தொல்காப்பியரின் காலம் கி.மு.711

தொல்காப்பியர்

-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன) -தொல்காப்பியம் என்னும் நூலைத் தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற புலவன் பாடியருளினார்.  தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்  தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண, இலக்கிய உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது.  இந்நூலை யாத்த  தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும்,  இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராவார்.  இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும், ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்பது டாக்டர் மு.வரதராசனாரின் கூற்றாகும்.

இன்னும், ‘ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுகின்றார் தொல்காப்பியர்.  இவர் ஒரு காப்பியக் குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற்பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர்.  வேறு சிலர் இவரின் இயற்பெயர்  ‘திரணதூமாக்கினி’ எனவும் ‘சமதக்கினியாரின் புதல்வர்’ எனவும் கூறுவர்.  அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் ஆவார்.  இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஒருமித்து 27 இயல்கள் உள்ளன.  எழுத்ததிகாரத்தில் 483 சூத்திரங்களும், சொல்லதிகாரத்தில் 463 சூத்திரங்களும், பொருளதிகாரத்தில் 656 சூத்திரங்களுமாக ஒருமித்து 1,602 சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளன.  ஆனால், இந்நூற் சூத்திரங்கள் 1,595 என இளம்பூரணரும், 1,611 என நச்சினார்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளனர்.

செந்நாப்புலவரான பனம்பாரனார் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர்.  இவர் தொல்காப்பிய நூலுக்குச் சிறப்புப் பாயிரம் ஒன்றினைச் செய்துள்ளார்.  இஃது இந்நூலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்பானின் அரச அவையிலே அதங்கோட்டாசிரியரின் முன்பாக அந்நாளில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியும் அப்பாயிரத்தின் மூலம் பின்வருமாறு அறியக்கிடக்கின்றது.

“ வடவேங்கடந் தென்குமரி
  ஆயிடைத்
  தமிழ்கூறும் நல்லுலகத்து
  வழக்குஞ் செய்யுளும்  ஆயிரு முதலின்
  எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்

  செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
  முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
  புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
  நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
  அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

  அதங்கோட் டாசாற் கரிதபத் தெரிந்து
  மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
  மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
  தொல்காப்  பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
  பல்புகழ் நிறுத்த படிமை யோனே. ”

இப் பாயிரத்தின் பொருள்:- ‘வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரியாறும் எல்லையாகி அதனிடைப்பட நிலவியது தமிழ் கூறும் நல்லுலகமாகும். அதன்கண் நிலவிய வழக்குகளையும், செய்யுட்களையும், அவற்றிற்குரிய எழுத்து, சொல், பொருள் இலக்கணங்களையும் ஆராய்ந்தனர். செந்தமிழின் இயற்கையோடு பொருந்திய வழக்குகளையும் நோக்கி, முன் எழுந்த நூல்களையும் கற்றுத் தெரிந்தனர்.

வெற்றிச் செல்வனான பாண்டியன் மாகீர்த்தியின் அவையத்தே, அறத்தினைக் கூறும் நாநலத்தை உடையவனும், நான்மறைகளைக் கற்றறிந்தவனும், அதங்கோடு என்னும் ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமில்லாத இப் பனுவலையும் தம் அறிவுத் திறனால் தொகுத்துத் தந்தனர். மயக்கம் இல்லா நெறியோடு எழுத்து இலக்கணத்தைக் காட்டி, அதன் பிரகாரம் அமைந்து விளங்கும் சொல்லும் பொருளுமாகிய இலக்கணங்களை முறைமையாகக் காட்டினர்.

நீர் நிறைந்த கடலாகிய எல்லையைக் கொண்ட உலகில், இந்திரனால் இயற்றப்பட்ட ஐந்திரத்தைக் கற்று, நிறைந்த அறிவு பெற்றவரும், ‘பழைய காப்பியக் குடியினர்’ எனத் தம் பெயரை உலகில் நிலைநாட்டியவரும், மற்றும் பல்வேறு புகழையும் தாங்குபவரான சிறப்பினையுடைய தொல்காப்பியனார் ஆவார்.’ என்பதாகும்.

வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்குத் திசைகளில் கடலாகவும் அமைந்த எல்லைப் பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு என்றழைப்பர்.  ஆனால், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கடல் எல்லைகளைக் குறிக்கவில்லை. அவர் பாயிhம் இவ்வாறு தொடங்குகின்றது.

                   ‘வடவேங்கடந்  தென்குமரி
                   ஆயிடைத்
                   தமிழ்கூறும்  நல்லுலகத்து .. ‘ 
                                     
பனம்பாரனாரின்  பாயிரத்தில் ஒரு சிறப்பு அம்சம் அமைந்திருப்பதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர் ஒரு விடயத்தை – அதாவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லையாக அமைந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்லிப் போகின்றார்.  வடக்கே நீண்ட தொடர் வேங்கட மலை.  தெற்கே பாய்ந்தோடும் குமரியாறு.  இது கடல் வரை சென்று சங்கமிக்கும்.  எனவே, கடல் எல்லையைக் கூறாமற் கூறியுள்ளார்.  இன்னும், வேங்கட மலைக்கும், குமரியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு என்று குறிப்பிடுவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லைவரை  உள்ள நிலப்பரப்பே தமிழ் கூறும் நல்லுலகமாகும் என்பது தோன்றா நிற்கும்.
   
தொல்காப்பியரின் காலம்                                                  

தொல்காப்பியர் காலத்தால் மூத்தவர். எனவே அவரின் கால எல்லையைக் கணிப்பதில் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. தொல்காப்பியரது காலம் பற்றி பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் இருந்து வந்துள்ளன. அவரது காலம் பற்றிப் பல ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடாத்தப்பட்டும் எதுவிதமான பலன்கள் ஏதும் எட்டப்படவில்லை. இந்நிலையில் ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும், மற்றையோரும் தங்களுக்கேற்றவாறு தொல்காப்பியரின் காலத்தைப் பல்வேறு பட்ட ஆண்டுகளைப் பாவனைப்படுத்தி வந்ததால் சீர்நிலை குலைந்து காணப்பட்டது.

இனி, தொல்காப்பியரின் கால எல்லையைக் கணித்த முறை பற்றியும், அது தொடர்பில் எழுந்த பல பிரச்சினைகள் பற்றியும் ஈண்டுக் காண்போம்.

• கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து  தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக்

கருத்தரங்கை 2010ஆம் ஆண்டில் நடாத்தினர்.

• கடந்த மூன்று ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய முப்பதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியக்

கருத்தரங்கங்களில் தொல்காப்பியரின் காலத்தையும், நாளையும் வரையறை செய்துள்ளனர்.

• கோவிலூர் திருமடத்தில் மூன்று நாட்கள் நிகழ்ந்த திருவள்ளுவர் ஆண்டு கருத்தரங்கில், அறிஞர் பலரால் ஆய்வு செய்யப்பட்டு,

தொல்காப்பியர் நாளும், கால எல்லையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

• அதன்படி, சித்திரைத் திங்கள் முழுமதி அவரது நாள் (சித்திராப் பௌர்ணமி) என்றும், அவரது கால எல்லை கி.மு. 711 (ஆண்டு 2721ஸ்ரீ2010+711)  என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

• தொல்காப்பியர் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றைச் சித்திரை மாதம் 2010ஆம் ஆண்டில் முனைவர் கு.சிவமணி தலைமையில் நடைபெற்றது. இதில் தொல்காப்பியரின் திருவுருவப் படத்தை புலவர் த.சுந்தரராசன் திறந்து வைக்க, முனைவர்கள் பெ. சுயம்பு, இரா. காசிராஜன் போன்றோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.

• தொல்காப்பியர் காலம் குறித்த இத்தீர்மானத்தை தமிழக அரசு ஏற்று, உலகச் செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியர் காலம் கி.மு. 711 என்றும், அவரது நாள் அந்த ஆண்டின் சித்திரைத் திங்கள் முழுமதி நாள் (சித்திராப் பௌர்ணமி) என்றும் அறிவித்து, தொல்காப்பியர் புகழை நிலைபெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் சார்பாக, பேராசிரியர் கு. சிவமணி, பேராசிரியர் தமிழண்ணல் மற்றும் ஆறு.அழகப்பன் போன்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

• இன்று தமிழ் மக்கள் ‘தொல்காப்பியர் காலம் கி.மு. 711’ என்று பாவனைப் படுத்தத் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். மேலும், பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்த முச்சங்கங்களில் ஒன்றான இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதினர். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரையில் காணப்படும் முச்சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளின் படியும், தொல்காப்பியம் கி.மு. 5000 ஆண்டளவில் எழுந்தது என்றும் இவர்கள் கணித்தனர். எனினும் தற்கால ஆய்வாளர்கள் சிலர் இதை ஏற்க மறுத்தனர். திருவாளர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றோர் தொல்காப்பியம் கி.மு. 700ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதினர். வேறு சிலர் இந்நூல் கி.மு.500 க்கு முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ்.வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் இந்நூலின் காலத்தை மேலும் பின்  தள்ளி கி.பி.3ஆம் நூற்றாண்டு என்றனர். இன்னும் சிலர் தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்றும், அதன் கால எல்லையை கி.மு.3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கூறினர். எனினும் தொல்காப்பியம் கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாய் அமைந்திருந்தது.

திருவள்ளுவர் தொடர் ஆண்டு

தமிழினம்  உலகிலேயே  மிகத்  தொன்மை  வாய்ந்த  நாகரிகச்  சிறப்பும்,  இலக்கிய வளமும், விழுமிய  பண்புகளும்,  காலத்தை  விஞ்சும்  தொன்மையும்  நிறைந்த   ஓர்   இனம். ஆனால் தமிழினத்திற்கு  ஒரு தொடர்  ஆண்டு இன்றி  நீண்ட காலமாக இருந்துள்ளமை கவலைக்குரிய ஒரு விடயமாகும். இக்குறை தீர்க்கப் பல தமிழறிஞர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னையில்   பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்ப்   பேரறிஞர்  மறைமலையடிகள் தலைமையில்  ஒரு  மாநாட்டைக்  கூட்டி  தமிழர்களுக்கு  உலகப் புகழை ஈட்டித் தந்த திருக்குறள் நூலை யாத்த திருவள்ளுவர்  காலத்திலிருந்து  தொடர் ஆண்டாக ஏற்பதென ஏகமனதாகத் தீர்மானித்தனர். இதனைத் தமிழ் இனம் ஏற்றுக் கொண்டது. இதனைத் தமிழக அரசும் 1971 ஆம் ஆண்டில் ஏற்று அனுமதியும் வழங்கியது. 

திருவள்ளுவர்
திருவள்ளுவர்   திருக்குறளை   முப்பெரும்   பகுதிகளாக   அறத்துப்பால்,  பொருட்பால், காமத்துப்பால்  என  ஒவ்வொன்றும்   பத்துக் குறள்கள்   கொண்ட   நூற்றி முப்பத்து மூன்று (133)  அதிகாரங்களில்  ஒருமித்து  ஆயிரத்து   முன்னூற்றி  முப்பது  ( 1330 ) குறள்களைப்   பாடியருளிய  தெய்வப்  புலவராவார்.  கடந்த  இரண்டாயிரம்  ( 2000 ) ஆண்டுகளாக    மக்கள்   மத்தியில்   திருக்குறளின்   கருத்தொளி   மங்காது  பிரகாசித்துக் கொண்டிருப்பது  அந்நூலின் சிறப்பாற்றலை எடுத்துக் காட்டுகின்றது.
திருவள்ளுவர் கி.மு. 31 ஆம் ஆண்டில் பிறந்தவர். இன்று நாம் அவர் தொடர் ஆண்டினை ~~ திருவள்ளுவர் ஆண்டு 2042 || ( 31 + 2011 )  என்று கூறுகின்றோம். இன்று சில தமிழ் ஊடகங்கள் இத் தமிழ் ஆண்டினையும் பாவனையில் சேர்க்கின்றன. இன்னும் முழு அளவில் திருவள்ளுவர் ஆண்டினைத் தமிழுலகம் கையாள முன்வரவேண்டும். இதை ஓர் உயிரூட்டும் பணியென  நினைந்து  எல்லாத் தமிழ் ஊடகங்களும் ஒருமித்துச்  செயலாற்றின்  முயற்சி தானே திருவினையாகும்.

தமிழினத்துக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைத் ‘திருவள்ளுவர் தொடர் ஆண்டு’  என நிர்ணயித்து, அதை நடைமுறைப்படுத்தியதற்கும், அண்மையில் ‘தொல்காப்பியர் காலம் கி.மு. 711’ என்று தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து அறிஞர் குழாம் முன்னிலையில் ஆய்வு நடாத்தி நிறைவேற்றப்பட்டதற்கும் தமிழ் நாட்டு அறிஞர்களையும், தமிழ் நாட்டு அரசையும் பாராட்டிப் போற்றுவது நம்மனைவரின் கடமையாகும்.

தமிழ் நாட்டு அறிஞர்களுக்கு இன்னும் ஒரு பணி எதிர்பார்த்திருக்கின்றது. திருமந்திரம் நூலை எழுதிய திருமூலர், இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களை எழுதிய வால்மீகி, வியாச மகரிசி ஆகியோரின் கால எல்லைகளை இதுவரை கணிக்காதிருப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். எனவே திருமூலர், வால்மீகி, வியாச மகரிசி ஆகிய தத்துவ மேதைகளின் கால எல்லைகளைக் கணக்கிலெடுத்து, அவற்றைத் தீர ஆய்வு செய்து, சிறந்த முடிவுகளை மக்கள் மத்தியிலும், தமிழ் நாட்டு அரசிடமும் வைக்க வேண்டிய சீரிய பொறுப்பு தமிழ் நாட்டு அறிஞர் குழாமின் முக்கிய கடமையாகும் என்று தமிழுலகம் வேண்டி நிற்கின்றது.

wijey@talktalk.net