சிறுகதை: நாகமுத்துவும் திருவள்ளுவரின் 55வது குறளும்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இடம்: தமிழீழம் தென்மராட்சி கைதடி-நுணாவில் என்னும்  கிராமம்.
காலம்: 1960களின் முற்பகுதி.
தன் கணவரின் எட்டுச் செலவு நடந்த சனி பிற்பகல், உணவுப் பந்தியில் அமர்ந்திருந்த எல்லோருக்கும் நாகமுத்து தன் கையால் ஏதுமொன்று பரிமாற வேண்டும் என நாண்டு நின்று, எல்லோரும் சாப்பிட்டு முடியும் நேரத்தை அவதானித்து, ஓர் ஓலைப் பெட்டியில் உழுந்து வடைகளை எடுத்துச் சென்று தனது வளையல்கள் கழற்றியிருந்த வலக்கையால் ஒவவொன்றாக வாழை இலைகளின் நடுவில் மெதுவாக வைத்துக் கொண்டு வரிசை வரிசையாக ஒவ்வொருவரையும் பார்த்து ஒருவாறு புன்னகித்தபடி சென்றாள். நடையில் அவள் தடுமாறியதை எவரும் கவனிக்கவில்லை. வெற்றியர் இறந்தது புதன்கிழமை. அவருக்குக் கடுமையாக்கிய நாள் தொடங்கி, அவள் அவரருகேயே இரவுபகலாகக் காணப்பட்டாள். எனவே மகள் இரத்தினமும் சிறுமிகளாகிய இரு பேத்தியரும் அடுக்களை வேலைகளின் பொறுப்பை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் புதன்கிழமையில் இருந்து, எட்டுச் செலவுச் சனி மட்டும், இனத்த வெளிப்-பெண்கள் சிலர் காலை வந்து இரவுமட்டும் ஒத்தாசை செய்தனர். அவளுக்கும் சிலர் உணவு பரிமாறிக் கொடுத்தனர். ஆனால் உண்மையில் அவளை இருந்து உண்ணவைக்க முடியவில்லை. ஏதோ, தினம் தினம் அடுத்த நாள் உயிர் வாழவே அவள் சிறிது புசித்து வந்தாள் என்பது பல நாட்களுக்குப் பின்னரே ஊகிக்க முடிந்தது.  வியாழன், வெள்ளி, சனி, அவள் வீட்டுக்கு வந்த எல்லோருடனும், அழுதழுது கூடப் பேசவே தெண்டித்தாள்.  சமையல் வேலைகளுக்கு வேண்டிய சாமான்கள் இருக்கும் இடங்களை எல்லாம் உடனே காட்டி உதவினாள்.  பகலில் படுத்து இளைப்பாறத் தெண்டிக்க வில்லை. அதற்கு அவளின் கடமையுணரச்சி விடவில்லை. தன் மகள், மகனுடனும் மூன்று மருமகன் மாருடனும் பாசத்துடன் பேசி, பேரப் பிள்ளைகளைக் கட்டி முத்தமிட்டு ஆறுதல் கூறினாள். சனிக்கிழமை காலையிலேயே எட்டுச் செலவையும் துடக்குக் கழிவையும் ஐயரை அழைத்துச் செய்வித்து, மதிய போசனம் முடிந்தவுடன் பந்தலையும் இறக்கி, குடும்பத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தால் தாம் ஞாயிறு காலை வெளிக்கிட்டு கொழும்பு திரும்பலாம் என மருமகன்மார் துரையும் தில்லையும் தெண்டித்தனர். ஆனால் ஐயர், புதனன்று நாலு மணிக்கே பிரேதம் சுடலை சென்ற படியால் சனியன்று நாலுக்குப் பின்னரே தன் துடக்குக் கழிவுப் பூசை தொடங்க முடியும் என்றதால், இன்னொரு நாள் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, இருவரும் கூடிய லீவுகளைக் கோரித் தந்திகளை அனுப்பி, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற தத்துவத்தைப் பின்பற்றினர். சனிக்கிழமை மாலை ஏழுக்கு எல்லாம் இனத்தார் தம்தமது வீடுகளுக்குச் சென்று விட்டனர். உடனே அவள் மகன் (பள்ளிக்கூடப் பரிசோதகர்) கந்தசாமியைத் தன் கணவரின் முன்-அறைக்குள் கூப்பிட்டு வெற்றியர் எவருக்கும் ஏதும் கடன்வகையில் கொடுக்க வேண்டுமா என ஆராய்ந்தாள். இது நடக்கும் போது வேறு ஏதோ வேலையாக அங்கு சென்ற துரையர், வெற்றியர் கடன் ஒன்றும் விட்டு வைக்க இல்லை என அறிந்து, அவள் விட்ட ஆறுதற் பெருமூச்சைக் கவனிக்கத் தவற வில்லை.

பத்து மணியளவில் நான்கு நாட்களாகக் கடுமையாக ஓடியாடி வேலை செய்து களைத்திருந்த வீட்டார் எல்லோரும் வேறு வேறு அறைக ளுள்ளும், விறாந்தைகளிலும் பந்தலினுள்ளும் பாய்களை விரித்துக் கொண்டும் அகப்பட்ட எதையும் தலையணைகளாக வைத்தும் படுத்து உடனே நித்திரையாகி, சிலர் குறட்டையும்  விடத் தொடங்கினர்.

துரையும் தில்லையும் காரில் தம் சாமான்களை ஏற்றி, ஞாயிறு காலை ஒன்பதுக்குக் கொழும்புக்கு விட எண்ணித் தாமும் படுத்தனர். நாகமுத்து, கணவரின் அறையுள், மகனைக் கட்டிலில் படுக்க விட்டுத் தான் பாய் ஒன்றின் மேல், நிலத்தில், வழமைபோல் படுத்தாள். மகன் கந்தசாமி உடனேயே உறங்கி விட்டார். ஆனால் தாயாருக்கு நித்திரை வரவில்லை. மணிக்கு நாலு தரம் வலமும் இடமும் புரண்டு கொண்டே படுத்தாள். காலை நாலு மணியளவில் மகன் தாயின் தொடர்ந்த முனகல் சத்தம் கேட்டுத் துயில் துறந்து கிழே இறங்கித் தன் தாயிடம் என்னவென வினவ, அவள் நெஞ்சில தொடர்ந்து நோவதாகச் சொன்னாள்.

உடனே கந்தசாமியர் வெளியே சென்று துரையரைச் சத்தமின்றி எழுப்பி இருவரும் கலந்தாலோசித்து, துரையர் சாவகச்சேரி அரசாங்க சிகிச்சைமனைக்குச் சென்று கொழும்புப் பல்கலைக் கழக்த்தில் அவரின் பழைய விடுதி-நண்பன், அன்று அம் மனையின் பொறுப்பதிகாரி எனக் கேள்விப்பட்ட டொக்ரர் சகாதேவனை அழைத்து வந்து காட்டுவதென முடிவு செய்தனர். துரை, உடனே தன் காரில் புறப்பட்டார். 

யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் அந்நேரம் வாகன ஓட்டம் குறைவு. இருந்திட்டு ஒரு சாமான்-லொரியே காணப்பட்டது. ஜந்தே நிமிடங்களில் துரையர் சாவகச்சேரி சிகிச்சைமனை வைத்தியரின் வீட்டுக்குச் சென்று கதவில் இருந்த மணியை அமதினார். சகாதேவன் சறம், மேற்சட்டை, றப்பர் செருப்புடன் வந்து கதவைத் திறந்து, வெளியே நின்ற துரையரைக் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். சிறிது உள்ளே, வெளி விறாந்தையில் இருந்த இரு கதிரைகளில் அமர்ந்து அவர்கள் மெதுவான குரலில் ஜந்து நிமிடங்களே பேச முடிந்தது.

சுருக்கமாக, சகாதேவன், துரையுடன் சென்று அவரின் மாமியாரைப் பார்க்க மறுத்து விட்டார். முன்னர், சேவை நோக்கில் தான் வீடுகளுக்கும் சென்று, கடுமையான நோயாளிகளைப் பார்த்ததாகவும், மொட்டைக் குற்றச் சாட்டுக் கடிதங்கள் பல அவரின் பெரிய கந்தோருக்கு அனுப்பப் பட்ட படியால் அந்த மாதமே, தான் வெளிச் செல்வதை நிற்பாட்டிய தாகவும், தன் முடிவை மாற்ற முடியாது என்றும், ஆனால் கிட்டடியில் ஒரு பிரத்தியேக டெக்ட்டர் இருக்கலாம் என விலாசத்தையும் கொடுத்தார். துரை, ஆபத்துக்குதவா நண்பன், என விசனித்து, வெளிச் சென்றார்.

பிரத்தியேக வைத்தியர் கந்தையாவின் வீடு, ஒரு கடுகுப் படலையுள்ள வளவின் மத்தியில் இருந்தது. படலையில் நின்று, டொக்ட்ரர் கந்தையா, ஐயா! என்று உரத்துக் கூப்பிட்டார். பத்தாம் முறை கத்திய பின், படலை திறக்கப் பட்டது. திருமதி கந்தையா ஒரு கப்ரான் அங்கியுடன் தோன்றி, ‘வைத்தியம் துவங்கேல்லை’ என்றாள். ‘ஏன், இண்டைக்கே, துவங்கலாம் தானே, காரில் கூட்டிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வந்தும் விடுறம்’ என்று மன்றாடியும் அவள் மறுத்து, ஒரு நல்ல நாளாய்ப் பஞ்சாங்கம் பார்த்துத்தான் துவங்குவம்! என்றாள்.  துரையின் முகம் சுருங்கியது.

படலையில் நின்றபடி, அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கை யில் தம்பி சின்னத்துரை சைக்கிளில் தம் வீட்டுப் பக்கத்திலிருந்து அண்மிப்பதைக் கண்டார். ‘மாமியின்ரை பாடு எல்லா விக்கற்றும் விழுந்து மாய்ச்சும் முடிஞ்சிட்டுது அண்ணை. உங்களைத் திரும்பி வரட்டாம். மாமான்ரை தம்பி அம்பலவாணப் பரியாரியர் மாமாவும் வந்துபாத்தவர். அங்கை தான் இன்னும் நிக்கிறார்’ என்றான். துரையர் உடனே வீடு திரும்பினார்.

அன்றே நாகமுத்துவின் செத்தவீட்டை முடிப்பது என்றபடியால், பறையடித்தே ஊருக்கு அறி விக்க வேண்டும் என்பது கட்டாயமாயிற்று. சின்னத்துரை, கிறிக்கெற்றை மறந்து, சைக்கிளிலும் நாய்-ஓட்டத்திலும் சென்று ஐயருக்கும், பாடைக்கும், செல்லையர் போன்ற கிட்டிய இனத்தவருக்கும் அறிவித்தான்.

கூட்டம், புதன்கிழமை அவளின் கணவர் வெற்றியரின் மரணத்தன்றைப் போல், குவிந்தது. அன்று மூன்று மணிக்கே பிரேதம் தூக்குவது எனவும், மாலை ஆறுமணிக்குச் சாப்பிடுவது எனவும் முடிவு. ஞாயிறன்று வந்தோரில் அநேகர், பெண்கள்.

ஊர்ப் பெண்கள் நாகமுத்துவை ஓர் உதாரணக் குடும்பத் தலையிவியாக மதித்து வந்தனர். வீட்டில் வைத்தியர் இல்லாதபோது வரும் பெண் நோயாளிகள் சிலருக்கு அவள் மருந்தும், தவறாமல் தேநீரும் வெற்றிலை-பாக்கும் கொடுத்து அனுப்பி இருக்கிறாள். சீனி, உப்பு, அரிசி முதலிய பண்டங்கள் கடனாய் வாங்கவும் வருவர். ஒருவரும், என்றும் அவளைப் பற்றி அவதூறு பேசியதே கிடையாது. எனவே அன்று, கூடுதலாகப் பெண்களே வந்து காலையில் இருந்து பாடை எடுக்கும் வரை நிறுத்தாது, முறையாக, மார்பிலடித்தும் பரம்பரை ஒப்பாரிகளை இராகத்துடன் பாடியும், கண்ணீர் அஞ்சலி செய்தனர்.

அன்று வந்த ஆண்கள் கோகத்திலும், புதனின் அலுப்பிலும், இடநெருக்கடியாலும், தெருவிலும் நெடுஞ்சாலை ஓரத்திலும் வெற்றிலை, புகையிலையைச் சப்பித் துப்பிக் கொண்டும் சுருட்டுக் குடித்துக் கொண்டும் இருந்து அக் குடும்பத்தைப் பற்றிப் புகழ்ந்து அரட்டை அடித்தனர். ஏனெனில் புதனின் மண்டபம் அப்படியே இருந்தது.

நாலு குடிமக்கள் மட்டும் பாடைகட்டினர். கண்ணீர்  வற்றிய குடும்பத்தினர் நடைப்பிணங்கள் ஆகி அங்கும் இங்கும் திரிந்தனர். துரையர், தான் எவ்வாறு, சிறுவனாக, மாமிக்கும் மச்சாளுக்கும் தீட்டு நாட்களில் குளிப்பதற்கும் முழுகுவதற்கும் கிணற்றிலே தண்ணீர் அள்ளிக் கொடுத்ததையும், மாமியின் சமையலுக்குப் பின்-வேலியிலிருந்து முசுட்டை பிடுங்கிக் கொடுத்ததும், வளர்த்த கோழிகளைப் பிடித்துக் கொன்று சமையலுக்கு உரித்து வெட்டிக் கொடுக்கும் கையாளாக இருந்ததும், தான் தனியச் சாப்பிட்டும் போது அரைவாசியில் இரகசியமாக அவித்த முழு-முட்டையைத் தன் சோற்றுக்குள் புதைத்து ‘ஒருவருக்கும் காட்டாமல் சாப்பிடு’ என விசேட அன்பு காட்டியதும், பின்னர், தான் கொழும்பில் வாங்கிக் கொணர்ந்து பாவித்த வெள்ளிச் சீப்பில் மோகம் கொண்டு மாமி தனக்கெனக் கேட்டுத் தான் கொடுத்ததும், எல்லாவற்றையும் மீழாய்வு செய்து, தனிமையில் காரினுள் இருந்து கண்ணீர் விட்டார்.

தன்னுடைய சொந்தக் காதல் கலியாணத்தை நடத்த, கடுமைப் போக்கான கணவர் வெற்றியருடன் வாதாடி, காதலின் மகிமையை அறிந்து, எவ்வளவோ உதவிய காதல் தெய்வத்தை இழந்துவிட்டோமே எனத் தன் இதயத்தை உருக்கி விம்மி விம்மி அந்தப் பெரிய இராணுவ-எந்திரிக மேலதிகாரி அழுதார்.

மிச்சச் சம்பிரதாயங்கள் எல்லாம் நன்றே நடந்து, ஏழு மணிக்குப்பின் குடும்பத்தினர் கூடி, ஒரு காதல் சகாப்தம் முடிந்ததைப் பற்றியும், முக்கியமாகத் தம் தலைவியார் முதிர்ந்த வயதிலும் தன் கணவனில் கொண்டிருந்த பக்திக் காதலின் இமாலய அளவையும் வியந்தனர். ஊரார் இன்றும் நாகமுத்துவின் பதியைத் தொடர்ந்த பத்தினிச் சாவை நினைவு கூர்ந்து எல்லோருக்கும் கிடைக்காத ஒரு உதாரணமனைவி யாகப் பேசுவர்.

prof.kopanmahadeva@yahoo.co.uk