(82) – நினைவுகளின் சுவட்டில்..

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். ஹிராகுட்டுக்கு வந்த முதல் வருடம் 1950-ல் புத்தகம் வாங்க என்றால் பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருக்கும் ஜில்லா தலைநகரமாகிய சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போகும் போது அங்குள்ள கடைத் தெருவுக்கும் போய் அங்குள்ள ஒரே ஒரு சின்ன கடையையும் எட்டிப் பார்த்து வருவேன்.

 அந்தக் கடைதான் எனக்கு பெர்னார்ட் ஷா புத்தகங்களை ஒரு ரூபாய்க்கும், ஒன்றரை ரூபாய்க்கும் கொடுத்து வந்தது. அவ்வளவு தான் அக்கால பென்குவின், பெலிகன் புத்தகங்களின் விலையே. ஆறு ஷில்லிங். 6s  என்று விலை போட்டிருக்கும். ஆனால் எனக்குப் புத்தகங்கள் கொடுத்து வந்த  பாதி யின் பரிச்சயம் கிடைத்த பிறகு அவர்தான் நான் கேட்ட புத்தகங்கள், பத்திரிகைகள் மட்டுமல்ல, எனக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று அவருக்குத் தோன்றுவதையும் சொல்லுவார். அப்படித்தான் எனக்கு LIFE என்ற பத்திரிகையும் அறிமுகமாயிற்று. அது அக்காலத்தில் வெளிவந்துகொண்டிருந்த நம்மூர் Illustrated Weekly of India அளவுக்குப் பெரிய பத்திரிகை. ஆர்ட் பேப்பரில் அச்சிடப் பட்டிருக்கும். இவ்வளவும் சொல்லக் காரணம் என் தலைமுறையினருக்குத் தான் அது தெரிந்திருக்கும். இப்போது அது வருவதில்லை. அப்போதே ஹிராகுட்டில்/பின்னர் புர்லாவில் LIFE பத்திரிகை வாங்கிய ஆள் நான் ஒருவன் தான் என்று தோன்றுகிறது. அதனால் தான் அந்தப் பரிச்சயத்தை அக்கால  எனது ஆசானகளில் ஒருவரும் புத்தகங்களை என் வீட்டுக்கு வந்து விற்பவருமான பாதிக்கு நான் சமர்ப்பித்தேன். 

இப்போது எனக்கு நினைவுக்கு வரும் விஷயங்கள் அதில் பிரசுரமானவை அதிகம் இல்லை ஆனால் அந்த பத்திரிகையின் குணத்தை, அது எனக்கு பரிச்சயப்படுத்திய உலகத்தை அதன் குணத்தைப் பற்றிச் சொல்ல நினைவுக்கு வந்த அந்த விஷயங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

அக்காலத்தில், 1952-ல் அந்த பத்திரிகை மிக விரிவாக ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்களில் தொடர்ந்து பேசிய வீஷயங்களில் ஒன்று  அந்த வருடம் அமெரிக்கவில் மிகவும் பிரபலமானதும், சர்ச்சிக்கப்பட்டதுமான, டாக்டர் ஆல்ஃப்ரெட் கின்ஸேயும் (Dr. Alfred Kinsey) அவர் குழுவினரும் நடத்திய விரிவான கருத்துக் கணிப்பும் அதன் விளைவாக அவர்கள் வெளியிட்ட Sexual Behaviour of American Males and Females என்ற புத்தகம். அது மிகுந்த சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியது. அது விஞ்ஞான முறையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பாக இருக்க முடியாது. இந்த சர்வேக்கும் கருத்துத் திரட்டலுக்கும் அவர் குழு எடுத்துக்கொண்ட உத்தேச மாதிரி ((Random samples) உரிய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகள் தானா என்ற கேள்விகள் எழுந்தன. உத்தேசம் என்றால் தெருவில் நின்று எதிர்ப்பட்டவரைக் கேட்பதல்ல.  உத்தேச மாதிரிகள் குறைந்த பட்ச தவறுகளோடு மொத்த ஜனத்தொகையின் கருத்தை பிரதிபளிப்பதாக இருக்கவேண்டும். அப்படி மாதிரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் முறையுண்டு.  அப்படியே தேர்ந்தெடுத்திருந்தாலும், அந்த மாதிரிகள் தங்கள் பாலியல் உறவுகளையும், ஆசைகளையும், நடப்புகளையும் பற்றிச் சொன்ன பதில்கள் எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும். சிலர் மறைக்கக் கூடும். சிலர் டம்பமாக தற்பெருமைக்குச் சொல்லி யிருக்கக் கூடும். என்றெல்லாம் கேள்விகள்  எழுந்தன.

காரணம், யாரும் தம் சொந்த ரகசியமான பாலியல் அனுபவங்களைப் பற்றி, சர்வே எடுக்க வருவரிடம் சொல்வார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றல்ல. இதென்ன, படிப்பு, சம்பளம், வயது, குடும்பத்தில் எத்தனை பேர் போன்ற விவகாரமா என்ன? அல்லது கேள்வி கேட்பது தனியறையில் தன் மருத்துவரா?

உதாரணத்திற்கு என் நினைவில் இருக்கும் சில விவரங்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் அனுபவங்கள் பள்ளிப் பருவத்திலியே பெரும்பாலான மாணவர்களுக்குக் கிடைத்து விடுகிறது.  அவர்கள் ஏதும் ஏக பத்தினி விரதமேற்கொண்ட ராமர்களோ, புல்லானாலும் புருஷர் கல்லானாலும் கணவர் என்று பதி பக்தி கொண்ட அருந்ததிகளோ அல்லர். வெகு சகஜமாக இதை எதிர்கொள்ளும் சமுதாயம் அது. ஏமாற்றம் இருக்கும் தான். மனம் வேதனைப் படும் தான். அதற்காக வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளும் சமுதாயம் அல்ல.

வெகு சகஜமான பெரும் எண்ணிக்கையில் நிகழும் திருமணங்களும், வெகு சீக்கிரம் அதிக மனத் தடையோ வாழ்க்கை பாழடைவோ இல்லாது நிகழ்ந்து விடும் விவாக ரத்துக்களும், நிறைந்த சமுதாயம். அமெரிக்காவில் மாத்திரமல்ல. மேற்கத்திய சமுகம் முழுவதிலும் நிகழ்வது தான். அது பற்றி அதிகம் மன வேதனைப் படும் மனங்கள் அல்ல. அதனாலும் சமுதாயத்தால் யாரும் ஏற இறங்கப் பார்க்கப்படுவதும் இல்லை. 

அப்படிப் பட்ட சமுதாயத்தில் இது நிகழ்வதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கும். நாம் நினைத்தும் பார்க்காத சந்தர்ப்பங்களாக அவை இருக்கும். கணவனின் மீது கொண்ட பாசத்தாலேயே கூட இது நிகழ்வதாக கின்சேயின் ரிப்போர்ட் சொல்கிறது. தன் கணவனின் நண்பர்கள் அடிக்கடி சந்திப்பவர்கள், நெருங்கிப் பழகுகிறவர்கள் இடையே இது நிகழ்ந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண்கள் தங்கள் கணவரின் நண்பர்கள் தன்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள். தன் கணவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நண்பர்கள் அப்படி நடந்து கொள்ள விலலை. என்னமோ அவர்களுக்கு தன்னிடம் அப்படி ஒரு ஆசை ஒவ்வொரு சமயத்தில் ஏற்பட்டு விடுகிறது. தானும், தன் கணவருக்கு மிக நெருங்கியவராயிற்றே, அவரை உதறித் தள்ளுவதோ, அவர் ஆசைகளை மறுப்பதோ தன் கணவரை வருந்தச் செய்யுமே என்று சம்மதித்ததாகச் சொன்னார்களாம்.

இப்படி எத்தனையோ வித உறவுகள். உறவு பங்கங்கள், இருந்த போதிலும் பெரும்பான்மையோருக்கு அதை ஒப்புக்கொள்வதோ அதை வெளிப்பட ஒரு சர்வேயில் கருத்துக் கணிப்பை உலகறியச் செய்வதோ அந்த சமுதாயத்திற்கு சம்மதமிருப்பதில்லை.

எது எப்படியானாலும் அந்த வருடங்களில் பெரும் பரபரப்பையும் சச்சரவையும் கிளப்பியதென்றாலும் கின்சே ஒன்றும் ஃப்ராய்ட் ஆகிவிடவில்லை. இப்போது எவ்வளவு பேருக்கு அது நினைவிருக்கும் என்பது தெரியாது. வெகு சீக்கிரம் அந்த பரபரப்பும் அடங்கி விட்டது

நினைவிலிருப்பவைகளில் இன்னொன்று Life பத்திரிகையில் மர்ரிலின் மன்றோவுடனான ஒரு பேட்டி. அது மிகவும் சுவாரஸ்யமானதும், ஒருவரைப் பற்றி நாம் அது காறும் நினைத்திருப்பதற்கு மாறான ஒரு சித்திரத்தை மனதில் பதித்துவிடும் ஒன்றாகவும் இருந்தது. அதை நான் வெகு நாட்கள் பத்திரபப்டுத்தி வைத்திருந்தேன். ஆனால் பின்னர் எப்போது எந்த இடமாற்றலில் தவறியது என்று தெரியவில்லை. ஒவ்வொரு இடமாற்றலின் போதும் சேர்ந்தது எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல முடியாததால், அவசரத்தில் கழித்துக் கட்டலில் தவறுகள் நேர்ந்து விடுகின்றன.

மர்ரிலின் மன்றோவின் ஆரம்பங்கள் மிக கொடுமையானவை. தந்தையை அறியாதவர். தாயோ ஒரு மன நோயாளி, தன் இச்சைக்கு யாரிடமும் உறவு கொள்ளும் ஸ்திர புத்தி அற்றவள். யாரோ வளர்த்து வளர்ப்புத் தாயும் பெற்றதாயும் சண்டை போட்டுக்கொள்வார்கள். பின்னர் பத்திரிகைகளின் அட்டைப் படத்துக்கும் விளம்பரத்துக்கும் நிர்வாணமாக போஸ் கொடுத்ததும், சினிமா உலகில் யார் யாராலோ பந்தாடப்படுவதும் அனேகமாக சினிமா உலகில் புக விழையும் எந்த பெண்ணுக்கும் எங்கும் நேர்வது தான். அந்த அனுபவங்கள் தொடர்ந்த சோக நிகழ்வுகள்

பள்ளி வயதில் வலிய உறவு கொள்ள முயன்ற, வளர்ப்புத் தந்தையின் பிள்ளைகள் தொடங்கி, கால்பந்தாட்டக்காரர் தொடங்கி, அமெரிக்க ஜனாதிபதியும் ஜான் கென்னடியும் அவர் இளைய சகோதரர் ராபர்ட் கென்னடி  வரை, இடையில் எத்தனை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், மார்லன் ப்ராண்டோ போன்ற தலை சிறந்த கலைஞர்கள், யாரைச் சொல்வது யாரை விடுவது? எல்லோராலும் அலைக்கழிக்கப்பட்டவர், கடைசியில் அவருக்கு அனுதாபத்தோடான உறவு கிடைத்தது அமெரிக்க நாடகாசிரியர் ஆர்தர் மில்லரிடம். இத்தகைய ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அனாதையாக்கப்பட்டு எல்லாராலும் பந்தாடப்படும் அலையாடப்படும் வாழ்க்கையே வாழ்ந்த, ஒரு கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப் பட்ட ஒருவரிடம் என்ன எதிர்ப்பார்க்கப்படும்? ஆனால் ஆச்சரியம் அவர் பதில்களில் நான் கண்டது, ஒரு நடிப்புக் கலைக் கல்லூரியில் நடிப்பில் தேர்ச்சி பெற்றவரும் அது பற்றி  நிறைய ஆழமாகச் சிந்திப்பவரும், தம் சிந்தனைகளுக்குத்  திறம்பட .மொழி உரு கொடுக்கத் தெரிந்தவருமான ஒருவரை. இதெல்லாம் அவருக்கு எந்த சமயத்தில் யாரிடமிருந்து கற்றது? எந்த படத்தில் நடித்ததால் கிடைத்தது? ஒரு கவர்ச்சிக்கன்னி, யிடமிருந்து, பத்திரிக்கைகளின் அட்டைப்படத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்கும் ஒரு பெண்ணிடமிருந்து எதிர்ப்பார்க்கக் கூடியதல்ல அந்த பேட்டியும் அந்தப் பேட்டீயில் மாரிலின் மன்றொ தன்னைப் பற்றியும், தான் சினிமாவில் நடித்தவை பற்றிய, பொதுவாக நடிப்பு பற்றி அவர் வெளிப்படுத்திய சிந்தனைகளும். நான் நினைத்துப் பார்த்தேன், எத்தனை பேர் தமிழ்த் திரையுலகில் கோலோச்சும் நடிக நடிகைகள் இந்த அளவில் தம்மைப் பற்றி தம் நடிப்பு பற்றி, தம் நடிப்புலக அனுபவங்களைப் பற்றி சிந்தித்திருக்கக் கூடும், பேசக்கூடும், என நான் நினைத்ததுண்டு

நம் சினிமாவோ, நம் சினிமாவை உருவாக்கும் தமிழ் சமுதாயமோ, அது பற்றிப் பேசும் நம் மக்களும், பத்திரிகை உலகமுமோ அத்தகைய கலைச் சூழலைப் பெற்றிருக்க வில்லை.

vswaminathan.venkat@gmail.com