வாசிப்பும், யோசிப்பும் – 9: அ.மு.வின் அனுபவங்கள் அபுனைவுகளா? அல்லது புனைவுகளா?

வாசிப்பும் யோசிப்பும் - 9தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். எந்தவொரு விடயத்தையும் மிகவும் சுவையாக, நெஞ்சில் உறைக்கும் வகையில் எழுதுவதில் வல்லவரிவர்.  மிகவும் சாதாரணவொரு விடயத்தைக்கூட மிகவும் சுவையானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக தனது எழுத்தாற்றல் மூலம் மாற்றிவிடுவதில் அசகாய சூரரிவர். இவரது அபுனைவுகளை வாசிக்கும்போது எனக்கு தோன்றும் முதல் எண்ணம் அவை உண்மையிலேயே அபுனைவுகளா? அல்லது புனைவுகளா? ஏனென்றால் அவரது ஒவ்வொரு அனுபவமும் மிகவும் சுவையாக, புனைகதைக்குரிய திருப்பங்கள், சம்பவங்களுடன் இருப்பதுதான் அந்த எண்ணம் தோன்றக் காரணம். பொதுவாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவற்றில் சில வேண்டுமானால் புனைகதைக்குரிய சம்பவங்கள், திருப்பங்களுடன் இருக்கும். ஆனால் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அவ்விதமிருப்பதில்லை. ஆனால், அ.மு.வின் அபுனைவுகளென்று எண்ணிக்கொண்டு வாசிக்கும் பெரும்பாலான படைப்புகள் அற்புதமான புனைவுகள போலிருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.

இது பற்றிச் சிறிது ஆழமாகச் சிந்திக்கும்பொழுதுதான் எனக்கொரு எண்ணம் தோன்றியது. பெரும்பாலான சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் தொடர்ச்சியாக பத்திகள் எழுதிவருபவர் அ.மு. எனவே சுவையாக , வாசகர்களைக் கவரும் வகையில் எழுத வேண்டியதொரு தேவை அவருக்குண்டு. அதன் விளைவாக அவர் தனது அனுபவங்களை மையமாக வைத்துப் படைக்கும் புனைவுகளை நாமும் அபுனைவுகளாக எண்ணிச் சுவைக்கின்றோமோ என்றும் பட்டது. அவர் தனது அனுபவங்களை விளக்குவதுபோல் இருப்பதால் அவற்றை நாம் உண்மைச் சம்பவங்களாக எடுத்துக்கொள்கின்றோம். ஆனால், அ.மு. அவற்றை ஒருபோதுமே அபுனைவுகளாகவோ அல்லது புனைவுகளாகவோ வாசகர்களுக்கு முடிந்த முடிபாக, தீர்மானமாகக் கூறுவதில்லை. வாசகர்கள் அவற்றை எப்படியெடுத்தாலும் எடுத்துக்கொள்ளலாமென்று விட்டு விடுகின்றார். நாம் அவற்றை அவரது அபுனைவுகளாக எடுத்து வாதித்தால் அவர் ஒரு சமயம் ‘நான் அவ்விதம் கூறினேனா?’ என்று கேட்கக்கூடும். அவ்விதம் கேட்டால் அதற்கு எம்மால் பதில் கூற முடியாது. அதுபோல் அவற்றை அவரது அனுபவங்களின் அடிப்படையில் விளைந்த புனைவுகளாகக் கருதிக்கொண்டாலும் அவர் அதற்கும் அதே வினாவினையே தொடுக்கக் கூடும். அவரது படைப்புகள் அபுனைவா அல்லது புனைவா என்பது முக்கியமல்ல. வாசிக்கும்போது சுவைக்கின்றன; சிரிக்க வைக்கின்றன; சிந்தனையைத் தூண்டுகின்றன.  அதுதான் முக்கியம்.

அவரது எழுத்துச் சிறப்பு சில சமயங்களில் வாசகர்களின் சிந்திக்கும் இயல்பை உறைய வைத்துவிடுகிறது. மிகவும் சாதாரணதொரு சம்பவத்தைக் கூட அழகாக, சுவையாகக் கூறும்பொழுது குறிப்பிடப்படும் விடயத்தைப் பற்றி எழக்கூடிய கேள்விகளையும் ஒரு கணம் மறந்துவிடுகின்றோம். அண்மையில் அவரது ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ தொகுப்பிலுள்ள ‘அம்மாவின் பெயர்’ (அபுனைவா? அல்லது புனைவா?) வாசித்தபொழுது முதலில் முடிவு அதிர வைத்தது. சிறிது சிந்தித்தபொழுது அவரது சுவை மிக்க எழுத்தின் வல்லமை புரிந்தது.  அப்படைப்பில் கூறப்படும் விடயம் இதுதான்: நண்பரின் மகனின் திருமணத்தின்பொருட்டு அவர் அன்பளிப்பாகக் கொடுத்த இலங்கையிலுள்ள வங்கியொன்றின் காசோலைய்யொன்று திரும்பி விடுகிறது. அது அவரை அதிர வைக்கின்றது. விசாரித்தபொழுது அவரது கணக்கு பாவிக்காத காரணத்தால் உறைய வைக்கப்பட்டிருக்கின்றது தெரிகின்றது. அதனை மீண்டும் உயிர்ப்படைய வைப்பதற்காக அந்த வங்கியின் சிங்களப் பெண் அதிகாரியொருவருடன் தொடர்புகொள்கின்றார். அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அந்தப் பெண் அதிகாரி அவரது தாயாரின் பெயரைக் கேட்கின்றார். அது அவரை மகிழ்வுற வைக்கின்றது. அது பற்றி அ.மு. பின்வருமாறு கூறுவார்:

‘அம்மாவின் உத்தியோகபூர்வமான பெயரை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. எங்கள் ஊரில் அவரை எல்லோரும் குஞ்சியம்மா என்று செல்லப் பெயர் சொல்லித்தான் அழைத்தார்கள்.’

இவ்விதமாகச் செல்லும் படைப்பு இறுதியில் ‘ என் முழுப்பெயரை எழுதும்போது ஓவ்வொரு தடவையும் அப்பாவின் பெயரையும் எழுதுகின்றேன். வாழ்க்கையில் முதன்முறையாக அம்மாவின் பெயரை எழுத்துக்கூட்டியிருப்பது நினைவுக்கு வந்தது’ என்று முடிகிறது.

வாசிப்பும் யோசிப்பும் - 9மேற்படி ‘அம்மாவின் உத்தியோகபூர்வமான பெயரை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை.’ என்பதும், ‘வாழ்க்கையில் முதன்முறையாக அம்மாவின் பெயரை எழுத்துக்கூட்டியிருப்பது நினைவுக்கு வந்தது’ என்பதுபோன்ற கூற்றுகள்தாம் அ.மு.வின் அனுபவங்களின் விபரிப்புகள் அபுனைவுகளா அல்லது புனைவுகளா என்னும் கேள்வியினை எனக்கு ஏற்படுத்தின. ஏனெனில் ‘அம்மாவின் உத்தியோகபூர்வமான பெயரை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை’ என்று எந்தவொரு குடிவரவாளனும் கூறமுடியாது? குடிபெயர்வதற்காகச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் நிச்சயம் அம்மாவின் முழுப்பெயரைக் குறிப்பிட வேண்டும். மேலும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் போன்ற ஆவணங்களிலும் அம்மாவின் முழுப்பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக, ‘வாழ்க்கையில் முதன்முறையாக அம்மாவின் பெயரை எழுத்துக்கூட்டியிருப்பது நினைவுக்கு வந்தது’ என்பது உண்மையில்லை. ஆக, அது புனைவு. முற்று முழுதாக உண்மை அனுபவத்தை விபரிக்கும் அபுனைவு அல்ல ‘அம்மாவின் பெயர்’. தனது அனுபவங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளின் அடிப்படையில் அவற்றை விபரிக்கும் அ.மு.வின் பெரும்பாலான பத்திகள், அபுனைவுகளைப் போல் படைக்கப்படும் புனைவுகளென்று கூறலாமென்றுபட்டது. அதே சமயம் கடவுச் சொற்கள் போன்ற இரகசியச் சொற்களை மறந்துவிடும்போதேல்லாம், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும்பொருட்டு கேட்கப்படும் கேள்விக்கான விடைகளிலொன்று அம்மாவின் கன்னிப்பெயர் என்பதும் எனக்கு ஞாபகத்தில் வந்தது. என் முழுப்பெயரில் அப்பாவின் பெயரை வைத்திருக்கும் நான் இவ்விதமான சமயங்களில் அம்மாவின் கன்னிப்பெயரையிட்டுப் பிராயச்சித்தம் செய்துகொள்கின்றேனோ என்றும் பட்டது. இவ்விதமாக அம்மாவின் கன்னிப்பெயரை அடிக்கடி ஞாபகப்படுத்துவதற்காக கணினி ஆணைத்தொடர்களை எழுதும் மென்பொருள் வல்லுநர்களை ஒருகணம் நன்றியுடன் நினைத்தும்கொள்கின்றேன்.

ngiri2704@rogers.com