பத்து நாட்கள் பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (5 ) – அகிர குரோசாவாவின் (Akira kurosawa) ‘டேர்சு உசாலா’ (Dersu Uzala – 1975)

ஜப்பானியத் திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்  ‘டேர்சு உசாலா’ திரைப்படம் இவ்வரிசையில் என் அடுத்த  தேர்வு. ‘டேர்சு உசாலா’ (Dersu Uzala) ருஷ்யாவின் தூரகிழக்குபகுதியான பனி சூழ்ந்த சைபீரிய வனப்பகுதியில் ஆய்வுப்பணிகளைச் செய்த ஆய்வாளர் விளாமிடீர் ஆர்செனியேவ் (Vladimir Arsenyev) தன் அனுபவங்களைப் பயண நூல்களாக வெளியிட்டுள்ளார். அவ்விதமான ஆய்வுப் பயணங்களிரண்டை மூலக்கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமே ‘டேர்சு உசாலா’. திரைப்படம் இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதற்பகுதி முதற்பயணத்தில் அவருக்கு அறிமுகமாகிப் பயணத்தின் முடிவில் மீண்டும் தன் வனப்பகுதிக்கே திரும்பும் அப்பகுதி வேட்டக்காரனான பூர்வீக மனிதன் ஒருவனைப் பற்றி விபரிக்கின்றது. அவனது பெயர்தான் டேர்சு உசாலா. திரைக்கதை ஆய்வாளரின் பயணங்கள் பற்றிய நனவிடை தோய்தலாக ஆரம்பமாகின்றது.

இரண்டாம் பகுதி அடுத்த பயணத்தை மையமாகக்கொண்டது. ஏழு வருடங்கள் கழிந்து மீண்டும் அவர் அப்பகுதிக்கு நில அளவை ஆய்வுக்காகச் தன் குழுவினருடன் செல்கையில் மீண்டும் அம்மனிதன் எதிர்ப்படுகின்றான். பயணத்தின் முடிவில் டேர்சு உசாலா பார்வைக்குறைபாட்டினை உணர்கின்றான். அக்குறைபாட்டுடன் தனித்து அவ்வனப்பகுதிக்குள் தன்னால் தப்பிப்பிழைக்க முடியாதென்று உணர்கின்றான். அதன் காரணமாக இம்முறை அப்பயண முடிவில் அவன் ஆர்னிசேவுடன் அவருடைய இல்லத்துக்குத் திரும்பச் சம்மதிக்கின்றான். இவ்விதம் திரும்பும் அவன் நகரம் தன் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்புடையதல்ல என்பதை உணர்கின்றான். இதற்கிடையில் அவன் ஆர்செனியேவின் குடும்பத்துடனும் குறிப்பாக அவரின் பால்ய வயதுப்பையனுடனும் நன்கு பழகி விடுகின்றான். இறுதியில் நகர் அவனது வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையென்பதால் காடு நோக்கித் திரும்புகின்றான். திரும்பும் வழியில் அவனுக்கு என்ன நடக்கின்றது? என்பதை நாவல் விபரிக்கின்றது. அதுதான் நாவலின் கிளைமாக்ஸ்.

இப்படம் ஒரு ஜப்பானிய & ருஷ்ய கூட்டுத்தயாரிப்பு. ருஷ்ய மொழியில் உருவானது. பிரதான பாத்திரங்களில் ருஷ்ய நடிகர்களே நடித்துள்ளனர். ஆய்வாளராக நடித்திருக்கும் யூரி சொலொமின் (Yuri Solomin) , பூர்வீக மனிதன் டெர்சு உசாலாவாக நடித்திருக்கும் மக்சிம் முன்ஷக் (Maksim Munzuk) இருவருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றார்கள். நடிப்பும், ஒளிப்பதிவும் & இசையும் படத்தின் முக்கிய சிறப்பம்சங்கள். இயற்கை வளம் மலிந்த ருஷ்யாவின் தூரகிழக்குப் பகுதியில் வாழ்ந்தது போன்ற உணர்வினை எந்நேரமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பல்வகை மிருகங்களின் ஒலிகள் ஏற்படுத்தி விடுகின்றன. ஆய்வாளருக்கும், பூர்வீக மனிதனுக்குமிடையிலுருவாகும் தூய்மை நிறைந்த திரைக்கதையின் முக்கிய அம்சம். அதனைச் சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள், ஒளிப்பதிவு, இசை மற்றும் நடிப்பு எல்லாமே ஒத்துழைக்கின்றன. இப்படத்தை ஒரு தடவை பார்த்தாலும் , பிரதான பாத்திரமான பூர்வீக மனிதனான டேர்சு உசாலாவை ஒருபோதுமே மறக்க மாட்டீர்கள்/ கூடவே ஆய்வாளரையும் பாத்திரத்தையும், அவர்களுக்கிடையில் நிலவிய தூய அன்பையும் மறக்க மாட்டீர்கள்.

பத்து நாட்கள் பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (5 ) - அகிர குரோசாவாவின் (Akira kurosawa) 'டேர்சு உசாலா' (Dersu Uzala - 1975)

பூர்வீக மனிதர்களின் வாழ்க்கையை நகரத்து , நாகரிக மனிதனின் செயற்பாடுகள் எவ்விதம் சிதைத்து விடுகின்றன என்பதையும் மறைபொருளாகக்கொண்டுள்ள மூலக்கதையின் நோக்கத்தைச் சிதைக்காமல் இயக்கியுள்ளார் இயக்குநர் அகிரா குரோசாவா. இத்திரைப்படத்துக்கு 75ஆம் ஆண்டுக்குரிய மிகச்சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலைத்தேயத் திரையுலகை மிகவும் பாதித்த ஆசிய இயக்குநர்களில் அகிரா குரோசாவா முதன்மையானவர். இவரது ‘ஏழு சாமுராய்கள்’ திரைப்படம் பல வாசூலில் சாதனை புரிந்த ஹாலிவூட் திரைப்படங்களில் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படம். குறிப்பாக ‘தி மக்னிவிஷன்ட் செவன்’ , ‘ஸ்டார் வார்ஸ்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பத்து நாட்கள் பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (5 ) - அகிர குரோசாவாவின் (Akira kurosawa) 'டேர்சு உசாலா' (Dersu Uzala - 1975)

இயக்கம்: akira kurosawa

திரைக்கதை: அகிரா குரோசாவா & யூரி நகிபின் (Yuri Nagibin)

இசை: Isaak Shvarts

ஒளிப்பதிவு: Asakazu Nakai

நடிப்பு: பிரதான நடிகர்கள் – யூரி சொலொமின் & மக்சிம் முன்ஷிக்

https://youtu.be/R13e2ZrU8Vc

ngiri2704@rogers.com