8-ம் அத்தியாயம் சுய உருவில் ஸ்ரீதர்
[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]
பாரதக் கதையிலே பாண்டவர்கள் யாவரும் ஒரு வருஷம் அஞ்ஞாதவாசம் சென்றதாகவும், அக்காலத்திலே அவர்கள் தமது பெயரையும் உருவையும் மாற்றி விராட தேசத்திலே மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. துரியோதனாதியரிடம் சூதிலே தோற்ற பாண்டவர்களில் மூத்தவராகிய தர்மபுத்திரன், தானும் தம்பியரும் மனைவி திரெளபதியுடன் பன்னிரண்டு வருட காலம் வன வாசமும், பதின்மூன்றாம் வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய ஒப்புக் கொண்டு அவ்வொப்பத்திற்குச் சிறிதும் பிழையில்லாமல் நிறைவேற்றியதாகவும் பாரதக் கதை கூறுகிறது. பதின்மூன்றாம் வருடத்தின் கடைசி நாளும் கழிந்து பதினான்காம் வருடத் தொடக்க நாளில் பாண்டவர்கள் என்ன நிலையில் இருந்திருப்பார்கள்? பத்மா வீட்டில் தான் யாரென்பதைப் பத்மா முன்னிலையிலும் பரமானந்தர் முன்னிலையிலும் ஒப்புக் கொண்டு, அதன் மூலம் தன் சுய உருவத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீதர் அன்று அந்த நிலையில் தான் இருந்தான். ஆள் மாறாட்ட நாடகத்தால் ஏற்பட்ட மனப்பாரமும், எங்கே பிடிபட்டு விடுகிறோமோ என்ற அச்சமும் முற்றாக ஒழிந்து விட, ஒரே ஆனந்தத்தில் மூழ்கிக் கிடந்தான் அவன்.
அதிகாலையில் நித்திரை நீங்கி விழித்துக் கொண்டதும் சின்ன வயதில் தான் கேட்ட பாண்டவர்களின் அஞ்ஞாதவாசக் கதைதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. “ஒரு வருட காலம் தருமர் உள்ளிட்ட எல்லாப் பாண்டவர்களும் பொய்ப் பெயரும் பொய்யுருவும் தாங்கி விராட தேசத்து மன்னனை ஏமாற்றி வந்தது போலத் தானே, நானும் பத்மாவையும் பரமானந்தரையும் ஏமாற்றி வந்தேன்? சிவநேசர் மகன் ஸ்ரீதர் என்பதை சின்னப்பா மகன் ஸ்ரீதர் என்ற பெயரை மாற்றியதோடு மட்டும் நான் நிற்கவில்லை. என்னிடமருந்த உயர் தர ஆடைகளை உடுத்தாது, நடுத்தரமான ஆடைகளை உடுத்தி, ஒரு வகை மாறு வேடமும் பூண்டேன். ஏன், நீண்ட காலமாக நான் வழக்கமாக அணியும் என் பாட்டனார் சர் நமசிவாயத்தின் வைர மோதிரத்தைக் கூட அணியாது விட்டேன். அத்துடன் கொலீஜ் ரோட்டுக்குப் போகும்போது எனது ‘பிளிமத்’ காரை வேறொரு வீதியில் நிறுத்தி விட்டும் கால் நடையாகப் பத்மா வீட்டுக்குப் போனேன்.
இன்னும் பல்கலைக் கழக்த்திலும் எனது கார் பத்மாவின் கன்ணில் பட்டு விடாதிருக்க வேண்டுமென்பதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எல்லாமெடுத்துக் கொண்டேன். அப்பப்பா, இனி மேல் இந்தத் தொல்லைகள் இல்லை. என் சுயரூபத்தில், சிவநேசர் மகன் ஸ்ரீதர் உருவத்தில், நான் என் பத்மாவுடன் பழகப் போகிறேன்!” என்று மகிழ்ச்சிக் கடலில் நீந்தினான் ஸ்ரீதர்.
அன்று காதலரிருவரும் பல்கலைக் கழகத்தில் தமது “வழமையான இடத்”தில் சந்தித்த போது அவர்கள் தம்மிடமிருந்த, மிகவும் அழகான உடைகளை அணிந்து வெகு அலங்காரமாக “மேக்கப்” செய்து வந்திருந்தார்கள்.
ஸ்ரீதர் நீல நிறக் காற்சட்டையும் “பிக்காசோ” சித்திரங்களிட்ட ஒரு புஷ் ஷேர்ட்டும் அணிந்திருந்தான். கண்களை அழகிய பிரேமுடன் கூடிய கறுப்புக் கண்ணாடி அலங்கரித்தது. கையில் பதினைந்து வைரக்கற்கள் பதித்த பாட்டனாரின் பழைய மோஸ்தர் தங்க மோதிரம், கால்களில் நவீன முறையில் அமைந்த செவ்வர்ண வெல்வெட் பாதரட்சைகள். தனது பிளிமத் காரைத் தானே ஓட்டி வந்து, நூல் நிலையத்துக்குச் சற்றுத் தொலைவில் இருந்த பெரிய நிழல் வாடி மரத்தின் கீழ் விட்டிருந்தான் அவன். குளித்து மூழ்கித் தலைக்கு வாசப் பசையிட்டுருந்த அவனது “ஓடிக் கொலோன்” நறுமணத்துடன் கூடிய வழுவழுப்பான மேனியைப் போலவே, அவனது பிளிமத் காரும் நன்கு கழுவி மினுக்கி விடப்பட்டிருந்தது. வேலைக்காரச் சுப்பையாவும் டிரைவர் சங்கரனும் அவன் முதல் நாளிரவு படுக்கைக்குச் செல்லுமுன் இட்டிருந்த கட்டளையை சரியாக நிறைவேற்றியிருந்தார்கள். காலையில் பூவைப் போன்ற புனிதத்தோடு பளபளப்பாகக் காணப்பட்ட காரைப் பார்த்ததும் ஸ்ரீதருக்குச் சொல்லொணா மகிழ்ச்சி. இருவருக்கும் ஐந்து ரூபா ‘டிப் ‘ கொடுத்ததோடு, டிரைவருக்கு முழு நாள் லீவும் கொடுத்து விட்டான். பத்மாவை ஏற்றிக் கொண்டு உல்லாசமாக எங்காவது போய் வர வேண்டுமென்பது அவனது திட்டம். காதலியோடு காரில் போகும்பொழுது அவர்களது தனிமைக்கு இடைஞ்சலாயிருக்குமென்பது தான் அவனுக்கு லீவுக் கொடுக்கக் காரணம்.
ஸ்ரீதரைப் போலவே “வழமையான இடத்”துக்கு வரும் போது, பத்மாவும் ஒரு திட்டத்தைத் தீட்டி வந்திருந்தாள். “எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரு’க்குப் போய் ஐஸ்கிறீம் அருந்த வேண்டுமென்பதே அது. நாவுக்கு ருசியான ஐஸ்கிறீம் உண்ணும் ஆசையில் மட்டும் அவள் இத்திட்டத்தை வகுத்திருந்தாள் என்று கூற முடியாது. தனிமையான இடத்தில் தன் காதலனுடன் சேர்ந்திருக்கும் ஆசையும், அவனுடைய காதல் மழலையைக் கேட்டு மகிழ வேண்டுமென்ற எண்ணமுமே அவளை இத்திட்டத்தை வகுக்கத் தூண்டின.
பத்மா அன்று மணிந்திருந்த சேலையும் சோளியும் அவளை ஸ்ரீதருக்கேற்ற ஜோடியாகவே காட்டின. அன்று காலை கொழும்பு நகரிலேயே மிகவும் அழகாக உடை அணிந்திருந்த நாகரிக யுவதி யார் என்று ஒரு போட்டி வைப்பதற்காக, நடுவர் சிலர் புறப்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயம் பல்கலைக்கழகத்து நூல் நிலையத்தை அடுத்திருந்த நடை சாலையில் தன் காதலன் ஸ்ரீதருடன் கொஞ்சு மொழி பேசிக் கொண்டிருந்த பத்மாவையும் அப்போட்டியில் பங்கு பற்றத் தகுதி பெற்றவளாகத் தெரிந்தெடுத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அவர்களின் நல்ல காலம், அன்று அவ்விதமான போட்டி எதுவும் இல்லாததால் பத்மா அவ்வாறு தெரியப்படவில்லை. அதனால் காதலர்கள் தமக்குள் தனித்துப் பேசி மகிழ்வதற்கும் எவ்வித பங்கமும் ஏற்படவில்லை!
பத்மா வெண்ணீலப் பட்டில் வெள்ளிப் பொட்டுகளிட்ட ஒரு பட்டுச் சேலையை அணிந்து அதற்கேற்ற வெண் சரிகைக் கரையிட்ட வெண்ணீலச் சோளி ஒன்றையும் தரித்திருந்தாள். தொளதொளவென்று பின்னி விடப்பட்ட கூந்தலை ஒரேயொரு சிவந்த ‘கார்னேஷன்’ மலர் அலங்கரித்தது. கைகளில் கலகலவென்று கூத்திட்ட பல வர்ணக் கண்ணாடி வளையல்கள். காதில் நவீன முறையில் அமைந்திருந்த காதணிகள். கால்களில் வெள்ளி வர்ணப் பாதரட்சைகள். உன்மையில் அன்று பத்மா சாதாரணப் பெண்ணாகத் தோன்றவில்லை. தேவ மாது போல் தோன்றினான். ஆனால் அவள் அணிந்திருந்த எல்லாவற்றிலும் அவளுக்கு அழகூட்டியது அவள் முகத்தில் அவள் என்றும் அணிந்திருந்த அவளது புன்னகையே. கன்னத்தைக் குழி விழச் செய்த அவளது புன்னகையும், ‘ஐ’ பென்சிலின் உதவியால் காதளவு நீண்ட அவளது புருவங்களும், லிப்ஸ்டிக்கால் செம்மையோட்டப்பட்டு சிறிய ரோஜா மொட்டுப் போல் விளங்கிய அவளது கனிந்த அதரங்களும் அவளது முகத்தின் கவர்ச்சியை மிகவும் அதிகரித்தன. ஸ்ரீதரையும் பத்மாவையும் அப்போது பார்த்தவர்கள் அவர்களைப் போன்றபொருத்தமான ஜோடி இவ்வுலகில் இல்லையென்றே கூறியிருப்பார்கள்.
பத்மாவைக் கண்டதும் ஸ்ரீதர் “பத்மா எனது கடிதம் கிடைத்ததா?” என்று கேட்டான் ஆவலுடன்.
“கிடைத்தது. இதோ…” என்று கூறிக் கொண்டே தனது “ஹாண்ட் பாக்”கைத் திறந்து அங்கிருந்த ஸ்ரீதரின் கடிதத்தை வெளியே எடுத்தாள் பத்மா.
“அப்பா கடிதங்கள் இரண்டையும் மிகவும் இரசித்தார். நல்ல வேளை, எனக்கெழுதிய கடிதத்தில் கூட கிளியே, குயிலே என்ற காதல் மொழிகளை அள்ளித் தெளிக்காமல் நாகரிகமாக எழுதியிருந்தீர்கள். மாமாவுக்கு மருமகனை நிரம்பப் பிடித்து விட்டது” என்றாள் பத்மா சிரித்த முகத்துடன்.
“அப்படியா! அப்படி மாமா மெச்சும்படி நான் என்ன எழுதியிருந்தேன்? கடிதத்தில் எந்தப் பகுதி அவருக்குப் பிடித்தது” என்று கேட்டான் ஸ்ரீதர்.
“இந்தப் பகுதி” என்று கூறிக் கொண்டே பத்மா தன்னிடமிருந்த கடிதத்தை எடுத்து வாசிக்கலானாள்.
“நான் பொய்யன் தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மாமன்னன் துஷ்யந்தன் கூடப் பொய் சொல்லியிருக்கிறான். நான் மன்னன் என்பதை அறிந்தால் வன மங்கை சகுந்தலை அதிக மரியாதை செய்து, தன்னை விட்டு நீங்கி விடுவாள் என்ற பயந்த காளிதாசனின் கதாநாயகன் தான் ஒரு சாதாரண அரச ஊழியன் எனப் பொய் சொன்னான். நான் சொன்ன பொய்யும் அத்தகையதே…” என்று வாசித்து வந்த பத்மா தன்னைப் பற்றி நேரடியாக எழுதப்பட்ட இடம் வந்ததும் நாணத்தால் முகம் சிவந்து மேலே வாசிக்க முடியாது நிறுத்திவிட்டாள்.
ஸ்ரீதர் அவள் கையிலிருந்த கடிதத்தைத் தானெடுத்து வாசிக்கலானான்:
“பத்மாவை என் வாழ்க்கைத் துணையாகப் பெற வேண்டுமென்ற ஆசையால் தான் நான் பொய் சொன்னேன். என்னுடன் பழக அவள் அஞ்சி விடுவாளோ என்று நான் பயந்ததே எனது பொய்க்குக் காரணம்…”
பத்மா, “உங்கள் மாமா இந்தப் பகுதியைத்தான் மிகவும் இரசித்தார். “என்ன அருமையான எடுத்துக்காட்டு! துஷ்யந்தன் செய்ததைத்தானே நானும் செய்தேன்” என்ற பேச்சுக்கு நாங்கள் என்ன எதிர்ப் பேச்சுக் கூற முடியும்?” என்று பல தடவை கூறிவிட்டார் அவர். இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? அப்பாவும் துஷ்யந்தன் வேஷம் போட்டு நடித்திருக்கிறாராம் சின்ன வயதில்” என்றாள்.
“என்ன, மாமா துஷ்யந்தனாக நடித்தாரா? அப்படியானால் சகுந்தலை யார்? உனக்குத் தெரியாம்லே உன்னைச் சகுந்தலையாக்கி நான் ஆடிய நாடகம் போன்ற ஒரு நாடகமா? அல்லது மேடை நாடகமா? ஒரு வேளை நான் உன்னிடம் பொய் சொன்னது போல் அவரும் மாமியிடம் பொய்கள் சொல்லி இருப்பாரோ, என்னவோ?” என்றான் ஸ்ரீதர்.
பத்மா சிணுங்கிக் கொண்டு, “எனக்கு அது தெரியாது. வாருங்கள், ஐஸ்கிறீம் பார்லருக்குப் போவோம்” என்றாள் ஆவலுடன். அன்று தன் முன் இருந்த முழு நேரத்தையும் ஒரு நிமிஷம் கூட வீணாகாமல் ஸ்ரீதருடன் தனியே இன்பமாகக் கழிக்க வேண்டுமென்பது அவள் ஆசை.
இப்படி நடைசாலையில் அர்த்தமில்லமல் பேசிக் கொண்டே நின்றால் இன்பப் பொழுதைத் தொடங்குவது எப்படி? — இந்த எண்ணம் தான் பத்மாவை அவ்வாறு அவசரப்படுத்தத் தூண்டியது.
தான் துஷ்யந்தனை எடுத்துக்காட்டாகக் கூறியதற்கு இவ்வளவு பாராட்டா என்று அதிசயித்த ஸ்ரீதர், அப்பாராட்டுக்கு உண்மையில் உரியவன் டாக்டர் சுரேஷ் அல்லவா என்று எண்ணினான். அவனுக்குத்தான் எல்லாம் தெரியும். வைத்தியம், அரசியல், இலக்கியம், உலகியல், உளவியல் – அவனுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை! “அவன் தானே துஷ்யந்தனின் கதையைக் கூறி எனது குற்ற உணர்ச்சியைப் பெரிதும் குறைத்தவன்?” என்று நினைத்த ஸ்ரீதர் அவன் சீமைக்குப் போக இருப்பதை எண்ணிக் கவலையடைந்தான்.
“அவன் போய் விட்டால் சந்தர்ப்பங்களுக்குரிய ஆலோசனைகள் கூற எனக்கு யார் இருக்கிறார்கள். அர்ச்சுனனுக்குக் கண்ணன் இருந்தது போல பக்கத்திலிருந்து ஆலோசனை சொல்ல அவனில்லாமல் நான் என்ன செய்வேன்?” என்று பயந்தான் ஸ்ரீதர். உண்மையில் ஸ்ரீதர் தன்னால் இழக்க முடியாத இருவரே இவ்வுலகில் இருப்பதாகக் கருதினால், ஒன்று அவனது காதலி பத்மா, மற்றது நண்பன் சுரேஷ்.
ஆனால் அவன் சுரேஷைப் பற்றிய சிந்தனைகளில் சிக்கிக் கொண்டிருக்கப் பத்மா விட வில்லை. நடைசாலையையும், பல்கலைக் கழக வளவையும் சுற்று முற்றும் பார்த்து விட்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படாது போகவே, துணிவோடு தனது தளிர்க்கரங்களால் அவனது கரங்களைப் பற்றிக் கொண்டு “வாருங்களேன் போவோம்” என்று மீண்டும் சிணுங்கினாள் அவள்.
ஸ்ரீதர் சிரித்துக் கொண்டே நிழல்வாடியின் கீழ் நின்ற காரை நோக்கிப் போனான். “இன்று டாக்சி வேண்டியதில்லை. எனது சொந்தக் காரிலேயே ஊர் சுற்றுவோம்” என்றான். பத்மாவும் பின் தொடர்ந்து ஏறிக் கொண்டாள். சாதாரணமாக ஒரு மாணவனின் காரில் ஒரு மாணவி பல்கலைக்கழக வளவிலேயே ஏறிக் கொண்டு செல்வதற்குச் சிறிது கூச்சமடையவே செய்வாளென்றாலும், அந்த வேளையில் பல்கலைக்கழகத்தின் அப்பகுதியில் மாணவர் நடமாட்டம் சற்றும் இல்லாதிருந்தது பத்மாவுக்குத் துணையாயிருந்தது.
இருந்த போதிலும் அப்பொழுது கூட இரு நீண்ட பெண் விழிகள் காதலர் இருவரையும் அவர்களறியாது கவனித்துக் கொண்டு தான் இருந்தன. அவை தங்கமணியின் விழிகள். மை தீட்டிய அவளது இரு விழிகளும் அவளது புருவங்களுக்கு இடையே நெற்றியில்தீட்டப்பட்டிருந்த அவளது ஆச்சரியக்குறி போன்ற திலகத்தின் தாக்கத்தாலோ என்னவோ ஒரே ஆச்சரிய உணர்ச்சியையே பிரதிபலித்துக்கொண்டிருந்தன. “என்ன இது? நேற்று முன் தினம் தான் பத்மா தனது கர்வம் அடங்கிக் கண்ணீர் விட்டாள். இன்று மீண்டும் என்ன மிடுக்கு! சினிமாகாரி போல் சிங்காரித்துக் கொண்டு ஸ்ரீதருடன் காரில் பவனி, தலையைப் பார்! கெட்ட கேட்டுக்குக் கார்னேஷன் பூ வேறு” என்று கூறிக் கொண்ட அவளது மார்பு ஒரு பெருமூச்சால், கடலலை போல் ஏறி இறங்கியது!
பல்கலைக்கழகத்து வாயிலுக்குச் சமீபமாக இருந்த இரசாயன ஆய்வு கூடத்தில் ஜன்னலுக்குச் சமீபமாக நின்று கொண்டு ஒரு திரவ பரிசோதனையை நடத்திக் கொண்டிருந்த தங்கமணி காரொன்று செல்வதன் ஓசையைக் கேட்டு நிமிர்ந்து நோக்கிய பொழுதுதான் பத்மாவும் ஸ்ரீதரும் காரில் செல்வதைப் பார்த்தாள். சிறிது நேரம் தனது மேலிதழைக் கீழ்ப் பற்களால் கடித்துக் கொண்டு, ஏதோ யோசித்த அவள் திடீரென மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் தனது பரிசோதனையில் ஈடுபட்டாள். இருந்த போதிலும் சற்று நேரத்தில் அங்கே வந்த அவளது தோழி கலாவிடம், “பார்த்தாயா.. பல்கலைக்கழகத்துப் புதிய ஜோடியை. ஸ்ரீதருடன் பத்மா காரில் போகிறாள். இவர்கள் இங்கே வருவது படிக்கவல்ல – காதற் கலை பயில. இவர்களின் போக்கு, தமிழர்களுக்கே அவமானம். இந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கூட எவ்வளவோ மேல்” என்றாள்.
கலா அதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ பதிலளிக்கவில்லை. ஏனென்றால் அவளுக்கும் பல்கலைக்கழகத்தில் ஒரு காதலன் உருவாகிக் கொண்டிருந்தாள். பத்மா போலவே அவளுக்கும் காதலன் ஒருவன் இல்லாவிட்டால், நிச்சயம் தங்கமணியின் கருத்து அவளுக்குச் சரியாகவே பட்டிருக்கும். இந்த உலகில் பெரும்பாலோரின் பொதுக் கருத்துகள் கூட அவர்கள் அறியாமலே அவர்களது சொந்த விவகாரங்களின் அடிப்படையிலேயேதான் உருவாகின்றன.
கலா பதிலொன்றும் கூறாமல் வெறுமனே புன்னகை செய்து விட்டுச் செல்லவே, “இதுவும் ஒரு கழிசடைதான் போல” என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் தங்கமணி.
பத்மா காரில் ஏறிக் கொண்டதும் ஸ்ரீதரிடம் “இப்போது எங்கே போகிறோம் ஸ்ரீதர்? எஸ்கிமோவுக்குத் தானே?” என்றான்.
“இல்லை நண்பர் இருவரைப் பார்க்க, தெகிவளைக்கு. அவர்களும் என்னைப் போலவே காதலர்கள். போய் வருவோம்?” என்றான் ஸ்ரீதர்.
காதலர் என்று சொன்னதும் “ஆம்” என்ற ஆவலுடன் பதிலளித்தாள் பத்மா. காதல் வயப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உலகமே காதல்மயமாகத் தோன்றுகிறது. காதலைப் போல் விரும்பத்தக்கது வேறு எதுவுமே இல்லை என்று எண்ணும் அவர்களை அந்த வார்த்தை வசீகரிப்பது போல வேறெவ் வார்த்தையும் வசீகரிப்பதில்லை.
கார் புல்லர்ஸ் வீதி வழியாகச் சென்று காலி வீதியை அடைந்த பொழுது ஸ்ரீதருக்கு “பத்மாவுக்கு ஐஸ்கிறீமில் மிகவும் ஆசை” என்பது ஞாபகத்துக்கு வர, ஓர் ஐஸ்கிறீம் பார்லருக்கு முன்னால் காரை நிறுத்தி அவளுக்கு ஓர் ஐஸ்கிறீமையும் தனக்கு ஒரு பாற் கலவை அல்லது ‘மில்க் ஷேக்’கையும் கொண்டு வரும்படி உத்தரவிட்டான். காதலர் இருவரும் அவற்றை அருந்தி முடித்ததும் கார் காலி வீதியின் அகன்ற தளத்திலே தெகிவளையை நோக்கிப் பறந்தது.
பத்மா, பட்டப்பகல் நேரமாயிருந்ததால் ஸ்ரீதருடன் அதிகம் நெருங்கி உட்காராமல் அவனோடு தன்னுடல் பட்டும் படாமலே உட்கார்ந்திருந்தாள் என்றாலும் அவளது வலது கரமோ அவனது தோள் மீது நீண்டுக் கிடந்தது.; ஸ்ரீதர் தன் காதலன் என்ற உரிமையை ஸ்தாபிப்பது போலிருந்தது அவளது செயல். உண்மையில் அவ்வாறு அவனது தோளிலே தனது கரத்தை வைத்திருந்தது அவளுக்கு வெது வெதுப்பான உடலின்பத்தை மட்டும் தர வில்லை — உள்ளத்திற்கும் ஒரு பேராசை நிறைவேறுவது போன்ற இதமும் திருப்தியும் ஏற்பட்டன. சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவள் கண்ட ஒரு பூங்கனவு அப்பொழுது நிறைவேறிக் கொண்டிருந்ததே அவளுக்கு அவ்வித மனநிறைவு ஏற்படுவதற்குக் காரணம்.
சுமார் பதினாறு பதினைந்து வயதிலிருந்தே பத்மா கண்ட இரகசியக் கனவுகளிலொன்று தனக்குப் பிடித்த மணவாளனுடன் அழகான காரொன்றில் அதன் முன்னாசனத்தில் ஜோடியாக அமர்ந்து, அவனோடு காதல் மொழிகள் பேசி இன்பக் குறும்புகள் செய்து கொண்டு போக வேண்டுமென்பதாகும். இப்படிப்பட்ட காதல் ஜோடிகள் பலரை அவள் கொழும்பில் பல இடங்களில் கண்டிருக்கிறாள். ஏன் அவள் வசித்த கொலீஜ் ரோட் 48ம் இலக்கத் தோட்டத்தைக் கூட இது போன்ற காதல் ஜோடிகள் பல தடவைகள் கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களைக் காணும் போது அவளை அறியாம்லே அவள் உள்ளம் துள்ளூம்; வாய் பாட்டிசைக்கும்.
அவளது இதயத்தில் புகுந்திருந்த மற்றொரு கனவு தன் காதலன் ஏறிச் செல்லும் ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னால் அவனை இறுகப் பற்றிக் கொண்டு தானும் அவனோடு சவாரி போக வேண்டுமென்பதாகும். பல பறங்கிப் பெண்களும் அவளது காதலர்களும் இவ்வாறு போவதை அவள் பார்த்திருக்கிறாள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்களல்லவோ வாழ்க்கையின் இனிமையை அனுபவிக்கப் பிறந்தவர்கள்” என்று அவளுக்குத் தோன்றுவதுண்டு.
அவள் கண்ட இன்னொரு கனவு, தான் நீச்சலுடையில் சமுத்திரக் கரையிலே தன் காதலனோடு இன்பப் பேச்சுகள் பேசிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என்பதாகும். சினிமாப் படமொன்றைப் பார்க்கும் போதே அவளுக்கு இந்த நினைவு முதலில் உண்டாயிற்று.
இருந்தாலும் அதுவும் ஒரு தாங்கொணாத ஆசையாக அவள் மனதில் குடி கொண்டது. உள்ளக் குகையில் ஒரு மூலையில் அந்த ஆசையும் சுருண்டு கிடந்தது.
ஸ்ரீதருடன் காரில் சென்று கொண்டிருந்த பத்மாவின் மனத்திரையில் இவ்வாசைகெளெல்லாம் புத்துருக்கொண்டு தோன்றின. கார் ஆசை நிறைவேறிக் கொண்டிருந்தது. ஆனால் ஸ்கூட்டர் ஆசை? காரில் இருந்த போதிலும் திடீரென அவள் மனம் இனந் தெரியாத ஒரு காதலனுடன் ஸ்கூட்டரின் பின்னால் சென்றது. போதாதற்கு வீதியில் அவர்களது காருக்கு முன்னாலே ஒரு வாலிப ஜோடி ஸ்கூட்டரில் கண்ணுக்கு எதிரே போய்க் கொண்டிருந்தது. நாகரிகமான “ஷிப்ட்” என்னும் புது மோஸ்தர் கவுன் அணிந்த ஒரு பெண் அவளது பொன்னிறக் கூந்தல் காரிலே பறக்க உல்லாசமாகத் தனது காதலனை இறுகக் கட்டிக் கொண்டு ஸ்கூட்டரின் பின்னால் போய்க் கொண்டிருந்தாள்.
ஸ்கூட்டரின் நினைவு வந்ததும், கூடவே கமலநாதனின் நினவும் சேர்ந்து வந்தது. அதை மறக்க விரும்பிய பத்மா ஸ்ரீதரின் தோள்களைத் தடவி அவனுக்கு ஸ்பரிச சுகம் கொடுத்ததோடு, தானும் அதை அனுபவிக்கலானாள். ஆனால் கமலநாதனையோ அவனது அரும்பு மீசையையோ மறப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆகவே ஸ்ரீதருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள். பேச்சில் சுவையேறியதும் மற்ற நினைவுகள் மறந்து போகுமல்லவா?
“ஸ்ரீதர்! நாங்கள் தேடிச் செல்லும் உங்கள் நண்பரின் பெயரென்ன?” என்று கேட்டாள் பத்மா.
“மிஸ்டர் டி.எம். ராஜ்” என்றான் ஸ்ரீதர். அதன் பின் ஸ்ரீதர் பத்மாவிடம் டாக்டர் சுரேஷைப் பற்றி விவரித்தான்.
“எனதுயிருக்கு உயிரான ஒரே நண்பன் சுரேஷ் தான். அவன் இன்னும் இரண்டு வாரத்தில் இங்கிலாந்து போகிறான். அதற்கு முன்னர் உன்னை நான் அவனுக்குக் கட்டாயம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.”
“அதற்கென்ன? நானும் உங்கள் நண்பரைக் காணவே விரும்புகிறென்.”
“அவன் இங்கிலாந்து புறப்பட்டதும், நான் யாழ்ப்பாணம் போவேன். எங்கள் திருமண விஷயத்தைக் கவனிக்க வேண்டுமல்லவா?” என்றான் ஸ்ரீதர்.
பத்மாவுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. தன் கரங்களால் அவன் தோள்களை இறுக அனைத்துக் கொண்டாள்.
ஸ்ரீதர் என்னதான் காதலனென்றாலும், காரை ஓட்டிக் கொண்டு காதல் புரிவது ஆபத்து என்பதை அறியாதவனல்லன். எனவே பத்மா தன் காதல் நாடகத்தை மேலும் தொடர்வதற்கு அவன் இடமளிக்கவில்லை. பத்மாவுக்குக் கோபம். என்றாலும் என்ன செய்வது? வேறு வழியின்றி ஜன்னலண்டை சாய்ந்து வீதிக் காட்சிகளை இரசிக்க முயன்றாள்.
ஓடும் காரின் வேகத்தினால் காற்று முகத்தின் எதிர்ப்புறமாக வீசியது. அது முகத்தின் இரத்த ஓட்டத்தைத் துரிதப் படுத்தி, சரும நரம்புகளுக்கு ஓர் இன்ப உணர்ச்சியை நல்கியது. தலை மயிர் பஞ்சு போல் மிதந்து, பின்னால் பறந்தது. நித்திரை செய்வது போல் பாசாங்கு செய்தாள் அவள். ஸ்ரீதர் “பத்மா!” என்று இரண்டு மூன்று தடவை கூப்பிட்டும், அவள் பதிலளிக்க வில்லை.
கார் தெகிவளையில் ஒரு சந்தியில் திரும்பி அங்கிருந்த மிருகக்காட்சிசாலையின் வாசலில் திடீரென ‘பிரேக்’ போட்டு அவளை அதிர வைத்த பொழுது தான் பத்மா கண் விழித்தாள். மிருகக்காட்சிசாலையின் வாசலில் பெரிய எழுத்துகளில் “மிருகக்காட்சிசாலை” என்று எழுதப்பட்டிருந்தது.
“என்ன? மிஸ்டர் டி. எம். ராஜைக் காணப் புறப்பட்டு, இங்கு வந்து நிற்கிறீர்கள்?” என்றாள் பத்மா.
“இங்குதான் மிஸ்டர் ராஜ் இருக்கிறார்!”
“ஓகோ! இங்கு வேலை செய்பவரா அவர்?” என்றாள் பத்மா, பலவும் தெரிந்தவள் போல.
ஸ்ரீதர் பதிலெதுவும் பேசாமல் காரை வீதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, இரண்டு பிரவேசச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு பத்மாவுடன் காட்சி சாலையுள் நுழைந்தான். அங்கே குருவிகளூம் வரிக்குதிரைகளும் வரவேற்றன!
பத்மாவின் தோள்களைப் பற்றிக் கொண்டு உல்லாசமாக நடந்த ஸ்ரீதர் “முதலில் நான் சொன்ன காதலர்களைப் பார்த்துவிட்டு, பிறகு மிருகங்களையும் குருவிகளையும் பார்ப்போம்” என்றான்.
“ஆகட்டும் சுவாமி” என்று கொஞ்சலாய் பதிலளித்தாள் பத்மா. ஸ்ரீதர் தன்னைத் தொட்டு நடந்தது அவளுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது.
ஸ்ரீதர் பத்மாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தவன் வழியில் மர்க்கட வனத்தில் சிறிது தாமதித்தான். செங்குரங்கு, கருங்குரங்கு, ஆபிரிகக் குரங்கு, இந்தியக் குரங்கு, வாலில்லாக் குரங்கு, ஒரன்குட்டான், கொரில்லா என்று குரங்குகளில்தான் எத்தனை வகை!
மனிதர்களிலும் பார்க்கக் குழந்தைகளே அதிக கவர்ச்சியுள்ளனவாய் இருப்பது போலக் குரங்குகளிலும் அவற்றின் குட்டிகளே அதிக கவர்ச்சியுள்ளனவாய் இருந்தன. குரங்குகளில் மட்டுமென்ன, எல்லா மிருகங்களிலும் இதுவே நியதி போலும்! நாய், பூனை என்பவற்றில் கூட அவற்றின் குட்டிகள்தானே மிக அழுகுள்ளவையாய் இருக்கின்றன! மர்க்கட வனத்தில் ஏறாளமான குரங்குக் குட்டிகள் கூடுகளுள் தொங்கிப் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. பார்வையாளர்கள் பலர், முக்கியமாகக் குழந்தைகள், தாமும் கூட்டுக்கு வெளியே நின்று அவற்றோடு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆகச் சிறிய குழந்தைகள் புதுமை நிறந்த தனது கணகளை அதிக அகல விரித்து, அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து நின்ற் காட்சியே காட்சி!
ஸ்ரீதர் பத்மாவிடம் திடீரென “அதோ நாங்கள் பார்க்க வந்த ஜோடி!” என்றான் அமைதியாக.
பத்மா அவன் சுட்டிய திசையை நோக்கினாள். அங்கே ஒரு பெரிய இரும்புக் கூட்டுள் ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தது.
“பேனெடுக்கும் குரங்கு தான் டி.எம். ராஜ். பேனெடுக்கப்படும் குரங்கு அதன் காதலி டி.எம். ராணி!” என்றான் ஸ்ரீதர்.
“உங்களுக்கு எப்பொழுதும் பெயர் மாறாட்டம்தானே? சிவநேசர் சின்னப்பா ஆன மாதிரி” என்றாள் பத்மா குறும்பாக.
ஸ்ரீதர், “இந்த விஷயத்தில் நான் பொய் சொல்லவில்லை. உண்மைதான் சொன்னேன். ஆண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராஜ். பெண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராணி. மர்க்கடமென்றால் குரங்கு. தெரிந்ததா மட்டிப் பெண்ணே?” என்றான்.
இதற்கிடையில் காதலன் குரங்கு அவர்களைப் பார்த்து விட்டது. காதலியின் தலைப் பேனொன்றை எடுத்து வாயிற் போட்டு மென்று கொண்டே அவர்களைப் பார்த்துப் பல்லை இளித்து மூக்கைச் சொறிந்தது குரங்கு!
“அந்தக் காதலன் போல எனக்கும் உனக்குப் பேன் பார்க்க ஆசை. உட்கார், பேன் பார்க்கிறேன்” என்றான் ஸ்ரீதர்.
அதற்குப் பத்மா சாதுரியமாக “ஓகோ, பேன் பார்ப்பதால் குரங்கு இரண்டு பிரச்சினைகளைத் தீர்க்கிறது. ஒன்று பெண் குரங்கின் பேன் தொல்லை தீருகிறது. அதே சமயம் ஆண் குரங்கின் வயிற்றுப் பசியும் தீர்கிறது. உங்களுக்கு இப்பொழுது வயிற்றுப் பசி அதிகமாயிருக்கிறதோ?” என்றாள் சிரித்துக் கொண்டு.
“உனக்குப் பேன் பார்த்தால் வயிற்றுப்பசி தீர்ந்தாற் போலத்தான். நீதான் உலகத்திலுள்ள ‘ஷம்பூ’ எல்லாவற்றையும் உபயோகித்துத் தலையை இப்படிச் சுத்தமாய் வைத்திருக்கிறாயே. பேன் எப்படிக் கிடைக்கும்” என்றான் ஸ்ரீதர்.
“அப்படியானால் பேனுள்ள பெண்ணொருத்தியைப் பாருங்களேன், போங்கள்” என்றாள் பத்மா.
இப்படியாக ஆரம்பித்த இன்பப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. பல மணி நேரம் ஒய்யாரமாகச் சுற்றிக் கொண்டேயிருந்தார்கள்.
பறவை வனத்தில் ஒன்றுடன் ஒன்று கொஞ்சிக் குலாவிய பல வர்ணப் பறவைகளைப் பார்த்ததும் தாமும் அப்படியே கொஞ்ச வேண்டுமென்று காதலர் விரும்பினார்கள். ஆனால் சுற்றிலும் ஆணும் பெண்ணும் சிறுவரும் மொய்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் அவ்வாறு கொஞ்சிக் கொள்ள முடியுமா என்ன? ஆகவே கண்களால் பேசிக் கருத்தால் கொஞ்சினார்கள். செடி விளிம்புடன், ஓங்கி வளர்ந்த பொன்னிற மூங்கில் மரங்களைக் கரையில் கொண்டு விளங்கிய பச்சைப் படிகத் தெண்ணீர்க் குளத்தின் கரையில் நின்று, அலை வளையங்களின் நடுவே ஆடி அசைந்து சென்ற ஆஸ்திரேலிய அன்னங்களைப் பார்த்த போது ஸ்ரீதர் “பார்த்தாயா பத்மா, இவை தான் அன்னங்கள். நளன் தமயந்தியிடம் காதல் தூது விட்டது அன்னங்களைத்தான்” என்றான். தோகை விரித்துப் பசுந்தரையில் நடந்த மயில்களைக் கண்ட போது, “பார்த்தாயா பத்மா, எவ்வளவு ஒய்யாரம்! அவை போல பொற்காசுப் பொட்டமைந்த கரும்பச்சை வண்ண உடைகளைத் தயாரித்தணிய மானிட மங்கையரால் கூட முடியவில்லையே!” என்றான் ஸ்ரீதர். “ஏன் பெண்களைக் கூறுகிறீர்கள்?
மயில்களில் ஆண் தானே அழகான தோகையுடன் விளங்குகிறது! ஆகவே மனிதர்களிலும் ஆண்களல்லவா அவ்வாறு பொன்னும் நீலமும் பசுமையும் சேர்த்த வர்ண உடைகளை அணிய வேண்டும்?” என்றாள் பத்மா. இவ்வாறு இளங் காதலர்கள் ஒருவர் தோளை ஒருவர் தழுவிக் குழந்தைகள் போலவும் கவிஞர்கள் போலவும் உரையாடிக் கொண்டார்கள். இடையிடையே தனித்த இடங்களில் பூஞ்செடி மறைவுகளில் நிலத்தில் கிடந்து கற்களின் மீது கரங்களைக் கோத்து மெய் மறந்து உட்கார்ந்திருந்தார்கள். மிகவும் தனித்த இடங்களில் ஒருவரை ஒருவர் இறுக அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள். கூந்தல் ‘டானிஷ்’கின் இனிய சந்தன வாசம் வீசிய பத்மாவின் தலை மயிரைக் கையால் நீவி, அவளது பொன்னிற உச்சியைப் பல தடவை மோந்தான் ஸ்ரீதர். பத்மாவும் வாளா இருக்கவில்லை. ஸ்ரீதரின் கரங்களைத் தன் சின்னஞ்சிறு உதடுகளால் தொட்டு எச்சிற்படுத்தி வேடிக்கைகாக அதில் தன் “லிப்ஸ்டிக்”கின் செஞ்சாயத்தையும் பதிய வைத்தாள். பத்மா கண்களை மூடி உலகை மறந்த பொது அவள் பொன் முகத்தைத் தன் கையில் ஏந்தி, அவள் கண் மடலையும் இமைகளையும் புருவங்களையும் முத்தமிட்டான் ஸ்ரீதர். காதலின் இவ்வித சைகைகளோ ஏராளம். கற்பனைக்குத் தோன்றிய சகல காதற் சைகைகளையும் புதியன புதியனவாகச் செய்து மகிழ்ந்தார்கள் காதலர்கள்.
மிருக வனத்துக்குத் தாம் விஜயம் செய்த இந்த நாளைப் புகைப்படத்தில் நிரந்தரமாக்க வேண்டுமென்ற ஆசை ஸ்ரீதருக்கு ஏற்பட்டது.
ஆனால் கையிலே புகைப்படக் கருவி இல்லை. இருந்தாலும் மிருக வனத்தின் நடுவிலேயிருந்த சிற்றுண்டிச்சாலியில் எப்பொழுதோ புகைப்படக் கருவிகள் விற்பனைக்கிருந்தமை அவனுக்கு ஞாபகம் வந்தது. அவை அவனுக்கேற்ற ரகமானவை அல்ல என்றாலும், அப்போதைய தேவைக்கு உதவக் கூடியவைதான். எனவே பத்மாவுடன் அங்கே சென்று சில கேக்குகளை அருந்திக் குளிர்பானங்களும்பருகிவிட்டு, ரூபா இருநூறு செலுத்தி ஒரு புகைப்படக் கருவியையும் புகைப்படச் சுருள்கள் சிலவற்றையும் வாங்கிக் கொண்டான். அன்று
பத்மா பணத்தை வீணாக்க வேண்டாமென்று ஸ்ரீதருக்குப் புத்தி சொல்லவில்லை. எவ்வளவு பணத்தைச் செலவழித்தாலும் வறியவராக முடியாத பெரும் பணக்காரர் சிவநேசரின் ஏகபுத்திரன் ஸ்ரீதர் என்பது இப்பொழுது அவளுக்குத் தெரியுமல்லவா?
பத்மாவை யானை மீதேற்றி வலம் வரச் செய்து படம் பிடித்தான் ஸ்ரீதர். முதலில் அவள் பயந்து கீச்சுக் குரலில் கூச்சலிட்ட போதிலும் சிறிது நேரத்தில் பயம் தெளிந்து விட, யானையின் முதுகில் கையை ஊன்றி இராணி போல் வீற்றிருந்தாள் அவள். இன்னொரு படத்தில் அவளைத் தன் முன்னே வைத்து தான் பின்னிருந்து ஜோடியாகப் படம் பிடித்துக் கொண்டான் ஸ்ரீதர். பார்வையாளர் ஒருவர் அப்படத்தை எடுத்து உதவியானார். இவை தவிர சிங்கக் கூட்டின் முன்னால் ஒரு படம், மர்க்கட வனத்தில் டி. எம். ராஜ் – டி. எம். ராணி கூட்டின் முன்னொரு படம், அன்னம் தவழ்ந்த குளத்தின் முன்னொரு படம், புலிக் கூட்டின் முன்னொரு படம், பறவை வனத்தில் ஒரு படம், ஆடும் மயிலுடன் கூட ஒரு படம், பூம்பந்தரொன்றின் கீழ் ஒரு படம், நிலத்தில் உட்கார்ந்து ஒரு படம், குளக்கரையில் இருந்து சிமெந்து ஆசனத்தில் நீளச் சாய்ந்த ஒய்யார நிலையில் ஒரு படம் — இப்படி இரண்டு படச் சுருளகளைப் பத்மாவின் படங்களால் நிறைத்து விட்டான் அவன்.
இவை எல்லாம் ஒருவாறு முடியப் பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது; சிற்றுண்டிகளையும் குளிர்பானங்களையும் அருந்தியதால் வயிற்றின் நேர அறிவிப்பு கிட்டாவிட்டாலும், கையில் கட்டியிருந்த கடிகாரங்கள் நேரத்தைக் காட்டவே செய்தன.
பத்மா பதைபதைத்து “ஸ்ரீதர்! நான் வீட்டுக்குப் போக வேண்டாமா? அப்பா ஏதாவது நினைத்துக் கொள்ளூவார். வழக்கத்தில் இதற்கு முன்னரே வீட்டுக்குப் போய் விடுவேன். இன்று போய்ச் சேர நாலு மணியாகிவிடும். இன்னும் தாமதித்தால் வீடு போக இருட்டி விடும். அப்பா பயந்து போய் விடுவார். அத்தோடு வாயாடி விமலாவும் லோகாவும் படிக்க வருங்கள். வாய்த் துடுக்கான குழந்தைகள் என்னைப் பற்றித் தங்கள் வீட்டுக்குப் போய்த் தங்கள் தாயாரிடம் ஏதாவது உளறி வைக்குங்கள்!” என்றாள் அச்சத்துடன்.
ஸ்ரீதர் அதற்கு மேலும் அவளைத் தாமதிக்க வைக்க விரும்ப வில்லை. “சரி” என்று சொல்லிப் புறப்பட்டான். கார் கர்லி வீதி வழியாகக் கொட்டாஞ்சேனையை நோக்கி பறந்தது!
வழியில் தங்கள் அடுத்த சந்திப்பைப் பற்றித் திட்டமிட்டான் ஸ்ரீதர். “நாளை கழித்து மறுநாள் ‘வழமையான இடத்’தில் காலை ஒன்பது மணிக்குச் சந்திப்போம். நான் ஒரு சைத்திரிகன் என்பது உனக்குத் தெரியுமல்லவா? உன்னைக் கல்கிசைக் கடற்கரையில் நீலத் திரைக்கடலின் பின்னணியில் வன்ணப்படமாக எழுதப் போகிறேன்” என்றான் ஸ்ரீதர்.
பத்மாவுக்கு ஒரே ஆனந்தம். அவன் தோள்களைத் தன் கரங்களால் அழுத்தமாகப் பற்றித் தன் பலங் கொண்ட மட்டும் பிசைந்தாள் அவள்.
“சரி வருகிறேன்” என்றாள் புன்னைகையுடன்.
கார் கொட்டாஞ்சேனைப் பாதையில் ஆர்மர் வீதியை அடைந்தது. அதற்கு மேலும் காரைக் கொண்டு செல்ல ஸ்ரீதர் விரும்பவில்லை.
பத்மாவும் அவ்வளவு பென்னாம்பெரிய காரில் வீட்டில் நேரே சென்றிறங்க விரும்ப வில்லை. அப்போதிருந்த நிலையில் தந்தை பரமானந்தர் அதை ஆட்சேபிக்க மாட்டார் என்றாலும், அக்கப்பக்கத்து வீட்டுக்காரர்கள் – அன்னம்மா போன்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சமே அவளை அவ்வாறு செய்யாது தடுத்தது. எனவே ஸ்ரீதர் பத்மாவை ஆர்மர் வீதியில் இறக்கி விட, அவள் கால் நடையாகவே கொலீஜ் ரோட்டை நோக்கி நடந்தாள். ஸ்ரீதரோ காரை வீதி ஓரத்தில் நிறுத்தி விட்டு, பத்மாவின் உருவம் கண் பார்வைக்கு மறையும் வரை அவள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் காரிலிருந்து இறங்கியதும் பத்மா கண்ட காட்சி! கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் இறுக்கமான கறுப்புக் காற்சட்டையணிந்து கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து சென்று கொண்டிருந்தான். அவன் கண்களை “கொகிள்ஸ்” என்னும் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்கள் அணியும் புகைக் கண்ணாடி அலங்கரித்தது. உதடுகளை வழக்கம் போல் அவனது கவர்ச்சிகரமான அரும்பு மீசை அலங்கரித்தது.
ஆளில்லாது வெறிச்சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாசனம் – ஐயோ வீணாகிறதே என்ற உணர்ச்சி பத்மாவுக்குத் தன்னையறியாமலேயே ஏற்பட்டது. மேலும் என்ன தான் முயன்ற போதிலும் கமலநாதனின் பின்னழகை இரசிக்காதிருக்கவும் அவளால் முடியவில்லை! [தொடரும்]