முற்றுப் பெறாத உரையாடல்கள் – 6 : பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்

கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வின் முதலாவது நிகழ்வினை கவிஞர் நா.சபேசன் நெறிப்படுத்தினார். இதில் முதலாவதாக ஜிப்ரி ஹாசனின் படைப்புலகமாக அவரது மூன்று நூல்களான ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’ என்ற சிறுகதைத்தொகுதியும் ‘மூன்றாம் பாலினத்தின் நடனம்’ என்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பும் ‘விரியத் துவங்கும் வானம்’ விமர்சன நூலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவை குறித்து அறிமுகம் செய்யுமாறும் நான் கேட்கப்பட்டிருந்தேன். மூன்று நூல்கள். எனக்கு 25 நிமிடங்கள் தரப்பட்டிருந்தது. ஒரு வகையாக 35 நிமிடங்கள் வரை எடுத்து பேசி முடித்தேன். ஜிப்ரி ஹாசன் இன்று கிழக்கிலங்கையின் முக்கியமான படைப்பாளி, விமர்சகர், மொழி பெயர்ப்பாளர். அவரது படைப்புலகம் குறித்து இங்கு ஓரிரு வார்த்தைகளில் எழுதி முடித்து விட முடியாது. அவரது இந்த மூன்று நூல்களும் இன்று ஈழத்தில் பலராலும் விதந்துரைக்கப்படுகின்ற முக்கியமான நூல்கள் என்பதினை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அடுத்த நிகழ்வாக அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதைத்தொகுதி குறித்து ஹரி இராஜலெட்சுமியும் பாத்திமா மஜிதாவும் உரை நிகழ்த்தினார்கள். ஹரி ‘அனோஜனின் சிறுகதைகளில் ஆண்களும் எதிர்பாலின ஒழுங்கு சீர்திருத்தங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தன்னுரையில் போரின் தரிசனங்களை சாட்சியங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சயந்தன், யோ.கர்ணன், போன்றவர்களின் கதைகளில் இருப்பதாகவும் அது வாசிக்கும் போது களைப்பினை ஏற்படுத்துவதாகவும் ஆனல் அனோஜன் அதிலிருந்து விலகி அக உணர்வுச் சிக்கல்களை அழகாகவும் தத்ரூபமாகவும் வெளிப்படுத்துகிறார் எனவும் ஆயினும் இவரது கதைகளிளும் போரின் சாட்சியங்கள் அரூப தரிசனங்களாக வெளிப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.  

மாஜிதா அனோஜனின் இரு சிறுகதைகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சிறப்பான ஒரு உரையொன்றினை நிகழ்த்தினார். அவர் தனதுரையில் அனோஜனின் சிறுகதைகள் அனைத்துமே அதீதமான பாலியல் சித்தரிப்புக்கள் நிறைந்ததாகவும் சில கதைகள் படிக்கவே முடியாத படி விரசங்கள் நிறைந்ததாக இருந்துள்ள போதிலும் அவர் எடுத்துக்கொண்ட கருக்கள் குறித்தோ பேசு பொருட்கள் குறித்தோ தனக்கு எந்தவித மறுதலிப்பும் இல்லை என்றும் அவர் எமது சமூகத்தில் உள்ள கீழ்மைகளையும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்துமே வெளிப்படையாகப் பேசுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து பிரமிளா பிரதீபனின் ‘கட்டுப்பொல்’ நாவல் அறிமுகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நெறிப்படுத்திய சபேசன் இந்நாவலானது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையான கோப்பி, இறப்பர், பருத்தி, தேயிலை என்பவற்றிட்கு பின் இறுதியாக இன்று Arpico Company இனரால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுபொல் எனப்படும் செம்பனை பயிர்ச் செய்கையால் மலையக மக்கள் எப்படி கொடிதினும் கொடிதாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர்களது கொடிய வாழ்வு பற்றிய தகவல்களையும் மிகச் சிறந்த முறையில் இலக்கியமாக சித்தரிக்கின்றது என்று குறிப்பிட்டார்.  

இந்நூல் குறித்து உரையாற்றிய மு.நித்தியானந்தன் அவர்கள் தனது உரையில் ’கட்டுப்பொல்’ என்பது உண்மையில் பாமாயில் மரத்தின் ஒரு சிங்கள பதம் என்றும் இதன் உண்மையான தமிழ் பெயர் செம்பனையாக இருந்துள்ள போதிலும், பிரமிளா பிரதீபன் ’கட்டுப்பொல்’ என்ற சிங்கள் சொல்லையே தனது நாவலிற்கு சூட்டி, பல நூற்றாண்டு காலமாக தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வந்த மலையக சமூகம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மயமாக்கப்படும் அவலத்தை ஒரு குறியீடாக சுட்டி நிற்கிறார் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் நூற்றாண்டு காலமாக மலையக சமூகம் அனுபவிக்கின்ற அவலங்கள், கஷ்டங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் எதிலும் இன்று வரை எத்தகைய மாற்றங்கள் எதுவும் இல்லையென்றும் இச்சபிக்கப்பட்ட மனிதர்களின் அவல வாழ்க்கையினை இந்நாவல் சிறப்பாகச் சித்தரிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.  

கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இரண்டாவது அமர்வில் டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜாவின் ‘மனநோய்களும் மனக்கோளாறுகளும்’ நூல் குறித்து இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி டாக்டர். தம்பிராஜா அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வரமுடியாமல் போனது கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்தது.  

மூன்றாவது அமர்வானது ‘ஷோபா சக்தியின் படைப்புலகம்’ குறித்ததாக அமைந்திருந்தது. அதனை ஆரம்பித்து வைத்த எம். பௌசர் அவர்கள், தமிழகத்தில் புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், பிரமிள், பிச்சமூர்த்தி, போன்ற ஆளுமைகள் குறித்து வெளிவந்த ஆய்வுகள், விமர்சனங்கள், விமர்சன நூல்கள் போன்று ஈழத்தில் இதுவரை வெளிவரவில்லை என்றும் முதலில் ஷோபா சக்தியின் படைப்புலகம் குறித்து ஒரு முறையான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமென்றும் இது குறித்து தான் பலதரப்பட்டவர்களுடனும் பலமுறை பேசி வந்துள்ளதாகவும் இதுவரை எதுவும் சாத்தியம் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டார். பின்பு கஜன் காம்ப்ளரின் நெறிப்படுத்தலின் கீழ் அனோஜன் பாலகிருஷ்ணன் ‘ஷோபா சக்தியின் படைப்புலகம்’ குறித்து பேசினார்.  

அவர் ஷோபாவின் ஆரம்பகால படைப்புக்களில் இருந்து இறுதியாக எழுதிய நாவல்கள் வரையான படைப்புக்களை கவனத்தில் எடுத்து ஒரு நீண்ட உரையொன்றினை ஆற்றினார். வன்முறையில் அலைக்கழிக்கப்பட்ட மனிதர்களின் மனங்களை மிக கச்சிதமாக கையாளும் ஷோபா சக்தி, எந்த ஒரு கால கட்டத்திலும் ஈழத்தில் போர் கால சூழலில் வாழ்ந்திராத போதும் தனது படைப்புகளில் போர் சூழல் குறித்த நுட்பமான நம்பகத் தன்மையான தகவல்களை அள்ளி வழங்குவதின் மூலம் ஒரு படைப்பாளியாக வெற்றி பெறுகிறார் என்று குறிப்பிட்டார். அத்துடன் அவர் கு.ப.ரா., கு.அழகிரிசாமியின் தொடர்ச்சியாக ஷோபா சக்தியைப் பார்த்ததும் ஷோபா சக்தியின் தொடர்ச்சியாக சயந்தனை குறிப்பிட்டதும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஏற்றுக் கொள்ள முடியாமலும் இருந்தது. இறுதியில் அவர் ஷோபா சக்தி புலி எதிர்ப்பு என்ற போர்வையில் தனது படைப்புக்களை படைத்து பெயர் பெற்றிருந்தாலும் அவரிடம் பல்வேறு விதமான தமிழ்த்தேசியத்தின் கூறுகள் ஒட்டிக் கொண்டிருப்பதாகவும் தான் வாழும் சம காலத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தி இறக்க நேர்ந்தால் “ஷோபா சக்தி என்னும் தமிழ்த்தேசியவாதி” என்னும் தலைப்பில் தான் அஞ்சலி கட்டுரை எழுதுவேன் என்றும் தெரிவித்தார். .

நிகழ்வின் இறுதியில் பங்கு பற்றியோர் அனைவராலும் காத்திரமான உரையாடல் ஒன்று நிகழ்த்தப்பட்டது. உரையாடல் முழுவதும் இலக்கியம் குறித்ததான விவாதமாக கலாமோகன், எஸ்.பொ., ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம் என்பவர்களது படைப்புக்கள் குறித்த காரசாரமான காத்திரமான உரையாடலாக எல்லைகளற்று ஒரு பரந்த தளத்தில் விரிவடைந்திருந்தது என்பதினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.  

மிகவும் திருப்திகரமாகவும் மனதிற்கு நிறைவாகவும் அமைந்திருந்தது நிகழ்வு. மனமகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.

கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

அடுத்த நாள் காலை இந்நிகழ்வு குறித்து நண்பர்கள் தெரிவிக்கும் கருத்தினை அறியுமுகமாக சமூகவளைத் தளங்களை பார்வையிட்டேன். கஜன் காம்ப்ளர் தனது முகநூல் பதவில் பின்வருமாறு எழுதியிருந்தார். “நேற்று ஷோபாசக்தியின் படைப்புலகம் என்ற தலைப்பில் அனோஜன் பாலகிருஷ்ணன் பேசும்பொழுது, தான் வாழும் சம காலத்தில் எழுத்தாளர் ஷோபாசக்தி இறக்க நேர்ந்தால் ‘ஷோபா சக்தி என்னும் தமிழ்த்தேசியவாதி’ என்னும் தலைப்பில் தான் கட்டுரை எழுதவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

அனோஜனின் கட்டுரை வெகு விரைவில் வெளிவர ஆவண செய்யுமாறு ஷோபா சக்தியை இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.”

இத்தகைய சுவாரஷ்யங்களால்தான் இலக்கியம் இன்னும் உயிர் வாழ்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.

vasan456@hotmail.com