அத்தியாயம் 6!
புறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம், சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள் கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது ‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ ? என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் சுந்தரம்பிள்ளை அவனிடம் கேட்டபோது ‘இன்று ஆண் பூனைகளை நலமெடுப்பது உங்கள் வேலை. இன்று இந்த நாள் உங்களுக்கானது.’ என்றான்.
புத்தரின் புன்னகை அவனது முகத்தில் தவழ்ந்ந்தது.
சுந்தரம்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை மீண்டும் கேட்ட போது ‘ கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் மூன்று மிருகவைத்தியர்கள் இந்த மூன்று அறைகளிலும் வேலை செய்கிறார்கள். இந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நாட்களில் இந்தப் பூனைகளுக்கு நலமெடுக்கும் வேலை நடக்கிறது. இன்றைக்கு செவ்வாய்கிழமை என்பதால் இந்த அறையில் நடக்க வேண்டும். எனவே இன்று இந்த வேலையை நீங்கள் செய்யும் நாள்’ என விபரித்தான்.
பதினொரு பூனைகளும் பல்வேறு வர்ணங்களில் பாரதியாரின் பாடலுக்கேற்றபடி கூடுகளில் இருந்த படி மிரண்ட கண்களால் இடைவெளிக(ளுடாக பார்த்தபடி இருந்தன. இப்படியாக கூட்டாக நலமெடுத்தல் இதுவே முதல் முறையானதால் பதினொரு கடுவன் பூனைகளின் இருபத்திரண்டு விதைகளை எடுப்பதற்காக ஒவ்வொன்றாக மயக்க மருந்து கொடுத்து விதை எடுக்கத் தயாரான சுந்தரபிள்ளையை சாம் தடுத்தான்.
‘இப்படி நாம் எடுத்தால் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் சென்றுவிடும். அது இந்த இடத்தில் சரிவராது. பதினொரு பூனைகளுக்கும் முதலில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு பின்பு நலம் எடுப்போம்’
எல்லாவற்றிற்கும் மயக்க ஊசி கொடுத்து மயக்கமாக்கியபின் மேசையில் கிழங்குகளை அடுக்கியது போல் கிடத்திய பின்பு சாம் அவற்றின் விதைப்பகுதியை சுத்தப்படுத்தி அற்கஹோல் தெளித்த பின்பு சுந்தரம்பிள்ளையால் ஒப்பரேசனால் விதைகளை எடுத்ததும் அந்தப் பதினொரு பூனைகளிலும் படிந்திருந்த இரத்தக்கறைகளை சுத்தப்படுத்திவிட்டு மீண்டும் அவற்றினது கூட்டுக்குள் வைக்கப்பட்டன.. சாம் கூறியபடி அந்த வேலை அரை மணி நேரத்தில் முடிந்து விட்டது. .
இலங்கையில் கிராமங்களில் இரண்டு பேர் அமத்தி சாக்குப் பையில் ஆண் நாய்களை போட்டு தரையில் அழுத்தி பிடித்திருக்க மூன்றாவது மனிதர் அதனது விதைகளை நெருப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பு சத்தகத்தால் வெட்டி எடுத்து விட்டு அந்த இடத்தில் அவைகள் துடிக்கத் துடிக்க ஓலம் இட்டபடி இருக்கும் போது சுடுசாம்பலை அள்ளி அந்த இடத்தில் தடவும் குரூரமான காட்சி நினைவுக்கு வந்தது. இதை விட கொடூரமானது மாடுகளுக்கு வண்டிக்காக விதை நீக்கும் படலம். காளைமாடுகளுக்கு சாராயம் பருக்கிவிட்டு நான்கு கால்களை ஒன்றாகக் பிணைத்துக் கட்டிவிட்டு அவைகள் ஓலமிட கிடுக்கித்தடியால் அவைகளின் விதைகளை நசிப்பது.. மறுநாள் அந்தக் காளை மாடுகளின் விதைகள் காற்பந்தளவு வீங்கியபடி இருக்கும். அந்த வீக்கம் வற்றி சாதாரண நிலை அடைவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும். கயிற்றில் கட்டப்பட்ட களைமாடுகள் தீனமான குரலில் ஓலமிட்டபடி கட்டிய மரத்தை சுற்றி பல நாட்களாக நடந்து கொண்டிருக்கும்.
அவற்றால் நிலத்தில் படுத்து இளைப்பாறவோ உணவு உண்ணவோ பல நாட்களாகும்.
இந்தக் கொடுமைகளை சிறுவனாக பார்த்த அனுபவம் சுந்தரம்பிள்ளைக்கு உண்டு.
மனதை விட்டு அகலாத சம்பவம் ஒன்றும் சுந்தரம்பிள்ளை இலங்கையில் மிருக வைத்தியராக வேலை செய்த காலப்பகுதியில் நடந்தது.
ஒரு நாள் இலங்கையில் அநுராதபுரம் பகுதியில் வேலை செய்யும் போது நடந்த சம்பவம். இரண்டு சிங்கள விவசாயிகள் அவசரமாக வந்து காளை மாட்டிற்கு இரண்டு நாளாக இரத்தப் பெருக்கு நிற்க்கவில்லை வந்து பாருங்கள் என அழைத்தார்கள்.
விடயத்தை விவரமாக கேட்டபோது கிடுக்கித் தடியால் நலம் எடுக்கப்பட்ட ஒரு காளை மாட்டினது விதைப்பையை வீங்கி பெருத்து இருந்திருக்கிறது. அந்த விதையில் இருந்து வடிந்த இரத்த வாடையால் கவரப்பட்ட ஒரு காகம் விதையில் கொத்தி இருந்திருக்கிறது. கொத்தியபோது விதைக்கு வந்த பிரதான இரத்த நாடியில் உறைந்திருந்த இரத்தக்கட்டியையையும் தின்று விட்டது. இரத்த நாடியில் இருந்து இரத்தம் தொடர்ச்சியாக பாய்ந்து கொண்டே இருந்தது. இது நடந்து இரு நாட்கள் இரத்தப் போக்கு நிற்குமென காத்திருந்து விட்டு அது நடைபெறாததால் வைத்தியரை நாடியிருக்கிறார்கள். சுந்தரம்பிள்ளை அங்கு சென்று பார்த்த போதும் அந்த இடம் ஒரு குளக்கரை. அந்த குளக்கரையின் மேட்டில் வளர்ந்திருந்த பூவரச மரத்தில் அந்தக் சிவப்பும் வெள்ளையும் கலந்த காளை மாடு கட்டப்பட்டு நின்றது. அதனது தேங்காய் போல் வீங்கிய விதையின் கீழ்பகுதியில் இருந்து இரத்தம் தொடர்ச்சியாக பாய்ந்து கொண்டிருந்தது. மரத்தை சுற்றிய பகுதியெங்கும் இரத்தத்தால் வட்டமாக சகதியாக்கப்பட்டிருந்தது.அந்த இரத்த மணத்திற்காக காகங்கள் பூவரச மரத்தில் கூட்டமாக காத்திருந்தது. அந்த விவசாயிகள் இரத்தம் ஓடத் தொடங்கியதும் காளைமாட்டுக்கு காவல் இருந்ததால் நாய் நரி போன்ற மிருகங்கள் வரவில்லை.
கண்ணீர் முகத்தில் கோலமிட விட்டு, விட்டு ஓலம் இட்டபடி அந்தக் காளை மாடு மரத்தை சுத்தி இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது.
காலம் காலமாக செய்வதையே தாங்கள் செய்ததாக கூறியபோது மேலதிகமாக அவர்களிடம் எதுவும் பேசாது மயக்கமருந்தைக் கொடுத்து இரத்த நாடியை கட்டியபின்தான் இரத்தப் போக்கு நின்றது. வண்டிக்குக் கட்டும் அந்த வடக்கன்மாடு அன்று உயிர் பிழைத்த சம்பவம் மனத்திரையில் வந்தது. அந்த ஒரு மாட்டுக்கு செய்த சேவையே நாலுவருடம் படித்ததற்கு போதுமானது என்ற மன நிறைவை சுந்தரம்பிள்ளைக்குத் தந்தது.
செல்லப்பிராணிகளுக்கான மருத்துவம் நடக்கும் இந்த வைத்திய சாலையில் நேரம் மிக முக்கியானது. பல விடயங்கள் தொழிற்சாலையில் நடப்பது போன்று வேகமாக நடைபெறும். எப்பொழுதும் பலர் தங்களது நோயுற்ற செல்லப் பிராணிகளுடன் வைத்தியத்துக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இலங்கை, இந்தியாவில் அரசாங்க வைத்தியசாலைகளை தருமாஸ்பத்திரி என்பார்கள். அந்த அர்த்தத்தில் பார்த்தால் இந்த வைத்தியசாலை செல்லப்பிராணிகளுக்கான தருமாஸ்பத்திரி எனக் கூறலாம்
இரண்டாவது உலகப் போரின் பின்பு வசதியற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தாராளமனம் கொண்ட சீமாட்டி ஒருவரால் உருவாக்கப்பட்டு பின்னர் கருணை உள்ளம் கொண்டவர்களின் கவனிப்பில் இந்த வைத்தியசாலை இயங்கிவருகிறது. உரிமையாளரிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் எந்த ஒரு பிராணியும் நோயால் துன்புறக்கூடாது என்பதே இந்த வைத்தியசாலையின் பிரதான நோக்கமாக அன்றில் இருந்து இன்று வரையும் உள்ளது.
நோய் பிணியால் துன்புறும் மிருகங்களுக்கு வைத்தியம் செய்ய அசோக மன்னனால் உலகத்தில் முதலாவது மிருக வைத்தியசாலை கட்டப்பட்டதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்தவிதத்தில் பார்த்தால் இது அந்த அசோகனின் வைத்தியசாலைக்கு நிகரானது
ஒவ்வொரு நாளும் நடு இரவு வரை இப்படியான நோக்கத்திற்காக திறந்திருக்கும் இந்த வைத்தியசாலையில் மறுநாள் புதன்கிழமை இரவு பணி செய்வதற்கான நேர அட்டவணை சுந்தரம்பிள்ளைக்கு தரப்பட்டிருந்தது. இரவுகளில் கொண்டு வரப்படும் செல்லப்பிராணிகள் கடும் நோயுள்ளனவாகவும் வாகன விபத்துக்குள்ளானவையாகவும் இருக்கும். அவைகளை எப்படி சாமாளிப்பது என்பது இதயத்துடிப்பை கூட்டியது..
‘மதிய உணவு நேரமாகிவிட்டது’ எனச்சொல்லியவாறு, சுந்தரம்பிள்ளையை சாம் வைத்தியசாலைக்கு வெளியே கூட்டி வந்தான்.
‘நான் ஏற்கனவே சான்விச் கொண்டு வந்திருக்கிறேன்’; எனச் சொன்ன போது ‘இந்த வைத்தியசாலைக்குள் இருக்கும் அவசரத்தையும் பரபரப்பையும் விட்டுத் தள்ளி விட்டு வெளியே இயற்கையை பார்த்து, நுகர்ந்தால்தான் பின்பு நிம்மதியாக வேலை செய்யமுடியும்.’ என்றான்.
நடுப்பகலில் கிடைத்த ஒரு மணி நேரத்தை செலவிட தெருவுக்கு வந்த போது ஏற்கனவே வைத்தியசாலையின் வாசலில் அன்ரூவும் டொக்டர் சேரமும் நின்று கொண்டிருந்தார்கள்.
‘வாங்கோ இன்று பிரிட்டிஷ்; மதுவிடுதிக்குப் போவோம். இன்று செவ்வாய்கிழமை மதியம் பெண்கள் மேலே உடுப்பு இல்லாமல் பியர் பரிமாறும் நாள்’; அன்ரூ அழைந்தான்.
‘அன்ரூவுக்கு எந்த நாளில் அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த மதுபான விடுதியில் பெண்கள் மேலுடை இல்லாமல் இருப்பார்கள் என்பது அத்துப்படி’. என சாம் என அவனது முதுகில் தட்டினானான்
‘இப்படி மனதுக்கு ரம்மியமான காட்சிகளைப் பார்த்தால்தான் திரும்பி வந்து மாலை ஆறுமணி வரையும் வேலை பார்க்க தெம்பாக இருக்கும். பெண்களின் உடலைப் பார்ப்பதை விட மனத்துக்கு வேறு எது ஊக்கமாத்திரை?.’- அன்ரூ விட்டுக் கொடுக்காமல் எல்லோருமாக நோர்த் மெல்பனில் உள்ள அந்த மதுபானச்சாலையை நோக்கி நடந்தார்கள்;.
சுந்தரம்பிள்ளைக்கு இது புதுமையாக இருந்தது. ஆனாலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. இவர்கள்தான் நட்புடன என்னை தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டவர்கள்.
அப்பொழுது அங்கு அவசரமாக ஓடி வந்த நர்ஸ் நொரேல், ‘காலோஸ்… ஒரு இளம் பெண் வேலைக்காக உம்மைச் சந்திக்க வந்து காத்திருக்கிறாள். அவளுக்கு என்ன சொல்வது?’
‘மதிய உணவுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். வந்தவுடன் சந்திக்கிறேன்’. என்றான் காலோஸ்
‘எந்த மதுவிடுதி என்று சொல்லும்… நான் கூட்டிக்கொண்டு வருகிறேன். அவள் எனக்கு ஏற்கனவே தெரிந்தவள்தான்’.
‘பிரிட்டிஷ் மதுவிடுதி;’ என்றான் அன்ரூ சிரித்தபடி.
அதிக தூரம் நடக்கத் தேவை இருக்கவில்லை. இரண்டு சிறிய தெருக்களையும் அதன் அருகே பச்சையாக கம்பளம் விரித்து அதன் மேல் நட என்று சொல்லதுபோல வெட்டி விடப்பட்ட புல்தரைகளையும் அங்கு இடைக்கிடையே ஆங்காங்கு இருக்கும் யூகலிக்ப்ரஸ் மரங்களையும் கடந்து சென்ற போது இரண்டு வீதிகள் சந்திக்கும் இடத்தில் அந்த பிரிட்டிஷ் மதுபானச்சாலை தெரிந்தது.
அந்த நேரத்தில் வெளியே நடப்பது சாம் சொல்லியது போல் உடலுக்கும் மனத்திற்கும் அமைதியை கொடுத்தது. மெல்பனின் வசந்த காலத்து இதமான மஞ்சள் வெய்யில் உடலுக்கு இதமாக சூடாக இருந்தது. மிதந்து வந்த காற்று யுகலிப்ரஸ் வாசத்துடன் முகத்தில் மயிலிறகாக வருடிக் கொடுத்தது. யுகலிகப்ரஸ் மரங்கள் எந்தக் காலத்திலும் பச்சையாக இருப்பதும் எந்த இடத்திலும் வளரும் தன்மையால் நகரத்தை பசுமையாக்கியது. இதனால்தான் நந்தவனங்களின் நகரம் என்ற பெயர் மெல்பனுக்கு கிடைத்தது. முழு அவுஸ்திரேலியாவும் களிமண்ணும் இயற்கைப்பசளை தன்மையுமற்ற பூமியானதால் நீர்த் தன்மை இருப்பதில்லை. இதனால் மிகக் குறைந்த வகை மரங்களே இயற்கையாக வளரும். இந்த வறுமையான நிலத்தில் வெற்றிகரமாக வளரும் யுகலிக்ப்ரஸ் மரத்தை அவுஸ்திரேலியா எங்கும் காணலாம்.
மதுச்சாலை இருந்த இடம் மெல்பனின் மையப்பகுதி இருந்து இரு கிலோ மீட்டரில் இருந்தாலும் அமைதியாக அதிக வாகனங்கள் அற்ற தெருக்களாக இருந்தது.
மதுச்சாலையின் பெயர் வாசலில் சிறிய விளம்பரப்பலகையில் நீல வர்ணத்தில் எழுதி இருந்தது. அதன் கீழ் விக்ரோரியா பிட்டர் என்ற பியர் போத்தலின் படம் வரைந்திருந்தது. குடிபோதையில் உள்ளவர்களும், ஆங்கிலம் புரியாதவர்களும் படத்தை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற பொதுநலம் அந்த மதுபானச்சாலை உரிமையாளர்களுக்கு இருந்திருக்கவேண்டும். பெரிய விளம்பரமில்லாத பழய கட்டிடத்தில் அமைந்திருந்த அந்த மதுச்சாலை மெல்பேன் துறைமுகத் தொழிலாளர்களுக்காக ஆரம்பத்தில் இருந்திருக்கவேண்டும். அந்த இடத்தில் இருந்து மெல்பேன் துறைமுகம் வெகு துாரமில்லை கதவைத் திறந்து நால்வரும் உள்ளே சென்றனர். அங்கு இருளாக இருந்தது. ஒரு அழுது வடியும் மின்சார பல்ப் மட்டும் உயரத்தில் தெரிந்தது. கண்களுக்கு விம்பங்கள் உருவங்களாக மாறி தெளிவாக தெரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது. அத்துடன் பெரிய சத்தத்துடன் வந்து கொண்டிருந்த கெவி மெற்றல் இசை காதை அடைத்தது. பியர் மணம் மூக்கை தடவி தலைக்குச் சென்று போதைக்கான இரசாயனங்களை கிளறியதும் உடனே மதுவின் தாகத்தை மூளையில் ஏற்படுத்தியது.
மூக்கு காது கண்கள் என்ற மூன்று புலன்களாலும் அனுபவிக்க கூடிய இடம் மதுச்சாலை. இதில் முதலாவதாக போதைக்கான தாக்கத்தை உருவாக்குவது மணமேயாகும். மற்ற புலன்கள் மெதுவாகத்தான் செயல்பட்டது. இருள் மெதுவாக நீங்கி கட்புலன் மீண்டும் வந்து சேர்ந்தபோது சுந்தரம்பிள்ளைக்கு பல ஆண்கள் பியர் விற்கும் கவுண்டரைச் சுற்றி நிற்பது தெரிந்தது. சிறிய மதுச்சாலையானதால் அதிக ஆசனங்கள் இல்லை. பத்துக்கும்; குறைவாக போடப்பட்ட ஆசனங்கள் பெரும்பாலானவை வெறுமையாக இருந்தன.
அன்ரூ கூட்டத்தை ஊடறுத்தபடி வேகமாக எய்த அம்பின் கூர்முனைபோல் சென்றான்.
அவனை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். கவுண்டரை நெருங்கிய போது நான்கு ஐரோப்பிய பெண்கள் மார்பில் எதுவும் அணியாமல் கறுப்பான ஜீன்சை மட்டும் அணிந்தவாறு பியர் பரிமாறிக் கொண்டிருந்தனர். நாலு பேரும் பியருக்கு சொல்லிவிட்டு காத்திருக்கும்போது, அவர்களின் முலைகளை கண்களை வெட்டாது பார்த்துக்கொண்டிருந்த அன்ரூ திடீரென தலையை தாழ்த்தி கண்களை வெட்டி உதடுகளை பக்கவாட்டில் குவித்து காலோஸைப் பார்த்து ‘அந்த சிவப்புத் தலைக்காரியின் இரண்டு முலைகளும் சிலிக்கனால் ஆனது’ என்றான்
‘யூ பாஸ்ட்டட். சும்மா பார்த்து விட்டு போக வேண்டியது தானே. உன்னை மருத்துவ பரிசோதனை செய்யச் சொன்னார்களா? ’ சத்தமாக காலோஸ்.
‘எப்படி உறுதியாக சொல்கிறாய் அன்ரு?’ தயங்கியபடி சுந்தரம்பிள்ளை.
‘இதோ அந்தப் பெண்ணை கவனித்துப்பார்;. அந்த முலைக்காம்புகள் நேராக இருக்கின்றன.அத்தோடு கீழ்ப்பகுதியில் சிறிய வெண்மையான தழும்பு இருக்கிறது.’
அந்த சிலிக்கன் முலைக்காரி சொல்லி வைத்தாற் போல சிரித்தபடி பியர் கிளாசை தந்த போது சுந்தரம்பிள்ளைக்கு அவளது முகத்தைப் பார்ப்பதா அல்லது முலையை பார்ப்பதா என்ற சங்கடம். சங்கடத்துடன் நெளிந்தபடி இரண்டையும் பார்த்த போது அன்ரூ சொன்னது சரியாக இருக்கலாம் எனத்; தோன்றியது.
பியர் வந்ததும், பியரைப் பெற்றவர்கள் கவுண்டரை விட்டு விலகி புதிதாக பியர் வேண்டுவதற்கு வருபவர்களுக்கு ஜனநாயக அடிப்படையில் இடம் கொடுத்துவிட்டு, மற்றவர்களும் அந்த பியர் பெண்களின் முலைகளை தரிசித்து இன்பம் பெற வேண்டும். ஆனால் இந்த நால்வரும் கவுண்டரிலேயே பியர் கிளாசுகளை வைத்துக்கொண்டு, முலைகளை கண்களால் அர்ச்சித்தபடி பியரைப் பருகினார்கள்.
யாழ்ப்பாணத்து நல்லூர் தேரை நோக்கி தெய்வ தரிசனம் பெற முன்னேறும் ஆஸ்தீக அடியார்கள் கூட்டம் கந்தனினின் அனுக்கிரகம் தங்களுக்கு மட்டும்தான் என்ற நம்பிக்கையுடன் முன்னேறுவது போல் பின்னால் ஒரு கூட்டம் வந்து அலைபோல் மோதிக்கொண்டு இருந்தது. கூட்டத்தின் மோதலில் பியரை ஊற்றாமல் குடிக்க வேண்டும் என்ற கவலையும் சுந்தரம்பிள்ளையை பீடித்துக் கொண்டது.
‘பியர் வேண்டியவர்கள் பின்னால் போகலாம்’ என இரண்டு செங்கட்டிகள் உராய்வது போன்ற குரலில்;
ஒலித்த குரலுக்குரியவர் நடுத்தர வயதான உயரமான தடித்த பெண்.தலைமயிரை குட்டையாக வெட்டி இருந்தாள். அவளது கண்கள் கோபக் கனல் தெறிக்க அன்ரூவை நோக்கி இருந்தது.
ஜனநாயகத்தை நிலை நிறுத்த யாராவது அதிகாரம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒரு சிலர் மட்டுமே அதன் பலாபலனை அனுபவித்துவிடுவார்கள் என்ற அரசியல் தத்துவத்தை அந்த சம்பவம் விளக்கியது
‘இந்தப் பெண்தான் இந்த மதுவிடுதியின் முதலாளி’ என கூறிக்கொண்டு அன்ரூ பின்வாங்க,அவனைத் தொடர்ந்து மற்றவர்களும்; சென்று காலியாகக் கிடந்த ஆசனங்களில் அமர்ந்து பியரை குடிக்கத் தொடங்கிய போது வாசலைத் திறந்தபடி நொரேலும் அவளுடன் அன்று வேலை தேடி வந்த மற்றப் பெண்ணும் இவர்களை நோக்கி வந்தார்கள்.
வந்தவர்கள் இருவரும் பக்கத்தில் கதிரைகளை இழுத்து கொண்டு வந்து போட்டுவிட்டு மேசையை சுற்றி அமர்ந்தனர். அந்த மதுபானவிடுதியில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த இரு பெண்களையும் பார்த்தார்கள். வந்த இருவரும் இருபது வயதிற்கு சற்று மேல் இருக்கும் அழகிய இளம் பெண்கள்.
அத்துடன் நொரோலின் நேர்ஸக்கான வெள்ளை உடையுடன் இருந்தாள். அவள் மார்பில் குத்தியிருந்த அவளது பெயருள்ள பட்ஜ்; அவளை காட்டிக் கொடுத்தது. அவளை அவர்கள் பார்த்த பார்வையில் பலவித அர்த்தங்கள் இருந்ததாக சுந்தரம்பிள்ளை உணர்ந்தான். மனதில் எழுந்த சங்கடத்தை மறைத்தபடி ‘பியர் வேண்டுமா?’ எனக்கேட்டான்..
‘நாங்கள் வேண்டுகிறோம்’ என நோரேல் சொல்லிவிட்டு ‘இவள் ஜோ’ என்று அறிமுகப்படுத்தி அவளை அறிமுகப்படுத்தினாள்.
காலோஸ் தனது பொக்கட்டில் இருந்து பணத்தை எடுத்து சாமிடம் கொடுத்து, இரண்டு கிளாஸ் பியர் வேண்டிவருமாறு கொடுத்தான். அதைப் பார்த்துவிட்டு நொரோல் எழும்ப முயல ‘நீ எழுப்பாதே. சாம் வேண்டிக்கொண்டு வரட்டும். பியர் பரிமாறும் பெண்கள் இன்று மேலாடை அணிய மறந்து விட்டார்கள்.’ மெதுவான சிரிப்புடன் பெண்களின் முகத்தை பார்த்தபடி
இதைக் கேட்டதும் இரண்டு பெண்களின் முகத்திலும் சிவப்பு தாமரை பூத்தது. அன்ரூ வாயை பொத்தியபடி சிரிக்க, சுந்தரம்பிள்ளை கீழே ஏதோ எடுப்பது போல் பாவனை செய்தான்.சாம் பியர் வேண்ட சென்றுவிட்டான்.
‘இதைத் தெரிந்துதான் வந்தீர்களா? காய்ந்த மாடுகளே. நீங்கள் புதிதாக வந்த சிவாவையும் கெடுக்கிறீர்கள்’ என்றாள் நொரேலின். அவளது பெரிய கண்கள் மேலும் அகலமாக விரிந்தன. முகத்தில் வெட்கம் மறைந்து பொய்யான கோபம் புதிதாக மனை புகுந்தது..
‘அன்ரூ தனது மனைவியிடம் விவாகரத்து வேண்டி இப்பொழுது ஆறுமாதம் பிரிந்து தனியாக இருக்கிறான். அவன் கண்ணுக்கு பச்சைபட்டு பல காலம் ஆகி விட்டது. இப்படியே விட்டால் அவனது அந்தரங்கத்து ஈரம் காய்ந்து மரத்து விடாதா?
அதன்பின் எவ்வளவு பாடுபட்டாலும் கருவாடு மீனாகுமா?’ என்று காலோஸ் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள்.
சுந்தரம்பிள்ளைக்கு பியர் புரைக்கேறியது.
நொரேல் அவன் தலையில் தட்டி ‘இவன்களோடு சேர்ந்தால் இப்படித்தான்’; என சிரித்தாள்.
சாம் கொண்டு வந்த பியரை குடித்துக் கொண்டு, ஜோ தனது வேலை அனுபவங்களையும் கல்வித் தரங்களையும் காலோஸ்க்கு கூறினாள்.
மேலாடை அணியாத பெண்கள் பரிமாறும் மதுபானச்சாலையில் அன்று நடந்த நேர்முகப்பரீட்சையில் ஜோ வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாள். ‘இந்தமாதிரி இடத்தில் வேலைக்கான நேர்முகத்தை வைப்பதற்கு காலோஸால்தான் முடியும்’ என்றான் சாம் பெண்கள் இருவரும் முன்னே சென்றுவிட்டார்கள்.
இன்றைக்கு வைத்தியசாலையில் நாங்கள் இந்த மதுச்சாலைக்கு போன விடயம் நொறேலால் சொல்லப்படும் என நினைத்த படி சுந்தரம்பிள்ளையும் சாமும் மீண்டும் தமது வேலைக்குத் திரும்பினார்கள். அங்கே வேலை செய்பவர்கள் மத்தியில், இவர்கள் மதிய நேரத்தில் அந்த மதுசாலைக்கு சென்ற விடயம் நினைத்தபடி நொரேல் மூலமாக தெரிந்துவிட்டது. ஒவ்வொருவர் சிரிப்பும் பார்வைகளும் பல கோணங்களில் இருந்தன. ஆனால் ஒருவரும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது சுந்தரம்பிள்ளைக்கு ஆறுதல் அளித்தது.
வேலை முடிந்ததும் தனது காரில் வரும்படி ஜோன் ரிங்கர் சுந்தரம்பிள்ளையை அழைத்தான். அவனது காரின் பின் சீட்டில் இருந்த அழகான பெண்ணை தனது பாட்னர் என அறிமுகப்படு;தினான். அவளது பெயர் மிஷேல். அவளது மடியில் ஒரு வெள்ளை நிறமான இங்லிஷ் புல்டோக் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று மிகவும் உரிமையுடன் படுத்திருந்தது.
மிஷேலின் பெரிய உதடுகளும் சிறிது தூக்கலான தாடைகளும் நீண்ட கழுத்தும் நடிகை சோபியா லோரனை நினைவுக்கு கொண்டு வந்தது. அந்த அகலமான கண்களில் தெரிந்த தீர்க்கமான நேரிய பார்வையில் அவளது தைரியம் வெளிப்பட்டது. ஆனால் ஜோன் ரிங்கர் நடத்தையிலும் கதையிலும் அதற்கு நேர்மாறாக இருந்தான். அடக்கமான குழந்தைத்தனம் அவனில் தெரிந்தது.
இவர்கள் இருவேறு குண இயல்புகளைக்கொண்ட ஜோடி எனத் தெரிந்தது. “மிஷேல் சுப்பர் மார்கற்றில் செய்யும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாய்களை அழகு படுத்தும் மற்றும் குளிப்பாட்டும் வேலையை சொந்தமாக செய்யப் போவதாக’ ஜோன் சொன்னான்.
அவள் உடனே ‘இதுதான் ஜோன். எல்லோருக்கும் எதையும் செய்ய முதல் பறை தட்டுவது.’ என்றாள்.
‘அதில் என்ன தவறு. சிவா என் நண்பன்.’
‘இருவரும் வீட்டுக்குப் போகும் வழியில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பின்னர்; படுக்கையிலும் சண்டை தொடரும்.’
‘சிவா சண்டையில் தான் எங்கள் காதல் தொடங்கியது’ என்றான் ஜோன்
‘அதெப்படி சண்டையில் தொடங்கியது?’
‘இப்ப ஜோன் எல்லாம் அவிட்டுவிடப் போகிறார்’ என்றபடி செல்லமாக தலையில் தட்டினாள் மிஷேல்.
அதைப் பொருட்படுத்தாமல் ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரார் நைட் கிளப்பிற்கு நான் போய் மது அருந்திக் கொண்டு இருந்தபோது எதிர்பாராமல் ஒரு வெறுமையான பியர் ரின் பறந்து வந்து முகத்தில் அடித்தது. நான் திரும்பிப் பார்த்த போது மிஷேல் ஒருவனுக்கு எறிந்த அந்த ரின், அவன் குனிந்தமையல் எனது முகத்தில் மோதியது. மிஷேல் வந்து வழிந்த இரத்தத்தை தனது கர்சிப்பால் துடைத்த விட்டு “அந்த குண்டனுக்கு எறிந்தது தவறுதலாக பட்டது” மன்னிப்புக் கேட்டாள்;.
.
நான் நெற்றியில் கையைவைத்த படி ‘யார் அந்த குண்டன்?’ எனக்கேட்டேன்.
‘அவன் நியூசிலாந்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் குரூப்பை சேர்ந்தவன்.’
‘அவன் என்ன செய்தான்?
‘நான் குடித்த பியருக்குள் ஏதோ மருந்து போட்டது போல் பாவனை செய்தான். அதுதான் நான் அவனில் எறிந்தேன்.’
‘அவனைத் தெரியுமா?’
‘எனக்கும் அவனோடு ஆறு மாத காலமாக பழக்கமுண்டு. இன்றைக்கு அதிகம் குடித்துவிட்டான். இன்றைக்கு இவனோடு மோட்டார் சைக்கிளில் போக முடியாது.”
‘ஓஹோ… நீயும் அந்த பைக்கி குரூப்பை சேர்தவள்தானா.?’
‘இதைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் ஆனதா?’ எனக்கூறி சேர்ட்டில் பிடித்தாள்.
‘ஏய் சேட்டை விடு நான் ஏதோ உனக்கு செய்து விட்டது போல் எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள்’ என்றேன்.
அதைக்கேட்டு விட்டு ‘ஹஹஹஹஹ’ என்றாள் மிஷேல்
‘அன்று என்னைப் பிடித்தவள் இன்னும் விடவில்லை. இரண்டு வருடத்துக்கு மேலாகிவிட்டது’ எனச் சொல்லி ஜோன் சிரித்தான்.
இப்படி தனது காதல் கதையை ஜோன் சொல்லும்போது பின்னால் இருந்து ஜோனின் கழுத்தில் அழுத்தியபடி மிஷேல் ~ஜோன் உன்னிடம் ஒரு இரகசியம் இருக்காதே. நான் இரகசியம் பேசுவதென்றால் என் செல்லத்திடம் தான் பேசமுடியும்| எனச் சொல்லி மடியில் இருந்த நாயைக் கொஞ்சினாள்.
ஜோன், அந்தக் காரை சுந்தரம்பிள்ளையின் வீட்டு வாசலில் நிறுத்தி அவனை இறக்கிவிட்டபோது மிஷேல் முன்னே வந்து முன் சீற்றில் ஏறிக்கொண்டாள்
அத்தியாயம் 7
சுந்தரம்பிள்ளையின் மூன்றாவது நாளில் வேலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி நடுநிசியில் முடிவது எனக் கூறப்பட்டது. இரவு வேலை தனித்து ஒரு வைத்தியராக செய்ய வேண்டும். அதைவிட அவசர சிகீச்சைகள் செய்ய வேண்டி இருக்கும் என்பது மனத்தில் அச்சத்தை கொடுத்தது. அன்று முழுவதும் அதே நினைவால் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. புதிதாக வேலையில் சேர்ந்த என்னை தனியாக இரவில் வேலை செய்ய சொன்னது சரியா என சிந்தனை ஓடியது.
சமுத்திரத்தில் வீழ்ந்த பின்பு எப்படியும் சமாளிக்கவேண்டியதுதானே? பதற்றமும் சமாதானமும் எதிரும் புதிருமாக அலைகளாக மனத்தில் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்ததால் வீட்டில் இருந்து அரை மணிக்கு முன்னராகவே வைத்தியசாலைக்கு சென்றிருந்தான்
வைத்தியசாலை சென்றதும் என்னோடு இன்று இரவு சேர்ந்து வேலை செய்யப் போகும் நர்ஸ் யாராக இருக்க முடியும் என்ற ஆவல் மனத்தில் ததும்பியது. நேற்று சாமிடம் கேட்டபோது புதிதாக ஒருவரை போடுவதாக காலோஸ் கூறியதாக சொன்னான்.
அந்த மாலை நேரம் பலரும் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு வீடு செல்ல இருப்பதால் ஓவ்வொருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருந்ததால் ஒருவரையும் கேட்க முடியவில்லை.
சரி யாராவதாக இருக்கட்டுமே. இப்ப என்ன வந்தது?
வைத்தியசாலையின் லாண்டரி அறையில் இருந்தவற்றில் சுத்தமான வெள்ளையான மேலங்கியை எடுத்துக்கொண்டு, இன்னும் வேலை ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் இருப்பதால் தேனீர் அறைக்கு செல்வோம் என நினைத்து, கொறிடோர் வழியாக சென்ற போது வழியில் உள்ள ஆபிரேசன் தியேட்டரில் யார் இன்று வேலை செய்கிறார்கள் என அறிய திடீர் ஆவல் மனத்தில் முளைவிட்டது. அதை நிறைவேற்ற நினைத்து உள்ளே எட்டிப் பார்த்த போது ‘உள்ளே வரலாம் நண்பரே’ என்றார் ரிமதி பாத்தோலியஸ்.
சிலமாதங்களுக்கு முன்பாக குயின்ஸிலண்ட் மாநிலத்தில் இருந்து வந்து இந்த வைத்தியசாலையில் சேர்ந்த ரிமதி பாத்தோலியஸ் மற்ற வைத்தியர்களில் இருந்து தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தார். அந்த வைத்தியசாலையில் முற்றாக தலையை மழித்தவர் அவர் மட்டுமே. நீள் வட்டமான அவரது முகத்திற்கு அந்த சவரம் செய்யப்பட்ட தலை பொருத்தமாக இருந்தது. உச்சித் தலையில் இரண்டு அங்குலத் தடிப்பான தழும்பு கத்தியால் கொத்திப் பார்த்த செவ்விளனியை நினைக்க வைத்தது. உதடுகள் பென்சிலால் வரைந்தது போல் சிறிதாக அமைந்திருந்தது. கண்கள் பெரிதாக சிவந்து இருந்தது. இதைவிட மனிதர் ஓடுவதற்கு பாவிக்கும் அடிடாஸ் காலணி அணிந்திருந்தார். வைத்தியருக்குரிய தோற்றம் அவரில் இருக்கவில்லை.சரி அவர் எப்படி இருந்து விட்டு போகட்டுமே. இப்படித்தான் வைத்தியர் உடையணிய வேண்டும், காலணி அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா?
சில கடந்த இரண்டு தினங்களில் தேநீர் கூடத்தில் சிலமுறை சந்தித்தபோது ஒரு சிரிப்பையும் காணமுடியவில்லை. கண்களிலும் முகத்திலும் இரத்தத்தை பரவ விட்டபடி வலம் வந்தார். யார் மீதோ கடுப்புடன் இருக்கிறார் என எண்ணத் தோன்றியது.
ரிமதி பாத்தோலியஸ் நண்பரே என கூறினாலும் அந்தத் தொனியில் நட்பு இருக்காததை சுந்தரம்பிள்ளையால் அவதானிக்க முடிந்தது. ரிமதி பாத்தோலியசுடன் ஏற்கனவே அறிமுகமான இங்கிலாந்தை சேர்ந்த ஜெனட் நேர்சாக உதவி செய்து கொண்டிருந்தாள்.
உள்ளே சென்ற போது ஆபிரேசன் மேசையில் அவுஸ்திரேலியாவின் மாட்டுப்பண்ணைகளில் வேலை செய்யும் புளு கீலர் இனத்து நாய் பச்சை நிறத்து துணியால் மூடப்பட்டு இடது பின்னங்கால் மட்டும் வெளித் தெரிந்தது. அந்த காலில் தொடையில் தசைகள் வெட்டப்பட்டு விலக்கப்பட்டு, முறிந்த எலும்பில் ஒரு உருக்கு பிளேட்டை வைத்து ஆணியை செலுத்திக் கொண்டிருந்தார் ரிமதி பாத்தோலியஸ்.
.இப்படியான எலும்புகளை இரும்பு பிளேட்டால் ஒருங்கிணைக்கும் வேலையை சுந்தரம்பிள்ளை படித்திருந்தாலும் இதுவரை செய்வதைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.
‘ரிமதி , இது பெரிய ஆப்பரேசன் போல இருக்கிறது? ஆவலுடன் பார்த்தபடி.
‘ஆமாம் இடது பின்னங்காலும் வலது முன்னங்காலும் கார் விபத்தால் உடைந்திருக்கிறது. பின்னங்காலுக்கு பிளேட்டை பொருத்திவிட்டு முன்னங்காலில் உருக்கு கம்பியை வைக்கப்போகிறேன்;’ எனப் பெருமிதமாக தலையை நிமிர்த்தி கூறினான்.
வாகன விபத்தில் முன் ,பின் இரண்டு கால் முறிந்தால் அந்த இரண்டு கால்களை இணைக்கும் முதுகுதண்டில் காயம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு என்பது எங்கேயோ படித்த ஞாபகத்தில் கேட்க விரும்பினாலும் ஒரு கணம் சுந்தரம்பிள்ளை சிந்தித்தான்
கிரேக்க அறிஞர்கள் அறிவின் வளர்ச்சி கேள்விகளில் இருந்து தொடங்குகிறது என சொன்னார்கள் இல்லையா? ஆனால் இந்த கேள்வி இராமர் மந்தாரையின் கூனான முதுகை நோக்கி களிமண் உருண்டைகளை ,இராமர் எய்தது போன்ற விடயம் என அப்போது சுந்தரம்பிள்ளைக்கு தெரிந்திருக்கவில்லை.
‘இரண்டு கால்களில் முறிவு இருப்பதால் முதுகுத்தண்டில் பிரச்சனை எதுவும் இல்லையா?’
எதுவித பதிலும் சொல்லாததால் குனிந்தபடி தனது வேலையை தொடர்ந்து செய்ததால் இந்தக் கேள்வி ரிமதிக்கு பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்தக் கேள்வியால் அவனுக்கு ஏற்பட்ட சங்கடத்தை தவிர்ப்பதற்ககாக ரிமதி மெச்சக்கூடிய அடுத்த கேள்வியை கேட்டு விட்டு சுமுகமாக அந்த இடத்தை விட்டு நகர தீர்மானித்தான்.
‘இன்று இரவுவரையும் வேலை செய்யவேண்டி இருக்குமே?
‘வேலைக்கு வந்தால் அப்படித்தான் வேலை செய்யவேண்டும். உங்களைப் போல் மதிய இடைவேளையில் மதுச்சாலைக்கு போய் பெண்களின் முலைகளை பார்த்துக் கொண்டிருந்தால் இப்படி வேலை செய்யமுடியாது.| சொல்லிய போது முகத்தில் சிரிப்பு இல்லாமல் தொனியில் கடுமை தெரிந்தது.
“ரிமதி அப்படி பேசாதே. காலோஸ்தான் சிவாவை கூட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். மதுபானசாலை எங்கிருக்கென சிவாவுக்கு தெரிந்திராது.”
‘நான் அந்த பாஸ்டட்டையும் சேர்த்து தான் சொல்கிறேன்.’ மீண்டும் அதே காட்டத்துடன்
அந்த வார்த்தைகளை சொல்லும்போது ரிமதி பாத்தோலியஸ்ன் முகத்தில் சிவப்பு படர்ந்தது. கண்களில் இருந்த வெறுப்பும் வார்த்தைகளில் இருந்த வெப்பமும் சுந்தரம்பிள்ளையை திடுக்கிட வைத்தது. நாக்கு விறைத்து வார்தைகளை தற்காலிகமாக தொலைத்து விட்டது. ஜெனட்டின் வார்தைகள் வந்து தற்காலிகமாக அந்த இடைவெளியை நிரப்புவதற்கு உதவியது. அந்த இடைவெளியில் தன்னை சுதாரித்த போது நாக்கு மீண்டும் உயிர்பெற்று உதவிக்கு வந்தது.
‘ரிமதி நீ தவறான மரத்தைப் பார்த்து குரைக்கிறாய்’ என கூறிவிட்டு ஆப்பிரேசன் தியேட்டரின் வாசலை திறந்து கொண்டு வெளியே வந்த சுந்தரம்பிள்ளைக்கு நாகரிகத்துக்காக வார்த்தைகளைத் மேலும் தவிர்த்துக் கொண்டாலும் மனத்தில் கோபம் கொதி நிலையில் மூடிய உலை போல பொங்கிக் கொண்டு வந்தது. நான் பெண்களின் முலையை பார்த்தாலும் மதுசாலைக்கு போனாலும் நீ யார் கேட்பது என்று கேட்டு விடவேண்டுமென மத்தியில் உள்ள மூளையின் பகுதி நினைத்தாலும் முன் பக்கத்து மூளை அதிக கோபத்தில் எக்காலத்திலும் பதில் சொல்லாதே எனக்கூறி சாந்தப்படுத்தியது.
கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளில் அறிவார்ந்த பதில் இருக்க முடியாது. ஏற்கனவே கோபம் மூளையின் பகுத்தறியும் பகுதியான முன் மூளையை இரும்புத்திரைபோல் மூடிவிடுகிறது. ஆத்திரத்தில் வரும் வார்த்தைகள் எதிரியின் இரும்பிலான மார்புக்கவசத்தை குத்தி மழுங்கும் அம்பின் கூர்முனைகள் ஆக எது வித பிரயோசனம் அற்றுவிடுகின்றன. எதிரிக்கு நட்டத்தை உருவாக்குவதில்லை. ஆனால் பகை உணர்வு மேலும் வளர்ப்பதுதில் முடியும்; இந்த உண்மையை சிவா சுந்தரம்பிள்ளை உணர்திருந்தால் மனத்தின் சினத்தை அடக்கிக் கொண்டு தத்துவ ரீதியாக சிந்தித்தான்.
இந்த வைத்திய சாலையில் கடந்த இரண்டு நாட்களில் பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். மிகவும் நட்பார்ந்த சாம், ஜோன், அன்ரு மத்தியில் பழகுவதற்கு இலகுவான மேலாளாராக டாக்டர் காலோஸ் சேரம் இருக்கும் போது ரிமதி பாத்தோலியஸ் என்ற ஒரு வில்லனும் உருவாகியிருகிறார். கருப்பும் வெள்ளையும் நன்மையும் தீமையும கொண்டது தான் உலகம். மனிதர்களிலும் இது காணப்படுகிறது என்ற சீனர்களின் ஜின் -யாங தத்துவம் இந்த விடயத்தில் உண்மையாகிறது.
மனக்கொதிப்புடன் அந்த வைத்தியசாலையின் தாள்வாரத்தில் நடந்து வரும் போது எதிரே வந்த பெண் சுந்தரம்பிள்ளையை பார்த்து சிரித்தது மனத்தில் புகைந்த கோபத்தை உடனே தண்ணீராக அணைத்துவிட்டது. அவள் கூந்தல் தங்கத்தின் நிறத்தில் இருந்தது. தலைமயிர்களை உயர்;த்தி டயானா இளவரசி போல வெட்டியதால் கழுத்து நீண்டு இருந்து. அவளது கூர்மையான நாசியும் அதற்கு கீழ் சிறிது குவியலாக அமைந்த சிவந்த உதடுகளும் கொண்ட அந்த பெண் சிரித்தபடி மாலை நேரத்தில் தரையில் நடந்து வரும் முழுநிலவாக எதிரே சிறிது மெதுவாக நடந்து வந்தாள். இடுப்புக்கு கீழ் கொஞ்சம் அதிகமான தசைப்பிடிப்பு அவளை கொஞ்சம் மெதுவாக நடக்க வைக்கிறது. ஆனால் அது கூட அவளுக்கு கவர்ச்சியைக் கொடுக்கிறது என எண்ணும்படி இருந்தது.
அவள் சுந்தரம்பிள்ளையை பார்த்து‘ ‘நான் போலின் இன்று இரவு உங்களுடன் வேலை செய்கிறேன்’ மென்மையான குரலில் கூறினாள். அந்தக் பெண்ணின் அழகுடன் ஒரு பாட்டிசைக்கும் பறவை போல இருந்த அவளது குரலும் சுந்தரம்பிள்ளையின் காயம்பட்ட மனத்தின் மேல் மை தடவினது போன்று இருந்தது. பெண்களின் அழகும் சங்கீதமும் ஆண்களின் மனக்காயத்தை மாற்றும் ஆற்றல் கொண்டது எனக் கேள்விப்பட்டாலும் இங்கே இரண்டும் ஒன்றாக இவளில் ஒன்றாக இருக்கிறது.
இருவரும் ஒன்றாக தேநீர் அருந்தும் அறைக்கு சென்றபோது சற்று நேரத்துக்கு முன்பு நடந்ததை கொதித்து புழுங்கிய நெல்லை கலத்தில் இருந்து பாயில் கொட்டியது போல் விவரித்த போது , ‘இந்த விடயத்தை பொருட்படுத்த வேண்டாம். ரிமதிக்கு காலோஸ் மேல் உள்ள ஆத்திரத்தை உங்களில் காட்டிள்ளார்’.
‘ஏன் இவ்வளவு வன்மம்?’
‘பல காரணங்கள் உண்டு. முக்கியமானது. ரிமதி இரவு பகலாக அதிக மணித்தியாலங்கள் வேலை செய்வதால் வைத்தியசாலைக்கு பணம் விரயமாகிறது என்றும் இதோடு வெகுவிரைவில் சொந்தமாக தொழில் செய்ய இருபதாக கூறி இருப்பதால் ஓவட்டைமுக்காக வேலை செய்வதாக சொல்லி காலோஸ் ஒரு முறை நேரடியாக கூறியது ரிமதிக்கு பிடிக்கவில்லை. இதை விட பல விடயங்கள் அவர்களது பகைமைக்கு காரணமாக இருக்க வேண்டும்’.
‘நான் இவர்களது அரசியலில் பந்தாகிறேன்;.’
‘இந்த வைத்தியசாலையில் எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. ஆனால் ஐம்பது பேருக்கு மேல் வேலை செய்வதால் இது வேலை செய்வதை பாதிக்காது . ஒவ்வொருத்ருக்கும் பத்து நண்பர்கள் இருப்பார்கள்.ஒருவரில் ஒருவர் தங்கியில்லாமல் இங்கு வேலைசெய்ய ஒழுங்கு பண்ணப்பட்டு இருக்கிறது. எல்லோரிடம் நட்பு வைத்திருக்கத் தேவையில்லை. அவரது வேலைகள் வேறுபடுத்தி பிரிக்கப்பட்டு இருப்பதால் எந்த பிரச்சைனையும் இல்லை.’
‘நீ எவ்வளவு காலமாக வேலை செய்கிறாய்?’
‘நாலு வருடங்கள் நாய்களை பராமரிக்கும் பகுதியில் வேலை செய்தேன். இன்று முதல்தான் நேர்சாக வேலை தொடங்கிறேன்.’
கதிரையில் அமர்நதபடி மேசையில் வைத்திருந்த போலினின் இடது கையை கவனித்போது மிக அவதானமாக தேர்ந்த ஓவியனால் வரையப்பட்ட ஓவியப்பெண்ணின் விரல்களைப் போல் மிகவும் அழகான நீண்ட விரல்கள். பாதியாக்கிய கடல் முத்துக்கள் போன்ற நகங்கள். அவை மெதுவான ரோசாநிறத்தில் நகச்சாயம் பூசப்படடு இருந்தது. அந்த இடது கையின் மோதிர விரலில் வெள்ளையான வளையமாக மோதிரம் போட்ட அடையாளம் இருந்தது.
‘என்ன என் விரலைப் பார்கிறாய்? மெதுவான புன்னகையுடன்
என் கனவுகளில் வந்த இராஜகுமாரியின் விரல்கள் போல் இருக்கிறது என சொல்ல நினைத்தாலும் நாகரீகம் கருதி அந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு ‘இவ்வளவு அழகான விரல்களை நான் வாழ்க்கையில் பார்த்ததில்லை. என்கேஜ் பண்ணி இருந்தாயா?’
‘எப்படி தெரியும்? இந்த இடத்துக்கு வந்து இரண்டு நாட்களில் இதை எப்படி தெரி;ந்து கொண்டாய்? என கேட்டபோது கன்னத்தில் படர்ந்த சிவப்பு, மூக்கு காது என கட்டுக்குள் நில்லாத அவுஸ்திரேலிய காட்டிடைத்தீ போல் வேகமாக பரவியது.
‘எனக்கு ஒருவரும் சொல்லவில்லை. உனது விரலில் பலகாலம் மோதிரம் கிடந்த அடையாளம் இருக்கு. சமீபத்தில்தான் கழட்டி இருக்கிறாய்’.
‘அது பெரிய கதை’ என சிரித்துவிட்டு அடையாளம் இருந்த விரலை பார்த்து வலதுகையின் விரல்களால் மெதுவாக நீவி விட்டபடி ‘ஐந்து மணியாகிவிட்டது. நாம் வேலைக்கு செல்லவேண்டும்.’
இவ்வளவு அழகான இவளை கழட்டி விட யாருக்கு மனம் வரும் என மனத்தில் நினைத்தபடி அவளை பின் தொடர்ந்தான் சுந்தரம்பிள்ளை.
இரவு எட்டரை மணிவரை தொடர்சியாக வேலை இருந்தது. எந்த ஓய்வும் இருக்கவில்லை.மீண்டும் அந்த தேநீர் அருந்தும் பகுதிக்கு வந்த போது வைத்தியசாலை அமைதியாகிவிட்டது. வெளிக்கதவை சாத்தப்பட்டது. இனி வருபவர்கள் அழைப்பு மணியை,அடித்து அனுமதியுடன், அங்கேயுள்ள உள்ள சிறிய கதவை திறந்தால்தான் உள்ளே வரமுடியும். கதவுக்கு அருகில் இருக்கும் அறையில் சிறிய கமராவில் வெளியே நிற்பவரை உள்ளே இருப்பவர்களால்; பார்த்துக் கொள்ள முடியும். வேலை செய்பவர்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடைமுறை உள்ளது. ரிசப்சனின் மேல் மாடியில் இந்த வைத்தியசாலையை சுத்தப்படும்தும் குடும்பத்தினர் இருப்பதாக அந்த குடும்பத்தினருடனே கொலிங்வூட் வசிக்கிறது கூறப்பட்டிருந்தது. கொலிங்வுட்டை மீண்டும் சந்திப்பதற்கு சுந்தரம்பிள்ளை ஆவலாக இருந்தான்.
சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடித்த சத்தம் கேட்டது. கதவுக்கு அருகே உள்ள ரிசப்சன் கவுண்டரில் இருக்கும் போலினால் கதவை திறக்க முடியும் என்றாலும் இதுவே சுந்தரம்பிள்ளைக்கு எமேர்ஜென்சி நேரத்தில் வரும் முதலாவது அழைப்பாக இருப்பதால் சிறிது ஆவலுடன் எழுந்து சென்றான். ஆனால் அங்கு சென்றபோது ஏற்கனவே உள்ளே வந்தவர்கள் வரவேற்பு அறையில் நின்றிருந்தார்கள். கவுண்டரின் உள்ளே போலின் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
பதினெட்டு வயதான மெல்லிய இளம் பெண் ஊதா நிறத்தில தலைமயிரை வர்ணமடித்து காது மூக்கு உதடு என வெளித்தெரியும் அங்கங்களை எல்லாம் அழகுபடுத்த எண்ணி; வெள்ளி வளையங்கள் அணிந்திருந்தாள். கருமையான இறுக்கமான உடைகளுக்கு மேல் தளர்ச்சியான நரை நிற கம்பளி சுவட்டர் அணிந்திருந்தாள். அவளுடன் வந்தவன் தலை மயிருக்கு ஜெல் வைத்ததால் கடற்க்கரையில் வளரும் கத்தாளை போன்ற தோற்றத்தை அவனது தலை மயிர் கொடுத்தது. ஓட்டைகள் அமைந்த டெனிம் அணிந்து கருத்த பெனியன் போட்டிருந்தான். இருவரிடமும் செல்லப்பிராணிகள் எதுவும் இல்லை.
‘எங்களுக்கு ஒரு நாய்குட்டியொன்றை தத்தெடுக்க வேண்டும் என்றாள் அந்தப் பெண்
‘அதற்கு நீங்கள் காலை நேரத்தில் வந்திருக்கவேண்டும்’ போலின்.
‘நாங்கள் காலையில் படிக்கப் போவதால் நேரம் இருப்பதில்லை’
‘இப்பொழுது நாங்கள் எமேஜென்சிக்காக மட்டுமே வேலை செய்கிறோம்’
‘நாளை மல்கத்திற்கு பிறந்த நாள். அதற்கு பரிசாக அளிப்பதற்கு ஒரு நாய்குட்டி வேணும். அதிலும் மற்றவர்களால் கைவிடப்பட்ட நாய்க்குட்டி வேண்டும்.’.
‘உங்களது ஆசை நியாயமானது. இப்பொழுது அங்கெல்லாம் நான் போக முடியாது. இந்த தொலைபேசியை எடுத்து எமேஜன்சி உதவிகளை சொல்வதும் கொண்டு வந்த செல்லப்பிராணிகளை வைத்தியம் பார்க்க வைத்தியருக்கு உதவி செய்வதுமே இந்த நேரத்தில் எனது கடமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது நான் தங்களுக்கு எதுவித உதவியும் செய்யமுடியாது.’
தேனில் தடவி வந்த வார்த்தைகள் மென்மையாக அத்துடன் உறுதியாக இருந்தது. வார்த்தைகளைவிட கண்களில் தெரிந்த தெளிவும் தொலைபேசியை கையில் வைத்தபடி பேசும் உடல் மொழியும் போலினை முதல் நாள் வேலைசெய்பவளாக காட்டவில்லை. பலவருடங்கள் வரவேற்புத்துறையியில் பட்டப்படிப்பும் பின் பயிற்சியும் பெற்றவள்போல் தோற்றமளித்தாள்.
‘நாய்குட்டிகளை பார்த்து விட்டாவது போகிறோம்’ என அந்தப் பெண் கெஞ்சினாள்.
இளைஞன் போவதற்கு தயாராக இருந்தான் ஆனால் அந்த இளம் பெண்ணின் உடல்மொழியில் அவள் நாய்குட்டியை பார்க்காமல் நகரமாட்டாள் என்பது தெரிந்தது. சுந்தரம்பிள்ளை மனத்தில் இந்த சிக்கலை போலினுக்கு சங்கடம் கொடுக்காமல் எப்படி தீர்க்கலாம் எண்ணிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் வாசல் மணி அடித்தது
‘மன்னிக்கவேண்டும்’ என கூறிவிட்டு கதவை திறப்பதற்கு சென்றாள் போலின்
‘என்னை மன்னித்து விடு’ என கூறிகொண்டு அந்த இளம் பெண் அவளது நண்பனை கட்டிப் பிடித்து தென்னைமரத்தில் தேங்காய்க்கோ கள்ளுக்கோ ஏறுபவர் போல் கைகளால் தோளை பிடித்து ஏறி தன் இரண்டு கால்களாலும் இடுப்பை சுற்றி வளைத்தபடி அமர்ந்படி உதட்டோடு முத்தம் குடுத்தாள் என்பதை விட கடைசிச் சொட்டு வழுக்கலை விழுங்குவதற்கு இளநீர் கோம்பையை உறிஞ்சி குடிப்பது போல் உறிஞ்சினாள். நிற்கும் இடத்தையோ அல்லது சுற்றி நிற்பவர்களையோ கருத்தில் கொள்ளாது தனது நண்பனை சந்தோசப்படுத்துவதில் அந்த இளம் பெண்ணின் கவனம் இருந்தது.
போலின் கதவைத் திறந்ததும் ஒரு மத்திய வயதுப் பெண் உள்ளே வந்தாள். அந்தப் பெண்ணின் கையில் பூனையை; வைத்திருக்கும் பெட்டி இருந்தது. வரவேற்பு அறையில் இந்த காதல் காட்சியை கண்டதும் சிறிது திகைத்துபடி நின்றாள்.
‘மன்னி;க்க வேண்டும்’ எனக்கூறியபடி போலின் அந்த ஜோடியின் கவனத்தைதிருப்பினாள்.
அந்தப் பெண் சிறிது வெட்;கத்துடன் அவனது தோளில் இருந்து கையை எடுத்து கால்களை இடுப்பில் விலக்கி இறங்கினாள்.
பூனையைக் கொண்டு வந்த பெண்ணிடம் இருந்து விபரங்களை எடுத்து கொண்டிருக்கும் போலினிடம் சுந்தரம்பிள்ளை முன்னால் சென்று ‘நான் இவர்களை கூட்டிக்கொண்டு தத்தெடுக்க இருக்கும் நாய்க்குட்டிகளை காட்டுகிறேன்’ என்றான்
போலினுக்கு விருப்பமில்லாதது முகத்தில் தெரிந்தாலும் எதுவும் சொல்லவில்லை.
‘வாருங்கள்’ என சொன்னதும் பலமுறை நன்றி சொன்னபடி அந்தப் பெண் சுந்தரம்பிள்ளையை தொடர அந்த இளைஞனும் அவளைத் தொடர்ந்து வந்தான் .
‘நாளைக்கு பிறந்த தினம் என்றால் இன்றைக்கு தானா நாய்குட்டி வேண்டுகிறது. .அதைவிட நாய்க்குட்டியின் சாப்பாடு மற்றய தேவைகள் இருக்கிறது. அதற்கு தயாராக இருக்கிறீர்களா?’
‘ஏற்கனவே ஒரு நாய்க்குட்டி ஒன்றை கடையில் சில நாட்களுக்கு முன்பாக வாங்கி இருந்தோம். அந்த நாய்குட்டியின் இதயத்தில் ஓட்டை என இன்று மாலை எமது மிருக வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மணித்தியலத்திற்கு முன்புதான் கருணைக்கொலை செய்யப்பட்டது என்றாள் அந்தப்பெண் சொன்னாள்.
‘எனக்கு நாய் பிறந்த தினத்துக்கு தேவை இல்லை.’ என்றான் அந்த இளைஞன்
‘நான் வாக்குறுதி அளித்திருந்தேன்’
இருவரும் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்தபடி வந்தார்கள்.
நாய்களை வைத்திருக்கு இடத்தில் லைட்டுகள் அணைக்கப்பட்டு இருந்தது. வாசலில் இருந்த லைட்டை போட்டதும் இருட்டில் அமைதியாக இருந்த நாய்கள் வருபவர்களை வரவேற்று குரைத்தன. அங்கே பத்துக் குறைவான நாய்கள் மட்டும் தத்து எடுப்பவர்களுக்குதயாராக இருந்தன.
‘இதில் ஏதாவது உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த நாய்களின் நம்பரை ஒவ்பீசில் கொடுத்து விட்டு போங்கள்’ எனக் கூறி வாசலில் நின்றார் சுந்தரம்பிள்ளை
சிறிது சேரத்தில் ‘நன்றி’ எனக் கூறிவிட்டு அந்த ஜோடிகள் மீண்டும் கலவி கொள்ளும் பாம்புகள் போல் நெருங்கி பிணைந்தபடி சென்றனர்.
காதலனுக்கு கொடுத்த வார்தையை காப்பாற்ற துடிக்கும் இளம் பெண்ணுக்கு உதவி செய்த திருப்தி சுந்தரம்பிள்ளைக்கு ஏற்பட்டது.
வரவேற்பு அறையில் வைத்தியருக்காக காத்திருந்த மத்திய வயது பெண்ணை அவரது பூனையுடன் ஆலோசனை அறைக்கு அழைத்தான் சந்தரம்பிள்ளை. மேசையில் வைத்து பரிசோதித்த போது அந்தப் பெண்ணின் பூனையின்; தலையில் ஒரு கட்டியால் சீழ் வடிந்தது.
அந்தப் பெண் ’இது பொசம் கடித்தது’ எனக் அவசரமாகக் கூறினாள்;.
‘இது பொசம் கடிக்கவில்லை. மூன்று அல்லது நாலு நாட்களுக்கு முன்பு வேறு பூனை ஒன்றுடன் ஏற்பட்ட சண்டையினால் ஏற்பட்ட காயத்தால் சீழ் பிடித்திருக்கிறது’.
ஓவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் ஒவ்வொரு விடயத்திற்கும் மிகவும் இலகுவான நேரடியான விளக்கங்கள் வத்திருப்பார்கள். சீழ் பிடித்த சிறிய காயமாக இருக்கட்டும் அல்லது மிக சிக்கலான கான்சர் போன்ற விடயமாக இருந்தாலும் ஏதாவது சாப்பாடு அல்லது சூழல் என சுலபமான விடைகளை வைத்து விடுவது மனிதர்களுக்கான மருத்துவத்தில் ஏராளமாக அறியமுடியும். இந்தளவு இல்லாவிட்டாலும் புறக்கணிக்க முடியாத அளவு விலங்குகளுக்கான வைத்தியத்திலும் இப்படியாக விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டு ஐந்து வருட மருத்துவ பயிற்சியை கூட திணறடித்துவிடுவார்கள்.
சுந்தரம்பிள்ளையின் கூற்றை நம்பாதது அந்த பெண்ணின் கண்களில் தெரிந்தது. அதை பொருட்படுத்தாமல் அந்த சீழ் வடிந்த புண்ணை கழுவிவிட்டு அன்ரி பயற்றிக் மருந்தை ஊசியால் அந்த பூனைக்கு; ஏற்றிவிட்டு பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்தார்.
‘நீங்கள் வளர்க்கும் ரைகருக்கு இரண்டு உலகங்கள் உண்டு. உங்கள் வீடு சோபாகட்டில் என நீங்கள் விலை கொடுத்து ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறீர்கள். அந்த சூழலில் வாழும் ரைகர் இதைவிட தானும் உங்கள் வீட்டை சுற்றி ஒரு பிரதேசத்தை தனது வாசனைத் தன்மையால் உருவாக்கியுள்ளது. அந்த பிரதேசம் உங்களுக்கு தெரியாது. அந்த இடத்தை மற்ற பூனைகள் ஆக்கிரமிக்கும்போது உங்கள் ரைகர் உண்மையில் பெங்கால் ரைகராக மாறும். இந்த யுத்தத்தின் விழுப்புண்தான் இந்த காயம்’
‘ரைகருக்கு ஏற்கனவே விதையை எடுத்தாகிவிட்டதே?
‘பெண்பூனைகளை தேடி செல்வதை மட்டும்தான் நீங்கள் விதையை எடுப்பதால் கட்டுப்படுத்தமுடியும் மேலும் இந்த வசந்த காலத்தில் பூனைகள் சினை கொள்ளுவதற்கு தேடித்திரியும் காலம். அலைந்து திரியும் ஆண் பூனையொன்று ரைகரின் பிரதேசத்தை ஆக்கிரமித்திருக்கலாம்.நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆண் மட்டுமல்ல பெண் பூனையும் போராடும்’
‘சில நாட்களுக்கு முன் நடு இரவில் பூனையின் சத்தம் கேட்டேன்.’
இப்பொழுது அந்தப் பெண்ணின் அமைதி தெரிந்தது
‘அன்றுதான் நடந்திருக்கு. நீங்கள் இரவுகளில் ரைகரை வீட்டின் உள்ளே வைத்திருப்பதன் மூலம் இப்படியானவற்றை குறைக்க முடியும்’.
‘முன்பும் இப்படி சீழ்வடியும் புண் வந்திருக்கிறது. ஆனால் காரணத்தை ஒருவரும் இப்படி சொல்லவில்லை.
‘இன்று இரவில் நீங்கள் வந்ததால் அதிக நேரம் என்;னால் பேசமுடிந்து’ எனக் கூறி அந்த பெணணை வெளியே அனுப்பி வைத்தார்.
[தொடரும்]