(85) – நினைவுகளின் சுவட்டில் …

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிகை. தினசரிப் பத்திரிகை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்கு பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிகைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட கழக படிப்பகத்தில் அப்போது வந்து கொண்டிருந்த தினசரி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் எதுவும் கிடைக்காது. கழக பிரசார பத்திரிகைகள் தவிர வேறு எதற்கும் அங்கு இடம் இருந்ததில்லை. அந்த பழக்கத்தில் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்ததும் விடுதலை பத்திரிகைக்கு பணம் கட்டி வரவழைத்தேன். கண்ணில் பட்ட அதைப் பார்த்த செல்லஸ்வாமி. அவர்தான் ஹிராகுட்டில் எனக்கு போஷகர் மாதிரி, “என்ன இதையெல்லாம் படிக்கிறாய்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவருக்கு அது தான் விடுதலை பத்திரிகையோடு முதல் பரிச்சயம். நான் அப்போது விடுதலைப் பத்திரிகையை மீறி வளர்ந்து விட்ட போதிலும், ஏதோ பழக்க தோஷத்தில் ஒரு தினசரி என்று தான் அதை வரவழைத்தேன். அந்த முதல் மாசத் தோடு விடுதலையை நிறுத்தினேன்.  

அடுத்த சில மாதங்களில் மகாநதியின் அக்கரையில் கட்டப்பட்டிருந்த புர்லா என்ற காம்ப்புக்கு நாங்கள் மாறியதும் கல்கத்தாவிலிருந்து வரும் அம்ருத் பஜார் பத்ரிகா, ஸ்டேட்ஸ்மன், ஆனந்த பஜார் பத்ரிகா (இது வங்காளி பத்திரிகை) பின் ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் என்று நினைக்கிறேன், ஆக, இம்மூன்று பத்திரிகைகள் புர்லாவில் கிடைத்தன. அம்ரித் பஜார் பத்ரிகா துஷார் காந்தி கோஷ் என்னும் தேசீய போராட்ட வீரர் நடத்தியது. அது தான் அதிகம் புர்லாவுக்கு வந்தது. ஸ்டேட்ஸ்மன், வெள்ளையர்கள் ஆரம்பித்த பத்திரிகை. அந்நாட்களில் சென்னையில் மெயில் என்ற பத்திரிகைக்கு என்ன அந்தஸ்தும் வரவேற்பும் சென்னை மாகாணத்தில் இருந்ததோ அத்தகைய வரவேற்பு பொதுவாக வங்காளிகளிடத்தும் புர்லாவிலும் அதற்கு வரவேற்பு இருந்தது. மேட்டுக்குடி அந்தஸ்து உள்ள பத்திரிகை ஆதலால் நமக்கு அது வேண்டாம், வெள்ளையர்கள் சமாசாரங்கள், என்பது போல. அம்ரித் பஜார் பத்திரிகாவின் வாசகனானது நான் புர்லா போனது.

அதில் தான் ஜே.பி.எஸ் ஹால்டேன் பிரிட்டீஷ் அரசின் சூயஸ் தாக்குதலை எதிர்த்து பிரிட்டீஷ் குடி உரிமையை உதறி, இந்தியாவில் தங்கலானார். அவர் அம்ரித் பஜாரில் எழுதுவார். அது பின்னர் நடந்தது. அதற்கு முன்னால் கம்யூனிஸ்ட் இண்டர்நேஷனிலின் செயல்களில் பங்கு கொண்டு, மெக்ஸிகோவுக்கு என்று தான் நினைக்கிறேன் கம்யூனிஸ்ட் புரட்சியை அங்கு  தொடங்க ஆலோசராக, வழிகாட்டியாக, கொமின்டெர்ன் பிரதிநிதியாக, அங்கு சென்றார். லெனின், ட்ராட்ஸ்கி போன்றோருடன் சமதையாகப் பழகியவர். இந்தியா தந்த முதல் கம்யூனிஸ்ட் புரட்சி வீரர். நான் புர்லா வாழ்க்கை பற்றிப் பேசும் காலத்தில் அவர் அரசியல் வாழ்க்கையைத் துறந்து ஓய்வில் இருந்தவர். அவர் அம்ரித் பஜார் பத்திரிகையில் எழுதி வந்தார். கம்யூஸ்ட் புரட்சி சைனாவில் வெற்றி பெற்றதும் மாவ் ட்சே துங் ரஷ்யாவுக்கு பயணமானார். அவருக்கு ரஷ்யாவின் உதவி தேவை. நிதி, தொழில் நுட்பம். போன்றவற்றில்.  அப்போது எம்.என். ராய் அது பற்றிய தன் அபிப்ராயங்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். இப்போது என் நினைவில் இருப்பது, ரஷ்யாவில் மாவோவுக்கு ஒரு வீரரின் வரவேற்பு அளிக்கப்படும்.தான் ஆனால் ஸ்டாலின் மாவோ தன்னை மீறி வளர்வதை விரும்ப மாட்டார். மாவோ தனக்கு அடங்கியவராக, தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவே ஸ்டாலின் விரும்புவார் என்றும். ஆனால், மாவோ ரஷ்யாவிடமிருந்து உதவிகள் பெறுவதில் முனைப்பாக இருப்பாரே தவிர, ஸ்டாலினுக்கு அடங்கிய பிள்ளையாக இருக்க மாட்டார். சீன புரட்சி, ஏழை விவசாயிகளின் ஆதரவில் நிகழ்ந்த புரட்சி. தொழிற்சாலை பாட்டாளிகளின் புரட்சி அல்ல. மாவோ சீன புரட்சியின் போது ஸ்டாலினின் அறிவுரைகளை, வழிகாட்டுதலை என்றுமே ஏற்றுக்கொண்டவரில்லை. ரஷ்யாவின் உதவியும் தயையும் தேவை என்ற போதிலும், அதற்காக ஸ்டாலினிடம் கைகட்டி நிற்பவரில்லை மாவோ. ஆகவே ஏதோ வெளிதோற்றத்துக்கு தோளோடு தோள் இணைந்து நின்று போஸ்கொடுத்தாலும், இருவரும்  சேர்ந்து அமெரிக்க எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினாலும், சோஷலிஸ தோழமைக்கு உரக்க குரல் கொடுத்தாலும், அது அமெரிக்காவைப் பயமுறுத்தத்தானே ஒழிய இருவரும் ஒருவரை ஒருவர் நட்புணர்வோடு இணையப் போவதில்லை என்று எழுதினார். இப்போது எனக்குத் தோன்று கிறது, 1951-ல் இப்படி ரஷ்ய- சீன உறவுகளைப் பற்றி இவ்வளவு தீர்க்கமாக, தீர்க்க தரிசனத்தோடு எழுதத் தெரிந்தவருக்கு கொமிண்டெர்னின் பிரதி நிதியாக புரட்சி விளைவிக்க எப்படி கிளம்பினார்?, மாவோவையும் சைனாவையும் புரிந்து கொண்டது போல, இந்தியாவையும் காந்தி நேரு காங்கிரஸையும்  அவரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. பார்க்கப் போனால் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலேயே அவர் ஒருத்தர் தான் அறிவுக் கூர்மை கொண்டவர், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்.

பின்னர் எழுபதுகளில் தில்லியில் எனக்கு சினேகிதமான எம். கோவிந்தன் என்னும் மலையாள கவிஞர் எம்.என். ராயை தனக்கு குருவாகக் கொண்டவர். தன் மகனுக்கு மனவேந்திரநாத் என்று பெயரிட்டது எம்.என். ராயின் மேல் தனக்கு இருந்த பிடித்தத்தைத்
வெளிப்படுத்தத் தான். ஆனால் அவரை நான் ஒரு கம்யூனிஸ்டாகவே பார்த்ததில்லை. நினைக்கவுமில்லை. அப்படி அவர் தன்னைக் காட்டிக்கொள்ளவும் இல்லை. இருப்பினும் அவர் எம்.என். ராய் பிரியர். க.நா.சு வுக்கு மிக நெருங்கிய நண்பர். அவருடைய குருக்ஷேத்திரம் என்ற ஆண்டு/அரையாண்டு /காலாண்டு பத்திரிகைக்கு என்னை எழுதச் சொல்லி பிரசுரித்தார். அந்நாட்களில் க.நா.சு. எப்படி அச்சமயத்திய இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு ஆதர்சமாக இருந்தாரோ அப்படி எம். கோவிந்தன் இளம் மலையாள எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்கினார்.

ஜே பி எஸ் ஹால்டேனைப் பற்றி முன்னால் சொன்னேன். அவரும் முதலில் பிஜு பட்நாயக்கின் அழைப்பில் ஒரிஸ்ஸாவில் தங்கியவர் பின்னர் கல்கத்தாவுக்குச் சென்று வசிக்கலானார்.  அப்போது தான், அம்ரித் பஜார் பத்திரிக்காவிலோ இல்லை, ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையிலோ அடிக்கடி எழுதி வந்தார். அதில் அவர் எழுதிய ஒன்றிரண்டு கட்டுரையின் விஷயங்கள் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது

ஒரு கட்டுரையில் அவர் தன் மனைவி (அவரும் தன் கணவரைப் போல ஒரு விஞ்ஞானி) தனக்கு முதன் முறையாகக் கிடைத்த அபூர்வ அங்கீகாரத்தையும் சந்தோஷத்தையும் பற்றி தனக்கு எழுதியதைக் குறிப்பிட்டிருந்தார். இது காறும் அவர் மனைவி பங்கேற்று உரையாற்றிய கருத்தரங்கு எதிலும் அவர் உரை பற்றி சக விஞ்ஞானிகள் யாரும் ஏதும் சொன்னதில்லை. கண்டு கொண்டதும் இல்லை. அவர் உரையாற்றியதன் சுவடு ஏதும் இருந்ததில்லை. ஆனால் இம்முறை அவர் உரை கடுமையான சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் இரையானது தனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது என்றும், தன் கருத்துக்களை யாரும் புறக்கணிக்க முடியாது கடுமையாக எதிர்த்து வாதாட வேண்டிய நிலைக்கு கருத்தரங்கில் பங்கு பெற்ற சக விஞ்ஞானிகள் தள்ளப்பட்டதை உணர்ந்து தன்னையும் பொருட்படுத்த வேண்டிய ஒரு விஞ்ஞானியாக அவர்கள் அங்கீகரித்ததன் அடையாளமே இது என்று அவர் மகிழ்ந்து தனக்கு எழுதியதாகக் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதை அவர் சொல்ல வேண்டிய காரணம் இங்கு இந்தியாவில் பொருள் பொதிந்த கருத்துப் பரிமாறல் எனபதே இல்லாதிருப்பதையும் தன் கருத்துக்களின் மீதான எதிர்மறையான விவாதங்களை யாரும் இங்கு விரும்புவதில்லை என்றும் சொல்லி வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தார்

இன்னொன்று என் நினைவில் இருப்பது இந்த அறிவார்த்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணத்தைப் பற்றியது தான்.
ஹால்டேன் கல்கத்தாவில் தொடர்பு கொண்டிருந்த ஆராய்ச்சி நிறுவனம், Indian Statistical Institute. அதன் அன்றைய வெகு நீண்ட கால தலைவர் பி.ஸி. மஹலானாபீஸ் என்பவர். அவர் ஒரு  Fellow of Royal Socity of Scientists. மிக உயர்ந்த பீடம். அங்கீகாரம். இவர் தான் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை, கனரக தொழில்களுக்கு முக்கியத்வம் கொடுக்கும் வகையில் வரையும் பொருப்பு  ஜவஹர்லால் நேருவால் அளிக்கப்பட்டவர்
அத்திட்டத்தின் கைவண்ணம் மஹலானாபீஸினது தான்.
அவர் தலைமையில் இயங்கிய இன்ஸ்டிட்யூட் பற்றி ஹால்டேன் எழுதுகிறார். ஒவ்வொரு வருஷமும் நூற்றுக்கணக்கான ஆராய்வுக் கருத்துரைகள் (.doctoral theses) இந்த இன்ஸ்டிட்யூட்டின் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்படுகின்றன. அந்த நூற்றுக்கணக்கில் (ஹால்டேன் 400 த்துச் சொச்சம் என்று குறிப்பிட்டிருந்த ஞாபகம் எனக்கு) வெளியிடப்படும் கருத்துரைகள் அனைத்திலும் முதலில் பி.ஸி. மஹலானாபீஸின் பெயரும், பின் ஆராய்ச்சி மாணவரின் பெயரும் கட்டாயம் இருக்கும். எந்த ஒரு ஆராய்ச்சி அரங்கத்திலிருந்தும் ஒருவர் ஒரு ஆராய்ச்சிக் கருத்துரையை முடிக்க வருடக் கணக்கில் ஆகும். சில ஒரு வேளை ஒரு வருடத்தில் முடிவு பெறலாம். ஆனால் நூற்றுக் கணக்கான ஆராய்வுக் கருத்துரைகளில் ஒருவர் வருடா வருடம் பங்கு பெறுதல் என்பது அசாத்தியமான காரியம். இந்த அதிசயத்தை கல்கத்தா ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட்டின் ஆராய்ச்சியாளரும், அதன் தலைவரும் எப்படி வருடா வரும் 400 500 என்று ஆராய்ச்சி சாதனை செய்து விடுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருந்தார். அதை நான் எனக்கு ஹிராகுட்டில் ஆதரவு அளித்த செல்லஸ்வாமியிடம் (அவரும் அந்த ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட்டில் படித்து இங்கு எங்கள் அணைக்கட்டில் ஸ்டாடிஸ்டீஷியனாக பணிபுரிந்து வருபவர்) காண்பித்தேன். அவர் சிரித்துக்கொண்டார்.

பின்னர் நம் தமிழ் நாட்ட்டுக் கல்விக்கூடங்களிலிருந்து முனைவர் பட்டத்துக்கு ஆராயும் மாணவர்கள் மூன்று நான்கு வருடங்கள் நம் தமிழறிஞர்களின் வழிகாட்டுதலில், ஆராய்ந்து, ”சங்கக் கவிதைகளில் முலாம் பழம்”, ”புறநானூற்றில் தமிழர் வீரம்” என்று இப்படியாப்பட்ட அரிய ஆராய்ச்சிகளில் வருடக்கணக்கில் ஆழ்ந்து முனைவர் பட்டம் பெறுவதைக் காணும் போது, எனக்கு ஹால்டேனை 1950-களில் படிக்கும் போது ஏற்பட்ட திகைப்பும் கோபமும், பின் வருடங்களில் ஏற்படவில்லை. உணர்வுகள் நம் தமிழ்ச் சூழலில் மரத்துத்தான் போயின

1951-லோ அல்லது 1952—லோ தான் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை கல்கத்தாவிலிருந்தும் ஒரு பதிப்பைத் தொடங்கியது.அந்தப் பதிப்பு எங்களுக்கு புர்லாவில் மதியம் ஒரு மணிக்குக் கிடைக்கும். உண்மையில் சொல்லப் போனால், புர்லாவுக்கு எந்த பத்திரிகையுமே ஒரு மணி அளவில் தான் வரும். காலையில் காபி/டீ அருந்திக்கொண்டே பத்திரிகை பார்ப்பது என்ற சமாசாரத்தை ஜெம்ஷெட்பூர் விட்டதிலிருந்தே மறந்தாயிற்று. கல்கத்தா பதிப்பு வரத்தொடங்கியதும் . நான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குத் தாவினேன். மற்ற பத்திரிகைகள் உடனிருப்பவர்களிடம் கிடைக்கும். எந்த வங்காளியோ ஒடியாவோ அம்ரித் பஜார் பத்திரிகையைக்குத் தான் விஸ்வாசமாக இருப்பான். ஆகவே அதை இழக்கப் போவதில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றவர்களிடம் பார்க்கக் கிடைக்காது, ஒரு புதிய பத்திரிகை என்ற காரணங்களால் கவர்ச்சியாக இருந்தது. அன்று தொடங்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா வாசிக்கும் பழக்கம் சென்னக்கு குடிபெயர தில்லியை விட்டு நீங்கிய நவம்பர் 27/28=ம் தேதி 1999 வரை நீடித்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவோடு இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி என்ற வாரப் பத்திரிகையும் எனக்கு விருப்பமாகியது. அப்போது சி.ஆர். மண்டி என்பவர் ஆசிரியராக இருந்தார். வீக்லி எனக்கு பல புதிய வாசல்களைத் திறந்தது. ஒரு சிறு காம்பில் இருந்து கொண்டு உலக சஞ்சாரம் செய்ய முடிந்தது. பத்திரிகை என்றால் அதற்குத் தானே இருக்கிறது.  ஒரு சின்ன சமாசாரம். இது எத்தனை பேருக்கு புதிதாகத் தெரியவரும், எத்தனை பேர் ஆச்சரியப் படுவார்களோ தெரியாது.

ஒரு இதழில் நிறைய படங்களுடன் ஒரு கட்டுரை. பாகிஸ்தானைச் சேர்ந்த காமா என்ற பயில்வானைப் பற்றிய கட்டுரை. பாகிஸ்தானில் ஏதோ ஒரு கிராமத்து வீட்டின் முன் ஒரு மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் காமா பயில்வான் உட்கார்ந்திருக்கும் படம். அந்தக் காமா பயில் வான் உலக குஸ்திப் போட்டியை வென்றவர். அந்தக் கட்டிலில் நான் பார்த்தது எந்த கிராமத்திலும் காணும் ஷேவ் செய்யாது தாடி வளர்ந்து விட்ட கைலியும் ஒரு கசங்கிய சட்டையும் அணிந்த சுமார் எண்பது வயசு இருக்கும் என்று நாம் அனுமானிக்கத் தோன்றும் வயோதிகரை. காமா எப்போது உலக குஸ்திப் போட்டியில் பங்கு பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார் என்று தெரியாது. 1940 களில் நான் நிலக்கோட்டையில் படித்துக்கொண்டிருந்த போது நான் பள்ளி போகும் வழியில்,குறுக்கிடும் ஒரு ஓடை பாலம் கடந்ததும்  நாடார் ஹையர் எலிமெண்டரி ஸ்கூலுக்கு எதிரில் வெங்கிடாஜலபதி அய்யர் ஹோட்டலுக்கு அடுத்து ஒரு  பெட்டிக் கடை. அங்கு அங்கு விலாஸ் புகையிலை, என்.வி. ஷண்முகம் பட்டணம் பொடி, சொக்கலால் ராம் சேட் பீடி, பெருமாள் சர்பத், எல்லாம் கிடைக்கும். இப்போது இந்த அரிய பொருட்கள் எதுவும் எங்கும் கிடைக்க வழியில்லை. அந்தப் பெட்டிக்கடையின் மேலே ஒரு போர்ட். ஒரு உரலில் பெரிய உலக்கை ஒன்றை வைத்து  மீசையும் பலமான பருத்த உடலும் கொண்ட ஒருவன் இடித்துக்கொண்டிருக்கும் காட்சி பெயிண்ட் செய்த  என்.வி. ஷண்முகம் பட்டணம் பொடி விளம்பரம் கொண்ட போர்டு காணும்.  அந்த பெட்டிக் கடையில் ஒரு  பயில்வானின் போட்டோ ஒன்றும் சட்டமிடப் பட்டு தொங்கிக் கொண்டிருக்கும். அதில், நாம் WWF lதொலைக் காட்சியில்  பார்க்கும் ராக்ஷஸ மனித உருவங்களைப் போன்ற ஒருவரை, இருபதுகளில் உள்ள ஒரு பயில்வான் கதை போன்ற ஒன்றை தோளில் போட்டுக்கொண்டு காலை அகட்டிக்கொண்டு ஜட்டி மாத்திரம் அணிந்த ஒருவரின் போட்டோ இருக்கும். ஒரு நாள். “அது யாருங்க? என்று  கடைக்காரரைக் கேட்டேன். அவர் சொன்னார் ” தம்பீ, என்று நீட்டிய குரலிலாரம்பித்து, “இவர்தான் தம்பி காமா பயில்வான். இவர் நமக்கு கடவுள் மாதிரி,. உலகத்திலேயே பெரிய பயில்வான். இவரை அடிச்சிக்கிறது ஒரு பய கிடையாது உலகத்திலேயேன்னா பாத்துக்க,” என்று சந்தோஷமாகச் சொன்னார். அதற்கு ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு. புர்லாவில் வீக்லி பத்திரிகையில் அந்த ராக்ஷக உருவம் ஒரு கிழட்டு எண்பது வயது கிராமத்தானாகிவிட்ட சோகம். உலக சாம்பியன் ஒரு கயிற்றுக் கட்டிலில்.

குஸ்தி பயில்வான் வாழ்க்கையில் அது வேண்டும் சாப்பாடும், தேகப் பயிற்சியும், எப்போதுமா இருக்கும்?. அந்த ராக்ஷஸ சாப்பாடும் தேகப் பயிற்சியும் சட்டென குறைய, வயோதிகமும் சட்டென மிக வேகமாகவே வந்து சேரும் என்று சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. தி.ஜானகிராமனின் கதை ஒன்றில், தன் வாலிப வயதில் தான் வேலை செய்து வந்த பண்ணை முதலாளியை வில்வண்டியில் கூட போய் வந்த தாசியை என்றாவது ஒரு முறையாவது அனுபவித்துவிடவேண்டும் என்று சிங்கப்பூர் போய் நிறைய பணம் சம்பாதித்து, அந்த தாசியைத் தேடி வந்தவன் கதவைத் தட்டியதும் பார்த்தது முதுகு கூனி தள்ளாடி நடந்து வந்த ஒரு மூதாட்டியை. அவன் தன் தாகத்தை, பணம் சேர்க்க பட்ட கஷ்டங்களைச் சொல்கிறான். “நாங்க இளமையிலே வாழும் வாழ்க்கைக்கு எங்களுக்கு மூப்பு ரொம்ப சீக்கரமாவும் வரும். கொடுமையாவும் வரும்.” என்று சொல்லி அவனுக்கு ஒரு முத்தமிட்டு அனுப்புகிறாள்

vswaminathan.venkat@gmail.com