வாசிப்பும் யோசிப்பும் 58: கனடாத் தமிழ் இலக்கியமும் ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் பங்களிப்பும்.

kural_issues.jpg - 65.78 Kbகனடாத் தமிழ் இலக்கியமென்றால் ‘தாயகம்’, ‘காலம்’, ‘தேடல்’, ‘ரோஜா’, ‘பொதிகை’ போன்ற சஞ்சிகைகளும், ‘பதிவுகள்’ இணைய இதழும், ‘தாய் வீடு’, ‘ஈழநாடு’, ‘சுதந்திரன்’, ‘வைகறை’ போன்ற இலவசப்பத்திரிகைகளும், எழுத்தாளர்கள், அமைப்புகளினால் வெளியிடப்பட்ட நூல்களும் ஞாபகத்துக்கு வரும். அவை பற்றிய போதிய பதிவுகள் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எங்கும் பதிவு செய்யப்படாத (பதிவுகள் இணைய இதழ் தவிர்ந்த) ஒரு சஞ்சிகை பற்றிய பதிவு இது. அது ஒரு கையெழுத்துச் சஞ்சிகை. செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம்  ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையினை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் எடுக்கப்பட்டு, ‘டொராண்டோ’விலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் விநியோகிக்கப்பட்டன. வெளியான 11 இதழ்களில் இதழ் 9, இதழ் 10 ஆகியன கூட்டு முயற்சியாக வெளிவந்தன. ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையினை வாசித்த, எழுத்து மற்றும் வாசிப்பு ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் (சுகுமார், குலம், ஜெயராஜ், கீதானந்த சிவம்) தாங்களும் சேர்ந்து ‘குரல்’ சஞ்சிகையினை வெளியிட ஒத்துழைப்பதாகக் கூறி அவ்விரு இதழ்களையும் வெளிக்கொணர ஒத்துழைப்பு நல்கினர். அந்த இரு இதழ்களும் வடிவமைப்பில் ஏனைய இதழ்களை விடச் சிறிது சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஒத்துழைப்பே. ‘குரல்’ கையெழுத்துச்சஞ்சிகையின்  இறுதி இதழ் ஜனவரி 1989 வெளியான இதழ் 11. ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகை , கையெழுத்துச் சஞ்சிகை என்பதால், இலக்கிய ஆர்வம் காரணமாக வெளியிடப்பட்ட சஞ்சிகை.

1. குரல் சஞ்சிகையின் முதலாவது இதழில் (முதலிரு இதழ்களும் 8.5″ X 11″ அளவில் வெளியானவை; ஏனைய இதழ்கள் 5.5″ X 8.5″ அளவில் வெளியானவை)  இடம் பெற்றுள்ளவை: இதழாசிரியர் எண்ணம், அட்டைப்படக் கட்டுரை – இந்தியத்தலையீடும், தமிழர் விடுதலைப்போரும் – கிரிதரன், எனது கவிதை (புனைபெயரில்) – மீண்டும் நாம் படை சமைப்போம், தொடர்கதை – அகதிகள் – கிரிதரன்,  மற்றும்  தமிழீழச்செய்திகள். ‘இந்தியத் தலையீடும், தமிழர் விடுதலைப்போரும்’ கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

‘இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா தலையிட்டுள்ளது.  தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது. சிறிலங்கா அரசுடன் ஒப்பந்தமொன்றினைச் செய்துள்ளது. தற்காலிகமாகச் சிறிலங்காத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதே சமயம் தமிழ் மக்களிடையேயுள்ள முற்போக்குச் சக்திகள் மத்தியில் பலவகையான கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டனவா? அல்லது தமிழ் மக்களின் விடுதலைபோராட்டம் இந்தியத் தலையீட்டினால் மழுங்கடிக்கப்பட்டு விட்டதா? அப்படியானால் இந்தியாவின் தலையீட்டிற்கான பொறுப்பினை யார் ஏற்க வேண்டும்? இவ்வாறு பலவிதமான கேள்விகள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியத் தலையீடு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையையோ அல்லது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையோ (சமுதாய ரீதியிலான) தீர்க்கவில்லை என்பதுதான். ஆனால் தற்காலிகமாகத் தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது என்பதைத்தவிர வேறு எந்தவிதமான நன்மைகளையும் இவ்வொப்பந்தம் செய்ததாகத் தெரியவில்லை. தேசிய இன விடுதலைக்காகவும், வர்க்க விடுதலைக்காகவும் போராடிய தமிழ் மக்கள் இன்று உயிர் தப்பினால் புண்ணியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுப் போராட்டத்தையே மழுங்கடிக்கும் இந்நிலைக்குக் காரணம் யார்?’

2. இரண்டாவது இதழில் வெளியானவை: இதழாசிரியர் எண்ணம், அட்டைப்படக் கட்டுரை: J.R..இன் சுயரூபம், தமிழருக்கோ அவமானம்; கவிதை:  எங்கு போனார் என்னவர்? ; தொடர்கதை: அகதிகள் ; கட்டுரை – இந்தியத் தலையீடும் தமிழர் விடுதலைப்போரும் (பகுதி2)’ எழுத்தாளர் அறிமுகம்: கீதானந்த சிவம், சிவனடியான்; கவிதை – சிப்பியில் ஒரு முத்து சிரித்தது எனைப்பார்த்து – கீதானந்தசிவம் சிவனடியான்; தமிழீழச்செய்திகள்.

3. குரல் இதழ் 3 தொடக்கம் 11 வரை சிறிய அளவில் (5.5″ X 8.5″) வெளியானதால் பக்கங்களும் அதிகரித்துள்ளன. இதழ் 3இல் இடம் பெற்றுள்ளவை: இதழாசிரியர் எண்ணம், யாழ் பல்கலைக்கழக சுகந்தம் வெளியீடான எஸ்.சர்மாவின் ‘தமிழீழ விடுதலைப் போராட்டமும், இந்தியாவும்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் 3 பக்கங்களுக்கு மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.; கவிதை: ‘படைத்திடுவோம் பொற்காலம்’; அட்டைப்படக்கட்டுரை: மக்கள் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு கூர்வோம்; கவிதை: என்று வரும்?; தமீழீழச் செய்திகள்; அகதிகள் நாவல் இவ்விதழிலிருந்து காணாமல் போய் விட்டது.

4. இதழ் 4இல் இடம் பெற்றுள்ளவை: இதழாசிரியர் எண்ணம் (மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றிய அஞ்சலிக்கட்டுரை) ; கட்டுரை: ‘தமிழீழத்திலிருந்து ஒரு கடிதம்’ ;  யாழ்ப்பாணத்தில் அக்காலகட்டத்தில் மருத்துவக் கல்வி பயின்றுகொண்டிருந்த ஆசிரியரின் தங்கையிடமிருந்து பெற்ற கடிதம் ( 5 பக்கங்கள்) இந்தியப்படையினரின் போர்க்கால அடக்குமுறைகளை விபரிக்கிறது. அப்பொழுது என் குடும்பத்தவர்கள் அராலி வடக்கில் வசித்து வந்தார்கள். அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள் கீழே:

“இங்கு சரியாக சண்டை தொடங்கி ஒரு மாதத்தின்பின் Nov 8th தான் கடுமையான பயங்கரநாள். ஷெல் அடி அடி என்று அடித்தது. பின் வீட்டில் (பரமேஸ் அக்கா) செல்லத்துரை மாஸ்ட்டர் இருந்தாரல்லவா? அவர் ஷெல்லினால் செத்து விட்டார்.  … இங்கு ஒரே Tension. அவரை உடனே முன் Nurseryய்ற்கு முன்னால்தான் எரித்தவர்கள். ….. மற்றும் குலனை நடராஜா மாஸ்ட்டர், Schoolற்குக் கிட்ட ஒரு வீட்டில் தாய், தகப்பன், மகன் மூவரும் மரணமானார்கள்.  …..ஒரு மாதத்திற்கு மேல் இங்கு இடைவெளி இல்லாத ஊரடங்குச் சட்டம். இப்பத்தான் இப்படி ஊரடங்கு சட்டம் இருக்கலாம் என்பதை அறிந்துள்ளோம்….. நடை, சைக்கிள், மாட்டு வண்டி தவிர வேறு வாகனமில்லை. ….. hospiral இல் more than 80 செத்துள்ளனர்…..IPKF இன் புண்ணியம் நாங்களும் ஷெல்களைக் கண்டுள்ளோம்.  கூவென்று வரும்போது உயிர் போய் வரும்……. இரவு ஏன் வருகிறது என்றுள்ளது?….IPKF இன் ரோந்து உள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டாலும் பயமாகவுள்ளது…… இன்று வட்டுக்கோட்டையில் Guard Post  மாறுகிறதாம். இவ்வளவு நாளும் chinese மாதிரி நேபால் ஆக்கள். இனி சீக்கியராம் என்றவுடன் நேற்றே ரோட்டில் சனம் இல்லை பயத்தில். ஆறு மாதமாவது செல்லுமாம் ஓரளவு சரிவர…..’  இவ்வாறு செல்லும் கடிதம் இவ்வாறு முடிகிறது: IPKF என்றால் meaning Indian People Killing Force.”

கட்டுரை: நல்லூர் நகர அமைப்பு 16 ஆம் நூற்றாண்டில்; கவிதை: அன்றும், இன்றும் – தீவகன் (புங்குடுதீவு ஜெயகாந்தன்); கவிதை: வாழ்க்கை இது பொய்யடா – கீதானந்தசிவம்; நூல் விமரிசனம் – ஒரு தெருப்பாகனின் பாடல்கள் – வ.ந.கி; கவிதை: தை பிறக்க வழி பிறக்க; உரையாடல்: தமிழீழ விடுதலை இயக்க அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன். இதழ் 3இல் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இருவருடன் நடைபெற்ற உரையாடல் இடம் பெற்றிருந்தது. இதழ் 5இல் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினருடன் நடைபெற்ற உரையாடல் இடம் பெற்றுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் முயற்சி செய்தபோது அதற்கான சாத்தியம் அக்காலகட்டத்தில் ஏற்படாமல் போனதால் அவர்களுடனான உரையாடல் இடம் பெறவில்லை.

5. இதழ் 5இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. J.R.. உடன் ரு பேட்டி- காண்பவர் குருவியார் (3 பக்கக் கட்டுரை); கவிதை: விடை தெரியாப் புதிர் நாடி; கட்டுரை: பல்லவராஜன் காட்டில் ஒரு பொழுது; கவிதை: வேண்டும் விடுதலை  – கீதானந்தசிவம் -; கவிதை: கோடுகளைத் தாண்டுங்கள்; கவிதை: ஒரு புறா.. – முரளி; கவிதை: காடு – பாரதியார்; உரையாடல்; கட்டுரைத்தொடர் – பிரபஞ்சப் புதிர்கள் – வ.ந.கி; கவிதை: எங்கே தவழ்ந்த மண் – புங்குடுதீவு ஜெயகாந்தன்; கட்டுரை: தமிழக அரசியல் ஒரு கண்ணோட்டம் – தரன்.

6. இதழ் 6இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம் – எங்கே நாம் தவறிழைத்தோம்; கவிதை: மனம் – கீதானந்தசிவம்; புதிய தொடர் நாவல் – மண்ணின் அடிமைகள் – வ.ந.கிரிதரன்; கவிதை: இனி ஒரு தொல்லை இல்லை- பாரதியார்; கடிதம் – தமீழீழத்திலிருந்து ஒரு கடிதம் (7 பக்கங்கள்; இரு கடிதங்களின் தொகுப்பு; எழுதியவரின் பெயர் அன்றிருந்த அரசியக் சூழல் காரணமாகக் குறிப்பிடப்படவில்லை. அக்கடிதங்களை எழுதியவர்: எஸ்.கே.விக்கினேஸ்வரன்); கவிதை: மலர்வது ஒரு மலரல்லவோ – யோகலிங்கம்; நூல் விமர்சனம்: சேரனின் இரண்டாவது சூரிய உதயம் ;கட்டுரைத்தொடர் – பிரபஞ்சத்துப் புதிர்கள் 2; ஆசிரியருக்குக் கடிதம், எழுதியவர்: ஜெயராஜ் (ஸ்கார்பரோ)

7. இதழ் 7இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; கவிதை: யார்? – கீதானந்தசிவம்;  தொடர் நாவல் – மண்ணின அடிமைகள் 2 – கிரிதரன்; கவிதை: அமைதி பிறக்கட்டும்; கலை நிகழ்வு பற்றிய விமரிசனம் – ‘நதியும், நிதியும்’ ஒரு கண்ணோட்டம் – K.V..லிங்கம்; கவிதை: நெஞ்சின் குரல்’ எஸ்.வி.ராஜதுரை, பி.சிங்கராஜா ஆகியோரில் மொழிபெயர்ப்பில் வெளியான ‘புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும், மக்கள் படையும்’ – ஜெனரல் கியாப்’ நூலிலிருந்து சில பகுதிகள் மீள்பிரசுரம்; கவிதை: புதுமைப்பெண் – பாரதியார்; கவிதை – கனிமொழியாள் காவியம் – எஸ்.யோகலிங்கம்; கட்டுரை – பாரதி கருத்து  முதல்வாதியா? பொருள் முதல்வாதியா?; கட்டுரைத்தொடர் – பிரபஞ்சப்புதிர்கள் 3; ஆசிரியருக்குக் கடிதம்- சதாசிவம் சுந்தரலிங்கம் (ஸ்கார்பரோ).

8. இதழ் 8 இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; தொடர் நாவல் – மண்ணின் அடிமைகள் 3 – கிரிதரன்; கட்டுரை – சிந்திப்பாய் தமிழா! எஸ்.வி.ராஜதுரை, பி.சிங்கராஜா ஆகியோரின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும், மக்கள் படையும்’ – ஜெனரல் கியாப்’ நூலிலிருந்து சில பகுதிகள் மீள்பிரசுரம்.

9. இதழ் 9இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; உங்களுடன் ஒரு நிமிடம் – நிர்வாக ஆசிரியர் – சுகுமார்; கட்டுரை – அன்னையின் மாண்பு – குலம்; தொடர் நாவல் – மண்ணின் அடிமைகள் 4 – கிரிதரன்; கவிதை – புரியாத… கீதானந்தசிவம்; சிறுகதை – கறை படிந்த கம்பிகள் – குகன்; கட்டுரை – ஜெயராஜ்;  குறுங்கட்டுரை – யாருக்கு வேண்டும் இந்தச் சுதந்திரம் – சங்கிலியன்; மாணவர் உலகம்; பின் அட்டைக் கேலிச்சித்திரம் – ஜெயராஜ்.

10. இதழ் 10இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; உங்களுடன் ஒரு ‘நிமிடம்’ – சுகுமார் (நிர்வாக ஆசிரியர்); கவிதை – நிலவே நீ … கீதானந்தசிவம்; கவிதை – சாம்பல் மேட்டில் .. – ராஜா-; தொடர் நாவல் – மண்ணின் அடிமைகள் 5 – கிரிதரன்; மாணவர் உலகம்;  நெடுங்கவிதை – நான் சாவித்திரியல்ல… -விஸ்வலோகநாதன்; சிறுகதை – நிகழ்வும், நியதியும் – பிரியா-; கட்டுரைத் தொடர் – பிரபஞ்சப் புதிர்கள்; பின் அட்டைக் கேலிச்சித்திரம் – பாலி -;

11. இதழ் 11; இதுவே ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் இறுதி இதழ்: இதழாசிரியர் எண்ணம், மாணவர் மலர் (கட்டுரை – பொங்கல் திருநாள் – வாண்டு; கவிதை – முயல் – வாண்டு); கட்டுரை – ஒற்றுமையின் அவசியம்; தொடர் நாவல் – மண்ணின் அடிமைகள் 6 – கிரிதரன்; கவிதை- எழுத்தெனும் .. – அறிஞர் அ.ந.கந்தசாமி -; கட்டுரை – முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி .. அ.ந.கந்தசாமி – தரன்; கவிதை: கறுப்பு என்றாலும் வடிவு – சலீமா-; உங்கள் சிந்தனைக்கு: அருளரின் ‘லங்கா ராணி’யிலிருந்து சில பகுதிகள் மீள் பிரசுரம்; கட்டுரை: மக்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் – கபிஜான்;