இலங்கு நூல் செயல்வலர் -க.பஞ்சாங்கம்-9 : எடுத்துரைப்பு படிநிலைகள்

நாகரத்தினம் கிருஷ்ணாசிமூர் சாட்மன் ஓர் அமெரிக்க இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்ச்கர். வட அமெரிக்காவைச் சேர்ந்த மிக முக்கியமான எடுத்துரைப்பியல் நிபுணர். பேராசியரின் எடுத்துரைப்பு படிநிலைகளைப்பற்றிய இக்கட்டுரை, இந்த அமெரிக்கரின் உண்களை முன்வைத்து பேசுகிறது.

உள்ளுறை எழுத்தாளரும் – உள்ளுறை வாசகரும்

பொதுவாகவே எடுத்துரைப்பியல் என்றதும் அதனை இயக்கும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவர்களில் ஒருவர் எழுத்தாளர் மற்றவர் வாசகர் என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த அத்தியாத்தில் பேராசிரியர் சாட்மன் முன்வைத்த கருத்தியத்தின் அடிப்படையில் வேறு சில உண்மைகளைத் தெரிவிக்கிறார். அதன்படி வெகுசன அறிவு நம்பிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்- வாசகர் என்கிற செயல்பாட்டாளர்களோடு வேறுசிலரும் எடுத்துரைப்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் மொத்தம் ஆறுபேர்:  படைப்பை அளிப்பவர்கள் மூவர், படைப்பைப் பெறுபவர்கள் மூவர். அளிப்பவர் அணியில் முதலாமவர் உண்மையான எழுத்தாளர், அடுத்து வருபவர்கள் அல்லது முதல் நபருக்குத் துணைநிற்பவர்கள் உள்ளுறை எழுத்தாளர், எடுத்துரைப்பாளர். பெறுபவர் அணியில்  முதலாமவர் உண்மையான வாசகர் அடுத்து இடம்பெறுபவர்கள் உள்ளுறை வாசகர், எடுத்துரைப்பைக் கேட்பவர்.

இவர்களில் எழுத்தாளர் அணியில் செயல்படுகிற ‘உள்ளுறை எழுத்தாளர் ‘ (எதிரணியில் சமன் படுத்த உள்ளுறை வாசகர்)மிக முக்கியமானவர்.   இந்த உள்ளுறை எழுத்தாளர், குறிப்பிட்ட படைப்புக்கென எழுத்தாளரிடமிருந்து பிறவி எடுப்பவர், பிரதான எழுத்தாளர் நிரந்தரமானவர், பல படைப்புகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறார். மாறாக உள்ளுரை எழுத்தாளர் பிறப்பும் இறப்பும் குறிப்பிட்ட படைப்போடு முடிந்துவிடுகிறது. ‘மனிதப்பண்பு  ஏற்றப்பட்டவ்ராகத் தோற்றமளிக்கிறார். எனவே இவர் எழுத்தாளரின் ‘இரண்டாவது சுயம்’  இன்னொரு விந்தையான கருத்தும் நமக்குக் கிடைக்கிறது. உள்ளுரை எழுத்தாளர் பிரதான எழுத்தாளரின் அல்லது உண்மையான எழுத்தாளரின் ஓர் அங்கமாக இருப்பினும் முழுப்படைப்பிற்கான மூளை மற்றும் ப¨ப்பின் விதிகளுக்கான மூல ஆதாரமாக இருப்பதால் சாட்மென் முடிவின்படி உள்துறை எழுத்தாளர் அறிவுதளத்திலும், ஒழுக்கத் தரத்திலும் உண்மையான எழுத்தாளரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பாரென அறிகிறோம்.  

இங்கே நமக்குத் தெரியவேண்டிய மிகப்பெரிய உண்மை, உளதுறை எழுத்தாளரும் உண்மையான எழுத்தாளரும் சமமானவர்கள் அல்ல என்பது முதலாவது. படைப்பை நடத்திச்செல்கிற உள்ளுறை எழுத்தாளரின் சிந்தனை, நம்பிக்கை, உணர்வு நிலை ஆகிவற்றிலெல்லாங்கூட நேரெதிரான நிலைப்பாட்டிற்குச் சொந்தக்காரராக உண்மையான எழுத்தாளர் இருப்பார் என்பது இரண்டாவது. இவை நிகழ்வதற்கு ஆசிரியரின் கட்டுரை சொல்லும் காரணம், உண்மையான எழுத்தாளரின் சுய அடையாளம் புறவாழ்வில் அவர் எதிர்கொள்ளுகிற வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அதே நேரத்தில் உள்ளுறை எழுத்தாளரின் அடையாளம், எழுதப்படும் படைப்போடு இணைந்து இரண்டறக்கலந்து நிலைப்பெற்று இருக்கக்கூடியது ( ந.இ.கோ. பக்கம் 216). எதிரணியில் இருக்கிற உள்ளுறை வாசகர் இந்த உண்மையை அறிந்தே இருக்கிறார், ஆனால் பிரச்சினை விளிம்பில் இருக்கிற உண்மையான வாசகர் பல நேரங்களில் உள்ளுறை எழ்த்தாளரை உண்மை எழுத்தாளரிடம் தேடிக்களைப்பதைக் காண்கிறோம். சாட்மன் கூற்று “உள்ளுறை எழுத்தாளர்,  உண்மை எழுத்தாளரிடம் மட்டுமின்றி  எடுத்துரப்பாளரிடமும் வேறுபட்டவர் எனக் கூறுகிறது. தவிர ஒரு படைப்பை முன்னெடுத்து செல்கிற உள்ளுறை எழுத்தாளர் படைப்பு முழுவதும் மௌனம் சாதிப்பதால் அவரை எடுத்துரைப்பவராகக் கருதக்கூடாதென்றும் அறிவுறுத்தப்படுகிறோம். “எடுத்துரைப்பாளர் என்பவர் பனுவலின் நேரடியான குரலாகவும் அல்லது பேசுபவராகவும் அமைய உள்ளுறை எழுத்தாளர் குரல் அற்றவராகவும் மௌனநிலையில் உறைந்து இருப்பவராகவும் கருதப்படுகிறார்”(ந.இ.கோ. பக்கம் 216)

அடுத்து நாம் புரிந்துகொள்ளவேண்டியவர் உள்ளுறை வாசகர். உள்ளுறை எழுத்தாளருக்கு எதிர்வரிசையில் இடம்பெறும் உள்ளுறை வாசகரின்  இலக்கணங்கள் உள்ளுறை எழுத்தாளருக்குப் பொருந்தக்கூடியவை: 1.உள்ளுறை எழுத்தாளரைப்போலவே பனுவல் உருவாக்கும் நபர் 2. உண்மை எழுத்தாளரிடமிருந்து வேறுபடும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உண்மையான வாசகரிடமிருந்தும் எடுத்துரைப்பைக் கேட்பவரிடமிருந்தும்   வேறுபடுவார். ஒவ்வொரு பனுவலுக்குள்ளும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உள்ளுறை வாசகரும் இருக்கிறாரென்றும், மாறாக ஒவ்வொரு பனுவலும் ‘எடுத்துரைப்பாளரையும் -கேட்பவரை’யும் கொண்டிருக்கவேண்டுமென்கிற நிர்ப்பந்தமில்லையென்றும், நாவலின் தேவை பொறுத்து அதனை பாவிக்கலாமென்றும் அறிகிறோம். ஒரு பனுவலில் எடுத்துரைப்பாளர் இருக்கிறபோது உள்ளூறை எழுத்தாளர்-எடுத்துரைப்பாளர் – கேட்பவர்-உள்ளுறைவாசகர் என்ற சங்கிலித்தொடரில் செய்தி பரிமாறப்படுகிறது என அறிகிறோம். எடுத்துரைப்பாளர்- கேட்பவர் இல்லாதபோது, செய்தி நேரடியாக உள்ளூறை எழுத்தாளரிடமிருந்து – உள்ளுறை வாசகருக்குப் போய்ச்சேருகிறது.

சாட்மன் கூற்றின் அடிப்படையில் சில சந்தேகங்களைக் கட்டுரை ஆசிரியர் எழுப்புகிறார்:

முதலாவதாக ஒரு பனுவலில் உள்ளூறை எழுத்தாளருடைய  இடம் எது?
பனுவலைப் பகுத்தாராயவும், வாசகர்களின் நடத்தையினைப் பகுத்தாராயவும் பெரிதும் உதவுமென நம்பப்படும் உள்ளுறை எழுத்தாளர் கோட்பாடு தகவல் பரிமாற்றத்தில் உதவுவதில்லை ( உள்ளூறை எழுத்தாளரின் மௌனம், நேரடியாகத் தகவல் அறிவிப்பில் பங்கின்மை…) என்பதால் உருவாகும் குழப்பம்; அடுத்ததாக எடுத்துரைப்பாளர் குறித்தும் கேட்பவர் குறித்தும் கொடுக்கிற விளக்கங்களால் எழும் சிக்கல்.

இந்நிலையில் மேற்கண்ட சிக்கலிலிருந்து விடுபட இரண்டு வழிமுறைகளை பேராசிரியர் தெரிவிக்கிறார்:

1. உள்ளுறை எழுத்தாளர், உள்ளுறை வாசகர் ஆகிய இருவரையும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிற எடுத்துரைப்புச் சூழலிலிருந்து அப்புறப்படுத்துவது.
2. எடுத்துரைப்பவர் கேட்பவர் ஆகிய இருவரையும் எடுத்துரைப்புச் சூழலில் கட்டாயமாக இடம்பெறச்செய்வது

தவிர  ஒரு கதையில் எப்போதும் கதைசொல்லி இருந்துகொண்டேதான் இருக்கிறார் என்பதால் எடுத்துரப்பின் நிகழ்வுக்கு சாட்மன் கூறுவதைப்போல ஆறுபேர் தேவையில்லை: உண்மையான எழுத்தாளர், உண்மையான வாசகர்; எடுத்துரைப்பாளர், கேட்பவர் என்ற நால்வர் கூட்டணியே போதுமானது.

ஆக மீண்டும் எழுத்தாளர் – வாசகர் என்ற எளிமையான சொல்லாடல்களை மறந்து கதைசொல்லலே ஓர் எடுத்துரைப்பு நிகழ்வாகப்   கொள்ளப்படுவதால் மீண்டும் நாம் இப்பிரச்சினையை எடுத்துரைப்பவர் -கேட்பவர் பிரச்சினையாகக் கருதலாம். எடுத்துரைப்பு என்ற பொறுப்பில் அமருகிறபோது, வெற்றிகரமாக நிறைவேற்ற போர்த்திறம் சார்ந்த திட்டங்களையும் உபாயங்களையும் ஓர் எடுத்துரைப்பாளன் விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்கிறான். 

இப்பகுதியில் அடுத்ததாகப் பேசப்படுவது எடுத்துரைப்பிற்கும் கதைக்கும் உள்ள உறவுகள்:

அ.  காலம் சார்ந்த உறவுகள்

எடுத்துரைப்பு என்பது நிகழ்வுகளால் பின்னப்படுவதால் காலத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் அதனதன் தன்மையில் சம்பவத்தைக் கேட்பவருக்கு நம்பிக்கைதரும்விதத்தில் சொல்ல உதவுகின்றன. பிறவற்றைக் காட்டிலும் இறந்தகாலம் கதைசொல்லல் தனித்தன்மையை பெற்றதாகிறது. நடக்கிற, நடக்கவிருக்கிற சம்பவத்தை ஆரூடமாகச் சொல்லவருகிற செய்திகளில் பொதுவாகவே நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இறந்த கால சம்பவங்கள் எண்பிக்க முடிந்தவையென்ற நம்பிக்கையைத் தரக்கூடியவை அல்லது அவ்வாறான தோற்றம் கொண்டவை என்பதாலேயே செய்தித் தாள்களில் ஆரம்பித்து, புனைகதைவரை அதிகம் இறந்தகாலத்தைப் பேசுபவையாக உள்ளன, இவ்வித எளிதான உளவியல் காரணத்தோடு, ஒரு சம்பவத்தை அது நடந்துமுடிந்தபின்னரே சொல்லமுடியும் என்ற பொதுவானப் புரிதலும் இறந்த காலத்தைப் பயன்படுத்த காரணமாகிறது. அடுத்ததாக அதிகமில்லையென்றாலும் ‘நிகழ இருப்பதாக’ சொல்ல உதவுகிற எடுத்துரைப்பும் இருக்கவே செய்கின்றன அவற்றைக்குறித்தும் கட்டுரை ஆசிரியர் சுருக்கமாக பேசுகிறார். நிகழ இருப்பதை எடுத்துரைப்பது எதிர்காலத்திலும் சொல்லலாம், நிகழ்காலத்திலும் கூறலாம் என்கிறார். காலம் சார்ந்த எடுத்துரப்பில் மூன்றாவதாக வருவது செயலும் எடுத்துரைப்பும் ஒரே தருணத்தில் நிகழ்வதுபோல தோற்றம் கொண்டிருப்பது. நாட்குறிப்பில் இடம்பெறும் பதிவுகள், செய்திதாள்களின் சம்பவத்தை நேரடிவர்ணணைபோல சொல்லும் விதம் ஆகியவற்றை இவற்றிர்க்கு உதாரனங்களாகக் காட்டுகிறார்கள். இப்பகுதியில் கால அளவை நிர்ணயித்து கதைசொல்லலில் ஏற்படும் சிக்கல்கள், நவீன கதையாடல்கள் பலவற்றுள் அவை தவிர்க்கப்படும் விதம் போன்றவற்றையும் ஆசிரியர் அலசுகிறார்.

ஆ. துணைமை உறவுகள் அல்லது எடுத்துரைப்பின் படிநிலைகள்:

இத்தலைப்பின் கீழ் எடுத்துரைப்பிலுள்ள படிநிலைகள் குறித்து விளக்கங்கள் கிடைக்கின்றன.

1. செயல்படும் நிலை:

இது பொதுவாக முதல் எடுத்துரைப்பை நீட்டிக்க  அல்லது தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள கையாளும் முறை. இங்கே எதை எடுத்துரைக்கவிருக்கிறோம் என்பது முக்கியமிழந்து எடுத்துரைப்பது தொடர்ந்து நடைபெறவேண்டியே எடுத்துரைப்பது ஆகும். உதாரனத்திற்கு ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதையில் வரும் கதைசொல்லலை ஆசிரியர் நினைவு கூர்கிறார். இங்கே கதைசொல்லியான “ஷெஹெராசதா” வுக்கு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்துரைப்பு ஓர் தந்திரமாக பயன்படுகிறது

2. விளங்கவைக்கும் நிலை

எந்தேந்தச் சம்பவங்கள் தற்போதைய சூழலுக்கு காரணங்கள் என்ற கேள்விக்கு விளக்கமளிப்பதுபோல கதை சொல்வது அல்லது  எடுத்துரைக்கும் முறை. இங்கும் கதைதான் முக்கியம், எடுத்துரைப்பது அல்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

3. அடிக்கருத்து நிலை அல்லது கருத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை

இவ்வகையான எடுத்துரைப்பில் ஒப்புமை படுத்துதல் மற்றும் வேறுபடுத்திக் காட்டல் மூலமாக சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாக உரைப்பது ஆகும்.

எடுத்துரைப்பாளர்கள் குறித்த ஒரு வகைமையாக்கம்

கதையில் எடுத்துரைப்பவரின் பங்களிப்பு, அவர் மீதான நம்பகத்தன்மை இவற்றின் மீதான அடிப்படையில் எடுத்துரைக்கும் தளம்பற்றி பேசும் பேராசிரியர் எடுத்துரைக்கப்படும் கதையைவிட உயர்ந்தவராக அல்லது மேலே இருப்பவராக ஒரு எடுத்துரைப்பாளர் தன்னைக் கருதிக்கொள்ளும்போது, அவரின் எடுத்துரைக்கும் தளம் புறநிலைவயப்பட்டதாக அமையுமென்றும்; அவ்வாறின்றி எடுத்துரைப்போடு தன்னையும் ஈடுபடுத்திக்கொள்பவராக எடுத்துரைப்பாளர் செயல்படும்போது அது இரண்டாவது தளத்தில் இயங்குவதாகக் கருதப்படுமென்றும்; இத்தளங்கள் பின்னர் மூன்று, நான்கென்று எடுத்துரைப்பவரின் பங்களிப்பைப் பொறுத்து மாறுமெனவும் தெரிவிக்கிறார்.

கதையில் பங்குபெறும் பரப்பளவு :

மேற்கண்ட வகையில் பல தளங்களில் இயங்குகிற எழுத்தாளர்களின் பங்களிப்பு படைப்பாளிகளின் உணர்ந்தறியும் ஆற்றலைபொறுத்ததனெனவும் பின்னர் அதன் அடிப்படையில் தன்னை முழுவதும் ஒளித்தோ அல்லது வெளிப்படையாகவோ எடுத்துரைப்புசார்ந்த உபாயங்களை கையிலெடுக்கிறார் என்றும் அற்கிறோம், அந்தவகையில் சுமார் எட்டுவிதமான ஆயுதங்கள் அவரது உதவிக்கு காத்திருக்கின்றன.

1. பின்புலம் குறித்த விவரிப்பு: இதில் எடுத்துரைப்பாளர் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைந்த அளவே வெளிப்படுவாரென்றும், நாடகம் அல்லது திரைப்படத்தினும் பார்க்க இங்கே மொழிகொண்டு பின்புலத்தை விவரிக்கவேண்டிய நெருக்கடி உள்ளதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் அதனாலேயே கதையாடல்மொழி எடுத்துரைப்பாளரின் மொழியாக அமைந்து, நாமும் சொல்லப்படும் பின்புலத்தைவைத்து எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை அளவிட முடிகிறதென்கிறார்.

2. கதைமாந்தர்களை அடையாளப்படுத்துதல்: கதையில் வரும் கதை மாந்தர்களை எடுத்துரைப்பவர் நேரடியாகவும் அல்து மறைமுகமாகவும்; தானாக முன்வந்தோ அல்லது பிறபாத்திரங்களின் ஊடாகவோ கதைமாந்தரின் பண்பினை வாசகர்களுக்குக் கூறலாம். இவற்றைக்கொண்டும் எடுத்துரப்பவரின் உணர்ந்தறியும் ஆற்றலைக் கணிக்க முடியும்.

3. காலம் சார்ந்த சுருக்கம்; எடுத்துரைப்பாளர் தான் எடுத்துரைக்கும்  கதையின் காலத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள ஏற்கனவே சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக கதையின் நடுவே சொல்வது எடுத்துரைப்பின் ஒருவகை குணமென்றும் அவ்வாறா¡னசூழலில் அவர் எடுக்கும் பல்வேறுவகையான முடிவுகள் கதைசொல்லலுக்கு உதவுவதோடு, எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை விளங்கிக்கொள்ளவும் உதவுகிறது.

4. கதைமாந்தரை வரையறைப்படுத்துதல்: இங்கே இரண்டுவகையான உணர்ந்தறியும் ஆற்றலை எடுத்துரைப்பாளரிடம் காண்கிறோம்; முதலாவதாக கதை மாந்தரை அடையாளப்படுத்துதல் என்ற விவரிப்பின்மூலம் அக்கதைமாந்தரைப்பற்றி ஏற்கனவே கதைசொல்லி அறிந்திருக்கிறார் என்ற உண்மையொன்று. அடுத்து கதைபற்றிய துல்லியமான பிம்பம், அக்கதைமாந்தரை பொதுமைபடுத்துவதோடு, அவரின் பண்புநலன் எடுத்துரைப்பாளரின் மூலம் அதிகாரமையப்படுத்தப்படுகிறது. ஆக இதனாலும் எடுத்துரப்பவரின் ஆற்றல் நமக்குத் தெரியவருகிறது. 

5. கதைமாந்தர் எதைச் சொல்லகூடாது அல்லது எதை எண்ணிப்பார்க்கூடாது என்பது குறித்த அறிதல்: கதைமாந்தரின் செயல்பாட்டை அல்லது ஞானத்தை எடுத்துரைப்பவர் தீர்மானித்திருப்பதை அக்கதைமாந்தரின் செயல்களும், பேச்சும் நமக்குக் காட்டிக்கொடுத்துவிடும். அதன் அடிப்படையிலும் எடுத்துரைப்பவரின் உணரும் ஆற்றலை விளங்கிக்கொள்ளமுடியும்.

6. விளக்கிச்சொல்லுதல் அல்லது விளக்ககுறிப்பு என்பது  பனுவலின் இடையில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு அல்லது முன்வைக்கப்படும் கருத்து. இவ்வாறு சொல்லப்படுவது கதைமாந்தரையோ நிகழ்ச்சியையோ, சூழலையோ அல்லாமல் ஒரு குழு அல்லது சமூகம் அல்லது ஒட்டுமொத்த மனித இனம் என்று பெரிய அளவில்  அனைத்தையும் உள்ளடக்கியதாக அமையும்.

7 அடிக்குறிப்பு: ஒரு புனைகதை உருவாக்கத்தில் அடிக்குறிப்பு என்ற உத்தியைப் பயன்படுத்துதல் என்பது பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. மேலும் எடுத்துரைப்பவரின் இருப்பை பெரிதும் விளம்பரப்படுத்துவாதகும் என்ற கருத்து வைக்கப்படுகிறது. மொழிபெயர்ப்புக்கோ, கட்டுரைகளுக்கோதேவைபடுவதுபோல புனைகதைக்கு அடிக்குறிப்பு அவசியமில்லை.  ஆனால் அதற்கான தேவை இருக்கிறபோது அடிக்குறிப்பை பயன்படுத்துதல் கட்டாயமாகிறது.

8. நம்பகத் தன்மை: ஓர் எடுத்துரைப்பவர் அவர்  சொல்லும் கதையையும் விளக்கத்தையும் வாசகர்கள் ஆதாரபூர்வமானவை என்று நம்பிக்கைகொள்ளும்படியாகச் செய்யமுடிந்தால் அவர் நம்பகத்தன்மையை ஏற்படுத்திதரும் எழுத்தாளர். இன்னொரு பக்கம் நம்பகத்தன்மையை வாசகரிடத்தில் ஏற்படுத்தித் தரவியலாத எடுத்துரைப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பனுவலில் வாசகரிடத்தில் சந்தேகத் தன்மையை ஏற்படுத்தித் தருபவர்கள், அதற்கான காரனங்களை அவர்களே உருவாக்குகிறார்கள். நம்பகத் தன்மைக்கு எடுத்துரைப்பவரின் அறிவாற்றல், அவரது தனிப்பட்ட ஈடுபாடு, அவருடையசிக்கலான மதிப்பீட்டுமுறை ஆகியவைக் காரணமாகின்றன.

நம்பகமின்மைக்கு:
அ. எடுத்துரைப்பாளர் பார்வையிலிருந்து உண்மைகள் விலகி முரண்படுதல்
ஆ. பனுவல் மூலமாக வெளிப்படும் செயல்கள், உதாரணமாக எடுத்துரப்பாளரின் தவறுகள் சுட்டிக்காட்டி நிறுவிவிடும்போது
இ. பனுவலில் இடம்பெறும் கதைமாந்தர்களின் பார்வை எடுத்துரைப்பாளரின் பார்வையோடு முரண்பட்டு தொடர்ந்து மோதலுக்கு உள்ளாகும்போது
ஈ. எடுத்துரைப்பாளரின் மொழியே நம்பகத் தன்மையற்று இருக்கிறபோது.

(தொடரும்)

nakrish2003@yahoo.fr