லண்டனில் சர்வலோகேஸ்வரி குமாரராஜாவின் 70ஆவது பிறந்ததினவிழாவும் பாராட்டும்

லண்டனில் சர்வலோகேஸ்வரி குமாரராஜாவின் 70ஆவது பிறந்ததினவிழாவும் பாராட்டும் ‘முதியவர்கள் பலம் குன்றியவர்களாகக் கருதப்படுகின்ற இன்றைய கால கட்டத்தில், லண்டனில் ‘முதியோர் கலைமாலை’ என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து முதியவர்களை ஒன்றுசேர்த்து, ஊக்கப்படுத்தி கலை நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்குபற்றச் செய்த பெருமை சர்வலோகேஸ்வரி அவர்களையே சாரும். நாட்டியத்துறையில் ஆளுமைகொண்ட சர்வலோகேஸ்வரியின் 70ஆவது வயது நீண்டதாக இருக்கலாம். ஆனால், அவரது சமூகசேவைகளும் மிக நீண்டதாக அமைந்துள்ளது. தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமன்றி பிற சமுதாயத்தினரையும் மனிதப் பண்போடு நேசித்து, தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆங்கில மொழியைக் கையாள்வதில் அவதியுறும் தமிழ் மக்களுக்கு மொழிபெயாப்பாளராக வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று பணிபுரிந்தமையை பாராட்டியதோடு, இவரின் பல்வேறு சேவையைப் பாராட்டி, 2014 ஆம் ஆண்டு கிங்ஸ்ரன் மேயயரால் இவருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையையும் பெருமையுடன் நினைவிருத்த வேண்டும்’ என்று கடந்த சனிக்கிழமை 6ம் திகதி சட்டன் ‘தோமஸ் வோல் சென்ரரில்’ இடம்பெற்ற சர்வலோகேஸ்வரியின் 70ஆவது பிறந்ததின விழாவின்போது திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

    ‘சட்டன் மூத்தோர் வலுவூட்டல் திட்ட அமைப்பில்’ செயற்படும்போது எந்தவொரு விடயத்தையும் முன்னின்று செயற்படுவதில் காட்டும் ஊக்கமும், துடிப்பான செயற்பாடும், திறம்பட நடத்தக்கூடிய வல்லமையும் சர்வலோகேஸ்வரிக்;;கென்ற ஒரு சிறப்பான அம்சமாகும். சட்டன் தமிழ் நலன்புரிச் சங்கத்தோடு ஆரம்பித்த முதியோருக்கான அவரது சமூக சேவைகள் சட்டன், மேட்டன், நோபிற்றன், கிங்ஸ்ரன், ஈஸ்ற்ஹாம் எனப் பல்வேறு பகுதிகளிலும் விரிந்து கிடப்பது அவரது சமூகசேவைக்குச் சான்றாகும். இன்னும் அவரது சேவைகள் தொடர வேண்டும்!’ என டாக்டர் பகீரதன் அமிர்தலிங்கம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

 இவரது குடும்பப்பின்னணியின் பல்வேறுபட்ட அரசியல், சமூக சேவைகளை வரிசைப்படுத்தி எடுத்துரைத்த  சர்வலோகேஸ்வரியின் மகன் முறையான கோமான் விஷ்னு தங்கராஜா அவர்கள் இவை வரலாற்றில் பதியப்பட வேண்டியவை எனக் கூறினார். அத்தகைய மூதாதையர்கள் ஆற்றிய அளப்பரிய சேவைகளின் பின்னணியில் இவர் இத்தகைய சமூக சேவைககளைத் தொடர்வது தனக்கு பெருமை தருகின்றது’ என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

சர்வாவின் துணைவர் ஆனந்த குமாரராஜா உட்பட குமுதினி, டொறே சபாபதி, வேந்தன், லக்ஷ்மி நாராயணி, ஆனந்தி சாந்தினி, நிவானி ஜெயரஞ்சன், முருகதாசன், ராசாத்தி சுருதிக்கா, அரன் சந்தூஷ் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்தி நின்றனர்.

     கவுன்சிலர் தயாளன், ஆசிரியை ராஜநாயகி தியாகராஜா, கமலா ஜெயபாலன், டாக்டர் விவேக், நவஜோதி ஜோகரட்னம் போன்ற பலரும் அவரை வாழ்த்திப் பேசியிருந்தார்கள். ‘சமூக ஜோதி’, ‘சேவைத் திலகம்’ போன்ற பட்டங்கள் சட்டன் பகுதித் தமிழ்மக்களால் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட வேண்டிய தொன்றாகும். ஹரோ மேயர் லண்டன் பாபா சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருந்தார். கவிஞர் பாவை ஜெயபாலன் நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தார்.

navajothybaylon@hotmail.co.uk