பறித்துச் சுவைத்தேன்

பானாப் பழங்கள்
பைகள் நிரப்பினேன்

மார்கழிக்குளிர்
சடுகுடு ஆடினேன்

தைப்பொங்கல்
பொங்கி வழிந்தேன்
ஆவாரம்பூ மாலை
தொடுத்து மகிழ்ந்தேன்

மின்சாரமில்லாமல்
மின்மினிப்பூச்சிகள்

நிலவோடுதான்
இரவு கழிந்தது

நட்சத்திரங்களே
வழிகாட்டின

எதிர்காலம்?
எண்ணவே இல்லை

காசுபணம்?
கவலையே இல்லை

தும்பைப்பூவாய்த்
தூய உள்ளம்

எல்லாரும் ஒன்றாய்
இணைந்து அழுதோம்
எல்லாரும் நன்றாய்
இணைந்து சிரித்தோம்

கல்வி
அறிவு
ஆற்றல் இணைந்து
குஞ்சுபொரித்தது…

பொருளாதார
மீசை முளைத்தது

உலகம் கைக்குள் வந்தது…
அதிசயங்கள்
அருகில் வந்தன..

இப்போதும்
அந்த அப்பாவிப்பொழுதுதான்
ஆனந்தப்பொழுது.

இந்தக்கவிதையைப் படித்து டாக்டர் அப்துல்கலாம் பாராட்டிய அந்தப்பொழுதும் எனக்கு ஆனந்தப்பொழுதான். கிராமத்தைவிட்டு சிங்கப்பூர் சென்றாலும் வாழ்ந்தாலும் மனம் மட்டும் கிராமத்தில்தான் இருக்கிறது. இதை கவிஞர் இளம்பிறைக்கவிதை அழகாகச்சொல்கிறது இப்படி: மாநகர் வந்து மாதங்கள் பல ஓடிவிட்டன. பொருட்களை ஏற்றிவந்துவிட்டேன். அப்போதே வராமல் அடம்பிடித்துக்கொண்டிருக்கும் இந்த மனசைத்தான்
எப்படிக்கொண்டுவருவதென தெரியவில்லை.  (என்னோடு வரும்-6)
                            
pichinikkaduelango@yahoo.com