ஒரு நாட்டின் இலக்கியம் பற்றி வெளிவரும் தொகுப்பு நூலானது அந்த நாட்டு இலக்கியத்தின் சரியான குறுக்கு வெட்டாக இருக்க வேண்டும். உதாரணமாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியாகும் தொகுப்பு நூலாக இருப்பின் அத்தொகுப்பு நூலொன்றினை வாசிக்கும்போது ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய சரியான குறுக்கு வெட்டினைப் பிரதிபலிப்பதாக அந்தத் தொகுப்பு நூல் இருக்க வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டிலிருந்து இதுவரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை முறையாகப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்த தொகுப்பு நூல்கள் ஏதாவதிருக்கின்றனவா என்று பார்த்தால் பொதுவாக ஏமாற்றமே ஏற்படுகின்றது. செ.யோகநாதனின் சிறுகதைத்தொகுப்பு நூல்கள் , செங்கையாழியானின் பல்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் (சுதந்திரன் சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சிச்சிறுகதைகள் போன்ற) தொகுப்பு நூல்கள் இவ்விதமான சூழலில் வெளிவந்த முக்கியமான தொகுப்புகள். அது போல் மித்ரவின் ‘பனியும் பனையும்’, ஞானம் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.
இவ்விதமான தொகுப்பு நூலொன்றினைத் தொகுப்பவருக்கு ஈழத்துத்தமிழ் இலக்கியம் பற்றிய போதிய அறிவு இருப்பதவசியம். அவ்விதம் இருந்தால் அவர் இதுவரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு காலகட்டங்களை முறையாக அடையாளம் கண்டு , அக்காலகட்டங்களில் வெளிவந்த படைப்புகளில் அக்காலகட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்.
உதாரணமாக இருபதாம் நூற்றாண்டிலிருந்து இதுவரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப்பின்வருமாறு அடையாளம் காண முடியும்:
மறுமலர்ச்சிக்காலகட்டம் வரையிலான படைப்புகள், மறுமலர்ச்சிக் காலகட்டப்படைப்புகள், முற்போக்குத்தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள், 1956-1976 வரையிலான படைப்புகள், 1976 தொடக்கம் இதுவரையிலான படைப்புகள் இவை போன்று பல்வேறு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். மேலும் 1976 ற்குப் பிற்பட்ட பகுதியில் வெளியான படைப்புகளில் போர்க்காலப்படைப்புகளையும் (சகல அமைப்புகளையும் உள்ளடக்கிய) சேர்த்துக்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் படைத்த இலக்கியத்தை அண்மையில் ஞானம் சஞ்சிகை வெளியிட்ட சிறப்பிதழ் போன்று தனியானதொரு காலகட்டமாகக் கருதுவதே சிறந்தது.
மேலும் இலங்கைத் தமிழ் இலக்கியத்தை உள்ளடக்கும் படைப்புகள் கிழக்கு மாகாணத்தமிழ் இலக்கியம், முஸ்லீம் தமிழ் இலக்கியம் மற்றும் மலையகத்தமிழ் இலக்கியம் ஆகியவற்றையும் உள்ளடக்க வேண்டும்.
இதுதவிர ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தோன்றிய அனைத்துவகையான இலக்கியப்போக்குகளையும் கவனத்திலெடுக்கவேண்டும். உதாரணமாக மு.தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தவாதம், எஸ்.பொ.வின் நற்போக்கு இலக்கியப்பாதிப்பினை வெளிப்படுத்தும் படைப்புகள், தீண்டாமைக்கெதிராகக் கேள்வியெழுப்பும் தலித் மக்களால் படைக்கப்படும் படைப்புகள், பெண்ணியக்கருத்துகளைப்பிரதிபலிக்கும் படைப்புகள் இவ்வாறெல்லாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் உருவான அனைத்துப் போக்குகளையும் கவனத்திலெடுக்க வேண்டும்.
இவைதவிர சிறுவர் இலக்கியம், ஜனரஞ்சகத் தமிழ் இலக்கியம் என்னும் பிரிவுகளையும் கவனத்திலெடுக்க வேண்டும்.
இவ்விதம் கவனமெடுப்பதற்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை முறையாக அறிந்த ஒருவரே தொகுப்பினைத்தொகுக்க வேண்டும். அவ்விதமான தகைமைகள் உள்ள ஒருவர் தொகுக்கும் தொகுப்பானது இதுவரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சரியானதொரு குறுக்குவெட்டு ஆகவிருக்கும்.
மேலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வெளிவந்த முக்கியமான சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகள் (உதாரணமாக மறுமலர்ச்சி, மல்லிகை, ஞானம், அலை, கலைச்செல்வி, தீர்த்தக்கரை, நந்தலாலா , சரிநிகர், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், ஈழகேசரி போன்ற) கவனத்திலெடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் வெளிவந்த தொகுப்புகளில் பல தொகுப்பின் நோக்கத்தின் சரியான குறுக்குவெட்டாக இல்லாதிருக்கின்றன. காரணங்களில் சிலவாகக்கீழ்வருவனவற்றைக்குறிப்பிடலாம்:
1. குழு மனப்பான்மை. உதாரணமாகஓரு சஞ்சிகைக்கும் இலக்கியம் பற்றி ஒரு கருத்திருக்கும். அவர்கள் அந்தக் கருத்துக்கமையவே தொகுப்பொன்றினை வெளியிடுவார்கள். அதுபோல் இன்னுமொரு சஞ்சிகை தன் நோக்கில் ஒரு தொகுப்பினை வெளியிடும். இதுபோல் ஒவ்வொரு குழுவும் தமக்குச்சார்பாகவே படைப்புகளைத்தொகுத்து வெளியிடும். அவ்விதம் குழுக்கள் தொகுப்புகளை வெளியிடுவதில் தவறில்லை. ஆனால் அவ்விதம் வெளியிடும்போது வெளியிடும் சஞ்சிகையின் சிறுகதைகள் அல்லது அச்சஞ்சிகையின் கவிதைகள் போன்ற தலைப்புகளில் தொகுப்புகள் வெளிவரவேண்டும். ஆனால் அவ்விதம் வெளிவராமல் ஈழத்துத்தமிழ் இலக்கியம் போன்ற பொதுவான தலைப்புகளில் தொகுப்புகளை வெளியிடுவதும் , அவ்விதம் வெளியிடும்போது தம் குழுசார்ந்த படைப்புகளையே தொகுப்பதும் தவறான போக்கு. ஆனால் அண்மைக்காலமாக வெளிவரும் தொகுப்புகள் பல அவ்விதம்தான் வெளிவந்திருக்கின்றன. இன்று தமிழ் இலக்கியச்சூழலில் அறியப்பட்ட ஒருவரின் கவிதையல்லாத கவிதையொன்று தொகுப்பில் இருக்கும். ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளின் அற்புதமான மரபுக்கவிதைகள் விடுபட்டுபோயிருக்கும்.
கவிதையென்ற பெயரில் புதுக்கவிதையென்ற பெயரில் புற்றீசல்கள் போல் வெளிவரும் கவிதைகள் பலவற்றைத்தொகுப்புகளில் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். இவ்விதமான தொகுப்புகள் காலப்போக்கில் காணாமலேயே போய்விடும் அபாயமுண்டு.
பொதுவானதொரு தலைப்பில் தொகுப்புகளை வெளியிட முனையும் அமைப்புகள் சகல படைப்புகளையும் முறையாகப்பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொகுப்புகளை வெளியிட முனைவது தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச்செய்வதோடு, தொகுப்புகளின் சிறப்பினையும் உறுதி செய்கின்றன.