– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் எட்டு
நான் கண்விழித்து எழுந்த போது சூரியன் மேல்வானத்தில் இருப்பதைக் கண்டு அப்போது காலை எட்டு மணி ஆகியிருக்கும் என்று கணித்தேன். குளுமையான நிழல் கவிந்த புல்வெளியில் படுத்துக்கொண்டே நடந்த விஷயங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். நான் ஓய்வாக உணர்ந்தேன் என்பதைவிட வசதியாகவும், நிறைவாகவும் அதிகம் உணர்ந்தேன். இரண்டு அல்லது மூன்று ஓட்டைகளுக்கிடையேதான் பார்க்க முடிந்தாலும் சூரியன் முழுமையாகத் தென்பட்டது. என்னைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும், அதனிடையே காணப்பட்ட கும்மிருட்டும்தான் இருந்தது. சூரியன் இலைகளுக்கு உள்ளே எட்டிப்பார்த்து ஜொலித்ததால் தரையில் ஆங்காங்கே புள்ளி புள்ளியாக ஒளிவட்டங்கள். மெல்லிய தென்றல் காற்று வீசிக்கொண்டிருப்பதை அங்கிருந்த இலைகள் மெதுவாகத் தலை அசைத்து உணர்த்திக்கொண்டிருந்தன. அணில் தம்பதி இருவர் மரக்கிளையில் அமர்ந்து என்னைப்பார்த்து நட்போடு கீச்சிட்டன.
சொல்லவொணாத வகையில் நான் மிகவும் வசதியான சோம்பேறித்தனத்தை அனுபவித்துக் கொண்டிருந்ததால் எழுந்து காலை உணவு தயாரிக்க மனமில்லாது அப்படியே கிடந்தேன்.. திரும்பவும் தூக்கத்தில் சொக்கிப்போய்க்கொண்டிருக்கும்போது தூரத்திலே நதியில் இருந்து பூம் என்று முழக்கம் போன்றதொரு ஒலி கேட்டது. நான் எழுந்து முழங்கைகளால் நிலத்தில் ஊன்றி அந்தச்சத்தத்தை கவனித்தேன். வெகு விரைவிலேயே மீண்டும் அதே சத்தம் கேட்டது. மெதுவாகத் தத்திக் கொண்டே இலைகளின் வழியாக வெளியே பார்த்தேன். தூரத்தில் நதியின் மேற்புறப் பரப்பில் புகைமூட்டம் ஒன்றைக் கண்டேன். அத்துடன் ஒரு படகு நிறைய மக்கள் நதியில் மிதந்து வருவதையும் கண்டேன். என்ன பிரச்சினை என்று இப்போது எனக்குப் புரிந்து விட்டது. “பூம்.” வெள்ளை நிறப்புகை அந்த படகில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதைக் கண்டேன். அவர்கள் நதி நீர் மீது பீரங்கி கொண்டுவெடிக்கச் செய்து நதியினுள்ளே கிடக்கும் எனது உயிரற்ற உடல் நீர்ப்பரப்பின் மேலே வந்து மிதக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
நான் மிகவும் பசியுடன் இருந்தேன். ஆனால் இப்போது அடுப்பு மூட்டுவது அறிவில்லாமை ஆகும். ஏனெனில் அதில் இருந்து வெளி வரும் புகையை அவர்கள் பார்த்துவிட்டால் வம்பாகி விடும். எனவே, பேசாமல் அமர்ந்து பீரங்கி வெளிவிடும் புகையையும், பூம் என்ற அந்த சத்தத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த நதி அக்கணத்தில் பரந்து விரிந்ததாக காணப்பட்டது. அது எப்போதுமே கோடைகாலக் காலைவேளைகளில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நான் அவர்கள் எனது உயிரற்ற உடலைத் தேடிக்கொண்டிருப்பதை ஒரு குரூர திருப்தியுடன் ரசித்தேன். ஆயினும் கடிப்பதற்கு ஏதேனும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
பாதரசத்தை ரொட்டித்துண்டுகளில் வைத்து அவற்றைத் தண்ணீரில் விட்டால் அவை நேராக மூழ்கிப்போன உடலில் சென்று நிற்கும் என்று மக்கள் கடைப்பிடிக்கும் ஐதீகம் அப்போதுதான் எனது நினைவுக்கு வந்தது. எனவே, அந்த ரொட்டித்துண்டுகளைத் தேடிச் சென்று தீவின் இல்லினோய் பக்கம் நின்று கொண்டு என்னுடைய அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றம் நேரவில்லை. பெரிய இரட்டை துண்டுகள் ஒன்று அந்தப்பக்கமாக வந்தன. நான் ஒரு நீண்ட குச்சி வைத்து அதை என்பக்கம் இழுத்தேன். ஆனால், என் கால் வழுக்கியதால் அவை என்னைவிட்டு தூரத்தில் அகன்று விட்டன. நீரின் விசை கரையோரம் எதையும் அடித்து வந்து சேர்க்கும்படிதான் நான் நின்ற இடம் இருந்தது. எனக்கு அது நன்கு தெரிந்துதான் இருந்தது. விரைவிலேயே இன்னொரு ரொட்டித்துண்டு வந்தது. இந்த முறை அதை நான் பிடித்து விட்டேன். அந்தத் திடப்பொருளை எடுத்து கொஞ்சம் குலுக்கி மேலிருந்த பாதரசக் கலவையை நீக்கி, ஒரு கடி கடித்தேன். மிகப்பெரிய பணக்காரர்கள் சாப்பிடும் வகையான பேக்கர்ஸ் ரொட்டிகள் அவை. ஏழைகள் சாப்பிடும் மக்காச்சோளத்தில் செய்யப்படும் மலிவான பொருள் அல்ல.
நல்ல சௌகரியமான இடத்தில் இலைகளின் இடையில் மரக்கட்டையின் மேல் அமர்ந்து ரொட்டியை மென்றுகொண்டே அந்தப் படகை கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். அதன் பின்தான் திடீரென எனக்கு அது உறைத்தது. அந்த விதவையோ, பாதிரியாரோ அல்லது வேறு யாரெனுமாவது இந்த ரொட்டித்துண்டு என்னைக் கண்டுபிடிக்கும் என்று பிரார்த்தனை செய்து போட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னைக் கண்டு பிடித்தே விட்டது இல்லையா!. எனவே பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதாவது, அந்த விதவை, பாதிரியார் போன்ற நல்ல மனிதர்களின் பிரார்த்தனைகளுக்கு ஏதோ சக்தி உண்டு போலும். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. அது ஒரு சில நல்ல இதயங்களுக்குத்தான் சரிவரும் போல.
புகை பிடிக்கும் குழாயைப் பற்றவைத்து நீண்ட நேரம் நன்கு புகைத்துக் கொண்டே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த படகு நதியின் விசையோடே மிதந்துகொண்டிருந்தது. நான் அமர்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு மிக அண்மையில் ரொட்டித்துண்டு வந்தது போலவே அதுவும் வரக்கூடும் என்றும் அப்படி வந்தால் அந்தப் படகின் மேல்தளத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என நான் நினைத்தேன். அது அருகே வந்த போது, புகைப் பிடிக்கும் குழாயை அணைத்து விட்டு ரொட்டித்துண்டைக் கண்டெடுத்த இடத்திற்குச் சென்று நதிக்கரையில் கொஞ்சம் திறந்தவெளியாக உள்ள இடத்தில், ஒரு மரக்கட்டையின் பின்னால் மறைந்து படுத்துக்கொண்டேன். மரக்கட்டையின் பிளவு வழியாக அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒளிந்து கொண்டு கவனித்தேன்.
வெகு விரைவில் அந்தப் படகு அருகே வந்தது. படகில் உள்ள ஒரு மரப்பலகையை கொஞ்சம் நீட்டி இருந்தால் கூட நான் இருக்கும் கரைக்கே அவர்கள் நடந்து வந்திருக்கக்கூடும் எனும அளவுக்கு அருகாமையில் வந்தது. அதன் மேல்தளத்தில் எனக்குத் தெரிந்த அனைவரும் இருந்தார்கள் : அப்பா, நீதிபதி தாட்சர், பெஸ்ஸி தாட்சர், ஜோ ஹார்ப்பர், டாம் சாயர், அவனின் அத்தை போல்லி, சிட் மற்றும் மேரி மற்றும் பலரும் இருந்தார்கள். படகின் கேப்டன் குறுக்கிடும்வரை அனைவரும் அந்த கொலையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். கேப்டன் கூறியதாவது: “அனைவரும் கூர்ந்து கவனியுங்கள். நீரின் விசை இங்கே கரைக்குப் பக்கமாக வருகிறது. அப்படியானால் அவன் உடல் இங்கே எங்காவது கரை ஒதுங்கி நீர் தேங்கி நிற்கும் முனையில் ஏதாவது புதருக்குள் மாட்டி இருக்கலாம். அப்படிதான் நான் நம்புகிறேன்”
நான் அப்படி நம்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூட்டம் கூடி கம்பியின் மேல் சாய்ந்து பார்ப்பது என் முகத்துக்கு நேராக வந்து என்னைப் பார்ப்பது போல் இருந்தது. தங்களின் முழு சக்தியையும் அவர்கள் திரட்டி அசையாமல் நின்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை நன்கு பார்க்க முடிந்தது. ஆனால் அவர்களால் என்னைக் காண இயலாது. பின் அந்தக் கேப்டன் கூறினார் : “வெடியுங்கள்” என்று
என் முன்னே பீரங்கி கடும் சப்தத்துடன் வெடித்தது. அதிலிருந்து வெளியேறிய சத்தமும், புகையும் என்னைச் செவிடாகவும் குருடாகவும் மாற்றும் அளவுக்கு இருந்ததுடன் நான் இறந்துவிட்டேனோ என்று கூட ஒரு கணம் தோன்றியது. நான் இருக்கும் இடத்தை நோக்கி ஒரு பீரங்கி குண்டு வீசி இருந்தால், அவர்கள் தேடும் என்னுடைய உயிரற்ற உடல் அவர்களுக்கு உண்மையிலேயே கிடைத்திருக்கும். நல்ல வேளை. நான் பிழைத்தேன், கடவுளே!
அந்தப்படகு மெல்லமாக மிதந்து தீவின் இன்னொரு தோள்பட்டை வழியாக சென்று மறைந்தது. அவ்வப்போது அந்த பூம் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தாலும், அது என்னைவிட்டு வெகு தொலைவுக்குச் சென்று விட்டது. ஒரு மணி நேரம் கழித்து சுத்தமாகவே அந்த சப்தம் நின்று போயிற்று. நான் இருந்த அந்தத்தீவு மூன்று மைல் சுற்றளவு நீளம் கொண்டதால், அதன் கடைசிப்பகுதியை அடைந்த அவர்கள் தங்களின் தேடும் வேட்டையைக் கைவிட்டிருப்பார்கள் என்றே எனக்குத் தோன்றியது. ஆனால், அவர்கள் இன்னும் சிறிது நேரம் தொடர்ந்திருக்கிறார்கள். தீவின் கடைசி வரை சென்று மீண்டும் திரும்பி வந்து நீராவிப் படகு மூலம் மிஸ்ஸோரி பக்கம் உள்ள வாய்க்காலில் எல்லாம் தேடி இருக்கிறார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது அந்த பூம் சத்தம் மறுபடியும் எப்போதோ ஒரு முறை கேட்டது. நான் அக்கரையைக் கடந்து அந்தப்பக்கம் சென்று அவர்களைக் கவனித்தேன். தீவின் தலைப்பகுதிக்கு அவர்கள் வந்தவுடன் பீரங்கி சுடுதலை நிறுத்தி விட்டு, திரும்ப ஊருக்குச் செல்வதற்காக மிஸ்ஸோரி கரைக்குச் சென்றார்கள்.
எனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று தெரிந்தது. இனி யாரும் என்னைத்தேடிக்கொண்டு வரமாட்டார்கள். தோணியில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிறிய அழகான தங்குமிடம் அமைத்துக் கொண்டேன். என்னுடைய கம்பளிகளை உபயோகித்து தற்காலிக டென்ட் ஒன்றை அமைத்து என்னுடைய பொருட்களை மழைநீர் சேதப்படுத்த முடியாதவாறு பத்திரமாக வைத்துக் கொண்டேன்.. மாலைச்சூரியன் மறையும் வேளையில் ஒரு கெளுத்தி மீனைப் பிடித்து என்னுடைய ரம்பத்தால் அதை அறுத்துத் திறந்தேன். இரவு தீ மூட்டி குளிர் காய்ந்து, இரவு உணவை உண்டேன். பின்னர் மீன்பிடிக்கும் வலையை அமைத்து வைத்து காலை உணவுக்குத் தேவையான மீன்கள் பிடிக்க ஆயத்தம் செய்து வைத்தேன்.
இருட்டியதும், மூட்டி வைத்த தீ அருகே அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டு நல்லவிஷயங்களைப் பற்றி சிந்தித்தேன். ஆனால், வெகு விரைவிலேயே தனிமையை நான் உணர்ந்ததால், எழுந்து சென்று நதியினருகே அமர்ந்து நீரோட்ட விசையின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். வின்மீண்களையும், நதியில் மிதந்து வரும் மரக்கட்டைகளையும், மரக்கட்டைகளால் ஆன மரப்பலகைகளையும் எண்ணிக்கொண்டிருந்தேன். பிறகு படுக்கைக்குச் சென்றேன். தனிமையில் இருக்கும்போது படுக்கைக்குச் சென்று உறங்குவது போன்றதொரு சிறந்த பொழுது போக்கு வேறொன்றுமில்லை. தூங்கும்போது நீங்கள் தனிமையில் இருக்க மாட்டீர்கள். எனவே அந்த எண்ணம் சீக்கிரம் மறைகிறது.
மூன்று பகல்களும் இரவுகளும் இவ்வாறே சென்றன. எதுவும் மாறவில்லை. எல்லாமே அப்படியேதான் இருந்தது. நான்காவது நாள் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். நான்தான் அந்தத் தீவின் முதலாளியாக இருப்பதால், அந்தத் தீவின் அனைத்துமே எனக்குச் சொந்தமானதால், நான் அவற்றைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினேன். முக்கியமாக எனது நேரத்தை எப்படியாவது போக்க விரும்பினேன். நன்கு பழுத்த ஸ்டராபெர்ரி பழங்கள் நிறைய பார்த்தேன். அதனுடன், கோடைகால பச்சை திராட்சைகளையும் கண்டேன். பச்சை ராஸ்ப்பெர்ரி மற்றும் கருப்பு பெர்ரி பழங்கள் அப்போதுதான் காய்க்கத் தொடங்கியிருந்தன. கூடிய விரைவில் அவை பழுத்தவுடன் அவற்றை நான் ருசி பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.
நான் அந்தத் தீவின் கடைசிப் பகுதியிலிருந்து வெகுதூரம் இல்லை என்பதை அடர்ந்த காடுகளில் சுற்றித்திரிந்த வேளையில் கண்டு கொண்டேன். என்னிடம் துப்பாக்கி இருந்தாலும், நான் எதையும் சுடவில்லை. அது எனக்கு ஒரு தற்பாதுகாப்புக்காகவே கூட இருந்தது. திரும்பிச்செல்லும்போது வேண்டுமானால் ஒரு விளையாட்டுக்காக எதையாவது சுடலாம் என்று நினைத்தேன். இவ்வாறாக யோசித்துக் கொண்டு நடந்த அந்த சமயத்தில்தான் என் வழித்தடத்தில் கடந்து போன ஒரு பெரிய அளவிலான பாம்பைப் பார்த்தேன். அது சறுக்கி நகர்ந்து மலர்கள், புற்களின் ஊடே புகுந்து சென்றது. அதைச் சுட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் அதைத் துரத்திக்கொண்டு ஓடினேன். துரத்தி ஓடிக்கொண்டேயிருந்த போதுதான் அங்கே அணையாமல் புகைந்து கொண்டிருக்கும் சாம்பலுடன் கூடிய குளிர்காய மூட்டிய தீயைக் கண்டேன்.
எனது இருதயம் எனது நுரையீரலுக்குத் தாவியது. ஒரு கணம் கூட தாமதிக்காது, துப்பாக்கியின் விசையை விடுவித்து தயார் நிலையில் வைத்து, பின் பக்கமாக அவசரத்துடன் பூனை நடைமிக நடந்தேன். அவ்வவ்போது சுற்றிலும் இருந்த அடர்ந்த இலைகளுக்குள் உற்று நோக்கி கவனித்தேன். ஆனால் என்னுடைய கடினமான மூச்சினால், என்னால் வேறு எதையும் கேட்க இயலவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகமாக கள்ளநடை போட்டு மீண்டும் கவனிக்க முயற்சித்தேன். இவ்வாறு திரும்பத் திரும்பச் செய்தேன். ஏதேனும் மரத்தின் வெட்டப்பட்ட அடிப்பாகம் தென்பட்டால்கூட மனிதனோ என்று நினைத்தேன். ஏதேனும் குச்சி மீது கால் வைத்து அது முறிந்தால் கூட எனது மூச்சு நின்றுவிடும் போல ஆனது. யாரோ ஒருவன் எனது மூச்சை இரண்டு சமமற்ற பாகமாக வெட்டி என்னிடம் சிறியதாக உள்ள ஒன்றைக் கொடுத்தது போன்று நான் உணர்ந்தேன்.
அந்த ஒரு சூழ்நிலை எனது மனதுக்கு அமைதியைக் கொடுக்கவில்லை என்பதை திரும்ப எனது தங்குமிடம் சென்றபோது உணர்ந்தேன். நான் பெரிதாக பீதி அடையாவிட்டாலும், இந்த சமயத்தில் இவ்வாறான ஆபத்துக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணினேன். எனவே என்னுடைய பொருட்களை எல்லாம் தோணியில் பத்திரமாக வைத்து, அவை சரியாக மறைக்கப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்து கொண்டேன். குளிருக்காக மூட்டிய தீயை அணைத்துவிட்டு, சாம்பலை எடுத்து அனைத்துப் புறமும் அள்ளி வீசி அது பலநாட்களுக்கு முன்னர் மூட்டிய ஒரு தீயின் மிச்சம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு பின்னர் ஒரு மரத்தில் ஏறினேன்.
அந்த மரத்தின் மீது ஒரு இரண்டு மணி நேரம்தான் அமர்ந்திருப்பேன். எதையும் கேட்கவில்லை. எதையும் பார்க்கவில்லை. ஆனால் வெவ்வேறு விதமான ஆயிரம் விஷயங்களை பார்த்ததாகவும், கேட்டதாகவும் கற்பனை செய்து கொண்டேன். அங்கேயே நீண்ட நேரம் இருக்க முடியாது என்பதை உணர்ந்த நான் இறுதியாக கீழே இறங்கி வந்தேன். ஆனால் அடர்ந்த மரங்களுக்கிடையே தங்கி எல்லா நேரமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். நான் சாப்பிட என்று இருந்தது எல்லாமே காலை உணவில் மிச்சமான பெர்ரி பழங்கள்தான்.
இரவு கவிழும்போது எனக்கு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. இன்னும் அதிகமாக இருட்டிய வேளை. மெதுவாக அங்கிருந்து நழுவி, தோணியை மெதுவாக அந்தக்கரையிலிருந்து செலுத்தி, கால் மைல் தூரம் துடுப்பு வலித்து இல்லினோய் கரையின் அருகே சென்றேன். காடுகளுக்குள் புகுந்து இரவு உணவு சமைத்தேன். அன்றைய இரவுக்கு அங்கேயே தங்கி விடலாம் என்று மனதை தயார் செய்த வேளை, ப்ளங்கட்டி பிளங் , ப்ளங்கட்டி பிளங் என்ற சத்தம் கேட்டது. குதிரைகள் வருகின்றன, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அத்துடன் மனிதர்கள் குரலும் கேட்டது. என்னுடைய எல்லாப் பொருட்களையும் தோணியில் அவசரமாக எடுத்து வைத்து விட்டு, பின்னர் மெதுவாக மரங்களின் இடையே மறைந்து நின்று அங்கே நடப்பதை காணத் தொடங்கினேன். சிறிது நேரத்திலேயே ஒரு மனிதனின் பேச்சுக்குரல் கேட்டது. அவன் கூறினான் ” இன்று இங்கு நல்ல இடம் கிடைத்தால் நாம் தங்குவது சரியாக இருக்கும். குதிரைகள் மிகவும் களைத்துள்ளன. தேடிப்பார்ப்போம்.”
நான் அதற்கு மேலும் அங்கே காத்திருக்கவில்லை. மெதுவாக நழுவி தோணியைச் செலுத்தி திரும்பவும் தீவில் உள்ள எனது பழைய இடத்தையே அடைந்தேன். அங்கேயே தூங்குவது என்றும் முடிவு கட்டினேன்.
நான் அதிகம் உறங்கவில்லை. அதிகம் சிந்தித்ததால் உறக்கம் வரவில்லை. ஒவ்வொரு முறை எழும்போதும் யாரோ என் கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்றே ஒரு கற்பனை. எனவே ஆழ்ந்த உறக்கம் இல்லை. வெகு விரைவில், இவ்வாறு தினமும் வாழ்க்கையைக் கடத்த முடியாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். என்னுடன் சேர்ந்து அந்தத் தீவில் வசிக்கும் இன்னொரு மனிதன் யார் என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். நல்லது. இந்தத் தீர்மானம் எனக்கு நிம்மதியைக் கொடுத்தது.
எனவே துடுப்பை எடுத்து கரையிலிருந்து இரண்டு மூன்று அடிகள் சென்று மறைவில் தோணியை நிறுத்தினேன். நிலா வெளிச்சத்தின் பளபளப்பால் அந்த மறைவைத்தவிர மற்ற இடங்கள் அனைத்தும் பகல் பொழுது போன்றே வெளிச்சமாகத் தென்பட்டது. மீண்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதந்து சென்றேன். அனைத்தும் மயான அமைதியில் மூழ்கி இருந்தன. அந்த சமயத்தில் நான் தீவின் பாதம் போன்ற பகுதியை அடைந்து விட்டேன்.
குளுமையான படபடக்கும் தென்றல் வீசத்தொடங்கி, அந்த இரவு முடியப் போகிறது என்று எனக்கு உணர்த்தியது. தோணியை கரையை நோக்கி நான் செலுத்தினேன். பின் எனது துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு தோணியை விட்டிறங்கி காட்டின் முனைப்பகுதிக்கு நகர்ந்தேன். ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து இலைகளுக்கு உள்ளே உற்று நோக்கினேன். நிலவு மறைந்ததால் நதியை கறுப்புக் கம்பளியால் போத்தியிருந்தது இருள். வெகு நேரம் ஆகி இருக்காது. சின்னதான ஒரு ஒளிக்கீற்று மரங்களின் மேல் தென்பட்டதை நான் கண்டேன். நேரம் நெருங்கி வருவதை நான் உணர்ந்தேன். எனவே எனது துப்பாக்கியை தயார்ப்படுத்தி அதை முன்னர் நான் பார்த்த குளிர்காயும் தீ மூட்டப்பட்ட இடத்தை நோக்கிக் குறிவைத்து நடந்தேன். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது இரண்டு நிமிடத்திற்கும் ஒரு முறை நின்று கவனித்தேன்.
சரியான இடத்தைக் கண்டு பிடிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. எனினும், சில நிமிடங்களிலேயே மரங்களின் இடையே தூரத்தில் தீ எரிவது பார்வையில் தென்பட்டது. அதை நோக்கி கவனமாகவும், மெதுவாகவும் நகர்ந்தேன். இறுதியாக அதன் பக்கத்தில் நெருங்கி சுற்றிலும் பார்க்கும் வேளை, அங்கே ஒரு மனிதன் தரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. எனக்கு ஜன்னி வந்தது போல் உணர்ந்தேன். கம்பளியால் சுற்றியிருந்த தன் தலையை அவன் தீயின் அருகே சாய்த்து வைத்திருந்தான். அவனிடம் இருந்து ஆறடித் தொலைவில் நான் ஒரு புதர்க் கூட்டத்தினிடையே அமர்ந்து, வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். வானம் சாம்பல் நிறத்தில் உருமாறி காலை வெளிச்சம் தோன்றத் தொடங்கியது அப்போது. விரைவிலேயே அவன் கொட்டாவி வீட்டுக் கொண்டு, சோம்பல் முறித்தபடி தலையில் இருந்த கம்பளியை உதறினான். அவன்…….. மிஸ். வாட்ஸனின் அடிமை ஜிம். அவனைப் பார்த்ததும் நான் ஆனந்தம் அடைந்தேன். நான் சந்தோஷத்தில் கூவினேன் “ஹல்லோ ஜிம்!” மிகுந்த குஷியில் எனது மறைவிடமான புதர்களில் இருந்து நான் துள்ளிக் குதித்து வெளியே வந்தேன்.
அவனும் துள்ளி எழுந்து என்னைக் கடுமையாக முறைத்தான். பின் முட்டி போட்டு அமர்ந்து, இருகைகளையும் குவித்து, பின் கெஞ்சியவாறு கூறினான்.
“என்னை ஏதும் செய்து விடாதே! நான் பேய்களுக்குக் கூட கெடுதல் நினைத்ததில்லை. நான் எப்போதும் இறந்தவர்களை மதித்து அவர்களுக்கு என்ன கடமையாற்றவேண்டுமோ அதைச் சரியாக செய்திருக்கிறேன். நீ உனக்குச் சொந்தமான ஆற்றுக்குள் சென்று விடு. என்னை எதுவும் செய்து விடாதே! நான், உனது ஜிம் எப்போதுமே உனது நண்பன்தான்.”
நல்லது. நான் சாகவில்லை என்று அவனுக்குப் புரிய வைக்க நெடு நேரம் பிடிக்கவில்லை. அவனைப்பார்த்ததில் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன். இனி நான் தனிமையில் வாட வேண்டியதில்லை. அவன் என்னைப்பற்றி யாரிடம் சென்று சொன்னாலும் எனக்குக் கவலையில்லை என்று கூறினேன். நானே வெகு நேரம் பேசினேன். ஆனால் அவன் அங்கே அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டிருப்பதைத்தவிர வேறு எதுவும் பேசவில்லை.
“இப்போது நன்கு பகல் வெளிச்சம் வந்துவிட்டது. மீண்டும் தீ மூட்டச் செய்யலாமே.”
நான் சொன்னேன்,
“ஸ்டராபெரிஸ் மற்றும் அது போன்றவற்றைச் சாப்பிட தீ எதுக்கு மூட்ட வேண்டும்? உன்னிடம் துப்பாக்கி உள்ளது, இல்லையா? அதை வைத்து ஸ்டராபெர்ரியை விட நல்லதாக ஏதேனும் பார்க்கலாம்.”
“ஸ்டராபெரிஸ் மற்றும் அது போன்றவை,” நான் திரும்பச்சொன்னேன் “அதைச் சாப்பிட்டுத்தான் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறாயா?”
“வேறு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை,” அவன் கூறினான்.
“ஏன்? எத்தனை காலமாக இந்தத் தீவில் நீ வாழ்கிறாய்? ஜிம்!”
“எந்த இரவு நீ கொல்லப்பட்டாயோ, அதன்பிறகுதான் நான் இங்கே வந்தேன்.”
“என்னது. அப்போதிருந்தே நீ இங்குதான் இருந்திருக்கிறாயா?”
“உண்மையில், ஆமாம்.”
“அப்போதிலிருந்தே இந்த மாதிரி உணவு தவிர வேறு ஏதும் உனக்குக் கிடைக்கவில்லையா?”
“இல்லை சார். வேறு எதுவுமே இல்லை.”
“அப்படியானால் இதுவரை நீ கொலைப்பட்டினி கிடந்த மாதிரிதான், இல்லையா?”
“ஆம். ஒரு குதிரையைக் கூட சாப்பிட்டு விடுவேன். என்னால் முடியும். நீ எவ்வளவு காலமாக இந்த் தீவில் இருக்கிறாய்?”
“எந்த இரவு நான் கொல்லப்பட்டேனோ, அப்போதிருந்து.”
“இல்லை . நீ என்ன சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய்? ஓ! உன்னிடம் துப்பாக்கி உள்ளது அல்லவா? அதுவும் நல்லதுதான். நீ எதாவது சுட்டுக் கொன்று அதை தீயில் சமைத்துச் சாப்பிடலாம்.”
நாங்கள் தோணி இருக்குமிடம் சென்றோம். அங்கே மரங்களிடையே புற்கள் சூழ்ந்த பகுதியில் அவன் தீ மூட்டிய வேளையில், நான் கொஞ்சம் மக்காச்சோள உணவு, உப்புக்கண்டமிட்ட பன்றி இறைச்சி மற்றும் கொஞ்சம் காபி எடுத்து வந்தேன். அத்துடன் காபி செய்யத் தேவையான பாத்திரம், வறுக்கத் தேவையான வாணலி, சர்க்கரை, தகரக் கோப்பைகள் ஆகியவற்றையும் கொண்டு வந்தேன். அவற்றைக் கண்ட ஜிம் ஏதோ மந்திரம் செய்து அவை அனைத்தையும் நான் பெற்றது போல நினைத்துக் கொண்டு பெரும் வியப்பிலாழ்ந்தான். ஒரு கெளுத்தி மீனை நான் பிடித்தேன். அதை வறுக்கும் முன் ஜிம் தனது கத்தியால் கிழித்துத் திறந்து சுத்தம் செய்தான்.
காலை உணவு தயாரானதும், புல்லின் மீது சௌகரியமாக அமர்ந்து கொண்டு, உணவு கொதி நிலையில் உள்ளபோதே உண்டு முடித்தோம். ஜிம் பலநாட்கள் அரைப் பட்டினி கிடந்த காரணத்தால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சாப்பிட்டான். முழு வயிற்றுக்கும் சாப்பிட முடித்ததும் ஜிம் சோம்பலுடன் சாய்ந்திருந்தான். பிறகு கேட்டான்.
“ஆனால், இங்கே பாரு ஹக்! அந்த சிறு அறையில் நீ கொல்லப்படவில்லையானால், பிறகு யார்?”
நான் அவனிடம் முழுக்கதையையும் கூறியதும் இது அறிவுப்பூர்வமான திட்டம் என்று அவன் புகழ்ந்தான். டாம் சாயர் கூட இப்படி ஒரு சிறந்த திட்டம் தீட்டமுடியாது என்றும் கூறினான்.
பிறகு நான் சொன்னேன், “நீ எதற்காக இங்கே இருக்கிறாய், ஜிம்? எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்?”
அவன் மிகுந்த தர்மசங்கடத்துடன் நெளிந்தான். ஒரு நிமிடம் ஏதும் பேசாது மௌனமாக இருந்து விட்டு பின் கூறினான்.
“நான் அதை உன்னிடம் சொல்லாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன்.”
“ஏன், ஜிம்?”
“நல்லது. எனக்கு என்று சில காரணங்கள் உண்டு. ஆனால் நான் அதை உன்னிடம் கூறினால், நீ அதை மற்றவர்களுக்கு கூறிவிடுவாயா, ஹக்?”
“அப்படிச் செய்தால் நான் நாசமாகி விடுவேன், ஜிம்!”
“நல்லது. நான் உன்னை நம்புகிறேன். நான் ஓடி வந்துவிட்டேன்.”
“ஜிம்..”
“ஆனால் ஞாபகம் வைத்துக் கொள். நீ யாருக்கும் கூறப்போவதில்லை என்று கூறியுள்ளாய். நீ அப்படி என்னிடம் சொன்னாயல்லவா, ஹக்?”
“அது சரிதான். நான் அப்படித்தான் கூறினேன். நான் சொல்லப்போவதில்லை என்று கூறினேன். நான் என் வார்தையைக் காப்பாற்றுவேன். கடவுள் சத்தியமாக நான் காப்பாற்றுவேன். மக்கள் என்னைக் கேவலமான ஒழிப்புவாதி என்று கூப்பிட்டு நான் இந்த ரகசியத்தைச் சொல்லாமல் இருந்ததற்காக வெறுப்பைக்கூட உமிழ்வார்கள். ஆனால் அதுபற்றி நான் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தப் போவதில்லை. நான் கண்டிப்பாக வெளியில் சொல்லப்போவதே இல்லை. அதுவும் அல்லாது, நான் வீட்டுக்குத் திரும்பிப் போவதாகவே இல்லை. எனவே, இப்போது அதைப் பற்றிக் கூறு.”
“நல்லது. நடந்த கதை இதுதான். பழைய முதலாளி, அதாவது மிஸ். வாட்ஸன் எப்போதும் என்னிடம் குறை கண்டுபித்து கேவலமான முறையில் என்னை நடத்துவாள். ஆனாலும், என்னை நியூ ஆர்லியன்ஸில் கண்டிப்பாக ஒரு போதும் விற்கப்போவதில்லை என்று அடிக்கடி கூறுவாள். ஆனால், அந்த சமயத்தில், அடிமைகளை விலைக்கு வாங்கி விற்கும் ஒரு வர்த்தகன் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதை நான் கவனித்தேன். அது எனக்கு மிகுந்த கவலையளித்தது. இப்படி இருக்கையில், ஒரு நாள் பின்னிரவு வேளையில், திறந்து கிடந்த கதவு வழியாக நான் எதேச்சையாக உள்ளே நுழைந்த போது, எனது முதலாளி மிஸ்.வாட்ஸன் என்னை நியூ ஆர்லியன்சுக்கு என்னை விற்கப்போவதாக அந்த விதவையிடம் கூறிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.”
“உண்மையில் அவள் என்னை விற்க விரும்பவில்லையெனினும், எண்ணூறு டாலர்கள் என்னை விற்றால் அவளுக்குக் கிடைக்கும் என்பதால் அவ்வளவு பெரிய தொகையை இழக்க அவள் விரும்பவில்லை எனவும் சொல்லிக்கொண்டிருந்தாள். அந்த விதவை அவளின் மனதை மாற்ற முயற்சி செய்தாள். ஆனால் அதற்கு மேலும் அவர்கள் பேசுவதை நான் கேட்க விரும்பவில்லை. உடனடியாக அந்த வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். இப்போது புரிகிறதா?”
“இந்தத் தீவை மனதில் நினைத்து இங்கு வந்து சேர எப்படியாவது ஊரின் மேற்புறம் உள்ள நதிக்கரையிலிருந்து ஒரு தோணி திருடி விடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மக்கள் என்னைச்சுற்றி இருந்து கொண்டே இருந்தார்கள். எனவே வங்கியின் மேற்புறம் உள்ள கிழட்டுக் கூப்பரின் கடையில் நான் மறைந்து அனைவரும் வெளியேறக் காத்திருந்தேன். அங்கே யாரவது ஒருவர் இருந்து கொண்டே இருந்ததால் இரவு முழுதும் அங்கேயே தங்க நேர்ந்தது.”
“காலை ஆறு மணி முதலே தோணிகள் பயணத்தைத் தொடங்க ஆரம்பிக்கும். எட்டு அல்லது ஒன்பது மணி அளவில் உன் அப்பா வந்து நீ கொல்லப்பட்ட விஷயத்தைக் கூறுவதை கேட்டு அனைவரும் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியாக சென்ற தோணிகளில் பெண்களும், ஆண்களும் என பலதரப்பு மக்கள் கொலையான இடத்தைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.”
“சில சமயங்களில் நதியைக் கடக்கும் முன்பே மக்கள் அவசரப்பட்டு அதைக் கரைக்குத் தள்ளினார்கள். அவர்களின் சம்பாஷணையின் மூலம் கொலையை பற்றி நானும் அறிந்து கொண்டேன். நீ கொல்லப்பட்டதை நினைத்து மிகவும் வருத்தமுற்றேன். ஆனால் இப்போது எனக்கு அந்த வருத்தம் இல்லை.”
“நாள் முழுதும் மரத்தினால் செதுக்கப்பட்ட பொருட்களுக்குக் கீழ் நான் பதுங்கிக் கொண்டேன். எனக்கு மிகவும் பசித்தாலும், நான் பயபபடவில்லை. எனது பழைய முதலாளி மிஸ்- வாட்ஸனும் ,அந்த விதவையும் காலை உணவுக்குப் பிறகு ஒரு கூட்டத்திற்குக் கலந்து கொள்ள போய் இருப்பதும், அந்த நாள் முழுதும் அவர்கள் வீடு திரும்பப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் அதிகாலை சூரிய உதயத்தின் போதே மாடுகளை ஒட்டிக்கொண்டு சென்றது அவர்களுக்குத் தெரியும். எனவே நான் அங்கே இல்லை என்பதை பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள். இரவு இருள் சூழும்வரை அவர்கள் என்னைத் தேடப்போவதில்லை. அந்த விதவையும், முதலாளியும் வெளியேறிய உடனேயே மற்ற பணியாளர்களும் அந்த நாளை விடுமுறையாக எடுத்துக் கொண்டதால், அவர்களும் என்னைத் தேடப்போவதில்லை.”
“நன்கு இருட்டியதும் நதிக்குச் செல்லும் வழியில் திருட்டுத்தனமாக இரண்டு அல்லது மூன்று மைல் அல்லது அதற்கும் மேல் கூட இருக்கும் தூரம் கடந்து எந்த வீடுகளும் இல்லாத இடத்தை அடைந்து, இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று எனது மனதைத் தயார்ப்படுத்தினேன். உனக்குத் தெரியுமா? நான் நடந்து தப்பிக்க ஆரம்பித்தால், வேட்டை நாய்கள் என் பாதையைக் கண்டுபிடித்து விடும். எப்படியாவது ஒரு தோணியைத் திருடி தப்பிக்கலாம் என்று நினைத்தாலும், தோணி தொலைந்து போனதை வைத்து நான் நதியின் அந்தக் கரையை அடைந்திருப்பேன் என்று தெரிந்து கொள்வார்கள். பிறகு, தோணியின் வழித்தடத்தை வைத்து என்னை பிடித்து விடுவார்கள். எனவே ஒரு மரப்பலகைகளால் ஆன சிறு தெப்பம் ஒன்று கிடைத்தால் அது எந்த வழித்தடத்தையும் விட்டு வைக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.”
“சீக்கிரமே அந்த இடத்தில் விளக்கு வெளிச்சம் வருவதைக் கண்டேன். எனவே நான் நீருக்குள் புகுந்து நடந்து அதில் உள்ள ஒரு மரக்கட்டையை நீந்துவதற்கு உதவி செய்வதற்காகப் பற்றிக்கொண்டேன். நதியின் பாதி வழிக்கும் மேல் நீந்திக்கடந்தேன். நதியில் மிதந்து வரும் மரப்பலகைகளுள் ஒன்றாகக் கலந்து கொண்டேன், எனது தலையை குனிந்து இருக்கும்படி வைத்துக் கொண்டு என் அருகே ஒரு தெப்பம் வரும் வரை நீரின் விசைக்கு எதிர்புறமாக நீந்தினேன். தெப்பத்தின் பின்புறமாகச் சென்று அதைப் பிடித்தேன். அந்த சமயம் மிகவும் இருட்டாகவும், மேக மூட்டமாகவும் இருந்தது. அதனால் அந்த தெப்பத்தில் நான் உள்ளே ஏறி அங்கிருந்த மரப்பலகைகளின் பின் படுத்துக் கொண்டேன். அதில் இருந்த மனிதர்கள் லாந்தர் விளக்கை தெப்பத்தின் நடுவில் வைத்து அதன் அருகில் அமர்ந்திருந்தார்கள். நதிநீரின் வரத்து அதிகமாகி நல்ல விசையும் நீரில் இருந்தது. அடுத்த நாள் அதிகாலை நான்கு மணி அளவில் நதியின் கீழ்த்திசையில் இருபத்தி ஐந்து மைல்கள் தொலைவுக்கு நான் சென்று விடுவேன் என்று கணக்கிட்டேன். பிறகு சூரிய வெளிச்சம் வரும் முன்பே நீருக்குள் நழுவி இறங்கி நீந்தி இல்லினோய் பக்கத்தில் இருக்கும் அடுத்த கரையை அடைந்து அங்குள்ள அடர்ந்த மரங்களுள் ஒளிந்து கொள்வது என்றும் முடிவெடுத்தேன்.”
“ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கவில்லை. தீவுக்கு மிக அருகாமையில் நெருங்கும் சமயம், கையில் லாந்தர் விளக்கைப் பிடித்திருந்த அந்த மனிதன் தெப்பத்தின் பின்புறமாக நான் மறைந்திருக்கும் திசை நோக்கி வரலானான். இனி அங்கே ஒளிந்து காத்திருப்பதில் பயனில்லை என்று முடிவு கட்டிய நான், தெப்பத்திலிருந்து நீருக்குள் குதித்து தீவை நோக்கி நீந்தலானேன். எங்கு வேண்டுமானாலும் நான் கரை சேரமுடியும் என்று நான் எண்ணினேன். ஆனால் அந்த இடத்தில் கரை மிகவும் ஆழமாக இருந்தது. நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடிக்கும் முன்பே தீவின் பாதத்திற்குப் பக்கம் வந்து சேர்ந்து விட்டேன். லாந்தர் விளக்கு மனிதர்கள் இருப்பதால் இனி அந்தத் தெப்பம் பற்றி யோசிப்பதில் பலனில்லை என்று நினைத்து அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் நுழைவது என்று முடிவெடுத்தேன். புகை பிடிக்கும் குழாய், புகையிலை மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை எனது தொப்பிக்குள் பத்திரமாக வைத்திருந்தேன். அவை அதிகமாக நனையாததால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக அவை இருந்தது.”
“அத்தனை நேரமும் உனக்கு ஏதேனும் இறைச்சி அல்லது ரொட்டித்துண்டுகள் சாப்பிடக் கிடைக்கவில்லையா? ஏன் உனக்கு சில மண் ஆமைகள் கிடைக்கவில்லை?”
“எனக்கு எப்படி அவைகள் கிடைக்கும்? திருட்டுத்தனமாக ஒளிந்து கொண்டிருக்கையில் அவற்றை எப்படிப் பிடிப்பது? அப்படியே பிடித்தாலும், அவற்றின் ஓடுகளை உடைக்க எங்கே போவது? ஒரு பாறைக்கு? இரவு நேரத்தில் யார்தான் அப்படிச் செய்ய முடியும்? பகல் நேரத்திலும் வெளிச்சத்தில் என்னை மற்றவர்கள் காணும்படி நான் கரையில் நடமாட இயலாது.”
“ஆம். அதுவும் உண்மைதான். முழுக்க முழுக்க நீ காட்டிலேயேதான் மறைந்து வாழ வேண்டியிருந்திருக்கும். அவர்கள் பீரங்கி குண்டுகளை வெடிப்பது உனக்குக் கேட்டதா?”
“ஓ! ஆமாம்! அவர்கள் உன்னைத்தேடித்தான் வருகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் இந்த வழியாகச் செல்லுவதை நான் கண்டேன். புதர்களின் இடையே மறைந்திருந்து அவர்களைக் கண்காணித்தேன்.”
சில இளம் பறவைகள் மரக்கிளைகளின் மீது வந்து இறங்கும் முன் ஒன்று அல்லது இரண்டு கஜ இடைவெளியில் ஒன்றாகப் பறந்து வந்தன. மழை வரப்போவதற்கான அடையாளம் அது என்று ஜிம் கூறினான். இளம் கோழிக் குஞ்சுகள் இந்த மாதிரி பறந்தாலும் அதுவும் இதே அடையாளம் என்றும் அதே மாதிரி விஷயம் இந்தப் பறவைகளுக்கும் பொருந்தும் என்று ஜிம் மேலும் கூறினான்.
நான் அவற்றில் சிலவற்றைப் பிடிக்க நினைத்தேன். ஆனால் ஜிம் அதற்கு அனுமதிக்கவில்லை. அந்தச் செயல் சாவை மட்டுமே கொணர்ந்து சேர்க்கும் என்றான். அuவனின் அப்பா ஒருமுறை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் சிலர் அந்தப் பறவைகளுள் சிலவற்றைப் பிடித்திருக்கிறார்கள். இந்தச் செயலால் ஜிம்மின் அப்பா இறக்க நேரிடும் என்று ஜிம்மின் பாட்டி கூறியது போலவே நடந்திருக்கிறது.
இரவு உணவுக்கு நீங்கள் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களை எண்ணுவது கூட உங்களுக்கு துரதிஷ்டம் சேர்க்கும் என்றும் மேலும் ஜிம் கூறினான். அதே மாதிரியான கெட்ட விஷயம் மேசைவிரிப்பை சூரியன் மறைந்தபின் உதறிப் போட்டாலும் நடக்கும். தேனீக்கூட்டம் வளர்க்கும் ஒரு மனிதன் இறந்து விட்டால், அந்தத் தேனீக்களுக்கு அடுத்த நாள் காலை சூரியன் உதிக்கும்முன்பே அந்த விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்றுகூட ஜிம் கூறினான். இல்லாவிடில், அந்தத் தேனீக்கள் அனைத்தும் பலமிழந்து, தங்களின் வேலைகளை உதறிவிட்டு இறந்து விடுமாம். தேனீக்கள் முட்டாள்களைக் கடிக்காது என்று மேலும் ஒரு தகவல் சொன்னான். ஆனால் அதை நான் நம்பத்தயாராக இல்லை. ஏனெனில் நான் பலமுறை தேனீக்களுடன் நன்கு விளையாடி இருந்தாலும், அவை ஒருபோதும் என்னைக் கடித்ததில்லை.
நான் இவ்வாறான மூட நம்பிக்கைகளை அதிக அளவில் கேள்விப்பட்டிருந்தாலும், அனைத்தையும் கேட்டதில்லை. ஜிம்முக்கு அனைத்து வகையான சகுனங்களைப் பற்றியும் நல்ல அறிவு இருந்தது. அதைப்பற்றி எல்லாமே அவனுக்குத் தெரியும் என்று கூறினான். எனக்குத் தெரிந்தவரை அனைத்து சகுனங்களுமே துரதிஷ்டம் மட்டுமே கொண்டு வருகிறது என்று சொன்னேன். எனவே அவனிடம் அதிர்ஷ்டம் கொண்டு வரும் சகுனங்கள் ஏதேனும் உண்டா என்று வினவினேன். அவனும் பதில் கூறினான்.
“கொஞ்சம் மட்டுமே இருக்கிறது. ஆனால் அது யாருக்கும் பிரயோசனப்படாது. எதற்கு அதிர்ஷ்டம் எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாய்? அதனால் அதைத் தள்ளி வைக்கவா?”
பிறகு தொடர்ந்தான் “உனது கரங்களிலும், மார்பிலும் அதிக ரோமங்கள் இருந்தால், நீ மிகவும் பணக்காரனாகப் போகிறாய் என்பது அடையாளம். நல்லது. எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உனக்குக் கொடுக்க .அந்த மாதிரி அடையாளங்கள் கொஞ்சம் பயன்படும். அதனால் முதலில் நீ ஏழையாக இருக்கவேண்டிஇருந்தாலும், கூடிய விரைவில் நீ பணக்காரன் ஆகிவிடுவாய் என்று உனக்குத் தெரிந்து விடும். அது நீ மனம் உடைந்து போவதிலிருந்தும், தற்கொலை செய்துகொள்வதிலிருந்தும் உன்னைப் பாதுகாக்கும்.”
“உன்னுடைய கரங்களிலும், மார்பிலும் ரோமங்கள் அதிகம் உள்ளதா ஜிம்?”
“எதற்கு இந்தக் கேள்வி? என்னைப்போலவே நீயும் பார்க்க முடிகிறதுதானே?”
“ஆம். அப்படியானால் நீ பணக்காரனா?”
“இல்லை. ஆனால் ஒரு காலத்தில் நான் பணக்காரன். வரப்போகும் காலத்திலும் நான் செல்வந்தன் ஆகப்போகிறவன்தான். ஒரு சமயம் என்னிடம் பதினாலு டாலர்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தையும் நான் மோசமான முதலீடுகளில் தொலைத்து விட்டேன்.”
“அப்படி எதில் முதலீடு செய்தாய், ஜிம்?”
“முதலில் நான் சில பங்குகள் வாங்கினேன்.”
“என்ன மாதிரியான பங்குகள்?”
“உயிருள்ள பங்குகள் – கால்நடைகள். பத்து டாலர்கள் கொடுத்து ஒரு பசு மாடு வாங்கினேன். ஆனால் இனியும் பணம் கொடுத்து பங்குகள் வாங்கும் அபாயத்தை நான் செய்யப்போவதாக இல்லை. வளர்ந்து வந்த பசு எனது கரத்திலேயே மடிந்தும் விட்டது.”
“அப்படியானால் பத்து டாலர்களை இழந்து விட்டாயா?”
“இல்லை. அனைத்தையும் இழக்கவில்லை. ஒன்பது டாலர்கள் மட்டுமே இழந்தேன். பசுவின் தோல், ரோமங்கள் மற்றும் வால் இவற்றை விற்று ஒரு டாலரும் பத்து செண்டுகளும் பெற்றேன்.”
“எனில் உன்னிடம் ஐந்து டாலரும் பத்து செண்டும் மீதம் இருந்தன. அந்தப் பணத்தை அதன் பின் எதிலாவது முதலீடு செய்தாயா?”
“ஆம். உனக்கு அந்த வயதான மிஸ்டர் ப்ரடீஸ் இடம் வேலை பார்த்த ஒரு கால் மட்டுமே உள்ள கறுப்பன் தெரியும் தானே? நல்லது. அவன் ஒரு வங்கி ஆரம்பித்து யாரெல்லாம் ஒரு டாலர் முதலீடு செய்தாலும், அவர்களுக்கு வருட முடிவில் நான்கு டாலர்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நல்லது. எல்லா கறுப்பினத்தவர்களும் அவர்களிடம் அதிகம் இல்லையென்றாலும், இருந்த பணம் முழுதும் வங்கியில் செலுத்தினார்கள். என்னிடம் மட்டும்தான் அதிகப் பணம் இருந்தது. எனவே நான் இன்னும் கொஞ்சம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, எனக்கு நாலு டாலருக்கு மேல் அதிகம் கொடுக்கச் சம்மதிக்கவில்லையென்றால், நானே புதிதாக ஒரு வங்கி தொடங்கிவிடுவேன் என்று அவனிடம் கூறினேன். உண்மையில் அந்த கறுப்பனுக்கு இரண்டு வங்கிகள் உருவாவதில் விருப்பம் இல்லை என்பதாலும் நான் வணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும் நினைத்து, என்னிடம் நான் ஐந்து டாலர்கள் வங்கியில் செலுத்தினால், வருட முடிவில் அவன் எனக்கு முப்பத்தைந்து டாலர்கள் தருவதாக உறுதியளித்தான்.”
“அவ்வாறே நானும் செய்தேன். முப்பத்தைந்து டாலர்கள் கிடைத்தால் அதை வைத்து நிறைய விஷயங்கள் செய்யலாம் என்று நான் யோசித்திருந்தேன். அங்கே ஒரு பாப் என்ற பெயர் கொண்ட கறுப்பன் அவனின் முதலாளிக்குத் தெரியாமல் நதியில் இருக்கும் ஒரு மரவீடு வாங்கினான். நான் அவனிடமிருந்து அதை வாங்கி, வருடக் கடைசியில் முப்பத்தைந்து டாலர்கள் அவனுக்குத் தருவதாகக் கூறினேன். ஆனால் அந்த மரவீட்டை யாரோ அந்த இரவு திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். மறு நாள் அந்த ஒற்றைக்கால் கறுப்பனும் வங்கி திவாலாகிவிட்டதாகக் கூறினான், அதனால் அதில் பணம் செலுத்திய யாருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.”
“மீதம் இருந்த பத்து செண்டுகளை என்ன செய்தாய், ஜிம்?”
“நல்லது. அதை நான் செலவழிக்கலாம் என்று நினைத்த வேளை, எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அந்தக் காசுகளை பேலம் என்ற பெயர் கொண்ட ஒரு கறுப்பனுக்குக் கொடுக்கச் சொல்லி அந்த கனவு கூறியது. தெரியுமா? அவன் ஒரு அடிமுட்டாள் என்பதால் அவனது செல்லப்பெயர் பேலம் கழுதை என்பதாகும். அனைவரும் அவன் ஒரு அதிர்ஷ்டக்காரன் என்று கூறினார்கள். ஆனால் எனக்குத் தெரியும் அவன் கண்டிப்பாக அதிர்ஷ்டக்காரன் அல்ல என்று. பேலம் எனக்காக அந்த பத்து செண்டுகளை முதலீடு செய்தால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று என் கனவு கூறியது. ஏழைகளுக்குப் பணம் யார் கடன் கொடுக்கிறார்களோ அது கடவுளுக்குக் கொடுப்பதற்குச் சமம் என்றும் அவர்களுக்கு அந்தப் பணம் நூறு மடங்காய்த் திரும்பி வரும் என்றும் யாரோ ஒரு பாதிரியார் சொன்னதைக் கேட்டு பேலம் அந்த பத்து செண்டுகளை தானம் கொடுத்துவிட்டு என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.”
“அப்புறம் என்ன நடந்தது, ஜிம்?”
“ஒன்றும் இல்லை. தானம் கொடுத்தவர்களிடமிருந்து பேலம் பணத்தை வாங்க முடியவில்லை. என்னாலும் திரும்பப் பெறமுடியவில்லை. பாதுகாப்பாக இருக்கும் என்றாலொழிய இனி நான் ஒருபோதும் யாருக்கும் பணம் கடன் கொடுக்கப் போவதில்லை. நூறு மடங்கு திரும்பி வரும் என்று அந்த பாதிரி கூறினாராம். பத்து செண்டு திரும்ப வந்திருந்தால்கூட நான் மிகவும் சந்தோசம் அடைந்து நம்பிக்கை கொண்டிருந்திருப்பேன்.”
“பரவாயில்லை. கவலையை விடு. ஜிம்! எப்படி இருந்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் நீ மறுபடியும் பணக்காரன் ஆகத்தானே போகிறாய்.”
“ஆம். நினைத்துப் பார்த்தால், இப்போதே நான் ஒரு செல்வந்தன்தான். நானே எனக்கு முதலாளி. நான் எண்ணூறு டாலர் மதிப்புள்ளவன். எனக்கு மட்டும் அந்தப்பணம் இருந்திருக்க வேண்டும். பின் என் வாழ்வில் எப்போதுமே வேறு எதுவுமே எனக்குத்தேவைப்படாது.”
கோடாரியை கையில் எடுத்து ஒரே போடாகப் போட்டு கதவைத் துண்டுதுண்டாக உடைத்தேன். அந்த பன்றியை சுமந்து வந்து அறையில் உள்ள மேசையின் பக்கத்தில் வைத்து, அதனின் கழுத்தை கோடாரி கொண்டு அறுத்தேன். பின்னர் அதைக் கீழே கட்டாந்தரையில் கிடத்தி- தரை எந்தப்பலகையாலும் மூடப்படாது முற்றிலும் குப்பைகளால் நிரம்பி இருந்தது–அதன் ரத்தம் முழுதும் கீழே தரையில் வெளிவரும்படி செய்தேன். பின்னர் ஒரு பழைய சாக்கை எடுத்து அதை அந்த பன்றியின் அருகில் வைத்து, அதில் என்னால் தூக்க முடிந்த அளவிலான சிறு சிறு கற்பாறைகளை முழுதும் போட்டு நிரப்பினேன். பின்னர் அந்த சாக்கை பன்றியைத்தாண்டி அறையினுள்ளே இருந்து கதவு வழியாக வெளியே இழுத்து வந்து நதிக்குக்கொண்டு செல்லும் காட்டுப்பாதை வழியாக இழுத்துச் சென்று நதிக்குள் வீசி அது உள்ளே மூழ்கி கண்ணில் இருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
ஏதோ ஒன்றைத் தரையில் ரத்தத்துடன் குறுக்காக இழுத்துப்போன தடயத்தை நான் அவ்வாறு செய்து முடித்ததும் நீங்கள் சுலபமாகக் காண முடியும். டாம் சாயர் மட்டும் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏனெனில் அவன் இந்த மாதிரியான என்னுடைய திட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டி முடிவாக்கச் சரிபார்ப்புகளை கச்சிதமாகச் செய்து முடித்திருப்பான் என்று எனக்குத் தெரியும். சிறு சிறு விவரங்களைக் கையாளுவதில் டாம் சாயரை விடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.
இறுதியாக என்னுடைய தலைமுடிக் கற்றைகள் சிலவற்றை இழுத்து எடுத்து, கோடாரியின் பின்புறத்தில் பன்றியின் ரத்தத்தில் தோய்த்து எடுத்து ஒட்டவைத்தேன். பின்னர் அந்தக் கோடாரியை அந்த அறையின் மூலையில் வைத்தேன். அந்த பன்றியை எடுத்து அந்த ரத்தம் சிந்தாமல் எனது மேல்ச்சட்டையுடன் வைத்து மார்போடு அணைத்து வீட்டிலிருந்து வெளியேறி சரியான இடம் பார்த்து நீரில் அதை வீசி மூழ்கடித்தேன்.
பிறகு எனக்கு வேறு ஏதோ மனதில் உதித்தது. எனவே திரும்பவும் தோணிக்குச் சென்று அந்த மக்காச்சோளமாவு மூட்டை மற்றும் ரம்பம் ஆகியவற்றை எடுத்தேன். மக்காச்சோள மாவுமூட்டையை அறையில் அதன் இடத்திலேயே வைத்தேன். ரம்பம் கொண்டு அந்தச் சாக்கின் கீழ்ப்பகுதியில் ஒரு ஒட்டையைப் போட்டேன். எந்தவிதமான கத்தி, ஃபோர்க் ஆகியவை அங்கே இல்லாததுதான் நான் ரம்பத்தைப் பயன்படுத்தியற்குக்காரணம். அப்பா பொதுவாக பேனாக்கத்தியைத்தான் தன் சமையலுக்குப் பயன்படுத்துவார்.
பிறகு அந்த சாக்கை ஒரு நூறு அடித்தூரம் புல்வெளியின் மீது இழுத்துக் கொண்டு வில்லோ மரங்களுக்கிடையில் வீட்டின் கிழக்கு மூலையில் உள்ள ஆழமற்ற ஏரிவரை கொண்டு சென்றேன். ஐந்து மைல் அளவில் பரந்து விரிந்த ஏரியில் அதிகம் நாணல்களும் சீசன் சமயங்களில் வாத்துக்களும் நிறைந்திருக்கும். ஏரியின் இன்னொரு புறம் பல மைல்களுக்கு இட்டுச்செல்லும் சதுப்புநிலத்தேக்கம் அல்லது ஒரு சிற்றோடை அமைந்திருந்தது. அது எங்கே செல்கிறது என்று எனக்கு சரியாகத் [தொடரும்]
மொழிபெயர்ப்பாளர் பற்றி…
– முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –
akilmohanrs@yahoo.co.in