பத்தி 10 :இணையவெளியில் படித்தவை

குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை”

எழுத்தாளர் குட்டி ரேவதி!எழுத்தாளர் சத்யானந்தன்கீற்று இணைய தளத்தில் வெளியான குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை” கவிதைக்கான இணைப்பு — இது.

சின்னஞ்சிறிய கவிதை. கவிதையின்  பெரும்பகுதி நேரடியானது. ஒரு இளம் பெண் தனது நம்பிக்கைகளையெல்லாம் குவித்து ஒரு இளம் பெண் காத்திருக்கிறாள் தனது காதலனுக்காக. அவளது எதிர்பார்ப்புக்கள், மனதில் பொங்கும் உற்சாகம் இவை ஒரு பெண்ணின் தரப்பிலிருந்து மிகவும் நுட்பமாகவும் அழுத்தமாகவும் தரப்பட்டிருக்கிறது. சரி நான் இதை எந்த அளவு புரிந்து கொள்வேன்? அனேகமாகப் புரிந்து கொள்ளவே மாட்டேன். ஏனென்றால் நான் ஆண். தனது காதலனை எந்த அளவு ஒரு காதலி தன் வாழ்க்கையின் மையமாக்கி, அர்ப்பணிப்புடன் அவனே யாவுமாக ஒரு வாழ்க்கையைத் தொடங்க விரும்புவாள் என்பது எனக்குப் புரிதலுக்கான ஒன்று அல்ல. என் காதலி என்னிடம் அப்படித்தான் இருக்கிறாள் என்பது கூட எனக்கு ஒரு பொருட்டல்ல. என்ன? பெண்களின் உணர்வுகள் தானே ஆண் புரிந்து கொள்ளும் கட்டாயம் என்ன இருக்கிறது என்பதே காரணம்.

அதே சமயம் குட்டி ரேவதி ஒரு எளிய காதல் கவிதையை எழுத இந்தக் கவிதை வழியாக முயலவில்லை என்பதே இதை வாசிப்பதில் நாம் கவனப்படுத்திக் கொள்ள வேண்டியது. கவிஞர் ஒரு இளம் பெண்ணின் உற்சாகத்துக்குப் பின் இருக்கும் மன எழுச்சியை மட்டும் சுட்டிக் காட்ட விரும்பவில்லை. அவர் அந்தப் பெண்ணுக்காகக் காத்திருக்கும் நிச்சயமின்மையை, அவளது பரிபூரண அர்ப்பணிப்பு எதிர் கொள்ளப் போகும் அடக்குமுறைகளையும் சேர்த்தே சொல்ல விரும்புகிறார். கவிதையின் துவங்கு பத்தியையும் இறுதி பத்தியையும் இதற்கான பதிவுகளாகத தருகிறார். துவங்கு பத்தி

ஒரு சாம்பல் பறவையைப்போல்
அம்மரத்தின் கீழ்
அதன் நிழல் அமர்ந்திருந்தது

நிறைவு பத்தி

மரமோ
ஒரு சாம்பல்பறவையைப்போல் அமர்ந்திருக்கிறது
எச்சலனமுன்றி

அதாவது தவிப்பும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கனவுமாகத் தன் காதலனுக்காகக் காத்திருக்கும் காதலிக்கு நேரெதிரான ஒன்றை அந்தக் கவிதைக்குள்ளேயே அவர் தருவதால் நான் அவளைப் பற்றிய அவளது அர்ப்பணிப்பு மிகுந்த காதல் பற்றிய புரிதலை அடைவேன் எனக் கவிஞர் கருதுகிறார்.

சாம்பல் பறவை என்றதும் நாம் குறிப்பான ஒரு பறவையை உயிரியல் பாடத்தில் தேட வேண்டாம். அவர் ஃபீனிக்ஸ் பறவையையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. ஆனால் அந்தப் பறவை எப்படியும் சாம்பலிலிருந்து தன்னால் உயிர்த்து எழுந்து விட முடியும் என்பதால் பெரிதும் நிச்சலமாக இருக்கும் என்று உருவகப்படுத்துவது கற்பனை மிகுந்த கவித்துவம். பகலில் தான் மரம் அதன் நிழல் இரண்டுக்குமே இருப்பு. இரவில் அல்ல. அதாவது நம் பார்வையின் அடிப்படையில் இரவில் அவை இரண்டுமே தென்பட வாய்ப்பில்லை. அதாவது அவை இரண்டுமே இல்லை. பகலில் உண்டு. இந்த இருமை பழகியதால் அவை நிச்சலனமானவை. சாம்பல் பறவைகளைப் போல. ஆனால் இதற்கு மாறாக நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்தைத் தன்னையே அர்ப்பணித்துத் தன் நம்பிக்கையெல்லாம் தேக்கி ஒரு பெண் முன் வருகிறாள் காதலுடன்.

சமகாலக் கவிஞர்களில் குட்டி ரேவதி நவீன கவிதையின் வீச்சை நங்கு உணர்ந்தவர். செறிவான கற்பனையும் கவித்துவமும் மிகுந்த அவரது கவிதைகளில் பெண்ணின் உடல் மனம் இயங்கும் தளங்கள் கூர்மையாக வெளிப்படுபவை. 

http://sathyanandhan.com
sathyanandhan.mail@gmail.com