நினைவுகளின் சுவட்டில் (79 & 80)

(79) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன்மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று ப்ளாக் வீடுகளைக்கடந்தால் அவன் வீடும்  வரும். ஒழிந்த நேரங்களில் அவன் வீட்டில் தான் என் பொழுது கழியும். அவனோடு ஆர். சுப்பிரமணியன் என்னும் உறவினனும் அந்த வீட்டில் இருந்தான். அக்கா மகன் என்றோ ஏதோ உறவு. இரண்டு பேருக்கும் வீடு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சிந்தாதிரிப் பேட்டை என்றாலே எப்படியோ பெரியார், திராவிட கழகம் என்று தான் சிந்தனை தொடர்கிறது.

பஞ்சாட்சரம் என்னைவிட நாலைந்து வயது மூத்தவன். பட்டதாரி. எனக்கு ஒரு படி மேல் உத்தியோகத்தில் இருப்பவன் மணி என்று நாங்கள் அழைக்கும் ஆர். சுப்பிரமணியம் என்னைப் போல பத்தாங்கிளாஸ் முக்கி முனகித் தேறியவன். அங்குள்ள பட்டறையிலோ என்னவோ ஏதோ வேலை பார்த்து வந்தவன். எல்லோரும் அன்பாகப் பழகுகிறவர்கள். பொழுது தமாஷாகப் போகும். பஞ்சாட்சரம் தமிழக அரசியல், ப்ழந்தமிழ் இலக்கியம் இவற்றில் ஈடுபாடும் ருசியும் கொண்டவன். ஆனால் இந்த ஈடுபாட்டை அவனோடு இருக்கும் போது நாம் உணர்ந்து கொள்வோமே தவிர அவன் நம்மேல் திணிக்கமாட்டான்.

ப்ஞ்சாட்சரம் வீட்டுக்கு நான் போகும் போது அனேகமாக கூட வீட்டில் என்னொடு இருக்கும் தேவசகாயமும் வேலுவும் கூட வருவார்கள். இந்தக் குழு ஒரு தனிக்குழு. இதன் விவகாரங்களும் தனி. தனி உலகம். மிருணாலோடு ஒரு தனி உலகம். சீனிவாசனோடு ஒரு தனி உலகம். அலுவலக நண்பர்களோடு இன்னொரு தனி உலகம். எல்லா உலகங்களும் தனித் தனி என்றாலும் நான் அந்த எல்லா உலகங்களிலும் உலவுவது சகஜாமகத் தான் இருந்தது.

அங்கு தான் பஞ்சாட்சரம், மணி இவர்களோடு கழிக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில். அங்கேயே சாப்பிட்டுவிடுவேன். அப்படித் தான் மெல்ல ஒவ்வொரு அடிவைப்பாக என்னையறியாது, யாரும் நிர்ப்பந்திக்காது, நண்பர்கள் சூழலில் மிதப்பில் முட்டை சாப்பிடுவதும், பின்னர் பிரியாணி என்றும் பழகிப் போனேன். இதுவும் பழக வெகுநாளாகியது. எப்பவோ கூடும்போது, ஏதும் கொண்டாடும்போது என்று இருந்ததால் அது எப்பவோ தான் நிகழும்.

1956 டிஸம்பர் கடைசியில் வேலை கிடைத்து தில்லிக்குப் பயணப் பட்ட நாளிலிருந்து பஞ்சாட்சரத்தையோ மணியையோ பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஒரு முறை நடுவில் நர்மதையில் உடைப்பெடுத்த காரணத்தால் நாக்பூர் வழி போகமுடியாது என்று தெரிந்ததும், பிலாஸ்பூர் சென்று பிலாய் இரும்பாலை நகரில் வேலை செய்துகொண்டிருந்த மிருணாலைப் பார்க்கலாம் என்று அந்த வழி சென்ற போது மிருணால், மஞ்சு சென்குப்தாவை யெல்லாம் சந்தித்ததோடு வேலு, தேவசகாயம் பஞாட்சரம் மணியையும் சந்தித்தேன். எல்லாம் ஒரே ஒரு நாள் பகல். இது 1958 அல்லது 1959-ல் என்று நினைக்கிறேன். அது நான் இவர்களை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தில் சென்றது. அதற்கு இடையில் ரயில் பாதை சீர்கெட்டிருந்தது அந்த எண்ணத்தை மனத்தில் விதைத்தது.
 .
ஆனால் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று 2000 ஆண்டு  சென்னைக்குத் திரும்பிய பிறகு அந்த ஆண்டே ந. .பிச்சமூர்த்தி நூற்றாண்டு நினைவு விழா ஒன்றை சென்னை சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்தது. அது தொடர்பான கருத்தரங்கு தரமணியில் இருக்கும் உலகத் தமிழராய்ச்சி நிறுவன அரங்கில் நடந்த போது அங்கு திடீரென் விரித்த வெண்சடையுடன் நெடிதுயர்ந்த உருவம் ஒன்று கண்முன் நின்று தரிசனம் தந்தது. யாரென்று திகைத்து நிமிர்ந்து பார்த்தால் அது பஞ்சாட்சரம். பழம் இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியத்துக்கு பஞ்சாட்சரம் தாவியதால் நிகழ்ந்த ஆச்சரிய சந்திப்பு அது. சந்தோஷமாக இருந்தது. கூட மருமகப் பிள்ளை மணியும். இப்போது பஞ்சாட்சரம் இருப்பது மேற்கு மாம்பலத்தில்.ஒழிந்த வேளைகளில், –  ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஒழிந்த வேளை என்று தனியாக இல்லை.- ஹோமியோபதி மருத்துவர். இந்த மாற்றமும் எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது இதற்குப் பிறகு நான் பஞ்சாட்சரத்தைச் சந்திக்கவில்லை. நானும் மணியும் தொலை பேசியில் பேசிக்கொள்வோம் எப்போதாவது. பின் நாலைந்து வருடங்கள் கழித்து திடீரென ஒரு நாள் மடிப்பாக்கத்தில் இருக்கும் வீட்டிற்கு நான் வெளித் தாழ்வாரத்தில் உடகார்ந்திருக்க திடீரெனெ கேட்டைத் திறந்து கொண்டு மணி வருவதைப்பார்த்தேன். எல்லாம் ஆச்சரியங்கள் தருவதற்கே இருந்தார்கள்
.
இப்போது நாங்கள் எல்லோருமே தாத்தாக்கள். அவரவர் பேரப் பிள்ளைகளோடு. மணி தன் மகள் வீடு மடிப்பாக்கத்தில் இருப்பதாகச் சொன்னான். 70 வயது நிரம்பிய ஜீவனை “சொன்னான்” என்று சொல்வது விசித்திரம் தான். இருந்தாலும் சந்திக்கும்போது 1950 களின் ஹிராகுட்/புர்லா ஆண்டுகளில் வாழ்வதாகத் தான் நினைப்பு.
கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கும் மேல் காலம் கடந்த பிறகு எதிர்பாராது பழைய நட்புக்கள் எதிர் நின்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.  திரும்ப புர்லா வாழ்க்கைக்கே சென்றோம்.
 
அங்கு தேவசகாயம் அழைத்து வந்து எங்களுக்கு அறிமுகம் செய்த ஜார்ஜும் ஒருவர். அவரைச் சுலபத்தில் யாரும் மறக்க முடியாது. அனேக விஷயங்கள் அவர் சம்பந்தமானவை மறக்க முடியாதவையாக அவர் நினைவுகளை ஆக்கியுள்ளன.. எப்போதும் சிரித்துக்கொண்டும் ஏதாவது பாடிக்கொண்டுமே இருப்பார். சாதாரணமாகப் பேசும்போது கூட ஒரு குழைவோடும் மிகுந்த பாசம் காட்டும் முகத்தோடும் தான் பேசுவார். அவர் அடிக்கடி பாடும் பாட்டு ஒன்று, சினிமாப் பாட்டுத்தான். ஹிந்தி பாட்டு.

ஸுஹானி ராத் டல் சுக்கி, ந ஜானே தும் கப் ஆவோகே…..(இந்த இனிமையான இரவு கழிந்து விட்டது. நீ வருவதாகத் தெரியவில்லை. எப்போது வரப் போகிறாய் நீ ) என்று தொடங்கும் அது இன்னும் நிறைய புகார்களுடனும், புலம்பல்களுடனும் நீண்டு கொண்டே போகும். எனக்கு மறந்து விட்டது. இன்னமும் “டல் சுக்கி‘ என்ற வார்த்தை சரிதானா எனபது தெரியவில்லை. அந்த பாட்டு சொல்லும் செய்தியில் எதிர்பார்ப்பின், ஏமாற்றத்தின் ஏக்கம் உருக்கமாகவும் இனிமையாகவும்.  இருக்கும். ஆனால் அந்தப் பாட்டு பாடம்படும் மெட்டு எனக்கு அவ்வளவாக உயர்த்திப் பேசக்கூடிய ஒன்றாக நான் நினைக்கவில்லை. ஆனால், ஜார்ஜ் அதைப் பாடும்போது கேட்க நன்றாக இருக்கும். அதை நினைக்கும் போதே நன்றாகத் தான் இப்போதும்  இருக்கிறது. இவ்வளவு காலம் நினைவில் நிலைத்திருக்கிறதே..

அவரோடு ஊரெல்லாம் சுற்றுவோம். எப்போது லீவ் போடலாம் எங்கேயெல்லாம் சுற்றலாம் என்றே காத்துக்கொண்டிருப்போம். ஜார்ஜ், நான், தேவசகாயம், பஞ்சாட்சரம், மணி, வேலு எல்லாம் ஒரு குழு. கும்பல். Gang என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் அதன் குணத்தைச் சொன்னதாக இருக்கும்.

கிறிஸ்துவ வருஷப் பிறப்புக்கு, சம்பல் பூர் போய் பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாமா? என்று கேள்வி கேட்டு எங்கள் பதிலுக்குக் காத்திராமல் எல்லாரும் போவதாகத் தீர்மானமும் அவரே செய்துகொண்டும் விட்டார். இந்த கும்பலில் அவரும் தேவசகாயமும் இருவர் தான் கிறித்துவர்கள். ஏன்யா கிறித்துவர்கள் அல்லாதவரையும் அவர்கள் அனுமதிப்பார்களா என்று கேட்டேன். யார் வேண்டுமானாலும் வரலாம். சொல்லப் போனால், நீங்கள் வந்து கலந்து கொண்டால்  பாதர் ரொம்பவும் சந்தோஷம்ப் படுவார்” என்றார்.

பின் என்ன? டிஸம்பர் குளிர். ராத்திரி சாப்பாட்டை முடித்துக் கொண்டோம் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டாலும் அது குளிர் தாங்கப் போதவில்லை. நீலகிரி தோடர்களைப் போல எல்லாரும் அவரவர் கம்பளியை கழுத்திலிருந்து கால் வரை போர்த்திக்கொண்டு கிளம்பினோம். இரவு பத்து மணி இருக்கும். புர்லா கேம்ப் எல்லையைக் கடந்தால், வெட்ட வெளி தான். நடுவில் மகாநதி. பாலத்தைக் கடந்தால் லக்ஷ்மி டுங்கிரி என்னும் கரடு. சம்பல்பூர் கிட்டத்தட்ட 10 மைல் தூரம் கவனிக்கவும். மைல். என்று சொன்னேன். கிலோ மீட்டர் இல்லை. . நடக்க ஆரம்பித்தோம். எல்லோரும் கூட்டமாக பேசிக்கொண்டு சென்றதால் குளிர் இருந்தாலும் அந்த இரவுப் பயணம் சந்தோஷமாகவே இருந்தது  மகாநதிப் பாலம் வந்ததும் அதன் அருகே இருந்த ஒரு குடிசையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அது டீக்கடைய்யா. டீ கிடைக்குமா கேட்கலாமே என்று எங்களில் ஒருத்தர் சிந்தனை எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது.


(80) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன்அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு டீ கிடைக்குமா என்று கேட்டால் டீ கிடைக்கும் என்பது எதிர்பாராது கிடைத்த ஒரு  சந்தோஷம். கிடைத்த சந்தோஷமா?, வானத்திலிருந்து தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்த கதை தான். டீ கிடைத்தது. கொதிக்கக் கொதிக்க. கைகள் குளிரில் நடுங்க வெடவெடவென விரல்கள் தாளம் போட அந்த டீ க்ளாஸைக் கையில் பிடித்துக்கொண்டு விட்டால் அதுவே ஒரு சுகம் தான். ஆவி பறந்தது. அது டீயா? சாதாரண டீயா என்ன? ஒரு டீ சாப்பிட்ட கதையைச் சொல்ல அல்ல நான் இங்கு நீட்டி முழக்கி அதன் பிரதாபத்தைப் பாடுவது. இன்றும் அது நினைவிலிருக்கிறது. அந்த சந்தோஷமும் இதமும். அந்த டீ சாப்பிட்ட போது கிடைத்த இன்பம், அந்த டீயைப் போல இது நாள் வரை எனக்கு சந்தோஷம் தந்த இன்னொரு க்ளாஸ் டீ எனக்குக் கிடைத்ததில்லை.

ஏதோ ஒரு அரபிக்கதை சொல்வார்கள். பாலைவனத்தில் வறுத்தெடுக்கும் வெயிலில் ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தாகம். நாக்கு வறண்டு போய்க் கிடக்கிறது. வெகு தூரம் நடந்த பின் தவியாய்த் தவிக்கவிட்டுத் தான் அவனுக்கு ஒரு தோப்பும் குட்டையும் கிடைக்கிறது. குட்டையில் இருந்த நீர் தான் எவ்வளவு இனிப்பு?. நிறைய குடிக்கிறான். இவ்வளவு இனிப்பான நீரை அவன் குடித்ததே இல்லை. அதனால் தான் அல்லா தன்னை இவ்வளவு வருத்தியிருக்கிறானோ என்று அவன் மனதில் ஒரு எண்ணம் கீறிக்கோடிடுகிறது. உலகத்திலேயே இவ்வளவு இனிமையான நீர் இங்கு இருக்க அதை நம் பாதுஷாவுக்கும் கொடுக்கவேண்டும். அவர்தான் இதற்கு உரியவர் என்றும் சொல்ல வேண்டும். அவர் சந்தோஷப் படுவார் என்று தன் தோல் குடுக்கையில் அந்தத் தண்ணீரை நிரப்பிக்கொண்டு பாதுஷாவிடம் போய்க்கொடுக்கிறான். இடையில் அரண்மணையில் பாதுஷாவை நெருங்க அவன் பட்ட கஷ்டங்கள் வேறு. எல்லாத் தடைகளையும் தாண்டி அவன் பாதுஷாவிடம் கொடுக்கிறான். அது சாதாரண மனிதன் குடிக்கக் கூட லாயக்கில்லாத தண்ணீர். பாதுஷா அவன் எந்த நிலையில் இந்த தன்ணீரை அம்ருதமாகப் பருகியிருக்கவேண்டும், அதை அமிர்தம் என்றே நினைத்து இத்தனை கஷ்டங்களைச் சுமந்து தன்னிடம் காட்டிய ராஜவிஸ்வாசத்துக்கு மெச்சி அவனுக்குப் பரிசளித்தான் என்பது கதை.

அந்தக் குடிசையில் கிடைத்த டீ, இன்றும் ஒரு இனிய நினைவாக வாழ்ந்திருப்பது, அதை நானும் அதை அரபிக் கதைகளோடு ஒரு நீண்ட ராமாயணமாகச் சொன்னது அந்த நேரம், அதன் தேவை, நண்பர்களின் இடையே அது தந்த சந்தோஷம் எல்லாவற்றையும் தான் காரணமாகச் சொல்லவேண்டும். .

இது அந்தக் குடிசை டீக்கு மாத்திரமல்ல. எல்லாத்துக்கும் தான். புர்லாவில் என் அறைக்கு அடிக்கடி வரும் CRK என்று நாங்கள் அழைக்கும் சி.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஒரு நாள் அவன் அப்பாவோடு நடந்த கதையைச் சொன்னான். கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஊருக்குப் போயிருக்கிறான். நாலைந்து பெண்களையும் அவன் அப்பா அம்மாவோடு போய்ப் பார்த்திருக்கிறான். அவன் அப்பாவுக்குத் திருப்தி இல்லை. ஐந்தாவது பொண்ணைப் பார்க்கவிருக்கிறார். நம்ம பையன் கிருஷ்ணமூர்த்திக்கு பொறுக்க வில்லை. அவன், ஏதோ ஒரு இடத்தில் முன்னால் பார்த்த பொண்ணைக் குறிப்பிட்டு, “ ”எதுக்குப்பா இன்னமும் அலையணும். அந்தப் பொண்ணே அழகாத் தானே இருக்காப்பா” என்று சொல்லியிருக்கிறான். “அதற்கு அவன் அப்பா “உன் வயசிலே அவ என்ன எல்லாப் பொண்ணுமே அழகாத்தாண்டா இருப்பா. உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ பேசாம இரு. இதை எங்கிட்டே விடு. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்.” என்று சொன்னாராம். அவனும் பேசவில்லை. இங்கு புர்லா திரும்பியதும் எங்களிடம் வந்து புலம்பினான்.” என் வயசிலே தான் நான் பாக்கறதுக்கு பொண் நன்னா இருக்கனும். அப்பா வயசிலா நன்னா இருக்கணும்?. அவருக்கு இந்த வயசிலே பொண்களே வெறுத்துப் போயிருக்குமே.” என்று புலம்பிக்கொண்டிருந்தான். எங்களுக்கு சிரிப்பாகத் தான் இருந்தது. அவன் வேதனையில் நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தோம்.  இதுவும் எனக்கு அறுபது வருஷங்களாக நினைவில் பதிந்து தான் இருக்கிறது.

இந்த புது வருஷப் பிறப்பு தினப் பயணம் அவ்வளவு சுவாரஸ்யமானதல்ல. தொடர்ந்த இந்த மாதிரிப் பயணங்களுக்கு இது தொடக்கமாகத் தான் இருந்தது. தொடர்ந்து அந்த குளிரில் நடந்து கொண்டிருந்தோம். உடல் விரைத்தாலும், நடையின் சிரமம் எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு கம்பளியைப் போர்த்திக்கொண்டு, (கர்நாடகாவில விவசாயிகளும் ஆடு மேய்ப்பவர்களும் இந்த மாதிரி உடையில் இருப்பதைப் பத்திரிகைப் படங்களில் பார்த்திருக்கிறேன்) நண்பர்களோடு பேசிக்கொண்டே மனித நடமாட்டமில்லத் இரவின் தனிமையில் செல்வது ஒரு இன்பம் தான்.

நாங்கள் யாரும் சம்பல்பூரில் சர்ச் இருந்த இடம் எதையும் பார்த்ததில்லை. ஹிராகுட்டிலோ புர்லாவிலோ சர்ச் இல்லாத குறை தேவசகாயத்துக்கோ, வேலுவுக்கோ தெரியவில்லை. ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்குப் போகும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. ஜார்ஜின் காரணமாகத்தான் நாங்கள் மட்டும் என்ன, அவர்களும் சர்ச்சைத் தேடி அந்த இரவு புனித யாத்திரையில் இறங்கினோம். நாங்கள் போய்ச்சேர்ந்தத இடத்தில் சர்ச் ஏதும் இல்லை. எங்கோ ஒரு இடத்தில் ஒரு பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். அந்த இடம் இப்போது எனக்கு நினைவில் இல்லை. நிறைய ஆண்களும் பெண்களுமாக பந்தல் நிறையகூட்டம் குழுமியிருந்தது. காத்திருந்தார்கள். நாங்களும் காத்திருந்தோம். எனக்கோ நடந்த அசதியில், இரவுக் குளிரில் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. தூங்கலாமா? தெரியாது. உட்கார்ந்து கொண்டே கண்ணயர்ந்தது எனக்குத் தெரியாது. இடையில் பாதிரியார் வந்ததோ,அதற்கு முன்னோ பின்னோ எதுவும் நடந்ததோ எதுவும் தெரியாது. இடையில் என்னை எழுப்பியதும் யாரோ ஏதோ பிரசங்கம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் மங்கலாகத் தான் அப்போது திரையோடியது. அப்பவேமங்கலாக இருந்தது இப்போதும் மங்கலாகத் தான் இருக்கிறது. பக்கத்தில் இருந்தவர்கள், ஆண்களும் பெண்களும் நான் தூங்குவதைப் அடிக்கடி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள் என்று தேவசகாயம் சொன்னார் சிரித்துக்கொண்டே. என்னைக் கேலி செய்யச் சொன்னதா, இல்லை அவர்கள் சிரித்தார்களா? சிரித்திருப்பார்கள் தான்.

என்ன சாமிநாதன், தூங்கிட்டீங்க?. மார்ச் மாசம் ஈஸ்டர்க்கு நாம் வேறே இடத்துக்குப் போகலாம். இரண்டு மூன்று நாள் லீவ் போட்டுட்டு எல்லாரும் போகலாம். நீங்க இதையெல்லாம் பார்க்கணும் சாமிநாதன், அதுக்குத் தானே உங்களையும் கூட்டியாந்தது! என்று சிரித்துக்கொண்டும் வருத்தத்துடனும் ஜார்ஜ் சொன்னார்.

ஜார்ஜ் மிக சுவாரஸ்யமான மனிதர். சுவாரஸ்யமான என்ற சொல்லை இங்கு யார் வேண்டுமானாலும் எப்படி நீட்டி, அகற்றி அர்த்தப் படுத்திக்கொண்டாலும், அவ்வளவு அர்த்தங்களையும் ஜார்ஜி என்ற மனிதர் தரும் சுவாரஸ்யம் தன்னுள் அடக்கிக் கொள்ளும்.

ஜார்ஜை நாங்கள் அறியத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், ஒரு முறை அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது.
புர்லாவில் ஒரு ஆஸ்பத்திரி புதிதாகக் கட்டப்பட்டிருந்தது.. நம்மூர் அதிகாரிகள், நிபுணர்கள் அந்த 1951 லேயே எப்படி இருந்தார்கள் என்று சொல்வதென்றால் அந்த ஆஸ்பத்திரியின் மகத்வத்தைச் சொல்லவேண்டும். முன்னாலேயே மகாநதிக்குக் குறுக்கே ஒரு ரயில்-ரோடு பாலம் கட்டி அதன் தரத்தை நிராகரித்த ரயில்வே துறையினர் தங்கள் பங்கு செலவைத்தர மறுத்தனர். அந்த பாலத்தின் மேல் மனிதர்கள் நடக்கலாம். லாரிகள் ஓடலாம். மற்றபடி எந்த கனமான யந்திரமும் பாலத்தின் ஒரு கரையில் பாகம் பாகமாக பிரித்து லாரியில் எடுத்துச் சென்று பாலத்தின் மறு கரையில் சேர்க்க வேண்டும்.  அந்த மாதிரித் தான் இந்த ஆஸ்பத்திரியும். இது கட்டி முடிந்ததும், அப்போதைய ஒரிஸா கவர்னராக இருந்த மேனன் (வி.பி மேனன் என்று நினைக்கிறேன் சர்தார் படேலிடம் செச்ரெடரியாக இருந்தவர்) அந்த மேனன் தான் திறந்து வைக்க வேண்டும் என்று அழைக்கப்பட்டு அவரும் வந்திருந்தார். ஆகஸ்ட் மாதம் அப்போது நல்ல மழைக்காலம். ஆஸ்பத்திரி வெராண்டாவில் மாத்திரம் இல்லை உள்ளேயும் தன்ணீர். என்ன இது? என்று கவர்னர் கேட்டாராம். பொறுப்பாக இருந்த என்சினீயருக்கு என்ன சொலவதென்று தெரியவில்லை. மௌனம் சாதித்தார். ஆனால் அவருடைய உதவியாளர் என்சினீயர் தன் உயர்அதிகாரியை இந்த இக்கட்டான சமயத்தில் காப்பாற்றி நல்ல பெயர் வாங்க இது நல்ல சமயம் என்று துணிந்தார். “ ஸார், இது மழைக்காலம். இங்கெல்லாம் நல்ல மழை. அதனால் தான். மழை நின்றதும் சரியாகிவிடும்.” அதற்கு அப்புறம் என்ன நடந்தது? என்ற விவரம் எங்களுக்குத் தரப்பட்ட செய்தியில் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.

ஜார்ஜ் உடல் நிலை சரியில்லாது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த போது மழைக்காலம் இல்லை. ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளோ என்னவோ இருந்தன. அங்கு படுத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகித்சை தான் அளிக்கப்படும். சாப்பாடு உறவினர்கள் தான் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஜார்ஜுக்கு யாரும் உறவினர் கிடையாது. எங்கள் எல்லோரையும் போல அவரும் தனிக்கட்டை. தேவசகாயம் சொன்னார். “நீங்க வேணா சாமிநாதன், அவருக்கு காலையில் பால் வாங்கிக் கொடுக்கிறீங்களா?” என்றார். நானும் மெனக்கெட்டு காலையில் பால் வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஜார்ஜ் எங்கே படுத்திருக்கிறார் என்று வார்டு வாசலிலிருந்தே ஒரு நோட்டம் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தால்……ஒரு நர்ஸ் ஜார்ஜின் படுக்கை அருகே. அவள் அவருக்கு ஒரு  பால் களாஸை நீட்டிக் கொண்டிருந்தாள். ”என்ன ஜார்ஜ்? உங்களுக்கு இங்கே ஒண்ணும் கிடைக்காது என்று தெவசகாயம் சொன்னார். அதான் பால் வாங்கிகொண்டு வந்தேன்,”. என்றேன். ஜார்ஜ் சிரித்துக்கொண்டே, ஆமாம். ஆனால் இந்த நர்ஸ், “ நான் ஏற்பாடு பண்ணுகிறேன், கவலைப் படவேண்டாம் என்றாள்” ஆகையால் நீங்கள் சிரமப் படவேண்டாம், “ னு சொல்லிட்டாள்.. ஆஸ்பத்திரியில் சேர்ந்த மறு நாளே, அவ்விருவரிடையே ஒரு இதமான உறவு மலர்ந்து விட்டது  இருவரிடையே உதடுகளிடையே தவழ்ந்த புன்னகையும், சிறகடிக்கும் கண்களும். வேறென்ன சொல்லும்? தேவசகாயத்திடம் இந்தக் கதையைச் சொன்னபோது, “அதான் நீங்க வரவேண்டாம்னுட்டார்” என்றார்.

vswaminathan.venkat@gmail.com