மானிடத்தை இதய சுத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்!

– பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ் அகஸ்தியரின் இருபதாவது நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது. –

எழுத்தாளர் அகஸ்தியர்

தமிழ் இலக்கிய உலகில் அகஸ்தியர் என்ற பெயர் மிகப் பிரபலமான ஒன்றாகும். பௌராணிக கதைகள் கூறும் குறுமுனிவர் அகஸ்தியர் இந்தியாவின் வடபுலத்திலிருந்து தென்புலத்திற்கு வந்து தமிழிலக்கியத்தையு(ள)ம் மொழி அமைப்பையும் புதிய நெறியிலே வளர்த்தார் எனக் கூறப்படுகிறது. இதே போன்று இருபதாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபுலத்திற் பிறந்து வளர்ந்து தென்புலத்திலும் மத்தியபுலத்திலும் வாழ்ந்து பூமிப்பந்தின் மேலைப்புலத்திற் சங்கமமாகிவிட்ட அசுர எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர், புதிய இலக்கிய அரசியற் கோட்பாடுகளைத் தம்மகத்தே கொண்ட நூற்றுக்கணக்கான ஆக்கங்களைத் தந்து தமிழ் இலக்கிய உலகிற் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

தனக்கெனவும் தனது குடும்பத்திற்கெனவும் தனது சுற்றத்துக்கெனவும் மட்டும் வாழாது தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்துக்காகவும் நாட்டுக்காகவும் அவற்றையும் கடந்து மனிகுலத்துக்காகவும் தனது வாழ்க்கையையும் சுகபோகங்களையும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்ணிப்பவன் சராசரி மனிதனிலிருந்து உயர்ந்து நிற்கின்றான். இறந்தும் இறவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்: போற்றுதலுக்குள்ளாகின்றான். அத்தகையவர்களுள் அமரரான அகஸ்தியரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையிற் பிறந்து பிரான்சின் தலைநகரான பாரிஸ் மாநகரத்திற் சங்கமமாகிவிட்ட அவரது முற்போக்குச் சிந்தனைகளும் உயர்ந்த கருத்துக்களும் இலங்கைக்கோ, தமிழ் உலகுக்கோ மட்டுமன்றி பிரதேச, இன, மத, மொழி, நாட்டு எல்லைகளைத் தாண்டிய அனைத்துலகுக்கும் சொந்தமானவை, நன்மை பயப்பவை.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை என்னும் கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு சவரிமுத்து அன்னம்மா தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்து, ஆனைக்கோட்டைத் தமிழ்ப் பாடசாலையிற் கல்வி பயிலத் தொடங்கி, எஸ்.எஸ்.ஸி வகுப்புடன் பாடசாலைக் கல்விக்கு – வரன்முறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் தமது அறுபத்தொன்பதாவது வயதில் அமரராகும் வரையும் கீழை நாடுகளதும் மேலைநாடுகளதும் தத்துவம், அரசியல், தர்க்கவியல், அறிவியல், சித்தாந்தக் கோட்பாடுகள் முதலிய பலதுறைகள் சார்ந்த நூல்களையும் கீழைத்தேய, மேலைத்தேய இலக்கியங்களையும் இடையறாது கற்று வந்தார். இறுதி மூச்சுவரை அலுப்புச் சலிப்பின்றி எழுதி வந்தார். மரணப் படுக்கiயில் இருந்தபோதும் அவரது கை எழுதுவதை நிறுத்தியதில்லை.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் முதலிய மொழிகளிற் புலமை பெற்றிருந்த அகஸ்தியர் தொழில் காரணமாகத் தமது பதினேழாவது வயதிலிருந்து நாடோடி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கொழும்பிலும், கண்டியிலும், தியத்தலாவையிலும், திருகோணமலையிலும், களுத்துறையிலும், அம்பலாந்தோட்டையிலும், அளுத்கமவிலும் பண்டகசாலைப் பொறுப்பாளாராகவும் பொலிஸ் அதிகாரியாகவும், இராணுவ முகாமின் அலுவலக உத்தியோகஸ்தராகவும், தீயணைக்கும் படைப்பிரிவு அலுவலகராகவும் கடமையாற்றிய வேளையிலும் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல்களால் தாம் பிறந்த மண்ணான யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் வீடு, வாசல், பொருள், பண்டம் முதலியவற்றை மட்டுமல்லாது நீண்ட நாட்கள் முயன்று சேகரித்து அரும்பெரும் செல்வமாகப் பாதுகாத்து வந்த பெருந்தொகை நூல்களையும் தமது சொந்த ஆக்கங்;களையும் ஒன்றாக இழந்து விரக்தியுடனும் வேதனையுடனும் பிரான்சுக்குச் சென்று தீவிர நோய்க்காளாகி மருந்தும் வைத்தியசாலையும் படுக்கையும் என்றிருந்த நிலையிலும்கூட அவர் தமது எழுத்து முயற்சிகளை நிறுத்திக் கொண்டதில்லை.சிறந்த பாடகனாகவும், மிருதங்க வித்துவானாகவும் நாட்டுக்கூத்து நடிகனாகவும் பிரதேச, மொழி, சமய, இன உணர்வுகளைக் கடந்த மனிதாபிமானியாகவும், சிறந்த எழுத்தாளனாகவும், அன்புக் கணவனாகவும், பாசம்மிக்க தந்தையாகவும் திகழ்ந்த அவரது உள்ளம் இரவு பகல் சமுதாய மாற்றத்தையும் இலக்கியத்தையுமே இடைவிடாது சிந்தித்தது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இரவு  பகல் அலுப்புச் சலிப்பின்றி அவரது கரம் எழுதித் தள்ளியது.  உண்மையில் ஐம்பது ஆண்டுகள் அவர் இலக்கியத்தவம் புரிந்தார் எனலாம்.

அவரது இத்தகைய ஐம்பது ஆண்டுகால இடையறா முயற்சியின் விளைவாக முந்நூற்றறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், எழுபது உருவகக் குட்டிக்கதைகளும், பத்துக் குறுநாவல்களும், ஒன்பது நாவல்களும், நூற்றுக்கு மேற்பட்ட விமர்சன ஆய்வுக் கட்டுரைகளும், இருபது வானொலி நாடகங்களும்,  நாற்பது நாட்டுக்கூத்து நாடகங்கள், பிரமுகர் பேட்டி, நடைச்சித்திரம், உணர்வூற்றுருவகச் சித்திரங்கள், விவரணச் சித்திரங்கள் என்னும் புதிய இலக்கியப் பரிசோதனை வடிவங்களும் வெளிவந்துள்ளமை மனங்கொள்ளதக்கது.  வெறுமனே  எண்ணிக்கையின் அடிப்படையில் இவற்றைக் கொள்ளாது இவற்றினூடாக அவர் வெளியிட்டுள்ள சமுதாய மாற்றம் பற்றிய ஆழமான கருத்துக்களும் முற்போக்குச் சிந்தனைகளும் உன்னிப்பாக நோக்கத்தக்கவை. மேற்கண்ட அவரது ஆக்கங்கள் அவரது ஆத்மாவையும், கொள்கைப் பற்றுதலையும், இலட்சியப் பிடிப்பையும், மானுட நேசிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

இரண்டாம் உலக மகாயுத்த காலச் சூழ்நிலையில் எழுத்துப் பிரவேசம் செய்த அகஸ்தியர் தம்மை எழுதத்தூண்டிய சூழ்நிலைகளைப் பின்வருமாறு விபரிக்கின்றார். நான் ஒரு தொழிலாளியின் குடும்பத்திற் பிறந்தவன். என்  தந்தையார் தொழில் வளத்தில் மிக நேர்மையான மகாபராக்கிரமசாலி. அப்போதுள்ள சமுதாயக் கொடுமைகளை நேரடியாகவும் உரைத்ததன் காரணமாக இக்கொடுமைகளில் இருந்து விடுதலை அடைய ஆவேசித்தேன். சோஷலிச சித்தாந்தம் ஆகர்சித்தது. அதன் வாயிலாக நான் தேர்ந்தெடுத்த ஆயுதம் இலக்கியமாக இருந்தது. அக்காலத்தில்  (1945) கல்லூரியில் புத்தகக்கடை வைத்திருந்த அமரர் எஸ். ராமசாமி ஐயர் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அகோரித்த என் அறிவுப் பசிக்கு தீனியிட்டவர். அவரே எனது இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும்; அளித்தவர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் டானியல். அக்காலத்தில் சோஷலிச தத்துவ நூல்களையும் இலங்கையில் அறிமுகப்படுத்திய இராமசாமி ஐயரை நான் என்றும் பெருமிதத்துடன் நினைவுர்ந்து வருகின்றேன். காந்தி, பாரதி, கார்க்கி, டாள்ஸ்டாய் முதலியோரின் கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன. நானும் ஒரு படைப்பாளி ஆனேன். (அகஸ்தியர் பதிவுகள், 1993, பக். 159-160).

கவிதையே என் முதல் இலக்கிய எழுத்து. கவிதை இலக்கணம் 1944 – 1945 காலப்பகுதியல் எழுதத் தொடங்கினேன். சிறுவயதில் பாட்டும் பயனும், படித்தும் கேட்டும் மகிழ்வதில் அலாதி மோகம். காலகதியல் நாட்டுக்கூத்துப் பாடல்கள் பாடவும் இயற்றவும் வாலாயமாகியது. எனது பேரன், தந்தையார், தாயாரின் சகோதரர் சிங்கராசா, எமது மூத்த சகோதரர்  சிலுவைராசா சித்தப்பா ஆசரீர்வாதம் ஆகியோர் நாட்டுக்கூத்து கலைஞர்களாக  விளங்கினர். உறவினர் வசந்தகுலசிங்கம் கர்நாடக இசையில் புல்லாங்குழல் வித்துவானாகத் திகழ்ந்தார். இத்தகைய கலைக்குடும்பப் பின்னணியுடன் மானிப்பாய் மிருதங்க வித்துவான் கா. செல்லையாவிடம் மிருதங்கமும் பயின்றேன். இவ்வழித்தோன்றல்களும் எனது எழுத்துலகப் பிரவேசத்துக்கு உந்துதல் தான். (எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், சந்திப்பு- லெ .முருகபூபதி தினகரன் வாரமஞ்சரி 31.12.1995 பக் 23)

தொளிலாளர், விவசாயம், பாட்டாளி மக்கள் படும் துயரம்,அவர்கள் ஓயாமல் உழைத்த போதிலும், சனாதனவான்களால் கீழ் மட்டத்தில் தள்ளப்பட்ட அவலம் என்பன என்னை எழுதத் தூண்டின. (மேலது பத்திரிகை)

இவ்வாறு தமது எழுத்துப்பணியைத் தொடங்கிய அகஸ்தியர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, மகாகவி பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், திரு.வி.க. சங்கச் சான்றோர், வள்ளுவன், இளங்கோ, மார்க்ஸ், கம்பன், லெனின், ஸ்டாலின், மாவோ, டாள்ஸ்டாய், மாஜினி, காண்டேகர், வாழ்டேயர், எமிலிசோலா முதலியோரது நூல்களை விரும்பிப் படித்தார். அதனால் அவரது எழுத்தார்வம் மென்மேலும் பெருகலாயிற்று.

1947 ஆம் ஆண்டிற் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். பிரேத விசாரனை, பங்காளிச்செய்தி முதலிய அவரது ஆரம்ப காலக் கதைகள் சுதந்திரன் பத்திரிகையில் வெளியாகின. அவற்றைத் தொடர்ந்து மார்க்சிய தத்துவம் அவரை நெறிப்படுத்தலாயிற்று. இலங்கையின் முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட கார்த்திகேசன், வைத்திலிங்கம், சண்முகதாசன், பீட்டர்கெனமன், டானியல் முதலியோரின் உறவு, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மார்க்சிய சித்தாந்த நூல்கள், மார்க்சிய அறிஞர்களின் ஆக்கங்கள், பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, தில்லைநாதன் முதலியோருடன் கொண்டிருந்த மிக நெருங்கிய தொடர்பு, மல்லிகை, தாமரை முதலிய முற்போக்குச் சஞ்சிகைகளின் ஊக்குவிப்பு அவரிடம் இல்பாகவே குடிகொண்டிருந்த தீவிர மானுட நேயம் முதலியவை அவரை வீறு கொண்ட முற்போக்கு இலக்கியவாதியாக வளர்த்தெடுத்தன.

மார்க்சிய தத்துவத்தை வரித்துக் கொண்ட அகஸ்தியர் இறுதிவரை தடம் புரளாது வாழ்ந்தார், தடம்புரளாது எழுதினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் தலைவராகவும் மக்கள் எழுத்தாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினராகவும் திகழ்ந்;தார். மர்க்சியம் என்றாலே வெகுண்டு நோக்கிய அன்றைய சனாதனிகளின் எதிர்ப்பை மட்டுமல்லாது தனது தந்தையாரிடமும் அகஸ்தியர் வசைமொழிகளைப் பெற்றுக்கொண்டார். இதுபற்றி அவரே, ‘மாக்ஸ், ஏங்கல்ஸ் முட்டாள்தனம், முட்டையிலிருந்து மயிர் பிடுங்கிற இலட்சக்கணக்கான நாசகாரர்களைத் தோற்றுவித்திருக்கின்றது’ என்று போன கிழமை ஓர் அறிஞர் கூறினார். அந்தப் பாவத்துக்குரிய நாசக்காரர்களில் நானும் ஒருவன். இதனால் ஊரோடு ஒத்தோடு ஒருவனோடு கேட்டோடு என்ற பிதாவின் ஆசியோடு ஆரம்பமான எழுத்துக்குப் பின்னாளில் அவரும் எனது அபிமான வாசகராகியது என் மாதாவுக்கே அதிசயம், (அகஸ்தியர் பதிவுகள், 1993. புக். 87) எனவும்… நைந்துபோன மனிதர்களை ஈடேற்றும் வழி மார்க்கங்களையும் கூற முனைவதால் கருத்தியல் அழுத்தம் பெற செய்து கொள்கிறேன். … சிறுகதைகள், குறுநாவல்கள், உணர்வூற்றுருவகச் சித்திரங்கள், விவரணச் சித்திரங்கள் முதலியன இவ்வாறு அமைந்து கொள்வதால் சுரண்டும் மேல்தட்டு வர்க்கத்தினரதும் சமூக விரோதிகளினதும் பலமான கண்டனங்களுக்கும், மடலாயப் போதகர்களின் ஆக்ரோஷமான தூஷிப்பிற்கும் ஆளாயின. இது ஒன்றுதான் எனது எழுத்தின் ஆத்ம  பலமாகும். மனிதனை அனைத்து வழிகளிலும் சுரண்டும் கொடிய முதலாளிய அமைப்புச் சிந்தனாவாதிகளின் வெறுப்புகளுக்குப் பாத்திரமாகும்போது என் இலக்கியங்களில் எனது பார்வை குறி தவறவில்லை என்பதை உணர்த்துகிறது.  –(இக்கட்டுரையாசிரியர் அகஸ்தியருடன் நேர்காணல் (எழுத்து மூலம்) மூலமாக பெற்றுக்கொண்ட தகவல்கள்) எனவும் கூறியுள்ளமை ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. 

வணிகமயப்படுத்தப்பட்ட கலை இலக்கிய சீரழிவுகளையும் நச்சுக்  கருத்துக்களையும் ஊழல்களையும் சமூகக் குறைபாடுகளையும் அரசியல் பொருளாதார அக்கிரமங்களையும் பல துறைகள் சார்ந்த சுரண்டற் கொடுமைகளையும் இறுதி மூச்சுவரை ஆக்கிரோசத்துடன் கண்டித்தும் தாக்கியும் புத்துலகம் சமைக்க இடையறாது பாடுபட்ட போராளி; அசுர  உழைப்பாளி ;  மனிதகுலத்தை உள்ளன்போடு நேசித்த மனிதாபிமானி; சமுதாய உயர்விற்காக இலட்சியப் பயணம் மேற்கொண்ட இலட்சியவாதி அகஸ்தியர். சமுதாய மாற்றத்திறகேற்ற கருவியாகவே  அவர் தமது ஆக்கங்களைப் பயன்படுத்தினார். தான் சரியெனக் கருதும், மனதில் தோன்றும் கருத்துக்களை ஒளிவு மறைவின்றிக் கூச்சப்படாது அசுரத் துணி;ச்சலுடன் தமது படைப்புக்களிலும் கட்டுரைகளிலும் வெளியிட்டார்.

செல்லரித்துப்போன அறுபதாண்டுத் தமிழ்ச்சினிமா இனியாவது சிறந்த இலக்கிய ஆக்கங்களால் தரமான கலையாக உருவாகுமா? என்று எதிர்பார்த்த கலை இலக்கியவாதிகள் ஏமாந்துதான் போயினர். ஆனால் இதே சாக்கடைச் சினிமா எக்கச்சக்கமான இலக்கியப் பிரமாக்களை  வலு சுளுவாக உற்பத்தி பண்;ணியிருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு இனிமேல் பஞ்சம் இல்லை.

புட்டுவத்தில் செப்பமாகக் குந்தியிருந்து சிந்தனைத் தூபியைச் சினிமாவிலே தங்க விட்டு விளாசினால் கதைக்களஞ்சியம் கத்தை கத்தையாக சிலருக்கு வந்து விடுகிறது. கேட்பானேன், ஆளுக்கொரு மானசீகக் காதலர்கள் இதயத்தில் தேங்கித் துள்ளுவர். மாடேறிக் கொம்பன்களுக்கும் காடேறி வயிறவர்களுக்கும் யோகம்தான்… (அகஸ்தியர் பதிவுகள் 1993, பக் 91) எனத் தமக்கே இயல்பாகவுரிய நையாண்டி வார்த்தைகளில், கலை இலக்கியம் என்னும் பெயரில் தகிடு தத்தங்கள் செய்து பணம்பண்ண முயல்வோரையும் பிரபல்யம் தேடியலைவோரையும் கண்டித்துள்ளமை மனங்கொள்ளத் தக்கது.

இலக்கியத்தின் சமூகப்பணி பெறுமதி மிக்கது. இலக்கியமானது சமுதாயத் தீமைகளை அகற்றிச் சமூகத்துக்கு நன்மை பயக்கும் கருத்துக்களை வற்புறுத்த வேண்டும்; பிரச்சனைகளை அலசுவதுடன் நில்லாது அப்பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்களை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்;பதற்கான வழிவகைகளையும் விண்டு காட்டுதல் வேண்டும், கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இவை என்னும் அறிவுமிலார்,  என்ற நிலையில்வாழும் மக்களைத் தட்டியெழுப்பி உண்மையை உணர்த்தி விழிப்புறச் செய்ய முயல வேண்டும் என்னும் கருத்துக்களை  உறுதியுடன் பின்பற்றி இறுதிவரை செயற்பட்டார், கலை கலைக்காகவே என்னும் கருத்தினை வன்மையாக ஓங்கி நிராகரித்தார்.

கைதேர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியன் போன்று  சமுதாயத்தை ஆய்ந்து அறிவதில் தேர்ச்சி உள்ளனாக இருந்தாலே தகுதியுள்ள இலக்கியவாதியாகின்றான். நோயாளியைப் பரிசோதிக்கவும்; நோயைப் புரிந்து குணப்படுத்தவும் நோய் மறுபடி அணுகாமல் சிகிச்சையளிக்கும் வைத்தியன் போன்று சமுதாயத்தினை ஆராய்ந்து விமர்சிக்கவும் அதனை உன்னத நிலைக்கு மாற்றவும் நாசங்கள் அணுகாமல் வழிகாட்டவும் எழுதக் கூடியவனே யதார்த்த இலக்கியவாதி (அகஸ்தியர், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும் 1991) எனவும், இயக்கவியல் என்பது, எதுவும் இருக்கிற இடத்திலேயே இருந்து கொண்டிருப்பதுமில்லை. எதுவும் இருக்கிற தன்மையிலேயே இருந்து கொண்டிருப்துமில்லை. இதன் நேரடியான  அர்த்தம் இயக்கம் இயக்கத்தினோடு உண்டாகும் மாறுதல் என்பதாகும். அதனையும் இயக்கவியல் கண்ணோட்டத்தோடு நிகழ்ச்சிகளைப் பார்த்தால்தான் நிகழ்ச்சிகளையும் அவற்றின் தளங்களையும் இயங்குகிற நிலையில் மாறுகிற நிலையில் வைத்துப் பார்க்க முடியும். இயக்கவியல் வகையில் உலகின் வரலாற்றை ஆராய்கிற போது உலகம் இன்றிருப்பதுபோல் எப்போதும் இருந்ததில்லை, அதில் பல உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உருமாற்றங்கள் குண மாற்றங்களையும் உண்டாக்குகின்றன. எதிர் காலத்தில் பல உருமாற்றங்கள் ஏற்படவே  செய்யும். இதுவே இயக்கவியல்வாதக் கண்ணோட்டமாகும். (எஸ்.அகஸ்தியர் இயக்கவியல்வாதம், தினகரன் 4.9.1984 பக். 4) எனவும் யதார்த்த இலக்கியம் பற்றியும் இயக்கவியல் பற்றியும் கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.

அல்லற்பட்டு ஆற்றாது தவிக்கும் அப்பாவிகள், பெண்கள் – குறிப்பாக  அடிமை நிலையில் வாழ்வோர், சமூகத்தின் மேலாதிக்கசக்திகளால் விபச்சாரக்குகைக்குள் தள்ளப்பட்டவர்கள், கொடூரமான சுரண்டல்களுக்காளாகி அல்லலுறும் தொழிலாளர்கள், சமூக – பொருளாதார ரீதியாகத்  தாழ்த்தி ஒதுக்கப்பட்டோர் முதலியோரின் துன்ப துயரங்களைக் கண்டு அடையும் மனக் குமுறல்களுக்கும் அவற்றுக்குக் காரணமானவர்கள் மீது பொங்கி எழும் ஆத்திரமும் அக்கொடுமைகளை அகற்றிச் சமத்துவமும் சுதந்திரமும் மிக்கதோர் சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற தீவிரமும் அத்தகைய முயற்சிக்கு இலக்கியத்தையும் ஒரு கருவியாப் பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதலும் அவரது ஆக்கங்களாக மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

சகல மட்டங்களிலும் உழைக்கும்; மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் முதலாளீய வர்க்க அமைப்பை மாற்றி,  விடுதலை, ஜனநாயகம் முதலியவற்றை நிலைநாட்டவும் தாய்மையின் பெண்ணிலைவாத மகோன்னத தத்துவத்தை உணர்த்தி, மானுட தர்ம நேயத்தை வளர்த்து, கற்பனாவாத மதங்களின் கலாசார விழுமியங்களை நிராகரித்து, விஞ்ஞானபூர்வ மெய்யியல் வாழ்வை மையப்படுத்தும் கருவான மையப்பொருள்களே என் இலக்கியப் படைப்புக்களின் அடிப்படை அம்சங்களாகும்….(இக்கட்டுரையாசிரியர் அகஸ்தியருடன் நோர்காணல் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்கள்) எனத் தமது ஆக்கங்களின் முக்கிய அம்சங்கள்  பற்றி அவரே குறிப்பிட்டுள்ளமையும் மனங்கொள்ளத்தக்கது.

இறுக்கமான கொள்கைப் பற்றுதல் கொண்ட அகஸ்தியரின் ஆரம்பகால ஆக்கங்கள் பலவற்றை  இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகை முதல் தமிழகத்தின் முக்கியமான பல சஞ்சிகைகள் வரை பிரசுரிப்பதற்கு மறுத்ததும்,   காலப்போக்கில் அகஸ்தியரது எழுத்தாற்றலையும், கொள்கைப் பற்றுதலையும் உணர்ந்து அவரது ஆக்கங்களைப் பொதுவாக இலங்கையின் எல்லா தினசரிகளும் மாதாந்த காலாண்டு சஞ்சிகைகளும் ஆர்வத்துடன் வெளியிட்டமையும் வியத்தற்குரியது. தமிழகத்தின் வணிகமயப்படுத்தப்பட்ட சில சஞ்சிகைகள் தவிர ஏனையவை அவரது ஆக்கங்களை விரும்பிப் பிரசுரித்தன. தாமரை சஞ்சிகையில் மட்டும் அகஸ்தியரின் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளமையும், 1970 ஆம் ஆண்டு மே மாதத் தாமரை இதழ் இவரது படத்தை அட்டையிற் பிரசுரித்துக் கௌரவித்தமையும்  மனங்கொள்ளத் தக்கவை. மேலை நாடுகளில் வெளிவந்து கொண்டிருக்கும் ஓசை, பாரிஸ் ஈழநாடு, தமிழன், பாரிஸ் ஈழமுரசு முதலிய பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் சில சிங்கள, மலையாள, ரஷ்ய மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அகஸ்தியரது சுவடுகள் முதலிய ஒரு சில ஆக்கங்கள் நூல்வடிவம் பெறாது தடைசெய்யப்பட்டன. குறுநாவலான வில்லூன்றி மயானம் 1953 ஆம் ஆண்டில் பத்திரிகைகளிற் பிரசுரிப்பதற்கு மறுக்கப்பட்டதுடன் அவருக்கு எச்சரிக்ககைகளும் பயமுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. ஆயினும் அகஸ்தியர் அவற்றுக்கு அடிபணியாது தமது கொள்கைகளிலும் கருத்தியலிலும் விடாக் கண்டனாகவே இறுதிவரை வாழ்ந்தார். 1953ஆம் ஆண்டில் குறுநாவலாக  எழுதப்பட்ட வில்லூன்றி மயானம் என்னும் ஆக்கமே பின்னர் எரிமலையாகவும் எரிகோளமாகவும் படிப்படியாக விரிவடைந்ததுடன் இறுதியில் ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்னும் நாவலாகத் தமிழகத்தில் 1992 அம் ஆண்டில் வெளிவந்து, இலங்கையிலும் தமிழகத்திலும், பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, அவுஸ்திரேலியா முதலிய மேலைநாடுகளிலும் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியதுடன் இலங்கை, தமிழகம் என்ற எல்லைகளைக் கடந்து அகஸ்தியரையும் உலகறியச் செய்துவிட்டது. (அகஸ்தியர் பதிவுகள். 1993 என்னும் நூலில் இவை பற்றிய விபரங்களைக் காணலாம்.)

அகஸ்தியரின் ஆக்கங்கள் சில, சனாதனிகள் பலரின் தீவிர கண்டனத்திற்குள்ளாகின. அவற்றுள் வில்லூன்றி மயானமாக 1953 ஆம் ஆண்டில் தோன்றிப் படிப்படியாக வளர்ந்து 1992 ஆம் ஆண்டு எரிநெருப்பில் இடைபாதை இல்லை என்னும் நாவலாக விஸ்வரூபமெடுத்த ஆக்கம் விதந்து கூறக்கூடியதொன்றாகும். இவ்வாக்கம் காரணமாக 1953ஆம் ஆண்டு முதல் இற்றைவரை சனாதனிகள் பலர் அகஸ்தியருக்கு வசைபாடிக் கொண்டிருப்தையும் முற்போக்குவாதிகள் புகழ்ந்துகொண்டிருப்பதையும்  அவதானிக்கலாம். அதே சமயம் இவ்வாக்கம் எரிகோளம் என்னும் பெயரில் வெளிவந்தபோது ஈழநாடு பத்திரிகையின் விசேட பரிசையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அகஸ்தியரது மேய்ப்பர்கள் (1990) என்னும் சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசும் தமிழக அரசும் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்துள்ளன. இதே போன்று இவரது மண்ணில் தெரியுதொரு தோற்றம், நாட்டுக் கூத்து கலாநிதி பூந்தான் யோசேப்பு வரலாறு ஆகியவற்றுக்கும் இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அகஸ்தியரது ஆக்கங்கள் அவரது சொந்தப் பெயரில் மட்டுமன்றி இருபத்துநான்கு புனைபெயர்களிலும் வெளிவந்துள்ளமை சிந்திக்கவேண்டியதொன்றாகும். அகஸ்தியரது கருத்து வீச்சும் சமுதாய மாற்றம் வேண்டி  நிற்கும் தீவரப் போக்கும் அசுரத்தனமான எழுத்து வேகமும் கண்டிக்க வேண்டியவற்றைக் தயங்காது அசுரத் துணிச்சலுடனும் நையாண்டியுடனும் கண்டிக்கும் இயல்பும், அவர்மீது சிலருக்கு குரோதத்தையும் எரிச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அதனால் அகஸ்தியரது ஆக்கங்களை அத்தகையவர்கள் பண்பற்ற முறையில் விமர்சித்தனர். தூஷித்தனர். அத்தகையவர்களைத் திக்குமுக்காட வைக்கும் வகையிலும் இவை அகஸ்தியருடையதா, பிறருடையதா எனத் திணறச்செய்யும் நிலையிலும் அவரது புனைபெயர்கள் பல விளங்கின. ஆலடியம்மான், காலன், தீட்ஷண்யன், எஸ்.ஏ, அருளம்பலனார், குறுமுனிவர், வித்தக பண்டிதர், யாழ்ப்பாணன், ஈழத்துச் செல்வன், சத்தியமூர்த்தி, நவமணி, நவஜோதி, ஜெகா, ஜீவா, ஜெகனி, நாவலன், வசந்தன், லெனினிஸ்ட், கலைதாசன், புதுமைப்பிரியன் முதலிய அவரது புனைபெயர்கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் நவமணி முதல் ஜெகனி இறாக உள்ள ஐந்து புனைபெர்களும் உண்மையில் அவரது துணைவியாரினதும் பிள்ளைகள் நால்வரினதும் சொந்தப் பெயர்களாகும்.

என்றுமே சத்தியத்தை இதயசுத்தியோடு நேசிக்கும் இயல்பு கொண்ட அகஸ்தியர் ஒருவரையோ அவரது ஆக்கங்களையோ செயற்பாடுகளையோ கண்டிக்கவேண்டியவிடத்துக் கண்டிக்கவும் பாராட்ட வேண்டியவிடத்துப் பாராட்டவும் தவறுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் தனது கருத்தியலுக்கும் கொள்கைகளுக்கும் மாறானவர்களையும் மனம் திறந்து போற்றியுள்ளார். தமிழகத்தின சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களுள் – விமர்சகர்களுள் ஒருவரான நா. சுப்பிரமணியத்தின் எழுத்துகளிலும் விமர்சனங்களிலும் தாம் கண்ட குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ள அதே சமயம் அவரது எழுத்தின் தர்மீகம் தம்மைக் கவர்ந்ததாகவும், நேயம் அவரது எழுத்திற பொதிந்திருப்பதாகவும் அவரது ஆக்கங்கள் பல ஆழ அகலமான பரிசோதனை முயற்சிகளாக விளங்குவதாகவும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மேலது நூலில் இவை பற்றிய விபரங்களைக் காணலாம்)

இதுபோன்றே ஆறுமுகநாவலரை விமர்சிக்குமிடத்து, அவர் பரப்பிய கலாசாரப் பண்பாடு பிற்போக்குத் தனமானது, தமிழ் இனத்துக்கே சாபக்கேடாக அமைந்தது எனக் கண்டித்துள்ள அதே அகஸ்தியர் – அவர் (ஆறுமுகநாவலர்) மேல்நாட்டுக் கலாச்சாரத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்துச் சமராடிய ஒரு தேசிய புருஷர் என்பதில் ஐயமில்லை… (மேலது நூல் பக். 131-132) எனவும், மனிதகுலத்தின் ஒளிமயமான வாழ்வுக்கென்று புதிய சமூக மக்கள் ஜனநாயக சமத்துவ சமுதாய நீதியை நிர்ணயிக்க முடியாதோ. ஈழத்துத் தமிழ்க் கலை கலாசார இலக்கியப் பரப்பில் நமது ஆறுமுகநாவலரை நழுவவிட்டு எவ்வாறு ஈழத்துத் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பறைசாற்ற முடியாதோ, ஜனாப் சித்திலெப்பை அவர்களை மறைத்துவிட்டுத் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி வரலாறு பற்றிப் பிரஸ்தாபிக்க முடியாது. (எஸ். அகஸ்தியர் ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள், 1988, முன்னுரை) எனவும் கூறியுள்ளமை அவதானிக்கத் தக்கது.

அகஸ்தியர் பதிவுகள் என்னும் பெயரில் வெளிவந்துள்ள அவரது கட்டுரைத் தொகுதி, முதல் ஒரு நூற்றாண்டின்; இரு தமிழ் நாவல்கள், மானிடதரிசனங்கள் முதலியன ஈறாகவுள்ள அனைத்து ஆக்கங்களிலும் இன,மத, மொழி, பிரதேச உணர்வுகளைக் கடந்த அவரது விரிந்த மனப்பாங்கையும் சத்தியத்தை நித்தியமாகப் போற்றும் பண்புகளுள் இதுவுமொன்றாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் அரசாங்க அலுவராக அவர் கடமையாற்றிய போதும் கண்டியில் அவர் வாழ்ந்த பதினேழு ஆண்டுகள் மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையின் முழுத்தகைமையுள்ள தொழிலாள வர்க்கத்தைக்கொண்ட மலையகத்தின் தலைநகரான கண்டியில் அவர் வாழ்ந்தபோது மலையக தொழிலாளர்களின் அவலங்களை உள்ளபடி உணர்வதற்கும் அவர்களோடு பழகுவதற்கும் அவர்களிடமிருந்து கற்றவற்றைப் புடம்போட்டுச் சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் படைப்பதற்கும் ஏற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.

கண்டியில் அவர் வாழ்ந்தபோது மலையகத்தின் சண்டமாருதம் எனப்பட்ட சட்டத்தரணியான இரா.சிவலிங்கம், கே.கணேஷ் முதலிய முதுபெரும் எழுத்தாளர்கள் முதல் இளந்தலைமுறையினர் வரை பலரதும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியோரதும் ஆதரவுடன் மலையகக் கலை இலக்கியச் சங்கம் அமைத்துப் பலதரத்து மக்களுடனும் இணைந்து இலக்கியப் பரிவர்த்தனை புரிந்தார். பதினேழு ஆண்டுகள் மலையகத்தில் வசித்த அனுபவம், பாரதி சொன்ன உண்மை ஒளி அவர்கள் வாழ்வில் தவழ்கிறது. நெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்டு மரத்துப்போன ஒரு வாழ்க்கை முறையில் சகிக்க முடியாத வேதனையை அடக்கிக் கொண்டு மலையக மக்கள் குமுறுவதை அவதானித்தேன். மலையக எழுத்தாளர்கள் என் அன்பிற்குப் பாத்திரமானவர்கள். (அகஸ்தியர் பதிவுகள். 1993, பக்.50) எனவும் மலையகம், யாழ்ப்பாணத் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் கதாபாத்திரங்களாக இணைத்து எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். இப்படைப்புகளில் பிரதான பாத்திரங்களாகத் தங்களை இணைத்துக் கொண்டதால் மட்டுமல்ல, அப்பாத்திரங்கள் மூலம் சமுதாயப் பற்றையும் புதிய யுகத்தையும் புத்துணர்வையும் ஊட்டியதாகப் புரிந்துணர்வு கொண்ட பெருவாரியான மலையகத் தமிழ், முஸ்லிம் மக்கள் என்பால் அன்பு கூர்ந்து அன்றாடம் சந்தித்து, பாசத்துடன் பழகி, தங்களில் ஒருவனாக என்னையும் ஆக்கிக் கொண்ட சம்பவங்கள் ஏராளம்… (மேலது நூல்.  புக். 12) எனவும் அவர் கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.

அகஸ்தியரின் ‘நீ’ என்னும் (உணர்வூற்றுருவகச் சித்திரம்) நூல் வெளியீட்டு விழா 1968 ஆம் ஆண்டு கண்டி, மாத்தளை ஆகிய நகரங்களில் முறையே இரா.சிவலிங்கம், ஏ.வி.பி. கோமஸ் ஆகியோரது தலைமையில் இடம்பெற்றதுடன் அகஸ்தியருக்கு பாராட்டு விழாவும் இடம்பெற்றது. இதேபோன்று 1978 ஆம் ஆண்டு அகஸ்தியரின் இலக்கியப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் கண்டியில், செய்திப் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகலிங்கம் அவர்களது தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. 1981 ஆம் ஆண்டு அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்போது திரு. கே. கணேஷ் அவர்களது தலைமையில் பிரிவுபசார விழா நடைபெற்றது.

மலையகத் தோட்டத் தொழிலாள்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் தோட்டங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுத் தொழிலாளர் சமூகத்தின் உதிரிகளாகக் கண்டி, கொழும்பு முதலிய நகர்ப்புறங்களில் தெருவோரங்களிலும், ஒதுக்குப் புறப்பகுதிகளிலும் பரிதாபகரமான முறையில் வாழ்க்கைப் போராட்டம் நடாத்துவோரையும் மையமாகக் கொண்டு  மேய்ப்பர்கள், கள்ளத்தோணி, பிரசாதம், பிராத்தனை, இரத்தசாட்சி முதலிய பல சிறுகதைகளையும் நீ என்னும் உணர்வூற்றுருவகச் சித்திரத்தையும், மண்ணில் தெரியுதொரு தோற்றம் முதலிய நாவல்களையும் அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகஸ்தியரது ஆக்கங்களுள் அதிகமானவையும் பல கட்டுரைகளும் அவர் பிறந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு அங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் பலவேறுபட்ட பிரச்சினைகளையும் சாதியக் கொடுமைகளையும், சீதன முறையின் இறுக்கம், அதனடியாகத் தோன்றும் அவலங்கள் முதலியவற்றையும், ஆறுமுகநாவலர் காலத்தில் இருந்து இற்றைவரை யாழ்ப்பாண மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பலதுறை மாற்றங்களையும் மாறிவரும் விழுமியங்களையும் சீரழிவுகளையும் உயிர், உடைமை இழப்புகளையும், மனித வதைகளையும் பலப்பரீட்சைக் கெடுபிடிகளையும், அற்புதமான முறையிற் படம்பிடித்துக் காட்டி, அலசி ஆராய்பவையாகவும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட யாழ்ப்பாணத்தைப் பற்றிய  வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குதல் அவதானிக்கத்தக்கது.

அவரது ஆக்கங்கள் சித்தரித்துக் காட்டும் யாழ்ப்பாணத்தை, ஆறுமுகநாவலர்  காலத்து யாழ்ப்பாணம், நாவலர் காலத்திலிருந்து 1950 களின் முற்பகுதி வரையிலான யாழ்ப்பாணம், 1950களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் இறுதிவரையிலான யாழ்ப்பாணம், கடந்த பதினைந்து ஆண்டுகால யாழ்ப்பாணம் என வகுத்து நோக்குதல் பொருந்தும். இவ்வகையிலே அவரது நூற்றுக்கணக்கான சிறுகதைகள் ( இலவுகாத்த கிளி, மேய்ப்பர்கள், அகஸ்தியர் கதைகள், எவளுக்கும் தாயாக முதலிய  தொகுதிகள் உட்பட) நவீன பரமாந்த குருவும் அவர்தம் சீடர்களும் (நாடகம்), அலைகளின் குமுறல் (நாடகம்) மகாகனம் பொருந்திய…  (குறுநாவல்களின் தொகுப்பு), நரகத்திலிருந்து – (குறுநாவல்களின் தொகுப்பு) திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கின்றாள் (நாவல்), எரிநெருப்பில் இடைபாதை இல்லை (நாவல்) மானிடதரிசனங்கள் முதலிய ஆக்கங்களும் அகஸ்தியர் பதிவுகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பலவும் விதந்து கூறத்தக்கவை. இவை அந்தக் காலத்து யாழ்ப்பாணத்தை இந்தக் காலத்து இளந்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன.

இலங்கையில் சமகால வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிலைமைகளை மட்டுமல்லாது அனைத்திலங்கையினது நிலைமைகளையும் சமகால உலகப் போக்குகளையும் பிரதிபலிப்பவையாகவும் அலசுபவையாகவும் அமையும் வகையில் மரணப் போராட்டத்தின் மத்தியிலும் போரும் சமாதானமும் (நாவல்) மரணசாஸனம் (கருத்தியல் சார்ந்த பிரகடன நூல்) ஆகியவற்றையும் அர்த்தமுள்ள வாழ்க்கை (கட்டுரைத் தொகுப்பு: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலையும் எனது இலக்கிய வாழ்க்கை என்னும் நூலையும் எழுதிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே என்று எண்ணியோ என்னவோ அவற்றைப் பூர்த்தி செய்யாமலே இவ்வுலகை நீத்தார். அவற்றைப் பூர்த்தி செய்வோர் யாரோ!

அகஸ்தியரின் அதிகமான ஆக்கங்கள் இலக்கிய ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றிச் சமூக, பண்பாட்டு, மொழியியல் ஆய்வாளர்களுக்கும் உதவும் வகையில் சமூகப் பண்பாட்டு வாழ்வியலம்சங்களைப் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணங்களாகவும் மண்வாசனையை மிகத் திறம்பட வெளிப்படுத்துபவையாகவும் விளங்குதல் விதந்து கூறத்தக்க ஒன்றாகும். மறைந்துகொண்டு வரும் பேச்சுவழக்கிற்கு வந்துகொண்டிருக்கும் சொற்கள், பழமொழிகள், புதுமொழிகள், உவமைகள், உருவகங்கள், உவமைத் தொடர்கள், மரபுத் தொடர்கள், அவரது ஆக்கங்களில் இடம்பெற்றுள்ள வௌ;வேறு வகையான நடை, புதிய சொல்லுருவாக்கங்கள் முதலியன தனியாக ஆராயத்தக்கவை.

அகஸ்தியர் அமரத்துவம் அடைந்ததையடுத்து பிரான்ஸ் முதல் கனடாவரை, இலங்கை முதல் அவுஸ்திரேலியா வரை உலகின் பல பாகங்களிலும் அண்ணாரது உன்னத பணிகளை நினைவுகூருமுகமாக இரங்கற் கூட்டங்களும் நினைவஞ்சலிகளும் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவரது நூற்றுக் கணக்கான ஆக்கங்களை விரிவாக ஆராய்வதும், இதுவரை நூல் வடிவில் வெளிவராத ஆக்கங்களை, நூல் வடிவம் பெறச் செய்தலும் அன்னாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும்.

நன்றி: இளங்கதிர் (பேராதனைப் பல்கலைக்கழகத்  தமிழ்ச் சங்கம் வெளியீடு). 

அனுப்பியவர்: நவஜோதி யோகரட்னம் navajothybaylon@hotmail.co.uk