‘திறனாய்வு என்றால் என்ன?’ என்னும் நூலுக்கான அணிந்துரையில் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: ‘… இந்த எழுத்துக்கள் பற்றிய சுய மதிப்பீட்டில் இவர் விமர்சனம் திறனாய்வு (Criticism)) என்ற பதத்தைத்தவிர்த்து மதிப்புரை (Review) என்ற பதத்தினையே பயன்படுத்தி வருகின்றார்…’ இக்கூற்றில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘விமர்சனம்’, ‘திறனாய்வு’ ஆகிய பதங்களை ஒரே அர்த்தம் கொண்டவையாகப் பயன்படுத்துகின்றார்.
கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் “திறனாய்வு (தமிழ்) விமர்சனம் (வடமொழி) ஆகிய இரண்டு பதங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. நமது பழைய தமிழ் நூல்களில் ‘விமரிசன்’, ‘விமரிசனம்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘ என்பார் [‘திறனாய்வு என்றால் என்ன’; பக்கம் 27].
எழுத்தாளர் சுபைர் இளங்கீரனும் தனது ‘திறனாய்வு’ என்னும் கட்டுரையில் திறனாய்வு , விமர்சனம் என்னும் சொற்பதங்களை ஒரே அர்த்தத்தில் மாறி மாறிப்பயன்படுத்துவதை அவதானிக்கலாம் (‘நூல்: தேசிய இலக்கியமும், மரப்புப்போராட்டமும்’; பக்கம் 88]. இக்கட்டுரையின் மூல வடிவம் ‘புதுமை இலக்கிய மலர் (1962)’ தொகுப்பில் வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.
கலாநிதி க.கைலாசபதி தனது ‘இலக்கியமும், திறனாய்வும்’ நூலிலுள்ள ‘திறனாய்வுக்கொள்கைகள்’ கட்டுரையில் ‘ திறனாய்வு என்ற சொல அண்மைக்காலத்திலேயே விமர்சனம் என்னும் பொருளில் வழங்கப்பெற்று வருகிறது’ [பக்கம் 132] என்பார்.
பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி கைலாசபதி, கே.எஸ்.சிவகுமாரன் உட்பட திறனாய்வு, விமர்சனம் ஆகிய இரண்டு பதங்களும் ஒரே அர்த்தத்தைக்கொண்டவை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு. இவ்விதமானதொரு சூழலில் எழுத்தாளர் தெணியானின் ‘விமர்சனமும் திறனாய்வும்’ என்ற கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் க.நவம் அவர்களால் தொகுக்கப்பட்டு, ஜீவநதி வெளியீடாக அண்மையில் வெளிவந்த ‘பார்க்கப்படாத பக்கங்கள்’ என்ற தெணியானின் நூலிலுள்ள கட்டுரையிது.
அதிலவர் திறனாய்வு பற்றிக்குறிப்பிடும்போது பின்வருமாறு கூறுவார்: “விமர்சனம், திறனாய்வு ஆகிய இரண்டினையும் ஒன்றாகக்கருதி தெளிவின்றிக்குழப்புகின்ற ஒரு போக்கினை இன்றைய இலக்கிய உலகிற் காணலாம். விமர்சனம் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தை உரைத்து உரசிப்பார்ப்பது. குறித்த இலக்கியத்தின் பல்வேறு அமசங்களை கூர்ந்து நோக்கி அதன் குறை நிறைகளைக் கணிப்பீடு செய்வது. திறனாய்வு என்பது அத்தகைய ஒன்றல்ல. ஓர் இலக்கியத்திறனை அதாவது சிறப்பினை மாத்திரம் ஆய்ந்து கண்டு கொள்வது. … திறனாய்வு என்பது ஒரு வகையில் அணிந்துரை போன்றதே.” [ பக்கம் 78]
மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் “திறனாய்வு என்பது வேறு. விமர்சனம் என்பது வேறு என்பதனைச் சில விமர்சகர்களே விளங்கிக்கொள்ளாததுபோல், அணிந்துரை என்பதனையும் தெளிவாகப்புரிந்துகொள்ளாத படைப்பாளிகள் சிலர் அவையே தமது நூலுக்கான சிறந்த விமர்சனம் எனவும் கொள்ளத்தலைப்படுகின்றனர்.”
எழுத்தாளர் தெணியானின் எண்ணப்படி தமிழ் இலக்கிய விமர்சகர்களான கலாநிதி க.கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி, கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன், எழுத்தாளர் :இளங்கீரனுட்படத் தமிழ் இலக்கிய உலகின் படைப்பாளிகள் பலரும் திறனாய்வும், விமர்சனமும் ஒன்றெனத்தவறாகக்கருதுகின்றார்கள்:. இவ்விதமாகத்தமிழ் இலக்கிய உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயத்தை மறுத்துக்கருத்துக்கூறும்பொழுது அதனைத்தர்க்கபூர்வமாக அணுகி, நிறுவி வெளிப்படுத்த வேண்டும். ஆனால் எழுத்தாளர் தெணியானோ மிகவும் மேலோட்டமாக ‘”விமர்சனம், திறனாய்வு ஆகிய இரண்டினையும் ஒன்றாகக்கருதி தெளிவின்றிக்குழப்புகின்ற ஒரு போக்கினை இன்றைய இலக்கிய உலகிற் காணலாம். விமர்சனம் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தை உரைத்து உரசிப்பார்ப்பது. குறித்த இலக்கியத்தின் பல்வேறு அமசங்களை கூர்ந்து நோக்கி அதன் குறை நிறைகளைக் கணிப்பீடு செய்வது. திறனாய்வு என்பது அத்தகைய ஒன்றல்ல. ஓர் இலக்கியத்திறனை அதாவது சிறப்பினை மாத்திரம் ஆய்ந்து கண்டு கொள்வது. … திறனாய்வு என்பது ஒரு வகையில் அணிந்துரை போன்றதே.’ என்று கூறிவிட்டு அதனைச்சரியான வாதமாக ஏற்றுக்கொண்டு திறனாய்வும், விமர்சனமும் ஒன்றல்ல என்னும் தன் வாதத்தினை முன்வைக்கின்றார்.
ஆனால் அவர் சரியென்று கூறிய அவரது வாதமே மிகவும் மேலோட்டமானதாக, தர்க்கச்சிறப்பற்றதாக உள்ளபோது எவ்விதம் அவ்வாதத்தின் அடிப்படையில் திறனாய்வும், விமர்சனமும்
ஒன்றல்ல என்று கூற விழைந்தாரென்பது வியப்புக்குரியது. திறனாய்வு என்பது ‘ஓர் இலக்கியத்திறனை அதாவது சிறப்பினை மாத்திரம் ஆய்ந்து கண்டு கொள்வது.’ என்னும் தெணியானின் கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. திறனாய்வு என்னும் பதத்தில் திறன் மட்டும் இருப்பதால் திறனை மட்டும் ஆய்வு செய்வது என்று அர்த்தப்படும் என்று அவர் வந்திருக்கும் முடிவு சரியானதல்ல. திறனை ஆய்வு செய்வது என்பதற்கும் , திறனை மட்டும் ஆய்வு செய்வது என்பதற்குமிடையில் பெரிய வித்தியாசமுண்டு. திறனாய்வு என்பது வேற்றுமைத்தொகையாக அல்லது உம்மைத்தொகையாக இருக்கலாம். உண்மையில் திறனாய்வு என்பது படைப்பொன்றின் திறனை ஆய்வு செய்யும்பொழுது அப்படைப்பின் திறனற்ற விடயங்களையும் சுட்டிக்காட்டுவதுதான். திறன் இருக்கா அல்லது இல்லையா என்பதை ஆய்வு செய்வதுதான். படைப்பொன்றின் திறன் ஒன்றினை மட்டும் ஆய்வு செய்வதல்ல. ஒரு படைப்பின் திறன் ஆக்கபூர்வமான அம்சங்களைக்கொண்டிருக்கலாம். அல்லது எதிர்மறையான அம்சங்களையும் கொண்டிருக்கலாம். எனவே திறனை ஆய்வு செய்யும்பொழுது திறனை மட்டுமே ஆய்வுக்குட்படுத்துவதென்பததன் அர்த்தமல்ல. திறன் என்னும் சொல்லுக்கு திறன், ஆற்றல், சக்தி என்று பொருளுண்டு. உதாரணமாக ஒரு படைப்பின் கற்பனைத்திறனைப்பற்றி ஆய்வு செய்யும் ஒருவர் அப்படைப்பு கற்பனைத்திறனில் கற்பனையாற்றல் சிறப்புடையதா அல்லது சிறப்பற்றதா என்றுதான் ஆய்வு செய்வார். கற்பனையாற்றலின் நல்ல அம்சத்தை மட்டுமே , சிறப்புடைய அம்சத்தை மட்டுமே கவனத்திலெடுத்து ஆய்வுக்குட்படுத்துவதில்லை.
எனவே தெணியான் அவர்கள் தவறுமிடம் ‘திறனாய்வு என்பது அத்தகைய ஒன்றல்ல. ஓர் இலக்கியத்திறனை அதாவது சிறப்பினை மாத்திரம் ஆய்ந்து கண்டு கொள்வது. என்னும் கூற்றில்தான். அடுத்து அவர் ‘ திறனாய்வு என்பது ஒரு வகையில் அணிந்துரை போன்றதே’ என்றும் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றே. அணிந்துரை என்பது பொதுவாக நூலாசிரியர் அல்லாத வேறு ஒருவரால் நூல் பற்றிய அறிமுகத்தைச் செய்வதுதான். நூலாசிரியரால் எழுதப்படுவது ‘முன்னுரை’யாகும். ஆனால் ஒரு சிலர் அணிந்துரையினையும் திறனாய்வு அல்லது விமர்சனக்கட்டுரையாக எழுதுவது வழக்கம. ஆனால் அணிந்துரை என்பதன் நோக்கம் நூல் பற்றிய அறிமுகம்தான்.