என்னோடு வந்த கவிதைகள்—7

“நான் எங்கு சென்றாலும்
என் தாய்நாட்டின் காயங்களைச்
சுமந்து செல்கிறேன்
ஓ கோவா
உன் அன்பு இல்லாமல்
உன் வாழ்விலிருந்து விலகி
எப்படி வாழ்வது எனக்குத்தெரியவில்லை” 
– கொங்கனி கவிஞர் மனோகர்ராய் ஸர்தேசாய்( கோவா) –

- பிச்சினிக்காடு இளங்கோ என் அம்மாவுக்கு கற்பனை அதிகம்.எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ; எப்படிப்பேசவேண்டும் என்பதுபற்றியெல்லாம் ஒரு தெளிவு உண்டு.பேச்சிற்கிடையே பழமொழி,கிராமத்துச்சொலவடை உதிர்வதுண்டு. இவ்வளவு வயாசபின்பும்கூட என்மீது  நம்பிக்கை இல்லாமல் இன்னும் முன்னேற்பாடாக நான் நடந்துகொள்ள எனக்கு வழிகாட்டும் வழக்கம் அம்மாவுக்குண்டு. அது எனக்குச் சற்று பிடிக்காது.மேடையில் பேசுகிற மனிதனாக நான் மாறியும்கூட என்மேடைப்பேச்சிற்கும் அம்மா முன்குறிப்புகள் சொன்னதுண்டு. அம்மாவுக்கு தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அதிகம்..யாருடைய அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ளமுடியாது. யாரையும் அலட்சியம் செய்யும் எண்ணமும் அம்மாவுக்குக்கிடையாது. சின்னவயதில் அம்மாவுக்கு  நீரில் நெடுநேரம் முழ்கி விளையாடும் வழக்கம் இருந்ததால் கேட்கும் ஆற்றல் பிற்காலத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டது. யாருக்கும் உதவிசெய்யவேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும்.  சின்னவயதில் அத்திவெட்டி கிராமத்திற்கு திருமண, காதுகுத்து(காதணிவிழா) நிகழ்வுகளுக்காக பத்திரிகை(அழைப்பிதழ்) கொடுக்கப்போகும்போது என்னைப் பெண்கள் யாரென்று விசாரிப்பார்கள்.லட்சுமிமொவனா? ஆத்தாப்பிள்ளைப் பேரனா ?என்று விசாரிப்பார்கள்.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரக்கக்குணம் அதிகம்.

அப்பா ஒரு உழைப்பாளி.நகைச்சுவை உணர்வு அதிகம்.ஜிப்பா,பச்சை வாரு,மோதிரம், கடிகாரம் அணிந்துதான் இருப்பார். அப்பா சிங்கப்பூரில் சம்பாதித்தையெல்லாம் அம்மா நிலமாக வாங்கினார்கள். உதவிசெய்வதில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்போது போட்டிதான். பெரியவர்கள் யாரும் என்னைப்பார்த்தால் ஆறுமுகத்து மொவனா? என்று விசாரிப்பார்கள். அப்பாவைப்பற்றி அம்மா சொல்லும்போது “ நெஞ்சில் முள் இல்லாதவர்” என்றுகுறிப்பிட்டார்கள். பொருள் அப்பாவுக்கு நெஞ்சில் வஞ்சகம் கிடையாது என்பதுதான்.இவர்கள்தாம் என்முகவரி. இவர்களால்தான் நான்.

என்னோடு பிறந்தவர்கள் தம்பி இராமமூர்த்தி,தங்கை திலகராணி. எங்கவீடு,சித்தப்பா வீடுகள், மாமாவிடுகள் எல்லாம் ஒரே வரிசையில் இருக்கும். மாமா காங்கிரஸ் கட்சி. சித்தப்பா திமுக கட்சி. இருவரும் நண்பர்கள்.முற்போக்குச்சிந்தனையாளர்கள் ஆனால் அடிக்கடி கட்சியால் சண்டை வரும். மாமாவீட்டில் சுபாஸ்சந்திரபோசு அவர்களின் முழு உருவப்படம் இருக்கும்.

எங்கள் உறவில் உள்ள பிள்ளைகளின் பெயர்களெல்லாம் நல்ல தமிழில் இருந்தது. குறிப்பாக அன்புக்கரசி,தமிழ்ச்செல்வம்,மலர்க்கொடி, மின்னல்கொடி,கலைச்செல்வம்,திலகராணி,செல்வராணி ,ரோஜா. மாமாவும் சித்தப்பாவும் என்னை துவரங்குறிச்சி மணிமாறன் டாக்கிசில் திரைப்படம் பார்க்க அழைத்துச்சென்றார்கள்.  திரைப்படம்  ‘நல்லவன் வாழ்வான்’. அந்தப்படத்தில் தேர்தல் உண்டு.எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா நடித்தது.

“குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா
 மனசை மயக்குதா சுகமா இருக்குதா”

என்ற பாடல் காட்சி நினைவுக்கு வருகிறது. பாடலாசிரியர் அவினாசிமணி. மனசுக்குப்பிடித்த பாடல் இன்னொரு பாடல் “ ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் , அன்புமனங்களில் சிரிக்கின்றான்” என்ற பாடல்.எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

நான் முதலில் பார்த்தபடம் படிக்காதமேதை என்று நினைக்கின்றேன்.

“ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
” என்ற பாடலும்

“எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நானென்றான்
இங்கிவனை யான்பெறவே
என்னதவம் செய்துவிட்டேன்”

என்ற பாடலும்தான்  நினைவுக்கு வருகிறது. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடும்போது ஓரிடத்தில் ‘கண்ணன்’என்ற சொல்லை குழைவோடு, ஒவ்வொரு எழுத்தாக, உணர்ந்து ‘க- ண்- ண- ன்’ என்று உச்சரிக்கும்போது நான் இன்றும் அழுதுவிடுவதுண்டு. படத்தில் அதைக்கேட்கும் பழம்பெரும் நடிகர் ரெங்காராவ் அவர்களும் அழும் காட்சி உண்டு.

படிப்புக்காக செலவுசெய்ய பெற்றோர் தயங்கியதில்லை. என்னைப் படிக்கவைக்கவேண்டும் என்று முடிவுசெய்து என்னைப் பட்டுக்கோட்டையில் “அரசு கழக உயர்நிலைப்பள்ளியில்”சேர்த்தார்கள்.
அதில் தாய்மாமா ஆறுமுகமழவராயர் அவர்களுக்கும், ஆசிரியர் மாமா பெ.மாணிக்கம் அவர்களுக்கும் பெரும்பங்குண்டு.ஐந்து வகுப்பை பிச்சினிக்காட்டில் முடித்தேன். அப்போது குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள் மாமா மாணிக்கம்,மன்னன்காடு அய்யாவு,பொன்னம்பலம்,தியாகராஜன், உபகாரம்.வேலாயுதம்(கருவாட்டுக்காரவாத்தியார்) வேதநாயகம் இன்னொருவர் பெயர் சரியாக என் நினைவுக்கு வரவில்லை.
அவர்தான் எங்களை முதன்முதலில் சுற்றுலாவுக்கு அழைத்துச்சென்றவர்.

அருகிலிருக்கும் அதிராம்பட்டினத்திற்குத்தான் சென்றோம்.மாலையே அதிராம்பட்டினம் சென்றுவிட்டோம். இரவு அங்குள்ள பள்ளியில் தங்கினோம். அடுத்த நாள் காலையில் உப்பளத்தில் அமைந்த ஒரு கட்டடத்தில் மாணவர்கள் நாங்கள் நடத்திய பாடலும் ஆடலும் நிகழ்ந்தது.ஆசிரியர் சிறப்பாகப் பாடுவார். அதனால்தான் அந்த நிகழ்ச்சி. பெண்மாணவர்கள் நடனம் ஆடினார்கள். ஆசிரியர் நன்றாகப்பாடினார். அவர்பாடிய பாடல் இன்னும் நினைவுக்கு வருகிறது. அதுதான்

“ பாட்டுப்பாடவா பார்த்துப்பேசவா
 பால்நிலாவைப்போலவந்த பாவையல்லவா
”.என்ற பாடல்.

அவர் ஒரு பாடகர்.நல்ல கற்பனை வளம் நிறைந்தவர். அதனால்தான் சுற்றுலாவை ஏற்பாடு செய்தார். அதிலொரு சுயநலம் இருந்தது. அது அவருக்கானது. அதில் எங்களுக்கொன்றும் இழப்பில்லை. அவரைப்பொறுத்தவரை ஒரு கல்லில் இரண்டு மாங்காய். உப்பளம் செல்லும்போதுதான் தாழங்காயைப் முதன்முதலில் பார்த்தேன்..

“சுடர் மின்னல் கண்டுத்தாழை
 மலர்வதைப்போலே”

என்று உவமைக்கவிஞர் சுரதா நாடோடி மன்னன் படத்திற்கு பாடல் எழுதியதைத் தெரிந்துகொண்டபோது நினைவுக்கு வருவது அன்றுபார்த்த தாழங்காடுதான்; தாழங்காய்தான்.

“தாழம் பூவே தங்கநிலாவே
தலை ஏன் குனிகிறது?”

என்ற பாடலைக்கேட்கிறபோதும் முந்திக்கொண்டு என் சிந்தனையில் முளைப்பது  அன்று பார்த்த அந்த அதிராம்பட்டினம் தாழங்காடுதான். முதல் நாள் இரவு நாங்கள் பார்த்த திரைப்படம் ‘ கொஞ்சும் சலங்கை’.அதில் மறக்கமுடியாத பாடல்”சிங்காரவேலனே தேவா” என்ற பாடல். எஸ்.ஜானகி அவர்கள் பாட காருகுறிச்சி அருணாசலம் நாகஸ்வரம் வாசிக்க அமைந்தபாடல். புகழ்பெற்ற பாடல். தில்லானாமோகனாம்பாவில் இடம்பெற்ற

“ நலம்தானா?நலம்தானா?
 உடலும் உள்ளமும் நலம்தானா
? என்ற பாடலுக்கு முன்னோடி அதுதான்.

காருகுறிச்சி  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகில் உள்ளது. காருகுறிச்சி அருணாசல்ம் கோவில்பட்டியில்தான் வாழ்ந்தார். திருவாவடுதுறை ராஜரத்தனம் பிள்ளையைக் குருவாக ஏற்றுக்கொண்ட ஏகலைவன். குருவை மிஞ்சிய சீடன். ஒருமுறை கோவில்பட்டியில் இரவில் வீட்டில் காருகுறிச்சி நாகஸ்வரம் வாசித்ததுகேட்டு,கோவில்பட்டி வந்திருந்த  ராஜரத்தனம் பிள்ளை அருணாசலத்தின் வீட்டிற்கு வருகிறார். கதவைத்திறந்துகொண்டு உள்ளே செல்கிறார்.தன்னை மறந்து காருகுறிச்சி வாசித்துக்கொண்டிருக்கிறார். அதைப்பார்த்து, ரசித்து, பிரம்மித்துப்போகிறார் ராஜரத்தனம் பிள்ளை. வீட்டில் ராஜரத்தன்ம்பிள்ளையின் புகைப்படம் இருந்ததாம்.

அந்தப் படத்தின் சந்நதியில்தான் காருகுறிச்சி வாசித்துக்கொண்டிருக்கிறார். அதைப்பார்த்த ராஜரத்னம்பிள்ளை அவரை தன்னுடனே அழைத்துச்செல்கிறார். பின் கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு வாசித்து, புகழ்பெற்றார்.காங்கிரஸ் மாநாட்டில் வாசித்தாராம். இதைக்கேட்ட இந்திராகாந்தி அம்மையார் தந்தை நேருவிடம் இந்திப்பாடலை வாசிக்கச்சொன்னாராம்.நேரு அவர்களும் காமராஜ் அவர்கள் மூலமாக தெரிவிக்க இந்திப்பாடலையும் வாசித்தாராம். சிறப்பாக வாசித்ததால் பிரதமர் நேரு அவர்கள் தில்லிக்கு அழைத்துப் பாராட்டி கேடயங்கள் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார். காருகுறிச்சியில் அவருக்குச் சிலை இருக்கிறது. புகழுடன் மறைந்துவிட்டார். படத்திற்கு இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. ஜானகி அம்மாள் பாட காருகுறிச்சி வாசிப்பதுபோல் அமைந்தது அந்தப் பாடல். உண்மை அதுவல்ல. ஜானகி அம்மாள் தனியே பாட, காருகுறிச்சி தனியே வாசிக்க பின் இரண்டையும் ஒன்றுசேர்த்திருக்கிறார் நாயுடு அவர்கள். இன்றைக்கு அந்த வசதி அதிகம். அன்றைக்கே செய்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களை நினைத்து வணங்குகிறது என் மனம்.

அன்று ‘கொஞ்சும் சலங்கை’ படம்பார்த்தபோது எனக்கு எதுவும் தெரியாது. ஆனால, இன்றைக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் என்பது என் ஆசை. என் கல்வியின் அடிப்படையை வழங்கியவர் ஆசிரியர் உபகாரம்.பெயருக்கு ஏற்றாற்போல் எங்கள் ஊருக்கும் கல்விக்கும் உபகாரம் செய்தவர். இப்படி மறக்கமுடியாத நிகழ்வுகளோடுதான் நம்முடைய வாழ்க்கை எழுப்பப்பட்டிருக்கிறது; பின்னப்பட்டிருக்கிறது. எதையும் சாதாரணமாக  எடுத்துக்கொள்ளமுடியாது.அன்று நிகழ்ந்த ஒவ்வொரு அசைவுக்கும் நிகழ்வுக்கும் என் பரிணாமத்திற்கும் தொடர்புண்டு.அவை என் பரிமாணத்தின் அடித்தளங்கள்.

சிங்கப்பூர் நூலகத்தில் கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய “பட்டாம் பூச்சி விற்பவன்”கவிதைத்தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தபோது சின்னவயதில் பம்பரம்குத்தி விளையாடியது உடனே என் நினைவில் வந்து விளையாடியது. அதன்பின் என்னால் படிப்பைத்தொடரமுடியவில்லை.என்னை உசுப்பிக்கொண்டே இருந்தது. அதன் விளைவுதான் இந்தக்கவிதை:

பம்பரம்

நீ என்
சின்னவயசு
விளையாட்டுச் சாதனம்

குறிவைத்துக் குத்துதற்கும்
ஒழுங்காகச் சுற்றுதற்கும்
எத்தனை எத்தனை
பிரயத்தனங்கள்

வட்டத்துக்குள் குத்தி
எப்படி லாவகமாய்
உன்னை
வெளியில் எடுத்திருப்பேன்

உன்னை
விதவிதமாய்ப் பார்ப்பதற்கு
விடாப்பிடியாய் அடம்பிடித்து
அம்மாவின் கையிருப்பைக்
கரைத்திருக்கிறேன்

பள்ளிக்குப் போவதைத்
தள்ளிப்போட்டு
உன்னோடு
பம்பரமாய்ச் சுற்றியிருக்கிறேன்

புத்தக மூட்டையோடு
கையும் களவுமாய்ப்
பெற்றோர் கையில்
சிக்கியும் இருக்கிறேன்

அடடா!
அந்தப் பச்சைப்பொழுது
என்
பம்பரப் பொழுதல்லவா!

படுத்துப் புரள்கையில்
பம்பரம் அழுத்தித்
தூக்கம் வலித்தும்
பாரமாய் இல்லாத
அதிசயக் காலம் அது

கையிலே
பம்பரத்தோடு
இருந்த நான்
இன்னொரு கையில்
என்றுமே பம்பரமாய்

சுற்றும் என்னைச்
சும்மா இருக்கிறேன்
என்கிறார்கள்

ஓய்விலாச் சுற்றில்
ஒட்டிக்கொள்வது
எதுவுமில்லை

கனத்த தலை
ஒருநாள்
கனங்களை
இறக்கிவைத்துச் சாயும்

அதுவரை
உள்ளத்தின் நாடகம்
ஓயாது.

பம்பரம் குத்திவிளையாடும்போது கவிதை எழுதவில்லை.  அது கவிதை எழுதும் வயதில்லை. அது  ஒரு பம்பரப்பொழுது. காலம் என் கையில் பம்பரமாக இருந்தது. விளையாடினேன். இப்போது காலத்தின் கையில் நான் பம்பரம். அது விளையாடுகிறது என்னை. எவ்வளவு வயசானாலும் அந்தப் பம்பரப்பொழுது இளமையை மறக்கமுடியவில்லையே. இதோ கவிஞர் மாலதி மைத்ரி கவிதையைப் படியுங்கள் அது விளங்கும்; விளக்கும்.

“ தேனீக்கள் மொய்க்கும்
  அவரை படர்ந்த வேலியும்
  ஆட்டுப் புழுக்கை
  மலிந்த வீடும்
  பூவரச நிழலும்
வேப்பமரத்தடிப் பள்ளியும்
எருமைக்குட்டையும்
குயில்தோப்பும் முந்திரிக்காடும்
பறவைகளின் இரைச்சல்மிகுந்த
கடற்கரையும்
பால்யத்தின் பழைய
புகைப்படமாய் தொங்குகின்றன”
    
(வரும்-9)

pichinikkaduelango@yahoo.com