வாசிப்பும், யோசிப்பும் 79 : மேலும் சில கருத்துகள்!

முல்லை அமுதனின் இலக்கியச்செயற்பாடுகளின் முக்கியத்துவம்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் முல்லை அமுதனைப் பலரும் அறிவர். எழுத்தாளர், சஞ்சிகை / இணைய சஞ்சிகை ஆசிரியர் / வெளியீட்டாளர், புத்தகக்கண்காட்சி நடத்துபவர், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ‘இலக்கியபூக்கள்’ தொகுப்புகளைத்தொகுத்து வெளியிட்டவர், எழுத்தாளர் விபரத்திரட்டினை வெளியிட்டவர் இவ்விதம் தமிழ் இலக்கிய உலகில் இவருக்குப் பன்முகங்களுள்ளன. அண்மையில் வெளியான ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத்தொகுப்பில் இவரது கவிதை, சிறுகதை மற்றும் மேற்படி தொகுப்புக்காக இளைய அப்துல்லாஹ் (இலண்டன்) கண்ட நேர்காணல் ஆகியன இடம் பெற்றுள்ளன. மேற்படி நேர்காணலில் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியம் பற்றி பல தகவல்களைக்காணலாம். அதற்காக இவருக்கு நன்றி. மேற்படி தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிய பலரின் கட்டுரைகளில் ஆவணப்படுத்தப்படாத பல விடயங்கள் ,  உதாரணமாக இணைய இதழ்கள் பற்றிய விபரங்கள் ,இவரது பதில்கள் முலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனக்கு ஆச்சரியம் தந்த விடயங்களிலொன்று. 1987இல் நான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டுவந்த கையெழுத்துச்சஞ்சிகையான ‘குரல் பற்றியும் மறக்காமல் இவர் தன் பதிலில் குறிப்பிட்டிருந்ததுதான். ‘குரலு’க்காய்க் குரல் கொடுத்த ஒருவர் இவர் ஒருவராகத்தானிருக்க முடியும். 🙂  அத்தகவலை ஆவணப்படுத்தியதற்காக நண்பருக்கு நன்றி.

ஆவணப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். எந்தவித ஆவணப்படுத்தல்களுமின்றி, ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும் பலர் தமக்குக்கிடைக்கும் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு , பல படைப்புகளைப்படித்துவிட்டு எழுதுவது போன்றதொரு தன்மை தெரியும்வகையில் எழுதிவருகின்றார்கள். இவர்கள் இவ்விதம் எழுதுவதன் மூலம் உண்மைகளைக்குழி தோண்டிப்புதைக்கின்றார்கள். இவ்விதமானதொரு சூழலில்தான் முல்லை அமுதனின் இலக்கியச்செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. புத்தகக்கண்காட்சி, சஞ்சிகை வெளியீடு, தொகுப்பு நூல் வெளியீடு போன்ற இவரது இலக்கியச்செயற்பாடுகள் பல இலக்கியச்செயற்பாடுகளை ஆவணப்படுத்துகின்றன. இவ்விதமான ஆவணப்படுத்தலுக்காக முல்லை அமுதனுக்கு வாழ்த்துகள்!


ஞானம் ஈழத்துப்புலம்பெயர் தமிழ் இலக்கியத்தொகுப்பிலிருந்து….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்ஞானம் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத்தொகுப்பில் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘இலங்கைத்தமிழரின் புலம்பெயர் இலக்கியத்தோற்றமும் மாற்றமும்’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதிலுள்ள ஒருவிடயம் எழுப்பிய கேள்வியிது. ‘கனடாவில் தாயகம் பத்திரிகை ஆசிரியர் அவரின் கருத்துகளைத்தாங்க முடியாதவர்களால் கடுமையாகத்தாக்கப்பட்டார்’ என்று ஓரிடத்தில…் குறிப்பிடப்பட்டுள்ளது. நானறிந்த வரையில் செந்தாமரை ஆசிரியர் ஜெயராஜ் தாக்கப்பட்டிருக்கின்றார். தாயகம் ஆசிரியர் தாக்கப்பட்ட விடயம் எனக்குப் புதிது. யாராவது இதுபற்றிய மேலதிக விபரங்களை அறிந்திருந்தால் அறியத்தரவும்.

இன்னுமொரு கட்டுரை நூலகர் என். செல்வராஜாவின் ‘ஈழத்தமிழரின் புலப்பெயர்வு இலக்கியச்செல்நெறியின் சில தடப்பதிவுகள்’. இந்தக்கட்டுரையில் ஓரிடத்தில் கூட ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய தொகுப்பான எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதி ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘பனியும், பனையும்’ தொகுப்பு பற்றி குறிப்பிடப்படவேயில்லை. ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத்தில் மிகவும் முக்கியமான தொகுப்பு ‘பனியும், பனையும்’ இத்தொகுப்பு பற்றிய எந்தவிதக்குறிப்பினையும் தனது கட்டுரையில் நூலகர் என்.செல்வராஜா அவர்கள் தராதது ஏமாற்றத்தையும் கூடவே வியப்பினையும் அளிக்கிறது.

இன்னுமொரு கட்டுரை: கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியனின் ‘புலம்பெயர் சூழலில் புனைவு சாரா எழுத்துகள் கனடாவை மையப்படுத்திய பார்வை’ . இதில் வ.ந.கிரிதரனின் ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூலினைக் கட்டுரையாளர் தவறவிட்டிருக்கின்றார். இருந்தாலும் மேற்படி கட்டுரையானது கூறும்பொருளையிட்டு ஆரம்பக்கட்டுரையென்றும், எதிர்காலத்தில் புதிய தகவல்களுடன் விரிவு படுத்தப்படுமெனவும் கட்டுரையாளர் கூறுவதால் விடுபடல்களை ஏற்றுக்கொள்ளலாம்.

இன்னுமொரு விடயத்தையும் மேற்படி கட்டுரைகளில் அவதானித்தேன். இருவரது (நூலகர் என். செல்வராஜா & இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)  கட்டுரைகளிலும் ‘தமிழ் இணைய இதழ்கள்’ பற்றிய குறிப்புகள் எதனையும் காணமுடியவில்லை. அப்படி என்னதான் இணைய இதழ்கள் மேல் இவர்களுக்குக் கோபமோ? 🙂 நல்ல காலம் தமிழகத்துப்படைப்பாளிகளும், பேராசிரியர்களும், பட்டப்படிப்பு மாணவர்களும் தம்மால் முடிந்த அளவு தமிழ் இணைய இதழ்கள் பற்றிய பல்வேறு பிரிவுகளில் விரிவான ஆய்வுகளைச்செய்து அவை பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.


நான் இரசித்த கேள்வி-பதிலொன்று!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்அண்மையில் நான் இரசித்த கேள்வி-பதிலொன்று. அமுதசுரபி இதழ் திருப்பூர் கிருஷ்ணனை ஆசிரியராகக்கொண்டு வெளிவருமிதழ். அதில் வெளியான கேள்வி-பதில் பகுதியில் கேள்விகளுக்கு ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனே பதிலிறுக்கின்றார். அவரது பதில்கள் சுவையானவை. அவற்றிலொன்று கீழே:

கேள்வி: என் நண்பன் ஒரு பெண்ணைக்காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்துகொள்ளப்போகிறானாம். அவளைக்கணக்குப் பண்ணுகி…றேன் என்கிறான். அதென்ன கணக்குப்பண்ணுவது? [ கே.பி,.செல்லமுத்து, ஒட்டன்சத்திரம்]

பதில்: தன் எஞ்சியுள்ள காலத்தை அவளோடு ‘கழிக்க’ எண்ணுகிறான். அதனால் தன் மனதில் மகிழ்ச்சியைப் ‘பெருக்கிக்’கொள்ள ஆசைப்படுகிறான். அவளை மணந்துகொண்டு நிம்மதியைக் ‘கூட்டப்’போகின்றார். இப்படி வாழ்க்கையை அவளோடு ‘வகுத்துக்’கொள்ள நினைப்பதால் தன் காதலியைக் கணக்குப்பண்ணுகிறாரோ என்னவோ?


திறனாய்வும், ஆய்வும் பற்றிச் சில கருத்துகள்…

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்பலர் திறனாய்வினையும் , ஆய்வினையும் ஒன்றென நினைத்துக்குழப்பியடித்து விடுகின்றார்கள். திறனாய்வென்பது ஒரு படைப்பினை வாசித்து அது பற்றிய குறை , நிறைகளை எடுத்துரைப்பது. உதாரணமாக ஈழத்து அரசியல் நாவல்கள் என்ற விடயத்தை எடுத்துக்கொள்வோம். இது பற்றி எழுத விரும்பும் ஒருவர் ஈழத்து அரசியலை வெளிப்படுத்தும் நாவல்கள் சிலவற்றை வாசித்துவிட்டு , அவற்றில் தனக்குப்பிடித்த சிலவற்றைப்பற்றி விமர்சிக்க முடியும். ஆனால் இவ்விதமான திறனாய்வுக்கட்டுரைகளை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தலாமே தவிர இவற்றை மட்டுமே தனியாக உசாத்துணை கட்டுரைகளாகப்பயனபடுத்த முடியாது. ஏனெனில் இவ்விதமான திறனாய்வுக்கட்டுரைகளில் கட்டுரையின் பொருள்பற்றிப் போதுமான தகவல்களைக்கட்டுரையாளர்கள் தருவதில்லை.

இதற்கு மாறாக ஆய்வுக்கட்டுரைகள் தாம் கூறும் விடயம் பற்றிய போதுமான தகவல்களைத்திரட்டி அவற்றை ஆவணக்குறிப்புகளாக வெளிப்படுத்துகின்றன. ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர்கள் தமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ தம் ஆய்வுக்கட்டுரைகள் கூறும்பொருள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவற்றைப்பற்றிய குறிப்புகளைத்தர வேண்டும். ஆய்வுக்கட்டுரைகளையும், திறனாய்வுக் கட்டுரைகளையும் மேலதிக ஆய்வுகளுக்குப்பயன்படுத்தலாம். ஆனால் திறனாய்வுக்கட்டுரைகளை மட்டும் தனியாக ஆய்வுகளுக்குப் பயன்படுத்த முடியாது. ஆனால் ஆய்வுக்கட்டுரைகள் போன்று தோற்றமளிக்கும் பல கட்டுரைகள் உண்மையில் இவ்விதமான திறனாய்வுக்கட்டுரைகளை அடிப்படையாகக்கொண்டே எழுதப்படுகின்றன. இதனால்தான் அவை காத்திரமான ஆய்வுகளாக இருப்பதில்லை. இவ்விதமான ஆய்வுகளைப்போல் தோன்றும் அரைகுறை ஆய்வுக்கட்டுரைகளில் பல முக்கியமான படைப்புகள் தவறவிடப்பட்டுப்போவதன் காரணம் இவ்விதமான கட்டுரைகளை எழுதுபவர்கள் தாம் கூறும் பொருள் பற்றிப்போதிய ஆய்வுகளைச்செய்ய முடியாத சோம்பேறிகள்.

இனியாவது திறனாய்வுக்கட்டுரைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆய்வுக்கட்டுரைகள எழுதாமல், தாமே சுயதேடல் மூலம் தகவல்களை இயலுமானவரையில் சேகரித்து அதன்பின் ஏற்கனவே அத்துறையில் வெளியான திறனாய்வுக்கட்டுரைகள் , ஆய்வுக்கட்டுரைகளையும் உள்வாங்கி எழுதுங்கள். அவ்விதம் எழுதுவீர்களானால் அத்தகைய ஆய்வுகள் இலக்கியத்துக்கு மேலும் வளம்சேர்க்கும்.

ngiri2704@rogers.com