வாசிப்பும், யோசிப்பும் 64: என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் ‘ஜீவகீதம்’.

வாசிப்பும், யோசிப்பும் 64: என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்'.ஜெகசிற்பியன்எனது மாணவப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர் ஜெகசிற்பியன். அவரது சரித்திரக் கதைகளில் ‘நந்திவர்மன் காதலி’, ‘பத்தினிக்கோட்டம்’ ஆகியவை எனக்கு அக்காலகட்டத்தில் பிடித்த நாவல்கள். சமூக நாவல்களைப் பொறுத்தவரையில் கல்கியில் தொடராக வெளிவந்த ‘கிளிஞ்சல் கோபுரம்’, ‘ஜீவகீதம்’ ஆகியவை மிகவும் பிடித்திருந்தன. நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற வெகுசனப் படைப்புகளை வழங்கிய பலரின் படைப்புகளை அக்காலகட்டத்தில் பிடித்திருந்தாலும், தற்போது வாசிக்கும்போது அன்று என்னைக் கவர்ந்ததைப்போல் இன்று பெரிதாகக் கவர்வதில்லை. ஆனால் ஜெகசிற்பியனின் ‘ஜீவகீதம்’ நாவலை அண்மையில் வாசித்தபொழுது அன்று என்னைக் கவர்ந்ததுபோல் இன்றும் என்னைக் கவர்ந்திருந்தது எனக்கே ஆச்சரியத்தைத் தந்தது. இதற்குக் காரணமென்னவாகவிருக்குமெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தேன். ஜெகசிற்பியனின் படைப்புகள் இன்றும் என்னைக் கவர்வதற்கு முக்கிய காரணங்களாக அவரது நாட்டுப்பற்று மிக்க, சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்து , பாத்திரப்படைப்பு, படைப்பினூடு அவர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் வர்ணனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாமென்று நினைக்கின்றேன்.

 அவரது ‘ஜீவகீதம்’ நாவல் இந்திய மொழிகள் பலவற்றில் ‘தேசிய புத்தக அறக்கட்டளை’ யினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவரது சமூக நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற நாவலாக இதனைக் கூறலாம். இந்நாவல் கூறும் கதைதான் என்ன?

பர்மாவுக்கு உழைப்புக்காகத் தந்தையுடன் தன் சிறுவயதில் புலம் பெயர்ந்த சபேசன் பர்மாவிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டு மீண்டும் தாயகமான தமிழகத்துக்குத் திரும்புகின்றான். அவ்விதம் திரும்புகையில் அவனை முதல் கப்பலில் அனுப்பிவிட்டு அடுத்த கப்பலில் தந்தை வருவதாக ஏற்பாடு. சென்னைக்கு இவ்விதம் அகதியாக வரும் சபேசன் தனது சொந்த ஊரில் காத்திருக்கும் தாயாரைச் சந்திப்பதற்கு முன்பாகத் தந்தை அடுத்த கப்பலில் வரும் வரையில் சென்னையில் தங்கியிருக்க முடிவு செய்கின்றான். அங்கு நச்சி என்கின்ற நச்சினார்க்கினியனைச் சந்திக்கின்றான். நச்சி என்னும் இந்தப் பாத்திரம் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை யாரும் சந்தித்திராத வித்தியாசமான பாத்திரமென்று நான் நினைக்கின்றேன். சென்னைப் பேச்சுத்தமிழில் அசத்தும் இவனுக்கும், கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தியான லூசிக்குமிடையிலான காதல், , அதற்காக அவள் முன் தான் ஒரு உதவி இயக்குநர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என அவனெடுக்கும் பல்வேறு அவதாரங்கள் நாவலின் சுவையினைக் கூட்டுபவை. இவனது பிறப்பும் வித்தியாசமானது. இவனது தாயான கன்னியம்மாள் ஆங்கிலோ இந்தியக் குடும்பமொன்றின் பணிப்பெண்ணாக வேலை பார்க்கின்றாள். உலக மகா யுத்தக் காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கறுப்பின இராணுவச் சிப்பாய் ஒருவனுக்கும், கன்னியம்மாளுக்கும் ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவன்தான் நச்சி.  அவனது தோற்றமும  ஈர் இனக்கலப்பின் விளைவினை வெளிப்படுத்தும் தன்மையானது.

ஓர் அரசியல்வாதியின் சகோதரிக்கும் , பயில்வான் ஒருவனுக்கும் பிறந்த வேதா என்னும் பெண்ணும் நச்சுவின் தாயாரின் பொறுப்பில் வளர்கின்றாள். வீதியில் அநாதரவாகக் கை விடப்பட்ட குழந்தையான வேதாவை அப்பயில்வான் தம்பையாவே கன்னியம்மாளிடம் வளர்க்கக் கொடுக்கின்றான். நச்ச்சினார்க்கினியன் என்று நச்சுவுக்கும், வேதகுமாரி என்று வேதாவுக்கும் பெயர் வைப்பதும் அந்தப் பயில்வான் தம்பையாதான். தம்பையாவும் வித்தியாசமான பாத்திரம்தான். நாவலின் இறுதியில்தான் பயில்வான் தம்பையாவுக்கே வேதா அவன் மகள் என்னும் விபரம் தெரியும் வகையில் கதையினை நாவலாசிரியர் பின்னியிருக்கின்றார். அதே சமயம் அகதியாகச் சென்னையில் வீடற்றவனாக அலையும் சபேசனின் அன்றாட நகர வாழ்க்கையினை நன்கு விபரித்திருப்பார் ஜெகசிற்பியன்.

இவ்விதமாக நகரும் கதையினூடு ஆசிரியர் அக்காலகட்டத்தில் நிலவிய ஊழல் நிறைந்த அரசியலை, நாயகன் சபேசனின் தேச பக்தி மிக்க இலட்சிய நோக்கினை, உணர்வினை, நகரத்து வாழ்வின் அவலங்களை, கிராமத்து வாழ்வின் இனிமையினை, ஆரோக்கியமான இயல்பினை, அகதிகளின் வாழ்வின் அவலங்களையெல்லாம் (பர்மாவிலிருந்து மற்றும் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியா திரும்பியவர்களின் அவலங்களையெல்லாம்) விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பார். சபேசன், நச்சி, கன்னியம்மாள், தம்பையா போன்ற பாத்திரங்களூடு நகர அடித்தட்டுமக்கள் இருப்புக்காக அன்றாடம் போராடுவதை விரிவாகவே நாவலில் விபரித்திருப்பார் ஜெகசிற்பியன். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும், அவ்விதம் பணம் கொடுப்பதன்மூலம் ஊழல்  அரசியல்வாதிகளுக்கு மேலும்  துணைபோகும் வாக்காளர்களின் செயற்பாடுகளையும் கடுமையாகவே விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பார் நாவலாசிரியர். சிந்தனையைத் தூண்டும் ஆரோக்கியமான இலட்சிய நோக்கு மிக்க இவ்வகையான சிந்தனைகளை வெளிப்படுத்தும் படைப்புகள் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்குமென்பதால் இந்த நாவலும் அன்றும், இன்றும் பிடித்திருக்கின்றதென்றும் கூறலாம்.

இவ்விதமாகச் செல்லும் நாவலில் நாயகன் சபேசன் ஒரு கட்டத்தில் நகர வாழ்வின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் , தந்தையை இனியும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தவனாகச் சொந்தக் கிராமத்தில் அவனை எதிர்பார்த்திருக்கும் அன்னையைச் சந்திப்பதற்காகச் செல்கின்றான். ஆனால், அங்கும் அவன் ஏமாற்றங்களையும் , துயரையுமே எதிர்கொள்கின்றான். அவன் செல்வதற்கு முன்பாக அவனது அன்னை இறந்து விடுகின்றார். அவனது அத்தை மீனாட்சி தன் கணவருடன் அவனது வீட்டில் குடியிருக்கின்றார். அவர்களும் வறுமையில், இவனும் வறுமையில், இந்த நிலையில் தாயையும் இழந்த நிலையில் சபேசன் மீண்டும் சென்னை மாநகருக்குத் திரும்ப முடிவு செய்கின்றான். அவனது வாழ்வு அதன்பின் பெங்களூர், சென்னையென்று அலைக்கழிகின்றது.

இதே சமயம் அவனுக்கும் , வேதாவுக்குமிடையிலான காதல் உணர்வுகளையும் ஆசிரியர் அவ்வப்போது நயமாக, சுவையாக வெளிப்படுத்திச் செல்கின்றார். பெங்களூருக்கு அரசியலவாதி மாரிமுத்து மற்றும் அவனது அடியாட்களால் ஆசிரியர் வேலைக்கான நேர்காணலென்ற போர்வையில் பெங்களூர் ஹொட்டலொன்றுக்கு வரப்பட்ட வேதாவை அச்சமயம், அங்கு அறைப்பையனாகப் பணிபுரியும் சபேசன் சந்தித்து, அவளது இக்கட்டிலிருந்து காப்பாற்றிச் சென்னைக்கு அழைத்து வருகின்றான்.

இதற்கிடையில் சபேசனின் வாழ்வில் கிழக்கும் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியா வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த சந்தியா என்னும் பெண்ணொருத்தியும் அவளது குடும்பத்தவர்களும் எதிர்படுகின்றார்கள். பின்னர் சென்னையிலும் சந்தியா சபேசனின் வாழ்வில் மீள்பிரவேசம் செய்கின்றாள். சபேசனின் சந்தியா மீதான, வேதா மீதான உணர்வுகளை நாவல் விபரிக்கின்றது.

நாவலின் முடிவு துயரகரமானது. சந்தியாவின் தந்தையார் வேறு சிலருடன் ( ஒரு மலையாளி, ஒரு பெங்காலி மற்றும் ஒரு சீனன்) சேர்ந்து இந்தியாவுக்கெதிராகச் செய்யும் சதியினை சந்தியா மூலமே சபேசன் அறிந்து கொள்கின்றான். சதிகாரர்களின் இருப்பிடத்தில் அவர்கள் கை வசமிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி வெளியேற முனையும் சமயம் சதிகாரர்களிடம் அகப்பட்டுச் சபேசன் சுட்டுக்கொல்லப்படுகின்றான். நண்பனின் நாட்டுப்பற்றும், அவன் நாட்டுக்காகத் தன் உயிரை இழந்ததும் நச்சியினைப் பெரிதும் பாதித்து விடுகின்றது. அவன் இந்திய இராணுவத்தில் சேர்ந்து தேச சேவை செய்வதுடனும்,. வேதா தன் தாயாருடன் இணைந்து ஆசிரியப் பணியாற்றுவதுடனும் நாவல் முடிவுறுகின்றது.

நாவலினூடு வெளிப்படும் என்னைக் கவர்ந்த கருத்துகளைத் தாங்கிய பந்திகள் சில ஒரு மாதிரிக்காக:

” மண்ணுலகில் பிறந்த ஒருவன் மீண்டும் மண்ணுலகுக்குத் திரும்பிப் போவதற்குள், தான் வாழ்வும் தன்னைச்சார்ந்வர்களை வாழ வைக்கவுமே எத்தனையெத்தனையோ போராட்டங்களை நிகழ்த்த வேண்டியவனாயுள்ள இன்றைய நிலையில், இவையும் அவனுக்குப் போதா என்று தேசம், இனம், மொழி, நிறம், மதம் இவற்றின் பெயரால் அவனை மேலும் மேலும் மிதித்து நசுக்கித் துன்புறுத்துவது என்ன நீதி? மனிதர்களுக்காக உலகமா? உலகத்துக்காக மனிதர்களா? மனிதர்களுக்காகத்தான் இந்த உலகம் என்பதை இந்த மனிதர்கள் எப்போது உணரப் போகின்றார்கள்? அப்படி உணராதவர்களையெல்லாம் – உணரக்கூடியவர்களையும் உணர விடாமல் குறுக்கே நின்று தடுப்பவர்களையெல்லாம் – இன்றே, இக்கணமே அழித்துப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிடவேண்டும் என்ற ஆத்திரக் குமுறல் அடைந்தான் சபேசன் (பக்கம்ன்340)

‘கிராம வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்!  நகரங்களுக்கே உரிய பல்வேறு சட்டங்கள் என்னும் திருகாணிகளால் பூட்டப்பட்ட ஓர் இயந்திரம் போலத்தன் மனிதன் அங்கு வாழ வேண்டியிருக்கிறது. பட்டண எல்லைகளில் காலை வைத்ததுமே மனிதனின் பாதிச் சுதந்திரம் பறிபோய் விடுகிறது.  ஆனால் கிராமமோ? … சுயக்கட்டுப்பாட்டில் நின்று நியாயமான சுதந்திரங்கள் அவ்வளவையும் இங்கு அனுபவிக்கலாம். கருகித்துவண்ட அவன் மனம் ஒரு புதிய மலர்ச்சி கண்டு நிமிரவே சிந்தனை மேலும் நீண்டது:

இந்த இனிய சுதந்திர இன்பத்தைச் சில கிராம மக்கள் வெறுத்து – செங்கோலைவிடச் சிறந்ததான ஏர்க்கலப்பையையும் ஏற்றக்கோலையும் பிடிக்க அலுப்படைந்து – சிங்கிள் சாயாவுக்கும், பன் பிஸ்கோத்துக்கும் சாப்பாட்டுக்கூடைக்காரியின் எச்சில் சோற்றுக்கும் நைலான் சேலைக்கும் தினத்துக்கொரு சினிமாவுக்கும் ஆசைப்பட்டு நகரங்களுக்கு ஓடி, அங்கு மானம் மரியாதையினை இழந்து, மனித நாகரிகத்துக்கே புறம்பான பல வேலைகளைச் செய்து, குந்தியிருக்கக் குடிசைகளுமின்றி நடைபாதைகளிலும் சாக்கடைக் கால்வாய் ஓரங்களிலும் சாலை மரத்தடிகளிலும் ஒண்டிக்கிடந்து காலத்தைக் கழிக்கத் துணியும் அறியாமையை என்னென்பது? (பக்கம் 345)

இன்று சொற்சிலம்பமாடும் விரிந்த நாவல்கள் பல வெளிவருகின்றன.  அவற்றை வாசிக்கும்போது அவற்றில் பெரும்பாலானவற்றுடன் , ‘ஜீவகீதம்’ போன்ற நாவல்களுடன் ஒன்றுவதைப்போல்,  எம்மால் முழுமையாக மனமொன்றிட முடிவதில்லை நாவலொன்றின் வெற்றிக்குச் சொல் ஆளுமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, நாவல் கூறும் பொருள் ஆகியவையும். பல நவீன நாவல்கள் மொழியில் சிறந்து விளங்கினாலும் நாவலின் ஏனைய கூறுகளில் சிறந்த விளங்காத காரணத்தால் வாசகரின் நெஞ்சங்களின் ஆழத்தைச் சென்றடைவதில்லை. இதனால் அவற்றின் பெரும்பாலானவற்றை வாசித்த மறு விநாடியே மறந்தும் விடுகின்றோம். நாவலொன்றினை வாசிக்கும்போது நாவலின் பாத்திரங்களின் வாழ்வுடன் ஒன்றுவதையும் இழந்து விடுகின்றோம்.

ஜெகசிற்பியனின் ‘ஜீவகீதம்’ நாவலின் அண்மைய பதிப்பினைத் தமிழகத்தில் வானதி பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ngiri2704@rogers.com