நினைவுகளின் சுவட்டில் (65 & 66)

அத்தியாயம் 65

வெங்கட் சாமிநாதன் புர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்கு வந்த ஆங்கில தினசரி பத்திரிகைகள் கல்கத்தாவிலிருந்து வரும். புர்லாவுக்கு வந்தவை அம்ரித் பஜார் பத்திரிகாவும், ஸ்டேட்ஸ்மன் –னும் ஸ்டேட்ஸ்மன் ஆங்கிலேயர் நடத்தும் பத்திரிகையாச்சே என்று அம்ரித் பஜார் பத்திரிகை பக்கம் மனம் சென்றது. அது ஒரு பெரிய ஸ்தாபனம். அனேகமாக ஆனந்த பஜார் பத்திரிகா என்னும் வங்காளி மொழி பதிப்பையும் அது வெளியிட்டு வந்தது. பெரும்பாலும் வங்காளிகள் இந்த் இரண்டு பத்திரிகைகளில் ஒன்றைத்தான் விரும்பிப் படிப்பார்கள்.  துஷார் காந்தி கோஷ் அதன் ஆசிரியர். அது நம்மூர் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், சுதேசமித்திரன், தினமணி, தினசரி போன்று தேசீய உணர்வு மிக்க பத்திரிகை சுதந்திர போராட்டத்தோடு தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டவரகள். ஜுகாந்தர் என்று ஒரு வங்காளி பத்திரிகையும் கூட வந்தது. இன்னொரு பத்திரிகையும் ஆங்கில பத்திரிகை தான், கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்தது. பெயர்சரியாக நினைவில் இல்லை. ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை இப்போது நினைவு கொள்ளக் காரணம் இடையிடையே அந்தப் பத்திர்கையும் வாங்கிக்கொண்டிருந்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் எம்.என். ராய் தன் நினைவுகளை அவ்வப்போது எழுதிக்கொண்டிருப்பார். எம்.என். ராய் லெனின் காலத்திலிருந்து அவர் காலத்திய தலைவர்களுடன் உறவாடியவர். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்கு என்று அல்லது கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் கொமின்டெர்ன் சார்பில் தொடர்பு வைத்துக் கொள்ள அனுப்பப் பட்டவர் என்று படித்த ஞாபகம். எந்த நாட்டுக்கு அவ்வாறு அனுப்பப் பட்டார் என்பது நினைவில் இல்லை.

பெரிய மேதை. சிந்தனையாளர். ஸ்டாலின் அதிகார உச்சத்தை அடைந்த காலத்தில் அவர் ஒதுக்கப்பட்டார் என்றும் படித்த நினைவு. ஐம்பதுகளில் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றவராக, கல்கத்தாவில் வாழ்ந்துகொண்டு பழைய வரலாறுகளை அவ்வப்போது எழுதி வந்தார். மாவே சைனாவைக் கைப்பற்றி கம்யூனிஸ்ட் ஆட்சியை ஸ்தாபித்தும் மாஸ்கோ சென்றார், ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்த. அப்போது எம்.என். ராய் எழுதினார், ஸ்டாலின் மற்ற நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல மாவோ வையும் தம் கைக்குள் வைத்துக் கொள்ள ஆசைப் படுவார் தான். ஆனால் அது மாவோ விஷயத்தில் நடக்காது. சைனாவில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றி முழுக்க முழுக்க மாவோவின் சாதனையேயாகும். அதில் ஸ்டாலினுக்கு எந்த பங்கும் இருந்ததில்லை. என்று எழுதினார். அப்போது அது எனக்கு, என்ன இப்படி எழுதுகிறாரே என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் இப்போது அவர் சொன்னது எவ்வளவு தீர்க்கதரிசனமான பார்வை என்று ஆச்சரியப் பட வைக்கிறது. கம்யூனிஸ்டுகளில் தீர்க்க தரிசியாகவும் சிந்தனையாளராகவும்  ஒருத்தர் இருப்பது வியக்க வைக்கும் விஷயம் தானே. அதனால் தான் அவர் ஸ்டாலினோடு சண்டை போட வேண்டி வந்ததோ, கம்யூனிஸ்ட் இண்டர்னேஷனிலிருந்து விலக்கப்பட்டாரோ என்னவோ. இத்தோடு இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. அது இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா. நான் வீக்லி படிக்கத் தொடங்கிய காலத்தில் சி.ஆர். மண்டி என்பவர் ஆசிரியராக இருந்தார். அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் அதிகம் தெரியாது. ஆனால் வீக்லியில் என்னை மிகவும் கவர்ந்தது அதில் வரும் ஓவிய அச்சுப் பதிவுகள். வீக்லியிலிருந்து தான் சூஸா, ஹுஸேன், ஜமினி ராய், ஹல்தார், ரஸா, கோபால் கோஷ், அம்ரித் ஷேர் கில், இப்படி அனேகரின் ஓவியங்கள் அச்சில் பார்க்கக் கிடைத்தன. கட்டாயம் யாராவது ஒருவரின் ஓவியம் முழுப்பக்கத்துக்கு அச்சாகியிருக்கும். சில சமயங்களில் அந்தந்த ஓவியரைப் பற்றிய அறிமுகமும், விமர்சனமும் கூட யாராவது எழுதியிருப்பார்கள். வீக்லியில் வெளியிடப்படும் ஒவியர்கள் பெரும்பாலும் பம்பாயைச் சேர்ந்தவர்களாக வே இருப்பார்கள். வங்க ஒவியர்களும் அவ்வப்போது இடம்பெறுவார்கள். தென் பிராந்தியத்திலிருந்து யார் பெயரையும் அறிந்துகொண்டதாக எனக்கு நினைவில் இல்லை. இரண்டு பெயர்கள் மிக முக்கிய மாக நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வீக்லி தான் எனக்கு இவர்களை அறிமுகப் படுத்தியது. ஒருவர் ஆனந்த குமாரஸ்வாமி. இன்னொருவர் இலங்கைக் காரர். ஜார்ஜ் கீட். (GEORGE KEYT) அவரை அக்காலத்தில் கீழை தேசத்து பிக்காஸோ என்று குறிப்பிட்டுப் பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது. வீக்லியில் வரும் ஓவியங்களைப்பார்ப்பதும் அதில் தரப்பட்டிருக்கும் அறிமுகக் கட்டுரைகளைப் படிப்பதுமாக இருந்தது தான் எனக்கு அதில் ருசி ஏற்பட்டது. பின் இரண்டு வருடங்கள் கழித்து கல்கத்தா போனபோது அங்கு விக்டோரியா மெமோரியல் ஹாலில் இன்னும் ஒரு பெரிய விஸ்தாரமான உலகத்துடன் அச்சில் அல்ல, நேரடிப் பரிச்சயம் காணக் கிடைத்தது. பின்னும் அடுத்த இரண்டு மூன்று வருஷங்கள் கழித்துச் சென்ற போது நேஷனல் எக்ஸிபிஷன் ஆஃப் ஆர்ட்டில் போட்டிக்கு வந்த ஒவியங்கள், பரிசு பெற்றவை என, தில்லியில் தொடங்கியது கல்கத்தாவுக்கும் கொண்டு வரப்பட்ட சமயம் நான் வேலை தேடி இண்டர்வ்யூக்கு அங்கு சென்ற சமயமாக இருந்தது. அப்போது தான் நான் வீக்லியில் அச்சில் பார்த்த ஓவியர்களின் படைப்புக்ளை அவற்றின் ஒரிஜினலில் பார்க்கக் கிடைத்தது ஒரு பரவசம் நிறைந்த அனுபவமாக இருந்தது. அது பற்றிப் பின்னர். ஆனால் அதற்கெல்லாம் வித்தாக இருந்தது, அந்த ஒரிய மாநில ஒதுங்கிய முகாமில் என்னை வந்தடைந்த வீக்லி பத்திரிகை என்று சொல்லத் தான். இதைக் குறிப்பிட்டேன்.

இன்னொன்று சொல்ல வேண்டியது பாப்ராவ் படேலின் மதர் இந்தியா. எனக்கு அது மிகவும் சுவாரஸ்யம் தருவதாக இருந்தது. அதன் விலை ரூ 3 அந்தக் காலத்தில் மிக அதிகம் ஆர்ட் பேப்பரில் தான் முழுவதும் அச்சிடப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் ஷாந்தா ராம் நம்மூர் பாஷையில் இயக்குனர் சிகரம். ஹிராகுட் போன உடனேயே எனக்கு அவருடைய தஹேஜ் சம்பல்பூர விஜயலக்ஷமி டாகீஸில் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு என்னவோ அவரிடம் அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படவில்லை. அதற்கும் முன்னால் கும்பகோணத்தில் படித்துக்கொண்டிருந்த போது ஷாந்தா ராமின் படம் ஒன்று அப்னா தேஷ்-ஓ என்னவோ, புஷ்பா ஹன்ஸ் என்ற் ஒரு புதுமுக நடிகை தான் கதாநாயகி. பள்ளிக்குட்ட பாடப்புத்தக ரகத்தில் அதில் நம்மூர் பாஷை மெஸேஜ் மண்டையிலடிப்பது போல் சொல்லப்பட்டிருக்கும்.

எனக்குப் பிடித்ததில்லை. ஆனால் ஷாந்தா ராம் ஒரு பெரிய ரொம்ப பெரிய தலை. அந்தக் பெரிய தலையையே பாபு ராவ் படேல் மிகக் கடுமையாகத் தாக்குவார். அது எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றையும் விட அதில் வரும் கேள்வி பதில்கள் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் பாபுராவின் கேள்வி பதில் ஓசியில் படிக்க என் இடத்துக்கு வந்து விடுவார்கள். இந்த பாபுராவ் படேல் கார்ணமாக எனக்கு ஒரு பெரியவரின் சினேகமும் கிடைத்தது. அவர் 30 மைல்கள் என்னவோ தள்ளி, சிப்ளிமாவா, பர்கரா, எது என்று நிச்சயமாக நினைவில் இல்லை. அங்கு இருந்த எக்ஸிக்யூடிவ் என் ஜினீயர் ஆஃபீஸில் டிவிஷனல அக்கௌண்டண்டாக வேலை பார்த்தார். அவர் புர்லாவில் தலைமை அலுவலகத்துக்கு வந்து சில நாள் தங்குவார். எப்படியோ என்னுடன் அறிமுகமாக, என் வீட்டில் தான் தங்குவார். தங்கும் போது அவர் செலவில் தான் நாங்கள் சம்பல்பூர் போவோம். அவர் செலவில் தான் சாப்பாடு எல்லாம்.

வேறு யாரையும் செலவு செய்ய விடமாட்டார். முதல் தடவை என்னிடம் இருக்கும் மதர் இந்தியாவைப்பார்த்து எனக்கு இதைப் படிக்கக் கொடு எடுத்துப் போகிறேன் என்றார். பழைய இதழ்களையும் ஒன்று விடாமல் எடுத்துக்கொண்டார். உடனே அவ்வளவுக்கும் இதழுக்கு ரூபாய் மூன்று என்று கணக்குப் பண்ணி என் பையில் திணித்தார். இனிமேல் நீயே வாங்கி வை. நான் வந்து எடுத்துப் போகிறேன் என்று எங்களுக்குள் ஒரு ஒப்பந்தமும் வாய் வார்த்தையாக பதிவாகியது.
பின் ஒரு நண்பன் சொன்னான். “ரொம்ப தங்கமான மனுஷண்டா. நிறைய சம்பாதிக்கிறார். கண்டிராக்டர்கள் எல்லாம் வந்து பில் பாஸ் பண்ண பணம் கொடுப்பான். அவர் தன் கீழே இருக்கும் ஒவ்வொருத்தனுக்கும் பணம் கொடு. என்று எல்லாருக்கும் பணம் பட்டுவாடா நடக்கும். ஊர்லே ஒரு பொண்ணு அவருக்கு ரொம்ப பாசம். அந்த பொண்ணுகிட்டே. இங்கே எப்படி அவங்களை அழைசிண்டு வரது. ஒண்ணும் வசதியே இல்லையே. பொண்ணும் படிக்கிற பொண்ணு” என்று மன வேதனையோடு சொல்வார்” என்று செய்தி சொன்னான். நாங்கள் அவரை இது பற்றி எல்லாம் துருவி எதுவும் கேட்பதில்லை. அவர் எங்களுடன் இருக்கும் போது ஜாலியாகப் பொழுது போகும். அவருக்கும் எங்கள் சினேகம் ஏதோ விதத்தில் வேண்டித் தான் இருந்தது என்று தோன்றியது.

அவர் இல்லாத போது இன்னொரு இரட்டையர் என் அறைக்கு அடிக்கடி வந்து பேசிச் செல்வார்.கள். இருவரும் ரொம்ப வருஷங்கள் மலாயாவிலிருந்தவர்கள். மலாய் பாஷையில் பேசி எங்களை குஷிப்படுத்துவார்கள். நான் வேலை பார்த்த செக்‌ஷனிலும் இரண்டு வங்காளிகள் மேல் நிலை க்ளர்க்குகளாக வேலை பார்த்தார்கள். வயதானவர்கள். அவர்களும் பர்மாவில் முதலில் வேலை பார்த்தவர்களாம். பின்னர் இர்ண்டாம் யுத்த காலத்தில் பர்மாவை ஜப்பானியர் கைப்பற்றியது அங்கிருந்து தப்பி வந்ததாகக் கதை சொல்வார்கள். காடு மலைகளைக் கடந்த துக்கக் கதைகள் சொல்வதில்லை. முன்னால் போபாலில் இருந்தோம். பின்னர் கல்கத்தாவுக்கு வந்தோம் என்று சொல்லும் பாணியில் தான் அவர்கள் பர்மாவிலிருந்துதப்பி வந்த கதையைச் சொன்னார்கள். எங்கள் செக்சன் ஆஃபிஸராக இருந்த மலிக் முரளீதர் மல்ஹோத்ராவும் அவர்களை தன் கீழ் வேலை செய்பவர்களாக நடத்துவதில்லை. மிகுந்த மரியாதை அளிப்பார் அவர்களுக்கு. அதே போல தான் இன்னும் இரண்டு முதியவர்கள், ப்ஞ்சாபிகள், ஹரிசந்த், உத்தம் சந்த் என்று. இருவரும் முல்தானியர்கள். சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அங்கு அணைக்கட்டு முடிந்ததும் ஹிராகுட்டுக்கு வந்தார்கள். இந்த முதியவர்கள் எல்லோரும் மிக அமைதியாக, கட்டுப் பாடாக, மிகுந்த ஈடுபாட்டோடு தம் வேலையில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் இளையவர்கள் போடும் சத்தத்தை, ரகளைகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள். சிறு வயதில் இப்படித்தான் இருக்கும் என்று சிரித்து ஒதுக்கி விடுவார்கள்.

எனக்கு இந்த பெரியவர்கள் உலகம் மிக ஆச்சரியமாகவும் அதேசமயம் மரியாதைக்குரியதாகவும் பட்டது. நாலைந்து இளம் வயதினர் என்னைவிட நான்கைந்து வயது மூத்தவரகள். எப்போதும் ரகளை செய்து கொண்டிருப்பார்கள். முரளீதர் இல்லாத போது தான். ஒரு சமயம் ஏதோ விஷயத்தில் பெரும் வாக்கு வாதம். எனக்கும் குப்தா என்னும் இன்னொருவனுக்கும். அவன் என்னைவிட படித்தவன். அவனுக்கு பஞ்சாபி, ஹிந்தி தவிர கொஞ்சம் இங்கிலீஷ். எனக்கு அவர்களுடன் தொடர்ந்த் பேசுவது என்பது இங்கிலீஷில் தான் சாத்தியம்.

நான் ஒரு முறை ரொம்ப சூடான வாக்கு வாதத்தில் என்னமோ இங்கிலீஷில் படபடப்புடன் சத்தமிட்டுச் சொல்லி நிறுத்தினேன். தொடர்ந்து காட்டமாக இங்கிலீஷில் பேசியதும் எல்லோரும் ஒரிரு நிமிடம் வாயடைத்து நின்றனர். இனி இவர்களுக்குப்பேச ஏதுமில்லை என்று வாதத்தில் வென்று விட்டதான மிதப்பு எனக்கு. ஆனல் சற்றுத் திகைத்த குப்தா, உடனே பஞ்சாபியில் ‘அரே ஜா ஜா படா ஆயா அங்க்ரேஸ் தா புத்தர்” (டேய் போடா நீ, என்னமோ இங்கிலீஷ் காரன் பெத்தாப்பல தான் வந்துட்டான் இங்கிலீஷ்லே பொளக்கறதுக்கு} என்று கைகளை வேகமாக வீசி, தன் இடத்துக்குப் போய் உட்கார்ந்தான். அவ்வளவு தான். ஒரே கூச்சல், குப்தாவைப் பாராட்டி “” ஹா க்யா பாத் ஹை. கமால் கர் தித்தா குப்தா சாப். கமால் கர் தித்தா” ஆஹா, பிரமாதம், குப்தா, என்ன வசமான பிடி பிடித்தாய். கொன்னுட்டியேப்பா ஆளை, இனி எங்கே அவன் எந்திரிக்கிறது? என்பது போல) என்று சத்தமாகக் கும்மாளமிட்டுக் கொண்டே குப்தா இருக்கும் இடம் சென்று அவன் கைகளைக் குலுக்கிக் கொண்டே இருந்தார். குப்தா எனக்கு என்ன பதில் சொன்னான், எப்படி என்னை அவன் வாதில் வென்றான் என்பதெல்லாம் எனக்கு பிடிபடவே இல்லை. ஆனால் அன்று தோற்றது நான் தான். வெற்றி வீர வாகை சூடி பெருமிதப் புன்னகையில் இருந்தது குபதா சாப் தான். இது தான் பஞ்சாபிகள் எந்த பிரசினையையும் கையாண்டு வெற்றி பெறும் உத்தி. நானும் கொஞ்ச நேரம் திகைத்தாலும் பின்னர் அவரகள் கும்மாளத்தில் கலந்து கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். குப்தாவுக்கும் எனக்கும் பகைமை ஏதும் இல்லை. இது அவரகளது போர்த் தந்திரம்.  தமாஷாகத் தான் இருந்தது. . .

அத்தியாயம் 66.

வெங்கட் சாமிநாதன் ரொம்ப நாட்களாக அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்த பெரியவர், வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை வயதுள்ளவர், கொஞ்ச நாட்களாகக் காணவில்லை. அவர் என்னிடமிருந்து வாங்கிச் செல்லும் ஃபில்ம் இண்டியா பத்திரிகையும் சேர ஆரம்பித்து விட்டது. மாதங்கள் கடந்தன. பின்னர் தான் யாரோ அவர் டிவிஷனல் அலுவலகம் இருந்த சிப்ளிமாவிலிருந்தோ பர்கரிலிருந்தோ வந்த ஆள் மூலம் தெரிந்தது. அவர் ஹிராகுட் அணைக்கட்டில் வேலையில் இல்லை என்று. காரணம், அவர் கொள்ளையாகத் தன்  பாசத்தைப் பொழிந்த அவர் மகள்,கல்யாணத்துக்கு இருந்த மகள் மிகக் கொடூரமான நிலையில் அவள் உயிரிழந்தாள் எனச் சொன்னார்கள்.. எரிந்து கொண்டிருந்த ஸ்டவ் புடவையில் பற்ற அந்த இளம் பெண் கருகிவிட்டாள். செய்தி கேட்ட எங்களுக்கு உடல் பதறியது. அந்தப் பெண்ணை நாங்கள் பார்த்ததில்லை. அந்தப் பெண்ணின் மேல் பாசத்தைப் பொழிந்த, அவள் நினைவாகவே எப்போதும் இருந்த அந்தப் பெரியவரின் பாசத்தைத் தான் நாங்கள் அறிவோம். கிட்டத்தட்ட அறுபது வருஷங்களாகிவிட்டன. இப்போதும் கூட இதை எழுதும்போது கூட மனம் கலங்கிவிடுகிறது. எழுதிவிட்டேன். ஆனால் வாயால் சொல்ல நேர்ந்தால் தொண்டை அடைத்துக் கொள்ளும். எங்கள் பட்டாளம் அவர் வரும்போதெல்லாம் அடிக்கும் கொட்டத்தைப் பொறுக்காத சிலர் ”எப்படியெல்லாம் சம்பாதித்தார்? அது இப்படித்தான் போகும்” என்று சொன்ன தாகவும் செய்தி கிடைத்தது. அரக்கர்களும் மனித ரூபத்தில் தானே இருப்பார்கள். எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை? யார் செய்த குற்றத்துக்கு யாருக்கு தண்டனை? எது குற்றம்.? தானாக் வந்ததை எல்லோருக்கும் பங்கு பிரித்துக்கொடுத்ததா? எப்படியெல்லாம் ஒரு குரூர மனம் தனக்குப் பிடிக்காதவரை பழிச்சொல்லுக்கு இரையாக்குகிறது? இப்போது அதையெல்லாம் நினைத்தாலும் மனம் தாளவில்லை.
          
இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. மகா நதியின் குறுக்கே முதலில் ஒரு பாலம் கட்டப்பட்டது. அணை கட்ட நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து மூன்று மைல் தள்ளி லச்சுமி டுங்ரி என்னும் ஒரு கரையின் அருகில் இருந்த  கரட்டின் அடிவாரத்திலிருந்து எதிர்கரைக்கு. மிக நீண்ட பாலம். இந்திய பொறியாளர்களே கட்டிய பாலம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளப்பட்டது. வீடுகள் கட்டுவதோடு அந்த பாலம் கட்டுவதுதான் முதலில் நடந்த காரியங்கள். அது ரயில் பாதையும் கொண்ட பாலம். கட்டி முடித்த பிறகு பாலம் சரியாகக் கட்டப்பட வில்லை என்று ரயில்வே நிர்வாகம் தன் பங்கு செலவைத் தர மறுத்தது. பாலம் பலமற்றது என்பது விசாரணையில் தெரிந்தது. பிறகு இன்னொன்றும் தெரியவந்தது. பாலம் கட்டியவர்கள் நிறைய சாப்பிட்டிருக்கிறார்கள். என்று இதற்கு பொறுப்பாக இருந்த என்சினீயர் தனக்குக் கீழ் இருந்த ஜூனியர் என்சினியர் சூப்பர்வைசர்களை, “குற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளுங்கள், சிறையிலிருந்து மீளும் வரை உஙகள் குடும்பத்தை நான் காப்பாற்றுகிறேன். வேலையும் தருகிறேன். என்னை மாட்டிவிட்டால் எல்லோருமே கம்பி எண்ண வேண்டியிருக்கும். . உங்கள் குடும்பம் கதியற்றுப் போகும்”, என்று சொல்லி தான் தப்பித்துவிட்டதாக ஹிராகுட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார் கள். இந்த சூப்பிரண்டெண்டிங் என்சினியர், ஏ.ஆர். செல்லானி என்று பெயர் என்று நினைவு. அவர் தொடர்ந்து கொஞ்ச நாள் தான் இருந்தார். தன் பதவியில். இது ஒரு க்ளாசிக் பாட்டெர்ன். இந்த மாதிரி பெரிய முதலைகள் தப்பித்து விடும். அவர்களுக்கு பழி சுமக்க எப்போது ஒரு fall guy என்பார்கள். பலிஆடு என்று தமிழில் சொல்லலாமா? இது போன்றே இன்று வரை நடந்து வருவது நமக்குத் தெரியும். இன்றைய பேப்பரைப் பார்த்தாலும் விழுங்கிப் பெருத்திருக்கும் முதலைகள் தெரியும். பலி ஆடுகளும் தெரியும்.
           
ஆனால் இந்த முதலைகளை ஏன் பகவான் தண்டிப்பதில்லை. ஒரு பாவமும் அறியாத பெண் கருகிச் செத்தால் அதை எப்படி எல்லாம் கருகிய மனங்கள் விமர்சிக்கின்றன. இன்றைய முதலைகள் நாட்டுக்குத் தலைமை வேடம் வெகு வெற்றிகரமாகப் போடுகின்றன.

புராணகாலத்திலிருந்தே ஹிரண்யகசிபுகளும், மகாபலிகளும் இருந்திருக்கிறார்கள். எது கிருத யுகம், எது கலி யுகம்.  எல்லோருமே மறைந்து விட்டார்கள். எத்தனை ஒரு குற்றமும் செய்யாத பலிஆடுகள் இருந்திருக்கின்றன. மறைந்தும் விட்டன, காலம் காலமாக. இன்று அவர்கள் தியாகத் தீயில் வெந்தது கூட நினைக்குப்பார்க்க அவர்கள் நினைவும் இல்லை. சோகங்கள் கால கதியில் நினைவுகளாகக் கூட எஞ்சுவதில்லை.
            
இப்படித்தான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. வெயில் காலத்தில் இரவிலும் கூட  வீட்டினுள் படுக்கமுடியாது கயிற்றுக்கட்டிலை எடுத்து வீட்டுக்கு முன் உள்ள புல் தரையில் போட்டு படுத்துவிடுவோம். எல்லோர் வீட்டின் முன்னும் இரவில் கட்டில்களில் படுத்துறங்கும் காட்சியைப் பார்க்கலாம். இந்தக் காட்சி தில்லி வந்தபிறகும் தொடர்ந்தது. ராமகிருஷ்ணபுரம், வினைய் நகர் பகுதிகளில் வீடுகள் முன் கதவு ஒப்புக்கு சாத்தி இருக்கும் சில இடங்களில். எங்கள் வீடு அப்படித்தான். களவு போக ஒன்றுமில்லை என்ற தைரியம். என்னோடு தான் எப்போதும் ஏழெட்டு பேரிலிருந்து பத்துப் பேர் வரை உடன் இருந்தார்களே. அனேகமாக யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் வீட்டிப் பூட்டுவது கிடையாது. இரண்டு மூன்று பேர் இருந்த போது இரண்டு பூட்டுக்களைகோர்த்து பூட்டிச் செல்வோம். ஆனால் எண்ணிக்கை அதிகமானதும் எவ்வளவு பூட்டுக்களை சங்கிலியாகக் கோர்க்க முடியும்? ஆதலால் பூட்டுவதே இல்லை. என்னேரமும் பூட்டு இல்லாமல் கதவு சார்த்தியே இருக்கும். ஒரு நாள் சாயந்திரம் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த எல்லா பெட்டிகளும் திறந்திருந்தன. துணிகள் புத்தகங்கள் அறையெங்கும் வீசி எறியப்பட்டிருந்தன. திருடனுக்கு உபயோகமாக எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கும் எதுவும் திருட்டுப் போகவில்லை. ஆனால் திருட்டுப் பயம் என்னவோ சுற்றியிருந்தவர்களுக்கு இருந்தது.

அது மற்றவர்களுக்குத் தான். “இனி நம்ம வூட்டுக்கு ஒரு திருடன் வரமாட்டான் பாத்துக்க. இங்கே ஒரு மண்ணும் கிடைக்காதுன்னு செய்தி போயிருக்கும் அந்த வட்டாரம் முழுதுக்கும்” என்று அறி நண்பர் திருநெல்வேலிக்காரர் ஜோக் அடித்தார். ஜோக் இல்லை அது உண்மையும் கூட. ஆனால் கிலி என்னமோ அக்கம் பக்கத்தில் மற்றவர்களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு நாங்கள் தூக்கக்த்தில் இருந்த போது, “சோர் சோர்” என்ற கூச்சல் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டு விழித்து எழுந்து பார்த்தால், பள்ளத்தில் விழுந்த ஒருவனைப் பிடித்திழுத்து அடிப்பது தெரிந்தது. உடனே எல்லோரும் அங்கு குவிந்து தாங்களும் சேர்ந்து ஆளாளுக்கு அவனை மொத்த ஆரம்பித் தார்கள்.”மாரோ சாலே கோ, மாரோ” என்ற கூச்சல். அடிபடு கிறவன் அடியும் பட்டுக்கொள்கிறான். பலஹீனமாக அலறவும் செய்தான். அடித்துக்கொண்டே அவனைப் பிடித்து இழுத்து வந்தார்கள். கடைசியில் பார்த்தால் அவன் திருடனும் இல்லை.

குடித்துவிட்டு தள்ளாடித் தள்ளாடி வந்தவன் பள்ளத்தில் விழுந்து விட்டான். யாருக்கும் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. அநியாயமாக ஒரு குடித்துத் தள்ளாடிக்கொண்டிருந்த அப்பாவியை அடித்து விட்டோமே என்று. கொஞ்ச நாளா திருட்டு பயம் ஆகையினால் தான் இருட்டில் வந்தவனை சந்தேகத்தில் அடித்து விட்டோம் என்று, “இனி நீ இந்தப் பக்கம் வராதே” என்று பயமுறுத்தி அனுப்பிவிட்டார்கள் எவனையாவது நம்மாள் . ஒருத்தன் மொத்துகிறான் என்றால் எல்லோரும் சேர்ந்து அவனை மொத்த வேண்டும். என்ன ஏது என்று விசாரித்துக் கொண் டிருப்பதெல்லாம் அனாவசியம்.. பஞ்சாபிகளிடம் காணப்பட்ட இந்த சமூக கட்டுப் பாட்டு உணர்வு என்னை ஆச்சரியப்பட வைத்தது. இதில் நியாயம் பற்றிய விசாரணையெல்லாம் பிறகு தான் அவசியப் பட்டால் வைத்துக்கொள்ளலாம் இப்போது நம் முன் இருக்கும் அவசியமான முதல் பணி மொத்துவது..  அலுவலகத்தில், என்னுடைய வாதங்களையெல்லாம் ஒரே அடியாக, “போடா போ பெரிசா வந்துட்டான் இங்கிலிஷ்காரன் பெத்தவன் மாதிரி” என்ற ஒரு வார்த்தையில் என் வாதங்கள் ஒன்றுமில்லாமல், அவனுக்கு வெற்றி வாகை சூட்டியது நினைவுக்கு வந்தது. அவர்களின் கொம்மாளத்தில் நானும் சிரித்துக் கலந்து கொண்டேன் என்பது வேறு விஷயம்.
       
ஆனால் இந்த திருட்டு என்பது ஒரிசாவில் இருந்த ஆரம்ப வருஷங்களில் நாங்கள் கேள்விப்படாத ஒன்று. பழங்குடிகள். சூது வாது தெரியாதவர்கள். முன்னேயே சொல்லியிருக்கிறேனோ என்னவோ, தெருவில் காய்கறி விற்கும் ஸ்திரீகள் கூட “இப்போ சில்லரை இல்லாவிட்டால் பரவாயில்லை அப்புறம் வரும்போது கொடுங்கள்” என்று சொல்லும் பண்பாட்டினர். நம்மைப் பார்த்துப் பழக்கம் என்றில்லை. சக மனிதரிடம் அத்தனை நம்பிக்கை. எப்போதாவது எங்கள் திருட்டுப் போகும். திருட்டுப் போவது ஏதாவது சில்லரையாகத் தான் இருக்கும். எட்டணா பத்தணா என்று. தனக்கு அப்போதைய தேவை என்னவோ அவ்வளவே எடுத்துப் போகும் குணம். மற்றப் பணம் எல்லாம் எவ்வளவாக இருந்தாலும் அப்படியே இருக்கும். நிறைய நிலம் இருக்கும். ஆனால் காசு வேணும் என்பதற்காக அலுவலகத்தில் பியூன் வேலைக்கு வந்து சேர்பவரகளை நான் அங்கு கண்டிருக்கிறேன். நமக்கு வேலையாளாக வந்து சேர்கிறவன் நம்மைவிட சொத்து அதிகம் உள்ளவனாக இருப்பான். நாம் இடைவேளையில் இட்லி, தோசை வடை என்று அலைவோம். அவர்களோ வெறும் பொரியைத் தான் கொரித்துக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு எளிய வாழ்க்கை. எவ்வளவு உயரிய பண்புகள் என்று வியக்கத் தோணும். “இன்னும் அவன் இங்கிலீஷ் கத்துக்கலையில்லையா, படிப்பறிவில்லாத சனங்கள். இன்னும் நாகரீகம் அவர்களை வந்தடையவில்லை. கொஞ்சம் இங்கிலீஷ் படித்து அவனுக்கு நாகரீகம் வந்துடட்டும். பின்னே பார் கூத்தை.” என்பார் சீனிவாசன் என்ற என் அக்காலத்திய நண்பர்.                     
இதற்கும் தமிழ் நாட்டில் கட்சிகளின் செயல்பாட்டிற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் சொன்னால் சர்த்தான் என்பது தாரக மந்திரம். வந்து விழும் வசைகள் தான் வித்தியாசப்படும் கட்சிக்குக் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சியானால் அது சிஐஏ ஏஜெண்ட் என்றிருக்கும். கழகங்கள் ஆனால், “பார்ப்பனத் திமிர்” என்று வசைகள் வந்து விழும். அதே சமயம் தனி ஒருவனாக ஒருவன் ஒரு கஷ்டத்தில் இருக்கிறான் என்றால் அவனுக்கு உதவுவதும் இந்த பஞ்சாபிகள் தான்.அவர்கள் திருக்குறள் படித்தவரகள் இல்லை.

அவர்கள் பஸ்களில் திருக்குறள் எழுதப்பட்டிராது தான். திருக்குறள் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் அவர்கள். ஹிராகுட் போன காலத்தில் யார் வீட்டுக்குப் போனாலும், தெரிந்தவர்கள் என்று இல்லை. யாரானாலும், “க்யா பீயோகே, லஸ்ஸி(கெட்டியாகக் கரைத்த இனிப்பு மோர்)  யா தூத்(பால்)” என்று உபசரிப்பார்கள். இரண்டு மூன்று வருடங்கள் கழித்தி டீஅங்கு அறிமுகமான பின் “டீ சாப்பிடறயா என்று தான் கேட்பார்க> சாப்பிடும் நேரமாக இருந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் அப்படி திண்ணியிலே உட்கார்ந்திருக்கேங்களா, . சாப்பிட்டு வந்துடறேன்” என்று ஒரு நாளும் அவர்கள் சொல்ல மாட்டார்கள். இது நமக்கே உரிய, நம் முத்திரை தாங்கிய பண்பாடு. நாமெல்லாம் திருக்குறளில் விருந்தோம்பல் பல உரைகளில் படித்தவர்கள்.

 vswaminathan.venkat@gmail.com