பத்தி 7 இணையவெளியில் படித்தவை

சத்யானந்தன்

சந்திரா

அறைக்குள் புகுந்த தனிமை- சந்திராவின் மைல் கல்லான சிறுகதை

தமிழின் நவீனப் புனைகதைகளில் மைல் கல்லான கதைகள் என எப்போது தேர்வு செய்தாலும் சந்திராவின் ‘அறைக்குள் புகுந்த தனிமை இடம் பெறும். சந்தேகமே கிடையாது. ஆறு வருடங்கள் ஆகிவிட்டன வெளியாகி. இப்போது வாசிக்கும் என்மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான கதை. முதலில் வாசியுங்கள். இணைப்பு இது.

ஆணாதிக்க மனப்பான்மை (male chaunism) என்பது தான் என்ன? அது ஒரு நோயா? இல்லை காலம் காலமாக ஊறிய மனப்பான்மையா? இவை எல்லாமேயா? இதுதான் ;அனேகமாக எல்லா ஆண்களிடமுமே இருக்கிறதே. கொஞ்சம் பெண்கள் சகித்துக் கொண்டு போனால் தான் என்ன?

மேற்கண்ட கேள்விகளுக்கு இப்போது நாம் விடைகளை அறிவோம். ஏனெனில் கதையை நீங்கள் படித்து விட்டீர்கள்.

எனக்கு வாயில் வந்த படி அடுத்தவர்கள் பற்றி எதாவது மட்டமாகப் பேசுவதில் மிகவும் லயிப்பு அதிகம். போகிற போக்கில் உங்கள் மத குரு, உங்க:ளுக்குப் பிடித்த சிந்தனையாளர், அரசியல் தலைவர் என யாரைப் பற்றி வேண்டுமானாலும் மிகவும் மட்டமான மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டே போகிறேன். உங்களுக்குள் அது என்ன மாதிரியான வேதனையை, வலியை, காயத்தை, அவமதிப்பை, அவமானத்தை, ஆத்திரத்தை, கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி எனக்கு என்ன அக்கறை. வாயில் வந்த படி பேசுவது என் அடிப்படை உரிமை இல்லையா?

மேலே உள்ள உதாரணம் சொரணை பற்றியது. பெண்களுக்கென சில பிரத்யேக சொரணைகள் (finer sensitivities or unique senstitivities) உண்டு. அதை நாம் தெரிந்து கொள்ள முயல்வதே இல்லை. ஏனென்றால் நான் ஆண். பெண் என்னைப் பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும். அதனால் அவளது சொரணைகள் பற்றி எனக்கு என்ன தெரிய வேண்டும்? ஒன்றும் தேவையே இல்லை. சரி. அவளை நான் புண்படுத்தி விட்டால் தான் என்ன? ஆண் துணையில்லாமல் பெண்ணால் வாழ முடியுமா? இத்யாதி இத்யாதி சிந்தனைகள் எனக்குள் ஊறி இருக்கின்றன.

பெண்ணின் உடல் என் சுகத்துக்காகவும் எனக்குப் பிள்ளைகள் பெற்றுத் தரவென்றும் மட்டுமே படைக்கப் பட்டிருப்பதாக நான் தெளிவாக நம்புகிறேன். எனக்கு விலைமாதிடம் போகும் வாய்ப்பு அதன் அடிப்படையில் தான்.. குடும்பம் என்னும் பிணைப்பில்லாமல் உடலை விற்கும் தொழில் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்காகப் பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தப் பட்டாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்படும் போது சுகம் தர அதையே தொழிலாகக் கொண்ட பெண்கள் இருந்தாக வேண்டும். எனது இந்த வக்கிரமான ஆணாதிக்கமான மனநிலையை சந்திராவின் சிறுகதை தோலுரிக்கிறது.

பலமுறை நான் குறிப்பிட்டது போல பெண்களின் புனைவு முறை ( female genre) என்று ஒன்று இருக்கிறது. அது பெண்களின் எழுத்தில் மட்டுமே வெளிப்படும் அரிய புனைவாகும். அது கவிதை, கதை அல்லது நாவல் எதுவாகவும் இருக்கலாம். சந்திராவின் கதையை இந்தக் கோணத்தில் நாம் காண வேண்டும். 100/100 அவருக்கு இந்தக் கதைக்குக் கட்டாயம் உண்டு.

அடுத்த கோணம் நவீனத்துவமான சிறுகதையா இது? ஆமாம் நவீனத்துவத்தின் கூறுகள் கண்டிப்பாக இருக்கின்றன. சில இடங்களில் மிகை இருப்பதாகப் பட்டாலும் அவை சூழ்நிலைக்கும் கதாபாத்திரச் சித்தரிப்புக்கும் தேவைப்பட்டதாக இருந்திருக்கும். இந்தக் கதை எடுத்தாளும் சூழல் நவீனத்துவத்தின்  வித்தியாசமான ஒரு பரிமாணத்தை நமக்குக் காட்டுகிறது.

யதார்த்தத்துக்கும் மாய யதார்த்தத்துக்கும் இடைப்பட்டு ஒரு மந்திரத்தன்மையுடனான காட்சிப்படுத்துதல் இந்தக் கதையில் இருக்கிறது. கதையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற உருவம் அது. இப்படி ஒரு உருவத்துடன் வேறு கதைகள் என்னென்ன வந்திருக்கின்றன என நாம் தேடுமளவு வித்தியாசமான வடிவம்.

விமர்சனம் செய்ய சற்றே இடம் தந்திருக்கிறார் சந்திரா. படைப்பாளி நவீனப் படைப்பில் தென்படுவதில்லை. இதில் படைப்பாளியின் தரப்பு தென்படுகிறது. அடுத்தது நுட்பமாக இதன் மையக்கரு வெளிப்பட்டிருக்க முடியும். அது இன்னும் தைப்பதாகவும் சிந்தனைக்குத் திறவுகோலாகவும் இருந்திருக்கும்.

கதையை எல்லோரும் வாசிக்க வேண்டும் என கதையின் வலிமையான வடிவை முன்னிறுத்தி முடிக்கிறேன். வாசிக்காமல் விமர்சனத்தை வாசித்தவர் அரிதாயிருந்தால் தயவு செய்து வாசியுங்கள். வாழ்த்துக்கள் சந்திரா. நிறைய எழுதுங்கள்.

sathyanandhan.mail@gmail.com
Sathyanandhan: http://sathyanandhan.com
sathyanandhan.mail@gmail.com