நினைவுகளின் சுவட்டில் (76, 77 & 78)

நினைவுகளின் சுவட்டில் .. 76

வெங்கட் சாமிநாதன்மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும், பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக்கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது. இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் சிறுபிள்ளைத் தனம் என்று தான் சொல்லவேண்டும். அனேகமாக இந்த மாதிரி அடிக்கடி நிகழும் ஊடலுக்குக் காரணம் நானாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் எந்த ஒரு கோபத்துக்கும் காரணமாக அவன் என்ன செய்தான் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை. ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் ஏதோ காரணத்துக்காக பிரிந்து விட்டோம். பின் பார்த்தால் அவன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் கூடியிருந்த என் நண்பர்களில் யாரோ எனக்கு, சக்கரவர்த்தி வெளியே நின்றுகொண்டிருக்கிறான் என்று சொல்ல, எனக்கு எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாது, வெளியே வந்து “ என்ன விஷயம்? என்ன வேண்டும்?” என்று ஏதோ அன்னியனை விசாரித்தது போல் அவனைக் கேட்டது மனத்திரையில் ஓடுகிறது. நானாக இருந்தால், முதலில் அப்படி கோவித்துக்கொண்டவன் வீட்டுக்குப் போய் நின்றிருக்க மாட்டேன். மற்றதெல்லாம் பின் வருவது தானே. பின் எப்படி சமாதானம் ஆகி நாங்கள் பேச ஆர்ம்பித்தோம் என்பது நினவில் இல்லை. எந்தனையோ நூறு பிரிதல்களில் பின் ஒன்று சேர்தலில் இது ஒன்று. பத்து வயதுப் பையன்களிடம் இருக்கும் உணர்ச்சி வேகம், அசாதாரண பாசம் கோபம் எல்லாம் எங்களுக்கு என் இருபது வயதிலும் நீடித்திருந்தது தான் கோளாறாகிப் போனது.

எனக்கு அவனிடம் அசாதாரண ஒட்டுதல் தான் இதற்கெல்லாம் காரணமோ என்னவோ. எப்போதும் என்னை அண்டி சமாதானமாகப் போவது மிருணால் தான்.

நிறைய பேசுவோம். இலக்கியம், சினிமா என்று. நாடகம் பற்றிப் பேச ஏதும் உருப்படியான அனுபவம் எங்களுக்கு அங்கு கிடைத்திருக்கவில்லை. புர்லாவில் எங்கள் அலுவலகம் முடிந்ததும் வெளியேறினால், கடைத் தெருவுக்குப் போகும் வழியில் ஒரு சினிமா கொட்டகை வந்துவிட்டது. ஒரு பஞ்சாபி கொட்டகை போட்டிருந்தான். அதுவும் என்ன அனுபவம் எங்களுக்கு. பஞ்சாபி, ஹிந்தி ஹாலிவுட் சண்டைப் படங்கள். முதலில் வந்தன. நான் அங்கு பார்த்த பஞ்சாபி படங்கள் எல்லாம் பம்பாயிலிருந்து வந்தனவா இல்லை, பழைய லாகூர் தயாரிப்பிலான பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபி படங்களா என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை. அந்தப் படங்களில் வரும் டான்ஸும் பாட்டுக்களும் எனக்கு ரொம்ப பிடித்தவையாக இருக்கும். பெரும்பாலும் நாட்டுப் புறப் பாடல்கள். கிராமீய காதலைச் சொல்ல வந்தவை. ஒரு மாதிரியான வேகமும், கட்டுக்கடங்காத சந்தோஷத்தைச் சொல்வதாகவும், கொஞ்சம் நளினமற்றதாகவும் இருக்கும். அது ஒரு வகை. எனக்குப் பிடிததன. கொஞ்சம் அதன் வாசனை நுகர வேண்டுமானால், ராஜ் கபூரின் படம் ஒன்று, ஒரு அடுக்கு மாளிகைக் கட்டிடத்தில் ஒர் இரவு நடக்கும் சம்பவங்களைக் கோர்த்த ஒரு படம், ஷம்பு மித்ரா வின் இயக்கத்தில் வந்த ஜாக்தே ரஹோ படத்தில் ஒரு பாடிக்கொண்டே ஆடும் ஆட்டம் வரும் “கீ மைம் ஜூட் போலியா, கி மைம் ஜஹர் ………….கோய்னா… கோய்னா…….”வை நினைவுக்குக் கொண்டு வந்து கொள்ளலாம். நான் புர்லாவில் பார்த்த பஞ்சாபி படங்களில் இந்த ஒரு நளினமற்ற முரட்டு கிராமீயம் அதில் அதிகம் இருக்கும். மிருணாலுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. அவன் ரவீந்திர சங்கீதத்திலும், ரவிஷங்கரின் சிதாரிலும் வளர்ந்தவன். அப்போது இரண்டு வருஷங்களுக்கு முன் வந்து பிரபலமாகியிருந்த மஹல் படத்தில் வரும் ”ஆயேகா ஆயேகா ஆனே வாலா” என்ற பாட்டு எல்லோரையும் சொக்க வைத்த பாட்டு, முதன் முதலாகக் கேட்ட லதாவின் குரல் இப்போதும் கிட்டத் தட்ட அறுபது வருஷங்களுக்குப் பிறகும் அது என்னைச் சொக்கவைக்கும் குரல் தான் பாட்டுத் தான். அது படமாக்கப் பட்டிருக்கும் சூழலே இன்னமும் அது மனத்தை எங்கேயோ இட்டுச் செல்லும். ஆனால் அவன் அதை கொச்சையாகப் பாடி கேலி செய்வான். அப்போது அவனிடம் நான் கோபமாகப் பேசியதுண்டு. “அதைத் தாழ்த்திப் பேச நீ கொச்சைப் படுத்த வேண்டியிருக்கில்லையா மிருணால்? என்று கேட்பேன். சிரித்துக் கொள்வான்.

ஆனால் எனக்கு நல்ல சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பை அடிக்கடி தந்தது அந்த பஞ்சாபி நடத்தும் கொட்டகை தான்.எனக்கு மார்லன் ப்ராண்டோவையும் எலியா கஸானையும் முதன் முதலாக அறிமுகப் படுத்திய On the Water Front படத்தை நான் பார்த்தது அந்த கொட்டகையில் தான். காலி பானர்ஜி, சைகல், சத்யஜித் ரே, ரித்விக் காடக் போன்ற சினிமா உலக மேதைகளை அங்கு தான் அந்த கொட்டகை தான் எனக்கு அறியக் கொடுத்தது. நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். பதேர் பஞ்சலி, மேக் டேகே தாரா, தேவ் தாஸ் (பழைய பெங்காலி, ஹிந்தி பதிவுகள் மாத்திரமல்ல புதிய தமிழ் தேவ் தாஸும் தான் நாகேஸ்வர ராவ் தேவ் தாஸ்)

நான் பாதேர் பஞ்சலியை புர்லாவில் பார்ப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக கல்கத்தா போயிருந்த மிருணால் அதைப் பார்த்துவிட்டு பரவசத்தில் ஆகாயத்தில் தான் மிதந்து கொண்டிருந்தான். “இதைப் போல ஒரு படம் இந்தியாவில் இது வரைக்கும் வந்ததே இல்லை” என்று. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். ”இது வரைக்கும் இந்தியாவில் 30000 படங்கள் பதினெட்டு பாஷையில் வந்திருக்கு. நீ அதிகம் போனால் பெங்காலியிலியே 100 பார்த்திருக்கலாம்.”ரொம்பவும் அலட்டிக்காதே. பெங்காலிகளுக்கே தற்பெருமை அதிகம்” என்பேன். அவனோடு சண்டை. “பார்த்தால் நீயும் புரிந்து கொள்வாய்” என்பான். பார்க்கறதுக்கு முன்னாலேயே இப்பவே சொல்றேன். ”இந்தியாவிலேயே” என்றெல்லாம் சொல்வது அபத்தம்.” என்பேன். சில மாதங்களுக்குப் பிறகு புர்லாவில் அந்தக் கொட்டகையில் பார்த்தேன் தான். 30,000 படங்கள் பார்த்து ஒப்பிடாமலேயே, அவன் சொன்னது சரிதான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நாள் திடீரென்று ஆபீஸுக்கு வந்ததும் ஆல்பெர்ட் ஸ்வைட்ஸரின் ஆப்பிரிக்க அனுபவங்களைச் சொல்லும் சுய சரிதப் புத்தகம் ஒன்று கொடுப்பான் இன்று ராத்திரிக்குள் படித்து விட்டு நாளைக்குக் கட்டாயம் திருப்பிக் கொடுத்து விடு” என்பான். அன்று என் ஆபீஸ் வேலையும் நடக்காது. ராத்திரி தூக்கமும் கெடும். ஒரு நாள் கலைமகள் பத்திரிகையில் தேசிக வினாயகம் பிள்ளை பற்றி ஒரு கட்டுரையில் விநாயகம் பிள்ளையின் படம் பிரசுரமாகியிருந்தது. அது அக்கால பாணியை ஒட்டி ஒரு ள்டுடியோ நாற்காலியில் அவர் உட்கார்ந்திருக்க அவர் மனைவி பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இருவரும் வயதானவர்கள் அதான் தெரியுமே. அம்மையாரும் சில இடங்களில் வழங்கும் அக்கால வழக்கப்படி ரவிக்கை அணிந்திருக்க வில்லை இரண்டு காதுகளும் துளைத்து இரண்டு பாம்படங்கள் கனத்துத் தொங்கு கின்றன. அக்கால கிராமியத் தோற்றம்.

யார் இது? என்று மிருணால் கேட்டான். நானும் பெயரைச் சொல்லி இவர் ஒரு கவிஞர். மிக அழகாக கவிதைகள் எழுதுவார். எட்வின் அர்னால்டின் லைட் ஆஃப் ஏசியா, தவிர உமர் கய்யாமின் ருபாயத் தையும் மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். .. என்று சொல்லிக்கொண்டே வந்தேன். “ருபாயத்,,,,? இவர்? அழகாக கவிதை?… என்று ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி சத்தம் போட்டுச் சொல்லி கண்களை விரித்து…..”அடடா என்ன இன்ஸ்பைரேஷன் என்ன இன்ஸ்பைரேஷன்? என்று கட கடவென்று சிரிக்கத் தொடங்கினான். அவன் விரல் பக்கத்தில் ரவிக்கை அணியாது பாம்படத்தோடு நிற்கும் உருவத்தைச் சுட்டியது. “நாமெல்லாரும் வயசானா இப்படித் தான் ஆவோம். சின்ன வயசில் இன்ஸ்பைரேஷனாக இருந்திருப்பாங்க அவங்க” என்றேன். ஆனால் அவனுக்கு அந்த உடையும் தொள்ளைக் காதில் தொங்கும் பாம்படமும் பழக்கமில்லாத் புதுப் பொருட்களாக வெகு நேரம் சிரிப்பை அடக்கமுடியாது தவித்துக் கொண்டிருந்தான். நினைத்து நினைத்துச் சிரிப்பான்.

இதைப் பற்றி முன்னால் சொல்லியிருக்கிறேனோ என்னவோ நினைவில் இல்லை. டாக்டர் ராதாகிருஷ்ணன் சம்பல்பூருக்கு வருவதாகச் செய்தி கிடைத்தது. அப்போது அவர் உப ராஷ்டிரபதி என்று நினைக்கிறேன். அவர் வரவிருந்தது அரசியல் காரணங்களுக்காக அல்ல. அவர் சம்பல்பூரில் இருந்த கங்காதர் மெஹர் காலேஜுக்கு வருவார் அந்த காலேஜுக்கு முன்னிருந்த பெரும் வெளியிடத்தில் பேசுவார் என்று செய்தி. 1951-ல் நேரு முதல் பொதுத் தேர்தலின் சந்தர்ப்பத்தில் சம்பல்பூர் வரை வந்திருந்தார். அப்போதும் நான் நேருவைக் கேட்கப் போனேன். அது தான் முதல் தடவையாக நேருவைப் பார்ப்பதும், கேட்பதும். முன்னால் ஒருதடவை சென்னை வந்திருந்த போது கும்பகோணத்தில் என் ஹிந்தி வகுப்பில் கூட இருந்த வீரராகவன் நேருவைப் பார்க்க என்றே பட்டணத்துக்குப் போய் வந்ததும் அந்தக் கதை சொன்னதும் எனக்கு அதிகம் ஆச்சரியமும் அதில் கொஞ்சம் பொறாமையும் கலந்திருந்தது. இப்போது ஹிராகுட்டிலிருந்து பத்து மைல் தூரத்தில் பஸ்ஸில் எட்டணா செலவில் அது கிட்ட விருந்தது என்றால்….. அது ஒரு காலம். பாதுகாப்பா, கருப்புப் பூணையா, மெடல் டிடெக்டரா, போலீஸ் படைகளா.? எதுவும் இல்லாது, தற்செயலாக நேரு வந்து இறங்கிய கார் நான் நின்ற இடத்திலிருந்து இரண்டடி தூரத்தில் நின்று, நேரு தானே கதவைத் திறந்து இறங்கினார் என்றால்….. அது ஒரு மிகவும் வித்தியாசப்பட்ட காலம் தான். நேருவின் ஹிந்தி பேச்சையும் கேட்டேன். இது இரண்டு வருடங்கள் கழித்து டாக்டர் ராதா க்ரிஷ்ணன். மாஸ்கோவில் நம் தூதுவராக இருந்தவ்ர்.

நானும் மிருணாலும் போனோம். அதிகம் 20 நிமிஷம் பேசியிருப்பாரே என்னவோ. என்ன தடங்கல் இல்லாத, ஆற்றில் பெருகி வரும் வெள்ளம் போல வார்த்தைகள் பெருக்கெடுக்க ஏதோ யோசித்து எழுதி பின் மனனம் செய்து கொண்டு வந்து ஒப்பிப்பது போல சிக்கனமாக வார்த்தைகளை எந்த சேதமும் இல்லாது, அனாவசிய வார்த்தைகள் எதுவுமற்று மிக அடர்த்தியான சிந்தனைகளை உள்ளடக்கிப் பொழிந்த பேச்சு அது. எனக்கு நினைவில் இருப்பது, அது பொது மேடைப் பேச்சு அல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தத்துவ விகாசமும் அது தொடர்ந்து வாழ்க்கையில் பேணப்படுவதும் அன்றாட வாழ்க்கையே தத்துவங்களின் விளக்கமாகத் தொடர்வதும் நம் சிறப்பு என்றும் இதே உணர்வுடன் எதிர் காலத்தையும் நாம் எதிர்நோக்குவதாகவும், சொல்லிக்கொண்டே போனார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத் திறனும், கருத்து வளமும்… எப்படி ஒரு மனிதனுக்கு சித்தித்துள்ளது என்று வியப்பாக இருந்தது. அடுத்த இரு வருடங்களில் அவருடைய Hindu View of Life, Indian Philosophy எல்லாம் பாதிமூலம் வாங்கிப் படிக்க முடிந்தது. மிருணால், “அப்படி ஒன்றும் புதிதாக அவர் ஏதும் சொல்லிவிடவில்லை. தாஸ் குப்தாவும் எழுதியிருக்கிறார்” என்று சொன்னதாக நினைவு.

எங்களோடு வேலை செய்து வந்த பட்நாயக்குக்கு மாற்றல் ஆகியது. எனக்கு நினைவில் இல்லை, சிப்ளிமாவுக்கா, அல்லது பர்கருக்கா என்று. ஹிராகுட் அணையிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல இரண்டு பெரிய கால்வாய்கள் கட்டப்பட்டு வந்தன. அந்த கால்வாய் கட்டும் பணியிலிருந்த அலுவலகங்கள் பல சிறிய கிராமங்கள் பலவற்றில் இருந்தன். அவற்றில் சில தான் சிப்ளிமா, பர்கர் எல்லாம் அதிக தூரம் இல்லை. 20 அல்லது 30 மைல் தூரத்தில் உள்ளவை. அதில் ஒன்றில் தான் நான் முன்னர் சொன்ன ஸ்ரீனிவாசனும் வேலை செய்து கொண்டிருந்தார். இதற்காகவெல்லாம் நான் பட்நாயக்கின் மாற்றலைப் பற்றி இங்கு பிரஸ்தாபிக்கவில்லை பின்னர் பல விஷயங்களுக்கு இது என்னை இட்டுச் செல்வதாக, நீண்ட பாதிப்புகளை ஏற்படுத்தவிருந்த விஷயங்களுக்காக இதைச் சொல்ல வேண்டும்


 

வெங்கட் சாமிநாதன்நினைவுகளின் சுவட்டில் 77

பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் மிருணால்.  “இவ்வளவு நாள் நம்மோடு பழகியிருக்கிறான். இப்போது நம்மை விட்டுப் பிரிகிறான். இனி நாம் எப்போதாவது பார்ப்போம். தினமும்  அவனைப் பார்த்துப் பேசி பழகுவது என்பது இனி இல்லை. அவனுக்கு விருந்து கொடுத்து அனுப்ப வேண்டாமா?” என்று கேட்டான். இது எனக்கு புது விஷயம். இது வரை நான் யாரும் யாருக்கும் பிரிவு உபசாரம் செய்து விருந்து கொடுத்து கேள்விப்பட்டதும் இல்லை. கலந்து கொண்டதும் இல்லை. எல்லாம் புதுசாக இருந்தது. “ஆமாம் வருத்தமாகத்தான் இருக்கிறது. அதுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். “நாளைக்கு பட்நாயக் வீட்டிற்கு வந்து விடு. ராத்திரி ஏழுமணிக்குள் நான் எல்லாம் தயார் செய்கிறேன்,”. என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் மிருணால் சொல்கிறான். எல்லாம் புது விஷயமாக இருக்கிறது. ஏழு மணிக்குப் போனால் தெரிந்து போகிறது என்று நினைத்துக்கொண்டேன். “சரி” என்றேன். தூரத்தில் உட்கார்ந்திருந்த பட்நாயக் புன்னகை தவழ எங்கள் பக்கமே பார்த்திருந்தான். இது ரொம்ப அன்னியோன்னிய விஷயமாக இருக்கிறது. வேறு யாரையும் மிருணால் அழைக்கவும் இல்லை. அன்று அங்கு எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பட்நாயக்கின் வீட்டிற்குச் சென்றேன். மிருணால் வரவில்லை. வந்து விடுவான் என்று பட்நாயக் சொன்னான். பட்நாயக் ஒரியாக்காரன். சிப்ளிமாவோ பர்கரோ அல்லது வேறு எந்த இடமுமோ அவனுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. தனிக்கட்டை வேறு. அவன் பெற்றோர்களைப் பற்றி ஏதும் சொல்லியிருக்கிறானா, அவர்கள் எங்கே, என்பதெல்லாம் எனக்கு இப்போது நினைவுக்கு வர மறுக்கிறது. பேசியிருந்தால், மண்டையில், எங்காவது மங்கலாகவாவது ஒரு மூலையில் ஒண்டியிருந்திருக்கும். அது பற்றி பேசியிருக்கவில்லை.

ஏன்? அது இப்போது விய்பபாக இருக்கிறது. அவனனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். “நான் வந்து போய்க்கொண்டிருப்பேன் நாதன்ஜி கவலைப் படாதே” என்று எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது மிருணாலும் வந்தான். கையில் ஒரு போத்தல். நியூஸ் பேப்பரில் மடிக்கப்பட்ட முன்று நான்கு பொட்டலங்கள். பொட்டலங்களை ஒவ்வொன்றாகப் பிரித்தான் மிருணால்.  .என்னென்னமோ மிக்ஸர், சிங்காடா வென்றெல்லாம் இருந்தது. அடுத்த இரண்டு பொட்டலஙக்ளில் வறுத்த மாமிசம். ஒன்றில் ஈரல் அதுவும் வறுத்தது. ”இதெல்லாம் இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை,” என்றேன். மிருணால் திடீரென்று  அதிர்ச்சியில் திகைத்தவன் . “ஏன் நீ சாப்பிட மாட்டாயா?” என்று கேட்டான். எங்கள் பக்கம் பிராமணர்கள் இதை யெல்லாம் கிட்டத்தில் இருக்க பார்க்கக் கூட மாட்டார்கள். ஆனால் எனக்கு அந்த வெறுப்பு இல்லை. ஊரை விட்டு வந்த பிறகு பக்கத்தில் இருப்பவர்கள் சாப்பிட பார்த்திருக்கிறேன். அதனால் ஒன்றுமில்லை” என்றேன்.

”அப்படின்னா, சாப்பிடமாட்டாயா? நீ சும்மா பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பாயா?” என்றான். ”இல்லை. அப்படி இல்லை. இங்கே வந்த பிறகு, பஞ்சாட்சரம் வீட்டிலே அங்கே இருக்கறவங்க கொஞ்சம் கொஞ்சமா பழக்கி விட்டுட்டாங்க. முதல்லே முட்டையிலேயிருந்து ஆரம்பிச்ச இப்போ பிரியாணி வரைக்கும் பழகியாச்சு.” என்றேன். “ பின்னே என்ன பிரசினை? என்றான்.

“பிரசினை என்று சொன்னேனா நான்.? நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன். அவ்வளவு தான். என்றேன்.

“இது தான் புதுசு” என்று அவன் வாங்கி வந்த பாட்டிலை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டே சொன்னேன். “செல்லஸ்வாமி வீட்டிலே சாப்பிட்டிருக்கேன்னு சொன்னியே? அப்புறம் என்ன புதுசு?”  என்றான். “செல்லஸ்வாமி வீட்டிலே சாப்பிட்டது வெறும் பீர் தான்.அதிலே என்ன இருக்கு? அவர் ரொம்ப நல்ல தெலுங்கு பிராமணன். பீரோடே சரி. இதெல்லாம் தொடக்கூட மாட்டார். பஞ்சாட்சரம் வீட்டிலேயும் அவர்கள் வீட்டிலே மாமிசம் சாப்பிடுவாங்க. அவ்வளவு தான். இதெல்லாம் தொடமாட்டாங்க” என்று கையில் இருந்த பாட்டிலைப் பார்த்தேன். ஹேவர்ட்ஸ் விஸ்கி என்றிருந்தது. இதை இப்போதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இது தான் இன்று புதுப் பழக்கமாக இருக்கும்.

“இது பட்நாயக்குக்கு கொடுக்கிற விருந்து. சந்தோஷமா போகணும் அவன். அது வேண்டாம், இது வேண்டாம்னு ஒண்ணும் சொல்லாதே. அப்புறம் உன்னை. என் வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறது ரொம்ப கஷ்டமாயிடும். ஒரு நாளக்கு கல்கத்தாவிலேயிருந்து ஹில்ஸா மாச் வரப் போறது. அன்னிக்கு உன்னை சாப்பிட அழைச்சிட்டு வரச்சொல்லி யிருக்காங்க அம்மா. நீ அங்கே வந்து தகராறு பண்ணாதே? என்றான்.

”நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பாட்டிலைத் திருகித் திறந்து எல்லோருக்கும் ஆளுக்கொரு  களாஸில்  கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தண்ணீரைக் கலந்தான். “இதோடு சோடா தான் கலக்கணும். அவன் பாட்டிலைக் கொடுக்க மாட்டேங்கறான். சரிதான் போ. இன்னிக்கு தண்ணீரையே கலந்து சாப்பிடலாம் என்று வந்து விட்டேன். இந்தா சாப்பிடு” என்று க்ளாஸைக் கொடுத்தான். வழக்கமான ”சீயர்ஸ்” சொல்லி மூன்று பேரும் அவரவர் களாஸ்களை டங் டங் என்று நுனிகளைத் தட்டிக் கொண்டோம். இதெல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்து நானும் கொஞ்சம் விஸ்கியை கொஞ்சம் போல ருசி பார்க்க ஒரு சிப். அவ்வளவு தான் ஒரே கசப்போ என்னவோ ருசித்துச் சாப்பிடும் விவகாரமாக இருக்கவில்லை. மூஞ்சியை சுளுக்கிக்கொண்டு” ”இதென்ன நல்லாவே இல்லையே, கசந்து தொலைக்கிறதே இதை எப்படி சாப்பிடறது? என்றேன். இரண்டு பேரும் என் மூஞ்சி கோணுவ்வதைப் பார்த்ததுமே ஆரம்பித்த புன்னகை நான் கேட்டதுமே பலத்த  சிரிப்பாக வெடித்தது.. “ முதல்லே அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடு. ஒரேயடியாக முழுங்காதே. கொஞ்சம் உள்ளே போனா சரியாயிடும்.” என்றான் மிருணால். பட்நாயக் என்னப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். கேலி செய்கிறானா, இல்லை பாவம் இவனை இப்படி அவஸ்தைப் படுத்துகிறோமே என்று இரக்கப்படுகிறானா, தெரியவில்லை.

“ஹிராகுட்டில் என் வீட்டில் ஒரு லைன்ஸ்மான் இருந்தான். அவன் ஒரு க்ளாஸ்பூராவும் நிர்ப்பி கட கடவென்று ஒரே முழுக்கில் காலி செய்துவிட்டுத்தான் கம்பத்து மேல் ஏறுவான்” என்றேன். ” பழகிப் போனா நீயும் அப்படித்தான் பண்ணுவே. அடுத்த பார்ட்டி எப்போன்னு கேப்பே,” என்றான் பட்நாயக் சிரித்துக்கொண்டே..

அவர்கள் சொன்ன மாதிரி கொஞ்ச நேரத்தில் பழகித் தான் போயிற்று. லேசாக தலை மாத்திரம் சுற்றுவது போல இருந்தது. அவர்களோடு எல்லாவற்றிலும் கலந்து கொண்டது கொஞ்ச நேரத்தில் தெரிந்தது. “நீ தான் சாப்பிடுகிறாயே, அப்புறம் என்ன.? முதல் பழக்கம் கஷ்டமாக இருக்கும்.” என்றான் பட்நாயக். “ அதில்லை பட்நாயக். நான் தான் சொன்னேனே. பஞ்சாட்சரம் வீட்டில் கொடுப்பார்கள். சாப்பிட்டிருக்கிறேன். இதில் நான் ருசி கண்டுவிட்டேன் என்றும் இல்லை. தொடமாட்டேன் என்பதும் இல்லை. பழகி விட்டதால் வெறுப்பு ஏற்படவில்லை. இது வேண்டும் என்று அலைய மாட்டேன். அவ்வளவு தான் என்றேன்.

நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நான் கொஞ்சம் நிதானமாகவே இருந்தேன். தலை சுற்றுவது போல் இருந்ததாலும் முதல் தடவையானதாலும் என்ன ஆகுமோ என்ற பயம் லேசாக இருந்தது. அந்தக் கவலை மிருணாலுக்கோ பட்நாயக்குக்கோ இல்லை. அவர்களும் என் போக்கில் விட்டு விட்டார்கள்,. வற்புறுத்த வில்லை.

அவர்கள் இருவரின் பேச்சிலிருந்து மது அருந்தும் பழக்கம் இருந்த போதிலும், பிரிவு என்ற எண்ணம் அவரகள் இருவர் பேச்சிலும் உணர்ச்சி மேலிட்டிருந்தது. பட்நாயக்குக்கு வங்காளி நன்றாக தெரியும். நானோ, மிருணாலோ ஒன்றிரண்டு உபசார வார்த்தைகளைத் தவிர அதிகம் ஒடியா கற்றுக்கொள்ள வில்லை. கற்றுக்கொடுக்கும் நிர்ப்பந்த சூழலும் அங்கில்லை. ஹிந்தி, ஆங்கிலத்திலேயே காரியம் முடிந்து விடுகிறது. கடைத் தெருவில் ஆபீஸில் தானாகக் காதில் விழும் ஒடியா வார்த்தைகள் தான் நாங்கள் கற்றுக் கொண்டது. மிருணாலுக்கு அதிகம் தெரிய வாய்ப்புண்டு, பெங்காலி பேசுகிறவனாதலால். “கீ ஹொலோ” என்று சொல்லத் தெரிந்தவர்கள் “கோன ஹொலா”வைப் புரிந்து கொள்ள மாட்டார்களா, என்ன? இல்லை பேசத்தான் மாட்டார்களா? ஆனால் பட்நாயக் பெங்காளியில் தான் பேசிக்கொண்டிருந்தான். நான் புரிந்து கொள்வேன் என்று தெரியும். தப்பு தப்பாக பேச ஆரம்பித்ததும் அவனுக்குத் தெரியும். ஒரு சமயம் மிருணால், ஷெஃபாலி நந்தி எழுதியிருந்த பெங்காளி கற்க ஆரம்பப் பாடப் புத்தகமும் வாங்கி எனக்குக் கொடுத்திருந்தான். நான் என் கொச்சை பெங்காளியில் பேசுவதை அவன் வீட்டில் அவன் தங்கைகள், அவன் அம்மா எல்லோரும் சிரித்துக்கொண்டே கேட்பார்கள். அதில் வாத்சல்யமும் கொஞ்சம் கிண்டலும் இருக்கும்.

நேரம் ஆக ஆக, மிருணாலுக்கு போதை ஏறிக்கொண்டே இருந்தது. அதை அவன் அனுபவித்துக்கொண்டிருந்தான். தன்னை இழந்து கொண்டுமிருந்தான். தன்னை இழந்து என்றால் உணர்ச்சி வசப்பட்டு இருந்தான் என்று தெரிந்தது. அவர்களோடு நான் போட்டி போடாவிட்டாலும் எனக்கும் இலேசான தலை சுற்றல் இருந்தது. நான் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் மிருணால் குரல் தழதழத்தது. அவனுடைய அப்பாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். ஒரு சமயம் கல்கத்தா போகிற நண்பரிடம் தன் ஒன்பது பத்து வயசுப் பெண்ணுக்காக ஏதோ வாங்கி வரச் சொல்லியிருந்தாராம். இந்தியா சென்றிருந்த அந்த நண்பர் வெறுங்கையோடு தான் திரும்பியிருந்தார். ஒன்றும் வாங்கி வராத காரணத்தைச் சொன்ன அவர், அதன் விலை ரொம்பவும் அதிகமாக இருந்ததைச் சொன்னார். மிருணாலின் அப்பாவுக்கு தலை வெடித்து விட்டது. “என் சம்பளம் முழுதுமே செலவானால் என்ன? என் குழந்தைக்கு செலவழிக்கமாட்டேன் என்று எப்படி நீயே தீர்மானம் செய்து வெறுங்கையோடு வந்தாய்? என்று திட்டித் தீர்த்து விட்டாராம். அப்படி ஒரு கோபத்தைத் தன் அப்பாவிடம் தான் கண்டதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

என்னவோ தெரியவில்லை. எப்படி அன்றையப் பேச்சு அவன் அப்பாவுக்குத் திரும்பியது என்று தெரியவில்லை. பேசிக்கொண்டே இருந்தவன், என் பக்கம் திரும்பியவன், Dada, Let me say this. I am not a worthy son of my father. But, I am sure he would have loved to have you as his son. என்றான். அவன் எதை வைத்துக்கொண்டு அப்படிச் சொன்னான் என்று எனக்கு புரிந்ததில்லை. நானும் இது பற்றியெல்லாம் அவனிடம் பேசியதுமில்லை. எனக்கு ஒரளவு தெரியும் அவன் அப்பா எவ்வளவு பெரிய அறிவாளி, அவருடைய தவம் என்ன என்று. மிருணாளிடமிருந்து தான் நான் அன்றாடம் புது விஷ்யங்களைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். ஆக, அவன் சொன்னது அவனுக்கு என்னிடம் இருந்த அவன் இது காறும் வெளிக்காட்டிராத அளவு கடந்த அன்பைத் தான் அப்படி அன்று அவனிடமிருந்த அவன் தன்னை இழந்த நிலையில் வெளிப்பட்டிருக்கிறது என்று தெரிந்தது. நானும் அவனும் அடிக்கடி ரொம்பச் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக்கொள்வோம்.  குழந்தைகள் அற்ப விஷயத்துச் சண்டை போடுவதும் அடுத்த் நிமிடம் சேர்ந்து கொள்வது போல. ஆனால் அன்றிலிருந்து அவனோடு நான் எந்த விஷயத்துக்கும் சண்டை போடவில்லை. நான் தான் என்னை மாற்றிக்  கொண்டேனே தவிர, மிருணால் எப்போதும் போலத் தான் இருந்தான். அன்று தான் மிருணாள் என்னிடம் எவ்வளவு பாசத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறான், அது இம்மாதிரியான வசம் இழந்த கணங்களில் பொங்கி வெளி வந்துள்ளது என்று தெரிந்தது. அந்த கணங்கள் என் வாழ்வில் மிக முக்கியமான கணங்கள். அவை எப்போது எனக்கு மிருணாளின் நினைவு வந்தாலும் அந்த முன்னிரவு நேரம் எப்போதும் முதலில் மேலெழுந்து ததும்பும்.


நினைவுகளின் சுவட்டில் 78

வெங்கட் சாமிநாதன்பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த நாள் தான் நினைவுக்கு வந்தது. நடந்த கால வரிசைப் படி சொல்ல சில சமயம் மறதியில் விடுபட்டாலும், நினைவுக்கு வந்த உடனே சொல்லி விட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன. அதற்குக் காரணம் தொடர்ந்து மிருணால் காந்தி சக்கரவர்த்தி பற்றியே எழுதி வந்ததால், அவனுடன் கொண்டிருந்த அன்னியோன்னியத்தின் பாதிப்பால் நினைவுகள் அவனைச் சுற்றியேசுழல்வதால், மற்ற சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன.

அன்று அவன் அப்பாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். நிறையவே பேசினான். நிறைய நேரம் பேசினான். உணர்ச்சி வசப்பட்டு அவன் பேசும் போது நாங்கள் கேட்டுக்கொண்டிருப்பது தான் மரியாதை. எல்லாமே நினைவில் இல்லை. அவன் தங்கைக்கு ஏதோ வாங்கி வரச் சொன்னது நினைவில் இருக்கிறது. அதன் பின்னும் என்ன பேசிக்கொண்டிருந்தான், அதன் தொடர்ச்சியாகத் தான், Dada, let me say this என்று அவன் சொல்லியிருக்க வேண்டும். திடீரென்று இப்படிச் சொல்ல முடியாது. இதுவும் பின்னர் அவன் அப்பா என்னை மகனாகக் கொள்ள விரும்பியிருப்பார் என்று சொன்னது நல்ல நினைவு இருக்கிறதே ஒழிய அது எந்த சந்தர்ப்பத்தில், எதன் தொடர்ச்சியில் என்பது நினைவில் இல்லை அடுத்து, அன்று விஸ்கி மாத்திரம் தான் புதுப் பழக்கமாக அவன் காரணமாகத் தொடங்கியது என்று சொன்னேன். அது தவறு. அன்று அவன் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையும் கொடுத்து விட்டான் அன்று தொடங்கியது தான் மது அருந்துவதும் புகை பிடிக்கும் பழக்கமும்.

இந்தப் பழக்கங்கள் பற்றி அப்போது எனக்கு  தர்ம அதர்ம கேள்விகள் ஏதும் அப்போது எழவில்லை. உடம்புக்கு இது நல்லதா, கெடுதலா போன்ற பிரசினைகளும் எழவில்லை. இவை எது பற்றியுமான சிந்தனையே எனக்கு அப்போது இருக்கவில்லை. புதிதான ஏதோ அனுபவம் என்ற அளவிலேயே இவை என்னை வந்தடைந்தன. நாடகம் பார்க்கிறவன் புதிதாக சினிமா பார்ப்பது போல, ரம்மி விளையாடக் கற்றுக்கொண்டது போல, முதல் தடவையாக ஒரு உணவுப் பண்டத்தை, சமூசா, இல்லை குல்ச்சே சோலே ருசி பார்ப்பது போலத்தான் எல்லாமே எனக்கு இருந்தது. அதிலும் முதல் தடவையாக பஞ்சாட்சரம் வீட்டில் பிரியாணி சாப்பிட்டது, சினேகிதர் நிறைந்த சூழலில், முட்டை சாப்பிட பழகிய இடத்தில், கேலியும் வாதங்களும் வழக்கமாக இருந்த சூழலில் ஒன்றும் குற்ற உணர்வு தருவதாக இல்லை. அந்தக் காலத்தில் (ஐம்பதுகளின் ஆரம்ப வருடங்களில்) ஹிராகுட்டிலும் புர்லாவிலும் நண்பனாக இருந்த சம்பத் (முன்னாலேயே இவனைப் பற்றிப் பேசியிருக்கிறேன். பெருத்த வாயாடி, எந்தக் காரியத்தையும் செய்யும் அசகாய சூரன். ஆனால் வாழ்க்கையில் பின் வருடங்களில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தவன்) சொல்வான்,: ”நான் சாப்பிடமாட்டேனே ஒழிய என் பக்கத்தில் யாரும் உட்கார்ந்து சாப்பிட்டால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. இதுவும் ஏதோ நிறத்தில், உருவில் ஒரு தின்பண்டம் அவ்வளவே. அதில் நான் பச்சைச் சதையையும் ரத்தத்தையும் பார்க்கவில்லை. அது தான் என்னால் சகிக்கமுடியாதது,” என்பான். சம்பத் நாராயணன், என்னும் அந்த அய்யைங்கார் வீட்டுப் பிள்ளை.

ஆனால் எனக்கும் அதில் ருசி ஏற்பட்டதில்லை. அது வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தேடிச்சென்றதில்லை. கிடைத்த போது, அது எப்போதாவது அதை மறுத்ததும் இல்லை. அதை வழக்கமாகவும் கொண்டதில்லை. ஆனால் விளையாட்டாக, அதிக சிந்தனையோ, மன உளைச்சலோ இல்லாது தொடங்கியது வெகு நாட்கள் நீடித்தது என்று சொல்ல வேண்டும். அதன் மேல் வெறுப்பு ஏற்பட்டது எண்பதுக்களில் எப்போதோதான். ஏன் வெறுப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை.

புகை பிடிப்பது பட்நாயக்கின் பிரிவு உபசாரத்தில் 1952- ஆக இருக்கலாம், 1988 வரை நீடித்தது. அது ஒரு விடாப் பழக்கமாகத் தொற்ற நான்கைந்து வருடங்களாயின. 1957-ல் தான் புகை பிடிக்காது ஒரு மணிநேரம் இருக்க முடியாது என்ற அளவிற்கு அது தீவிரமானது.  மாமிசம் அப்படி இல்லை. மாதங்கள் கடந்து விடும். வருடம் கூட ஆகிவிடும். யாராவது அழைத்து நேர்ந்தால்தான். கவலை இல்லை. ஆனால் புகை பிடிக்காது தொடர்ந்து படிக்க முடியாது, எழுத முடியாது என்று ஒரு நிலை வந்து விட்டது. .அறுபதுகளில், .என்னிடம் மிகவும் ஒட்டுதலோடு இருந்த ஒரு குடும்பத்தில் வெளியூரிலிருந்து வந்த ஒரு மூத்த வயது மாமி ஒரு நாள் சொன்னார் “இதிலே என்ன இருக்கு? இதை விட்டுத் தொலையுங்களேன்? என்றார். அதை என்னவோ என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை. அவர்கள் சொன்னபடியே விட்டுத் தொலைத்தேன். ஆனால் எந்தக் காரியத்திலும் மனம் ஈடுபட முடியவில்லை. அவர்கள் 15 நாட்களோ இருந்துவிட்டு தம் ஊர் திரும்பவே நான் தொலைத்ததைத் திரும்ப எடுத்துக் கொண்டேன்.

யாராவது ஏதும் சொன்னால், “மனுஷனுக்கு ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருக்கணும். அப்போ தான் நாம நல்லவன்னு சொல்றதுக்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கு. “சாமிநாதன் . எப்போ பாத்தாலும் ஊதீண்டே இருப்பான். மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்”னு சொல்றவங்களுக்கு இது இல்லேன்னா நல்லவன்னு சொல்றதுக்கு சான்ஸே கிடைக்காது இல்லையா? அதனாலே ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருக்கறது உபயோகமா இருக்கும்” என்று சொல்லி வந்தேன். அதையும் அதிகப் பேரிடம் அதிக நாள் சொல்ல முடியவில்லை.

அதிலிருந்து ஒரு வழியாக நான் விடுதலை பெற்றது 1988=ல் ஒரு டிஸம்பர் மாதம் இரவு 7 மணியிலிருந்து. தலை சுற்றுகிறது, நிற்க முடியவில்லை என்று ஹாஸ்பிடலில் அவசரமாக சேர்க்கப் பட்டேன். எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து தடை பட்டிருந்த ரத்த ஒட்டத்தை திரும்பக் உயிர்ப்பித்தார்கள். அன்று புகை பிடிக்கும் பழக்கம் விட்டது தான். பிறகு அதை நான் தொட்டதில்லை. அதனால் எந்த காரியமும் நிற்கவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்ற சாக்கிற்கு அவசியமும் இருக்கவில்லை கிட்டத்தட்ட இருபத்து இரண்டு வருடங்களாகி விட்டன. அதன் நினைப்பே ஒரு போதும் எழுவதில்லை..

ஆனால் மது மாத்திரம் என்னில் எந்த வித வெறுப்பையும் ஏற்படுத்தவில்லை. தர்ம/அதர்ம மோதல் பிரசினைகளும் இருக்கவில்லை. சுகக்கேடு என்ற பயமும் இருக்கவில்லை. அது எனக்கு மிக விருப்பமாகவே இருந்துவருகிறது. பழக்கம் 1952- தொடங்கியது என்றாலும், இன்று வரை, சுமார் 60 வருட காலமாக நீடித்து வருகிறது என்றாலும், அதற்கு நான் அடிமையாகி விடவில்லை. ஆனால் நண்பர்களோடு, ஆமாம் நண்பர்களோடு தான் அளவளாவிக்கழிக்கும் சந்தர்ப்பங்களை நான் ஆனந்தத் தோடு அனுபவித்திருக்கிறேன். அவை மிக சுகமான மணிநேரங்கள். அங்கு நட்பின் நெருக்கமும் இருக்கும். கவிதையும் உலவும். காரசாரமான சர்ச்சைகளும் நடக்கும். இலக்கியம், சினிமா, நாடகம், பழங்கதைகள் என பலவும் பரிமாறிக்கொள்ளப் படும். ஆழமான நட்பின் இதமான வருடல்கள், சாதாரணமாக, வெளித்தெரியாத பாசமும், நெருடல்களும் கூட அப்போது வெளிப்படும். உமர் கய்யாமின், a book of verse and a jug of wine and someone beside us singing in wilderness வரிகள் அங்கு உயிர்த்தெழும். ஆனால் அதை நான் என்றும் தேடிப்போனதில்லை. அதில்லாவிட்டால் உலகம் சூன்யமாகிப் போய்விடுவதில்லை. ஆனால் அது வரும் கணங்கள், அதில் வாழும் கணங்கள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. மாதங்கள் பல அது இன்றிக் கழியும். கவலை இருந்ததில்லை.

கஷ்மீரில் இருந்த போது இரண்டரை வருஷங்கள் அனேக மாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அலுவலகக் கட்டிடத்திலேயேதான் உமர் கய்யாம் வருகை தருவார். சில சமயங்களில் சில விழாக்களில் பங்கு கொள்ளும்போதும், புதிய நண்பர்களை, அல்லது பழைய நண்பர்களை திரும்பச் சந்திக்கும்போதும், ஒவ்வொரு நாள் மாலையும்  உமர் கய்யாமின் இரவுகள் தாம். அங்கு நிஜ மனிதர்கள் உயிர்த்தெழுவார்கள். நாம் எல்லோரும் மனித ஜீவன்கள் தாம் என்பதை எந்த அரசியல் கட்சியின் சித்தாந்த உதவியும் இல்லாது நாங்கள் உணர்ந்திருப்போம். அக்கணங்கள் எனக்கு உமர் கய்யாமை மாத்திரம் நினைவு படுத்தாது. என் ஹிராகுட் நண்பன் மிருணாலையும் நினைவு படுத்தும். அவன் அத் தொடக்க முன் இரவில் சொன்ன வார்த்தைகளும் சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

தில்லியிலும் தில்லி பல்கலைக் கழக, அப்போது (1974-ல் என்று எண்ணுகிறேன்) தயாள் சிங் காலேஜில் டாக்டர் ரவீந்திரன் தமிழ்ப் பேராசிரியராகச் சேர்ந்தார். பின் தில்லி பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு மாறினார். அவர் கரோல் பாகில் ஒரு வீட்டின் இரண்டாம் மாடியில் தில்லி பாலையை உமர் கய்யாமின் ஜன்னத்தாக மாற்றியிருந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் கூடு வோம்.

அங்கு கூடுவோரில் நான் தான் அதிகம் படிப்பில்லாதவன். பேராசிரியர்களும், நாடக விற்பன்னர்களும், நிறைந்த கூட்டமாக இருக்கும்.  அங்கும் தமிழ்த் துறை மாத்திரம் இல்லை, சினிமா, நாடகம், தமிழக அரசியல், எல்லாம் காற்றில் அலையாடும். வெகு வருடங்கள் அது தொடர்ந்தது. யாத்ராவின் பக்கங்கள் அங்கு நிரப்பப் படும். பல்கலைக் கழக கருத்தரங்குகள் பற்றி சர்ச்சிக்கப்படும்.

ஹங்கரிய, போலிஷ், செக் படங்கள் ஒவ்வொன்றின் சிறு நுணுக்க விவரங்கள் கூட ரவீந்திரனின் நினவில் கல்வெட்டெனப் செதுக்கப்பட்டிருக்கும். அவர் சொல்லும் விவரங்களிலிருந்து தான் என் நினைவுகளை நான் புதுப்பித்துக் கொள்வேன். இது எதுவும் விஸ்கி இல்லாது சாத்திய மாகியதில்லை. அனேக வருஷங்கள் தொடர்ந்து வந்த இந்த காட்சியில் ஸ்ருதி தவறிப் போகும் சமயங்களும் சில இருந்தன.

 vswaminathan.venkat@gmail.com