– அறிஞர் அ.ந.கந்தசாமி ‘கவீந்திரன்’ என்னும் புனைபெயரிலெழுதி ‘பாரதி’ இதழில் வெளிவந்த இன்னுமொரு கவிதையிது. –
1.
முன்னேற்றச் சேனை ஒன்று மூவுலகும் வாழ்ந்திட
மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட
முன்னேறிச் செல்லுகின்ற முகூர்த்தம் இஃது தோழர்காள்
முடியரசும் முதலரசும் முடிந்து பொடியாகுது!
பின்னேற்ற பேரெல்லாம் விழி பிதுங்குகின்றனர்
பீடைகட்கு முடிவு வந்ததே யென்று கவல்குனர்!
இன்னாளை போலொருநாள் இன்று வரையில்லையே
இத்தருணம் எழுந்திடுக, எங்கள் சேனை சேர்ந்திட!
2.
எங்கள் சேனை அச்சமென்பதென்றுமறியாதது.
எட்டுத் திக்கும் அதன் ஒலியே முட்டி முழங்குகின்றது!
மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்துப் பின்
மரண கீதம் பாடும் வரை ஓய்வதற்கு இல்லையே!
எங்கும் அடிமை சுரண்டல் என்னும் பிசாசுதீய்ந்து மாய்ந்து
இவ்வுலக மக்களெல்லாம் ஒரு சமானமாகினால்
துங்கமான எம்படையின் வெற்றி அதுவாகுமே!
துகளிலாத புது உலகம் தோன்றல் வேண்டும் என்பமே!
3.
ஒளி மிகுந்த அப்புதிய லோகத் தன்மை கேட்பீரே!
ஒரு வறுமை ஓலமில்லை ஒரு கவளம் உணவிற்காய்
விழுவதில்லை அங்கு மாதர் விபசாரக் குழியுளே!
விளையு நாட்டுத் திறமை ஒன்றும் வீணாய்ப் போவதில்லையே!
அழகு கலை என்பதெல்லாம் ஒரு கூட்டம் செல்வரின்
ஆடம்பர அலங்காரம் அல்ல அங்கு சோம்பலின்
விளைவதன்று மக்களது உயர்ந்த செல்வம் கலை என
விளங்கு மக்கள் வாழுகின்ற புதியலோகம் வாழ்கவே!
4.
அடிமையது அழுகையோடு ஆண்டையது அதட்டலும்
அங்கெழுந்துமறைந்ததுவே! வியர்வைவெள்ளம் பாய்ச்சித்தன்
உடலதனை எருவதாக்கி விளைவுசெய்து பின்னரும்
உணவிலாது மடிந்தொழியும் ஊமை மகன் இல்லையே!
படியில் நாடு தம்மிடையே பதுங்கிச் சுரண்டல் என்பது
பழங் கதையாய் இருக்கும் அந்தப் புனிதலோகம் தோற்றிடும்
கடமை தாங்கி எழுந்து செல்லும் சேனைதன்னை வாழ்த்துவோம்!
காளையீர்! நீரும் அந்தச் சேனையோடு சேருவீர்!
நன்றி: ‘பாரதி’ சஞ்சிகை.
அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள்!
ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதற்காக எம்மிடமுள்ள அவரது கவிதைகள் ஒவ்வொன்றாகப் பிரசுரமாகும். கவிதைகள் சில தட்டச்சு செய்த நிலையில் கிடைத்தன. அவற்றில் சில எழுத்துப்பிழைகள் இருக்கலாம். எனவே அவ்வப்போது மூலப்பிரதிகள் கிடைக்கும்போது அவை ஒப்பு நோக்கப்பட்டுத் திருத்தப்படும். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகள் இங்கு பிரசுரமாகும். அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக விபரங்களைப்பெற முடியும்.