இலண்டன் மாநகரில், இலக்கிய மாலை நான்காவது நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 10-ம் திகதி (10 – 08 – 2013) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகவுள்ளன. இலண்டன் ‘மனோர் பார்க்” (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலண்டன் மாநகரில் வாழும் பல மூத்த கலை இலக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்டு உரைநிகழ்த்துவர். வி. ரி. இளங்கோவனின் நூல்களான ‘இப்படியுமா..?” – சிறுகதைத் தொகுதி, ‘அழியாத தடங்கள்” – கட்டுரைத் தொகுப்பு, ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?, ‘மண் மறவா மனிதர்கள்”, ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” – (இளங்கோவன் கதைகள் – இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகவுள்ளன. வி. ரி. இளங்கோவனின் கல்லூரிக்கால ஆசிரியரும், இலக்கிய நேசரும், கணினி விரிவுரையாளருமான திரு சிவா பிள்ளையும் நண்பர்களும் இந்நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்விலும், யூன் மாதம் பாரிஸ் மாநகரில் இடம்பெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்விலும் இந்நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து தற்போது இலண்டன் மாநகரில் நடைபெறும் ‘இலக்கிய மாலை” நிகழ்வில் இவை அறிமுகமாகின்றன. ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்”- (இளங்கோவன் கதைகள் – இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் திகதி புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. – vtelangovan@yahoo.fr –