என்னோடு வந்த கவிதைகள் (8)

“வார்த்தைக்கு தவமிருந்து
வரப்பெற்றவையல்ல
என்கவிதைகள்
பூமி பிளக்க விரைந்தெழும்பும்
விதைகள் போலுமல்ல
அதன் வார்ப்பு
அக்கா படிப்பதுபோல்
அம்மா சமைப்பதுபோல்
காற்றிற்கு நெற்பூக்கள் மடங்குவதுபோலும்
நானும் செய்கிறேன்
எனக்குத்தெரிந்ததை
ஒருவேளை
அவை கவிதைகளாயிருக்கலாம்”
    சே. பிருந்தா
        
- பிச்சினிக்காடு இளங்கோ கவிதை என்ற புதுவனத்திற்குள் நான் நுழையக்காரணம் ஊருக்குள்ளே நடந்த குருகுலம்தான். அங்கேதான் நான் தட்சணை கொடுக்காமல் இலக்கியம் கற்றேன். முன்பு சொன்னதுபோல் ஒரு இலக்கியவட்டம் “தானா” என நாங்கள் அழைக்கும் உறவினர் தங்கவேல் தலைமையில் இயங்கினோம். தங்கவேல் எனும் பெயரில் உள்ள அந்த ‘த’ என்ற எழுத்தை நாங்கள் ‘தானா’ என்றழைப்போம்.  செட்டிநாட்டில் ‘லேனா’, என்று அழைப்பதுபோல் நாங்கள ‘தானா’ என்றழைப்போம். அவர் புலவருக்குப் படித்தவர். நாங்கள் மாலைப்பொழுதை விளையாட்டில்தான் கழிப்போம். பகல் பொழுதை பேசித்தான் தீர்ப்போம். இங்கேதான் புலவர் “தானா” அவர்களின் பங்கு அதிகம். “கற்றலில் கேட்டலே நன்று” என்பது எவ்வளவு உண்மை. ‘தானா’ அவர்கள் கேட்டது அதிகம். ‘தானா’ அவர்கள் படித்தது அதிகம். அவையெல்லாம் எங்களுக்குத் தானாகவே கிடைத்தது.  எங்களூரில் எங்களுக்குக்கிடைத்த முதல் நூலகமே அவர்தான். எனக்குக்கிடைத்த முதல் இலக்கிய நூலும் அவர்தான். எங்கள் ஊரில் நூலகமில்லை. இலக்கிய  அமைப்பு இல்லை. இலக்கியக்கூட்டங்களும் கிடையாது. இந்த நிலையிலிருந்து நான் கவிதையோடு நெருங்கிப்பழக, கவிதையோடு உறவுகொள்ள, கவிதையின் முகவரியைத் தெரிந்துகொள்ள காரணமாக இருந்த காரணங்களுள் “தானா” க்கு முதலிடம் .  அவர்கேட்ட; படித்த இலக்கியச்செய்தியை சொன்னபாங்கு என்னைகவர்ந்தது. புகழ்பெற்ற பேச்சாளர்கள் எப்படிப்பேசுவார்கள், என்னன்ன பேசினார்கள் என்பதை அவர்சொல்ல நாங்கள் கேட்போம்.

ஒருமுறை இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் பேசும்போது “ தலைவர்கள் புளியம்பழத் தலைவர்களாக இருக்கக்கூடாது. கொய்யாப்பழத்தலைவர்களாக இருக்கவேண்டும்.’ அதாவது தலைமைக்கும் தொண்டனுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவந்த குமரிஅனந்தன் அவர்கள் தோலுக்கும் சதைக்கும் தொடர்பில்லாத புளியம்பழம்போல் இல்லாமல் தோலும் சதையும் பிரிக்கமுடியாத கொய்யாப்பழம்போல் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்தச்செய்தி என்னிடத்தில் பதிந்துவிட்டது. முப்பது ஆண்டுகளுக்குப்பின் சிங்கப்பூரில் பேசும்போது அதை நான் கையாண்டேன்.எங்கள் பள்ளியில் ஒரு கூட்டத்தில் தங்கவேல் அவர்களைப் பேசவைத்துவிட்டர்கள். திடீரென்று அவர்பேசும்போது பள்ளிக்கூடத்தை SCHOOL என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். SCHOOL அதன் ஒவ்வொரு எழுத்துக்குமுள்ள விரிவான விளக்கத்தைத் தந்தார். S-sincerety, C…capacity, H…honesty, O…obedience, O…Orderliness, L….learning இது நான்கேட்டு நாற்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். இன்னும் என்னோடு வருகிறது. லிப்ஃகோ அகராதியை புரட்டிப்பார்த்தபோது அதில் அதற்குரிய விளக்கத்தைத் தெரிந்துகொண்டேன். அகராதியைப்புரட்டும் பழக்கும் எனக்குண்டு. எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் இதை என் செவியில் இலவயமாக சேர்த்தபெருமை ‘தானா’ அவர்களைத்தான் சாரும். அறிஞர்கள் பேசுவதைப்போலவே பேசிக்காட்டுவார். ஆனால் எந்தக்கூட்டத்திலும் அவர் பேசியதில்லை. அவர்பேசி நான் கேட்ட முதல் கூட்டம் அன்று பள்ளியில் பேசியதுதான். அவர்தான் எனக்கு கண்ணதாசனின் ‘தைப்பாவை’ நூலைப்பற்றிக்குறிப்பிட்டு அதில் வரும்

“ காளைமணியோசை களத்துமணிநெல்லோசை 
                   வாழை இலையோசை வஞ்சியர்க்கை வளையோசை…”

எனத்தொடரும் கவிதைகளைச்சொல்லி அதன்மீது ஈர்ப்பை விதைத்தார். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சினிமாப்பாடல்கள் புத்தகங்களுடன் தைப்பாவையும் தொங்கிக்கொண்டிருந்தது. உடனே வாங்கி படிக்கத்தொடங்கினேன். பலப்பாடல்களைப்படிக்கதொடங்கினேன். அதன்பின் கண்ணாதாசனின் பலதொகுப்புகள் ,நூல்கள், திரைப்பாடல்தொகுப்புகள் எல்லாவற்றையும் படிக்கத்தொடங்கிவிட்டேன். அதுபோலவே ‘தானா’ பாரதிதாசனின் பாடல்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், பேராசிரியர் அப்துல் கறீம். பேராசிரியர் அப்துல் கஃபூர், பேராசிரியர் சத்தியசீலன்,நாவலர் நெடுஞ்செழியன் போன்றோரின் பேச்சை அவர்களைப்போலவே பேசியும் காட்டி மனதில் பதியவைத்தார்.

“கொலைவாளினை எடடா-மிகக்
 கொடியோர் செயல் அறவே…
…………………………………..”

என்ற பாவேந்தரின் பாடலை பாடியும் அதன் நயத்தைக்கூறியும் கவிதையை விதைத்தார். இலக்கியத்தை ஊட்டாமல் உணரவைத்தவர். அதுபோலவே நண்பர், உறவினர் ஆசிரியர் சி.பெரியதம்பி அவர்களுடைய திருமணம் என் கவிதைப்பயணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. அவருடைய திருமணத்தில் இலக்கியச்செல்வர்  குமரி அனந்தன் சிறப்புரை. அந்தத்திருமணத்தில் மணமகன் பெரியதம்பிக்கு அன்பளிப்பாக பாரதிதாசனின் கவிதைத்தொகுப்பை நண்பர்கள் அளித்திருந்தார்கள். திருமணம் முடிந்து அந்தக்கவிதைத்தொகுப்பை எடுத்துக்கொண்டு சொக்கலிங்கம் அத்தானின் கடைக்குவந்தார். அங்கே நாங்கள் ஒன்றாக அமர்ந்து கவிதையை வாசித்தோம்.

“குயில்கூவிக்கொண்டிருக்கும் கோலமிகுந்த
மயிலாடிக்கொண்டிருக்கும் வாசமுடைய
நற்காற்று குளிர்ந்தடிக்கும்.”.

எனத்தொடங்கும் பாடல். “நெஞ்சில் நிறுத்துங்கள் இந்த இடத்தைத்தான் சஞ்சீவிப்பர்வதத்தின் சாரலென்று சொல்லிடுவார்” எனமுடியும்.\அத்தொகுப்பிலுள்ள மற்ற கவிதைகளையும் படித்தோம்.
அடிக்கடி கடைக்கு எடுத்துவந்து படித்தோம்.

கூட்டு பிராத்தனைபோல் அது ஒரு கூட்டுப்படிப்பு.
இப்படித்தான் கவிதையை இனம்கண்டுகொண்டே.ன்.
இப்படித்தான் கவிதையை உள்வாங்கிக்கொண்டேன்.
இப்படித்தான் கவிதை என்னுள் விதைக்கப்பட்டது.
விதைத்தவர்கள் மறந்துவிட்டார்கள்.
விளைந்தவன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இவையும் இன்னபிறவும் பெய்தமழை தானாக மண்ணுக்குள் இறங்குவதுபோல் என்னுள் இறங்கிவிட்டது.
அது எனக்குள் விளையவும், அதை நான் வளர்க்கவும் காலங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
விதைத்தது அப்படியே விளைந்தது என்று பொருளல்ல.  விழுந்தது பிற விளைவைத்தந்தது எனலாம்.

ஒரு மயக்கம் நிறைந்த நிலையில், ஒரு கர்வம் கலந்ததொனியில் என் பயணம் தொடர்ந்தது. நானே என்னைக் கவிஞனென்று வரித்துக்கொண்டேன்.  கோவை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் 1972-ல் அடியெடுத்து வைத்தேன். அதற்குமுன் அதிராம்பட்டினம்,காதர் முகைதீன் கல்லூரியில் புகுமுக வகுப்பு.ஒரூ பேச்சுபோட்டி பேராசிரியர் அப்துல் கறீம் தலைமையில் அடைபெற்றது. கல்லூரி நாவலர் எல்லாம் கலந்துகொண்ட போட்டி.  யாரையும் கேட்காமல் யார் உதவியும் இல்லாமல் நானே பேச்சைத் தயார்செய்து கலந்துகொண்டேன். அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது. பார்வையாளர்கள் அதிகம். கன்னிமுயற்சி. பேசத்தொடங்கி சில இடங்களில் தடைபட்டு நின்று பின்தொடங்கி முடித்தேன்..அது ஓர் அனுபவம்.

இரவு உணவுவிடுத்திக்குச்செல்லும்போது அதிகமாக கண்டிதம்பேட்டை கருணாநிதியுடன்தான் செல்வேன். அவர் N. கருணாநிதி என்றுதான் எழுதுவார்..நான் அவரை ‘என்’ கருணாநிதி என்றுதான் எழுதுவேன். நாங்கள் நல்ல நண்பர்கள். அப்போது யாரோ ஒருவர் ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்தும் உள்ள ஒரே சொல் எது தெரியுமா? என்று நடந்துபோகும்போது கேட்டார். சற்றும் யோசிக்காமல் EDUCATION என்று சொல்லிவிட்டேன். அவருக்கு ஆச்சர்யம். எனக்கும் ஆச்சர்யம்தான்.

இந்த ஆச்சர்யம் இன்னொருமுறையும் நிகழ்ந்தது. அதாவது தமிழில் உள்ள மூன்று ழ,ள, ல எழுத்துக்கள் இடம்பெற்ற சொல்லைக்கேட்டபோதும் அதே வேகத்தில் தொழிலாளி என்று பதிலளித்தேன். இன்றுவரை அது எனக்குப் புதிராகவே உள்ளது.  பாரதிதாசனையும் கண்ணதாசனையும் அறிமுகப்படுத்தியவர் “தா” ‘தானா’ என்கிற செல்லத்துரை சேர்வை  மகன் திரு தங்கவேல் அவர்கள்தான். அவரோடும் இலக்கியநெஞ்சர் பெ. அண்ணாமலை அவர்களோடும் தாமரன்கோட்டையில் நடைபெற்ற பொங்கல்விழா பட்டிமன்றங்களைக் கேட்கச்சென்றிருக்கிறோம். பேராசிரியர் அப்துல்கறீம்,பேரசிரியர் நாவுக்கரசர் சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார், உதயை.மூ.வீரையன், என்.எஸ்.இளங்கோ பேராசிரியர் திருச்சி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேச்சு என் வளர்ச்சிக்கு அடியுரமாக இருந்தது. காசு கொடுக்காமல் காதுவழியாய் இலக்கியம் என்னுள் இறங்கிய காலம். “கற்றலில் கேட்டலே நன்று” என்பதும், ‘கேட்பதை’ கேள்வி ஞானமென்றதும் எத்துணை ஆழ்ந்த பொருளுடையவை! இன்றைக்கும் அடித்தளமாய் இருப்பது அன்று கேட்டவைதான். பிற்காலத்தில் பாரதிசானைப்பற்றி கவியரங்கில் பாடியிருக்கிறேன். கண்ணதாசனைப்பற்றிப் பாடியிருக்கிறேன். இழந்தவை அதிகம்.என்னிடம் இருப்பவை குறைவு. ஆனாலும் நானும் வளர்ந்திருகிறேன். என்னோடு கவிதையும் வளர்ந்திருக்கிறது.

பாரதிதாசன்! ‘புதுவையில் மையம்கொண்ட மொழிப்புயல்’

கண்ணதாசன்!

‘கணக்குப்பார்க்காத
கவிதை வள்ளல்’.
…………………
சிறுகூடல்பட்டி
வட்டியும் முதலும்
வந்துபோகும் கிராமியவங்கி
அந்த வங்கி
தமிழுக்கு வழங்கிய
வைப்புத்தொகைதான்
கண்ணதாசன்.

அது ஏதோ
சிறுதொகையல்ல
பெருந்தொகை
தமிழுக்குக்கிடைத்த குறுந்தொகை’

பக்கம்பக்கமாய் எழுதியவையெல்லாம் நினைவில் இல்லையென்றலும் இவை எப்போதும் என் நினைவில் இருக்கும்.

அண்ணாவைப்பற்றி நான் எழுதிய இயல்பான கவிதைக்குப்பின் கோவை வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில்தான் என்னிடமிருந்து கவிதை மண்ணிலிருந்து விதை முளைப்பதுபோல் வெளிவந்தது.  இயல்பாக மொட்டு மலர்வதைப்போல் கவிதை நிகழ்ந்தது. ஒரு நிறைநிலா இரவில் நண்பர்களோடு பல்கலைக்கழகப் பழத்தோட்டத்திற்குள் சென்றுவந்தோம் நிலவின் ஒளியில் நனைந்தோம். இரவின் அழகில் கரைந்தோம்.நள்ளிரவைத்தாண்டி அறைக்குத்திரும்பினோம்.  எல்லோரும் படுக்கச்சென்றுவிட்டார்கள்.நானும் என்மனமும் படுக்கவில்லை. அப்போதுதான் விழித்துக்கொண்டோம். அறைக்குள் சென்று காகிதத்தை எடுத்துவந்து அங்கே நாற்காலியில் அமர்ந்து எழுதத்தொடங்கிவிட்டேன்.
உணர்வுகளை எழுத்துக்களாய்க் கொட்டிக்கொண்டிருந்தேன். இலக்கணம் தெரியாமல், எதுகைமோனை புரியாமல் வரைந்துகொண்டிருந்தேன் கவிதை. இதோ அந்த இலக்கணமில்லாமல் இதயம் நிறைந்துவழிந்த நிறைநிலா கவிதை  உங்களுக்கும்:

    “பட்டவிழிப்பார்வை கண்டு
     பாவைமுகம் சுளிப்பதுபோல்
     வெட்டவெளி வானத்திலே -வீதி
     உலவிவரும் வெண்ணிலவே
     வட்டென்ற திருமுகமும்
     வழங்குமுன் இளங்கதிரும்
     பட்டுடலைப் போர்த்தியதுபோல்
     பகட்டுமுன் இளமேனி
    ஆ டையற்று நீவிளங்கும்
    அலங்கார காட்சி என்னை
    ஆடை யற்று  நீவிளங்கும்
    அலங்கோல காட்சி என்னை
    இதழுதிர்ந்த மலர்போலே
    இறகொடிந்த மயில்போலே
    நினைவிழந்து பொம்மையாகி
    நீந்துகிறேன் உன்னழகில்
    நினைவுகொள் வெண்ணிலவே”

இப்படித்தான் கூடுடைத்துக்கொண்டு வருவதுபோல் இக்கவிதை என்னிடமிருந்து வெளிப்பட்டது. உணர்வெழுச்சியைத்தவிர என்னிடம் எதுவும் இருப்பாக இல்லை. சுத்த சுயம்பாக வெளிவந்த கவிதை இதுதான். “ எனது கவிதைக்காக நான் காத்திருப்பேன். அது எனக்காக காத்திருக்கும்” என்ற லெபனான் நாட்டுப்பெண் கவிஞர் ஜோமனா ஹத்தாத் சொன்னதுபோல் ஒருவருக்காக ஒருவர் காத்திருந்து வளர்ந்தோம்; வளர்வோம்.  வரும் 9)

pichinikkaduelango@yahoo.com