இலங்கைத்தமிழ்க்கவிதை வரலாறு, இலங்கைத்தமிழ்க்கவிதை போன்ற தலைப்புகளில் தொகுப்புகளை வெளியிடுவோர் கவனத்துக்கு சில கருத்துக்களைக்கூற விரும்புகின்றேன். இவ்விதமான பொதுவான தலைப்புகளைக்கொடுத்துவிட்டு, இதுவரை கால இலங்கைத்தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்த கவிஞர்களின் கவிதைகள் எதுவுமின்றித்தொகுப்புகளை வெளியிடுவதன் மூலம் நீங்கள் புரியும் முக்கியமான தவறாக நான் கருதுவது எதிர்காலச்சந்ததிக்கு ஈழத்துத்தமிழ்க்கவிதை பற்றிய பிழையான பிம்பத்தினைச்சித்திரிக்கின்றீர்கள் என்பதாகும். அடுத்த தவறாக நான் கருதுவது: எந்தவிதப்பயனையும் எதிர்பாராது தம் வாழ்வினை எழுத்துக்காக அர்ப்பணித்து மறைந்த படைப்பாளிகளின் படைப்புகளை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அவர்களை அவமதிப்பு செய்கின்றீர்கள் என்பதாகும். முக்கியமான காரணங்களிலொன்று: இவ்விதமான தொகுப்புகளுக்காகப் படைப்புகளைச் சேகரிப்பவர்கள் முறையான ஆய்வுகளைச்செய்வதில் ஆர்வமற்று, நூல்களாகக வெளிவந்த கவிஞர்களின் தொகுப்புகளை மட்டுமே கவனத்திலெடுத்து, தொகுப்புகளை விரைவிலேயே கொண்டுவந்து அத்தொகுப்புகள் மூலம் தம்மை இலக்கியத்தில் நிலைநிறுத்த வேண்டுமென்ற அவாவுடன் செயற்படுவதுதான். ஈழத்துத்தமிழ்க்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் , விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல் துறைகளிலும் நூல்களாக வெளிவராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மலர்கள் என்று பல்வேறு வகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும் படிப்பகம், நூலகம் போன்ற இணைய நூலகங்கள், வலைப்பூக்கள், இணைய இதழ்கள் என்று பல்வேறு ஊடகங்களில் கூகுள் தேடுபொறி மூலம் சிறிது தேடினாலே உங்களால் பல படைப்புகளை எடுத்துக்கொள்ள முடியும்.
முதலில் இவ்விதமான ஆய்வுகளை முறையாகச் செய்யுங்கள். அதன் பின்னர் படைப்புகளை காலகட்டங்களுக்கேற்ப இனங்கண்டு, தரம் கண்டு தொகுப்புகளில் சேருங்கள். அவ்விதம் செய்து நீங்கள் வெளியிடும் தொகுப்புகள் முக்கிய ஆவணங்களாகச் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை. அவ்வாறில்லாமல் பூரணமற்ற தொகுப்புகளை, ஒரு சிலருக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவீர்களென்றால் எதிர்காலத்தில் அவ்விதமான தொகுப்புகளை வெளியிட்டு, முக்கியமான படைப்பாளிகளை இருட்டடிப்பு செய்தீர்களென்ற பழிதான் உங்களுக்குக்கிடைக்கும். இவ்விதமான இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களின் படைப்புகளையெல்லாம் தவிர்த்து விட்டு, ஒரு சிலரின் பல படைப்புகளை தொகுப்புகளில் சேர்த்து விட்டு எவ்விதம் நீங்கள் இலங்கைத்தமிழ்க்கவிதை போன்ற பொதுவான தலைப்புகளைக்கொடுக்கலாம்?
இவ்விதம் வெளியிடுவதுதான் உங்களது விருப்பமென்றால் நீங்கள் இலங்கைத்தமிழ்க்கவிதை போன்ற பொதுவான பெயர்களை அத்தொகுப்புகளுக்குக்கொடுப்பதைத் தவிர்த்துவிட்டு, ‘எனக்குப்பிடித்த ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்’, அல்லது ‘எனக்கு விளங்கிய அல்லது புரிந்த ஈழத்துத்தமிழ்க்கவிதைகள்’ போன்ற தலைப்புகளில் தொகுப்புகளை வெளியிடுங்கள். அவ்விதம் வெளியாகும் தொகுப்புகளைப்படிப்பவர்கள் அவற்றை ஈழத்துத்தமிழ்க்கவிதையின் குறுக்கு வெட்டாகக்கருதாமல், உங்கள் புரிதல்களுக்கேற்ப, உங்கள் அறிவுக்கேற்ப , நீங்கள் தொகுத்த தொகுப்புகளாகக்கருதிக்கொள்வார்கள்; புரிந்துகொள்வார்கள்.
கவிதையில் படிமங்கள் பற்றிச் சில வரிகள்…
கவிதைகளைப்பொறுத்தவரையில் க.நா.சு மற்றும் கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஆகியோரின் கருத்துகள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடே. உதாரணமாகக் கவிதைகளுக்குப் உருவகம், உவமைகளை உள்ளடக்கிய படிமங்கள் கட்டாயம் இருக்க வேண்டுமென்பதில்லை என்பதில் எனக்கும் உடன்பாடே. படிமங்கள் அழகாக, அளவோடு வந்து விழும்போதே கவிதை சுவைக்கிறது. படிமங்களற்ற எத்தனையோ நல்ல கவிதைகளுண்டு. அவ்விதமான கவிதைகள…் பாவிக்கப்படும் மொழியினாலும், கூறப்படும் கருத்தினாலும் அவை வாசகர் இதயங்களில் ஏற்படுத்தும் உணர்வினாலும் சிறப்புறுகின்றன. உண்மையில் படிமங்கள் மலிந்த கவிதைகள் என்னை ஒருபோதுமே ஆட்கொள்வதில்லை. அவ்விதமான கவிதைகளை படிமங்கள் விடுகதைகளாக்கி விடுகின்றன என்றே நான் உணர்கின்றேன். வாசகர் மனதில் ஏற்படுத்த வேண்டிய உணர்வுகளை அவை ஏற்படுத்துவதில்லை. மாறாக வாசகரைப் புதிரை அவிழ்ப்பதில் அவை ஈடுபடுத்திவிடுகின்றன. சிலருக்கு அவை பிரமிப்பை, களிப்பினைத்தரலாம்; ஆனால் எனக்கல்ல.
“எனக்கு என்னமோ இந்தப்படிமங்கள் விஷயம் முக்கியமான விஷயமாகப்படவில்லை. மொழி என்பதே மொத்தத்தில் ஒரு படிம வரிசைதான். இதைத்தனியாகக் கவிதையின் மேல் ஏற்றிவைத்துத் தேடிப்பிடித்து வளையாததை வளைத்தும் படிமங்களை உற்பத்தி செய்யும்போது கவி தன் கவிதையில் இலக்குத்தவறிவிடக்கூடும் என்று எனக்குத்தோன்றுகிறது..” – க.நா.சு கடிதம் 1981 { க.நா.சு கவிதைகள் நூலுக்கான முன்னுரையில் ஞானக்கூத்தனின் முன்னுரையிலிருந்து]
மின்னல் கீற்று – க,நா.சு
புழுக்கம் தாங்காமல் அன்றைய தினசரியை விசிறிக்
கொண்டு நடந்தேன்; இந்தப் புழுக்கத்தில் மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்.
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா! இன்பம்!
சட்டச்சட பத்துத்தூறல்கள் – ஆஹா! ஆஹா!
பத்தே பத்துத்தூற்றல்தான். – பின்னர் புழுதியைக்கிளறிய
காற்று விசிற மழை ஓடி நகர்ந்துவிட்டது கரியவானம்
பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று என்னைத்தேடிற்று
கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடையின் கீற்று
என்னைத்தொட்டிருக்கும்; உலகை அழித்திருக்கும்;
தினசரிச்செய்திகள் கற்றிருக்கும்; தூற்றல் இன்பம்
மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைத்திருக்கும்; புழுதி
எழுந்து படர்ந்திருக்கும்; உலகம் ஒழிந்திருக்கும். நான்
தனியிருந்து என்ன செய்வதென்று கை நீட்டாதிருந்தேன்.
– ‘சரஸ்வதி’, 20.9.1958