வாசிப்பும், யோசிப்பும் -9: எதுவரை.நெட் இணையத்தளத்தில் கே.எஸ்.சுதாகர் எழுதிய ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ என்னும் கட்டுரை பற்றிச் சில குறிப்புகள்.

வாசிப்பும் யோசிப்பும்!//இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை. உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.// ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ கட்டுரையில் கே.எஸ்.சுதாகர் –

இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை.’ என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கூற்றானது ‘இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும்’ என்று வந்திருக்க வேண்டும். சிறுகதைகளைப் பொறுத்த அளவில் அதிக அளவில் புகலிட அனுபவங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ளன. நாவல்களைப் பொறுத்த அளவில் அதிக அளவில் வரவில்லையென்று கூறலாம். ஆனால் அது தவறல்ல. அதற்காக வெளிவந்த படைப்புகளின் தரத்தை அதனடிப்படையில் அளவிடுவது தவறென்பது என் கருத்து. ஈழத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாகப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளின் பிரதான அமசங்களாக இழந்த மண் பற்றிய கழிவிரக்கம், கனவுகள் மற்றும் புகலிட அனுபவங்களெல்லாமிருக்கும். அவ்விதமிருப்பதுதான் புகலிடப் படைப்புகளின் பிரதானமான பண்பு. அதே சமயம் அடுத்த தலைமுறையினரிடமிருந்து அதிக அளவில் புகலிட நாட்டின் அனுபவங்கள் வெளிப்படும். அதுவும் இயற்கை. இரண்டாவது தலைமுறையினரிலும் இரு வகையினர். சிறுவயதில் பெற்றோருடன் புகலிடம் நாடிச் சென்றவர்கள். புகலிட நாடுகளில் பிறந்தவர்கள். இவர்களது அனுபவ்ங்களும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. அவற்றின் அடிப்படையில் அவர்களது அனுபவங்கள் அவர்களது படைப்புகளில் வெளிப்படும். அடுத்தது ‘ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.’ என்ற கூற்றையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவற்றுடன் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் சுற்றி வருகின்றன என்றிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவிருக்கும்.

அடுத்தது புகலிடப் புதினங்கள் இழந்த மண்ணின் அரசியல் பற்றியோ, அல்லது அம்மண் மீதான கழிவிரக்கத்தின் பிரதிபலிப்பாகவோ, அல்லது சொந்த மண்ணின் சமுதாயச் சூழலின் பாதிப்புகளின் பிரதிபலிப்பாகவோ இருப்பதால் அப்படைப்புகளின் சிறப்போ அல்லது முக்கியத்துவமோ குறைந்துவிடப்போவதில்லை. அதே சமயம் புகலிட அனுபவங்களின் வெளிப்பாடாக அவை இருந்தால் மட்டுமே அவை நல்ல படைப்புகளாகவிருக்கவேண்டுமென்பதுமில்லை. நல்லதொரு படைப்பு கூறும் பொருள் எதுவாகவுமிருக்கலாம். இதற்கு உதாரணங்களாக நான் அடிக்கடி கூறுவதை இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கின்றேன். சல்மான் ருஷ்டியின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ கூறும் களம் அவரது இழந்த மண்ணைப் பற்றியது. புகழ்பெற்ற அமெரிக்க யூத எழுத்தாளரான ஜேர்சி கொசின்ஸ்கியின் ‘நிறமூட்டப்பட்ட பறவைகள்’ இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில், நாசிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டு ஐரொப்பாவெங்கும் பெற்றோரைப் பிரிந்த நிலையில் அலைந்துதிரிந்த அவரது இளமைக்காலத்தைப்பற்றி விபரிக்கும். அவை இன்று ஆங்கில இலக்கியத்தின் முக்கிய படைப்புகளாகவிருக்கின்றன அல்லவா.

ஒரு பதிவுக்காக இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். ‘அமெரிக்கா’ என்ற எனது சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம அனுபவத்தை விபரிக்கும். ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்று பதிவுகள், திண்ணை ஆகிய இதழ்களில் வெளியான எனது தொடர்நாவல் தற்போது பதிவுகள் இதழில் ‘குடிவரவாளன் (AN IMMIGRANT)’ என்னும் பெயரில் மீள்பிரசுரமாகியுள்ளது. இது முழுக்க முழுக்கத் தப்பிப்பிழைத்தலுக்கான அமெரிக்க அனுபவங்களை விபரிப்பது. இதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/pathivukalnew/V.N.Giritharan_Novel_AN_IMMIGRANT_Tamil_Feb_14_2013.pdf

ஒரு பதிவுக்காக மேலும் சில விபரங்களைப் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன்.

a. ஆகஸ்ட் 2001   இதழ்-20 முதல் ஏப்ரல் 2002 இதழ் 28 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான மைக்கலின் நாவல் ‘ஏழாவது சொர்க்கம்’. இந்நாவலும் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட வேண்டியதொரு படைப்பு. விரைவில் ‘பதிவுகள்’ இணைய இதழில் ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள் பிரசுரமாகும்.

b. கடல்புத்திரனின் நாவல்களான ‘வேலிகள்’ மற்றும் ‘வெகுண்ட உள்ளங்கள்’ ஆகிய நாவல்கள் தாயகம் (கனடா) சஞ்சிகையில் தொடராக வெளிவந்தவை. பின்னர் இந்நாவல்களும், சிறுகதைகளும் அடங்கிய தொகுதி ‘வேலிகள்’ என்னும் பெயரில் குமரன் பப்ளீஷர்ஸ் (தமிழ்நாடு) பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இதனை நூலகத்தளத்தில் வாசிக்கலாம்.

//‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். //

பல்வேறு காரணங்களுக்காக மக்கள் புலம் பெயர்ந்தார்கள். கல்வி, வேலைவாய்ப்பு , அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகிய நாடுகளின் மக்கள் புகலிடம் நாடி .. இவ்விதம் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்தார்கள். இவ்விதம் புலம்பெயர்ந்தவர்கள் படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்தோர் இலக்கியம். புகலிட இலக்கியமும் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்திலோர் அங்கமே. இது பற்றி ‘புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!’ என்னும் தலைப்பிலொரு கட்டுரையினைக் கனடாவிலிருந்து வெளிவந்த ‘கூர் 2011’ கலை இலக்கிய மலரில் எழுதியிருக்கின்றேன். அதற்குரிய இணைப்பு கீழே:

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=144;2011-05-01-22-33-41&catid=17;2011-03-03-20-13-15&Itemid=35

//திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.//

இலக்கியமானது தேசத்துக்குத் தேசம் வேறுபடுவது. மொழி ஒன்றாகவிருந்தாலும், ஆங்கில இலக்கியமானது கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா, ‘ட்ரினிடாட்’, ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா .. என்று நாட்டுக்கு நாடு வேறுபடும். அதைப்போல்தான் தமிழ் இலக்கியமும். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்… இவ்விதம் நாட்டுக்குநாடு வேறுபடும். இந்த அடிப்படையில் கே.எஸ்.சிவகுமாரனின் கூற்றும் சரியானதென்பதே என் கருத்தும்.

ஆயினும் கே.எஸ்.சுதாகரின் கட்டுரை வரவேற்கத்தக்கது. ஒரு சிலர் செய்வதைப் போல் குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் படைப்புகளை அணுகாது , ஆவணப்படுத்தும் வகையில் புகலிடப் புதினங்கள் பற்றிய முழுமையானதொரு ஆய்வுக்கு எதிர்காலத்தில் வழிகோலும் வகையில் நல்லதொரு ஆரம்பக் கட்டுரையாக விளங்குகின்றது. அவரது ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றிய விரிவான கட்டுரையும் முக்கியமான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்; தொடர்ந்து விவாதிப்போம்.

ngiri2704@rogers.com