வாசிப்பும், யோசிப்பும் 85: ஆனந்த் பிரசாத்தின் ‘ஒரு சுயதரிசனம்’

எழுத்தாளர் ஆனந்த் பிரசாத் கவிதைகள் புனைவதிலும் வல்லவர். இவர் எழுதிய 21 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்று ‘ஒரு சுயதரிசனம்’ என்னும் பெயரில் 1992இல் கனடாவில் ‘காலம்’ சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்தில் ‘காலம்’ சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், ‘காலம்’ சஞ்சிகை வெளிவருவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களிலொருவராகவும் இவர் விளங்கியிருப்பதை நூலின் ஆரம்பத்தில் ‘காலம்’ சஞ்சிகை ஆசிரியர் செல்வம் எழுதிய குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.

மேற்படி நூலினை அவர் சமர்ப்பித்துள்ள பாங்கு நினைவிலெப்போதும் நிற்க வைத்துவிடும் தன்மை மிக்கது. நூலுக்கான சமர்ப்பணத்தில் அவர் “அதிருஷ்ட்டங்கள் வந்து நான் அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது என்னைத்தடுத்தாட்கொண்ட துரதிருஷ்ட்டங்களுக்கு’ என்று நூலினைத்தனக்கேற்பட்ட துரதிருஷ்ட்டங்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நான் அறிந்த வரையில் இவ்விதம் துரதிருஷ்ட்டங்களு நூலொன்றைச் சமர்ப்பணம் செய்த எழுத்தாளரென்றால் அவர் இவராக மட்டுமேயிருப்பாரென்று எண்ணுகின்றேன்.

இக்கவிதைத்தொகுதியிலுள்ள் இவரது கவிதைகள் பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிப்பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக ‘பொறியியலாளன்’,  ‘அகதி’, ‘ஒரு சுயதரிசனம்’, மற்றும் ‘ஒரு Academic இன் ஆதங்கம்'(நூலில் acadamic என்று அச்சுப்பிழையேற்பட்டுள்ளது) ஆகிய கவிதைகளைச்சுட்டிக்காட்டலாம். கவிஞர் கனடாவுக்கு வந்த புதிதில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அக்காலகட்டத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவுமிவற்றைக்கொள்ளலாம்.

‘பொறியியலாளன்’ தொழிற்சாலையொன்றில், இயந்திரங்களுடன் மல்லுக்கட்டும் அனுபவங்களை விபரிப்பது. அவன் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றான். பலவடிவங்களில் விளங்கும் இயந்திரங்களால் உருவாக்கப்படும் உற்பத்திப்பொருள்களை எண்ணி அடுக்குவதுதான் அவனது வேலை. ஆரம்பத்தில் ஐந்து டாலர்களுக்கு ஆரம்பித்தவனின் சம்பளம் எட்டு டாலர்களை எட்டிப்பிடித்துவிட்டது. தொழிற்சாலையில் எந்நேரமும் எண்ணி எண்ணி அடுக்குவதால் வீட்டிலும்  சமையலுக்காக வெங்காயத்தை உரிக்கும்போதும், நறுக்கும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும், கனவிலும், நனவிலும் அவன் என்ணுவதை மட்டும் நிறுத்துவதில்லை. எண்ணுவதே அவன் வாழ்வாகி விடுகிறது.

இவ்விதமான இயந்திரமயமான சூழலிலும் வாழ்வு முற்றாக இயந்திரமயமாகிவிடவில்லை. அதற்குக்காரணமாக அவனது சங்கீத அறிவு விளங்குகின்றது என்பதை

இயந்திரங்களின்
சப்தத்தைக்கூட
சுரம் பிரித்துப்பார்க்குமென்
சங்கீத அதிர்வுகளால்
இன்னமும் எனக்குள் நான்
செத்துத்தொலைக்கவில்லை.

என்னும் வரிகள் எடுத்துரைக்கின்றன. கவிதையின் தலைப்பான’ பொறியியலாளன்’ என்பது கூட விளக்கும் அர்த்தத்தைப்பொறுத்தவரை நயம்மிக்கது. புன்னகையினை வரவழைப்பது.
அவன் புலம்பெயர்வதற்கு முன்னர் பொறியியலாளனாக இருந்திருக்கக்கூடும். அல்லது அதுபோன்ற தொழிலொன்றினைப்பார்த்தவனாக இருந்திருக்கக்கூடும்.  இங்கும் அவன் பல்வகைப்பட்ட பொறிகளுடன் பணிபுரிவதால் ஒருவகையில் பொறியியலாளனாகத்தான் விளங்குகின்றான் என்பதைக்கவிஞர் வேடிக்கையாகக்கூறினாலும், கூடவே புலம்பெயர்ந்த சூழலின் தாக்கத்தினையும் விபரிக்கும்

நூலின் அட்டைப்படக்கவிதையான ‘ஒரு சுயதரிசனம்’ புலம்பெயர்ந்த ஒருவரின் வாழ்க்கையை விபரிப்பதுடன் கூடவே இழந்த மண்ணைப்பற்றிய கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும். தரை, ஆகாய மார்க்கமாக இவ்விதம் பல்வேறு வழிகளில் அகதியாகக் கனடாவுக்கு அரசியல் தஞ்சம் கோரிவரும் அகதி இளைஞனொருவன் தினமும் இரு வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கின்றான். ஆடைகளைக்கழிவு விலைகளில் புகழ்பெற்ற ஆடைகள் விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கி, முடி நரைப்பதற்கு முன்னர் நங்கையொருத்தியை அடைய வேண்டுமென்று அலைகின்றான். அதே சமயம் அவன் தன் கடந்த காலம் பற்றியும் சிறிது சிந்திக்கின்றான். இலக்கியம்படைத்துத்திரிந்த அவனது கடந்த காலம் கனவாகிக்கலைந்து போகும். விடியலுக்காக ஒரு காலத்தில் மார்க்சியத்தில் மூழ்கிக்கிடந்தும் எந்தவிதப்பயனுமில்லை என்ற அனுபவத்துக்குக் கவிஞர் வந்திருப்பதை,

‘புயலுமொரு விடியலெனத் தேடிக்கொண்டு
புயலாகிப் போனதொரு காலம் உண்டு
பலரும் ஓர்காலத்தில் சிவப்பில் தோய்ந்து
பார்த்தவர்கள் தானேஓர் பலனும் இல்லை.

என்னும் வரிகள் வெளிப்படுத்தும். ‘பலரும் ஓர்காலத்தில் சிவப்பில் தோய்ந்து /பார்த்தவர்கள் தானேஓர் பலனும் இல்லை’ என்னும் கவிஞரின் கூற்றில் எனக்குத்தனிப்பட்டரீதியில் உடன்பாடில்லை. ஆனால் அது கவிஞரின் முடிவு.  ஆனால் கவிஞருக்கு ஏனிந்த ‘சிவப்பில்’ இவ்வளவு ஆத்திரம்?  ‘தாடியுடனே வெறுமை வளர்த்துக்கண்ட , தார்மீகக்கோபத்தில் கண் சிவந்து , நாடியதோர் சிவப்பு நிறசாயம் போக, நாடுகளாய் அலைந்ததுவும் நிறைய உண்டு’ என்று தொடர்ந்தும் கவிஞர் குமுறுவதுமேன்?

வேலை வேலையென்று ஆன்மாவைக்கொன்று வாழும் புகுந்த நாட்டின் குளிர் வேறு கவிஞரை வாட்டுகின்றது. இதனை எண்ணிப்பார்க்கும் கவிஞருக்கு மிஞ்சுவது ஏக்கந்தான். ‘முன்னாளில் முல்லைப்பூக்கள் தேன் தெளித்த காலங்கள் கவலை துன்பந் தெரியாத  நேரங்கள் நெஞ்சில் இன்றும் தொன்றிமறைகின்ற கணம் எல்லாமேயோர் தூரவெளிப்பறவைகளாய் வட்டம் போடும்’ என்று கவிஞரை ஏக்கம் சூழ்ந்துகொள்கிறது. இவ்விதம் புகலிடச்சூழலிலிருந்து தன் கடந்த காலத்தைச்சுயதரிசனம் செய்யும் கவிஞரின் எண்ணத்தை விபரிக்கும் கவிதை ‘ஒரு சுயதரிசனம்’.

தொகுப்பின் இன்னுமொரு குறிப்பிடத்தக்க கவிதை ‘ஒரு Academic இன் ஆதங்கம்’. ஊரில் அவனோர் பட்டதாரி. இங்கோ உணவகத்தில் அவனுக்கு வேலை. அனுபவமில்லாததால் வெங்காயம் உரிக்கும்போதும் வெகுநேரம் எடுக்கின்றது. கிழங்கின் தோலினைச்சீவும்போதும் மூட்டில் மெல்லியதாக வலிக்கிறது.  நானூறு பாகை நரகக்கொதிநிலையில் கோப்பை கழுவுகின்றான். இவ்விதமாக அந்தப்பட்டதாரியின் கோப்பை கழுவும் உணவக அனுபவத்தை விபரிக்கின்றது கவிதை. அவ்வப்போது சற்று இளைப்பாறிச்செல்வதற்குள்  கோப்பைகள்  நிறைந்து குவிந்திருக்கும். மீண்டும் கோப்பை கழுவும் வேலையினை ஆரம்பிக்கையில் , கோப்பையில் மிஞ்சியிருப்பவற்றையெல்லாம் தட்டிவிடும் போதெல்லாம் அவை ஒவ்வொன்றும் பட்டப்படிப்பின் சான்றிதழ்களாய்த்தெரிகின்றது.

சற்றே இளைப்பாறி
சலாட்டையோர் கைபார்த்து
மீண்டும் உயிர்பெற்று
மெசினருகே போனாலோ
கோப்பை நிறைந்து
குவிந்து வழிந்திருக்கும்.
சாப்பிட்ட யாவுமே
சடுதியிலே மறைந்துவிட
தட்டிற் கிடப்பதைத்
தட்டிவிடும்ம் போதெல்லாம்
பட்டப்படிப்பின்
சான்றிதழ்களாய் தெரியும்.

இவ்விதம் ஆனந்த்பிரசாத்தின் கவிதைகள் பல புகலிடச்சூழலை, அச்சூழல் அகதியொருவன் மேல் ஏற்படுத்திய உளவியல்ரீதியிலான தாக்கத்தினை விபரிக்கின்றன. பொதுவாகக் கவிஞர்கள் இழந்த மண்ணைப்பற்றியும் அதன் மீதான கழிவிரக்க உணர்வுகளையும் பாடுபொருளாகக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஆனந்த் பிரசாந்தின் கவிதைகள் பல அகதியொருவனின் புகலிடச்சூழல் அனுபவங்களை, அச்சூழல் அவன் மேல் ஏற்படுத்திய உளவியற்பாதிப்புகளை விபரிக்கின்றன. அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ngiri2704@rogers.com.