வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.

எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..
நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.
காலமற்ற வெளியில்லை கண்ணம்மா.
வெளியற்ற காலமில்லையா சொல்லம்மா.
காலம் நீயென்றால் கண்ணம்மா
வெளி நானன்றோ இல்லையா?
வெளி நானென்றால் கண்ணம்மா
காலம் நீயன்றோ இல்லையா?
காலவெளியன்றோ நாம் கண்ணம்மா!
காலவெளியன்றோ?
காலவெளியாகக் கண்ணம்மா – நாம்
உள்ளதெல்லாம் கண்ணம்மா
உண்மையா கண்ணம்மா? உண்மையா?
காலவெளிக் கோலமன்றோ கண்ணம்மா
ஞாலத்தில் நம்நிலை.
காலவெளிக் கடக்காக் கைதிகளா நாம் கண்ணம்மா?
கைதிகளா நாம்? ஆம்!
காலவெளிக் கைதிகளே நாம் கண்ணம்மா!

ngiri2704@rogers.com