தொடர் நாவல்: மனக்கண் (6)

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  

தொடர் நாவல்: அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'அறிஞர் அ.ந.கந்தசாமிஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]  –  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீரெனக் கோட்டைக்குப் போய் ஓவியம் வரைவதற்கு வேண்டிய சில பொருள்களை வாங்க வேண்டுமென்ற நினைவு வர, டாக்ஸி டிரைவரிடம் கோட்டைக்குப் போகும் படி உத்தரவிட்டான். ஏற்கனவே அவன் கொண்டு வந்திருந்த வண்ண மைகளும், ஓவியத் தாள்களும் தீர்ந்து போயிருந்ததால் அவன் அவற்றை இன்று சற்று அதிகமாகவே வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக ஸ்ரீதரின் பொழுதுபோக்குக் கலைகளில் சித்திரம் எழுதுவது முக்கியமான ஒன்றேயாயினும் இன்று அவன் அதில் இவ்வளவு நினைவாயிருந்ததற்குப் புதிய காரணம் ஒன்றும் இருக்கிறது.  தன் காதலி பத்மாவின் படமொன்றைத் தன் கையால் எழுத வேண்டுமென்று அவன் “ஐஸ்கிறீம் பார்லரி”ல் தனக்குள் முடிவு செய்திருந்ததே அது.

 பத்மாவின் மது விழிகளும், அவற்றுக்கு மேலெல்லையாகக் கோதண்டம் போல் விளங்கிய அவளது வளைந்த புருவங்களும், அப்புருவங்களுக்கும் அவளது வண்டு விழிகளுக்குமிடையே துடிதுடித்துக் கொண்டிருந்த மயிரடர்ந்த பூவிதழ் போன்ற இமை மடல்களும் அன்று அவனை முன்னெப்போதுமில்லாத அளவுக்குக் கவர்ந்திருந்தன. காதல் வயபட்ட ஓர் ஆணின் கண்களிலே, ஒரு பெண்ணின் அழகு பார்க்குந்தோறும், புத்தெழில் பெற்றுப் பொலிகிறது. நல்ல கவிதையை வாசிக்க வாசிக்க, அதில் புதிய நயங்கள் தோன்றுவது போலக் காதற் கன்னியையும் பார்க்கப் பார்க்கப் புதிய அழகுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. “அவள் புறங்கை எவ்வளவு அழகாயிருக்கிறது! அவள் விரல்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன! அவள் நெற்றியில் காணப்படும் பூனை மயிர் கூட எவ்வளவு அழகு! நேற்று நான் அவற்றைக் காணாமல் கண்ணிருந்தும் குருடனாயிருந்ததற்குக் காரணம் என்ன? அவள் பால் எனக்குள்ள காதல் போதிய அளவு வளர்ச்சி பெறாததா?  அப்படியானால், நான் குற்றமுடையவனல்லவா?” என்று கூடக் காதலர்கள் தாபமடைவதுண்டு. பத்மாவைப் பொறுத்த அளவில் ஸ்ரீதரும் அவளிடத்துத் தினந்தோறும் ஒரு புதிய அழகைக் காணக் கூடிய காதற் பரவச நிலையிலேயே இருந்தான். “ஐஸ்கிறீம் பார்ல”ரில் வெகு அருகில் அமர்ந்து அவளது அழகைப் பல கோணங்களிலிருந்தும் அள்ளிப் பருகிய அவன், அவளைத் தெவிட்டாத பேரழகை ஓவியமாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். அந்த ஆசை தான் அதற்கு வேண்டிய பொருள்கள் யாவற்றையும் உடனே சித்தம் செய்யும்படி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. கோட்டைக்குப் போய் ஒன்றுக்குப் பதில் நாலு கடைகளில் ஏறி இறங்கி, அவற்றை வாங்கிக் கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்த பொழுது சரியாக மணி இரண்டாகி விட்டது. வேலைக்கார சுப்பையா கேட்டைத் திறந்து டாக்ஸியை பங்களா வளவுக்குள் அனுமதித்து, அதிலுள்ள சாமான்களை எடுக்க, ஸ்ரீதர் டாக்சிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பங்களாவுக்குள் நுழைந்த பொழுது, அங்கே அவனை வரவேற்க, இன்பமான செய்தி ஒன்று காத்திருந்தது.

விறாந்தையில் நின்று கொண்டிருந்த சுரேஷ் “ஸ்ரீதர்! நான் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டேன். அதுவும் முதலாம் பிரிவில்!” என்றான் எக்களிப்போடு.

ஸ்ரீதருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தன் நண்பனின் வெற்றியைத் தனது வெற்றி போல் நினைத்து மகிழ்ந்த அவன் “அடி சக்கை! அப்படியானால் இந்த வெற்றியைக் கொண்டாட நாமிருவரும் இன்று படம் பார்க்கப் போக வேண்டும்” என்றான்.

“ஆகட்டும்” என்று தலை அசைத்தான் சுரேஷ். சுரேஷின் இப்பதில் ஸ்ரீதருக்கும் மிகுந்த களிப்பைத் தந்தது. படம் பார்க்கப் போகும் வழியிலும், திரும்பும் போதும் பத்மா சம்பந்தமான யாவற்றையும் சுரேஷிடம் பேசித் தீர்ந்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்ததே அதற்குக் காரணம். ஸ்ரீதர் “சுரேஷ்! நீ பரீட்சையில் சித்தியடைந்து விட்டாய். ஆகவே இனி மேல் நான் உன்னைச் சும்மா சுரேஷ் என்று அழைக்கக்கூடாது. டாக்டர் சுரேஷ் என்று அழைக்க வேண்டும். கனம் டாக்டர் அவர்களே! இந்தச் சுப செய்தியைத் தாங்கள் தங்கள் அன்னையாருக்கும் அத்தை மகளுக்கும் அறிவித்துவிட்டீர்களா!” என்றான் கேலியாக.

“அதெல்லாம் காலையிலேயே தந்தி அடித்து விட்டேன். முதலில் மாமாவுக்கும் அத்தை மகளுக்குந்தான் தந்தி கொடுத்தேன். அவர்கள் என் விஷயத்தில் போட்ட முதலீடு நல்ல பங்குப் பணத்தைத் தந்துள்ளது என்பதை அறிவிக்க வேண்டியது என் கடனல்லவா? அம்மாவைப் பொறுத்தவரையில் நான் பாஸென்றாலும் பெயிலென்றாலும் நான் அவள் பிள்ளை. மாமாவுக்கோ நான் பாஸ் பண்ணினால் தானே டாக்டர் மாப்பிள்ளை! உண்மையில் நான் பரீட்சையில் தோற்றிருந்தேனானால் மாமாவின் பணத்தை மோசடி செய்தது போன்ற பெரிய குற்ற உணர்ச்சி எனக்கேற்பட்டிருக்கும்.” என்றான் சுரேஷ்.

 “ஆனால் நிச்சயம் அவர் அப்படி எண்ணியிருக்க மாட்டார்.” என்றான் ஸ்ரீதர்.

 சுரேஷ், “அதை எப்படி நாம் அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும்? ஆனால் அந்தப் பிரச்சனைக்கே இப்போது இடமில்லை. நான் தான் முதலாம் பிரிவில் வெற்றி பெற்று விட்டேனே!” என்று கூறிவிட்டு, காதற் கதை கேட்கும் ருசியில் “ஸ்ரீதர்! பத்மாவை இன்று கண்டாயா? என்ன சொன்னாள்?”

 ஸ்ரீதர், “அதெல்லாம் பெரிய கதை. இன்று நான் அவனைப் பம்பலப்பிட்டி ‘எஸ்கிமோ’வுக்குக் கூட அழைத்துச் சென்றேன். எல்லா விவரங்களும் பின்னர் சொல்லுகிறேன். நீயோ மூக்கு முட்டச் சாப்பிட்டிருக்கிறாய். எனக்கோ கடும் பசி என்று சொல்லிச் சாப்பாட்டு மேசைக்குத் தாவிச் சென்றுவிட்டான். காலையில் பத்மாவுடன் ஐஸ்கிறீம் அருந்திய பிறகு வேறொன்றும் உண்ணாததால் வயிற்றைக் காந்தும் கடும்பசி  அவனுக்கு!

 சாப்பாட்டிற்குப் பிறகு நண்பர் இருவரும் விறாந்தையிலே மின்விசிறியின் கீழ் உண்ட களைப்புத் தீர இளைப்பாறினார்கள்.

 “சுரேஷ்! நீ இங்கிலாந்துக்குப் போவதற்கு உனக்கு நல்ல “சூட்”டொன்றைப் பரிசளிக்க விரும்புகிறேன். எப்படிப்பட்ட சூட் வேண்டும்?”  என்றான் ஸ்ரீதர்.

 “பரிசு எப்படி இருக்க வேண்டுமென்பது பரிசளிப்பவரின் மனதைப் பொறுத்தது. நானே எனக்கு இது வேண்டுமென்று கூறி, அதைத் தரும்படி உன்னிடம் கேட்டால், அது பரிசல்ல, பிச்சையாகும்.” என்றான் சுரேஷ்.

 ஸ்ரீதர், “அதுவும் சரிதான். அப்படியானால் நானாகவே உனது தோற்றத்துக்கு ஏற்ற சூட்டொன்றைத் தெரிந்தெடுத்துவிடுகிறேன். ரூபா எழுநூற்றைம்பது பெறுமதியான “டெர்லீன்” சூட்டொன்றையும் உயர்தரமான கைக் கடிகாரம் ஒன்றையும் வாங்கித் தருகிறேன்.” என்றான்.

 சுரேஷ் திகைத்துவிட்டான். “எழுநூற்றைம்பது ரூபாவா? பணத்திற்கு எங்கே போவாய்? அப்பாவிடம் கேட்டு வாங்கப் போகிறாயா? எனக்குப் பரிசளிப்பதற்காக நீ அப்பாவிடம் பணம் கேட்கக்கூடாது” என்றான் அவன்.

 ஸ்ரீதர், “அதற்கு அவசியமே இல்லை. என்னிடம் எனது சொந்தப் பணம் ஏராளமிருக்கிறது. உனக்குச் செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேள். தருகிறேன்.” என்றான்.

 “சொந்தப் பணமா!” என்றான் சுரேஷ் ஆச்சரியத்துடன்.

 “ஆம். எங்களுக்குச் சொந்தமான தேயிலை, ரப்பர்த் தோட்டங்கள் கண்டியிலும் காலியிலும் இருக்கின்றனவல்லவா? அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை அப்பா ஹரிசன் கம்பெனியின் பொறுப்பில் விட்டிருக்கிறார். நிர்வாக வேலைகளுக்காக அவர்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறார்கள். எஞ்சிய பணத்தில் மாதம் ஆயிரம் ரூபாவை எனது வங்கிக் கணக்குக்கும், இன்னோர் ஆயிரம் ரூபாவை அம்மாவின் கணக்குக்கும் எங்கள் கைச் செலவுக்காக அனுப்புகிறார்கள். அப்பாவின் உத்தரவு அது. மிச்சப் பணம் அப்பா கணக்குக்குப் போகிறது.” என்றான் ஸ்ரீதர்.

 “அப்படியா விஷயம்? இது எனக்கு முன்னர் தெரியாது. நீ அப்பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டான் சுரேஷ்.

 “என்ன செய்வது? அது தன் பாட்டில் கிடக்கிறது – இடையிடையே நான் எடுக்கும் இருநூறு முந்நூறு ரூபாய்களைத் தவிர்த்து, வேலைக்காரன் சம்பளம், டிரைவர் சம்பளம் தொடக்கம், வீட்டுச் செலவு, மின்சாரச் செலவு, பெட்ரோல் செலவு வரை அப்பா கட்டி விடுகிறார். ஆகவே எனது வங்கிக் கணக்கில் இப்பொழுது பல ஆயிரக் கணக்கான ரூபா இருக்க வேண்டும்.” என்றான் ஸ்ரீதர்.

 சுரேஷ் சிரித்துக் கொண்டு “நீ செல்லப்பிள்ளை. ஆனால் ஒன்று நீ சிகரெட் குடிப்பதில்லை. மதுபானம் அருந்துவதில்லை. மற்றப் பணக்காரப் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது நீ உயர்தரமானவன்” என்றான்.

 ஸ்ரீதர், “என்ன, ஒருவன் மதுபானம் அருந்தாவிட்டால், சிகரெட் குடிக்காவிட்டால், உயர்ந்தவனாகி விடுவானா? நான் ஒரு மனிதன் உயர்ந்தவனாக வேண்டுமென்றால், சாக்ரட்டீஸ் போல் அல்லது மகாத்மா காந்தி போல ஏதாவது பெரிய காரியம், செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.” என்றான்.

 சுரேஷ், “அதுவும் சரிதான். ஆனால் நீ மற்றவர்கள் போல் மதுபானம் அருந்த நினையாததற்குக் காரணம் என்ன?” என்றான்.

 “அதுவா? எந்த மதுபானமும் வாய்க்கு ருசியாக இல்லாதிருப்பதே அவற்றை நான் அருந்தாததற்குக் காரணம். சாராயம் தொடக்கம் விஸ்கி வரை எல்லாமே ஒரே கசப்பாகத்தானே இருக்கின்றன. சர்பத், பழரச பானங்கள், ஐஸ்கிறீம், பால் இவற்றின் சுவைதான் எனக்குப் பிடிக்கிறது. அதுதான் வேண்டிய நேரமெல்லாம் அவற்றைத் தாராளமாக அருந்துகிறேன்” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷிற்கு ஸ்ரீதரின் விளக்கம் பொருத்தமாகப் பட்ட போதிலும், விநோதமாக இருந்தது. அறிஞர் பெர்னாட்ஷா எங்கோ கூறியிருப்பது போல, இவ்வுலகில் உண்மையைப் போல விநோதமானதும் புதுமையானதும் வேறு இல்லை. பொய்மையின் நடுவே உண்மை விநோதப் பொருளாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்?

 “ஸ்ரீதர்! மதுபானம் அருந்தாததற்கு நீ சொன்ன விளக்கம் சரி. ஆனால் சிகரெட் குடிக்காததற்கு என்ன காரணம்?” என்றான் சுரேஷ்.

 “மற்றவர்களின் சிகரெட் குடிப்பதற்கு என்ன காரணமோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் சிகரெட் குடிக்காததற்குக் காரணம், அது என் கையைச் சுட்டு விடுவதாகும். சில சமயம் சட்டையையும் சுட்டு விடுகிறது. இன்னும் அதன் சாம்பல் சட்டைகளைப் போட்ட உடனேயே அழுக்கடையச் செய்துவிடுகிறது. அதற்காக உடனே புதுச் சட்டையைப் போட்டுக் கொள்ளலாமென்றால் ஒரு நாளுக்கு எத்தனை தாம் சட்டையை மாற்றுவது? என் சோம்பல் அதற்கு இடமளிக்க வில்லை” என்றான் ஸ்ரீதர்.

 சுரேஷிற்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. “ஏன் சிரிக்கிறாய்? நான் சொல்வது உண்மையில்லையா?” என்றான் ஸ்ரீதர்.

 “உண்மைதான். ஆனால் பொய் நிறைந்த உலகத்தில் உண்மையைப் போல் பெரிய ஹாஸ்யம் வேறில்லை. அதுதான் சிரிக்கிறேன்” என்று மேலும் சிரித்தான் சுரேஷ்.

 ஸ்ரீதர், “நான் சிகரெட் குடிக்காததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சிகரெட் பிடித்தால் புற்றுநோய் உண்டாகுமென்று பல நிபுணர்கள் கூறியிருப்பதாகப் பத்திரிகைகளில் வாசித்தேன்” என்றான்.

 “அவை எல்லாம் சுத்தப் பொய். ஒரு சில டாக்டர்கள் அப்படிச் சொன்னால், இன்னும் பலர் புற்றுநோய்க்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள். உண்மையில் சிகரெட்டை ஒரு போதும் உபயோகியாத பல பெண்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்” என்றான் சுரேஷ்.

 ஸ்ரீதர், “இருக்கலாம். ஆனால் நீ கூறும் டாக்டர்களின் யார் சரி? அந்தப் பிரச்சினையைத் தீர்க்க எனக்குச் சக்தி போதாது. ஆகவே ஏன் ஆபத்தான வழியில் செல்ல வேண்டுமென்று சிகரெட் பிடிப்பதையே தவிர்த்துக் கொண்டேன். எனக்கு வாழ்வதில் ஆசை. அதனுடன் என் கைகளைச் சுட்டுக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.” என்றான்.

 சுரேஷ், “ஸ்ரீதர்! ஆயிரம் ரூபா வருமானமுள்ள நீ சிகரெட் பிடிக்காமலும், மதுபானம் அருந்தாமலுமிருக்க, ஐம்பது அறுபது ரூபா வருமானமுள்ளவன் அவற்றை எவ்வளவு அவாவுடன் உபயோகிக்கிறான், பார்த்தாயா?” என்றான்.

 ஸ்ரீதருக்குச் சுரேஷின் இவ்வார்த்தைகள் ஆச்சரியத்தை ஊட்டின.

 “சுரேஷ்! நீ சொல்வது எனக்கொன்றுமே விளங்கவில்லை. பணமிருக்கிறதென்பதால் தனக்குப் பிடித்தமில்லாத பானங்களையும் சட்டையை அழுக்காக்கும் சிகரெட்டுகளையும் ஒருவன் உபயோகிக்க வேண்டுமா? பணத்துக்கும் இவற்றுக்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒருவனது மூளைக்கும் இவற்றுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கூறினால் ஒரு வேளை ஒத்துக் கொள்வேன். முறையாக வேலை செய்யும் மூளை உள்ளவன் எவனும் இவற்றை உபயோகிக்கமாட்டான்” என்றான் ஸ்ரீதர்.

 அதற்குச் சுரேஷ், “ஒருவனிடம் பணம் குறைவாயிருந்தால், மூளையும் குறைவாகத் தான் வேலை செய்யுமோ, என்னவோ? நீ பரம்பரைப் பணக்காரனாய்ப் பிறந்து பணத்திலே புரள்வதால் பணத்தின் நன்மைகள் உனக்குத் தெரியவில்லை. அதை உனக்கு எடுத்துச் சொல்வதும் கடினம்தான்.” என்று பதிலளித்தான்.

 ஸ்ரீதர், “சிகரெட் பிடிப்பது பற்றிய இந்தத் தத்துவ ஆராய்ச்சியை வேறொரு நேரத்துக்கு வைத்துக் கொள்ளுவோம். இப்பொழுது கை மேலிருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவோமோ? பரீட்சையில் சித்தி அடைந்ததற்காக நான் உனக்களிக்கும் பரிசு போக, நீ இங்கிலாந்துக்குப் போவதற்கு உனக்கேதாவது பணம் வேண்டுமா? எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்றான்.

 சுரேஷ், “ஸ்ரீதர்! பணம் என்பது இவ்வுலகில் ஒருவரிடமிருந்து ஒருவர் இனாமாகப் பெறும் பொருளல்ல. அதனால் கொடுப்பவனை விட வாங்குபவன் தன் கணிப்பிலேயே இழிந்த மனிதனாகி விடுகிறான். இவ்வுலகில் ஒருவனுக்கு அதை விடப்  பெரிய நஷ்டம் வேறென்ன? பணத்தை ஒவ்வொருவனும் தானே முயன்று சம்பாதிக்க வேண்டுமென்பதே உலக நியதி. சங்க நூலொன்றில் கூட இது பற்றி ஒரு பாட்டிருக்கிறது. நீ கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டான்.

 ஸ்ரீதர் “இல்லை” என்று தலையாட்டினான்.

 சுரேஷ் பாட்டை ஓதிக் காட்டினான்.

 “ஈ என இரத்தல்
 இழிந்தன்று அதன் எதிர்
 ஈயேன் என்றல்
 அதனினும் இழிந்தன்று
 கொள் எனக் கொடுத்தல்
 உயர்ந்தன்று, அதன் எதிர்
 கொள்ளேன் என்றல்
 அதனினும் உயர்ந்தன்று”

 “புறநானூற்”றில் வரும் இப்பாட்டின் பொருள் என்ன  தெரியுமா? தருவாய் என்று கேட்டல் இழிந்தது. அதற்குத் தர மாட்டேன் என்று பதில் கூறுதல் அதனினும் இழிந்தது. இதனைப் பெற்றுக்கொள் என்று வாரிக் கொடுத்தல் உயர்ந்தது. ஆனால் அதை வேண்டாமென்று மறுத்தல் அதனினும் உயர்ந்தது. அதாவது ஈ என்று இரத்தல் கூடாது. கொள் என்று தந்தாலும் வாங்கக் கூடாது. தனக்கு வேண்டிய பொருளைத் தானே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே பொருள்” என்று பாட்டை ஓதிப் பயனும் கூறினான் சுரேஷ்.

 ஸ்ரீதர், “சுரேஷ்! நீ ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். அரசியல் தொடக்கம் இலக்கியம் வரை இந்த உலகத்தையே கரைத்துக் குடித்திருக்கிறாய். இவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள உனக்கு எப்படித்தான் அவகாசம் கிடைக்கிறதோ?” என்று ஆச்சரியத்தோடு கூறிவிட்டு, “படம் பார்க்கப் புறப்படுவோமா? பத்மாவதி புராணத்தை வழியிலே அவிழ்க்கிறேன்” என்று சொல்லி உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டே தன்னாசனத்தை விட்டெழும்பினான்.

 சிறிது நேரத்தில் ஸ்ரீதரின் “பிளிமத்” கார் சுரேஷையும் ஏற்றிக் கொண்டு ரீகல் தியேட்டரை நோக்கிப் பறந்தது. டிரைவரின் ஆசனத்தில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்த ஸ்ரீதர் சுரேஷிடம் பத்மாவதி புராணத்தை அவிழ்த்துக்கொண்டிருந்தான்.

 இது இங்கே நடந்து கொண்டிருக்க, கொட்டஞ்சேனை கொலீஜ் ரோட்டில் விமலாவுக்கும் லோகாவுக்கும் ஆங்கிலப் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தாள் பத்மா. ஆனால் குழம்பிப்போயிருந்த அவள் மன நிலையில் பாடம் சொல்லிக் கொடுப்பது அவ்வளவு இலேசாக இருக்கவிலை. எனவே மிக விரைவாகவே அதை முடித்துக்கொண்டு விமலாவையும் லோகாவையும் வீட்டுக்கனுப்பி விட்டு, மீண்டும் ஸ்ரீதரின் மோசடியைப் பற்றிக் கவலைப்படுவதற்காக ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தாள் அவள். ஸ்ரீதரின் மீது அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அழுகை பீறிட்டது! விமலாவும் லோகாவும் கொண்டு வந்து கொடுத்திருந்த கமலநாதனின் புத்தகங்களை அப்படியே மடியில் வைத்துக் கொண்டு மெல்ல அழத் தொடங்கினாள் அவள்.

 இடையிலே மனம் அப்புத்தகங்களைப் பரிசீலிக்கும்படியும் தூண்டியது. “கவலைகள் தீர வழி” என்ற புத்தகத்தை முதலில் புரட்டினாள் அவள். இதை அவன் அனுப்பியதற்குக் காரணம் பஸ்ஸில் தான் கண்ணீர் உகுத்ததை அவன் கண்டது தான் என்பதை அவள் இலகுவாக உணர்ந்து கொண்டாள். “கமலநாதனுக்கு எனது கவலைகளைப் போக்க ஆசை. ஆனால் அவனுக்கு அந்த உரிமை ஏது? அவன் என்ன எனது காதலனா?” என்று சிந்தித்த பத்மா, “காலத்தின் சுழற்சியிலே அவன் என் காதலனாக முடியாது. என்று யார்தான் கூற முடியும்?” என்று  அதற்குப் பதிலளித்தும் கொண்டாள். பின் “இப்படிப்பட்ட நினைவுகள் என் மனத்தில் வருவது தப்பல்லவா?” என்று தன்னைத் தானே கடிந்து கொண்ட அவள், “ஸ்ரீதர் செய்த ஆள்மாறாட்ட மோசடிதானே இந்த நினைவுகளுக்குக் காரணம்” என்று குற்றத்தை அவன் தலையில் போட்டுவிட்டு, மீண்டும் கண்ணீர் உகுத்து அழ ஆரம்பித்தாள்.

 இதற்கிடையில் தந்தை பரமானந்தர் தன் பிற்பகல் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்தவர் பத்மா அழுது கொண்டிருப்பதைக் கண்டு பதைபதைத்து, “என்னம்மா, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார். அவள் திடுக்கிட்டெழுந்து முந்தானையால் கண்களைத் துடைத்த வண்ணம் “ஒன்றுமில்லை” என்று சொல்லிக் கொண்டே வீட்டின் பிற்புற வாசலை நோக்கி நடந்தாள்.

 “என்ன, ஒன்றுமில்லையா? யாராவது ஒன்றுமில்லாமல் அழுவார்களா? பைத்தியக்காரி, என்ன விஷயமென்று சொல்லு” என்று வற்புறுத்தினார் தந்தை.

 பத்மா முதலின் ஸ்ரீதரின் ஆள்மாறாட்ட மோசடி பற்றிப் பேசுவதற்குத் தயங்கினாள் என்றாலும், முடிவில் எப்பொழுதோ ஒரு நாள் இதை அப்பாவுக்குச் சொல்லித்தானே ஆக வேண்டும் என்று நினைவு வர, பஸ்தரிப்பில் தங்கமணி ஸ்ரீதரைப் பற்றித் தனக்குச் சொன்ன விவரங்கள் யாவற்றையும் தந்தையிடம் எடுத்துக் கூறினாள். சொல்லும் பொழுது நாத் தழுதழுத்தது என்றாலும், நிலைமையை ஒருவாறு சமாளித்துக் கொண்டு எல்லா விஷயங்களையும் கூறி விட்டாள் பத்மா. பரமானந்தர் மகள்  சொன்ன விவரங்களைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டாரானாலும், அதை வெளிக்குக் காட்டவில்லை.

 “சுந்தரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா சிவநேசர் இருக்கிறாரே, அவரது மகன் தான் ஸ்ரீதர். எங்களை உடுவில் சின்னப்பா வாத்தியார் மகன் தான் என்று ஏமாற்றியிருக்கிறார். தங்கமணியும் ஸ்ரீதரும் ஒரே ஊர். அவளுக்கெல்லா விஷயமும் தெரியும்” என்றாள் பத்மா.

 “அவன் ஏன் இப்படிப் பொய் சொன்னான்? சரி, நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. நான் எல்லாவற்றையும் விசாரிக்கிறேன். நீ சும்மா அழுது கொண்டிராதே. முகத்தைக் கழுவிக் கொண்டு அன்னம்மா வீட்டுக்குப் போய் வா. பார் சேலையை! ஒரே கசங்கலாயிருக்கிறது. புதிய சட்டையோ சேலையோ உடுத்திக்  கொண்டு சிறிது வெளியே போய் வந்தால் மனக்கவலை தீரும். போய் வா, அம்மா” என்றார் பரமானந்தர் அனுதாபத்துடன்.

 பத்மா அப்பா கூறிய பிரகாரமே முகத்தைக் கழுவிப் பொட்டிட்டுப் பூப்போட்ட கவுன் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டாள்.

சாதாரணமாக, பல்கலைக்கழகம் போகும் நேரம் தவிர, வீட்டில் இருக்கும் போது கவுன் அணிவதுதான் வழக்கம். வெளியே புறப்படு முன்னர்  கண்ணாடியில் தனைப் பார்த்த பத்மா தனது அழகைத் தானே மெச்சிக் கொள்ளத் தவறவில்லை. “கட்டான உடம்புள்ள  பெண்ணுக்குச் சேலை ஒருவகை அழகைக் கொடுக்கிறது. கவுன் இன்னொரு வகை அழகைக் கொடுக்கிறது” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டு வெளியே புறப்பட்ட அவள் அன்னம்மாவைக் காணச் செல்லவில்லை. தோட்டத்து மூலையிலே வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த வேலாயுதக் கிழவனைப் பார்க்கச் சென்றாள்.

 கரும்பச்சை வர்ணம் பூசப்பட்ட கள்ளிப் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த அவனது கடையில்  அப்பொழுது வேறு யாரும் இல்லை. வேலாயுதக் கிழவன் ஒட்ட நறுக்கிவிடப்பட்டு, ஏறக்குறைய மொட்டைத் தலை போல் விளங்கிய தனது தலையைத் தடவிக் கொண்டு, தனியாக நின்றான். கிழவனுக்குக் கன்னங்கரேலென்ற ஒட்டல் உடம்பு. அப்பொழுதும் அகலச் சிரித்த முகம். சுத்தமாக இருப்பான். அவனது வெள்ளை மயிர் பணக்காரர் வீட்டுப் பங்களாக்களில் நன்றாகக் கத்தரித்து விடப்பட்ட மைதானத்துப் புல் போல் தலையோடு தலையாக ஒட்டிக் கொண்டிருந்தது. தோட்டத்து ஆட்களிலேயே பரமானந்தர் மீதும், பத்மா மீதும் அவனுக்கு விசேஷ மதிப்பு. ஆகவே, பத்மாவைக் கண்டதும் “என்ன தங்கச்சி! என்ன வேண்டும்? அப்பா புகையிலை வாங்கி வரச் சொன்னாரா?” என்று அன்போடு கேட்டான்.

பத்மாவுக்கு வேலாயுதத்தைத் தனியாகக் கண்டதில் திருப்தி. தான் வந்த விஷயத்தைத் தடங்கலில்லாமல் பேசி விரைவாகச் சென்றுவிடலாமல்லவா?

 வேலாயுதத்தின் கேள்விக்குப் பத்மா “இல்லை” என்ற பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டு, “தாத்தா! உன்னிடம் நல்ல, ‘பெப்பர்மின்ட்’ இருக்கிறதா?” என்று கேட்டாள்.

 “இதோ போத்தலில் இருப்பதுதான், எடுத்துக்கொள்” என்றான் வேலாயுதம்.

 பத்மா பத்துச் சதத்துக்குப் ‘பெப்பர்மின்டை’ வாங்கி, வாயிலிட்டுக் கொண்டே, “தாத்தா! நாளைக்குப் பின்னேரம் ஐந்து மணிக்கு எங்கள் வீட்டுக்கு வருகிறாயா? எங்கே ராமன்? அவனைக் கடையில் வைத்து விட்டு வா. எங்கள் வீட்டிலேயே நாளை சாப்பாடு. வர வேண்டும், கட்டாயம்.” என்றாள்.

 ராமன் வேலாயுதக் கிழவனுக்கு ஒத்தாசையாயிருக்கும் பதின்மூன்று வயது. பையன். மலைநாட்டுப் பகுதியில் பிறந்தவனாம். கிழவனுக்கு வாரிசாக வளர்ந்து கொண்டிருந்தான்.

 வேலாயுதம் “நாளைக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.

 “விசேஷமொன்றுமில்லை. ஆனால் முக்கியமான விஷயமொன்று உன்னிடம் பேச வேண்டும். நாளை வீட்டுக்கு வந்ததும் சொல்கிறேன்.” என்றாள் பத்மா.

 “ஆகட்டும்” என்றான் வேலாயுதம்.

 “வரும்பொழுது அப்பாவுக்கு ஒரு கட்டுச் சுருட்டு கொண்டு வர வேண்டும். மறந்து விடாதே!” என்று சொல்லிக் கொண்டே பத்மா புறப்பட்டாள்.

 பத்மா கடையை விட்டுப் புறப்படும்போது, வேலாயுதக் கிழவன் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டுப்  போனாள். குடும்ப நண்பனாக நெருங்கிப் பழகிய கிழவனைக் கண்டால் அவளால் ஏதாவது சேஷ்டை செய்யாதிருக்க முடியாது. பத்மாவுக்கு அது வேடிக்கை. பத்மா மட்டுமல்ல, தோட்டத்திலுள்ள, ஆண், பெண் எல்லாருமே வேலாயுதக் கிழவனுடன் அப்படித் தான் கேலியாக நடந்து கொண்டனர். முக்கியமாகப் பெண்களே அவனுடன் அவ்வாறு தமாஷாக நடந்து கொண்டனர். கிழவனுக்கு அது மிக்க மகிழ்ச்சி. யார் தன் தலையில் குட்டினாலும் தலையைத் தடவிக் கொள்வானேயல்லாமல், வேறொன்றும் பேச மாட்டான். அதனால் அவனைப் போல் நல்ல மனிதன் இவ்வுலகில் இல்லை என்பதே தோட்டத்திலுள்ள சகலரது அபிப்பிராயமும்.

 பத்மா கண்ணுக்கு மறையும் வரையில் சிரித்துக் கொண்டும், அவள் குட்டிய தலையைக் கைகளால் தடவிக்கொண்டும் நின்றான் கிழவன்!  

ஸ்ரீதர் சிவநேசரின் மகன் என்பதை மறுக்க முடியாத அத்தாட்சியுடன் தங்கமணி கோட்டில் ஒரு வழக்கறிஞன் நிரூபிப்பது போல நிரூபித்திருந்த போதிலும், பத்மா அவ்விஷயத்தை மேலும் ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காகவே வேலாயுதத்தை அடுத்த நாள் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். வேலாயுதம் சிவநேசர் பங்களாவில் வேலை செய்தவன். இப்பொழுதும் ஆண்டுக்கொரு தடவையோ இரு தடவையோ நல்ல நாள் பெரிய நாட்களில் கொழும்பு சுந்தரேஸ்வரர்  கோவிலிலிருந்த பங்களாவில் சிவநேசர் வந்திருக்கும் சமயம் பார்த்து அவரைப் போய்க் கண்டு, பத்தோ ஐம்பதோ பரிசு பெற்று வருபவன். நிச்சயம் ஸ்ரீதரை அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வயதைக் கொண்டு பார்த்தால் ஒரு வேளை அவன் பங்களா வேலைக்காரனாயிருந்த போது ஸ்ரீதரைத் தன் கைகளால் தூக்கி வளர்த்தவனாயுமிருக்கக் கூடும். நாளை அவர்கள் இருவரையும் தனக்குள் வீட்டில் சந்திக்க வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் கண்டு கொள்ளுகிறார்களா என்று பார்த்தால் விஷயம் முற்றிலும் தெளிவாகிவிடும். பின் ஐயத்துக்கே இடமிருக்காது. ஸ்ரீதர் சம்பந்தமக ஏற்பட்டிருந்த பிரச்சினை போன்ற பிரச்சினகளில், என்னதான் மற்றவர்கள் தகுந்த நிரூபணங்களைக் காட்டினாலும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தானே விஷயங்களை நேரில் பரீட்சித்துக் கொள்ள விரும்புவதே உலக இயல்பு.  மனித இதயம் தோல்விகளை இலகுவில் ஏற்றுக் கொள்ள மறுப்பதே இதற்குக் காரணம்.

 மேலும் தங்கமணி சொன்னவை ஏன் பொய்யாக இருக்கக் கூடாது? டிரைவரைக் கூட அவளே ஏற்பாடு செய்திருக்கலாம். ஸ்ரீதர் மீது எனக்கிருக்கும் அன்பைக் குலைத்து எங்கள் காதலை முறியடித்த பின்னர் அவனைத் தான் கொத்திக் கொண்டு போவதற்குத் தங்கமணி திட்டம் தீட்டியிருக்கிறாளோ, என்னவோ, யார் கண்டது? இந்தக் காலத்தில் யாரை நம்புவது? அதுவும் தங்கமணி போன்ற படாடோபப் பெண்களை நம்பவே கூடாது. ஸ்ரீதர் போன்ற கட்டழகனும் கெட்டிக்காரனும் கணவனாகக் கிடைத்தால் யாருக்குத்தான் கசக்கும்? இவ்வுலகில் ஒருவர் மீது நமக்கு அழுத்தமான பிடிப்பு ஏற்பட்டு விட்டால், அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உள்ளம் நம்ப மறுக்கிறது. அவர் மீது சாட்டப்படும் குற்றங்களிலிருந்து அவரை விடுவிக்கவே மனம் எப்பொழுதும் முயல்கிறது. ஸ்ரீதர் விஷயமாகப் பத்மா அந்த நிலையிலேயே இருந்தாள்.

 பத்மா தீட்டிய திட்டத்தின் பிரகாரம் அடுத்த நாட் காலை ஸ்ரீதரைப் பல்கலைக்கழகத்தில் வழமையான இடத்தில் சந்தித்து மாலை வீட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டும்; அப்பொழுது அவனிடம் வேறொன்றும் பேசக் கூடாது. மாலையில் வேலாயுதத்தையும் அப்பாவையும் வைத்துத் தான் விஷயங்களைப் பேசித் தீர்க்க வேண்டும். அப்பொழுது தங்கமணி கூறியவை பொய்யென்று நிரூபிக்கப்படுமானால் — கவலை விட்டது! எங்கள் காதல் என்னும் சந்திரனைக் கெளவிய கரு நாகம் கழன்றதென்று சந்தோஷிக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக ஸ்ரீதர் மோசக்காரன் தான் என்பது ஊர்ஜிதப்படுமானால்…? பத்மாவின் உள்ளம் குழம்பியது. உண்மையிலேயே அவன் என்னைக் கைவிட்டு அகன்று விட்டால்…?

 நாடகங்களில் நடிக்கும் நடிகர் நடிகையர்களுக்குக் கடைசி நேரத்தில் நடிக்க முடியாது போய்விட்டால், அவர்கள் பாகத்தை உடனடியாக ஏற்று நடிக்க வேண்டுமென்பதற்காகப் பதில் நடிகர் நடிகையர்களைப் பயிற்றி வைத்திருத்தல் நாடக மன்றங்களின் வழக்கமாகும்.  இந்த ஏற்பாடில்லாவிட்டால் நாடகத்தையே இரத்துச் செய்ய வேண்டுமல்லவா? இது போன்ற ஏற்பாடு வேலைத் தளங்களிலும் உண்டு. வழமையான தொழிலாளர்கள் வேலைக்கு வராவிட்டால், உடனடியாக அவ்வேலைகளை ஏற்றுச் செய்ய “ஸ்டான்ட் பை” தொழிலாளர்கள் இருக்கிறார்கள். உதை பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுக்களிலும் “ரிஸர்வ்” விளையாட்டுக்காரர்களை இதற்காகவே வைத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் இது போன்ற ஏற்பாட்டை நாம் செய்து கொள்ள முடியுமா? கலைகளிலும் விளையாட்டிலும் தொழிலிலும் செய்யும் இவ்வேற்பாடு அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்துமா?

 பத்மா மனதில் இக்கேள்விக்குப் பளிச்சென்ற பதில் இருக்கத்தான் செய்தது. “எல்லாவற்றுக்கும் ஒரு “ஸ்டான்ட் பை” இருக்க முடியுமானால், காதலுக்கும் ஏன் ஒரு “ஸ்டான்ட் பை” இருக்கக் கூடாது? இன்றைய உலகின் காதல் அரசிகள் என்று போற்றப்படும் ஹோலிவூட் நடிகையர் பலர் ஒன்றுக்குப் பதில் பல காதல் “ஸ்டான்ட் பை”களை எப்பொழுதும் வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? கணவனை இழந்த விதவை புதிதாக ஒரு கணவனைத் தேடிக் கொள்வதும், விவகாரத்துச் செய்த பெண் புதிய கணவனைத் திருமணம் செய்வதும் இன்றைய உலகில் சகஜம். ஆகவே நானும் ஒரு காதலனை “ஸ்டான்ட் பை”யாக வைத்துக் கொண்டாலென்ன? கமலநாதன்தான் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறானே! இன்று நண்பகல் பஸ்ஸிலே என் மீது தன் காதற் பார்வையைப் படரவிட்ட அவன் பின்னேரமே என்னுடைய கவலையைப் போக்கப் புத்தகமும் அனுப்பிவிட்டானே! எனது வாழ்க்கை வாடி வதங்கிப் போகாதிருக்க அவன் உதவுவான் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் அவன் மீசையும் அவன் முகத்துக்கு அழகாய்த்தானே இருக்கிறது! காயமடைந்த அவன் கையை எனக்குக் காட்டினானே, அது எவ்வளவு பலங்கொண்டதாயும் திரட்சியாயும் காட்சியளித்தது!

 அன்றிரவு பத்மா படுக்கைக்குப் போன போது, கமலநாதன் அனுப்பிய புத்தகத்தின் சில பக்கங்களை வாசிக்க மறக்கவில்லை. பல மணி  நேரம் தூக்கம் வராது படுக்கையில் புரண்ட அவள் ஆயிரம் விதமான பகற் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தாள். அக் கனவுகளில் ஸ்ரீதரும் கமலநாதனும் மாறி மாறி வந்து கொண்டிருந்தார்கள்.

*** *** ***

 ஸ்ரீதரும் சுரேசும் படம் பார்த்த பின்னர் வீட்டுக்கு வந்து நீண்ட நேரம் பத்மா பற்றிப் பேசிக் கொண்டிருந்த பின்னர் சாப்பிட்டு விட்டுத் தங்கள் அறைக்குச் சென்றார்கள். தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, தான் ஒரு பொய்யன் என்பதை எப்படி நேரில் வெட்கமின்றிப் பத்மாவுக்கும் அவள் தந்தைக்கும் எடுத்துச் சொல்வது என்று ஸ்ரீதருக்குத் தெரியவில்லை.

 “சுரேஷ்! நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை மேலும் நீடிக்கக் கூடாது.” என்றான் ஸ்ரீதர்.

 “நீ சொல்வது உண்மைதான். இப்படிப்பட்ட விஷயங்களை நேரில் பேச யாருக்கும் பதற்றமாகத்தானிருக்கும். அதனைத் தவிர்க்க ஒரே வழி எல்லாவற்றையும் விரிவாகக் கடிதத்தில் எழுதிவிடுவதுதான். நேரில் சொல்ல வெட்கப்படுவற்றையும் அஞ்சுபவற்றையும் எடுத்துக் கூறுதற்குக் கடிதம் போல் உற்ற துணை வேறில்லை” என்றான் சுரேஷ்.

 ஸ்ரீதருக்குச் சுரேஷின் ஆலோசனை சரியாகவே பட்டது.

 “சுரேஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் இவ்வுலகில் கண்டதேயில்லை. நீ சொன்ன இந்த ஆலோசனை, விஷயத்தை எவ்வளவு இலகுவாக்கிவிட்டது! உண்மையில் நீ இங்கிலாந்து போனால் அதனால் பெரிய நஷ்டம் எனக்குத்தான். நீ சொன்ன படி இப்பொழுதே கடிதம் எழுதுகிறேன். நாளைக்கே அதைப் பத்மாவுக்கும் பரமானந்தருக்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவிடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே மேசையண்டை போய் உட்கார்ந்தான்.

 விடிந்தாலும் சரி. எப்படியும் கடிதத்தை எழுதிவிட்டுத்  தான் படுப்பது என்று முடிவு செய்து விட்டான் அவன். அந்தத்  தீர்மானத்துடன் அவன் சுவரில் மாட்டியிருந்த மணிக் கூட்டை நிமிர்ந்து பார்த்தான். நேரம் 12.10 ஆகியிருந்தது.  ‘திக் திக்’ என்ற மணிக்கூட்டின் சப்தம் அவன் நெஞ்சில் ‘திக் திக்’ என்ற சப்தத்தை எதிரொலிப்பது போலிருந்தது அவனுக்கு! என்னதான் இருந்தாலும் வாத்தியார் மகன் வேஷத்தை முற்றாகக் கலைந்து, பத்மா பரமானந்தரின் அங்கீகாரத்தைத் தனது சுய உருவத்துக்கு – சிவநேசர் மகன் ஸ்ரீதருக்குப் பெறும் வரையில் அவன் நெஞ்சில் பதற்றம் இருக்கத்தானே செய்யும்?   [தொடரும்]