மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் –
அத்தியாயம் ஏழு: நைஜீரியனைப் பிடித்த பேயும், தடுப்புமுகாம் கணக்கெடுப்பும்!
இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை வரவேண்டிய விருந்தாளிகள் வராத நிலை, எதிர்பாராத விருந்தாளிகளின் வரவு ஆகிய சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு தொடர்ந்தபடியிருந்தது. இதே சமயம் உலக நடப்பிலும் குறிப்பிடும்படியான சம்பவங்கள் சில நிகழ்ந்தன. பிரயாணிகளுடன் சோவியத் நாட்டு எல்லைக்குள் அத்து மீறிப்பறந்த கொரிய விமானமொன்று ரஷ்யப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்செயல் சர்வதேசரீதியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான நாடுகள் மத்தியில் ரஷ்யாவுக்கெதிரான உணர்வுகளைக்கிளர்ந்தெழ வைப்பதற்கு இச்சம்பவம் பெரிதும் துணையாக இருந்தது. இதே சமயம் எம் நாட்டைப்பொறுத்தவரையில் கொழும்பு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் தாக்கப்பட்டதும், வவுனியாவில் இரு தமிழ் இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடும்படியான செய்திகள்.
எதிர்பாராத விருந்தாளிகளினால் சற்றே தென்புற்றிருந்த எங்களது நிலைமை மீண்டும் சிறை வாழ்வின் தாக்கத்தால் நிலை மாறியது. பழைய குருடி கதவைத்திறந்த கதைதான். ஆனால் பாதிரியார் ஏபிரகாமின் தொடர்பு எங்களை உளவியல்ரீதியில் உறுதியாக்குவதற்குப் பெரிதும் உதவியாகவிருந்தது. அடிக்கடி ஒருவர் மாறி ஒருவர் பாதிரியார் ஏபிரகாமுடன் தொலைபேசியில் கதைத்துக்கொள்வோம். அவரும் எந்த நேரமென்றாலும் அலுக்காமல், சலிக்காமல் ஆறுதலாக, இதமாக எங்களுக்குத்தேறுதல் சொல்வார். அந்தச்சமயத்தில் இவ்விதம் கதைப்பதே எங்களுக்குப்பெரிய தென்பைத்தந்தது. எங்களில் மிகவும் அதிகமாக இராஜசுந்தரத்தாருக்குத்தான் ‘ஃபாதரின்’ தொடர்பு உதவியாகவிருந்தது. மனுசன் பிள்ளை, குட்டிகளைத் தவிக்க விட்டு விட்டு , இந்த வயதிலை நாடு விட்டு நாடு அகதியாக ஓடி வந்திருந்த நிலையில், தடுப்பு முகாம் வாழ்வு அவரை ஓரளவு நிலைகுலைய வைத்திருந்தது என்று கூடக்கூறலாம்.
இது இவ்வாறிருக்கத் தடுப்பு முகாமைப்பொறுத்தவரையில் புதியவர்கள் வருவதும், உள்ளேயிருப்பவர்கள் போவதுமாகக் காலம் போய்க்கொண்டிருந்தது. சிலர் நாடு கடத்தப்பட்டார்கள். சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியே சென்றார்கள். ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் வழக்கு முடியும் வரையில் வெளியில் செல்ல முடியாதுபோல் பட்டது.
இதற்கிடையில் டானியலின் வாழ்க்கையில் ஒருவித மலர்ச்சி மலர்ந்தது. அவனும் அடிக்கடி உணவுக்கூடத்தில் வேலை செய்வான். அவ்விதம் வேலை செய்யும்போது அவனது நாட்டைச்சேர்ந்த பெண் கைதி ஒருத்தியுடன் காதல் வயப்பட்டிருந்தான். குழந்தைத்தனம் சிறிது சிறிதாக அவனை விட்டுப்போய்க்கொண்டிருந்தது.
இது தவிர இன்னுமொரு முக்கியமான விடயம் நாடு கடத்தப்படுவதற்காகக் காத்திருந்த நைஜீரிய நாட்டு இளைஞனொருவன் ஓரிரவு சன்னி கண்டு விட்டதுபோல் பிதற்றத்தொடங்கியதுதான். பலவித எதிர்பார்ப்புகளுடன் , பண விரயத்துடன் அமெரிக்கா வந்திருந்தவன். நாடு கடத்தப்படவிருந்ததனால் அவனது புத்தி பேதலித்துவிட்டது என்று கூறிக்க்கொண்டார்கள். பேய் பிடித்துவிட்டது என்றும் கதைத்துக்கொண்டார்கள். எங்கள் தடுப்பு முகாமில் இருந்த ஆபிரிகர்களிலொருவர் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த விற்பன்னராம். உடலில் குடியிருக்கும் கெட்ட ஆவிகளை ஓட்டுவதில் சமர்த்தராம்.
அன்றி இரவு முழுவதும் பேய் பிடித்த நைஜீரிய இளைஞனுக்கு ஆவியோட்டிக்கொண்டிருந்தார் அந்த மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த மந்திரவாதி. நாங்களும் அவர் பேயோட்டுவதைப்பார்த்தபடி , விடிய விடிய விழித்தபடியிருந்தோம். ஆபிரிக்க வாழ்வைக்காட்டும் ஆங்கிலப்படங்களில் வரும் மந்திரவாதிகளைப்போல் ஆபிரிக்க மொழியில் கெட்ட ஆவியை அவர் விரட்டிக்கொண்டிருந்த காட்சி வியப்பாகவும், சுவையாகவுமிருந்தது. புதுமையாகவுமிருந்தது. முகாம் பாதுகாவலர்களும் இந்த விடயத்தில் தலையிடாமல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்கள். ஆனால் மறுநாளிரவு அந்த இளைஞன் தனது சுயநிலைக்கு வந்துவிட்டான்.
இது தவிர இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் கூறித்தானாக வேண்டும். அது இரவு நேரத்தில் முகாமிலுள்ளவர்கள் படுப்பதற்கு முன்னர் இறுதிக்கணக்கெடுப்பார்கள். இதை எடுப்பது பாதுகாவலர்கள் தரத்திலும் சிறிது கூடிய அதிகாரியொருவர். கறுப்பினத்தவர். பழைய ஆங்கில யுத்தத்திரைப்படங்களில் வரும் கண்டிப்பான ஜேர்மன் இராணுவ அதிகாரியொருவரைப்போன்ற தோற்றம். கண்ணாடி அணிந்து, தொப்பியுடன் , முகத்தில் கடுமையுடன் , கைகளைப்பின்புறமாகக் கட்டியவாறு, கண்டிப்பான இராணுவ அதிகாரியிருவரைப்போல் கணக்கெடுக்க வரும் இவரைப்பார்த்ததும் , முகாமிலுள்ளவர்களுக்குச்சிரிப்பாகவிருக்கும். பகல் முழுவதும் பல்வேறு நினைவுகளுடன் மாரடித்துவிட்டுப் படுக்கையில் சாயும் நேரம் மனம் இலேசாகிக்கிடக்கும். குறும்பு செய்யும் எண்ணம் பரவிக்கிடக்கும். ரவிச்சந்திரன் தனது கட்டிலில் தலையணையை வைத்துப்போர்வையால் மூடிவிட்டு, வந்துவிட்டு எங்களுடன் கதைத்தபடியிருப்பான். இதுபோல் டானியலும் செய்வான். எங்களைக்கணக்கெடுக்கவரும் அந்த அதிகாரி ரவிச்சந்திரனை இரு தடவைகள் கணக்கெடுத்துவிட்டுச்செல்வார். அவர் தலை மறைந்ததும் எங்கள் கூடத்தில் குபீரென்று சிரிப்பு வெடிக்கும். சிரிப்பு வெடித்ததும் அதைக்கேட்டு எமது கூடத்துக்கு மீண்டும் திரும்பும் அந்த அதிகாரி எங்களைப்பார்த்து முறைத்துவிட்டுச்செல்வார். ஆனால் கணக்கு பிழை என்று அறிவிப்பார்கள். மீண்டும் ஒருமுறை கைதிகளை எண்ணுவதற்காக அந்த அதிகாரியே திரும்பவும் வருவார். இதற்கிடையில் நல்ல பிள்ளையாக ரவிச்சந்திரன் தன் படுக்கையில் போய்ப்படுத்துவிடுவான்.
[தொடரும்]
ngiri2704@rogers.com