என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் ஒன்பது
தீவைச் சுற்றி ஆராய்ந்து வருகையில் தீவின் மத்தியில் உள்ள பகுதியைச் சென்று பார்க்க நான் விரும்பினேன். அந்தத்தீவு மூன்றுமைல் நீளமும். கால் மைல் அகலமுமான சுற்றளவு மட்டுமே உள்ளதால், நாங்கள் புறப்பட்டு வெகுவிரைவில் அதன் மத்தியை அடைந்தோம்.
நாங்கள் சென்று பார்க்க விரும்பிய அந்த இடம் பெரிய பள்ளத்தாக்கு போன்று செங்குத்தாக நாற்பது அடி உயரத்தில் இருந்தது. அதன் இருபுறமும் மிகவும் செங்குத்தாகவும், அடர்ந்த புதர்களுடனும் இருந்ததால், அதில் ஏறிச்செல்ல நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.
வழித்தடங்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு அந்த உயரத்தை சிரமத்துடன் கடந்து சென்று அதன் உச்சியில் இருந்த பாறைகளின் மீது இல்லினோய் பக்கம் நோக்கி அமைந்திருந்த ஒரு குகையைக் கண்டோம். அந்த குகை மூன்று அல்லது நான்கு அறைகளின் அளவில் இருந்ததுடன், ஜிம் நிமிர்ந்து நின்றால் அவன் உயரத்திற்கு அது சரியாக இருந்தது. அதனுள்ளே குளுமையான தட்பவெப்பம் நிலவியது. எங்களது பொருட்களை உள்ளே வைத்துக் கொள்ளலாம் என்று ஜிம் கூறினான். ஆனால் ஒவ்வொரு முறையும் மேலும் கீழும் ஏறி இறங்க எனக்கு விருப்பமில்லை.
தோணியைமட்டும் மறைவிடத்தில் வைத்துவிட்டு, மற்ற பொருட்களையெல்லாம் அந்த குகைக்குள் மறைத்து வைத்துவிட்டால், அந்தத் தீவுக்கு யார் வந்தாலும் நாம் சுலபமாக மறைந்து கொள்ளலாம் என்று ஜிம் கூறினான். அவர்களிடம் மோப்ப நாய் இருந்தாலொழிய யாருமே என்றுமே நம்மைக் கண்டிபிடிக்கப்போவதில்லை என்றான். அத்துடன் நாங்கள் கண்ட அந்த இளம் பறவைகளின் வருகை பற்றி எனக்கு நினைவூட்டி, அவைகள் மழையின் அறிகுறிகள் என்பதால், மழை வரும் பட்சத்தில் எல்லாப்பொருட்களும் நனைந்து வீணாகப் போவதை விரும்புகிறாயா என்று என்னிடம் அவன் கேட்டான்.
எனவே நாங்கள் திரும்பிச்சென்று தோணியை குகையின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு இடத்திற்கு வலித்துக் கொண்டு வந்து சேர்த்தோம். பின்னர் அதில் இருந்த அனைத்துப் பொருட்களையும் மேலே எடுத்துச் சென்றோம். தோணியை மறைத்து வைக்கும் பொருட்டு வில்லோ மரங்கள் அடர்ந்து அதிகமாக உள்ள ஒரு மறைவிடத்தை தேடிக்கண்டுபிடித்து நிறுத்தினோம். மீன் பிடி வலையில் இருந்து சில மீன்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் மீனுக்குக் குறிவைத்து வலையைச் சரி செய்து விட்டு இரவு உணவுக்குத் தயாரானோம்.
குகையின் கதவு ஒரு பீப்பாயை உருட்டிச்செல்லும் அளவுக்குப் பெரியதாக இருந்தது. கதவின் ஒரு பக்கத்தில் உள்ள தரை கொஞ்சம் கவனிக்கப்படக்கூடியதாக இருந்தது. சம அளவிலான தரையாக அது இருந்ததால், நெருப்பு மூட்டி அதில் எங்களது இரவு உணவைத் தயாரித்தோம்.
கம்பளிகளை தரைவிரிப்பு போல் குகையின் உட்புறம் விரித்து எங்களது இரவு உணவினை அங்கே உண்டோம். குகையின் பின் பகுதியில் எங்களால் சுலபமாக எடுக்க முடிந்த இடத்தில் அனைத்துப் பொருட்களையும் வைத்தோம். சிறிது நேரத்திற்குள்ளாகவே நன்கு இருட்டி, இடியும் மின்னலும் தொடங்கியது. அசலான கோடைகாலச் சூறாவளி அது. எனவே அந்தப் பறவைகள் காட்டிய சகுனம் சரிதான் என்று நான் உணர்ந்தேன். அதன் பின்னர் மழை ரௌத்திரமாய் கொட்டத்தொடங்கியது. காற்று அப்படி பலமாக வீசி நான் பார்த்ததே இல்லை. வெளியில் உள்ள அனைத்தும் கும்மிருட்டினால் அடர்நீலம் அல்லது கறுப்பு நிறமாகத் தென்பட்டது. ஒரு வகையில் அதுவும் அழகாகத்தான் இருந்தது. கனமழை வெளுத்து வாங்கியதால் சிறிது தூரத்தில் தெரிந்த மரங்கள் தெளிவற்றுத் தென்பட்டு அதில் உள்ள மரக்கிளைகள் சிலந்தி வலை போன்று காட்சி அளித்தன.
கொடுங்காற்று வந்து மரத்தைக் கீழ்நோக்கி வளைத்து, அதன் இலைகளின் பின்புறம் உள்ள வெளிறிய நிறத்தை வெளிக்காட்டியது. அதன் பின் மிகப் பலமான காற்று மரங்களின் கிளைகளை உலுக்கியதைக் காணும்போது மரங்கள் தங்களின் கரங்களை அகலமாக விரித்துக் கையாட்டுவது போன்று இருந்தது. அந்த ஒரு கணத்தில் அப்போதே வானம் நீலமாகவும், கறுப்பாகவும் இருக்கும் போது –பாங் —- சுவர்க்கம் திடீரெனத் திறந்தாற்போல ஒரு மின்னல் வெட்டி, அதன் ஒளியில் தூரத்தே, நீங்கள் முன்பு காண முடியாத நூறு கஜத் தொலைவில் தெரிந்த மரத்தின் மேற்புறம் புயலினால் வீழ்வது கூட உங்கள் பார்வைக்குத் தென்படும்.
அடுத்த கணம் அனைத்தும் நரகத்தைப் போல் கும்மிருட்டாகி விடும். வானிலிருந்து சலசலத்து முணுமுணுத்துப் புரண்டோடி கீழ்த்திசை உலகத்தை நோக்கி இறங்குமுன்னே இடிமுழக்கம் பயங்கரமான பேரோசையுடன் கர்ஜிப்பது நீங்கள் கேட்கமுடியும். ஒரு நீண்ட படிக்கட்டுகளில் காலிப் பீப்பாய்கள் வெகுநேரம் உருண்டும், குதித்தும் வரும் ஓசை போன்றே அது இருந்தது.
“ஜிம். இது நன்றாகத்தான் உள்ளது.” நான் சொன்னேன். ” இந்த இடத்தைவிட்டு வேறு எங்கும் நான் போக விரும்பவில்லை. இன்னொரு பெரிய துண்டு மீனையும், கொஞ்சம் மக்காச்சோள ரொட்டியையும் என்னிடம் நகர்த்து.”
“நல்லது. ஜிம்முக்காக இல்லாவிட்டால், நீ இங்கு வந்திருக்கவே போவதில்லை. கீழ்ப்பகுதியிலேயே அமர்ந்து இரவு உணவு இல்லாமல், மழையில் தொப்பமாக நனைந்து இருந்திருப்பாய். ஆம். கண்டிப்பாக அப்படிதான் ஆகி இருக்கும். கோழிகளுக்கு எப்போது மழை வரும் என்று தெரிவதைப் போலவே பறவைகளுக்கும் தெரியும், தம்பி.”
பத்து பன்னிரண்டு நாட்களாகவே நதியின் நீர் அதிகப்படியாகிக்கொண்டே சென்று இறுதியில் கரைகளை மூழ்கடிக்கும் அளவுக்குச் சென்றது. தீவின் கீழான பகுதிகளில் மற்றும் தீவின் இல்லினோய் பக்கத்திலும் நீர் மூன்று அல்லது நான்கடி ஆழத்திற்கு சேர்ந்திருந்தது. இல்லினோய் பக்கத்தில் அவ்வாறாக அது பல மைல் தொலைவுக்கு விரிவடைந்திருந்தது. ஆனால், மிஸ்ஸோரி பக்கத்தில் சாதாரணமாக அதே அளவு என்றாலும், குறுக்கிலான தூரம் – தோராயமாக ஒரு அரை மைல் மட்டுமே இருந்தது ஏனெனில் மிஸ்ஸோரியின் கரை முழுதும் உயரமான பிளவுகளைத் தவிர வேறொன்றுமில்லை.
பகல்பொழுது முழுதும் தோணியை வலித்துக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சுற்றி வந்தோம். சூரியன் சுட்டெரிக்கும் வேளைகளில் கூட மிகவும் குளுமையாகவும், நிழல் தரும் அடர்ந்த மரங்களோடும் அந்தக்காடு இருந்தது. துடுப்பு வலித்துக் கொண்டே அந்த மரங்களினூடே புகுந்து வந்தோம். சில சமயங்களில் வழியில் இருந்த கொடிமரங்கள் அடர்ந்து காணப்பட்டதால், நாங்கள் வேறு வழி தேடி திரும்ப வேண்டியதாகியது. முயல்கள், பாம்புகள், மற்றும் வேறு சில மிருகங்களை உடைந்து தொங்கிய ஒவ்வொரு பழைய மரங்களிலும் காண முடிந்தது.
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குத் தீவில் வெள்ளம் சூழும்போது, பசியினால் ஏதும் செய்ய இயலாது சோர்ந்திருக்கும் விலங்குகளை நீங்கள் நேராக துடுப்பு வலித்து அவைகளிடம் சென்று உங்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் கைகளைக் கூட அவற்றின் மேல் வைத்துப் பார்க்கலாம். நல்லது. பாம்புகளையும், ஆமைகளையும் அவ்வாறு செய்யமுடியாது ஏனெனில் அவைகள் மளுக்கென்று நீரில் நழுவி ஓடி விடும். எங்கள் குகையின் மேல் உச்சி வரம்பில் அவ்வாறான விலங்குகள் அதிகம் இருந்தன. நாங்கள் மட்டும் விரும்பியிருந்தால் டன் கணக்காக செல்லப் பிராணிகள் வைத்திருந்திருக்கலாம்.
. ஒரு நாள் இரவு பைன் மரப்பலகைகளால் ஆன ஒரு மர ஓடத்தின் சிறு பகுதியைக் கண்டு பிடித்தோம். பன்னிரண்டு மீட்டர் அகலமும் பதினைந்து அல்லது பதினாறு அடி உயரமும் கொண்ட அதன் மேற்பகுதி நீரின் மட்டத்திற்கு மேல் கெட்டியான சமப்படுத்தப்பட்ட தளமாக ஆறு அல்லது ஏழு இன்ச் உயர்ந்து இருந்தது. இவ்வாறான பலகைகள் பகல் நேரங்களில் அதிகம் நதிநீரில் மிதந்து வரும். ஆயினும் பகல்பொழுது வெளிச்சத்தில் எங்களை வெளியே காட்டிக் கொள்வதில்லையாதலால் அவற்றை அப்படியே அதன்போக்கிலேயே விட்டுவிடுவோம்.
மற்றொரு இரவு, விடிவதற்குச் சற்றுமுன், தீவின் தலைப்பகுதிக்கு நாங்கள் சென்று கொண்டிருந்த போது, மரச்சட்டங்களால் ஆன ஒரு வீடு தீவின் மேற்குப் பக்கமிருந்து மிதந்து வந்துகொண்டிருந்தது. அந்த இரண்டடுக்கு வீடு ஒருபுறமாக புரண்டு சாய்ந்திருந்தது. துடுப்பு வலித்து அந்த வீட்டை நாங்கள் அடைந்து மேல்மாடி சன்னல் வழியாக உள்ளே ஏறினோம். ஆனால் அங்கே இருள் சூழ்ந்திருந்ததால், எதையுமே காண முடியவில்லை.. எனவே நாங்கள் தோணியை மறைத்து வைத்து விட்டு, அதனுள்ளே அமர்ந்து பகல்வெளிச்சத்திற்காகக் காத்திருந்தோம்.
மெதுவாக காலைக்கதிரின் வெளிச்சம் உள்ளே செல்லத்துவங்கியபின், தீவின் பாதம் பகுதிக்குச் சென்றோம். அந்த மரவீடு இப்போது அங்கிருந்தது. ஒரு சன்னல் வழியாக நாங்கள் உள்ளே பார்த்தோம். அங்கே ஒரு படுக்கை, ஒரு மேசை, இரண்டு பழைய நாற்காலிகள், சுவரை ஒட்டித் தொங்கிக்கொண்டிருந்த சில துணிகள், மேலும் பல பொருட்கள் தரையெங்கும் சிதறிக் கிடக்கும் காட்சிகளைக் காண முடிந்தது. அந்த அறையின் கடைசி மூலையில் ஏதோ ஒன்று ஒரு மனிதன் போன்றதொரு தோற்றம் கொண்ட ஒன்று கீழே கிடந்தது.
ஜிம் கூப்பிட்டான் ” ஹல்லோ யார் அது?”
ஆனால் அது அசையவில்லை. எனவே அதை நோக்கி நான் கூவினேன். ஜிம் சொன்னான் “அந்த மனிதன் தூங்குவதாகத் தெரியவில்லை. அவன் இறந்திருக்கக் கூடும். நீ இந்தத்தோணியைக் கொஞ்சம் பிடித்துக் கொள். நான் சென்று என்னவென்று பார்க்கிறேன்.”
அவன் அந்த மனிதனிடம் சென்று குனிந்து பார்த்துவிட்டுச் சொன்னான்.” இது ஒரு சடலம். ஆம். உண்மையில். அவன் நிர்வாணமாகவும் இருக்கிறான். அவனின் பின்புறம் துப்பாக்கிக் குண்டு துளைத்திருக்கிறது. இவன் இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகி இருக்கக் கூடும் என நான் யூகிக்கிறேன். இங்கே வா ஹக்! ஆனால் அவன் முகத்தைப் பார்த்து விடாதே. மிகவும் கோரமாக உள்ளது.”
நான் அந்த மனிதனைப் பார்க்கக்கூட இல்லை. அந்த சடலத்தின் மீது ஜிம் சில பழைய துணிகளை விட்டெறிந்தான். அது அவனுக்குத் தேவையில்லை ஏனெனில் நான் அவனைப் பார்க்கவே விரும்பவில்லை. அடுக்கடுக்காய் கறை படிந்த உபயோகித்த சீட்டுக்கட்டுகள் பழைய விஸ்கி. குப்பிகள் சகிதம் தரை முழுதும் இறைந்து கிடந்தன. அத்துடன் கறுப்பு நிறத் துணியால் செய்யப்பட்ட சில முகமூடிகளும் இருந்தன. மூடத்தனமான சில வார்த்தைகளும், படங்களும் சுவர் முழுக்க கரித்துண்டால் கிறுக்கப்பட்டு இருந்தது. இரண்டு அழுக்கடைந்த பழைய கேலிகோ வகை உடைகள், முகத்தையும் கழுத்தையும் வெயிலில் இருந்து காக்கும் தலைக்கவசமான சன்பானெட், மேலும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள், ஆண்களின் ஆடைகள் எல்லாம் அங்கே இருந்தன.
எப்போதோ ஒரு சமயம் அது பயன்படும் என்று எண்ணி அத்தனைப் பொருட்களையும் தோணியில் வைத்து நிரப்பினோம். பலவகை வண்ணப்புள்ளிகளுடன் மூங்கிலால் ஆன சிறுவர்களுக்கான பழைய தொப்பி ஒன்று தரையில் கிடந்தது. அதை நான் எடுத்துக் கொண்டேன். ஒரு சமயம் பாலால் நிரம்பி இருந்து இப்போது காலியாக இருக்கும் குழந்தைகளின் பால்புட்டி பால் அதிகம் வழியாது தடுத்து நிறுத்தும் கார்க் போன்ற அமைப்புடன் கூடியதும் அங்கே கிடந்தது. அது மட்டும் உடையாது இருந்திருந்தால் அதையும் நாங்கள் எடுத்திருப்போம். உபயோகத்தில் இல்லாத ஒரு பழைய பெட்டியும், நகர்த்தும் சக்கரம் உடைந்து கிடந்த ஒரு பழைய ட்ரங்க் பெட்டியும் கூட இருந்தன. அவைகளைத் திறக்க முடிந்தாலும், அவற்றில் ஏதும் விலை மதிப்புள்ள பொருட்கள் காணப்படவில்லை. அங்கே பொருட்கள் சுற்றிலும் சிதறிக் கிடந்த கோலத்தைக் காணும்போது, அதை விட்டு வெளியேறிய சிலர், தாங்கள் செல்லும் அவசரத்தில் அதிகப்பொருட்களை எடுத்துச் செல்ல இயலாது விட்டுச் சென்றது போல் தோன்றியது.
பழையதான ஒரு தகர லாந்தர், கைப்பிடி அற்ற மாமிசம் அறுக்கும் கத்தி, மிருகக் கொழுப்பில் செய்யப்பட்ட கெட்டியான மெழுகுவர்த்திகள், மெழுகுவர்த்தி பொருத்தி வைக்கும் தகரபீடம் , குட்டைக்கைப்பிடி கொண்ட சிறிய கோடரி, சில ஆணிகள், எனது சுண்டுவிரல் தடிமனில் இருந்த மீன்பிடிக்கும் வலைகள், அதன் மீது இருந்த பெரிய மீன் கொக்கிகள், சுருட்டி இருந்த ஆண் மானின் தோல், நாய்க்கு கட்டும் தோலினால் ஆன கழுத்துப்பட்டை, ஒரு குதிரைக் குளம்பு, பெயரில்லாத மருந்துகள் கொண்ட குப்பிகள் சில, ஒரு பரங்கிக்காய், ஒரு தகரக் கோப்பை, மிகவும் புராதனமான மெத்தை விரிப்பு, எந்தக்கடையிலும் குறைந்த பட்சம் இருபத்தியைந்து சென்டுக்கு விலை போகக்கூடிய சட்டைப் பையில் வைக்கும் புத்தம்புது கத்தி- பார்லோ கம்பனித் தயாரிப்பு போன்றவை எங்களுக்குக் கிடைத்தன.
இவைகளுடன், பெண்கள் கைப்பை ஒன்று, அதில் ஊசிகள், குண்டூசிகள், தேனீ மெழுகு, பொத்தான்கள், நூல், மேலும் அந்த மாதிரியான சில பொருட்கள் ஆகியவையும் கிடைத்தது. நாங்கள் வெளியேற நினைக்கையில், குதிரைகளின் மேல் இருக்கும் அழுக்கை அகற்றும் சீப்பு ஒன்றை நானும், ஒரு பழைய காலத்து வயலின் போன்ற ஒரு இசைக்கருவி மற்றும் ஒரு மரக் கால் ஒன்றை ஜிம்மும் கண்டெடுத்தோம். அந்தக் காலில் சில பட்டைகள் உடைந்திருந்தாலும், அது பார்க்க நல்ல நிலையிலேயே இருந்தது. எனக்கு அது மிகவும் உயரமாகவும், ஜிம்முக்கு மிகவும் குட்டையாகவும் இருந்தது. மற்றொரு காலுக்காக நாங்கள் அந்த அறை முழுதும் அலசினோம். ஆனால் கிடைக்கவில்லை.
மொத்தத்தில், நாங்கள் நிறைய அள்ளிச் சென்றோம். அங்கிருந்து தோணியில் கிளம்ப முயலும் வேளைதான் நாங்கள் தீவின் கீழ்புறமாக கால் மைல் தூரம் தாண்டி மிதந்தது தெரியவந்தது. நல்ல ஒரு தெளிவான நாள். எனவே, நான் ஜிம்மை தோணியில் உள்ள மெத்தை விரிப்பின் கீழ் மறைந்து கொள்ளச் சொன்னேன். அவன் ஒரு கறுப்பன் என்பதை அவன் அமர்ந்திருந்தால் மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே, நான் துடுப்பை வலித்துக் கொண்டு இல்லினோய் கரைப்பகுதிக்குச் சென்று அங்கிருந்து அதே முறையில் அரை மைல் தூரம் மிதந்தவாறே சென்றேன். நதிக்கரைக்குக் கீழ் தேங்கி நிற்கும் நீரில் துடுப்பை மெதுவாகப் போட்டேன். எந்த விபத்திலும் நான் சிக்கவும் இல்லை. யாரையும் சந்திக்கவும் இல்லை. எங்கள் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக நாங்கள் வந்து சேர்ந்தோம்.
[தொடரும்]
மொழிபெயர்ப்பாளர் பற்றி…
– முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –
akilmohanrs@yahoo.co.in