சுதந்திரன் ஜுலை 8, 1951; கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? “பெண்ணடிமையின்” சிகரம் என்பதே சாலப்பொருந்தும்! மன்னனின் தவறுக்காக மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்திய கொடுமை. புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சி!

[அறிஞர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் பத்திரிகையில் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் சிலப்பதிகாரத்தை விமர்சிக்கும் இந்தக் கட்டுரையினை ஜுலை 8, 1951 அன்று வெளியான சுந்திரனில் எழுதினார். இந்தக் கட்டுரை மிகுந்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது. அவற்றையும் சுதந்திரன் பிரசுரித்திருந்தது. பின்னர் இவற்றுக்கெல்லாம் பண்டிதர் திருமலைராயர் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக பண்டிதர் திருமலைராயரின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். இக்கட்டுரைகள் தமிழகத்தில் பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறிகின்றோம். இதுபற்றிய ஆதாரங்களைத் தமிழகத்திலுள்ளவர்கள் யாராவது அறிந்திருந்தால் அறியத்தரவும். எமது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com – பதிவுகள்-]


– இது ஒரு புரட்சிகரமான கட்டுரை. பழமையில் ஊறியவர்களுக்குப் பதட்டத்தைக் கொடுக்கக்கூடிய கருத்துகள் நிறைந்தது.  எனினும் பிரசுரிக்கிறோம் கட்டுரை தர்க்கரீதியாக எழுதப்பட்டிருப்பதால்.  சிலப்பதிகாரத்தின் தலைவியாகிய கண்ணகி தமிழ்ப்பெண்மையின் சிறப்புக்கு உதாரணமாக இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகிறாள்.  சிற்சில பகுதிகளில் கண்ணகி சிலைவடித்து  தேவஜையாகவும் பூஜிக்கப்படுகிறாள். ஆனால் “அவள் பெண்மையின் உயர்வைக் காட்டவில்லை. பெண்ணடிமைத்தனத்தின் அதளபாதாளத்தை நமக்கு அறிவுறுத்துகிறாள்” என்று வாதிக்கிறார் நமது கட்டுரையாளர் பண்டிதர் திருமலைராயர்.  துணிகரமான அவர் கருத்துகளுக்கு அவரேதாம் பொறுப்பாளர்  என்பதை வாசகநேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். – சுதந்திரன் –


உண்மை கசப்பானதுதான். ஆனால் அதை எவராவது கூறித்தான் ஆகவேண்டும். – ஒரு அறிஞர்

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெண்ணினம் ஆணினத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து வந்திருக்கிறது.  ஆண்களின் விளையாட்டுப் பொருட்களாகவும், வேலை செய்யும் ஏவலாளராகவும்,  சமைத்துப்போடும் சமையற்காரிகளாகவும், பிள்ளைபெறும் யந்திரங்களாகவும் பெண்கள் விளங்கி வந்திருக்கிறார்கள்.

முதலில் ஆண்கள் தங்கள் அதிகரித்த பலத்தைக்கொண்டும், பெண்ணுக்குத் தாய்மையால் ஏற்படும் தவிர்க்கவொண்ணாத பலவீனத்தைத் துணையாகப்பெற்றும்,  தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.  இவ்வுலகையே ஆணின் உலகமாகவும் ஆக்கிவிட்டார்கள் அவர்கள்.

ஆதியில் பெண்களுக்கு கால் கைகளில் விலங்குகள் இடப்பட்டதுமுண்டு.  இவையே பின்னாள் பொற்காப்பாகவும், காற்சிலம்பாகவும் மாறியது என்று பரிணாம நாகரிகத்துறையில் ஆராய்ந்த மேல்நாட்டு அறிஞர்கள் அனுமானித்திருக்கிறார்கள்.

இது மனிதன் மிருகபலத்திலே நம்பிக்கொண்டிருந்த காலத்தின் நடைமுறை. பின்னால் நிலைமை மாறியது.

மனிதன் – அதாவது ஆண் – அறிவுத்துறையிலே முன்னேறினான். புத்தியைத் தீட்டி புது வழிகளை வகுத்தான்.  மொழியும் கலையும் கண்டான்.  கவிதை, சிற்பம், மதம் எல்லாம் உண்டாகின.

கற்பா அடிமைப் புத்தியா?

பெண்களின் அடிமைப் புத்தியை வளர்க்க வேண்டும் என்று  அதற்கான பிரச்சார வித்தையை மேற்கொண்டது ஆணுலகம்.  “பெண்களுக்குக் கற்பே அணிகலன். அதனை அணிந்து கொள்ளுங்கள். கற்பரசிகளால் ஆகாதது ஒன்றுமில்லை. கடவுளைக்கூட கும்பிட வேண்டாம். கணவனைக் கும்பிடுங்கள்.  வெய்யில் எரிக்கட்டும் என்று பதிவிரதை பகர்ந்தால் நள்ளிரவிலும் பட்டப்பகல்போல் வெயில் எரிக்கும்!”  இந்தத் தோரணையில் இருந்தது இந்தப் பிரச்சாரம்.

பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். பெண்கள் இந்தப் பதிவிரதைத் தன்மை, கற்பு என்ற கதைகளிலே முற்றாக மயங்கிவிட்டதோடு அந்த இயற்கைக்கு மாறான பாதையிலே தங்கள் வாழ்க்கையை  நடத்தவும்  ஆரம்பித்தார்கள்.  உண்மையிலே சரித்திரத்திலே பல மோசடிகள் அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிறதென்றாலும், ஆண் பெண்ணை ஏமாற்றக் கண்டுபிடித்த  காதல், கற்பு என்னும் இம்மோசடிக்கு ஈடாக வேறு எதையுமே கூறிவிடமுடியாது.

நாலுகால் பிராணிகளுள்ளே நாய் நன்றி விசுவாசம் நிறைந்தது என்று கூறப்படுகிறது. இந்தப் பிராணி உதைத்த காலை முத்தமிடுவதை நாம் காணலாம்.  நன்றி விசுவாசத்திலும் பார்க்க அடிமைப் புத்தியின் தடிப்பு இந்தச் செய்கையில்  இருக்கிறதென்று கூறினால் அது அதிகம் பொருந்தும்.

அடிமைப் புத்தியை விசுவாச உணர்ச்சி என்று  பூசி மெழுகிய கூட்டத்தினர்தான் அடிமைப் புத்தி தடிந்த ஏமாந்த பெண்களை, தன்மானமற்ற்று தமது கணவர்களின் காலுதையையும் பொறுத்து வாழ்ந்த கோழைப்பெண்களை கற்பரசிகள், பதிவிரதைகள், பத்தினிகள் என்று கூறி ஏமாற்றினார்கள். அதன் மூலம் இதர பெண்களையும் என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள்.

சிலப்பதிகாரத்தில்வரும் கோவலன் மனைவி கண்ணகி இந்தப் பெண் அடிமைத்தனத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு.  அவளிடம் காணப்படும் கற்புணர்ச்சியை நாயிடம் காணப்படும் நன்றி  விசுவாசத்துக்கே ஒப்பிட வேண்டும்.  அந்தப் பாத்திரத்தை ஆக்கிய இளங்கோவடிகள் பெண்ணினத்தின்மீது ஆணினத்தின் பிடியை மேலும் இறுகச் செய்வதற்கே அதனைச் சமைத்ததோடு பெண்கள் இந்தப்  பத்தினித் தெய்வத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஒழுகவேண்டும் என்று விரும்புவதும் நன்கு தெரிகிறது.

கண்ணகியின் பண்புகள் யாவை?  கண்ணகி என்ற இப்பெண் எப்படிப்பட்டவள்?

கணவன் வேசி வீடே சதமெனக்கிடந்தான். தன் கைப்பொருள் யாவற்றையும்  இழந்து ஒட்டாண்டியுமானான் கோவலன்.  அதன் பயனாக வறுமையுற்ற அவன் வீடு வருகிறான்.  அவள் எதிர்கொண்டு வரவேற்கிறாள்.  பின் அவனுடன் தன் நாடுவிட்டு மதுரை மாநகருக்குச் செல்கிறாள். கோவலன் தன் சாமர்த்தியமான பேச்சினால் அவளை மயக்கிவிடுகிறான்.  கண்ணகி தனது சிலம்பையும் அவனுக்குத் தர அவன் அதை விற்றுப பணமாக்க முயல்கிறான்.  அப்பொழுது அச்சிலம்பின் வெளித்தோற்றத்தின் ஒற்றுமையைக் கண்டு  பாண்டிய மன்னன் அவனைத் தனது தேவியின் சிலம்பைக் கவர்ந்த கள்வனென எண்ணி நாட்டு வழக்கப்படி மரண தண்டனை விதிக்கிறான்.  கண்ணகி இதை அறிந்து வெகுண்டெழுந்து ஒன்றுமறியாத மதுரை மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்துகிறாள். அவளுக்கு இப்பணியில் உதவ வந்த அக்கினியிடம் பார்ப்பாரைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவு வேறு பிறப்பித்துவிடுகிறாள்.

இந்தச் செய்கைகளின் அடிப்படையில் கண்ணகியிடம் மூன்று பண்புகள் உயர்ந்து நிற்பதை நாம் காண்கிறோம். அவையாவன ஒன்று முன்னே கூறிய கற்பென்னும் ஏமாளித்தனம்.

இரண்டாவதாக மன்னனின் தவறால் நேர்நத ஒரு பிழைக்காக குற்றமற்ற மதுரைப் பொதுமக்களை நெருப்பினால் கொழுத்திய கொடுமையைக் காண்கிறோம்.

மூன்றாவதாக நாம் காண்பது பார்ப்பார ஜாதியினரை நீக்கி மற்றவர்களை நீறாக்கிய பாரபட்ச நீதி.

இந்த மூன்று சிறப்பற்ற பண்புகளும் பொருந்தியவள்தான் கண்ணகி. இவளைத் தமிழ்ப் பெண்மையின் உயர்வுக்கு எடுத்துக் காட்டெனச் சில கூறுவது பொருந்தா வாதமே. இழிவுக்கே இவள் உதாரணமாகக் கூடும்.

ஆனால் இன்று கண்ணகியைப் பெண்மையின் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டுபவர் எல்லோரும் பிற்போக்குவாதிகள் என்று பெயர் வேண்டிக்கொண்ட பேர்வழிகளல்ல; பகுத்தறிவுவாதிகள். தன்மான இயக்கத்தினர் சிலரும் கண்ணகியைப் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.  ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் ஒழிக்கக் கங்கணம் கட்டிநிற்கும் திராவிடச்சிங்கங்கள்கூட கண்ணகி தமிழச்சி என்று கூறுகிறார்கள்.  ஆனால் பார்ப்பனர்களைக் கொல்லாதே என்று அக்கினி தேவனுக்குக் கட்டளையிட்ட தமிழச்சி அவள் என்பதை அவர்களில் பலர் அறிய மாட்டார்கள்.  அறிந்தவர்கள் பூசி மெழுகுகிறார்கள்போலும்.

நன்றி: சுதந்திரன் ஜூலை7, 1951