வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது….

வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது....‘பொல’ ‘பொல’வென்று பொழுது விடியும் சமயம்.. ‘மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருக்கும். புலரும் பொழுதினை வரவேற்றுப்பாடுபவவை .. சேவல்களா? இல்லை.. பின்.. மயில்கள்தாம். மயில்கள் அகவிக் காலையினை வரவேற்கும் பாங்கினை ‘முழங்கா’விலில்தான் காணலாம். முழங்காவில் என்றதும் ஞாபகம் வருபவை.. முழங்காவிற் சந்திக்கோவில், தேநீர்க்கடை, குழாய்க்கிணறுகள், பெண்கள் குடியேற்றத்திட்டம்… இவைதாம். இவை எண்பதுகளின் ஆரம்பகாலகட்டத்து நினைவுகள். மன்னார்ப்பகுதிக்கும் சங்குப்பிட்டிக்கும் இடையில் அமைந்துள்ள முழங்காவிற் கிராமத்தின் முதற் பஸ் தரிப்பிடம் ‘பல்லவராயன் கட்டு’ என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ளது.

என் நண்பனொருவன் ‘சிறீ’ (மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் தொழில்நுட்பத்துறையில் படித்திக்கொண்டிருந்வன்) குழாய்க்கிணறுத்திட்டத்தில் பயிற்சிக்காகச்  சேர்ந்திருந்த சமயம், அவனது அழைப்பின்பேரில் அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வூர் மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. அச்சந்திப்புகளின்போது அறிந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அத்துடன் நனவிடைதோய்தலும் இதனுள் அடக்கம்.

அக்கிராமத்து மக்கள் யாரைக் கேட்டாலும் காட்டிற்குள் உள்ள பல்லவராயன் கோட்டையின் இடிபாடுகளைப் பற்றிக் கூறினார்கள். ஆனால் யாருக்குமே அதன் சரியான இருப்பிடம் தெரியவில்லை.  வேட்டைக்குச் சென்றவர்கள் தற்செயலாகக் கண்டதாகக் கூறினார்கள். நானும் ஒருநாள் முழுவதும் , காடுமேடெல்லாம் நண்பர் சிறீயுடனும், அவ்வூர்ச் சங்கக்கடை மனேஜருடனும் அலைந்துதான் பார்த்தேன். அன்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…. ‘பல்லவராயன் கட்டு’, ‘கரிகாலன் நாகபடுவான்’ குளம் ஆகிய பெயர்களே அப்பகுதியின் சரித்திர முக்கியத்துவத்தை உணர்த்துவன. {கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும்  தமிழரசர்களின் சிங்கைநகர் இப்பகுதியிலேயே இருந்திருக்க வேண்டுமென்று கருதுவர். ஆனால் இந்த விடயத்தில் நான் சுவாமி ஞானப்பிரகாசர் கட்சி. வல்லிபுரமே சிங்கைநகராக இருந்திருக்க வேண்டுமென்பதுதான் எனது கருத்தும்.)

கரிகாலன் நாகபடுவான் குளம் நெஞ்சை அள்ளும் அழகு வாய்ந்தது. அந்தக் காட்டின் தனிமையில் அகன்றி விரிந்திருந்த அந்தக் குளமும், அங்கு காணப்பட்ட புள்ளினங்களும், விருட்சங்களும் என் நெஞ்சில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கின்றன. எத்தனை நேரமானாலும் , அந்தக் குளத்தின் கட்டிலிருந்துகொண்டு இயற்கையின் அழகில் மெய்ம்மறந்திருக்கலாம். அத்துணை வனப்பு மிக்கவை அந்தக் குளமும், அது அமைந்திருக்கும் பிரதேசமும். அன்று காடெல்லாம் பல்லவராயன் கோட்டை இடிபாடுகளைத்தேடி அலைந்து திரிந்துவிட்டுக் களைத்திருந்த சமயம் அந்தக் கரிகாலன் நாகபடுவான் குளத்தின் அழகிலும், அப்பகுதியில் விரவிக்கிடந்த அமைதியிலும் மெய்ம்மறந்திருந்ததை ஒருபோதும் மறக்க முடியாது.

நூற்றுக்கணக்கில் நீர்ப்பறவைகளின் படபடப்பைத் தவிர , மென் தென்றலில், அமைதியாகத் தூங்கிக்கிடக்கும் ‘கரிகாலன் நாகபடுவான்’ குளம் அமைந்திருந்த பகுதி அற்புதமானதொரு பிரதேசம்தான்.

தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல் போன்ற பறவைகளின் சரணாலயத்தைப் போல் ஈழத்தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி அப்பகுதியென்று அப்பொழுது உணர்ந்தேன். அத்துடன் பல்லவராயன் கட்டு, கரிகாலன் நாகபடுவான் குளப்பகுதிகள் ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய பகுதிகள். ஈழத்துத் தமிழர்களின் பிரதேசங்களில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் வரலாற்றுத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம். பல்லவராயன் கட்டு அவ்வகையான , ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய பகுதிகளிலொன்று.


வாசிப்பும், யோசிப்பும் 62:  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலும், வாசிப்பின் பரிணாம வளர்ச்சியும்!

kalki_ponniyinselvan59.jpg - 15.61 Kbவாசிப்பும், யோசிப்பும் 62:  கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலும், வாசிப்பின் பரிணாம வளர்ச்சியும்!கல்கியின் படைப்புகளில் என்னைக் கவர்ந்தது ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் எழுத்து பற்றிக் காலத்துக்குக் காலம் பலர் கிண்டலடித்திருக்கின்றார்கள். அவற்றையெல்லாம் மீறி இன்றுவரை அவரது படைப்புகள் நின்று பிடித்திருக்கின்றன.  குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் பற்றி, கல்கியின் எழுத்தை விமர்சிப்பவர்கள்கூடத் தவராமல் குறிப்பிடுவார்கள். ஒரு மனிதரின் வாழ்க்கையானது பல்வேறு பருவங்களால் ஆனது. அந்தந்தப் பருவங்களுக்கேற்ற வகையில் ஒருவரது வாசிப்புப் பழக்கமுமிருக்கும். சிறுவயதில் வாண்டுமாமாவின் சிறுவர் கதைகளை, அழ.வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களில் தம்மையிழக்கும் ஒருவர் அவரது பதின்ம வயதில் வெகுசனப் பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆதிக்கத்துக்குள்ளாகின்றார். இவ்விதமாக ஒருவரது வாசிப்புப் பழக்கம், வாசிப்பவரின் எழுத்து மீதான ஆர்வம், தேடலுக்கேற்ப வளர்ச்சியடைகின்றது; அல்லது தேங்கி நின்று விடுகின்றது.

சிலரது படைப்புகள் வயது வேறுபாடின்றி அனைவரையும் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. அவ்விதமான படைப்புகளிலொன்றுதான் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியைப் பற்றி விமர்சிக்கும் பலர் விடும் முக்கியமான தவறு: சிறு வயதில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அனுபவித்துப்படித்த அவர்கள், அந்த வாசிப்பு அனுபவத்தை மறந்துவிட்டு, தம் மேதா விலாசத்தைக் காட்ட கல்கியைத் தரக்குறைவாக விமர்சிக்கின்றார்களென்று எண்ணுகின்றேன்.

வளர்ந்த எழுத்தாளரொருவர் தான் சிறுவயதில் கடந்து வந்த சிறுவர் இலக்கியப் படைப்புகளைத் தரக்குறைவாக விமர்சிக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அச்சிறுவர் இலக்கியம் ஒருவரது வாசிப்பனுவத்தில் முக்கியமானதொரு படி என்பது தெரிந்திருக்கும். ஆனால் அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற படைப்புகளை விமர்சிக்கும்போது அவ்விதம் எண்ணுவதில்லை. ஒருவரது வாசிப்பு அனுபவத்தில் சிறுவர் இலக்கியம் எவ்வளவு முக்கியமான பங்கினை வகிக்கின்றதோ, அவ்விதமே அவர் தனது பதின்ம வயதுக் காலத்தில், அதன் பின்னர் வாசிக்கும் படைப்புகளுமிருக்கின்றன என்பதை அவர் மறந்து விடுகின்றார்; தான் இளமையில் வாசித்த படைப்புகள் அவ்வயதில் முக்கியமானவை என்பதை மறந்து விட்டு அவ்விதமான படைப்புகளை, அவற்றை எழுதிய எழுத்தாளர்களையெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்கத்தொடங்குகின்றார்.

கல்கி சேர். வால்டர் ஸ்காட் போன்றவர்களின் எழுத்தினைக் ‘காப்பி’ அடித்தவரென்று தமிழகத்துச் சஞ்சிகைகளில் வாசித்திருக்கின்றேன். புதுமைப்பித்தன் போன்றவர்களும் இவ்விதம் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும், அவற்றுக்குக் கல்கியே பதிலளித்ததாகவும் வாசித்திருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற விரிவான, ஐந்து பாகங்களை உள்ளடக்கிய நாவலொன்றினை, சுவை குன்றாமல், பாத்திரங்களை உயிர்ப்புடன், மர்மச்சுழல்கள் நிறைந்த கதையுடன், தொய்வில்லாமல் படைப்பென்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அக்கதையினை வாசிக்கும் ஒருவர் அக்கதை கூறப்படும் முறையில் தன்னை மறந்து விடுகின்றார். பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த எவரும் வந்தியத்தேவனையோ, குந்தவைப் பிராட்டியாரையோ, கொடும்பாளூர் இளவரசி வானதியையோ, பெரிய / சின்னப் பழுவேட்டையர்களையோ, பூங்குழலியையோ, மணிமேகலையையோ, ஆழ்வார்க்கடியானையோ, நந்தினியையோ மறந்து விடுவார்களா?

ஐம்பதுகளில் வெளியான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இன்றும் இன்றைய தலைமுறை விரும்பிப் படிக்கிறதென்றால் அதற்குக் காரணம் கல்கியின் சுவையான, அவ்வப்போது நகைச்சுவை ததும்பும் ‘எழுத்து’தான். மிக அதிகமான தமிழர்களை வாசிப்புப் பழக்கத்திற்கு ஈர்த்ததில் கல்கியின் பங்கு முக்கியமானதென்றும் நினைக்கின்றேன். ஒருவரது வாசிப்பின் பரிணாம வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில் கல்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் முக்கியமானதொரு பங்குண்டு.

ngiri2704@rogers.com