சர்வதேச மகளிர் தினம் மார்ச் – 8: பத்திரிகைத்துறையில் ஓர் சாதனை மாது…

எழுத்தாளர் யாழ்நங்கை (அன்னலட்சுமி ராஜதுரை)சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து வருடங்களுக்கு முன்பு (2000) ‘ஞாயிறு தினக்குரல்” பத்திரிகையில் தோழர் ‘பாரதிநேசன்” வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்” என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன். அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோமினம்மா டானியல் ஆகிய மாதரசிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இம்மாதரசிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல்துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலேயே யானும் மேடையேறத் தொடங்கினேன். அறுபதுகளின் முற்பகுதியிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.

அந்தக் காலம் முதல் இன்றுவரை எழுத்துத்துறையில் குறமகள், யாழ்நங்கை – அன்னலட்சுமி இராஜதுரை, புதுமைப்பிரியை – பத்மா சோமகாந்தன், ந. பாலேஸ்வரி, சிதம்பரபத்தினி, குந்தவை – சடாட்சரதேவி, பவானி ஆழ்வாப்பிள்ளை, ரூபராணி யோசேப், இராஜம் புஸ்பவனம், தமிழ்ப்பிரியா, யோகா பாலச்சந்திரன், அருண் விஜயராணி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மண்டைதீவு கலைச்செல்வி, கோகிலா மகேந்திரன், சௌமினி, மண்டூர் அசோகா, சிவமலர் செல்லத்துரை, தாமரைச்செல்வி, ஆதிலட்சுமி இராசதுரை, நயிமா சித்திக், சந்திரா தியாகராசா, சந்திரா தனபாலசிங்கம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சிவயோகமலர் ஜெயக்குமார், ஆனந்தி, கவிதா, கெக்கிராவ ஸகானா, ராணி சீதரன் ஆகியோருட்படப் பல பெண் எழுத்தாளர்களை அறிந்திருக்கிறேன். அவர்களில் ஒரு மூத்த பெண் படைப்பாளி பத்திரிகைத்துறையில் 48 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருவது உண்மையில் மெச்சத்தக்க சாதனையாகும். ஆமாம்… அவர் தான் யாழ்நங்கை என்ற பெயரில் அன்றுதொட்டுப் பல படைப்புகளைத்தரும் மூத்த பெண் படைப்பாளி அன்னலட்சுமி இராஜதுரை.

அன்னலட்சுமி ராஜதுரைஇன்று எத்தனையோ இளம்பெண்கள் சிறந்த படைப்பாளிகளாக, பத்திரிகையாளர்களாக விளங்குகிறார்கள். சர்ச்சைக்குரிய விடயங்களையும் துணிச்சலோடு எழுதுகிறார்கள். பெண்ணியம் பேசுகிறார்கள். ஆனால் அன்று ஒரு இளம்பெண் படைப்பாளியாக விளங்கியதோடு, துணிச்சலோடு பத்திரிகைத்துறையைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டு பணிபுரிய முன்வந்தமை முற்போக்கானதும் பாராட்டுக்குரியதுமாகும். 1959 -ம் ஆண்டு ‘கலைச்செல்வி” சஞ்சிகை இவரை இளம் எழுத்தாளர் என அறிமுகப்படுத்தியது. 1962-ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டவர். ஓவியத்துறையிலும் ஆசிரியர் தரரதரப் பத்திரம் பெற்றுக்கொண்டவரென அறியமுடிகிறது. சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் என எழுத்துத்துறையில் தடம்பதித்தார். கலைச்செல்வி, சிரித்திரன், வீரகேசரி மற்றும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கை வானொலியில் மகளிர் நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்.
நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி), உள்ளத்தின் கதவுகள் (நாவல்), விழிச்சுடர் (குறுநாவல்) இருபக்கங்கள் (கவிதைத் தொகுதி) என்பன இவரது படைப்புகளாகும்.

மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதிப் பாராட்டுப் பெற்றார். இவரது பணிகளைப் பாராட்டி இந்துக் கலாசார அமைச்சு 1992 -ம் ஆண்டு ‘தமிழ்மணி” விருது வழங்கிக் கௌரவித்தது.
சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993 -ம் ஆண்டு எஸ்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, அன்றைய ஜனாதிபதி டி. பி. விஜயதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கௌரவித்தது.  கொழும்பு தமிழ் இளைஞர் கலாசாரக் கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், கொழும்பு கலைச்சங்கம் என்பனவும் இவரது பணிகளைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன. மல்லிகை சஞ்சிகை அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்து, இலக்கிய வரலாற்றில் பெருமை சேர்த்தது. இலங்கை எங்கும் நடைபெறும் பல்வேறு மகளிர் நிகழ்ச்சிகள், இலக்கியக் கருத்தரங்குகள், உரையரங்குகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள் யாவற்றிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றார்.

கட்டுரையாளர் இளங்கோவன் அன்னலட்சுமி ராஜதுரையுடன்..

சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை என அனைத்திலும் சிறப்புற்று விளங்கும் இவருக்குக் கணவர் திரு இராஜதுரை உறுதுணையாக என்றும் உதவிவருவது முன்மாதிரியானதாகும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வீரகேசரி நிருபராக நியமனம் பெற்ற யான், அன்று வீரகேசரி நிருபர்களுக்கான கருத்தரங்கு – ஒன்றுகூடலுக்கென அங்கு செல்லும்போதெல்லாம் இவரைப் பார்த்திருக்கிறேன் பேசியிருக்கிறேன். இலக்கியக் கூட்டங்களிலும், வானொலியிலும் அவரது குரலைக் கேட்டுள்ளேன்.

பத்திரிகை அலுவலகத்தில் மிக அமைதியாகத் தனது பணியில் மூழ்கியிருப்பார். கதைத்தால் புன்முறுவலோடு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வார்.
தற்போது, வீரகேசரி நிறுவனம் வெளியிடும் ‘கலைக்கேசரி” சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றுகிறார். கலைக்கேசரியைத் தொடர்ந்து பெற்று வருகிறேன். வடிவமைப்பிலும், விடயதானங்களின்  உள்ளடக்கத்திலும் கனதியான, அழகான சஞ்சிகையாகக், கலாசாரப் பண்பாட்டு, ஆய்வு இதழாக கலைக்கேசரி வெளிவந்து இவரது ஆளுமையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில்கூட இத்தகைய இதழ் வெளிவருவதில்லை.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில், பல வருடங்களுக்குப் பின் இவரைச் சந்தித்தேன்.  ‘சிற்றிதழ்கள்” அரங்கில் கட்டுரை சமர்ப்பித்துப் பேசுவதற்காக இருந்தேன். ஆரம்பமாக ஒரு சில நிமிடங்களேயிருந்தன. முன்வரிசையில் இவர் அமர்ந்திருந்தார். அருகில் சென்று வணக்கம் சொன்னேன்.

‘இளங்கோவன் எப்படி? பிரான்ஸ் நாட்டில் இருக்கிறாய்.. இல்லையா? முன்னர் மெல்லிய ஆளாக.. அழகாக.. இருந்தாய்… இப்ப.. என்ன.. இப்படி..? என்றார்.
‘வெளிநாட்டுச் சுவாத்தியம்… … வயதும் அறுபதாகிறது…” என்றேன். ‘அப்படியா…” புன்னகைத்தார். ‘நல்லாயிரு… ..” என்று தாயுள்ளத்தோடு வாழ்த்தினார். மனது குளிர்ந்தது. அப்பால் நகர்ந்து மேடைக்குச் சென்றேன். சிறந்த பெண் படைப்பாளியாகப், பத்திரிகையாளராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்துவரும், பெண்ணினத்துக்குப் பெருமை சேர்க்கும் அந்தத் தாய் அன்னலட்சுமி இராஜதுரை மேலும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பணிபுரியப் புலம்பெயர்ந்து வாழும் நாமும் வாழ்த்துவோமாக… ..!

thambirajah elangovan <vtelangovan@yahoo.fr>