ஆய்வு: காந்தியப் பண்பும் ‘வெண்முகில்’ நாவலும் (7)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


மொழிபெயர்ப்பு நாவல்களில் முதன்மை இடத்தில் சிறப்புற்று விளங்குவது மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர் நாவல்களாகும். இவருடைய வெண்முகில் எனும் நாவலில் அரசியல் கூறுகள் உள்ளிட்ட பல கூறுகள் காணப்படுகின்றன. இக்கூறுகளில் முதன்மையிடத்தில் விளங்குவது காந்தியக் கொள்கைகள் என்பதாகும். ஏனெனில், குமரி முதல் இமயம் வரை மகாத்மா காந்தியடிகளைப் பற்றியும், அவருடைய கொள்கைகளைப் பற்றியும் அறியாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அதனால் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் காந்தியக் கொள்கையினைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கான காரணம் தற்காலத்தில் காந்தியத்தை மறந்துபோகின்ற தருணத்தில் மக்கள் இருக்கின்றார்கள். இதனை வலியுறுத்தும் விதமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது
.
காந்தியக் கொள்கை
இந்திய வரலாற்றில் திலகரின் ஆதிக்கத்திற்குப்பின் ஈடு இணையற்ற ஒரே மாபெரும் தலைவராக இருந்தவர் மகாத்மா காந்தியடிகள் ஆவார். அவரின் சமயம், அகிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம் போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றி பலரும் சிறை சென்றனர். அவ்வரலாற்று நிகழ்வுகளைத் தம் படைப்பில் பதிவு செய்தனர் எழுத்தாளர்கள். அவ்வகையில், சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்பினைக் காண்டேகரும் தன் படைப்பினுள் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவ்வகையில் காந்தியக் கொள்கையினைப் பிரதிபலிக்கும் விதமாக இவருடைய வெண்முகில் நாவல் அமைந்துள்ளது.

அபயன் எனும் பாத்திரம் சமூக அக்கறையும் காந்தியக் கொள்கையின் மீது மிகுந்த பற்றும் கொண்டவனாக இந்நாவல் சித்தரிக்கின்றது. பால பருவமாக அபயன் இருந்தாலும் இத்தகைய பற்று அவன் மனதினுள் உருவாகியிருப்பது வியப்புக்குரிய செயலாகும். இதனை, ‘அவன் நாலாவது பாரத்தில் படித்துக்கொண்டிருந்தபோது உப்பு சத்தியாக்கிரகம் வந்தது. அதில் கலந்துகொள்ள அனுமதி தர வேண்டும் என்று அக்காவிடம் போய்க் கெஞ்சினான். அவனுக்குப் பிரியமான உபாத்தியாயர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அவனைத் தடுக்காமல் இருந்திருந்தால், அவன் அப்பொழுது அக்காவின் பேச்சையும் மீறி வீட்டை விட்டே போயிருப்பான்.’1 என்பதிலிருந்து அபயனுக்கு காந்தியத்தின் மீது எவ்வளவு பெரிய ஈடுபாடு இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அபயனின் அக்கா விமலா, பத்து வயதில் இருக்கும் பாலகனான அபயனுக்கு அவ்வியக்கத்தின் நோக்கம் புரியாது என்ற நோக்கில் அவனைத் தடுத்துவிட்டாள். இருப்பினும் அபயனுக்கு உப்புசத்தியாக்கிரகத்தின் மீது மிகுந்த பற்று இருந்தது. சத்யாக்கிரகம் என்பது சத்யம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தீமையை ஆன்மசக்தியால் எதிர்த்துப் போராடுதலைக் குறிக்கும் சொல்லாகும். உடல் வலிமையை அடிப்படையாகக் கொண்டு போராடுவதே சத்யாக்கிரகக் கொள்கையின் அடிப்படை ஆகும். இவ்வியக்கத்தில் இருப்பதனால் அபயனுக்கு பிடித்திருக்கும் எனவும் எண்ணலாம். ஆனால், அகவை பத்தில் இருப்பவனும் இதன் தன்மையை உணர்ந்திருப்பானா? என்பது வியப்புக்குரிய ஒன்றாகும். காண்டேகர் இவ்வாறு வலிந்து சொல்வதற்கு காரணம் உண்டு. சிறுவயது பாலகனுக்கே இவ்வுணர்வு உண்டு என்றால் மானிடராக இருக்கும் நாமும் இவ்வழியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாவலாசிரியர் கூறியிருப்பதை இதன் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இதன் நோக்கத்தை பின்வருமாறு அறியலாம் ‘ உண்மையான காரணத்திற்காக நடைபெற வேண்டும், வன்முறை கூடாது, அரசின் சட்டங்களுக்குப் பணிதல் காவலர்கள் கைது செய்யும்போது தடுக்கவோ எதிர்க்கவோ கூடாது, வலிந்து துன்பத்தை ஏற்றல், எதிரியின் உரிமையை மதித்தல், கட்டுப்பாடும் ஒழுக்கமும் அடிப்படை, பொதுவான சமூக நன்மைக் கருதி நடைபெற வேண்டும்.‘2 போன்ற கொள்கைகள் அவ்வியக்கத்தில் இருப்பதனால் அபயனுக்கு பிடித்திருக்கும் எனவும் எண்ணலாம். ஆனால் அகவை பத்தில் இருப்பவனும் இதன் தன்மை உணர்ந்திருக்குமா? என்பதும் வியப்புக்குரிய ஒன்றாகும்.

எழுத்தாளர் காண்டேகர்காண்டேகர் இவ்வாறு வலிந்து சொல்வதற்கு காரணம் உண்டு. சிறுவயது பாலகனுக்கே இவ்வுணர்வு உண்டு என்றால் மானிடராக இருக்கும் நாமும் இவ்வழியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாவலாசிரியர் கூறியிருப்பதையும் உணரலாம். மேலும், சத்யாக்கிரகத்தின் வகைகளாக சபா. அருணாச்சலாம்,’உண்ணாவிரதம், விரும்பி இடம்பெயர்தல், வேலை நிறுத்தம், அமைதியான மறியல், ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, அமைதி அணிவகுப்பு, கள்ளுக்கடை மறியல், அந்நியத்துணி பகிஷ்கரிப்பு, தீண்டாமை ஒழிப்பு’3 முதலியவற்றைக் கூறுகிறார். எனவே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சத்தியாக்கிரக முறைகள், ஒத்துழையாமை, சட்டமறுப்பு போன்றவைகளாகும். இவ்வியக்கங்களில் தமிழகம் தீவிரமாக ஈடுபட்டது என்பர். அதனையே இந்நாவலும் முன்னிலைப்படுத்தி காந்தியக் கொள்கையின் போக்கையும் அதன் தன்மையையும் தெளிவாக விளக்குகின்றது. மேற்கண்ட இதே கொள்கையின் தன்மையைக் குறித்து, ‘கற்பனை கடந்த வறுமை குடி கொண்டிருக்கிறது. துப்பாக்கி எடுத்த நாலு போலீஸ்காரரைக் கண்டால், ஜனங்கள் ஆடுகளைப் போல் பேசாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கிறார்கள். சத்தியமும் அஹிம்சையும் கொண்ட காந்தி வழிதான் இந்த நாட்டிலே ஆயுதம் இல்லாத புரட்சியை வெற்றிகரமாக நடத்தமுடியும்’4 எனும் நாவலின் மேற்கோளும் சத்யாக்கிரகத்தின் கொள்கையும் பொருந்தி நிற்பதைக் காணலாம்.

மகாத்மா காந்தியின் அடையாளத்தையும், அவருடைய நேர்மைத் தன்மையினையும் இந்நாவலாசிரியர் மறவாமல் எடுத்துரைப்பதைப்பதையும் ஆங்காங்கே காணமுடிகின்றது. அதாவது, ஆடம்பரமான ஆடைகள் அணிவதை வெறுத்து, ஆயுதம் இல்லாமலே மக்கள் தங்கள் உரிமைக்குப் போராட வேண்டும் போன்ற விருப்பங்களைக் மகாத்மா காந்தி சட்டமறுப்பு இயக்கங்களால் நிரூபித்துக் காட்டியவர். மேலும், மகாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட பெரிய போராட்டம் தண்டியாத்திரை என்பதாகும். இது அரசின் உப்பு வரியை எதிர்த்துத் தடையை மீறி 1930-ல் 79 தொண்டர்களுடன் தண்டிக்குச் சென்று உப்பை அள்ளினார். தமிழகத்தில் நடைபெற்ற வேதாரண்ய உப்பு சத்யாக்கிரகத்தைக் குறித்துதான் சட்ட மறுப்பு இயக்கத்தையும் காந்தியடிகள் உருவாக்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காந்தியத்தை மதிக்காத போக்கு
காந்தியக் கொள்கைக்கு உயர்வு கொடுத்து பேசும் நாவலாசிரியர் கதையின் நிறைவின் போது காந்தியத்தை எவரும் மதிப்பதில்லை என வருந்திக் கூறுவதையும் காணலாம். இந்நிலை காந்தி ஜெயந்தி அன்று மட்டும் காந்தியின் படத்தை தேடுவது போலாயிற்று. காந்தியம் என்ற போர்வையில் போலி காந்தியவாதிகள் உலா வரும் செயலைத் தமிழ் மலையாளச் சிறுகதைப் படைப்பாளர்கள் தோலுரித்துக் காட்டுவதுபோல மராட்டிய நாவலாசிரியர் காண்டேகரும் இந்நாவலில் காந்தியத்தை மதிக்காத போக்கினைக் குறித்து பதிவு செய்துள்ளார். இதனை, ‘கண்ணாடி வியாபாரக்காரன் ஷேக் முகம்மதின் ஞாபகம் வருகிறது! ஒரு கூடையிலே நாலு கண்ணாடிப் பாத்திரங்கள் தாம் அவனுடைய மூலதனம். ஆனால் மந்திரியின் பெண் தனக்கு மனைவியாகித் தன் காலிலே விழ வரும்போது அவளை எப்படி உதைக்கலாம் என்ற மனக்கோட்டையிலே அவன் அந்த மூலதனத்தையும் இழந்துவிட்டான். காந்தியின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது.’5 என்று சமூகத்தில் காந்தியக் கொள்கைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பற்றி நாவலிலே ஒரு கதையினை எடுத்துக்கூறி புதியதொரு நயமாக எடுத்துக்கூறுவதையும் காணமுடிகிறது. மேலும், ‘இந்தியாவிலே நூற்றுக்கு ஐந்து பேராவது முற்றும் மரக் குறி உண்பவர்கள் இருக்கிறார்களா? இந்தப் புறம் காந்தி  தினமும் அஹிம்சையைப் பற்றி முழக்கம் செய்கிறார். அந்தப் புறம் கோடிக்கணக்கான ஜனங்கள் நித்திய ஹிம்சை செய்து வருகிறார்கள்‘6 என்ற மேற்கோளும், காந்தியத்திலிருந்து மக்கள் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. இக்கூற்றில் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் புலப்படுகிறது. மகாத்மா காந்தி மக்களுக்கு அஹிம்சையைப் பற்றி முழக்கம் செய்கிறார் என்றும் ஆனால் மற்றொரு புறம் மக்கள் ஹிம்சை செய்கிறார்கள் என்பதுமாகும். அஹிம்சை என்பது அமைதி வழியையும், ஹிம்சை என்பது அமைதியற்ற வழியையும் குறிப்பதை இக்கட்டுரை வாயிலாகத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

மகாத்மா காந்தியும் சேக்ஸ்பியரும்
வெண்முகில் நாவலில் மட்டுமல்லாமல் அமுதக்கொடி என்ற நாவலிலும் காந்தியைக் குறித்த பதிவுகளைக் காணலாம். இதில் பேராசிரியராகத் திகழும் தாஸ்பாபு என்பவர் காந்தியையும் சேக்ஸ்பியரையும் ஒப்பிட்டுக் காண்கிறார். இவர் ஓர் ஆங்கிலப் பேராசிரியர் என்பதனால் சேக்ஸ்பியரையும் தேசப்பிதாவையும் பொருந்த பார்த்து, அவர்களுடைய குணாதிசயங்களை அறிந்து கொள்கிறார். மகாத்மா காந்தி நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தியாகியானவர். சேக்ஸ்பியர் மக்களுக்காக இலக்கியம் படைத்து தியாகியானவர். இவரை பாரதியார், தாகூர், வள்ளத்தோள் ஆகியோர்களைக் கொண்டு ஒப்பிட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது என்பதால் தேசப்பிதாவோடு நாவலாசிரியர் ஒப்பிடுகின்றார். ஆகவே, தாஸ்பாபு ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தால், ஒரே கெட்டிக்காரன் மகாத்மா என்ற பறைசாற்றியிருப்பார். ஆனால் அப்பாத்திரம் ஆங்கிலப் பேராசிரியராக நாவலில் வலம் வருவதால் சேக்ஸ்பியர் என்று கூறியிருப்பதில் வியப்பேதும் இல்லை எனலாம்.

காந்தியமும் நாளிதழும்
காண்டேகரின் 'வெண்முகில்'நாவலாசிரியரின் மற்றொரு  நாவலான ‘கிரௌஞ்சவதம்’ என்பதில் புரொபசர் அப்பண்ணா காந்தியத்தைக் குறித்து எண்ணிப் பார்க்கிறார். அதாவது, இவர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் இருப்பவர். மாணவ, மாணவிகளுக்குப் பாடங்களைவிட வாழ்க்கையை அதிகம் கற்றுக்கொடுப்பவர். அவ்வறிவுரையில் மிகமுக்கியமான ஒன்று நாளிதழ்களைப் படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும். ஒரு காலத்தில் அறிவினை விரிவுசெய்ய நாளிதழ் ஒன்றை வாசித்தாலே போதும் அத்தனையும் கற்றுக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால், தற்காலத்தில் வியாபார வர்த்தகமாக மாறிப்போயிற்று. போலி செய்திகள் வந்துவிட்டன. தங்கள் நிறுவன பத்திரிக்கைகளை அதிகம் வாங்கவேண்டும் என்பதற்காகப் போட்டிப்போட்டுக்கொண்டு கவர்ச்சியான செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் புரொபசர் அப்பண்ணா அப்போது சிந்தித்துப் பார்க்கிறார். தரம் பார்த்து வாங்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? என்பதே பெருத்த சந்தேகமானது. மேலும், கவிஞர் மு.மேத்தா தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பில், மகாத்மாவின் கொள்கைகள் அனைத்து இன்றைய அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களும் காற்றில் பறக்க விட்டுவிட்டதை எண்ணி, ‘உன்னுடைய படங்கள் ஊர்வலம் போகின்றன நீயேன் தலைகுனிந்தபடி நடுத்தெருவில் நிற்கிறாய்?’7 எனப் பாடுவதையும் காந்தியக் கொள்கைகளுக்குப் பொருந்தி நிற்பதைக் காணமுடிகின்றது.

இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தின் போது நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமுதாயம் போன்ற துறைகளில் எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, காந்தியத்தின் தாக்கம் ஏற்பட்டது எனலாம். அண்ணலின் பொதுவான, வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துக்களை இக்காலப் புதினங்களில் காணமுடிகின்றது. ஆகவே, இன்றைய சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் நீக்கி மனிதர்களை மனிதர்களாக வாழச்செய்வதே காந்தியக் கொள்கைகளாகும். அவ்வகையில் தேசபக்தன் கந்தன், அலையோசை, புதுவெள்ளம், எங்கே போகிறோம், தியாகத் தழும்பு, அக்னிக்குஞ்சு போன்ற சுதந்திரப்போராட்ட பின்னணியைக் கொண்டு அமைந்த நாவல்களின் வரிசையில் காந்தியத்தைப் பிரதிபலிக்கும் காண்டேகரின் நாவல்களையும் சேர்த்து வரிசைப்படுத்திக் கூறலாம் என்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மையான கருத்தாகும்.

சான்றெண் விளக்கம்
1. வி.ஸ.காண்டேகர், வெண்முகில், ப.77
2. வெ. சாமிநாத சர்மா, புராதன இந்தியாவின் அரசியல், பக்.63-64
3. சபா.அருணாச்சலம், தமிழ் நாவல்களில் காந்தியத்தாக்கம், ப.83
4. வி.ஸ.காண்டேகர், வெண்முகில், ப.78
5. மேலது, ப.142
6. மேலது, ப.143
7. மு.மேத்தா, கண்ணீர் பூக்கள், ப.47

கட்டுரையாளர்: திருமதி பா.சுதா, பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635130

* அனுப்பியவர்: முனைவர் வே.மணிகண்டன் – thenukamani@gmail.com