அத்தியாயம் 2
பணம் பண்ணவேண்டுமென்றுதான் ஒரிஸ்ஸா போன்ற ஒரு பின் தங்கிய பிராந்தியத்தில் ஒரு தாற்காலிக குடியிருப்பில் தியேட்டர் தொடங்கி சினிமா படங்களைத் திரையிடுகிறான். 1951-ல். அவனால் ரித்விக் காடக்கைத் திரையிட்டுப் பணம் பண்ணமுடிகிறது. தமிழ் நாட்டில் ஒரு புரட்சியையே விளைவித்த அதன் பின் தமிழ்ப்படங்களின் குணத்தையே மாற்றியமைத்த பராசக்தியையும் அவனால் அங்கு அணைக்கட்டில் உழைக்க வந்த தமிழர்களின் கலைத்தாகத்தைத் தீர்க்க திரையிட்ட பின்னும், சத்ய்ஜித் ரேயின் பதேர் பஞ்சலி வெளிவந்த ஒன்றிரண்டு மாதங்களில் ஹிராகுட்டிலும் திரையிட்டு பணம் பண்ண முடிந்தி ருக்கிறது. இது தமிழ் நாட்டில் ஆறு வருடங்களுக்குப் பின்னும், அது உலகப் புகழ் பெற்று, இந்தியத் திரைபபட விழாவிலும் தங்கமயில் பரிசு பெற்ற பின்னும், தமிழ் நாட்டின் தலைநகரில், 1930 களிலிருந்து சினிமா என்ற கலைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கல் தோன்றுமுன்னேயே தோன்றிவிட்ட தமிழ் இன மக்களிடையே அது கலையாகப் பெயர் பெறாத காரணத்தால், அதன் விளைவாக அதை வைத்துப் பணம் முடியாது போன காரண்த்தால், அந்த மாதிரி சமாசாரங்களுக்கு தமிழ் நாட்டில் இடமில்லை. 1961-லும் இடமில்லை என்று நிரூபணமானது 40 வருடங்களுக்குப் பின்னும் அந்த ரசனையில் எந்த மாற்றமும் இல்லை.
இன்னும் ஒரு சில சம்பங்களைப் பற்றிப் பேசிவிட்டு மேல் செல்கிறேன். மறுபடியும் 1950 தான். ஹிராகுட்டில் இல்லை. அப்போது எங்கள் குடியிருப்பின் தியேட்டர் வராத காலம். பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருந்த சம்பல்பூர் என்னும் ஒரு சின்ன பட்டணத்துக்குப் போய்த் தான் சினிமா பார்க்க முடியும். வாரம் ஒரு முறை போய்ப் பார்த்து இரவு நடந்தோ பஸ்ஸிலோ அல்ல்துஅங்கு ஏதோ ஒரு வீட்டு முகப்பில் தூங்கிவிட்டோ காலையில் எழுந்து அவசர அவசரமாக் குடியிருப்புக்குத் திரும்புவோம். 1950 களில், திண்டிவனம், விழுப்புரம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது சம்பல்பூர் என்னும் மாவட்ட தலைநகரம். இரண்டு சினிமா கொட்டகைகள். 1950- களில் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்று ஒரு கோடி காட்ட வேண்டுமானால், சந்திரலேகா, ஓர் இரவு, மந்திரி குமாரி, ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி, போன்ற படங்களை நினைவுக்குக் கொண்டு வர முடிந்தவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்களோ இப்போது தெரியாது. இதில் ஓர் இரவு மாத்திரம் கருத்துள்ள சமூகக் கதைப்படம் என்று பெயர் வாங்கியது. அண்ணாவின் கதை. திமுகவின் திரையுலக பிரவேசத்துக்கும் கட்சிப்பிரசாரம் கருத்துள்ள கதையாக உருவான காலம். அலங்கார பிரசங்கங்கள் வீர வசனங்கள் சினிமாவான காலம். அண்ணாதுரை பெர்னாட் ஷா வாக கொண்டாடப்பட்ட காலம். இபபடியான மாற்றங்களுக்கு கொணர்ந்தவை தான் இந்த திரைப் படங்கள். மறுபடியும் கட்சிப் பிரசாரமோ, அல்ங்கார வசனமோ, கருத்துப்படமோ எதாகிலும் மக்களைக் கவர்ந்தன. அந்தக் கவர்ச்சியில் பணம் பண்ணமுடிந்தது. எது பணம் பண்ண வழி வகுக்கிறதோ அது கலை தான் கருத்து தான். புரட்சி தான். எல்லோரும் கலைஞர்கள் தான்.
பம்பாய் பட உலகில் ஷா என்று எல்லோரையும் போல ஒரு பணம் பண்ணும் தயாரிப்பாளர். முழுப் பெயர் எனக்கு நினைவில் இல்லை. அவர் தயாரித்த ஜோகன் என்று ஒரு படம் வந்தது. நடித்தவர்கள் அந்த காலத்தில் முன்னணி நட்சத்திரங்கள் தான். நர்கிஸும் திலீப் குமாரும். கதை இது தான் தனக்குப் பிடிக்காத இடத்தில் மணம் புரிந்துகொள்ள வற்புறுத்தலைத் தாங்காது ஒரு மடத்தில் தஞ்சம் புகுந்து சன்னியாசினியாகிறாள் ஒரு இளம் பெண். அந்த கிராமத்துக்கு தன் உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு இளைஞ்ன் அந்த சன்னியாசினியைப் பார்க்கிறான். அவளை அவனுக்குப் பிடித்துப் போகிறது. முதலில் அவள் அந்த சந்நியாசினி இதை அறிந்தவளில்லை. அவன் திரும்பத் திரும்ப தன்னிடம் நெருங்கி வருவதை தடுக்க முடியாது அவ்ள் கடைசியில் சொல்கிறாள். என்னிடம் உனக்கு உண்மையிலேயே அன்பு இருக்குமானால், இனி இந்த மரத்தைத் தாண்டி என் பின் வராதே. என்று சொல்லிச் செல்கிறாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று விடுகிறான் அவன். அவ்வளவே கதை. படம் முழுதும் அவள் இருவரும் சந்திப்பதும் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் பேச்சுக்களும் தான். பெரும்பாலும் இருவரது க்ளோஸ் அப் களிலேயே க்தை சொல்லப்படுகிறது. இருவரது பேச்சுக்க்ளும் அருகிலிருக்கும் இருவரது குரல் எவ்வளவு உயரவேண்டுமோ அதற்கு மேல் உயர்வதில்லை. நீண்ட வாதங்கள் இல்லை. அழுகை இல்லை. துயரம் தோய்ந்த முகங்களும், ஏமாற்றத்தின் வெளிறிய முகங்களுமே நாம் க்ளோஸ் அப்பில் பார்பபது. இரு இளம் உள்ளங்களிடையே நிகழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை, அவர்கள் முகமும் சன்னமாக ஒலிக்கும் வேதனக் குரலும் இடையே விழும் நீண்ட மௌனங்களும் தான் சொல்லும். அது தான் சினிமா. நீண்ட பிரசங்கங்களும் அலங்கார வசனங்களும், நாடக பாணி கதறலும் சொல்லமாட்டா.அவை எவ்வளவு தான் கைதட்டலகளையும் கூச்சலகளையும் தருவதாக இருந்தாலும் சரி. அவையெல்லாம் மோசமான பிரசங்கப்பாணி நாடகங்கள் தான். நல்ல நாடகம் கூட இல்லை. .
இடையிடையே ஐந்தாறு மிக இனிமையான மீரா பஜனைப் பாட்டுககளைக் கேட்போம். பாடியது கீதா தத் என்று நினைவு.
சரி. இந்த இடத்திலிருந்து இதே பாதையில் செல்லக்கூடும் சிலர் ஹிந்தி சினிமா உலகில் பின் வருடங்களில் தோன்றி னார்கள் 1950-ல் ஜோகன். அவர்களுக்கு சற்று விலகிய அவர்களுக்குப் பிடித்த பாதையாக இருந்தது. இது வியாபாரத்துக்கு ஒத்துவராது என்று ஒதுக்கியவர்கள் இல்லை. அதைத் தொடர்ந்து மஹல், ஷிகஸ்த், பரிநீதா என்று நான் அக்காலத்திய படங்களைச் சொல்லிக்கொண்டு போகமுடியும். அது 2010 தமிழ்ர்களுக்கு என்ன அர்த்தத்தையும் கொடுக்காது. ஆனால் ஒன்று நான் ஜோகன் பட்த்தைப் பற்றிச் சொன்ன விவரங்களிலிருந்து இன்று 2010-ல் தமிழ் சினிமா இம்மாதிரி ஒரு படத்தைத் தரும் சக்தியோ தினவோ உண்டா என்று யோசித்தோமானால், சிவகாசியும், சிவாஜியும் தசாவதாரமும் புழங்கும் ஒரு நாகரீகத்தில் ஏதோ சம்பந்தமில்லாத் வேற்று உலக நடப்பைப் பேசுவதாகத் தான் அர்த்தமற்றுத் தோன்றும்.
1950-ல் ஒரு பஞசாபி ஒரு ஒரிஸ்ஸா மக்களிடையே தன் சினிமாப்படம் திரையிடும் வியாபாரத்தை எந்தத் தரத்தில் செய்யமுடிந்திருந்தது என்று சொன்னேன். அது 60 வருடங்கள் கழித்து தமிழ் நாட்டில் சாத்தியமில்லாது போவதைப் பற்றியும் சொன்னேன்.
அந்த ஒரிஸ்ஸாவில் கடந்த பத்து இருபது வருடங்களாக், ஒரு சில ஒடிய மொழித் திரைப்படங்கள் ஒடியா நடிகர்களும், ஒடியா இயக்குனர்களும் பங்கேற்றுள்ள திரைப்ப்டங்கள் வந்துள்ளன. மிக எளிய முயற்சிகள். ஒரிஸ்ஸாவில் எனக்குத் தெரிந்து ஸ்டுடியோ க்களோ, லாபரேட்டரிகளோ கிடையாது. ஸ்டுடியோக்களுக்கு அவர்கள் கொல்கத்தா தான் போகவேண்டும். ஒரு காலத்தில் நாம் புனேக்கும் பம்பாய்க்கும் படையெடுத்தது போல. தியாகராஜ பாகவதர் போகட்டும் ஆனால், கதை வசன்ம் எழுதிய புதுமைப் பித்தன் கூட புனேக்குப் போகவேண்டியஇருந்தது. அங்கு போய் நோய்வாய்ப்ட்டது நமக்குத் தெரியும். எல்லா திரையரங்கு களிலும் பெரும்பாலும் ஹிந்தி படங்களே திரையிடப்படும். இடையிடையே வங்காளிப் படங்களும் திரையிடப்படும். வங்காளியை ஒரிஸ்ஸா வாசிகள் புரிந்து கொள்வார்கள். ஆக, ஒரிய வாழ்க்கையை, ஒரிய அதன் மணத்தோடும், நாதத்தோடும் எடுக்க் விழையும் சில கலைஞர்களைக் கொண்ட கலாச்சாரம் அது. அவர்களுக்கு ஸ்டுடியோக்கள் தேவை இல்லை. கிராமத்து மண் குடிசைகளும், அங்கிங்குமாகக் காணப்படும் பழம் காரை வீடுகளுமே போது, அந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்க. தமிழ் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி, அல்லது அதை அறவே ஒதுக்கிய வியாபாரிகளுக்குத் தான் பிரம்மாண்ட செட்கள், தோட்டா தரணி, பின்னணி இசைக்கு 40 வாத்ய கருவிகள். நடனப் படப்பிடிப்புக்கு வெளிநாட்டு பயணங்கள், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் எல்லாம் தேவைப்ப்டும். அது உலக நாயகனானாலும் சரி, சூப்பர் ஸ்டாரானாலும் சரி, மேதை என்று எல்லோராலும் பாராட்டப்படும் மணி ரத்னமானாலும் சரி. அவ்ருக்கும் நடனக் காட்சிகளுக்கு அருவிகளும் மலைச் சரிவுகளும், தேவைப்படுகிறது. (”டான்ஸ் சீக்வென்ஸில் தான் விஷுவலி ஏதாவது செய்யமுடிகிறது” என்று அந்த சினிமா மேதை சொல்லியிருக்கிறார்) “ஆமாம், சினிமான்னா அவருக்கு ஏதாவது தெரியும்னு அவருடைய பட்த்திலேர்ந்து தெரியறதா உங்களுக்கு?” என்று பில்ம் இன்ஸ்டிட்யூட் டைரக்டர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சினிமாவைப் பற்றி பேச வந்திருந்தார். ”அவருடைய நாரேட்டிவ் ஸ்டைல் அது” என்று வெகு சுருக்கமாக பதில் அளித்தார். அதற்கு மேல் அவர் வேறு எதுவும் சொல்லவில்லை.
அந்த நாரேடிவ் ஸ்டைல் அவரது மட்டுமல்ல. அது தான் எல்லா தமிழ் சினிமாவின் ஸ்டைலும். ஸ்டைல் என்ன அதை நம்பித்தான் வியாபாரமே நடக்கிறது. உலக நாயகன் கூட டோரண்டோ போய் தான் அந்தத் தெருக்களில் சிம்ரனோடு டான்ஸ் பண்ணுவார். இங்கே எல்லாம் டான்ஸ் பண்ண அவர் கால் இப்போ கொஞ்ச நாளா சிரமப் படுகிறது. காசு கொடுக்கிறவன் வேறே எவனோ ஒருத்தன்.
இந்த இளைய தளபதி, உலக நாயகன், இயக்குனர் சிகரம், சூப்பர் ஸடார்கள் நிறைந்த நெரிசலில், ‘வீடு’ என்று அன்றாட தமிழ் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக எந்த ஆரவாரமும் இல்லாது அமைதியாக எடுத்த பாலு மகேந்திரா போன இடம் தெரியவில்லை. அவரும் பாவம் இடையே இந்த ரக மசாலா சேர்க்க, ஒரு கனவுக்கன்னியை ஆட வைத்துப் பார்த்தார். ஏன் தான் மற்றக் கோமாளிகளைப் பார்த்து தானும் கோமாளி வேஷம் போட ஆரம்பித்தாரோ. மற்ற கோமாளிகள் நிஜ கோமாளிகள். இவர் வேஷம் போட முயற்சித்த கோமாளி தானே. நம்மால் பரிதாபப்டத்தான் முடியும்.
இந்த அவஸ்தைகள் எல்லாம் பட வேண்டியிராத மணிப்பூர், ஒரு சில லட்சங்களே மக்களும் அவர்கள் மெய்தெய் பாஷையும் பேசுபவரும் கொண்ட வேறு எந்த வசதியும் இல்லாது, ஒவ்வொன்றுக்கும் கல்கத்தா ஒட வேண்டிய பழங்குடி மக்கள் பிரதேசத்திலிருந்து இமாகி நிங்தம் என்று ஒரு படம், ஒரு சிறுவனின் பால்ய வாழ்க்கையின் சின்ன சின்ன துக்கங்களையும் பாசங்களையும் மனம் நெகிழச் செய்யும் ( என்றால் கதறி அழச்செய்யும் என்ற நமது வழக்கமான அர்த்தம் இல்லை) படம் எடுக்க முடிந்திருக்கிறது. அவர்கள் என்னமோ கல் தோன்றி, மண், மரம் தண்ணீர் எல்லாம் தொன்றிய பின் தோன்றியவர்கள் தான். ஆகவே நம்மைப் போல் அவ்வளவு பெருமை பெற்றவர்கள் இல்லை)
ஒரிஸ்ஸாவைப் பற்றிப் பேசினேன். மஹாபாத்ரா என்றபெயர் அந்த இயக்குனரது. முழுப் பெயர் எனக்கு நினைவில் இல்லை. படத்தின் பெயரும் நினைவில் இல்லை. இரண்டு படங்கள். இரண்டும் ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையைச் சொல்லும் படங்கள் தான். ஒன்றில் கிராமத்தின் மண் குடிசைகளும் மற்றதில் க்ஷீணமடைந்திருக்கும் ஒரு பெரிய வீட்டில் நடக்கும் கதை. பெரிய வீழ்ச்சி ஏதும் இல்லை. ஆரவாரமாகக் கொண்டாடவும் ஏதும் பெரிய நிகழ்வுகள் இல்லை. வெகு சாதாரணமான அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக என்றும் நிகழும், நாம் சிறிது கஷ்டப்பட்டு எதிர்கொள்ளும், அல்லது முடியாது தோற்றுவிடும் சம்பவங்கள், வாழ்க்கைச் சிக்கல்கள்.
அந்த பிற்பட்ட, பொருளாதார முன்னேற்றம் காணாத, இன்னமும் 20-ம் நூற்றாண்டின் முன் பத்துக்களைலேயே சிறைப்பட்டு விட்டதாகத் தோற்றம் தரும் அந்த சமூகத்திலிருந்து, தம் கலைகளின் மகோன்னதம் பற்றி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாத சமூகத்திலிருந்து வெகு சீரியஸான, சினிமா என்ற ஊடகத்தைப் புரிந்து கொண்ட மனிதர்களைப் பார்க்க முடிகிறது. சொல்லப் போனால் ஒரிஸ்ஸா முதலமைச்சருக்கு ஒடியா கூட சரியாகப் பேசத்தெரியாது என்று கேலி பேசுவார்கள். கலைஞராவதோ, உலக ஒரிய இனக் காவலர் ஆவதோ, மூ-ஒரிய வேந்தர் ஆவதோ ரொம்ப தூரத்து லட்சியங்கள்.